அத்தியாயம் 3
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேல ஆசைப்பட்டு
பாத்துக் காத்து நின்னேனே!!! (முத்துக்காளை)
ஒரு வாரமாக வேலை நெட்டி முறித்தது மங்கைக்கு. ஆங்கிலம் மிக மிக பிடித்துப் போக லிட்ரெச்சர் எடுத்துப் படித்து அதில் மேஜர் செய்திருந்தவள், சொல்லிக் கொடுப்பதும் ஆங்கிலம்தான். பல வகுப்புக்களுக்கு ஆங்கிலம் எடுத்தாலும், இவளுக்கு இன் சார்ஜாக ஒரு வகுப்பையும் கொடுத்திருந்தார்கள்.
இந்தப் பள்ளியில் ஆங்கிலம் போதிப்பது மிகுந்த சவாலாகவே இருந்தது அவளுக்கு. சில சமயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளலாமா என கூட இருக்கும் மங்கைக்கு. பிழை இல்லாமல் ஆங்கிலத்தில் எழுத தெரிந்த ஒரு சிலருக்கு பேசுவது பெரும்பாடாக இருந்தது. இன்னும் சிலருக்கு ஸ்பெல்லிங்கே தகிடதத்தோம் போட்டது. புத்திசாலி மாணவர்களை முன்னே வந்து நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேச சொன்னால் கூட நடுநடுங்கிப் போனார்கள். ஆங்கிலம் என்பது மொழிதான். தமிழ் போல் அதுவும் பேச பேச வசப்படும் என சொல்லி ஸ்டெப் பை ஸ்டேப்ப்பாக தான் போக முயன்றாள்.
அதோடு முத்துக்காளையின் வீட்டில் இருந்து பள்ளிக்குப் போக அரை மணி நேரமாவது ஆனது. அதுவும் பக்கத்து கிராமத்தில் தங்கியிருக்கும் இன்னொரு ஆண் டீச்சர் தான் இவளை காரில் வந்து அழைத்துப் போய் மறுபடியும் விட்டு விட்டுப் போவான். அண்ணாரின் பெயர் மறைச்செல்வன். இவள் மனதுக்குள் மறைக் கழண்ட செல்வன் என திட்டித் தீர்ப்பாள். காரில் ஏறியவுடன் ஆரம்பிப்பவன் பள்ளி போய் சேரும் வரை அறுத்துத் தள்ளிவிடுவான். அவன் முதல் கேர்ள்ப்ரேண்டில் ஆரம்பித்து இப்பொழுது ப்ரேக் ஆப் செய்து விட்டு வந்த பன்னிரெண்டாவது காதலி வரை மூச்சு விடாமல் பேசுவான். பதின்மூனாவதாக இவளை சேர்த்துக் கொள்ளத் திட்டமும் அவனிடம் இருந்தது. அதற்குத்தான் அப்படி இப்படி மங்கையிடம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
இவன் தொல்லையில் இருந்துத் தப்பிக்கவே ஸ்கூட்டி ஒன்று செகண்ட் ஹேண்டாக வாங்கி விடலாம் என முடிவெடுத்திருந்தாள். பெரிய தனக்காரரருக்கு போன் போட்டு உதவி கேட்க, அவரோ முத்துக்காளையிடம் கேட்டால் நொடியில் முடித்துக் கொடுத்து விடுவான் என சொல்லி இருந்தார். அன்று நடந்த இறுக்கிப்புடி சம்பவத்துக்குப் பிறகு அவனைக் கண்ணால் கூட காணவில்லை இவள். இன்று வீட்டுக்குப் போனதும் அவனிடம் இந்த ஒரு உதவியைக் கேட்டுவிட்டு பின் எப்பொழுதும் போல ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தாள். அவளின் நேரம் அன்று வெள்ளிக்கிழமையாகிப் போனது.
வீட்டில் நுழைந்துதான் பின் வாசல் வழி அவளின் அறைக்குப் போக வேண்டும். எப்பொழுதும் முற்றத்தில் மஞ்சள் கலந்த நீர் வைத்திருப்பார் காமாட்சி. அதில் கால் கழுவிக் கொண்டு உள்ளே போகும் முன்னே, காமாட்சி மடக்கி காபியைக் கொடுத்து விடுவார். அதோடு பலகாரம் எதாவது இருக்கும். இரவு உணவு வேறு சாப்பிட வேண்டுமே என கொஞ்சமாக எடுத்துக் கொள்ள முயன்றாலும் அவர் விடமாட்டார். வயசுப் பெண் சாப்பிடும் லட்சணமா இது என பாசமாகக் கடிந்துக் கொள்வார். வந்த ஒரு வாரத்திலேயே லேசாக எட்டிப் பார்த்திருந்த குட்டித் தொப்பை இவளுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. இப்படியே போனால் குண்டோதரி ஆகிவிடுவோமோ என பயம் வந்திருந்தது மங்கைக்கு.
வீட்டில் நுழையும் போதே ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது. பிள்ளைகள் குரல் கேட்கவும், யாரோ வந்திருக்கிறார்கள் என எண்ணியபடியெ காலைக் கழுவினாள் இவள்.
“வாத்தா! இன்னிக்கு ஸ்கோலு எப்படி போச்சு?” என்றபடியே வந்தார் காமாட்சி.
“எப்பவும் போலத்தான் ஆத்தா! பிள்ளைகள மேய்ச்சு முடியல”
“ஒன்னு ரெண்ட வச்சி வீட்டுல மேய்க்கவே மூச்சு முட்டுது! மொத்த புள்ளைங்களையும் மேய்க்கனுமே! கஸ்டம்தேன்! நீ வாத்தா ஒரு வா காபி குடி” என அடுப்படிக்கு அழைத்துக் கொண்டார். அங்கே அடுப்பில் எதையோ கிண்டியபடி ஒரு பெண் நின்றிருந்தாள். இவளைப் பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்தவள்,
“வாங்க டீச்சர்! எப்படி இருக்கீங்க? வீட்டுக்கு வந்ததுல இருந்து உங்க புராணத்தத் தான் பாடுறாங்க எங்காத்தா” என கைக்குலுக்கினாள்.
“என் மவ ராஜேஸ்வரித்தா! ரெண்டு நாள் இங்க தங்க வந்துருக்கா” என முகமெல்லாம் சிரிப்பாக சொன்னார் காமாட்சி.
ராஜேஸ்வரி பார்க்க காமாட்சியைப் போலவே லட்சணமாக இருந்தாள். சுடிதார் அணிந்து பாந்தமாக இருந்தாள். அளவான நகைகள், ஸ்டிக்கர் பொட்டு, அழகாக பின்னியிருந்த தலை முடி என அம்சமாக இருந்தாள். இவள் தான் முத்துக்காளையின் அக்கா என சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள். அவனுக்குத் தங்கை போல இருந்தாள்.
“எனக்கு ரெண்டு நாள் பொண்டாட்டி ஜாப்ல இருந்து லீவ் டீச்சர்! அம்மா வேலை மட்டும் பார்த்தா போதும்! ஜாலி ஜாலி” என புன்னகைத்தாள் ராஜேஸ்வரி.
“பேச்சப்பாரு! ஆத்தா வீட்டுக்கு சீராட வந்துருக்கேன்னு சொல்லறது! அத விட்டுப்புட்டு லீவு கீவுன்னு!” மகளை செல்லமாக கடிந்துக் கொண்டார் காமாட்சி.
“மங்கைன்னு கூப்பிடுங்க ப்ளிஸ்! ஸ்கூல்ல தான் நான் டீச்சர். வீட்டுக்கு வந்துட்டா வெறும் மங்கை”
“அப்போ சரி, வெறும் மங்கைன்னே கூப்புடறேன்” என சொல்லி அவள் கண் சிமிட்ட, இவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதற்கு பிறகு இருவரும் சகஜமாகப் பேசிக் கொண்டனர். ராஜேஸ்வரி வாழைக்காய் பஜ்ஜியைப் போட்டு எடுக்க, காமாட்சி காபி தயாரித்தார். உணவை எடுத்துக் கொண்டு மூவரும் கிணற்றடிக்குப் போக அங்கே முத்துக்காளை மடியில் ஒரு குட்டிப் பெண்ணும் அவன் தோள் மேல் ஒரு குட்டிப் பையனும் அமர்ந்திருந்தார்கள். மாமா, மாமா என அவனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்த சின்னக்குட்டி புதிதாக தெரிந்த மங்கையைப் பார்த்ததும் வெட்கத்தில் காளையின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தோளில் அமர்ந்திருந்த பையனோ மெல்ல இறங்கி வந்து அவன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டான்.
“வாங்க டீச்சர்” என முகமன் சொன்ன காளையின் கண்கள் மட்டும் அவள் முகத்தை ஏறிடவே இல்லை.
காலைக் கட்டிக் கொண்ட மகனைத் தூக்கிக் கொண்ட ராஜேஸ்வரி,
“என் வீட்டு வாண்டுங்க. புது ஆளுங்கள பார்த்தா எங்கிருந்துதான் வெட்கம் வருமோ! அருண், அதிதி! சே ஹலோ டூ ஆண்ட்டி” என சொல்லிக் கொடுத்தாள். சுத்தமான ஆங்கிலத்தில் பேசியது இந்த வீட்டுப் பெண் தானா என ஆச்சரியமாகப் பார்த்த மங்கை சட்டென முகபாவத்தை மறைத்துக் கொண்டாள். பிள்ளைகள் ஹலோ சொல்ல இவளும் புன்னகையுடன் ஹலோ சொன்னாள்.
அவர்கள் எல்லோரும் கிணற்று அருகே காமாட்சி போட்டிருந்த மணக்கட்டையில் அமர, காளை மட்டும் எழுந்துக் கொண்டான்.
“அக்கா, கொஞ்சம் வேலை இருக்கு! அப்புறம் வரேன்கா!” என சின்னவளை இறக்கி விட்டுவிட்டு நழுவப் பார்ததவனை முறைத்தாள் ராஜேஸ்வரி. அவள் மகளோ,
“மாமா போணாம்(போக வேணாம்)” என அழுகவே ஆரம்பித்து விட்டாள்.
அவன் அவசரமாக குட்டியைத் தூக்கி சமாதானம் செய்ய,
“என் கையால பஜ்ஜி போட்டா ஆசையா சாப்புடுவேன்னு தானே வேர்க்க விறுவிறுக்க செஞ்சேன். ஒழுங்க உட்காந்து சாப்பிடாம எங்கடா போகனும்? காபி குடிச்சுட்டு எங்க வேணா போ” என ராஜேஸ்வரி ஒரு அதட்டல் போட, பெட்டிப் பாம்பாக அடங்கி அமர்ந்தான் முத்துக்காளை. உருவத்தில் அவ்வளவு பெரிதாக இருப்பவன், தன் குட்டி அக்கா போட்ட அதட்டலுக்கு அடிபணிந்து நடந்துக் கொண்டதை ஆச்ச்சரியத்துடன் பார்த்தாள் மங்கை.
அக்காவின் வார்த்தையை மதித்து அவர்களுடன் ஒன்றாக அமர்ந்தாலும், பார்வை அதிதியை விட்டு வேறு எங்கும் நகரவில்லை. தன் மருமகளுக்கு பஜ்ஜியைக் குட்டிக் குட்டியாகப் பிய்த்து அழகாய் ஊட்டிவிட்டான். தான் குடிக்கும் காபியையே ஊதி, ஊதி சின்னவளுக்கு பருகக் கொடுத்தான். அவளும் சமத்தாக அவன் கொடுத்ததை சாப்பிட்டுக் கொண்டாள்.
“என் பேரக்குழந்தைங்களுக்கு அவங்க மாமான்னா அம்புட்டு இஸ்டம். இங்க வந்துட்டா அவன் பின்னாலேயே சுத்துங்க. ஹ்ம்ம். பக்கத்துலதான் இருக்கா என் மக! ஆனா ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவைன்னு தான் இங்க தலையை காட்டுவா” என அங்கலாய்த்துக் கொண்டார் காமாட்சி. அவர் சொன்னதைக் கேட்டு சங்கடத்தில் ராஜேஸ்வரி நெளிய,
“விடுத்தா! வீட்டுக்கு வந்த மகளுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டு, நல்லா கவனிச்சு அனுப்பு போதும். சும்மா இது சரியில்ல, அது சரியில்லன்னு பொலம்பி வைக்காதே” என காமாட்சியைப் பார்த்து சொன்னவனின் பார்வை அவர் அருகே அமர்ந்திருந்த மங்கையின் பார்வையோடு உரச, சட்டென தலையை குனிந்துக் கொண்டான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, குட்டிப் பெண் முத்துக்காளையின் மடியிலேயே தூங்கி விட்டாள். அவளை மென்மையாய் அணைத்தவாறு வீட்டின் உள்ளே கொண்டு போய் படுக்க வைத்து விட்டு வந்தவன், இவர்களிடம் சொல்லி விட்டுக் வெளியே கிளம்பி விட்டான். அருணும் உடன் வருவேன் என் அடம் பிடிக்க அவனையும் அழைத்து சென்று விட்டான் காளை. மங்கையும் திருத்துவதற்கு புத்தகம் இருக்கிறது என ரூமினுள்ளே சென்று விட, மகளின் கைப்பிடித்து ரூமுக்குள் அழைத்துப் போய் கதவை மூடினார் காமாட்சி. அவள் வந்த நிமிடமே வீட்டிற்கு காளை ஆஜராகி இருக்க, மகளிடம் தனித்துப் பேச வாய்ப்பில்லாமல் போனது அவருக்கு.
“சொல்லுத்தா! எதுக்கு அவசரம், கண்டிப்பா வான்னு போன் போட்ட?” என கேட்டாள் ராஜேஸ்வரி.
“டீச்சர்தான்டி அந்த அவசரம்”
“ஏன், என்னாச்சு? பார்க்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்க, பந்தா பண்ணாம பழகறாங்க! என்ன பிரச்சனை?”
“அந்தப் பொண்ணு பத்திரைமாத்து தங்கம்டி! அந்தத் தங்கத்த உன் தம்பிக்காரன் சங்கிலியாக்கி கழுத்துல மாட்டிக்குவானோன்னு மனசு பதறுதடி”
“போத்தா, காமேடி பண்ணிக்கிட்டு! அவன் மங்கை இருக்கற பக்கமே பார்வையத் திருப்பல! அவன போய் அது இதுன்னு சொல்லிக்கிட்டு”
“அடியே! அந்த குழந்தையம்மன் மேல சத்தியமா, இவன் போக்கு சரியில்லடி! அந்தப் பொண்ணு மொத நாளு குளிக்கப் போய் குளிருல கத்துனப்போ, இவன் மாட்டு கொட்டகையில தான் இருந்தான். அன்னில இருந்து, நாலரை மணிக்கு எழும்பறவன் நாலு மணிகே எழுந்து, நம்ம வீட்டுல இருக்கே அந்தப் பெரிய அண்டா, அதுல சுடுதண்ணி வச்சி குளிக்கற தொட்டில ஊத்தி வைக்கறான்டி. டீச்சருக்கு பால் போட்டு ஸ்பெசலு காபி கலந்து வைக்கறான். அந்தப் பொண்ணு தங்கியிருக்கற ரூமுல கடமுடான்னு ஒரு ஓட்டை ஃபேனு இருக்குமே அதே தூக்கி கடாசிட்டு உசா(உஷா) ஃபேனு வாங்கி மாட்டிருக்கான். ரூமு வாசல்ல காத்தோட்டமா ஒக்கார மூங்கிலு நாக்காலி வேற. மூங்கிலு குத்துமுன்னு அதுல குட்டியா தலைகாணி வேற உட்கார! அது மட்டுமா செஞ்சான், நோட்டு புக்கு திருத்த மேஜை, மேஜைக்கு ஒரு நாக்காலின்னு அதகளம் பண்ணறான்டி. மனசுல அந்தப் பொண்ணு மேல ஆசையில்லாமயா இம்புட்டும் செய்யறான்.”
ஒன்றும் பேசாமல் அமைதியாக தாய் சொன்னதை கிரகிக்க முயன்றாள் ராஜேஸ்வரி.
“படிச்சப் பொண்ணு வேணும்னு கேட்டான், நானும் பத்தாப்பு படிச்ச பொண்ணுங்களாம் கூட பார்த்தேன். உனக்கும் தான் தெரியுமே! அதுகளே இவனை வேண்டாம்னு பந்தா காட்டுச்சுங்க! இந்த டீச்சர் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கு. அன்னிக்கு போனுல இங்கிலிபீசு அம்புட்டு அழகா பேசுது! உன் தொம்பிக்கு இங்கிலிபீசுன்னா என்னான்னு தெரியுமா? ஏபீசீடீ ஒங்கொப்பன் தாடி, வந்தா வாடி வராட்டி போடின்னு இங்கிலீசு பேசறவனுக்கு இந்த டஸ்சு புஸ்சு கூட ஏணி வச்சாலும் எட்டுமாடி? அந்தப் பொண்ணு சாப்பிடற பதவிச நீ பாக்கனும் ராஜீ! நாள் பூரா அதப் பார்த்துட்டே இருக்கலாம். சோத்த நடுவுல வச்சு, கொழம்ப பக்கத்துல கொஞ்சமா ஊத்தி, கூட்ட எல்லாம் ஓரமா வச்சி, கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சோத்துல கலந்து ரசிச்சு ருசிச்சு சாப்புடும். ஒன் தம்பி ஒரே மூச்சுல எல்லாத்தையும் கொலப்பி அடிச்சு வாயில போட்டுட்டு போயிட்டே இருப்பான். சோத்துலயே இத்தனை நாசுக்கு பார்க்கற புள்ளைக்கும் உன் சோத்துமூட்டைத் தம்பிக்கும் எப்படிடி பொருந்தும்? பயமா இருக்குடி! அந்தப் பொண்ணு நம்மல நம்பி வந்து தங்கிருக்கு இங்க. அந்த நம்பிக்கைய நாம காபந்து பண்ணனுமா இல்லியா? இவங்க வீட்டுல புடிச்சுக் கட்டி வைக்கத்தான் இந்த ஆத்தா நம்மள நல்லா பார்த்தாங்களான்னு அவ நெனைச்சிட்டா நான் மொகத்த எங்க கொண்டு போய் வைச்சிக்குவேன்! ஒன் தம்பி நீ சொன்னாத்தான் கேப்பான். நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டுப் போத்தா!”
ரூம் கதவு தட்டப்பட போய் திறந்தாள் ராஜேஸ்வரி. அங்கே கண்கள் சிவக்க நின்றிருந்தான் காளை. அவன் கையில் அருண்.
“கடலை மிட்டாய் கேட்டான். வாங்கிக் குடுத்து கூட்டி வந்துட்டேன்” அவனின் உடல் மொழியே கூறியது இவர்கள் பேசியதை எல்லாம் அவன் கேட்டு விட்டான் என.
“தம்பி!” இவள் சமாதானம் செய்ய வர,
“க்கா! எனக்கும் நல்லா தெரியும்கா எலி..ஹ்ம்ம் டீச்சருக்கும் எனக்கும் எந்தப் பொருத்தமும் இல்லன்னு! இல்ல தெரியாமத்தான் கேட்கறேன், டீச்சருக்கு நான் என்னா லவ் டார்ச்சரா குடுத்தேன், உங்காத்தா எவ்ளோ பெரிய பாட்டு பாடுது உன் கிட்ட! அவங்க மொகத்தக் கூட நான் நிமிர்ந்து பாக்கலக்கா! நம்மள நம்பித்தானே நம்ம ஊட்டுக்கு வந்திருக்காங்க. பச்சைத்தண்ணியில குளிச்சா சீக்கு வந்துட போகுதுன்னு பயந்து சுடுதண்ணி போட்டுக் குடுக்கறேன். அது தப்பா? ஏன் ஒனக்கு நான் போட்டுக் குடுத்தது இல்லையா? ஒரு மனிதாபிமானம்க்கா. காசு குடுத்து அந்த ரூமுல தங்கறாங்க! வாங்கற காசுக்கு சரியான வசதி செஞ்சுக் குடுக்கனுமா இல்லையா? நீ சொல்லுக்கா, குடுக்கனுமா இல்லையா?”
ஆமென இவள் தலை தானாகவே ஆடியது.
“அதத்தான் நான் செஞ்சேன்! படிச்ச பொண்ண கட்டிக்கனும்னு ஆசைதேன்! ஆனாலும் தேவதை மாதிரி இருக்கற டீச்சருக்கு நான்லாம் எடுபிடியா வேணும்னா இருக்கலாம்கா! கைக்கோர்த்து காலம் பூரா கூட வர புருஷனா இருக்க முடியாதுன்னு என் அறிவுக்கு நல்லாவே தெரியும்கா”
‘அறிவுக்கு தெரியறது இந்தப் பாழா போன மனசுக்கு தெரிய மாட்டுதேக்கா! எப்போ கட்டிப் புடிச்சு எலிசுன்னு கூப்புட்டேனோ, அப்போல இருந்து டீச்சர் வேணும் வேணும்னு துடிக்கற இந்த இதயத்துக்கு தெரியமாட்டுதே எங்களுக்குள்ள எந்தப் பொருத்தமும் இல்லைன்னு’ ஊமையாய் அழுதது அவன் மனம்.
“ஆத்தா புரியாம பேசிட்டாங்கடா! மனசுல வச்சிக்காதடா காளை”
“என்னடி புரியாம பேசிட்டேன்! எல்லாம் புரிஞ்சுத்தான் பேசறேன். இவன் மனசுல ஆசைய வளத்துக்கிட்டு, அவ திரும்பி போனதும் தேவதாசு மாதிரி வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்னு சுத்தறதுக்காடி வலிச்சு பெத்தேன் இவன. எனக்கு என் புள்ளைங்க நல்லா இருக்கனும், புள்ள குட்டின்னு சந்தோஷமா இருக்கனும். அவ்ளோதான்டி வேணும்.” என கண்ணைக் கசக்கினார் காமாட்சி.
“ஆத்தா! ப்ச் ஆத்தா! அழாதத்தா! அப்படிலாம் ஒன்னும் ஆகாது!” என தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு கன்னம் துடைத்தவனுக்கு தாய் மேல் இருந்த கோபம் பறந்துப் போயிருந்தது.
தம்பியின் அணைப்பில் அழுத முகம் மாறி புன்னகைத்த அன்னையை சிரிப்புடன் பார்த்திருந்தாள் ராஜேஸ்வரி.
நள்ளிரவில் ஓன் பாத்ரூம் வர, மெல்ல போர்வையை விலக்கி விட்டு எழுந்தாள் தவமங்கை. கிணற்றைத் தாண்டி பாத்ரூம் போய்விட்டு வந்தவள், கிணற்றின் மறுபக்கம் தெரிந்த கருத்த உருவத்தைப் பார்த்து வீலேன கத்துவதற்குள்,
“நான் தான் எலிசு! பயப்படாதே!” என குளறலான குரல் கேட்டது.
“ஓ நீங்களா?” என கேட்டவள் பேசாமல் போய் படுத்திருக்கலாம். அந்த நேரம் தான் ஸ்கூட்டர் ஞாபகம் வர,
“மிஸ்டர் முத்துக்காளை” என இவள் ஆரம்பிக்க, அவள் அருகே வந்தவன்,
“ஏன் எலிசு, உன்னை ஏத்தி இறக்கறானே அந்த வாத்தி, அவன் ரொம்ப செவப்பா அழகா இருக்கான்ல! நல்லா டஸ்சு புஸ்சுன்னு இங்கிலீசு பேசறான்ல!” என கேட்டான்.
இந்த நேரத்தில் எதற்கு அந்த மறைக் கழண்டவனைப் பற்றி பேசுகிறான் என இவள் முழித்தப்படி நின்றாள்.
“நான் கருப்பா கெடக்கேன்! தமிழு தவுர வேற ஒன்னும் தெரியாது! நான் என்ன செய்ய எலிசு! வறுமை! அக்கா நல்லா படிப்பா! அவ படிக்கட்டும்னு நான் விவசாயம் பாத்தேன்! அது தப்பா எலிசு? அந்த எழவெடுத்த இங்கீலீசு தெரியலன்னு என்னை வேணான்னு சொல்லிருவியா எலிசு? நான் ஒனக்கு பொருத்தமே இல்லையாமே! பொருத்தம் என்ன பொடலங்காய் பொருத்தம்! நான் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன் எலிசு! உன் காலுக்கடியில அடிமை மாதிரி கெடப்பேன்! நீ செத்துபோடான்னு சொன்ன மறு நிமிஷமே செத்துப் போயிடுவேன். இல்ல இல்ல! செத்துட்டா உன் கூட எப்படி வாழ்ந்து ரெண்டு புள்ள பெக்கறது! சாவு பத்தி பேச வேணா எலிசு! என்னை இங்க, இங்க வச்சிப் பூட்டிக்குவேன்” என நெஞ்சைத் தட்டிக் காட்டியவன்,
“அப்பவும் நான் வேணாமா? சொல்லு எலிசு நான் வேணாமா? கருப்பா இருக்கேன்னு பயப்படாத எலிசு. டாவு(டாவ்) சவக்காரம் தேச்சு குளிக்குறேன். சீக்கிரம் கொஞ்சமாச்சும் வெள்ளையாகிருவேன். டோண்டு வோரி, பீ ஹேப்பீ” என விவேக் மாதிரி சொன்னவன், இன்னும் அவளை நெருங்கி வந்தான். லேசாக அடித்த வாடையில் குடித்திருக்கிறான் என புரிந்துக் கொண்டவள், நாளை பேசிக்கொள்ளலாம் என நகரப் போனாள்.
அவள் போகாமல் இருக்க கையைப் பிடித்து இழுந்த்தான் மாளை. அவன் இழுத்த வேகத்தில் அவன் நெஞ்சில் மோதி நின்றால் அவள்.
“பஞ்சு மிட்டாயி கணக்கா பஞ்சு மாதிரி இருக்க எலிசு” என்றவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அதிர்ச்சியில் நின்றிருந்தவள் காதில்,
“கண்ணு அது கன்னு மாதிரி
கன்னம் அது பன்னு மாதிரி
பார்வை அது ஜின்னு மாதிரி
போதை ஏத்துதடா” என குளறலாகப் பாடினான்.
அடுத்த வரி பாடலைப் பாட முத்துக்காளை உயிரோடு இருப்பான் என நினைக்கிறீர்கள்? அது அவனைப் படைத்த அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். எனிவே, ஹேப்பி வேலண்டைண்ஸ் டே காளை…………
(அடிபணிவான்)