Nan Un Adimayadi–EPI 22

Nan Un Adimayadi–EPI 22

அத்தியாயம் 22

ஒத்தையில பூங்கொலுசு

தத்தளிச்சு தாளம் தட்ட

மெத்தையிலே செண்பகப்பூ

பாட்டுக்குள்ள சோகம் தட்ட

பாடாம பாடும் குயில் நான்

மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான் (தவமங்கை)

 

“ஜெய், என்ன சத்தம்?”

பின்னால் கேட்ட குரலில் அதிர்ச்சியில் இருந்து தெளிந்த அஜய்,

“ஒன்னும் இல்லம்மா அரசி! நீ போய் படு!” என காளையை மறைத்தவாறு குரல் கொடுத்தார்.

அவன் பின்னால் நின்றிருந்த செக்யூரிட்டி,

“சார், நெஜமா தெரிஞ்சவரா? ஆள் வாட்டசாட்டமா இருக்கவும் பின்னாலயே வந்தேன்” என குரல் கொடுத்தார்.

“தெரிஞ்சவருதான்பா! நீ போ” என அவரை அனுப்பி வைத்தார் அஜய்.

மறைக்கக் கூடியதா நம் காளையின் உருவம்? அஜயை நெருங்கி எட்டிப் பார்த்த மங்கையர்க்கரசியின் முகம் கசங்கியது.

“இவர்..ஏன்..ஏன் வந்துருக்காரு? அவளும் வந்துட்டாளா? இங்கயே வந்துட்டாளா?”

குரல் அடைக்க திக்கித் திணறி கேட்டவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தது. தனது மனைவியின் மறுபதிப்பான அவள் தாய் அழுவது காளைக்கு என்னவோ போல் ஆக,

“அழாதீங்க அத்தை! அழாதீங்க!” என பதறினான்.

அவனை ஒரு பார்வைப் பார்த்த அஜய்,

“மாப்பிள்ளை ஒரு வேலையா நம்மூர்க்கு வந்துருக்காரு! அப்படியே நம்மள பார்த்துட்டு போக வந்துருக்காரு அரசி! அவ்ளோதான். நீ போய் படு!” என்றார்.

“அவ்ளோதானா, நெஜமா அவ்ளோதானா? அப்போ சரி” என்றவர் படுக்கை அறைக்கு போக இரண்டு அடி எடுத்து வைத்து விட்டு, மறுபடி காளையிடம் வந்தார்.

“மங்கை நல்லா இருக்காளா?”

அழுத அவர் முகத்தைப் பார்த்து ஆமென தாமாகவே தலையாடியது அவனுக்கு.

“நான் மாப்பிள்ளைக்கு காபி போடவா ஜெய்?” என கேட்டார் அரசி.

“நோ! யூ கோ கெட் சம் ரெஸ்ட். நான் பார்த்துக்கறேன்!” என மனைவியை அழைத்து சென்று படுக்கை அறையில் விட்டுவிட்டு வந்தார் அஜய். அது வரை வாசலிலேயே நின்றிருந்தான் காளை.

“உள்ள வாங்க மாப்பிள்ளை!”

மாப்பிள்ளை எனும் வார்த்தையை அவர் வாயால் கேட்டதில் அகமகிழ்ந்து போனான் காளை. ஆனாலும் முகம் சோகத்தை மட்டும் காட்டியது. அரசியின் பேச்சை வைத்தே, மங்கை அங்கே இல்லை என தெளிவானவன், உள்ளே வர விருப்பப்படவில்லை.

“நான் போகனும் டீச்சரப்பா! போய் என் டீச்சர தேடனும்”

“அட வாப்பா!” என அவன் கையைப் பிடித்து வீட்டின் உள்ளே இழுத்தார் காளை.

“தோ, அது தான் பாத்ரூம்! போய் முகம் கழுவிட்டு வா! ரொம்ப களைப்பா தெரியற! காபி கலந்து தரேன்”

“இல்ல, நான் போகனும்”

“உன் அம்மும்மா பத்திரமா தான் இருப்பா! இத்தனை வருஷமா தன்னைப் பார்த்துக்கிட்டவளுக்கு இப்பவும் பார்த்துக்கத் தெரியும். போ, போய் முகம் கழுவிட்டு வா!”

மங்கையிடம் வெளிப்படும் அதே அழுத்தம் அவர் குரலில். தலை தானாகவே சரி என ஆடியது காளைக்கு. மங்கை தான் அவனை ஆட்டி வைக்கிறாள் என்றால், அவளை பெற்றவர்களும் அவனை தலையாட்ட வைக்கிறார்கள்.

முகம் கழுவி விட்டு வந்தவனுக்கு டவல் எடுத்துக் கொடுத்த அஜய்,

“வாப்பா! மொட்டை மாடிக்குப் போயிடலாம்” என அழைத்தார்.

அவர் கையில் ஒரு ப்ளாஸ்க்கும், இரண்டு கப்களும் இருந்தன. அஜய் குடும்பம் இருந்தது ஒரு லக்‌ஷரி அபார்ட்மேண்ட் வளாகம் ஆகும்.

அஜயைப் பின் தொடந்து மொட்டை மாடிக்குப் போனான் காளை. பூச்செடிகள் அழகாக வரிசை கட்டி நிற்க, அமர்ந்து பேச அழகிய மர பெஞ்சுகளும் இருந்தன அங்கே. இன்னும் விடியாத காலை பொழுது. பனி வேறு கொட்டியதால் குளிராக இருந்தது. லேசாக நனைந்திருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்தார்கள். நிலவு மகள் மறைய வேளைப் பார்த்துக் கொண்டிருக்க, வானத்தை வெறித்துப் பார்த்தார் அஜய்.

“என் அம்மும்மா உன் அம்மும்மா ஆகிட்டா போலிருக்கு?” என கேள்வியாய் கேட்டார் அவர்.

என்ன பதிலை சொல்வான் அவன்! அமைதியாக அவர் முகத்தைப் பார்த்திருந்தான் காளை.

“நீ அம்மும்மான்னு சொன்ன போதே என மக உன்னை புருஷனா ஏத்துக்கிட்டான்னு புரிஞ்சுடுச்சு! என்ன கோபத்துல உன்னை விட்டுட்டுப் போயிருந்தாலும் கண்டிப்பா திரும்ப வந்துடுவா! பாசக்காரி அவ”

“டீச்சர் திரும்பி வர வரைக்கும்லாம் என்னால உசுர புடுச்சுக்கிட்டு இருக்க முடியாது டீச்சரப்பா! எனக்கு இப்பவே அவங்க வேணும்!”

காணாமல் போன பொம்மை இப்பவே வேணும் என அழும் குழந்தை ரேஞ்சுக்கு இருந்தது அவன் செய்கை. மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது அஜயின் முகத்தில். கப்பில் காபியை ஊற்றி அவன் புறம் நீட்டியவர்,

“குடிங்க மாப்பிள்ளை” என்றார்.

கப்பை வாங்கிக் கொண்டே,

“என்ன திடீர்னு மாப்பிள்ளை? அன்னைக்கு என்னை மிரட்டனீங்க, என் மகள கூட்டிட்டுப் போயிடுவேன் அப்படி இப்படின்னு! இன்னைக்கு அவள தொலைச்சிட்டு வந்து நிக்கறேன், மாப்பிள்ளைன்னு சொந்தம் கொண்டாடறீங்க! இந்த படிச்சவங்கள புரிஞ்சுக்கவே முடியல என்னால டீச்சரப்பா!” என புலம்பினான் காளை.

வாய் விட்டு சிரித்தார் அஜய்குமார்.

“இந்த படிச்சவங்க உள்ளொன்று வச்சு புறம் ஒன்னு பேசுவாங்கப்பா! உங்கள மாதிரி பட்டு பட்டுன்னு மனசுல உள்ளத கொட்டிட மாட்டாங்க!”

அவர் மெல்ல காபியை ரசித்துக் குடிக்க, இவனும் ஒன்றும் பேசாமல் பருகினான்.

“டீச்சர் நெஜமா எங்க இருக்காங்கன்னு உங்க கிட்ட சொல்லலியா?” என பாவமாக கேட்டான் காளை.

“இல்ல சொல்லல! கல்யாணத்துக்கு முன்ன வரை எங்க போனாலும் என் கிட்ட சொல்லாம போக மாட்டா! ரொம்ப பொறுப்பானவ. இப்ப அவளுக்குன்னு ஒரு குடும்பம் வந்துருச்சுல, அதனால என்னை ஒதுக்கிட்டா! அத விடு, உங்கம்மாட்ட கண்டிப்பா சொல்லிருப்பா! போன் போட்டு கேளு” என சொன்னார் அஜய்.

“இல்லல்ல டீச்சரப்பா! டீச்சர் காணாம போனதுல எங்காத்தா தான் ஓன்னு கதறுச்சு!” என சொல்லிக் கொண்டே வந்தவனின் முகம் சட்டென கடுத்தது.

“ஆத்தாஆஆ!” என பல்லைக் கடித்தான் காளை.

“என்னாச்சு?”

“விஷயம் தெரிஞ்சதும் ஓன்னு அழுது கூப்பாடு போட்டாங்க! எல்லாம் உன்னாலதான்டா, பொண்டாட்டிய ஒழுங்கா பாசமா பார்த்துக்க துப்பு இல்லைனு திட்டுனாங்க! அப்புறம் சமைக்கப் போயிட்டாங்க. அந்த ஒரு வேளை ஒப்பாரி வச்சது தான். மறுநாளு எங்கப்பா காட்டன சோகம் கூட ஆத்தா காட்டல! பதட்டத்துல இதெல்லாம் நான் கவனிக்கவே இல்லையே”

“என் கிட்ட பேசறப்போ, ஆரம்பத்துல ஆத்தா ஆத்தான்னு அவங்கள பத்திதான் சொல்லிட்டு இருப்பா போன்ல! அதுக்கு அப்புறம் உன்னைப் பத்தி அப்பப்போ பேசுவா! அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தப்பவும், பஞ்சாயத்திலும் மாமியார், மருமக ரெண்டு பேர் நெருக்கத்தையும் கண் கூடா பார்த்தேன். அதான் உங்க ஆத்தா கிட்ட சொல்லாம போயிருக்க மாட்டான்னு தோணுச்சு”

“இருங்க டீச்சரப்பா” என சொன்னவன், போனை எடுத்து தன் தாயை அழைத்தான்.

“என்னடா இந்த நேரத்துல? பத்திரமா போயிட்டியா? திரும்ப வரும் போது அது பேரு என்னா? அதாண்டா வட்ட வட்டமா இருக்குமே! காக்கா முட்டை படத்துல கூட காட்டுனாங்களா! ஹான்ன்ன்… பீச்சா, அது வாங்கிட்டு வாடா காளை. ஆசையா இருக்கு சாப்புட!”

“ஆத்தா!!!!” பல்லைக் கடித்தான் காளை.

“என்னடா? உன் பொண்டாட்டி காணா போயிட்டா நாங்க பீச்சா சாப்புட கூடாதுன்னு சட்டம் எதாச்சும் இருக்கா” என கேட்டு இன்னும் அவன் பீ.பீயை ஏற்றினார் காமாட்சி.

“டீச்சர் எங்க போனாங்கன்னு உனக்கு தெரியுமாத்தா?”

“தெரியுமே!”

“ஆத்தா!!!! ஏன் என் கிட்ட சொல்லல?”

“என்னடா சும்மா ஆத்தா ஆத்தான்னு ஏலம் போடற! நீ கேக்கல நான் சொல்லல! இப்ப கேக்கற நான் சொல்லறேன்!”

“நான் எப்படி கலங்கிப் போய் தவிச்சேன்! சாப்படல, தூங்கல, குளிக்கல! உன் புள்ள படற பாட்ட பார்த்துக் கூட சொல்லனும்னு தோணல இல்ல!”

“எதுக்கு சொல்லனும்? இல்ல எதுக்கு சொல்லனுங்கறேன்! துரு துருன்னு சுத்திட்டு இருந்த புள்ளைய, என்ன சொன்னியோ ஏது சொன்னியோ தெரியல, ஆத்தா நான் கொஞ்ச நாள் எங்கயாச்சும் நிம்மதியா இருந்துட்டு வரேன்னு ஒரே அழுகை. கையில கெடச்ச சொர்க்கத்த வச்சு வாழ தெரியாத கூமுட்டைக்கு, அந்த் புள்ள எங்கிருக்குன்னு எதுக்கு சொல்லனுங்கறேன்! அதான் அவ அருமை தெரியட்டும்னு கம்முன்னு இருந்தேன்!”

“ஆத்தா!” தளுதளுத்தான் காளை.

“எனக்கு நீ வெறும் மகன்! அந்தப் புள்ள எனக்கு மக, மருமக, என் கொலசாமி எல்லாமே! அவ நிம்மதிதான் எனக்கு முக்கியம். தூக்கம் வராம தவிச்சுட்டு, இப்போத்தான் போன் போட்டா அவளும். உன் கிட்ட அட்ரஸ் குடுத்து வந்து கூட்டிட்டு போக சொன்னா! உன்னை விட்டுட்டு இருக்க முடியலையாம்! நானா இருந்தா ஒரு மாசம் தேடித் தவிக்கட்டும்னு விட்டுருப்பேன்! அந்த மகராசிக்கு மூனு நாளு கூட இருக்க முடியல! இந்தா அட்ரசு, போய் நல்லபடியா பேசி கூட்டிட்டு வா என் மருமகள!” என கடிந்துக் கொண்டே முகவரியை அவர் சொல்ல,

“டீச்சரப்பா! நான் சொல்லுற அட்ரச ரேக்கோர்ட் பண்ணிக்குங்க!” என காமாட்சி சொன்ன முகவரியை இவன் திரும்ப சொல்ல, அஜய் தனது போனில் பதிந்து கொண்டார்.

“உன் மருமகளோட சீக்கிரம் வீட்டுக்கு வரேன் ஆத்தா! அதுக்கு அப்புறம் உனக்கு இருக்கு கச்சேரி!” என சொன்னவனின் முகம் மலர்ந்து கிடந்தது.

“வா,வா! பீச்சாவோட வா” என அவரும் புன்னகையுடன் சொல்ல, போனை அணைத்தான் காளை.

சட்டென எழுந்துக் கொண்டவன்,

“நான் கெளம்பறேன் டீச்சரப்பா! என் அம்மும்மாவ இப்பவே போய் பார்க்கனும்” என பரபரத்தான்.

“அட இருங்க மாப்பிள்ளை! அதான் இருக்கற இடம் தெரிஞ்சுருச்சுல்ல, நல்லா விடிஞ்சதும் போகலாம். அது வரைக்கும் என் கூட பேசிட்டு இருங்க”

அவர் பேச்சைத் தட்ட முடியாமல் அமைதியாக அமர்ந்தான் காளை.

“என் பொண்ணுக்கு படிச்ச மாப்பிள்ளை வேணும், பதவிசான மாப்பிள்ளை வேணும்னு சொல்லிட்டு, சட்டுன்னு பஞ்சாயத்துல நடந்ததெல்லம் மறந்துட்டு உங்கள எப்படி மாப்பிள்ளைன்னு கூப்பிடறேன்னு ஆச்சரியமா இருக்குல்ல?”

ஆமென தலையாட்டினான் காளை.

“டீச்சரோட ட்ராவர்ல அட்ரஸ் பார்த்து உங்கள தேடி வந்தப்ப கூட, என்னை அடி வெளுத்துடுவீங்கன்னு நெனைச்சுட்டே தான் வந்தேன். என்ன திட்டனாலும், அடிச்சாலும், என் டீச்சர் எங்கன்னு தெரிஞ்சுக்காம போக கூடாதுன்னு சபதம் எடுத்துட்டுத்தான் வந்தேன் டீச்சரப்பா! நீங்க மாப்பிள்ளைன்னு கூப்பிட்டதும் அப்படியே ஆடிப் போயிட்டேன்”

பெருமூச்சு விட்டவர்,

“மங்கையை சில சமயத்துல தான் அம்மும்மான்னு கூப்புடுவேன். அடிக்கடி அப்படி கூப்பிட்டு பாசத்த காட்டறதுக்கு எனக்கு கொடுத்து வைக்கல காளை. கிடச்ச கேப்ல என் பாசத்த அவளுக்கு உணர்த்திருக்கேன்தான். தே பெஸ்ட் ஸ்கூல், பெஸ்ட் துணிமணி, பெஸ்ட் ஸ்கூட்டி, பெஸ்ட் ஜீவலரின்னு பணத்தால குடுக்க முடிஞ்சத அள்ளிக் குடுத்துருக்கேன். ஆனா மனசால குடுக்க வேண்டிய அன்புல கஞ்சத்தனமா இருந்துட்டேன். அம்மும்மான்னு கூப்புட்டா அப்படியே அவ கண்ணு ரெண்டும் பளிச் பளிச்சுன்னு மின்னும்! அதே வார்த்தையை உன் வாயால கேட்டதும், எனக்கு புரிஞ்சுடுச்சு என் இடத்தையும் சேர்த்து உனக்கு குடுத்துட்டா என் மகள்னு!” என சொன்னவர் மீண்டும் கப்பில் கொஞ்சம் காபி ஊற்றி காளைக்குக் கொடுத்தார்.

அமைதியாகவே அவர் சொல்வதைக் கேட்டிருந்தான் காளை.

“ஒரு பொண்ணு தன் அப்பா எப்படி பார்த்துக்கிட்டாரோ அதே மாதிரி தனக்கு வர புருஷனும் அவள பார்த்துக்கனும்னு நெனைப்பா, எதிர்ப்பார்ப்பா! டாடிஸ் லிட்டல் பிரிண்சஸ்சா இருக்கறவ கணவன் வீட்டுக்குப் போனதும் பல பொறுப்புக்கள சுமந்துகிட்டு குடும்பத் தலைவியா மாறிடறா! அப்படி இருந்தும் அப்பா கிட்ட செஞ்ச குறும்புகள், சேட்டைகள் எல்லாம் லேசா கணவனிடம் காட்டத் தொடங்குவா! பாத்ரூம்ல புருஷன் இருக்கறப்போ லைட்டை ஆப் பண்ணி விளையாடறதுல இருந்து, ஒளிஞ்சு நின்னு பேன்னு கத்தி அவன பயம் காட்டறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா தன் சேட்டைய ஆரம்பிப்பா. அந்த கணவன் அதை ரசிச்சா, அவனுக்கும் இவ லிட்டில் பிரின்சஸ் ஆகிடறா! அதே அவன், இதென்ன சின்னப்புள்ளைத்தனம் அப்படின்னு மனச உடைக்கறப்போ பிரின்சஸ் செத்துப்போய் அங்க மனைவியாய் மட்டும் மாறிப் போயிடறா! என் பொண்ணு உன்னை அம்மும்மான்னு கூப்புட வச்சிருக்கான்னா, உனக்கு அவ மனைவியா மட்டும் இல்ல குழந்தையாவும் மாறி இருக்கான்னு புரிஞ்சுக்கிட்டேன். என் மகள நீ பிரின்சஸ்சா வச்சிருக்கேன்னும் தெரிஞ்சுகிட்டேன்! அதுக்கு அப்புறம் உன்னை மாப்பிள்ளைன்னு கூப்பிட என்ன தயக்கம் எனக்கு!” என சொல்லிப் புன்னகைத்தார் அஜய்.

இவனும் முகம் மலர புன்னகைத்தான்.

“சரி இப்போ சொல்லுங்க மாப்பிள்ளை! என்ன பிரச்சனை ரெண்டு பேருக்கும்? ஏன் உங்க அம்மும்மா கோவிச்சுக்கிட்டு வந்துட்டா?” என அவன் முகத்தை ஆழ்ந்துப் பார்த்து கேட்டார் அஜய்.

மங்கையின் பார்வையைப் போலவே அவர் பார்வையும் காளையைத் துளைத்தது.

கணவன் மனைவியின் தனிப்பட்ட விஷயத்தை சொல்ல ரொம்பவே தயங்கினான் காளை.

“என் கிட்ட சொன்னா, எனக்கு தெரிஞ்ச நாலு நல்லத சொல்லிக் கொடுப்பேன். ஒரு பொண்ணுக்கு புருஷனா இருக்கற பல வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்குல்ல எனக்கு! நான் ஒரு நல்ல தகப்பனா இல்லாம இருக்கலாம், ஆனா ஒரு நல்ல கணவன். அட தயங்காம சொல்லுங்க மாப்பிள்ளை.”

மெல்ல தன் மனதில் உள்ளதையும் அன்று நடந்ததையும் பகிர்ந்துக் கொண்டான் காளை. பெற்றவர்களுக்கும் மங்கைக்கும் பாசம் நேசம் பொங்கி வழியவில்லை என இத்தனை நாளில் கண்டுக் கொண்டிருந்தான் காளை. தன் மனைவி, பார்வதி என்பவரை அத்தை அத்தை என அடிக்கடி போன் செய்து பேசி பார்த்திருக்கிறான். ஏன் இவனிடம் கூட அந்தப் பார்வதி பேசியிருக்கிறார். ஆனால் தன் தாயிடம் இது நாள் வரை அவள் பேசி காளை கண்டதில்லை. அவரைப் பற்றி இவன் பேசுவது கூட அவளுக்குப் பிடிக்காது. தந்தையிடம் கூட நான்கு வார்த்தை அவளே பேசி வைத்து விடுவாளே தவிர, இவனிடம் பேச சொல்லிக் கொடுக்க மாட்டாள். ஆனாலும் ஆணுக்கு ஆணாக அஜய் கேட்கும் போது, மேலோட்டமாக பகிர்ந்துக் கொள்ளலாம் என சொல்ல ஆரம்பித்தான்.

“பிரச்சனை ஆரம்பிச்சது நீங்க முத தடவை வந்துட்டுப் போனதுல இருந்துதான் டீச்சரப்பா”

“என்னாலயா?”

“அதுக்கு முன்ன இருந்தே டீச்சர் மேல எனக்கு ரொம்ப ஆசை, பாசம், பக்தி, காதல் இப்படி என்ன பேர் வேணும்னாலும் சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமா தைரியத்த வளர்த்துகிட்டு இருந்தேன் என் காதல சொல்லிடனும்னு. அப்போத்தான் நீங்க வந்து எனக்கு இப்படி மாப்பிள்ளை வேணும், அப்படி மாப்பிளை வேணும்னு சொல்லிட்டுப் போனீங்க. ஏற்கனவே டீச்சருக்கு நாம பொருத்தம் இல்லைன்னு மனசுல அப்பப்ப ஒரு சைத்தான் சொல்லிட்டே இருக்கும். நீங்க வந்துட்டுப் போனதும் என் ஆசையை குழி தோண்டி நானே புதைச்சு வச்சுட்டேன்! இனிமே டீச்சர தூரமா பார்த்து ரசிக்கறதோட நிப்பாட்டிக்கனும். அவ்வளவுதான் நமக்கு விதிச்சதுன்னு இருந்துட்டேன். நீங்க பஞ்சாயத்துல பார்த்த படம் கூட நான் போதையில இருந்தப்போ தடுக்கி விழுந்த வீடியோ தான். நான் சுய நினைவோட இருக்கறப்போ எடுத்த வீடியோ இல்ல.”

“ஓஹோ! அந்த வீடியோவ எடுத்தது யாரு?”

“அங்கதான் ட்விஸ்ட்டே வருது டீச்சரப்பா!”

“பார்டா! உன் காதல் கதையில எத்தனை டுவிஸ்ட்டு எத்தனை டர்ன்னு” என சிரித்தார் அவர்.

“சிரிக்கறப்போ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டீச்சரப்பா!”

அதற்கும் சிரித்தார் அஜய்.

“சரி மீதி கதைய சொல்லு, கேப்போம்”

“டீச்சர் ஒரு தடவை அவங்க கிளாஸ் பையன், ஒரு பொண்ண தப்பா தட்டிட்டான்னு அறைஞ்சித் தள்ளிட்டாங்க. அவன் பேரு சூரி. நானும் அவன ரெண்டு தட்டு தட்டிடேன். அந்த பொண்ணு முன்னுக்கு டீச்சர் அடிச்சத அவனால தாங்கிக்க முடியல. டீச்சர பழி வாங்கனும்னு சுத்திட்டு இருந்துருக்கான். இந்த பயலுங்களுக்கு எல்லாம் இப்போ இந்த செல்லு போனு ஒரு ஆயுதமா போச்சு. அத வச்சு டீச்சர் எங்கயாச்சும் அப்படி இப்படி தெரிஞ்சா போட்டா எடுக்கலாம்னு பின்னாடியே திரிஞ்சிருக்கான். அந்த டைம்ல தான் டீச்சர் ஸ்கூட்டில இருந்து கீழ விழ, நான் அவங்கள தூக்கன்னு அத வீடியோ எடுத்துருக்கான். அதே மாதிரி டீச்சர் கராத்தே கத்துக் குடுத்துட்டு என்னைப் பார்க்க வந்தாங்க. நான் ஃபுல் போதை அப்போ! ஆசையில அவங்க கையைப் புடிக்க, தடுமாறி ரெண்டு பேரும் கயித்து கட்டில்ல விழன்னு அதையும் வீடியோ எடுத்துருக்கு அந்த பக்கி.”

“அடப்பாவி!”

“பாவிதான்! அதான் கடவுள் கூலிய குடுத்துட்டான். டவுனுக்கு பொறுக்கப் போனப்போ எவனோ கார்க்காரன் இடிச்சுட்டு நிக்காம ஓடிட்டான். கால் ஒடஞ்சு, சரியான அடி வேற ஒடம்பு முழுக்க. டீச்சர் கிளாஸ் பையனா இருக்கவும், இவங்க போய் பார்த்துருக்காங்க ஹாஸ்பிட்டல்ல. அப்போத்தான் ஆபரேஷனுக்கு பணம் இல்லாம தவிக்கறத கேள்விப்பட்டு டீச்சரே பண உதவி செஞ்சிருக்காங்க!”

“இதுல எங்க மாப்பிள்ளை பஞ்சாயத்து வருது?”

“வருதே! இதுலதான் பஞ்சாயத்தே வருது! அந்த சூரி பையன் அப்பா மாரி டீச்சர் கையைப் புடுச்சுட்டு ஒரே அழுகை. தெய்வம் மாதிரி நீங்க எங்களுக்கு உதவி செய்யறீங்க. ஆனா இந்த மொள்ளமாறி உங்களயே தப்பு தப்பு படம் எடுத்து வச்சிருக்கானேன்னு ஒப்பாரி வச்சிருக்காரு. டீச்சர் ஒதவி செய்யறாங்கன்னு தெரிஞ்சதும் சூரி அவங்கப்பாட்ட சொல்லி அழுதுருக்கான் தன் தப்பையெல்லாம். டீச்சருக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு! என்ன படம்னு கேக்க, மாரி வீடியோவ காட்ட, அங்க போட்டாங்க டீச்சர் பக்கா ப்ளான்னு. எங்க ஊரு பஞ்சாயத்துல இப்படி பட்ட கேசு வந்தா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருந்த டீச்சர், அந்த வீடியோவ எல்லாம் சீடியா போட சொல்லிருக்காங்க மாரிக்கிட்ட! அதோட அவன் நன்றிக்கடன வச்சு பிராது குடுக்க வச்சிருக்காங்க. ஆனா நான் குழந்தையம்மன் மேல சத்தியம் வைப்பேன்னு அவங்க எதிர்ப்பார்க்கல. அதான் கைய வெட்ட வரவும் அதிர்ச்சியாகிட்டாங்க!”

தன் மகள் செய்த காரியத்தை எண்ணி அதிர்ந்துப் போனார் அஜய்.  கல்யாணம் செய்து கொள்கிறேன் என, அவர் தடுத்தும் உறுதியாக நிற்கவும்தான் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் ஒதுங்கி நின்றார். ஆனால் அந்தப் பிளானே மகளது என தெரிந்து அவருக்கே அதிர்ச்சிதான்.

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

“மாரி என்னைப் பார்த்து பயந்து அவனாவே உண்மைய சொல்லிட்டான். டீச்சரும் அன்னிக்கு சண்டையில சொன்னாங்க”

“எதுக்கு அப்படி செஞ்சா மங்கை?”

“ஏன்னா டீச்சர் என்னை லவ் பண்ணறாங்களாம்”

வாயைப் பிளந்தார் அஜய்.

அவரது ரியாக்‌ஷனைப் பார்த்து,

“பாருங்க, பாருங்க! பெத்த அப்பா நீங்காளே இப்படி வாயப் பொளக்கறீங்க! அப்போ எனக்கு எப்படி இருக்கும்? நான், ஏன் டீச்சர் இப்படி செஞ்சீங்க அப்படின்னு கேக்க, ஏன்னா உன்ன பைத்தியமா காதலிக்கறேன்னு கத்துனாங்க” என சொன்னான் காளை.

இன்னமும் வாய் பிளந்து தான் பார்த்திருந்தார் அஜய். அழகாய், அம்சமாய், நளினமாய் இருப்பதோடு நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தனது மகள், இந்த பட்டிக்காட்டு சிங்கம், படிப்பறிவில்லாத தங்கம் மேல் காதல் கொண்டு, பஞ்சாயத்தைக் கூட்டி மணந்தாள் என்பதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை அவரால்.

“கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அடிக்கடி ஐ லவ் யூன்னு வித விதமா சொல்வாங்க. எனக்கு அப்படியே காத்துல பறக்கற மாதிரி இருக்கும். ஆனாலும் மனசுக்குள்ள ஒரு சலனம் எப்பவும் இருக்கும். நெஜமா என்னை லவ் பண்ணறாங்களா டீச்சர், இல்ல தாலி கட்டியாச்சு, இருக்கறத வச்சி மகிழ்ச்சியா இருப்போம்னு நினைக்கறாங்களான்னு! எப்படியா இருந்தாலும் அவங்க என் மனைவி, இப்போ கடமைக்கு ஐ லவ் யூ சொன்னாலும் காதலா கண்டிப்பா சொல்ல வைப்பேன்னு மனசுக்குள்ள நெனைச்சிப்பேன். என்னால முடிஞ்ச வரை அவங்கள உள்ளங்கையில வச்சி தாங்கனேன் டீச்சரப்பா! ஆனா அந்த மறை சொன்ன, என்னை கழட்டி விடத்தான் உன்னை கட்டனான்ற விஷயமும், பஞ்சாயத்த அவங்களா கூட்டுனாங்கன்ற விஷயமும். அப்பப்போ என் மனசுல வந்து வந்து போற என்னோட தாழ்வு மனப்பான்மையும் என்னை பைத்தியக்காரன் ஆக்கிடுச்சு அன்னிக்கு. எந்த பேய் எனக்குள்ள புகுந்துச்சுன்னு தெரியல டீச்சரப்பா” சொல்லிக் கொண்டே இருந்தவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவன் கையைப் பற்றி தட்டிக் கொடுத்தார் அஜய்.

தனக்கு கிடைக்காத அன்பும் பாசமும் இவனிடமும் இவன் குடும்பத்திடமும் கிடைக்க, அதை தக்க வைத்துக் கொள்ள மகள் தன் மானத்தையே பஞ்சாயத்தில் சந்தி சிரிக்க வைத்து இவனை மணந்திருக்கிறாள் என தெள்ளத் தெளிவாக புரிந்தது அஜய்க்கு. புரிந்த விஷயம் நெஞ்சத்தை அழுத்தியது. லேசாக நெஞ்சைத் தேய்த்து விட்டுக் கொண்டார்.

“நான் என்ன செய்யட்டும் டீச்சரப்பா! அவங்க என்னை பாசமாவோ, ஆசையாவோ ஒரு பார்வை பார்த்தது இல்ல. எட்டி நில்லுங்கற மாதிரிதான் பேசுவாங்க. மிஸ்டர் இல்லாம வார்த்தை வராது. நீங்க நீங்க, நாங்க நாங்கன்னு தான் பேச்சுலாம் இருக்கும். இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்ன! அப்படி இருக்கறப்போ, அவங்க என்னைக் காதலிச்சாங்கன்னு நான் எப்படி நம்புவேன்?”

“கஸ்டம்தான்”

“அதேதான்! அன்னைக்கு சண்டைல உன்னைப் பைத்தியமா காதலிக்கறேன்னு அவங்க சொன்னப்போ, ஒரே ஒரு வாக்கியம்தான் சொன்னேன்! மறுநாள் வீட்டை விட்டுக் காணாப் போயிட்டாங்க”

“என்ன சொன்னீங்க மாப்பிள்ளை?”

“பொய் சொல்லாதீங்க டீச்சர்னு”

“ஓஹோ!”

“அதுக்குப் பிறகு என்னைப் பேசவே விடல டீச்சரப்பா! என்னை இறுக்க கட்டிப் புடிச்சிருந்தவங்க, தள்ளி விட்டுட்டாங்க!. நான் கிட்ட போக, கிட்ட வரதேன்னு கைய வச்சே சிக்னல் குடுத்துட்டாங்க. முகத்துல அவ்வளவு கோபம்! உதடுலாம் அப்படி துடிக்குது! எனக்கு பயம் வந்துடுச்சு டீச்சரப்பா! ஸ்கூலுல அப்படித்தான் புள்ளைங்கள மெரட்டுவாங்களோ உங்க மக? அப்படி ஒரு லுக்கு! என்னமோ பெருசா சொதப்பிட்டேன்னு தெரிஞ்சுருச்சு! சாரி டீச்சர், சாரி டீச்சர்னு கால்ல கூட விழுந்தேன்.”

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன்,

“சட்டுன்னு நகர்ந்துட்டாங்க டீச்சர். ‘நீ எந்த முயற்சியும் செய்யாம நானே உன் கையில வந்து விழவும், இந்த மங்கை இளப்பமா போயிட்டேன்ல! என்னோட அன்பு எப்பவுமே எல்லாருக்கும் இளப்பம்தான். அது நான் வாங்கிட்டு வந்த வரம். என் வாழ்க்கையில மட்டும் அன்புன்றது நிலைக்கக் கூடாதுன்னு அந்த கடவுள் எழுதி வச்சிட்டான் போல’ அப்படின்னு சொல்லிட்டு எங்காத்தா கிட்ட போய் படுத்துகிட்டாங்க. மிட் நைட்ல ரூமுக்கு தூக்கிட்டு வரலாம்னு போனேன், தூங்கவே இல்ல அவங்க. விடிய விடிய அவங்க வெளியவும் நான் உள்ளயும் தூங்காம இருந்தோம். மறுநாள் ஸ்கூலுல கொஞ்சம் வேலை இருக்குன்னு அவங்க ஸ்கூட்டிலயே போய்ட்டாங்க. சாப்பிட கூட இல்ல. நான் பின்னால போக போனேன், எங்காத்தா என்னமோ வேலை சொல்லி இப்பயே செய்ன்னு நிறுத்தி வச்சிட்டாங்க. இப்போத்தான் புரியுது இது எங்காத்தா சதின்னு.”

அவன் சொன்ன அன்பே நிலைக்கதா எனும் கூற்றுக்கு விரக்தியில் சிரித்தார் அஜய்.

“சிரிக்காதீங்க! நான் ரொம்ப பீலீங்ல இருக்கேன்! அவங்க சொன்ன வேலைய முடிச்சுட்டு ஸ்கூலுக்கு போனா, அவ பறந்து போனாளே , என்னை மறந்து போனாளேன்னு ஆகிப்போச்சு. அப்புறம் உங்கள தேடி இங்க வந்து நிக்கறேன்! நான் யோசிக்காம ஒன்ன ஒத்த வாக்கியம், என் டோடல் வாழ்க்கையும் புஸ்க்குன்னு போச்சு! டீச்சர் இல்லாத நாள் என் வாழ்க்கையில நரகம் டீச்சரப்பா! என்னை பாசமா பார்க்க, காதலா பேச, கொடுமை பண்ண, வேலை வாங்க என் டீச்சர் எனக்கு வேணும்! அவங்க இல்லைன்னா இந்த காளை அடிமாடா போக வேண்டியதுதான். டீச்சர் இல்லாத காளை, பொணத்துக்கு சமம். இன்னிக்கு டீச்சர பார்த்ததும் படார்ன்னு கால்ல விழுந்து எனக்கு வாழ்க்கைப் பிச்சை போடுங்க டீச்சர்னு கதறிடுவேன்!”

இப்பொழுது பலமாக சிரித்தார் அஜய்.

“மாப்பிள்ளை, என் அம்மும்மாவ புரிஞ்சுக்கனும்னா உங்களுக்கு அவ முழு கதையும் தெரியனும். அவ ஏன் உங்க அன்புக்காக இப்படி செஞ்சா, ஏன் உங்க கிட்ட தன்னோட சின்னப்புள்ளத்தனத்த காமிக்கறா, நீங்க ஒரு வார்த்தை சொன்னதும் ஏன் கோபம் வந்து கெளம்பிட்டா, ஏன் அவளப் பத்தி எதுவும் உங்க கிட்ட இத்தனை நாளா சொல்லல, இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னா நீங்க எங்க கதைய கேட்கனும்” என சொன்னவர், அமைதியாக தன் மருமகனிடம் தனது மனதை திறந்து காண்பித்தார்.

முழு கதையையும் கேட்டவனுக்கு தனது மங்கையின் மேல் இன்னும் இன்னும் அன்பு பெருக்கெடுத்தது. என்றென்றும் நான் உன் அடிமை இனி என அடிமை சாசனத்தை தன் நெஞ்சத்தில் கிறுக்கிக் கொண்டு மங்கையை காண போனவன், அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தான்.

அங்கே கதவைத் திறந்த ஆளைப் பார்த்து ஆவென வாய் பிளந்து நின்றான் முத்துக்காளை. (யார்னு கெஸ் பண்ணுங்க செல்லம்ஸ்)

(அடி பணிவான்….)

(மங்கையுடைய காதல், அவளது பாய்ண்ட் ஆப் வியூ பற்றி நான் இன்னும் கொடுக்கவில்லை. அது ப்ளேஷ்பேக் முடிந்து வரும். போன எபில பிழையான பாட்ட குடுத்துட்டேன். காந்தக் கண்ணழகிக்கு பதில் மயிலாஞ்சி வரனும். எபில கரேக்ட் பண்ணிட்டேன். சுட்டிக் காட்டுன சகோதரிக்கு நன்றி.

அதோட ஒவ்வொரு எபிக்கும் தலைப்பு பாடலா ரெண்டு பேரோட மனநிலை அந்த டைம்ல எப்படி இருக்கும்னு யோசிச்சி அதுக்கான வரிகள தான் குடுத்துட்டு இருக்கேன். ரொம்ப நேரம் எடுத்து, பல பாட்டு கேட்டுத்தான் செலெக்ட் பண்ணுறேன் தலைப்பு பாடல. அத கனேக்ட் பண்ணீங்களான்னு தெரியல. கதை முடியறதுக்குள்ள நானே சொல்லிடலாம்னு சொல்லிட்டேன் 🙂 )

error: Content is protected !!