nilapen-1

nilapen_image-4830257c

nilapen-1

நிலா… பெண் – 1

நேரம் காலை ஆறு மணி, லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்…

அந்த ப்ளாக் ஆடி நிதானமாக பல அடுக்குகளில் அமைந்திருந்த கார் பார்க்கிங்கில் வளைந்து வளைந்து ஏறிக்கொண்டிருந்தது.

ஆத்ரேயன் ஏதோ தனது காதலியைக் கையாள்வது போல மிருதுவாக அந்த ப்ளாக் ஆடியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

பக்கத்தில் தாமஸ். மூன்றாவது தளத்தில் காரை பார்க் பண்ணிவிட்டு கீயை தாமஸின் கையில் கொடுத்தான் ஆத்ரேயன்.

“காரை ஷெட்ல விட்டுரு தாமஸ்.”

“ஓகே சார்.”

“கீயை அப்பாக்கிட்ட குடுத்துரு.”

“ஓகே சார்.”

“எல்லாத்துக்கும் இப்போ மண்டைய மண்டைய ஆட்டிட்டு அப்புறமா அண்ணா காரை எடுத்தான், அவ ஆட்டுக்குட்டி காரை எடுத்ததுன்னு கேள்விப்பட்டேன்…” வார்த்தைகளை முடிக்காமல் ஆத்ரேயன் கோபமாக நிறுத்தவும் தாமஸ் திருதிருவென்று முழித்தான்.

“சார்… அவங்க வந்து கேக்கும் போது நான் என்ன சார் பண்ணுறது?”

“இல்லைன்னு முகத்துல அடிச்சா மாதிரி சொல்லு, காரை தொட்டா பாஸ் என்னை வேலையை விட்டு தூக்கிடுவார்னு சொல்லு!”

“அவங்ககிட்ட… நான் எப்பிடி…”

“இங்க பாரு தாமஸ், உனக்கு நான்தான் பாஸ்… அவங்க இல்லை, புரியுதா?”

“புரியுது சார்.”

“கேட்டது எல்லாத்தையும் தூக்கி குடுத்தாச்சு!” இதை ஆத்ரேயன் சொல்லும் போது தாமஸின் விழிகளில் கவலைத் தெரிந்தது. அதையும் தாண்டி அவன் முகத்தில் வருத்தம் தோன்றியது.

“எனக்கு அதுல எந்த வருத்தமும் இல்லை தாமஸ், நீ வீணா என்னை நினைச்சு கவலைப்படாதே, ஆனா என்னோட காரை தொட்டா மட்டும் எனக்குக் கொலை வெறி வந்திடும் சொல்லிட்டேன்!”

“புரியுது சார்.” கேலி போல தாமஸ் சொல்லவும் அவனைத் திரும்பி பார்த்தான் ஆத்ரேயன். தாமஸ் முகத்தில் தெரிந்த அந்த கள்ளச்சிரிப்பு ஏதோ விஷயமிருப்பதை ஆத்ரேயனுக்கு சொல்லாமல் சொன்னது.

“எதுக்கு இப்போ இந்த சிரிப்பு?!”

“அது சார்… நேத்து மீட்டிங்குக்கு கேத்தரின் வந்திருந்தா இல்லை?”

“அவளுக்கு என்னவாம்?” இப்போது ஆத்ரேயன் முகத்திலும் சிரிப்பு தொற்றி கொண்டது. கேத்தரின் இவர்களது தொழில் துறையில் சம்பந்தப்பட்டவள். நெடுநாட்களாக பழக்கம் உண்டு. கேத்தரினுக்கு தொழில், நட்பு இவற்றையெல்லாம் தாண்டி ஆத்ரேயனோடு ஒரு உறவை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் நிறையவே உண்டு. அதை இப்போது அந்த ப்ளாக் ஆடியில் உட்கார்ந்திருக்கும் இருவருமே நன்கு அறிவார்கள்.

“கேத்தரினுக்கு அவங்களை நீங்க அவாய்ட் பண்ணுறது கூட பெரிய விஷயமா படலை.”

“ம்…” தாமஸ் எங்கே வருகிறான் என்று ஆதிக்கு நன்றாகவே புரிந்தது.

“ஆனா இந்த காரைக் கட்டிக்கிட்டு அழுறீங்க பாருங்க… அதைத்தான் தாங்க முடியலை அவங்களால!”

“ஹா… ஹா…” மனம்விட்டு சிரித்தான் ஆத்ரேயன்.

“நேத்து புலம்பி தீர்த்துட்டாங்க சார்.”

“ஓஹோ! ஏன்?”

“எதுக்கு என்னோட ஆதி இப்போ இன்டியா போறான்? அவனுக்கு நானில்லையான்னு ஒரே புலம்பல்தான் சார்.” அந்த வார்த்தைகளில் ஆத்ரேயனின் முகம் இளகிப்போனது.

“ஓ… நைஸ் கேர்ல்!” கனிவோடு சொன்னான்.

“சார்! ஏதாவது வாய்ப்பிருக்கா சார்?!” ஆர்வமாக கேட்டான் தாமஸ்.

“நீ அடிதான் வாங்க போறே! ஏன் தாமஸ், என்னோட நிலைமைக்கு இப்போ கேத்தரின் ஒன்னுதானா குறைச்சல்?”

“ஏன் சார்? அப்படி என்ன உங்க நிலைமை இப்போ அவ்வளவு மோசமா போயிடுச்சு?”

“சரி சரி… அதைவிடு, பேசிப்பேசி அலுத்து போச்சு.”

“ஆமா சார், இந்த ட்ரிப்பை நல்லா என்ஜாய் பண்ணுங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, ஃப்ரெஷ்ஷா திரும்பி வாங்க, குட் லக் சார்! ஹாப்பி ஜெர்னி!” சொன்ன தாமஸை பார்த்து அழகாக சிரித்தான் ஆத்ரேயன்.

“தான்க் யூ தாமஸ், எல்லாத்தையும் பத்திரமா பார்த்துக்கோ, டெய்லி ஃபோன் பண்ணு.”

“ஓகே சார்.”

“அப்பா கொஞ்சம் டல்லா இருக்காரு, அவர் மேலேயும் ஒரு கண்ணை வச்சுக்கோ.”

“கண்டிப்பா சார்.”

காரை விட்டிறங்கிய ஆத்ரேயன் அணிந்திருந்த ஜாக்கெட்டை கழட்டி காரின் பின் சீட்டில் போட்டான். அன்றைக்குக் குளிர் அத்தனைத் தூரம் இருக்கவில்லை.

லேசாக இருள் பிரிந்திருந்த அந்த இளங்காலைப் பொழுது மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. பரபரப்புடன் நடமாடி கொண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தபடி தனது லக்கேஜ்ஜை எடுத்து கொண்டான்.

இள நீலநிற போலோ ஷர்ட்டும் அடர் நீலத்தில் டெனிமும் அணிந்திருந்தான். குளிர்காலத்திற்கே உரித்தான செழுமை அவன் முகத்தில் தெரிந்தது. இருபத்தெட்டு வயதிற்குரிய கம்பீரம் உடலில் தெரிந்தது.

“கேத்தரின் பாவம்தான் சார்!” திடீரென்று தாமஸ் சொல்ல அவனை ஆச்சரியமாக பார்த்தான் ஆத்ரேயன்.

“ஏன் தாமஸ்?”

“உங்களைப் பார்க்கும் போது சமயத்துக்கு எனக்கே நாம பொண்ணா பொறந்திருக்கலாமோன்னு தோணுதே!”

“டேய்! ஹா… ஹா…” வாய்விட்டு சிரித்தபடி போகும் தனது முதலாளியை ஒரு கையாலாகாத தனத்துடன் பார்த்து கொண்டிருந்தான் தாமஸ்.

ஆனால் எந்தவித மனக்குறையும் இல்லாமல் அந்த இனிய காலைப் பொழுதை ரசித்தபடி டெர்மினலுக்குள் போனான் ஆத்ரேயன்.

நேரத்தை எப்போதும் திட்டமாக வகுத்து கொள்பவன் என்பதால் இவன் உள்ளே நுழையும்போது கௌன்டர் ஏற்கனவே ஓப்பன் ஆகி இருந்தது.

ஏர்போட்டிற்கே உரித்தான சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு நேராக விமானத்தை நோக்கி நடந்தான். கையில் சின்னதாக ஒரு பேக்.

“வெல்கம் டு பிரிட்டிஷ் ஏர்வேஸ்!” நீல நிற கண்களோடு ஒரு வெள்ளைப் பனிமலை அவனை வரவேற்பில் உருகி வருவேற்றது!

“தான்க் யூ!” நாகரிகமாக அந்த வாழ்த்தை ஏற்றவன் அவனுக்கான இருக்கையைத் தேடிக்கொண்டு அப்பால் நகர்ந்தான். பிஸினஸ் கிளாஸ் என்பதால் இருக்கையை இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது.

கையிலிருந்த பையை அதற்குரிய இடத்தில் வைத்தவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். சக பிரயாணிகளிடம் இருந்த பரபரப்பு அவனைச் சிறிதும் பாதிக்கவில்லை. நிதானமாக கண்களை மூடிக்கொண்டான்.

“ஆதி… என்னப்பா இப்படி ஆகிப்போச்சு?!” தன் முன் கண்கலங்கி நின்ற அப்பாதான் இப்போதும் அவன் கண்களுக்குள் வந்து நின்றார்.

“எதுக்குப்பா இப்பிடி வருத்தப்படுறீங்க?”

“ஆதி… நம்ம குடும்பத்துல இப்பிடியெல்லாம் நடக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலைப்பா!” வருத்தம் கலந்த குரலில் ஆதங்கப்பட்ட அப்பாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று ஆத்ரேயனுக்கு புரியவில்லை.

அப்பா சுந்தரமூர்த்தி, நல்ல வழமான குடும்பத்தில் பிறந்த மனிதர். அந்த காலத்திலேயே லண்டனுக்கு மேற்படிப்பிற்காக வந்தவர் கூடவே படித்த மார்க்ரெட் மேல் காதல் கொண்டு அவரையே மணந்து கொண்டார்.

வாழ்க்கை சுகமாக அமைந்து போனது மனிதருக்கு. அழகான இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் ஆதேஷ், சின்னவன் ஆத்ரேயன்.

பெண் குழந்தை ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்பது சுந்தரமூர்த்தியின் எண்ணம். ஆனால் அவர் மட்டும் ஆசைப்பட்டு என்ன செய்ய! மார்க்ரெட் மனது வைக்கவில்லையே!

கணவரின் அந்த ஆசையை மட்டும்தான் மறுத்தாரே தவிர மற்றபடி மார்க்ரெட் ஒரு நல்ல மனைவி. தன் குழந்தைகள் வீட்டில் தமிழ்தான் பேசவேண்டும் என்று சுந்தரமூர்த்தி ஆசைப்பட்ட போது குழந்தைகளோடு சேர்ந்து தானும் தமிழ் கற்றுக்கொண்டார்.

அம்மா பேசும் தமிழ் கேட்கவே ஆத்ரேயனுக்கு அவ்வளவு பிடிக்கும். கண்களை மூடியபடி சிந்தனையில் இருந்தவனுக்குத் தன்னை யாரோ உற்று நோக்குவது போல தோன்றவும் சட்டென்று கண்களைத் திறந்தான்.

அதே பெண்தான்! இவனைப் பார்த்து புன்னகைத்தது. தன்னை அவன் கண்டு கொண்டான் என்று புரிந்து போகவும் மெதுவாக அவனிடம் வந்தது.

“எனி பெவரேஜ் சார்?” அந்த அழகான கேள்வியைப் புறந்தள்ள முடியாமல்,

“எ கப் ஆஃப் டீ ப்ளீஸ்.” என்றான்.

“ஷ்யூர் சார்.” பெண் நகர்ந்து விட சிந்தனை மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் அப்பாவை ஆத்ரேயனால் சமாளிக்க முடியவில்லை. உடனேயே விஸ்வநாதன் அங்கிளை வரவழைத்தான். அப்பாவின் நெருங்கிய நண்பர் விஸ்வநாதன்.

“டேய்! பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு பெரியவன் பண்ணின காரியத்தைப் பார்த்தியா விச்சு!” அப்பா மீண்டும் புலம்ப ஆரம்பிக்க விஸ்வநாதன் அங்கிளை பரிதாபமாக பார்த்தான் ஆத்ரேயன்.

“மூர்த்தி! இப்போ என்ன நடந்து போச்சுன்னு நீ இப்பிடி புலம்புறே? பெரியவனோட கைல பிஸினஸை தூக்கி குடுத்திருக்க, அவ்வளவுதானே!” பிரச்சினையின் அளவை சிறியதாக்க முயன்றார் விஸ்வநாதன்.

“எப்படி விச்சு அவனால இவ்வளவு சுயநலமா சிந்திக்க முடிஞ்சுது?”

“மூர்த்தி… பசங்க எல்லாருமே இப்போ அப்பிடித்தான் இருக்காங்க, நாமதான் இதையெல்லாம் அனுசரிச்சு போகணும்.”

“என்னடா விச்சு இப்பிடி பேசுறே?”

“நான் உள்ளதைத்தான் சொல்றேன் மூர்த்தி, நீயும் நானும் வாழ்ந்த காலம் போல இல்லை இப்போ, இதுதான் நிதர்சனம், ஏத்துக்கோ!” நிதானமாக அப்பாவுடன் பேசி அவரைச் சமாதானப்படுத்திய விஸ்வநாதன் அங்கிள்தான் அவனுக்கு இந்த ஆலோசனையையும் சொன்னார்.

“ஆதி… கொஞ்ச நாள் நீ இங்க இருக்க வேணாம், கிளம்பி இந்தியா போயிடு.”

“அங்கிள்!”

“சொல்றதைக் கேளு, நீ இப்போ இங்க இருந்தா தேவையில்லாத மனஸ்தாபங்கள்தான் வரும், என்னோட வீடு சென்னைல சும்மாதான் இருக்கு, ஒரு ஒன் மன்த் அங்க போய் தங்கு, நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும்.” அங்கிள் சொல்வது ஏனோ ஆதிக்கும் சரியாக தோன்ற அடுத்த ஃப்ளைட்டில் டிக்கெட் போட்டுவிட்டான்.

இதமான வாசனையைத் தொடர்ந்து பெண் தேநீர் கோப்பையை நீட்டியது. ஒரு புன்முறுவலோடு அதை வாங்கிக்கொண்டான் ஆத்ரேயன்.

***

அடுத்த நாள் காலை ஆறு மணி, சென்னை பாரதி தெரு.

அந்த விசாலமான வீதியில் டாக்ஸி திரும்பி நுழைந்தது. வீதியின் ஆரம்பத்திலேயே ‘பாரதி தெரு’ என்று அழகாக போர்ட் மாட்டப்பட்டிருந்தது.

நேற்று இதே நேரம் ஆறு மணிக்கு இருந்த குளுமையையும், இன்றைக்கு அதே ஆறு மணிக்கு இருக்கும் வெப்பத்தையும் நினைத்து சிரித்து கொண்டான் ஆத்ரேயன்.

சென்னைக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறான். எப்போதும் இந்தியா என்றால் டெல்லிக்கு போவதுதான் வழக்கம். அவன் அத்தை அங்கேதான் இருக்கிறார். அத்தை என்றால் அப்பாவின் தங்கை.

டெல்லியின் குளிர் அவனை எந்த சேதாரமும் இல்லாமல் லண்டனுக்கு மீண்டும் கொண்டு போய் சேர்த்துவிடும். விஸ்வநாதன் அங்கிள் சென்னை என்று சொன்னபோது முதலில் ஆத்ரேயனுக்கு அத்தனை உடன்பாடாக இருக்கவில்லை.

“சென்னை எதுக்கு அங்கிள்? அங்க எனக்கு யாரையும் தெரியாது, நான் பேசாம அத்தை வீட்டுக்கே போறேனே?”

“எதுக்கு? அங்க போனா இதே கதையைத்தான் உங்க அத்தையும் பேச போறாங்க, அதுக்கு நீ இங்கேயே இருக்கலாமே!”

“ஓ…” அங்கிள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே எதைப்பற்றியும் சிந்திக்காமல் கிளம்பிவிட்டான். அந்த ‘பாரதி தெரு’ அவன் வாழ்க்கையையே புரட்டி போடப்போகிறது என்று அப்போது ஆத்ரேயனுக்கு தெரியவில்லை!

“சார், நீங்க சொன்ன அட்ரஸ் இதுதான் சார்.” டாக்ஸியை நிறுத்திவிட்டு ட்ரைவர் சொல்லவும் வண்டியை விட்டு இறங்கினான் ஆத்ரேயன்.

‘டெட் என்ட்’ என்பார்களே, அதுபோல இருந்தது அந்த வீதி. எதிரெதிராக ஐந்து வீடுகள் மாத்திரமே இருந்தன. அங்கிருந்த வீடுகளைப் பார்த்த போது கொஞ்சம் வளமான ஏரியா போலத்தான் தோன்றியது.

“ஏன்னா! செத்த இங்க வரேளா!” உச்சஸ்தாயியில் குரலொன்று கேட்க சட்டென்று திரும்பினான் ஆத்ரேயன். ஒரு பாட்டி, எழுபது வயது இருக்கும். கோலம் போட்டுக்கொண்டிருந்தவர் நிமிர்ந்து யாரையோ அழைத்தார்.

“இதோ வர்ரேண்டாம்பீ!” நீட்டி முழக்கியவர் கிடுகிடுவென ஆதியை நோக்கி வந்தார். மடிசார் அணிந்திருந்தார்.

“விஸ்வநாதன் நேத்தே ஃபோனைப் போட்டு நீ இன்னைக்கு வர்ரேன்னு சொல்லிட்டான்.” ஏதோ நெடுநாள் பழகியவர் போல அவர் தன்னைப் பார்த்து பேசவும் ஆத்ரேயன் கொஞ்சம் ஆச்சரியப்பட்டான்.

இடுப்பில் சொருகியிருந்த சாவிக்கொத்தை எடுத்து வீட்டின் கேட்டைத் திறந்தார்.

“எம் பேர் ரங்கநாயகி, பக்கத்து வீடு, விஸ்வநாதன் ஃபோன் பண்ணி நீ வர்றதைப் பத்தி சொன்னான், காலைலேர்ந்து நோக்காகத்தான் வாசல்லையே காத்திண்டிருக்கேன்.”

“ஓ… தான்க்ஸ் ஆன்ட்டி.”

“ஆன்ட்டியா? பாட்டின்னு வாய் நிறைய கூப்பிற்ரா கொழந்தே!”

“சரி பாட்டி.”

“பேரு ஆதியா?” பாட்டிக்கு மெதுவாக பேசுவது என்றால் என்னவென்றே தெரியாது போலும்.

“ஆமா பாட்டி.”

“தமிழ் நன்னா பேசுறியே! எங்க தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷ் பேசுவியோன்னு நினைச்சேன்!” பாட்டி மனதில் தோன்றியதை எல்லாம் வெளிப்படையாக பேசியபடி வீட்டைத் திறந்தார். ஆத்ரேயன் வீட்டைக் கண்களால் அளந்தான்.

இந்தியாவில் வசிக்கவில்லை என்றாலும் விஸ்வநாதன் அங்கிள் வீட்டை ஆட்கள் வைத்து அழகாக பராமரித்திருந்தார். வீட்டிற்கு முன்னால் நல்ல பெரிதாக தோட்டம் இருந்தது. அழகழகான பூச்செடிகள், மல்லிகைக் கொடி, செம்பருத்தி என பார்க்க பசுமையாக இருந்தது.

“டெய்லி பசங்க வந்து தோட்டத்தைக் கவனிப்பாங்க.” ஆதியின் பார்வைப் போன திசையைப் பார்த்துவிட்டு பாட்டி பேசினார்.

“ஆதி, நீ போய் குளிச்சிண்டு ரெடியாகு, இன்னைக்கு காமிலா வீட்டுல விசேஷம் தெரியுமோ? இந்த வெள்ளி துளசிக்கு நிச்சயதார்த்தம்! நல்ல சமயத்துலதான் வந்து சேந்திருக்கே!” பாட்டி பேசிக்கொண்டிருக்கும் போதே காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு ஒரு வாலிபன் உள்ளே வந்தான்.

அநேகமாக ஆத்ரேயனின் வயதுதான் இருக்கும். வேஷ்டி சட்டையில் இருந்தான்.

“நம்பி! தாத்தா எங்கேடா? அவரைக் கூப்பிட்டா நீ வந்து நிக்குறே?”

“தாத்தாக்கு இன்னும் பூஜை முடியலை, அதான் நான் வந்தேன்.” பாட்டிக்கு பதில் சொல்லிவிட்டு ஆதியைப் பார்த்து சினேகமாக முறுவலித்தான்.

“ஹாய்! ஐம் நம்பி!” சொல்லிய படி கையை நீட்டி குலுக்கிய அந்த இளைஞனை ஏனோ அந்த நொடியே ஆத்ரேயனுக்கு பிடித்தது.

“ஐம் ஆத்ரேயன், ஆதின்னு கூப்பிடுவாங்க.”

“ஓ…”

“சரி சரி, நம்பி… ஆதி குளிச்சிண்டு வரட்டும், நான் காஃபி கொண்டு வரேன், அதுக்கப்புறமா நேரா காமிலா வீட்டுக்குக் கூட்டிண்டு போயிரலாம்.” பாட்டி இடையில் புகுந்தார்.

“சரி பாட்டி.”

“ஆதி… காமிலா வீட்டுல அவ பொண்ணு ஆயிஷா வயசுக்கு வந்துட்டா கேட்டியோ!” பாட்டி தடாலென்று போட்டு உடைக்க நம்பி இப்போது தன் தலையில் அடித்து கொண்டான்.

ஆத்ரேயனுக்கு முழுதாக பாட்டி சொன்னது புரியவில்லை என்றாலும் லேசாக எதுவோ புரிந்தது. சட்டென்று ரங்கநாயகியின் கையைப் பிடித்து இழுத்து சற்று அப்பால் அழைத்துக்கொண்டு போனான் நம்பி.

“நோக்கு அறிவிருக்கா பாட்டி?!” நம்பியின் குரலில் அவ்வளவு ரௌத்திரம்.

“ஏன்டா?”

“நம்ம ஆயிஷா வயசுக்கு வந்ததை ஒரு வயசு பையன்கிட்ட போய் சொல்றேயே, நோக்கு வெவஸ்தையே இல்லையா?”

“இதுல என்னடா நம்பி இருக்கு? விஸ்வநாதன் அனுப்பின பையன்னா அவன் நல்லவனாத்தான் இருப்பான்.”

“ஆமா, நோக்கு லோகத்துல இருக்கிற அத்தனை மனுஷாளும் நல்லவாதான், போய் பேசாம காஃபி கொண்டு வறியா?”

“ம்க்கும்!” முகவாய்கட்டையைத் தோளில் இடித்துக்கொண்டு பாட்டி அப்பால் நகர வந்த சிரிப்பை ஆதி அடக்கி கொண்டான். பாட்டியும் பேரனும் பேசிய மேடை ரகசியம் அவன் வரை நன்றாகவே கேட்டது.

“ஆதி… ரூம்ஸ் எல்லாம் மேலதான் இருக்கு, கீழ ஹால், கிச்சன், டைனிங் ஏரியா எல்லாம் இருக்கு.” பாட்டியை ஒரு வழியாக ஏறக்கட்டி வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஆத்ரேயனிடம் வந்தான் நம்பி.

“ஓ… அப்போ மேலேயே போகலாம் நம்பி.” சொல்லிவிட்டு ஆத்ரேயன் தனது உடமைகளை எடுத்துக்கொள்ள நம்பியும் உதவி செய்தான்.

“எங்க வர்க் பண்ணுறீங்க நம்பி?”

“ஈ.பீ ல என்ஜினியரா இருக்கேன்.”

“ஓ… ஆஃபீஸ் பக்கம்தானா?”

“ஆமா ஆதி.” சொல்லியபடியே மாடியிலிருந்த மாஸ்டர் பெட் ரூமின் கதவைத் திறந்தான் நம்பி.

“வீடு ரொம்ப க்ளீனா இருக்கு.”

“விஸ்வநாதன் அங்கிள் அதுக்கெல்லாம் ஆட்கள் வெச்சிருக்கார், வாரத்துக்கு ஒரு முறை வந்து அவா எல்லாத்தையும் க்ளீன் பண்ணி பார்த்துப்பா.”

“ஓ… வெரி குட்.” பெட் ரூமோடு சேர்ந்தாற்போல இருந்த பால்கனி கதவைத் திறந்தான் ஆத்ரேயன். அந்த இடத்திலிருந்து பார்க்கும்போது அந்த தெருவில் நடக்கும் அனைத்தும் அழகாக தெரிந்தது.

அப்போதுதான் அது நடந்தது. ஆதி தங்கியிருந்த விஸ்வநாதன் அங்கிளின் வீட்டிற்கு நேர் எதிராக வீதிக்கு அந்தப்புறமாக ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டின் கேட்டைத் திறந்து கொண்டு ஒரு பெண் வெளியே வந்தாள்.

அப்போதுதான் தலைக்குக் குளித்திருப்பாள் போலும். பட்டுப்புடவை கட்டி ஈரக்கூந்தலை அள்ளி முடிந்திருந்தாள். கையில் ஒரு சின்ன பாத்திரத்தில் கோலம் போடுவதற்காக மாவு வைத்திருந்தாள்.

புடவையை லேசாக உயர்த்தி இடுப்பில் சொருகி கொண்டவள் குனிந்து நிலத்தில் புள்ளிகள் வைக்கவும் ஆதி அதை ஆவலுடன் பார்க்கலானான். அந்த முகம் அவனை வசீகரித்தது.

இதுவரை நேரமும் தன்னோடு இயல்பாக பேசிக்கொண்டிருந்த நண்பன் திடீரென மௌனமாகவும் நம்பியும் வீதியை எட்டி பார்த்தான்.

“யாரு அவங்க?” அந்த பெண்ணை அதற்கு மேலும் அத்தனை ஆர்வத்தோடு பார்ப்பது நாகரிகமில்லை என்று தோன்றவே பேச்சில் இறங்கினான் ஆதி.

“அது எங்க துளசி, சங்கரபாணி அங்கிளோட பொண்ணு.” நம்பி சொல்ல சற்று முன் பாட்டி அதே பெயரைச் சொன்ன ஞாபகம் வந்தது ஆதிக்கு.

“இவங்களுக்கு…”

“ஆமா ஆதி, துளசிக்கு இந்த வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம்.” தகவல் சொன்னவன் முகத்தில் சந்தோஷம் பொங்கி வழிந்தது. ஆனால்… ஆதி தனக்குள் ஏதோ ஒன்று வெறுமையாகி போவது போல உணர்ந்தான்.

“ஓ…” அந்த குரலில் சட்டென்று வந்து உட்கார்ந்து கொண்ட‌ சோர்வைக் கவனிக்கும் நிலையில் நம்பி இல்லை.

“ரொம்ப நல்ல பொண்ணு, அம்மா மூனு வருஷத்துக்கு முன்னாடி தவறிட்டாங்க, இப்பதான் கல்யாணம் கூடி வந்திருக்கு.”

“ஓ…” அதற்கு மேல் ஆத்ரேயன் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் மௌனமாக நின்றிருந்தான். பாட்டியின் குரல் பக்கத்தில் எங்கேயோ ஓங்கி ஒலிக்கும் ஓசைக் கேட்டது.

“காஃபி கொண்டு வராம எங்கேயோ நாட்டாமைப் பண்ணுது பெருசு.” நம்பியின் முகத்தில் எரிச்சல் தோன்றியது.

“ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான காரெக்டரோ?!”

“நீங்க வேற ஆதி, சமயத்துக்கு இரிட்டேட்டிங்!”

“ஹா… ஹா… நம்பி, நான் ஒன்னு கேப்பேன்… நீங்க தப்பா எடுத்துக்கப்படாது.”

“எதுக்கு தப்பா எடுத்துக்கணும்?‌ அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீங்க தாராளமா கேளுங்க.”

“இல்லை… பாட்டி காமிலா வீடுன்னு சொன்னாங்க… நீங்களும் ஆயிஷான்னு பேசினீங்க…‌ அப்படீன்னா… அவங்க முஸ்லிம் ஃபேமிலியா?” நிறைய தயக்கங்களுக்குப் பிறகு வந்தது கேள்வி. ஆனால் நம்பி தயக்கமின்றி பதில் சொன்னான்.

“ஆமா.”

“ஓ… நீங்க… முஸ்லிம் ஃபேமிலியோட…” அதற்கு மேல் ஆதியால் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. ஆனால் ஆத்ரேயன் வெகுவாக கேட்க தயங்கியதை நம்பி இலகுவாக புரிந்து கொண்டான்.

“ஆதி… இந்த ரோட்டுக்கு பாரதி தெருன்னு பேரு வெச்சாலும் வெச்சாங்க, இங்க இருக்கிற அத்தனைப் பேரும் அதுக்கு ஏத்தா மாதிரியே அமைஞ்சு போனாங்க.”

“ம்ஹூம்…”

“ரோட்டுக்கு இந்த பக்கமா எங்க வீடு, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, நான்.”

“சரி.”

“அடுத்ததா விஸ்வநாதன் அங்கிள் வீடு, அதாவது இப்போ உங்க வீடு.”

“ரைட்.”

“உங்க வீட்டுக்கு நேர் எதிரே துளசி வீடு.”

“ம்…”

“அதுக்கு அடுத்ததா காமிலா ஆன்ட்டி வீடு, ஆன்ட்டிக்கு இம்ரான்னு ஒரு பையன், நம்ம ஏஜ் க்ரூப்தான்.”

“அப்பிடியா?”

“ஆமா, இம்ரானுக்கு அப்புறமா ரொம்ப நாள் கழிச்சு ஆன்ட்டிக்கு பொறந்த பொண்ணுதான் ஆயிஷா, எங்க எல்லாருக்குமே அவதான் செல்லம்.” ஏதோ கதைச் சொல்வது போல நம்பி சொல்லிக்கொண்டிருக்க வியப்போடு கேட்டிருந்தான் ஆதி.

“ஏன் நம்பி, எல்லாம் சரிதான்… ஒன்னு மட்டும் மிஸ்ஸிங் இல்லை?”

“என்ன ஆதி?”

“ஒரு செபாஸ்டியனோ இல்லைன்னா ஒரு ஜூலியோ உங்க ரோட்ல இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமில்லை?”

“அதுக்குத்தான் ராபின் இருக்கானே!” சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி சிரித்தான் நம்பி.

“யோவ்! என்னய்யா சொல்றே நீ?” சட்டென்று ஒருமைக்குத் தாவி உரிமையோடு கேட்டான் ஆத்ரேயன். தான் கேலி பண்ணுவதற்காக கேட்க அதற்கும் நம்பி பதில் வைத்திருந்தது அவனுக்கு ஆச்சரியத்தின் உச்சக்கட்டமாக இருந்தது.

“உண்மைதான் ஆதி, காமிலா ஆன்ட்டி வீட்டுக்கு அடுத்தது ராபின் வீடு, அவங்க வீட்டுல ராபினுக்கு ஒரு தங்கை உண்டு, பேரு நான்ஸி.”

“இது டூ மச் நம்பி!”

“ஹா… ஹா… கிட்டத்தட்ட இருபது வருஷமா எல்லாரும் இங்கதான் குடியிருக்கோம், பொதுவா எங்க மனுஷா யாருமே வேற வீட்டுல கை நனைக்க மாட்டாங்க, ரொம்ப ஆச்சாரம் பார்ப்பாங்க.”

“அதான் நம்பி எனக்கும் ஆச்சரியமா இருக்கு!”

“ஆனா இன்னைக்கு காமிலா ஆன்ட்டி வீட்டுல எங்க வீட்டு பெருசு ரெண்டும் எப்பிடி ஒரு வெட்டு வெட்டும்னு பாருங்க!”

“எப்பிடி நம்பி?!”

“அது அப்பிடித்தான், உறவுகளை விட நட்பு ரொம்ப நெருங்கி போச்சு, ஆக்சுவலா காமிலா ஆன்ட்டி ஃபேமிலில இந்த விஷயத்துக்கு எல்லாம் ஃபங்ஷன் பண்ணவே மாட்டாங்களாம்.”

“ஓஹோ!”

“ஆனா நம்ம பெரிசு விடலியே!”

“யாரு பாட்டியா?”

“வேற யாரு? எல்லாம் அவங்கதான்! நம்ம எல்லார் வீட்டுக்கும் கடைக்குட்டி அவதான், அவளுக்கு சின்னதா அலங்காரம் பண்ணி பார்க்கலாம் காமிலான்னு பேசிப்பேசியே ஆன்ட்டியை சம்மதிக்க வெச்சாங்க.”

“சத்தியமா என்னால இதையெல்லாம் நம்ப முடியலை நம்பி!”

“அதான் ஒரு மாசம் எங்களோட எல்லாம் தங்க போறீங்க இல்லை, அப்போ புரிஞ்சுக்குவீங்க ஆதி.”

“ஏன்டாப்பா! இன்னும் குளிக்காம ரெண்டு பேரும் அப்பிடி என்ன கதைப் பேசிட்டு இருக்கீங்க?” கையில் காஃபியோடு மாடியேறியபடி பாட்டி வரவும்தான் இருவரும் பேச்சை நிறுத்தினார்கள்.

“ஆதி…‌ இந்தா, காஃபியைக் குடிச்சிட்டு சட்டு புட்டுன்னு குளிச்சு ரெடியாகு, நம்பி… உன்னை காமிலா தேடுறா, போய் என்னன்னு கவனி!”

அப்போதுதான் அந்த வீட்டிற்குள் நுழைந்த தன்னையும் தங்கள் இருபது வருட நட்பு வட்டத்திற்குள் நுழைத்துக் கொண்ட அந்த பரந்த மனதிடமிருந்து காஃபியை வாங்கி கொண்டான் ஆத்ரேயன், ஒரு பிரமிப்போடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!