Neer Parukum Thagangal 15.3

NeerPArukum 1-81a6db49

Neer Parukum Thagangal 15.3


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 15.3

சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்!

வணிக வளாகத்தின் வெளியே!

அங்கங்கே ஊடகத்தினர் நின்றனர். இரவாகிவிட்டது என்றதாலும், பிரச்சனை என்னவென்று தெரிந்ததாலும் பொதுமக்களில் பலபேர் அங்கிருந்து கலைந்து சென்று கொண்டிருந்தனர். சிலபேர் அருகிருந்த கடையில் காஃபி, டீ குடித்துக் கொண்டு நின்றனர்.

வெளியே வந்த சரவணன், மஞ்சள் நிறத் தடுப்புகள் இருந்த இடத்தை நோக்கி வரும் போதே, ‘எப்போ வருவான்?’ என எதிர்பார்த்து அவனுக்காக காத்திருந்த சித்தப்பா-சித்தி… அப்துல்லா-ஃபரிதா தம்பதிகள், “சரவணா” என அழைத்துக் கொண்டு ஓடி வந்தனர்.

அவன் அருகில் வந்து நின்ற பின், இருவரும் எதுவுமே பேசவில்லை. சரவணன் கையைப் பிடித்துக் கொண்டார் அப்துல்லா. அவனைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தபடியே ஃபரிதா இருந்தார்.

இருவரும் பயந்திருப்பார்கள் என்று புரிந்து, “ஒன்னுமில்லை. ரெண்டு பேரும் பயப்படாம இருங்க” என்று சரவணன் ஆறுதலாக சொன்னாலும், “என்னடா இப்படி? ரொம்ப பயந்திட்டோம். அடி எதுவும் படலைல?” என்று கலகத்துடன் ஃபரிதா கேட்க, “சொல்றேன்ல சித்தி, அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றான்.

எந்த காயமுமின்றி சரவணன் வந்த நிம்மதியில் இருந்தவர்களிடம், “குட்டிமா காலேஜ் போய் சேர்ந்தாச்சா?” என்று அவன் கேட்க, “போயாச்சு சரவணா” என அப்துல்லா பதில் சொல்ல, “யாராவது ஒருத்தர் இருக்க வேண்டியதான? ஏன் ரெண்டு பேரும் நிக்கிறீங்க?” என்று கேட்டான்.

“நீ மாட்டிக்கிட்டு இருக்கிறப்ப, எப்படி வீட்ல நிம்மதியா இருக்க முடியும்!” என பதற்றம் குறைந்த குரலில் ஃபரிதா சொன்னதும், “சரவணா முதலயே கொஞ்ச பேர் தப்பிச்சி வெளிய வந்தாங்களே, அப்பவே நீயும் வந்திருக்காலமே?! ஏன் வரமுடியலையா?” என்று அப்துல்லா கேட்டார்.

ஒருமுறை வணிக வளாகத்தைப் பார்த்துவிட்டு, “அது… அது…” என்று முதலில் தயங்கியவன், பின் செல்வியின் பயத்தைப் பற்றிக் கூறிவிட்டு, அவர்களது கடையினுள்தான் மாட்டி இருந்ததாகச் சொல்லி முடித்ததும், “அப்போ அந்தப் பொண்ண எங்க சரவணா?” என்று ஃபரிதா கேட்டார்.

மீண்டும் ஒருமுறை வணிக வளாக கட்டிடத்தைப் பார்த்துவிட்டு, ‘இருவரும் இன்னும் ஏன் வரவில்லை? ஏதேனும் உதவி தேவையா இருக்குமோ?’ என்று நெற்றி சுருங்க யோசித்தவன், “வருவாங்க சித்தி. ஏன் கேட்கிறீங்க?” என்று மெனெக்கெடல் எடுத்துச் சாதாரணமாக பேசினான்.

அவன் முக மாற்றங்களை ஃபரிதா கவனித்துக் கொண்டார்.

இருந்தும், “மாமியார் வீட்ல திட்டுறாங்கனு கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் அவ அக்கா கிளம்பிப் போனா! இங்க இருக்கிறப்பவும் சரி… போறப்பவும் சரி, தங்கச்சியைப் பத்தின கவலைதான். ‘ரொம்ப நேரமாச்சி. செல்வியை பஸ் ஏத்தி விட்டுருங்க’-னு சொல்லிட்டுப் போயிருக்கா! அதான் கேட்டேன்” என்று பதில் சொன்னார்.

“அப்படியா?” என்று கவனமில்லாமல் சொல்லி, தன் கவனம் மொத்தத்தையும் கண்களில் தேக்கி மீண்டும் வணிக வளாக கட்டிடத்தைப் பார்க்க, “என்னடா ஒரு மாதிரி இருக்க? என்னாச்சு?” என்று ஃபரிதா கேட்டதற்கு, பதில் சொல்லாமல் சரவணன் குனிந்து நின்றான்.

“என்ன ஒருமாதிரி இருக்கான்?” என அப்துல்லா ஃபரிதாவிடம் கேட்க, “இருங்க கொஞ்சம்” என்று அவரிடம் சொல்லிவிட்டு , “சொல்லு சரவணா, ஏன் இப்படி இருக்க? என்ன நடந்தது? ஏன் அங்கயே பார்க்க?” என்று ஃபரிதா கேட்டார்.

அப்படிக் கேட்ட பின்பும் சரவணன் உடனேயே வாய் திறக்கவில்லை. சிறிது நேரம் கழித்து நடந்ததை மேலோட்டமாக சொன்னபின் அப்துல்லா, ஃபரிதா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“பிடிச்சிருந்தா எங்ககிட்ட வந்து நீ சொல்லியிருக்க வேண்டியதுதான? எதுக்கு நேரடியா அந்தப் பொண்ணுகிட்ட கேட்கணும்? போ சரவணா” என அப்துல்லா கோபத்துடன் சொன்னார். ஃபரிதா எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்து இருந்தார்.

சற்று நேரம் பேசாமல் இருந்தவன், “அவங்க ரெண்டு பேரையும்… அப்படியே விட்டுட்டு வர ஒருமாதிரி இருந்தது. ஆனா அங்கயே இருந்தா… எதுவும் தப்பா நினைப்பாங்க-ன்னு தோணிச்சி. அதான் வந்துட்டேன்” என்றான் மனதின் தவிப்பை வெளிப்படுத்தும் குரலில்!

அடுத்து சில வினாடிகள் மூன்று பேரும் எதுவும் பேசவில்லை. அவன் மனம் அப்துல்லாவிற்குப் புரிந்தது. இருந்தும், ‘வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் பெண்ணிடம் போய்… என்ன பேச?’ என்ற இயலாமையில் இருந்தார்.

ஃபரிதாவோ… அந்தச் சம்பவத்திற்குப் பின் நான்கு பேரும் அனுபவித்த கவலை, வலி, வறுமை; கஷ்டப்பட்டு ஓரளவு நல்ல நிலைக்கு வந்தது; தள்ளிப் போயிருந்த சரவணன் திருமணப் பேச்சு ஆரம்பித்தது; அதனால் அவர்கள் மகிழ்ச்சியில் இருந்தது; இப்படி அனைத்தையும் நினைத்தபடி அவனைப் பார்த்தார்.

அவன் முகத்தில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்து மிகவும் கவலையடைந்தார். சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்று கொண்டார்.

அதன்பின், “சரவணா, எங்ககிட்ட செல்வி அக்கா சொல்லிட்டுப் போயிருக்கா. அதனால” என்று ஆரம்பித்ததும், “இங்க இருக்கலாம் சித்தி. அவங்க வந்ததும், அவங்க அக்கா சொன்ன மாதிரி பஸ் ஏத்திவிட்டு வீட்டுக்குப் போகலாம்” என்று முடித்தான்.

“சரி சரவணா” என்று அப்துல்லா சொன்னதும், பாதையோர நடைமேடையில் அமர்ந்தான்.

‘உள்ளே போய் பார்’ என அவளைப் பிடிக்கும் மனம் சொன்னது. உடனே, ‘அது சரியல்ல’ என அவளை மதிக்கும் மனம் தடுத்தது. மனத்தவிப்பு அதிகரித்துக் கொண்டே போக, நெற்றியைப் பிடித்துக் கொண்டான்.

இருவருக்குமே அவனைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. “காஃபி… டீ… எதுவும் குடிக்கிறியா?” என்று அப்துல்லா கேட்டதற்கு, ‘வேண்டாம்’ என்று மறுத்தான். “நீ வேணா வீட்டுக்குப் போறியா? நாங்க அவளை பஸ் ஏத்திவிட்டு வர்றோம்” என்று ஃபரிதா கேட்டுப் பார்க்க, அதற்கும் மறுத்துவிட்டான்.

வேறுவழியில்லாமல் அவனுக்கு ஆறுதலாக இருக்க நினைத்து அவனருகில் இருவரும் அமர்ந்து கொண்டனர்!!

வணிக வளாகத்தின் உள்ளே!

வணிக வளாகத்தின் புல்வெளி இருக்கும் பகுதியில், காவலர்களுடன் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். முதலுதவி செய்ய வந்த மருத்துவ குழு கிளம்பத் தயாராகினார்கள். அங்கங்கே சிலர் நின்றனர்.

அதில் மகனைத் தோளில் போட்டுக் கொண்டு செல்வியும் நின்றாள். ‘லாயர் ஒருத்தர் பார்க்கணும்னு சொல்றாரு’ என்று காவலர் சொல்லிப் போனதால், இங்கே காத்திருக்கிறாள்.

சூழலில் இருந்தவர்களைப் பார்த்திருந்தவளுக்கு… என்னமோ தானும், மகனும் தனித்து விடப்பட்டது போன்ற எண்ணம் வந்தது!

அக்கணம், “சாரி, வெயிட் பண்ண வச்சிட்டேனோ?” என்று கேட்டபடி கார்த்தி வந்ததும், “பரவால்ல. நீங்க…?” என்று செல்வி கேட்க, “கார்த்திகேயன். லாயர்” என்று சொல்லவும், “எதுக்குப் பார்க்கணும்னு சொன்னீங்க?” என்றாள்.

“சொல்றேன்” என்றவன், “உங்க டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் எப்.ஐ.ஆர் டீடெயில்ஸ் பார்த்தேன். ஏன் கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு அப்படியே விட்டுடீங்க?” என்று கேட்டான்.

“அது … அது அப்போ என்னால ரொம்ப அலைய முடியலை. அதோட பணமும் அரேஞ் பண்ண கஷ்டமா இருந்தது” என்றவள், “ம்ம், சூழ்நிலை அப்படி” என்று முடித்துக் கொண்டாள்.

“திரும்ப கேஸ எடுக்க நினைக்கிறீங்களா?”

“முடியுமா?”

“உங்களுக்கு சரின்னா சொல்லுங்க, என்ன செய்யலாம்னு சொல்றேன்”

“ம்” என்று அவள் தலையாட்ட, “ஃபர்ஸ்ட் கேஸ் ரீஸ்டோர் பண்ணனும். அதாவது மெயின்டபிளிட்டி இல்லைன்னு மெயின் கேஸ் க்ளோஸ் ஆகியிருக்கும். அதை அகைன் ஓபன் பண்ணனும்” என்று ஆரம்பித்தவன்,  “அதுக்கு முதல ரீஸ்டோரேஷன் அப்பிளிக்கேஷன் போடணும். பட் அது டிஸ்மிஸ் ஆக சான்ஸ் இருக்கு” என்றான்.

“ஏன்…? முதல கொடுத்த கம்ப்ளைன்ட் க்ளோஸ் ஆனதாலயா?”

“அப்படியில்லை. பாஸிபிலிட்டிஸ சொல்றேன். சப்போஸ் டிஸ்மிஸ் ஆனதுனா ட்ரையல் கோர்ட்ல அப்பீல் ஃபைல் பண்ணலாம். அது டிஸ்மிஸ் ஆயிடுச்சினா, ஹைகோர்ட்ல பெட்டிஷன் கொடுக்கலாம். ஸோ அதுக்கப்புறம் மெயின் கேஸ் ரீஓபன் ஆகலாம்” என்று வாய்ப்புகளைச் சொன்னான்.

அவள் யோசிக்கவும், “கொஞ்சம் அலைய வேண்டியது இருக்கும். உங்களுக்கு சரியாய் வருமானு பார்த்துக்கோங்க” என்றான்.

“இப்போ முடியும். அதோட வேலை பார்க்கிறேன். பணமும் மேனேஜ் பண்ண முடியும்” என்றதும், “லாயர் யாரையும் தெரியுமா?” என்றான்

சற்று யோசித்துவிட்டு, “நீங்க…” என கேள்வியாய் நிறுத்தியதும், “உங்களுக்கு சரின்னா, கேஸ் நான் ஹேண்டில் பண்றேன்” என்றான்.

மீண்டும் யோசித்தவள், “ம்ம்ம், சரி” என்றவுடனே, ‘விசிட்டிங் கார்டு’ எடுத்து “என் ஆஃபிஸ் அட்ரஸ்” என அவன் கொடுக்க, வாங்கிக் கொண்டாள்.

“இன்னொன்னும் சொல்லணும்! டிவி ஆக்ட்ல மெயின் கேஸ ரீஸ்டோர் பண்ண அலோவ், டிஸ்-அலோவ் அப்படினு இல்லை. அன்ட் நீங்க டிவோர்ஸ் வாங்கியும் ரொம்ப நாள் ஆகிடுச்சு. ஸோ கேஸ் ரீஓபன் ஆகலாம். ஆகாமலும் போகலாம்” என்று வாய்ப்புகளில் இருக்கும் சிக்கல்களையும் சொன்னான்.

‘முடியாதோ?’ என்று அவள் முகம் மாறுவதைப் பார்த்தவன், “சான்ஸ் பிஃப்டி பிஃப்டின்னு நீங்களும் புரிஞ்சிக்கத்தான் இதை சொன்னேன். மத்தபடி எல்லா பாஸிபிலிட்டிஸூம் நாம ட்ரை பண்ணலாம்” என்று நம்பிக்கையும் தந்தான்.

இந்த வாய்ப்பிலாவது நியாயம் எனும் நீர் பருகிட வேண்டுமென தாகத்துடன் செல்வி முகம் மாறியது!

கார்த்தி, “சரி, ஆஃபிஸ்ல பார்க்கலாம்” என்று சொன்னதும், செல்வி சரியென்ற தலையசைப்புடன் அங்கிருந்து கிளம்பினாள்

இதையெல்லாம் முடிப்பதற்குள் ஹரி தூக்கத்திற்காக அழத் தொடங்கினான். அவனை நன்றாக தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடி, “இன்னும் கொஞ்ச நேரம்தான். கிளம்பிடலாம்?” என சொல்லிக் கொண்டே வணிக வளாகத்தின் வெளியே வந்தாள்.

மஞ்சள் நிற தடுப்பை நோக்கி நடந்து வரும்போதே சரவணன் சித்தப்பாவை பார்த்துவிட்டாள். உடனே, ‘ஐயோ… அக்கா சொன்னதுக்காக, இவங்க வெயிட் பண்றாங்களா? இந்த அக்கா ஏன் இப்படி?’ என எரிச்சலுடன் நடந்து வந்தாள்.

சரவணன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததுமே, ‘இவனும் போகலையா?’ என்று அதுவரை அடங்கியிருந்த தவிப்பு மீண்டும் அவளுக்குள் வந்துவிட்டது!

அவனோ செல்வியை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. ஆனால் எங்கே முற்றுப்புள்ளி வைத்தானோ… மூச்சிரைக்க ஓடிச் சென்று அங்கே நின்று கொண்டான்!

அவர்கள் அருகில் அவள் வந்துதும், “வா செல்வி” என்று அப்துல்லா அழைத்து, “இது சரவணன் சித்தி” என்று ஃபரிதாவை அறிமுகப்படுத்தினார்.

சினேகமாக செல்வி சிறு புன்னகை புரிய, “என்ன-ம்மா இவ்வளவு லேட்?” என ஃபரிதா கேட்டதற்கு, “அது… அது…” என்று தயங்கியவள், இவர்களிடம் எப்படிச் சொல்ல? என்று தெரியாமல், “இவன் தூக்கத்துக்காக அழறான். பஸ் ஸ்டான்ட் போக ஆட்டோ பிடிக்கணும். இங்கே ஆட்டோ?” என்றாள் மெதுவாக!

‘ஏன் தாமதம்?’ என்று சொல்ல மறுக்கிறாள் என்று புரிந்தது. எனவே, “இரும்மா. ஆட்டோ பிடிச்சிட்டு வரட்டும். போகலாம்” என்றார் ஃபரிதா!

“இல்லை வேண்டாம். அக்காகிட்ட சொன்னேன். அவங்க கேட்கலை. என்னால உங்களுக்கு எதுக்குச் சிரமம்? ஆட்டோ மட்டும் பிடிச்சிக் கொடுங்க… போதும்” என்றாள் குறைந்து போன குரலில்!

“ஒரு சிரமமும் இல்லை” என்றதும், அவள் ஏதும் பேசவில்லை. சற்று நேரத்தில் சரவணன் ஆட்டோ பிடித்து வர… ஃபரிதா, செல்வி அதில் ஏறிக் கொண்டதும், அப்துல்லா சரவணனின் பைக்கில் ஏறிக் கொண்டார்.

மறுத்தவளிடம் போய் ‘என்ன பேச?’ என்ற தயக்கத்தில் சரவணன்! அவன் ஒரு வார்த்தை பேசினால், ‘தானும் பேசலாமே?’ என்ற தவிப்பில் செல்வி! இவர்கள் பேசாமல் இருக்க, ‘தாங்கள் என்ன பேச முடியும்?’ என அப்துல்லா, ஃபரிதா!

இப்படி ஒரு மனநிலையில் பேருந்து நிலையம் நோக்கிப் பயணித்தனர்!

**********************************

வணிக வளாகத்தின் வெளியே… பெனசீர் குழு!

உள்ளே மாட்டிக் கொண்டவர்கள் வெளியே வந்ததும் காத்திருந்த உறவுகளும், நட்புகளும் அவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

அதுவரை அங்கே நின்ற ஆட்டோக்கள் சவாரி வரவர கிளம்பின. திறந்திருந்த ஒன்றிரண்டு டீ கடைகளும் மூடுவதற்கான வேலைகள் நடந்தன.

மினியைப் பின்தொடர்ந்த அந்தப் பையன், ப்ரோடைக்ஷன் மேனேஜர், ஏஞ்சல் கொலை வழக்கில் கைதானவன் என்று அனைவருமே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

தன் தங்கையின் மகனைக் காப்பற்ற வேண்டி தொழிற்சாலை முதலாளியும் என்னென்னவோ செய்து பார்த்தார். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை. காரணம் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது பெனசீரின் காவல்நிலையத்தில். 

வேறு வழியில்லாமல் பெனசீருக்கு அழைத்து, ‘ஏன் இப்படிச் செஞ்ச? எனக்கு எத்தனை பேர் பழக்கம் தெரியுமா? எப்படியும் அவனை வெளிய கொண்டு வருவேன். என்னால எதுவும் செய்ய முடியும்’ என்று ‘ஏதும் செய்ய முடியாது போன’ கோபத்தில் குதித்தார்.

‘நீ எங்க வேனாலும் போய்க்கோ. உன்னால ஒன்னும் பண்ண முடியாது. சாட்சி எல்லாம் பக்கவா இருக்கு. உன் மருமகனுக்குத் தண்டனை கிடைக்க போறது உறுதி. அப்புறமா நான் என்ன செய்யணும்னு நீ சொல்லாத’ என்று எச்சரித்து, ‘உன்னிடம் அதற்கு மேல் பேச முடியாது’ என முடித்துக் கொண்டார்.

அதன்பின் பெனசீருக்கு வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அதை ஏற்றவர், “பசங்க தூங்கிட்டாங்களா?” என்று கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டதும், மறுமுனையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ம்ம்… அவ்வளவுதான். இன்னும் ஒரு ஹாஃப்-ஆன்-அவர்ல கிளம்பிடுவேன்” என்றார்.

மேலும் ஓரிரு வினாடிகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவர்… கார்த்தி, தினேஷ், செந்தில் மூவரும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து நின்றார். அதன்பின் நான்கு பேரும் பொதுவாகவும், வழக்கு பற்றியும் பேசினார்கள்.

பின் பெனசீர், “ஓகே கைஸ். ரொம்ப லேட்டாயிடுச்சி கிளம்புங்க” என்று சொல்லி அவருக்கான வாகனத்தில் ஏறிக் கொள்ள, “ஓகே மேடம்” என்று மூவரும் ஒருசேர சொன்னதும், ஆய்வாளர் பெனசீர் ரஃபிக் வாகனம் அங்கிருந்து கிளம்பியது.

‘இந்த வழக்கிற்காக மட்டுமல்ல இனிமேலும் தொடர்ந்து பயணிப்போம்’ என கார்த்தியிடம் விடைபெற்றுக் கொண்டு செந்திலும், தினேஷும் அவர்களது பைக்கில் கிளம்பினர்.

அவ்வளவுதான்!

கடமையைச் செய்யும் இவர்களது பயணம் இன்றோடு முடியப் போவதில்லை. தனித்தோ, தேவைப்படும் இடங்களில் சேர்ந்தோ அல்லது இன்று பரிசீலிக்கப்பட்ட வழக்குகளுக்காகவோ தொடரத்தான் போகிறது!

அதற்காக நால்வருக்கும் வாழ்த்துகள்!

அவ்வளவு நேரம் பரபரப்பாய் இருந்த இடம் முழுதும் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. அவர்கள் சென்ற பிறகும் கார்த்தி அங்கேயே நின்றான்!

மூன்று பேருக்கும் வழக்கு பற்றிய விடயங்கள் சொல்லி முடித்ததும் மஹிமாவைத் தேடியிருந்தான். இங்கிருப்பது போல் தெரியவில்லை என்றதும் மருத்துவ குழுவிடம் கேட்டுப் பார்த்தான். ‘ஃபர்ஸ்ட் எய்ட் முடிஞ்சி போயிட்டாங்க’ என்றிருந்தார்கள்!

‘சொல்லாமல் சென்றுவிட்டாளா?’ என்ற ஒரு கேள்வி வந்ததும், கார்த்தி நேராக வணிக வளாக வாகன நிறுத்தும் இடத்திற்கு ஓடினான். அங்கே அவள் ஸ்கூட்டி இல்லை என்றதும், அலைபேசியில் அவளை அழைத்துப் பார்த்திருந்தான்.

அழைப்பு ஏற்கப்படாமல் போன நிலையில், பெனசீர் குழுவிற்கு ஏதோ உதவி தேவைப்பட, ‘இது முடிந்ததும், அவளை விடுதியில் சென்று பார்க்க வேண்டும்’ என்று நினைத்து, அவர்கள் கேட்ட உதவிகளைச் செய்திருந்தான்!

இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்த கார்த்தி, பைக்கை நிறுத்திய இடத்தினை நோக்கி அடர்மஞ்சள் விளக்கொளி படர்ந்திருக்கின்ற சாலை வழியே மெதுவாக, தனியாக நடக்கலானான்!!

*****************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!