அத்தியாயம் 16
உங்களத்தான் எண்ணி எண்ணி
என் உசுரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு
சொன்னா போதும்!!! (தவமங்கை)
“நிப்பாட்டு, நிப்பாட்டு! அட நிப்பாட்டுங்கறேன்” என சத்தம் போட்டார் வாயில் குச்சி வைத்திருந்த குசும்புக்கார பெருசு.
சீடியை ப்ளே செய்வதை நிறுத்த சொன்னவர், தான் கட்டி இருந்த அழுக்கு வேட்டியை நன்றாக மடித்துக் கட்டிக் கொண்டு, சட்டையில்லாமல் வெறும் தோளில் போட்டிருந்த துண்டை உதறி மீண்டும் தோளில் போட்டுக் கொண்டு டீவியின் அருகே மெதுவாக நடந்துப் போனார்.
அங்கே கூடி இருந்த அனைவரும் அவரைப் பார்க்க, டீவியின் முன்னே போய் குத்த வைத்து அமர்ந்தவர்,
“இப்போ போடு! கண்ணுல பூ வுழுந்துருச்சுல்ல, அம்புட்டு தூரத்துல இருந்துப் பார்த்தா ஒன்னும் தெரியாதுப்பூ” என சொல்லியவரை வெட்டவா குத்தவா என பார்த்தான் காளை.
பெரிய தனக்காரருக்கோ தர்மசங்கடமாக இருந்தது. தங்கள் ஊருக்கு படித்துக் கொடுக்க வந்த பெண்ணின் மேல் இப்படிப் பட்ட குற்றச்சாட்டை வைப்பார்கள் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் தானே மங்கையை காளையின் வீட்டில் தங்க வைத்தார். அது வேறு குற்றக் குறுகுறுப்பாய் இருந்தது அவருக்கு. காலங்காலமாக நடுநிலையாய் இருந்து தீர்ப்பு சொல்லும் பரம்பரையில் இருந்து வந்தவருக்கு, மங்கையின் மேல் தனியாக எந்த சலுகையையும் காட்ட முடியவில்லை. அவளைத் தப்பாக பேச வேண்டாம் என ஊர் மக்களை அடக்கி வைத்தாலும், அவருடைய தகப்பனாரின் வயதொத்த பெருசு மாதிரி பெரியவர்களை எப்படி அவரால் அதட்டி உருட்ட முடியும்! சீக்கிரம் பஞ்சாயத்தை விசாரித்து முடித்து விட்டுவிட வேண்டும் என நினைத்து, வேறு வழியில்லாமல் அவரும் அந்த குட்டி டீவியின் திரையைப் பார்க்கலானார்.
குறும்படம் ஓட ஆரம்பித்தது. திரையில் மங்கையின் உருவப்படம் பறந்து வந்து குளத்தில் இருந்த தாமரையில் அமர்ந்தது. அதன் பிறகு காளையின் உருவப்படம் புயல் போல சுற்றி சுற்றி வந்து பெரிய இலையின் மேல் நின்றது. ஒரு சைடில் பூவில் மங்கை இன்னொரு சைடில் இலையில் காளை. அவர்களுக்கு நடுவே ஹார்ட் வேறு போடப்பட்டிருந்தது.
கூட்டம் ஆவென பார்க்க,
“என்னப்பூ பலான படம்னு சொல்லிப்புட்டு கல்யாண படம் போடற?” என கடுப்போடு கேட்டார் பெருசு.
மங்கைக்கோ, என்பதுகளிலும் தொன்னூறுகளிலும் கல்யாண வீடீயோ எடுப்பவர்கள் காட்டும் குரளி வித்தையை இந்த வீடீயோ தயாரித்தவன் செய்திருப்பதைப் பார்த்து லேசாக புன்னகைக் கூட எட்டிப்பார்த்தது. (இங்க யாரெல்லாம் கல்யாண டேப்ல/போட்டோல ரோஜா மேல, தாமரை மேல, தாம்பளத்தட்டுல உட்கார்ந்திருந்தீங்க? அப்போ அதெல்லாம் பார்த்து வாவ்னு இருந்துச்சு, இப்ப பார்த்தா சீப்பு சீப்பா வருது)
அதன் பிறகு பாடல் ஒன்று பிண்ணனியில் ஒலிக்க, மங்கையை காளை தூக்கிக் கொண்டு நடப்பது திரையில் தெரிந்தது.
“நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னா புரியுமா” என பாடல் ஓட, மங்கையோ காளையின் நெஞ்சில் முகத்தைப் புதைத்திருந்தாள் அதில்.
மறை கண்கள் இரண்டும் தெறித்து கீழே விழுந்து விடுவது போல மங்கையைப் பார்க்க, அவளோ எந்த சலனமும் இன்றி நின்றிருந்தாள்.
“அட! இதத்தான் ஊரே கூடி நின்னு வேடிக்கைப் பார்த்துச்சே! டீச்சரு இஸ்கூட்டில இருந்து விழுந்து காலை ஒடச்சிக்கிட்டப்போ, காளை தான் தூக்கிட்டுப் போனான்! இதுல என்ன கள்ளக்காதல கண்டுப்புட்டீங்க? ஒரு ஒதவிதானே!” என கூட்டத்தில் ஒரு பெண் குரல் கொடுக்க, சில பெண்கள் அதானே என பதில் கொடுத்தார்கள்.
“இருங்கத்தா! இன்னும் வரும்” என மாரிமுத்து சொல்ல,
“இன்னும் வருமா?” என கேட்டப்படி கண்ணைக் கசக்கிக் கொண்டு இன்னும் நன்றாக உற்றுப் பார்த்தார் பெருசு.
“தோ பெருசு! ஒனக்கு கண்ணுல பூ விழுந்ததுக்கு பதிலு புண்ணாக்கு விழுந்திருக்கனும்யா!” என மிதமிஞ்சிய ஆத்திரத்தில் கத்திய காளை தன் தகப்பனின் தோளில் இருந்த துண்டை உருவி, சுருட்டி பெருசின் மேல் விட்டடித்தான். தனக்கு வந்தது லாபம் என அதை எடுத்து மடித்து கக்கத்தில் சொருகிக் கொண்டார் அவர்.
அடுத்தப் பாடல் மீயூசிக் வரும் போதே காளைக்கு வேர்த்துக் கொட்டியது.
“ஓ ஹரே ராமா ஹெரே ராமா
ஹரே கிருஷ்ணா
ராத்திரி நேரத்துப் பூஜையில்..
டிண்டண டிண்டன டிண்டன டிண்டன” என பாடல் வர கயிற்றுக் கட்டிலில் காளை கீழே கிடக்க, மங்கை அவன் மேலே கிடந்தாள். எந்த பாடாவதி பழைய போனில் இருந்து அதை ஷூட் பண்ணி இருந்தார்களோ, எச்.டி அளவுக்கு கிளியராக இல்லாவிட்டாலும் மங்கலாகவும் மங்களகரமாகவும் தெரிந்தார்கள் காளையும் மங்கையும்.
அடுத்த சீன் வருவதற்குள், காளை உதைத்த உதையில் டீவியும் சீடி ப்ளேயரும் கீழே விழுந்துக் கிடந்தன. டீவி தலைகீழாக கிடக்க, சீடி, ப்ளேயரில் ஸ்டக்காகி இருவரும் கட்டிப் பிடித்திருந்த சீனே தலைக்கீழாக அப்படியே நின்றிருந்தது திரையில். இன்னும் ஆத்திரத்தோடு பக்கத்தில் இருந்த பெரிய கல்லைத் தூக்கி டீவியை உடைக்க வர, ஆண்கள் சிலர் காளையை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். திமிறி அவர்கள் பிடியில் இருந்து வெளி வர போராடியவனின் கண்கள் மட்டும் மங்கை மேலேயே இருந்தன.
திடமாக நிற்பது போல அவள் காட்டிக் கொண்டாலும், கண்கள் கலங்கி இருந்தது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. ராஜி அதிர்ச்சியில் நிற்க, காமாட்சியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
மறையோ,
“இதான் நீ சொன்ன அந்த பியூரிட்டியா தவமங்கை? இந்த சேத்துல கலக்கத்தான் உன் புனிதத்த காப்பாத்துனியா?” என ஆத்திரமாக கேட்டான்.
அவனை உறுத்துப் பார்த்த தவமங்கை பதிலேதும் சொல்லவில்லை. மெத்த படித்த ஆசிரியனே இவ்வாறு பேச, ஊர் மக்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ!!!
“ஏற்கனவே டீச்சர் காளைய வச்சிருக்காங்கன்னு அரசல் புரசலா விஷயம் வெளி வந்தப்ப கூட நான் நம்பல! இப்போ பாரேன் டீவி பெட்டியிலேயே காட்டிட்டான்”
“நான் சொல்லல, டீச்சர் தான் காளைய வச்சிருக்காங்க, காளை டீச்சர வச்சிருக்கலன்னு. பாருடா டோய்! நல்லா கண்ண தொறந்து பாரு. டீச்சரு மேல கிடக்க, காளை கீழ கிடக்கான்!”
“ஆத்தாடி ஆத்தி! ஒய்யார கொண்டையில தாழம்பூவாம், அதுக்குள்ள இருக்குதாம் ஈரும் பேனும்! வெள்ளையா இருக்கறவ நல்லவளாத்தான் இருப்பான்னு நெனைச்சோமே! இவ என்னான்னா ஆனானப்பட்ட நம்ம காளையையே மயக்கி சாய்ச்சுப்புட்டாளே!”
“பட்டணத்துப் பாப்பா, கரீக்டா பத்து மணிக்கு போட்டாலாம் தாப்பா!”
கூட்டத்திலே சலசலவென பேச்சுக் குரல்கள்.
“யாருடா இப்படி கூட்டத்துல நின்னு பேசறது? எதா இருந்தாலும் என் முன்னால வந்து பேசுங்க பாப்போம்! ஊருல ஒவ்வொருத்தான் வீட்டுப் பொழப்பும் நாறப் பொழப்பா இருக்கு! என்னமோ புத்தன் மாதிரியும் சுத்தன்(சுத்தமானவன் என அவர் பாஷையில் சொல்கிறார்) மாதிரியும் டீச்சர நாக்கு மேல பல்ல போட்டு பேச வந்துட்டீங்க! தகிரியம் இருந்தா என் முன்ன வந்து பேசுங்கடா! நாக்க இழுத்து வச்சு அருவாமுனையில வகுந்துடறேன்!” கொண்டையை அவிழ்த்து மீண்டும் முடிந்துக் கொண்டு சண்டைக்கு ரெடியானார் காமாட்சி. வேண்டாமென அவரது கையை இறுகப் பிடித்துக் கொண்டாள் மங்கை.
“நான் பெத்தது பண்ண தப்புக்கு, அடுத்த வீட்டுக்கு வாழ போற உன்னைப் பார்த்து நாக்குல நரம்பில்லாம இப்படி பேசறாங்களேத்தா!” கோபம் வருத்தமாய் மாற கண் கலங்கினார் அவர். சீடீயில் படம் வந்த போதே, இது சரக்கடித்த மகனின் செயலாகத்தான் இருக்கும் என அனுமானித்திருந்தார் அவர். நிதானத்தில் இருக்கும் போது அவர் மகன் எவ்வளவு கண்ணியவான் என்பதுதான் ஊருக்கே தெரிந்த விஷயமாயிற்றே! ஆல்கஹால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் கண்டிப்பாக ஆப்படித்துவிடும் என்பதற்கு இதுவே சான்று. குடிப்பவர்களுக்கு மட்டும் ஆப்படிக்காமல் அவர்களை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தல்லவா அடித்து விடுகிறது!
“தோ பாருங்கப்பா! அமைதி, அமைதி! எல்லாரும் அமைதியா இருங்க” என சத்தம் போட்டார் பெரிய தனக்காரர்.
அப்பொழுதும் அங்கும் இங்கும் பேச்சுக்குரல்கள் கேட்டப்படித்தான் இருந்தன. காச்மூச் சத்தம் எல்லாம் அங்கே ஒரு டாக்சி வந்து நிற்கும் ஓசையில் அடங்கிப் போயின. அதில் இருந்து அரக்கப் பறக்க இறங்கி ஓடி வந்தார் அஜய். அவர் பின்னோடு அவர் மனைவி மங்கையர்க்கரசியும் வந்தார்.
தந்தையைப் பார்த்ததும்,
“அப்பா” என ஓடி வந்த தவமங்கை, தன் அம்மாவைக் கண்டதும் ஒன்றும் பேசாமல் வந்த வழியே நடந்துப் போய் மீண்டும் காமாட்சியின் அருகே நின்றுக் கொண்டாள்.
மகளின் கலங்கிய முகத்தைப் பார்த்த அஜய், சட்டென சூடாகிப் போனார்.
“என்ன நடக்குது இங்க? நீங்க சொல்லுங்க சார்! உங்க கிட்ட பேசி நல்லா விசாரிச்சிட்டுத்தானே என் மகள இந்த ஊருக்கு வேலைக்கு அனுப்பினேன். என்னமோ பஞ்சாயத்து என் மேல, வாங்கப்பான்னு நடு சாமத்துல போன் போட்டு கூப்பிடறா என் பொண்ணு! பெத்த தகப்பனுக்கு ஒரு நிமிஷம் எப்படி இருக்கும்னு உங்களால கற்பனை பண்ணி பார்க்க முடியுதா?” என வந்ததும் வராததுமாக பெரிய தனக்காரரைப் பார்த்து கேட்டார் அஜய். பெரிய தனக்காரர் வாய் பேசாமல் கீழே கிடந்த டீவியைப் பார்க்க, அதைப் பார்த்த அஜய்க்கு அதிர்ச்சியாகிப்போனது. மங்கையர்க்கரசியோ திகைத்துப் போய் மகளை நோக்கினார்.
மகளை ஏறிட்டுப் பார்த்த அஜய், பின் காளையை வெறித்து நோக்கினார். அவர் பார்வையில் கூனிக் குறுகிப் போய் நின்றான் முத்துக்காளை. மகளின் எதிர்காலத்தைப் பற்றி பக்கம் பக்கமாய் அவனிடம் பேசி இருந்தாரே! இவனால் அல்லவா அவள் ஊரின் முன்னே மானம் கெட்டவளாக நிற்கிறாள்.
“என்ன தவா இதெல்லாம்?” அதிர்ச்சியாக கேட்டார் மங்கையர்க்கரசி.
“கேளுங்க ஆண்ட்டி! நல்லா ஃபோர் வோர்ட்ஸ் கேளுங்க! படிச்சவ மாதிரியா நடந்திருக்கா! ஒரு காட்டுப்பயக்கூட..ச்சை! சொல்லவே நாக்கூசுது” என படபடத்தான் மறை.
“தோ பாருங்க தம்பி! விசாரணை இன்னும் நடந்துகிட்டுத்தான் இருக்கு! என் மவன என்னா வேணும்னாலும் சொல்லுங்க! நான் கேட்டுக்கறேன்! பொம்பளப்புள்ளய பத்தி எதாச்சும் தப்பா பேசுனீங்க, அப்பூறம் மருவாத கெட்டுரும்” என கோபமாகப் பேசினார் காமாட்சி.
அவரின் கோபப்பார்வையில் ‘விக்கட் விட்ச்’ எனும் முணுமுணுப்போடு தள்ளிப் போய் நின்றுக் கொண்டான் மறை.
காளையின் முன்னே வந்து நின்ற அஜய்,
“உன்ன நல்லவன்னு நெனைச்சு நட்பா பழகனேன், என் பொண்ண உன் வீட்டுல நம்பி விட்டேன்! என் நம்பிக்கைக்கு எப்படி உன்னால மோசம் செய்ய முடிஞ்சது காளை?” என கேட்டவர் பளாரென அவனை அறைந்துவிட்டார்.
மங்கை அதிர்ந்துப் போய் அப்பா என கத்த, காளையோ அறையை வாங்கிக் கொண்டு அமைதியாகவே நின்றான்.
“ஹோய்!”
“டேய்!”
“அடேய்!”
“ஏண்ட்ரா எங்க காளை மேலயே கைய வச்சிட்டியா?” எனும் சத்தத்தோடு ஊர் மக்கள் பலர் அஜயை சூழ்ந்துக் கொண்டனர். என்னதான் உள்ளூரிலேயே பூசல்கள் இருந்தாலும், வெளியூர்காரன் தங்கள் ஊர் ஆள் மேல் கை வைப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள் அவர்கள். அடித்துக் கொள்வதும், கட்டிப் பிடித்துக் கொள்வதும் அவர்களுக்குள்ளேயேதான். வெளி ஆளுக்கு அதில் உரிமை இல்லை.
அஜயை சூழ்ந்துக் கொண்டவர்களை விலக்கி விட்டக் காளை,
“பொண்ண பெத்தவருக்கு கோபம் வரதுதான் நியாயம். அவர் அடிச்சாலும் மிதிச்சாலும் நான் வாங்கிக்குவேன். இதுல யாரும் தலையிடாதீங்க” என சொன்னான்.
பின் பெரிய தனக்காரரின் அருகே போய் நின்றவன், ஊரில் உள்ளவர்களைப் பார்த்து,
“எல்லோரும் என்னை மன்னிக்கனும்! நான் பொறந்ததுல இருந்து என்னைப் பார்க்கறீங்க! என் குணம் உங்களுக்கு எல்லாம் தெரியும். சரக்கடிச்சா நான் எப்படி நடந்துப்பேன்னும் தெரியும். டீச்சரு மேல எந்தத் தப்பும் இல்ல. சரக்கடிச்சுட்டு, சண்டை சொல்லிக் கொடுக்க தோப்புக்கு வந்த டீச்சர நான் தான் கையைப் புடிச்சு இழுத்துட்டேன். அவங்க தடுமாறி என் மேல விழுந்துட்டாங்க! இது மட்டும்தான் நடந்தது. மத்தப்படி இங்க இட்டுக் கட்டி சொல்லறது எதுவும் எங்களுக்குள்ள நடக்கல! இது அந்த ஆத்தா குழந்தையம்மன் மேல சத்தியம்! டீச்சர் பரிசுத்தமானவங்க! அவங்க கையைப் புடிச்சு இழுத்த நான் தான் கேவலமானவன். எனக்கு இந்தப் பஞ்சாயத்து எந்த தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்! ஒரு பாவமும் அறியாத டீச்சர் மேல வீண் பழி போட வேணாம்” என சொல்லி கையெடுத்து கும்பிட்டான் காளை.
அவர்கள் ஊரின் குழந்தையம்மன் மிக சக்தி வாய்ந்த தெய்வம். குழந்தை இல்லாதவர்கள் அவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது அவர்கள் ஊர் ஐதீகம். அது மட்டுமில்லாமல், அவர் மேல் சத்தியம் வைப்பது என்பது மிக ஆச்சாரமான ஒரு விஷயம் அவர்களைப் பொருத்த வரை. சாதாரணமாக யாரும் குழந்தையம்மன் மேல் சத்தியம் வைக்க மாட்டார்கள். பொய் சத்தியம் வைப்பவர்களை அம்மன் காவு வாங்கி விடுவாள் என்பது வழிவழியாக ஊர் மக்களுக்கு சொல்லப்பட்டு வரும் விஷயமாகும்.
“கொழந்தையம்மன் மேல தகிரியமா சத்தியம் வச்சிட்டான்டா”
“பொய் சத்தியம் பண்ணா அம்மன் காவு வாங்கிடும்னு அவனுக்குத் தெரியாத என்ன!”
“என்னடா பொசுக்குன்னு ஒன்னும் இல்லன்னு சத்தியம் பண்ணிட்டான்! அப்போவே தெரியும் பக்கோடா திங்கலாம் இவன் சரிப்பட்டு வரமாட்டான்னு!”
“அதான் டீச்சர் மேல தப்பு இல்ல என் மேலத்தான் தப்புன்னு அம்மன் மேல சத்தியமா சொல்லிட்டான்ல! அப்பூறம் என்ன சீக்கிரம் பஞ்சாயத்த முடிச்சு வுடுங்க! வூட்டுல சோலி கெடக்கு, வானம் வேற மப்பும் மந்தாரமுமா இருக்குது” என மறுபடியும் சலசலவென பேச்சுக்குரல்கள்.
“கொஞ்சம் அமைதியா இருங்கப்பா! நான் தீர்ப்பு சொல்லறதா இல்லையா?” என சிடுசிடுத்தார் பெரிய தனக்காரர்.
மீண்டும் அங்கே அமைதி நிலவ,
“காளை அவன் பக்கம் என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லிட்டான். தப்பு செஞ்சா கண்டிப்பா அதுக்கு தண்டனையும் அனுபவிச்சுத்தான் ஆவனும். கையப் புடிச்சு இழுத்தா, இழுத்த கையை வெட்டிப் போடறது தான் நம்மூரு வழக்கம்” என அவர் சொல்ல, வெடித்து வரும் விம்மலை அடக்க சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டார் காமாட்சி. ராஜியோ அழவே ஆரம்பித்து விட்டாள்.
இந்த தண்டனைத்தான் கிடைக்கும் என தெரிந்திருந்தும், தன் மேல் தான் தப்பு என ஒத்துக் கொண்டு தன் கையை இழக்க முன் வந்திருந்தான் காளை. இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என இவன் சொல்லி இருந்தால், இன்னும் விசாரணை அது இது என போய் கடைசியில் எப்படியும் கல்யாணம் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் தன் கைக்காக கூட டீச்சரை ஒழுக்கமற்றவள் என சொல்ல வாய் வரவில்லை அவனுக்கு.
“ஐயா, நாங்க வேணும்னா காளைய ஊரை விட்டே அனுப்பிடறோம்! கைய எடுக்க வேணாம்யா!” என கண்ணீருடன் கெஞ்சினார் மச்சக்காளை.
“வாழையடி வாழையா ஏழை பணக்காரன்னு பார்க்காம எல்லாருக்கும் ஒரே நியாயம் தான் ஒரே தீர்ப்பு தான்னு உனக்கு தெரியாதா மச்சக்காளை! ஒன் மவனே தப்ப ஒத்துக்கிட்டான்! தீர்ப்ப யாருக்காகவும் மாத்த முடியாது! எலே, குழந்தையம்மன் காலடியில இருந்து அந்த அருவாள எடுத்துட்டு வாங்கடா!” என அவர் குரல் கொடுக்க, பரம்பரை பரம்பரையாக இந்த தண்டனையை நிறைவெற்றுவதற்காகவே இருக்கும் குலத்தில் பிறந்தவன், கோயிலை நோக்கி ஓடினான். திரும்பி வரும் போது அவன் கையில், பளபளவென பெரிய அருவாள் ஒன்று இருந்தது. அதற்கு பூஜை போட்டு, பொட்டு வைத்து எடுத்து வந்திருந்தான் அவன்.
இது என்ன காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது என அஜய் அதிர்ந்துப் போய் நிற்க, மங்கையோ பேயறைந்தது போல நின்றிருந்தாள். அந்த இடமே சத்தமின்றி மயான அமைதியாக இருந்தது.
அந்த நேரம் கூட தன்னால் அசிங்கப்பட்டு நிற்கும் மங்கையை ஏறிட்டுப் இறைஞ்சுதலாகப் பார்த்தவன்,
“சாரி டீச்சர்” என முணுமுணுத்தான்.
மச்சக்காளை கண் கலங்கி மகன் அருகே நிற்க, செவலையும் கண்ணீரோடு நண்பன் அருகே நின்றான்.
“ஹ்ம்ம்! ஆகட்டும்” என பெரிய தனக்காரர் சைகை செய்ய, அருவாளோடு காளையை நெருங்கினான் அவன். வாயில் ஏதோ மந்திரம் போல் முணுமுணுத்தவன், காளையின் வலது கையை பிடித்துக் கொண்டு அருவாளை ஓங்கினான்.
“நிறுத்துங்க!!!!!” என கத்திய மங்கை ஓடிப்போய் காளையை அணைத்துக் கொண்டாள்.
எல்லோரும் அதிர்ச்சியாய் அவளைப் பார்க்க,
“என்னதிது காட்டுமிராண்டித்தனம்! தப்பு செஞ்சவங்கள கண்டிக்கவோ தண்டிக்கவோ போலீஸ் இருக்கு, கோர்ட் இருக்கு! உங்களுக்கு யாரு இந்த அதிகாரத்த குடுத்தா? கைய வெட்டறேன் காலை வெட்டறேன்னு கிளம்பறீங்களே, மனுஷங்களா நீங்கலாம்? காளை என் கையைப் புடிச்சு இழுத்துட்டான்னு நான் வந்து இங்க காம்ப்லேயின்ட் குடுத்தனா? யாரோ குடுத்தாங்க, யாராரோ பேசனாங்க! சம்பந்தப்பட்ட என் கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்னு யாருக்காச்சும் தோணுச்சா? காளை என் கையைப் புடிச்சு இழுத்தாருத்தான்! நான் இல்லைங்கல! எந்தப் பொண்ணும் ஒருத்தன் கையைப் புடிச்சு இழுத்தா போயிட்டு போகுதுன்னு சும்மா இருக்க மாட்டா! அப்படி அவ அமைதியா போறான்னா, ஒன்னு சூழ்நிலை கைதியா இருக்கான்னு அர்த்தம் இல்ல அவளுக்கும் அவர புடிச்சித்தான் இருக்குன்னு அர்த்தம். யெஸ்! ஐ லைக் காளை. எனக்கு காளையப் புடிச்சிருக்கு! இது நீங்கலாம் சொல்ற மாதிரி கள்ளக்காதல் இல்ல! நல்ல காதல்தான்”
“தவா!” என அஜயும் அவர் மனைவியும் சேர்ந்தே கத்தினார்கள்.
அவர்கள் கத்தியது கூட அவள் மூளையை சென்றடையவில்லை. உடல் வெட வெடவென நடுங்க இன்னும் காளையை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் அவள். தவமங்கை பேசியதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த காளைக்கோ அவளின் உடல் நடுக்கம் அவனுக்குள்ளும் கடத்தப்பட, ஆறுதலாக மங்கையின் முதுகை தட்டிக் கொடுக்கலானான் காளை.
அணைத்தப்படி நின்றிருந்த இருவரையும் பார்த்த பெரிய தனக்காரர்,
“அப்புறம் என்னப்பா! டீச்சரே இது கள்ளக் காதல் இல்ல நல்லக் காதல்தான்னு சொல்லிட்டாங்க. எப்போ அவங்க நல்லக் காதல் பஞ்சாயத்து வரைக்கும் வந்துச்சோ, அப்பவே கல்யாணத்த முடிச்சுப்புடறது தான் நம்மூர் வழக்கம்! யப்பா டேய், பிராது குடுத்தவனே! ஓடிப்போய் நம்மூட்டுல, கல்யாணம் முடிவாகிருச்சு தாலி வேணும்னு வாங்கிட்டு வா! வீட்டம்மா குடுத்து வுடுவாங்க”
காமாட்சி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,
“வேணாமுங்க ஐயா! காளையோட அப்பத்தா தாலி எங்க பூசையறையில தான் இருக்கு. அதையே கட்டிடலாம். அதான் எங்க குல வழக்கம்” என சொன்னார்.
மச்சக்காளையை அவர் ஒரு பார்வை பார்க்க, விடு விடுவென பஞ்சாயத்தை விட்டு வீட்டுக்கு நடையை எட்டிப் போட்டார் அவர்.
காமாட்சிக்கு புரிந்து விட்டது, தங்கள் காளையைக் காக்கத்தான் மங்கை அவனைப் பிடித்திருக்கிறது என சொல்கிறாள் என! ஏற்கனவே அவள் மேல் பாசம்தான். இப்பொழுதோ தெய்வத்தைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தார் அவர். மகனின் கை, டீச்சரின் வாழ்க்கை என அவர் முன் நின்ற பெரிய கேள்விக்கு மகனின் கைத்தான் ஜெயித்தது. தன் ரத்தம் என வரும்போது சுயநலம் ஜெயிப்பதுதானே இயல்பு. ஆனாலும் இனி மங்கைதான் தங்களுக்கு எல்லாம் என முடிவெடுத்தவர், அவளைத் தங்க தாம்பளத்தில் தாங்குவேன் இனி என மனதில் சத்தியமே செய்துக் கொண்டார்.
தங்களை சுற்றி இவ்வளவு நடந்துக் கொண்டிருக்க காளையோ,
“டீச்சர்! என்னைக் காப்பத்தனும்னு உங்க வாழ்க்கையை வீணாக்கிக்காதீங்க! உ..உங்களுக்கு எந்த விதத்துலயும் நான் பொருத்தம் இல்ல. தண்ணி போட்டு தரங்கெட்டு போன எனக்கு ஏத்த தண்டனையா என் கையை முழு மனசோடத்தான் குடுக்கறேன். நீங்க உங்களுக்கு ஏத்த ஒருத்தர கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க டீச்சர்” என மெல்லிய குரலில் சொன்னான்.
மூச்சை நன்றாக இழுத்து விட்டு தன்னை சமன் செய்த மங்கை, அவன் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். பின் அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“இந்த கல்யாணம் முடியற வரைக்கும் நீங்க வாயத் திறக்கக் கூடாது! மீறி தாலி கட்ட மாட்டேன்னு எதாச்சும் அழிச்சாட்டியம் பண்ணீங்க…அதுக்கப்புறம் இந்த மங்கையை டெட் பாடியாத்தான் பாப்பீங்க! புரியுதா?” என குரல் உயர்த்தாமல் மிரட்டினாள்.
“டீச்சர்!!!”
“ஷட் அப் பண்ணுங்க காளை!!!”
அதற்குள் அஜய் அவர்கள் முன்னே வந்திருந்தார்.
“அம்மும்மா! நாம இங்கிருந்து போயிடலாம்மா! இதெல்லாம் சரிப்பட்டு வராது! புரிஞ்சுக்கடா”
“ஆமா! டீச்சரப்பா சொல்லறத கேளுங்க டீச்சர்”
காளையை ஒரு முறை முறைக்க, கப்பென வாயை மூடிக் கொண்டான் அவன்.
“அப்பா சொல்றவன தான் கட்டிப்பேன்னு ப்ராமீஸ் பண்ணியிருக்க நீ! வந்துடு போயிடலாம். எனக்குத் தெரியும் உனக்கு இவன் மேல காதல் கத்திரிக்காய்லாம் இருக்காதுன்னு. பரிதாபப்பட்டு தான் கல்யாணம் பண்ணறேன்னு புரியுது. நான் வேணும்னா பெரியவருகிட்ட பேசி, தண்டனை எதும் வேணான்னு சொல்லறேன்! இதுக்கெல்லாம் உன் வாழ்க்கையை அடமானம் வைக்காதம்மா அம்மு”
“அப்பா! ப்ராமிஸ் பண்ணேன் தான் இல்லைன்னு சொல்லல! ஆனா எப்போ நீங்க பார்த்த மாப்பிள்ளை ஒத்த கேள்விக்கூட கேட்காம என்னை சந்தேகப்பட்டு வார்த்தைய ஆசிட்டா என் மேல வீசினானோ, அப்பவே என்னோட பிராமிஸ்க்கு வேல்யூ இல்லாம போச்சு! ஏற்கனவே ஒரு தடவை நிச்சயம் நின்னதுக்கே நான் சிதையில நடக்காமலே தீக்குளிச்சிட்டேன்! இங்க நடந்த விஷயத்துனால மறுபடி மறுபடி நான் தீக்குளிச்சு என் பரிசுத்தத்த நிரூபிக்க இஸ்டப்படல. என் உடம்புல அதுக்கு தெம்பும் இல்லப்பா. என்னை என் இஸ்டத்துக்கு விட்டுடுங்க! தயவு செஞ்சு உங்க வைப்ப கூட்டிட்டு கிளம்புங்கப்பா”
அதற்குள் மச்சக்காளை தாலியோடும் ஒரு தட்டில், அரிசியில் மஞ்சளை கலந்தும் எடுத்துக் கொண்டு வர, மீண்டும் அங்கே பரபரப்பு.
“எல்லாரும் அமைதியா இருங்கப்பா! ஐயரே, வந்து முக்கியமான மந்திரத்த மட்டும் படிங்க! யம்மா ராஜேஸ்வரி, அரிசிய எல்லோருக்கும் குடும்மா! ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போகட்டும்! பிராது குடுத்தவன் கையில நெறைய அள்ளிக்குடு” என சொன்னார் பெரிய தனக்காரர். அவருக்கோ ரத்தக்காயம் இல்லாமல், பஞ்சாயத்து நல்லபடி முடிந்ததில் பலத்த நிம்மதி.
விஷயம் கை மீறி போய்விட, நடப்பது நடக்கட்டும் என ஒதுங்கிக் கொண்டார் அஜய்!
“என்னங்க, அப்படியே விட்டுட்டீங்க?” என மங்கையர்க்கரசி கேட்க,
“நீ விட சொன்னப்ப, விட்டுட்டேன்! இப்ப இழுத்துப் புடிக்க சொன்னா, முடியுற காரியமா அரசி? இங்கயாவது அவ நல்லாயிருக்கட்டும்!” என விரக்தியாக சொன்னார் அஜய்.
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என கையை உதறிக் கொண்டு கிளம்பிவிட்டான் மறை.
கடவுளை மனதார வேண்டிக் கொண்டு தாலியை மகன் கையில் கொடுத்தார் காமாட்சி. கை நடுங்க அதை பெற்றுக் கொண்டான் காளை. ஐயர் மந்திரம் சொல்லி, கட்டுப்பா தாலிய என சொல்ல, தயக்கத்துடன் மங்கையைப் பார்த்தான் முத்துக்காளை.
அவனை ஆழ்ந்த பார்வை ஒன்றுப் பார்த்தவள்,
“கட்டு” என உதடசைத்தாள்.
ஒரு கணம் கண்ணை இறுக மூடித் திறந்தவன், நெளியாமல் நேராக அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே மூன்று முடிச்சையும் போட்டு முடித்தான். பஞ்சாயத்துக்கு வந்த மக்கள் அரிசி தூவி வாழ்த்த, பெரிய இடி ஒன்று இடித்து படபடவென மழை கொட்டி அவர்களை ஆசீர்வாதம் செய்தது.
மழை நீரோடு மங்கையின் கண்ணீரும் அடித்துக் கொண்டு போனது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.
(அடி பணிவான்…..)