Nilavondru Kandene – Epilogue

Nilavondru Kandene – Epilogue

கோயம்புத்தூரின் அந்தப் பிரபல மண்டபம் ஆரவாரமாக இருந்தது. கடந்த ஒரு வாரமாகக் கம்பன் விழா மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.


இன்று இறுதி நாள். காலையில் கவியரங்கம் நடந்திருக்க இப்போது கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முக்கிய பிரமுகர்கள் வெவ்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்துவதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்திருந்தது. யுகேந்திரன் ‘சிறப்பு விருந்தினர்’ ஆக அழைக்கப்பட்டிருந்தான்.


அந்த ப்ளாக் ஆடி சர்ரென்று வந்து நின்றது. காரை அதற்குரிய இடத்தில் பார்க் பண்ண, ஆலிவ் க்ரீன் நிறத்தில் மெல்லிய பட்டுடுத்தி தலை நிறையப் பூவோடு காரிலிருந்து இறங்கினாள் நித்திலா. அதே துறுதுறுக் கண்களும் குறும்பு முகமும் அவளிடமிருந்து விடைபெறாமல் இன்னும் இருந்தன. ட்ரைவர் சீட்டிலிருந்து இறங்கினான் யுகேந்திரன். காதோரம் லேசாக நரைத்திருந்தது. உடல் இன்னும் கொஞ்சம் முறுக்கேறி இருக்க வயதிற்கேற்ற பக்குவம் அவன் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது. கழகத்தின் செயலாளர் இருவரையும் வந்து வரவேற்றார்.


“கண்ணம்மா! நீ உள்ளே போடா. நான் இதோ வந்தர்றேன்.” நித்திலாவிடம் சொல்லிவிட்டு விழாக் குழுவோடு சென்று இணைந்து கொண்டான் யுகேந்திரன்.


சத்தியமூர்த்தியைப் பிடித்து இன்றும் முதல் வரிசையில் டிக்கெட் வாங்கி இருந்தாள் நித்திலா. தன் சீட்டில் கலெக்டர் வந்தமர சுற்றியிருந்த பெண்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். கடந்த ஐந்து வருட சேவையில் நித்திலாவின்அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் அவளுக்குப் பதவி உயர்வு கிடைத்திருந்தது. அதற்கான தகுதிகளும் அவளிடம் இருந்தன.


“என்ன மேடம்? இப்போல்லாம் யுகேந்திரன் சார் ரொம்ப கூட்டங்கள்ல கலந்துக்க மாட்டேங்கிறாரு?” பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் நித்திலாவிடம் புன்னகைத்த படி கேட்டார்.


“தெரியலைங்க. பிஸினஸ்ல கொஞ்சம் பிஸி ஆகிட்டாங்க. ஒரு வேளை அதனால இருக்கலாம்.”


“என்ன மேடம் இப்படி சொல்லுறீங்க? சாரோட இலக்கியப் பேச்சைக் கேட்க நாங்கெல்லாம் எவ்வளவு ஆர்வமா இருக்கோம். பிஸினஸ் எல்லாரும் பண்ணுவாங்க. இலக்கியம் எல்லாரும் பேசுவாங்களா?” அந்தப் பெண் குறைப்பட்டுக் கொள்ள நித்திலா சிரித்து மழுப்பினாள்.


“மேடம்! ஒரு ரசிகையா என்னோட விண்ணப்பம் இது. சார் கிட்ட சொல்லுங்க. மாதம் ஒருமுறையாவது ஸ்பீச் குடுக்கச் சொல்லுங்க. நீங்க சொன்னா அவங்க மறுக்க மாட்டாங்க.”
அந்தப் பெண்ணின் பேச்சில் நித்திலாவிற்குச் சிரிப்பு வந்தது. கவிஞர் தன்னிடம் வழிவது ஊருக்கே தெரிந்திருக்கிறது.


இரண்டொரு பெண்கள் தங்கள் ஏரியாவில் நடக்கும் பிரச்சினைகளை புகாராகக் கொடுக்க அதையும் வாங்கி ஹான்ட்பேக்கில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.


சரியாக நான்கு முப்பதுக்கு தமிழ் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. யுகேந்திரனுக்கு முன்னால் இருவர் பேசி முடித்திருந்தார்கள்.
அடுத்தது யுகேந்திரனின் பேச்சு. தலைப்பு மிகவும் சுவாரசியமாக இருந்ததால் நித்திலாவும் ஆவலாகக் காத்திருந்தாள்.


எப்போது அவன் உரை நிகழ்த்த அழைக்கப் பட்டாலும் வீட்டில் தலைப்பை மட்டும் கேட்கும் நித்திலா அவன் செய்யும் ஆயத்தங்களில் தலையிட மாட்டாள். இன்றைய தலைப்பை அவன் அன்று சொன்ன போதும் தலைப்பைப் பாராட்டியதோடு சரி. யாரைப் பற்றி? என்ன பேசப் போகிறான்? எதுவும் கேட்கவில்லை. எல்லோரையும் போல அவளும் ஆவலே வடிவாக அமர்ந்திருந்தாள்.

 

தொகுப்பாளினி அடுத்து யார் பேச வர போகிறார் என்கிற முன்னுரையை வழங்க ஆரம்பித்தார்.

 

ஆங்கிலம் மொழியின் மோகத்தால், தமிழரிடமே தமிழில் பேசுங்கள் என பிரச்சாரம் செய்யும் இந்த காலத்தில், தமிழ் மொழியின் மீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும் தீராத காதல் கொண்டவர்..

 

அன்னிய கண்டங்கங்களையும், கணினியை காதலிக்கும் இந்த காலத்தில்
தன்னையும், தென்னையும் நம்பி வாழும் மனிதர்..  

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் “
என்ற வள்ளுவரின் குறளை அச்சுபிசகாமல் பின்பற்றுபவர்

வீணையை மீட்டி வாரணம் அடக்கினான் உதயணன்
மேக மல்ஹார் பாடி மழையை பொழிய வைத்தான் தான்ஸேன்
அந்ஜாதவாசம் முடிக்க நடன ஆசான் ஆனான் அர்ஜூனன்  

கவி பாடி தென்னையை வளர்க்கும் யுகேந்திரன்

ஆமாம்! இவர் தோட்டத்து இளநீருக்கு தனிசிறப்பு உண்டாம், குளுமையுடன் சேர்ந்து இனிமையாகவும் இருக்குமாம்.

நாம் யாரும் இதுவரை சிந்திக்காத கோணத்தில், முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் ராவணனை பற்றி பேசியவர் . இன்றைய தலைப்போ “இலக்கிய காதலில் விஞ்சி நிற்கும் பெண் கதாபாத்திரங்கள்”  இதற்கு கவிஞரின் மாறுபட்ட கண்ணோட்டத்தை அறிய மிக மிக ஆவலுடன் அவரை மேடைக்கு அழைக்கின்றோம் …


யுகேந்திரன் மேடைக்கு வந்து கூடியிருந்த சபைக்கு வணக்கம் வைத்தான். நாற்பதை நெருங்கியிருந்த அவனது கம்பீரம் குறையாத தோற்றத்தை ரசித்துப் பார்த்திருந்தாள் நித்திலா.

 

சபையில் கூடியிருக்கும் மதிப்பிற்குரிய சான்றோர்களுக்கும், அன்பிற்குரிய ரசிகர்களுக்கும், கண்டம், இனம், மதம் மறந்து மொழி ஒன்றை மட்டுமே நேசிக்கும் எஸ் எம் தள வாசகர்களுக்கும் யுகேந்திரனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்.


“இலக்கியக் காதலில் விஞ்சி நிற்கும் பெண் கதாபாத்திரங்கள்.” தலைப்பை ஒரு முறை சொன்னவன் கொஞ்சம் இடைவெளி விட்டான்.


“இலக்கியத்தில் பல பெண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டும் தான் எல்லோராலும் போற்றிப் புகழப்படுகின்றன. உதாரணமாக சீதை, கண்ணகி… அப்படியென்றால் இலக்கியத்தில் வரும் மற்றைய பெண் கதாபாத்திரங்கள் எதுவும் சிறப்புப் பெறவில்லையா?”


கவிஞனால் கேள்வி தொடுக்கப்பட்ட பின்புதான் சபையே அந்தக் கோணத்தில் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தது. நித்திலா, கவிஞன் ஏதோ வம்பு செய்ய ஆயத்தம் பண்ணுகிறான் என்று புரிந்து கொண்டாள்.


“தன்னேரில்லாத் தலைவனையே காவியத்தலைவனாகக் காட்ட வேண்டும் என்ற கொள்கையை உடைத்தெறிந்து விட்டு, தலைவியை எந்த வண்ணங்களுமில்லாத சாதாரண மங்கையாகக் காட்டி விட்டு இன்னொரு பெண்ணுக்கு ஏற்றமளித்திருக்கிறார்…”


யாரென்று சட்டென்று சொல்லிவிடாமல் ஒரு இடைவெளி கொடுத்தான் யுகேந்திரன். சபை எதிர்பார்ப்போடு அவனையே பார்த்திருந்து.


“சிலப்பதிகாரத்தில்… இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் கதாநாயகன் கோவலன், கதாநாயகி யார்?” கவிஞனின் கேள்விக்கு சபையிலிருந்த அனைத்துப் பேரினதும் ஏகோபித்த பதில் ‘கண்ணகி’ என்றே இருந்தது.


“இங்கேதான் நாம் சிலப்பதிகாரத்தின் சுவையைத் தவற விடுகிறோம். கற்பில் சிறந்தவள் கண்ணகி என்பதை நிரூபிக்க வடிக்கப்பட்ட காவியமல்ல சிலப்பதிகாரம். மனப்பொருத்தமில்லாத ஒரு மணவாழ்க்கையின் பாலைவன நிலையைச் சுட்டிக் காட்ட எழுதப்பட்டதே சிலப்பதிகாரம்.”


இந்தப் புதிய கோணம் நித்திலாவையும் கொஞ்சம் வியப்பில் ஆழ்த்தியது.


“கோவலனுக்கு ஏற்ற சிறந்த மனைவி கண்ணகியா? மாதவியா? என்றால் இந்த உலகமே கண்ணகியைத் தான் கை காட்டும். ஆனால், என்னைக் கேட்டால் நான் மாதவி என்றே பதில் சொல்வேன். கணிகையர் குலத்தில் பிறந்து, அழகும் மிகப் பொருந்தி, ஆடல் பாடல் என கலைகளில் தோய்ந்ததால் அவள் உண்மையான காதலைப் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்?”


கவிஞனின் விவாதத்தில் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. நித்திலா யுகேந்திரனை ஒரு விதமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“அன்றைய காலகட்டத்தில் கற்பது குலப்பெண்களின் மரபல்ல என்பதால் கண்ணகி படிக்கவில்லை. ஆனால் கோவலனோ ஒரு கலாரசிகன். கற்பனை மிகுந்தவன். திருமணத்திற்கு முன்பு அவன் கண்ணகியைப் பார்த்திருந்தால் அவன் நிச்சயம் அவள் பால் காதல் கொண்டிருக்க மாட்டான். காதல் கொள்வதற்கான எந்தப் பண்பும் கண்ணகியிடம் இருக்கவில்லை.”
“தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்த போதோ அன்றி இன்னொரு பெண்ணிடம் சென்ற போதோ பெண்களுக்கு இயல்பாகத் தோன்றும் எந்தவொரு உணர்ச்சியையும் கண்ணகி வெளிப்படுத்தவில்லை. மாறாக, அந்த நிலைகளிலும் தான் எத்தனை தூரம் கற்பில் சிறந்திருக்கிறேன் என்று காட்டவே அவள் முயல்கிறாள். ஆனால் மாதவியோ… கோவலன் தன்னைப் பிரிந்த போது பிரிவுத்துயர் தாங்காமல் வாடுகிறாள். தூதனுப்புகிறாள். கலவியும், புலவியும் மாறி மாறி அளித்து கோவலனுக்கு ஏற்ற மனைவியாக இருந்தவள் மாதவியே அன்றிக் கண்ணகி அல்ல.”


“கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதற்கிணங்க மாதவியின் கலைத்தேர்ச்சியில் மயங்கிய கோவலன் அவளைத் தன் மனையாள் ஆக்கிக் கொள்கிறான். ஆண்களுக்கே உரித்தான ‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்கிற உணர்வு ஒரு கட்டத்தில் அவனிடம் மேலோங்க எந்த நடனத்தைப் பார்த்து அவளிடம் மயங்கினானோ அதே நடனத்தை ‘இந்திர விழாவில்’ மாதவி அரங்கேற்றுவதை வெறுக்கிறான் கோவலன்.”


“கோவலனின் கோபத்தைப் புரிந்து கொண்ட மாதவி அதைத் தீர்க்க எண்ணம் கொண்டு அவனைக் கடலாட அழைக்கிறாள். அங்கேயும் கோவலன் பாட அதற்குப் பதில் பாடல் பாடி கணவனின் மனஸ்தாபத்தைச் சம்பாதித்துக் கொள்கிறாள். அது சரி… நம்மில் எத்தனை கணவன்மாருக்கு மனைவி புத்திஜீவியாக இருப்பது பிடிக்கிறது?”


யுகேந்திரனின் கேள்வியில் சபையில் இருந்த பெண்கள் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க நித்திலா பெருமையாக உணர்ந்தாள். தனது திருமண வாழ்க்கையில் இன்று வரை தன் கவிஞன் தன்னைப் பார்த்துப் பெருமைப்பட்ட தருணங்கள் தானே அதிகம் என்று அவளது காதல் மனம் எடுத்துச் சொன்னது. மயக்கம் அவளது கண்களில் குடிகொள்ள மேடையில் நிற்கும் யுகேந்திரனை விழுங்குவது போலப் பார்த்தாள்.


“கோவலனைப் பிரிந்த மாதவி துடித்துப் போகிறாள். கணவனுக்கு மடல் வரைகிறாள். முதலில் வந்த மடலைப் புறக்கணித்த கோவலனால் இரண்டாவதாக வந்த மடலைப் புறக்கணிக்க முடியவில்லை. தாழையின் வெள்ளிய மடலில் சுற்றிலும் பல்மணப் பூக்களைப் பொதித்து செம்பஞ்சுக் குழம்பை மையமாகவும் பித்திகை மொட்டினை எழுத்தாணியாகவும் கொண்டு அந்த மடலை வரைகிறாள் மாதவி. அவள் கூந்தலில் தடவும் நெய்வாசம் கடிதத்தின் முத்திரையில் கமழ்ந்ததால் நினைவுகள் அவளை நோக்கியோட மனஸ்தாபம் தீருகிறான் கோவலன்.”


“மாதவி என்னும் கதாபாத்திரம் நம்மிடையே அத்தனை பிரபல்யம் கிடையாது. கண்ணகியின் வாழ்க்கையைத் தட்டிப்பறித்தவள் என்ற தப்பான அபிப்ராயம் தான் உண்டு. ஆனால் கோவலனின் வாழ்க்கையில் காதலில் விஞ்சி நின்றவள் மாதவியே அன்றிக் கண்ணகி அல்ல. கண்ணகியை மணக்காமல் மாதவியை முதலிலேயே மணந்திருந்தாள் ஒருவேளை கோவலன் சுகப்பட்டிருக்கலாமோ என்னவோ?”


ஒரு கேள்விக் குறியோடு நிறுத்தினான் கவிஞன். இந்த முரண்பாடான கருத்தில் சபையில் கொஞ்சம் அமைதி நிலவியது. நித்திலா கூட சற்றே தர்மசங்கடப்பட்டாள். ஆனால் யுகேந்திரன் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அடுத்த புள்ளிக்குத் தாவினான்.


“அடுத்து என் கருத்தைக் கவர்ந்த இலக்கியப்பாத்திரம் ‘ராதா’. கிருஷ்ணருக்கு மகாபாரதம் மற்றும் பாகவத புராணக் கதைகளின் அடிப்படையில் எட்டு மனைவிகள் இருந்தனர். அவர்களில் பிரபல்யம் பாமா, ருக்மணி. இருந்த போதிலும் கிருஷ்ணன் பெயரைச் சொல்லும் போதெல்லாம் நம் நினைவில் வருவது ராதா தான். இதனால் தான் கிருஷ்ணருக்கு ‘ராதா கிருஷ்ணன்’ என்ற அடைமொழியே வந்தது. இந்த ராதா யார்? இவளுக்கும் கிருஷ்ணனுக்குமான உறவு என்ன?”


நித்திலாவிற்குத் தலை வேதனையாகிப் போனது. என்ன ஆச்சு இன்று இந்தக் கவிஞருக்கு? எடுக்கும் உதாரணங்கள் எல்லாம் வில்லங்கமாகவே இருக்கிறதே! பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணியைத் திரும்பிப் பார்த்தாள். அவருக்கு இவை எதுவும் கருத்தில் படவில்லை போலும். பேச்சை ஆழ்ந்து அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

‘நம்ம தான் ஓவராக் கற்பனை பண்ணுறோமோ?’ சிந்தனையை அத்தோடு நிறுத்தியவள் தானும் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள்.


“இடையர் குலப் பெண் ராதா. இதில் வினோதம் என்னவென்றால், ராதா கண்ணனுக்கு வயதில் மூத்தவள். குழந்தைக் கண்ணனைக் கொல்ல ஹம்சனால் அனுப்பப்படும் தீய சக்திகளிலிருந்து காப்பாற்ற அவனுக்கு முன்பே ஆயர் குலத்தில் பிறந்து அவன் வரவுக்காகக் காத்திருக்கும் காவல் தேவதை ராதா. குழந்தையாக இருக்கும் போது ராதாவிற்குக் கண் பார்வை இல்லையாம். என்று முதன் முதலாகக் கண்ணனைப் பார்த்தாளோ… அப்போதுதான் அவள் கண்கள் திறந்து கொண்டதாம்.”


இதைக் கேட்ட போது நித்திலாக்கு என்னவோ பண்ணியது.


“ஒரு பொழுது ராதாவே கண்ணனைக் கேட்கிறாள். ‘உன் மீது இத்தனை காதல் வைத்திருக்கிறேனே! ஏன் என்னை நீ திருமணம் செய்து கொள்ளக் கூடாது?’ என்று. அதற்குக் கண்ணன் மறுக்கிறான். என் மனைவியாகும் பேறு உனக்கில்லை. ஆனால், உடல் கண்ணன் என்றால் உயிர் ராதா. பரமாத்மா கண்ணன் என்றால் ஜீவாத்மா ராதா என்கிறான்.”


“எத்தனை கோபியர் அவனைப் புடை சூழ்ந்தாலும் கிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்டவள் ராதா தான். ஒரு முறை பாமா வீட்டிற்கு கிருஷ்ணனைத் தேடி ராதா வருகிறாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில் பாமாவிற்கு அத்தனை கோபம் வருகிறது. கிருஷ்ணனின் அபிமானம் அனைத்தும் அவளுக்குத்தான் என்பதில் அன்று அத்தனை பேருக்கும் ராதாவின் மேல் பொறாமை இருந்தது. இருந்தாலும் வீட்டுக்கு வந்தவளை வரவேற்கும் பொருட்டு கல்கண்டு கலந்து பால் கொடுக்கிறாள் பாமா.”


சபை கொஞ்சம் ஆச்சரியப்பட்டது. தனது கணவனைத் தேடி வந்தவளுக்கு உபசரிப்பா? என்று வியந்தது.


“அதிகமாக வியந்து போகாதீர்கள். அவள் கொடுத்தது கொதித்துக் கொண்டிருந்த சூடான பாலை. ராதா எதுவும் பேசவில்லை. ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லிவிட்டு பாலைப் பருகுகிறாள். அந்தி சாயும் பொழுதில் வீடு வருகிறார் கிருஷ்ணன். காலில் கொப்புளங்கள். பார்த்த மாத்திரத்தில் பாமா பதறுகிறாள். ‘சுவாமி! தங்களுக்கு எப்படி இப்படி ஆனது?’ என்று கண்ணீர் சிந்துகிறாள். அப்போது கிருஷ்ணன் கூறுகிறான், ‘என் பக்தை ஒருத்தி இன்று சூடான பாலை என் பொருட்டு எனக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டு அருந்தினாள். அந்த பக்தை தன் உள்ளத்தில் எப்போதும் என் பாதங்களை வைத்துப் பூஜிக்கிறாள். அவளைக் காக்க வேண்டியது இந்தப் பரந்தாமனின் கடமையல்லவா?‌’ என்கிறான். பாமா வெட்கித் தலை குனிகிறாள், தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோருகிறாள்.”
“மாதவிக்காவது இரண்டாம் மனைவி என்ற ஸ்தானம் கிடைத்தது. ஆனால் ராதைக்குக் காதலி என்ற ஸ்தானம் தவிர வேறெதுவுமில்லை. சொல்லப் போனால் ஒரு சிலரின் குறைவான பார்வையிலேயே இவ்விரண்டு பெண்களும் பார்க்கப்படுகிறார்கள்.‌ ஆனால்… இவர்களின் காதலைப் பெற அந்த ஆண்கள் பெரும் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்று தான் நான் சொல்வேன். காதலிப்பதை விட காதலிக்கப்படுவது பரம சுகம். இது என் சொந்த அனுபவம். காதலில் விஞ்சி நின்ற இந்தக் கதாபாத்திரங்களால் காதலிக்கப்பட்டவர்கள் பாக்கியசாலிகள்.”


சற்று இடைவெளி கொடுத்த யுகேந்திரன் மீண்டும் தொடர்ந்தான்.
“என்னால் மேலே குறிப்பிடப்பட்ட கதாபாத்திரங்களாவது ஓரளவு நமக்கு பரிட்சயமானவை. ஆனால் இப்போது நான் கூறப்போகும் கதாபாத்திரங்களை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்பதே ஆச்சரியம் தான்.”

“உதயணன்- வாசவதத்தை. யாரிவர்கள்? இவர்களுக்குள் என்ன நடந்தது? வாசவதத்தை உஜ்ஜயினி பிரதேசத்து மன்னனின் மகள். வத்ஸ தேசத்து அரசன் உதயணன். இருவருக்குமிடையே காதல் மலருகிறது. உதயணன் அந்தக் காதலில் திளைத்துப் போகிறான். நாடு, நகரம், மக்கள் அனைத்தும் மறந்த தீவிரமான காதல் அவனது. விளைவு… நாடு எதிரிகள் வசமாகிறது. அதையும் அவன் பொருட்படுத்தவில்லை. பாதுகாப்பான இடத்தில் தன் மனையாளோடு குடிபுகுந்து அங்கும் ஒரு காதல் வாழ்வையே வாழ்கிறான்.”


“ஒரு நாள் அவன் மந்திரி உதயணன் வீட்டில் இல்லாத சமயம் வாசவதத்தையைக் காண வருகிறார். வந்தவர் அந்தப் பெண்ணிடம் ஒரு வரம் கேட்கிறார். கேட்ட மாத்திரத்தில் துடித்துப் போகிறாள் பெண். நாட்டின் நலனுக்காக நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக உதயணனைப் பிரியச் சொல்லிக் கேட்கிறார் மந்திரி. வாசவதத்தை மேல் உதயணன் கொண்டுள்ள காதலே அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கிறது என்று எடுத்துக் கூறுகிறார். காதல்க் கணவனைப் பிரிவது அவளை உயிரோடு புதைப்பது போலிருந்தாலும் தன் கணவனுக்கு ‘கடமையைத் தவறவிட்ட அரசன்’ என்ற பழிச்சொல் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவனைப் பிரிகிறாள் வாசவதத்தை.”


“மனைவியைப் பிரிந்த உதயணன் அவளை மறக்க முடியாமல் தவிக்கிறான். இருந்தாலும் இழந்த நாட்டை மீண்டும் தன்வசம் மீட்கிறான். பிரிவுத் துயர் பொறுக்காமல் கணவனது மாளிகையிலேயே சேவகம் பண்ணுகிறாள் வாசவதத்தை. ஒரு பொழுதில் பிரிந்தவர் மீண்டும் கூடுகிறார்கள்.”


“காதலே இல்லாத கடமைக்கான திருமணத்தில் கோவலன் கண்ணகியைப் பிரிந்தான். அதை சாதாரணமாக ஏற்றுக் கொண்டாள் கண்ணகி. ஏனென்றால் அங்கு கோவலனின் காதல் கண்ணகிக்கு இல்லை. ஆனால் இங்கு கதையே வேறு. தன் கணவனின் முழு அன்பிற்கும் பாத்திரமான வாசவதத்தை தன் கணவனுக்கு ஒரு பழிசொல் வந்து விடக் கூடாது என்பதற்காக அவனையே விட்டுக் கொடுக்கிறாளே! இதுதானே உண்மைக் காதல்? இந்தக் காதலை விஞ்ச யாரால் முடியும்?”


உருக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்த யுகேந்திரன் அங்கே சிறிது நிறுத்தி மூச்சு வாங்கினான்.


“தோழமைகளே! எத்தனை பேருக்கு இதுபோல மனைவி வாய்க்கும். கணவனின் காதல் முழுவதும் தனக்கென்று தெரிந்தும் அவன் கடமையிலிருந்து தவறக் கூடாது என்று ஒருத்தி அவனையே விட்டுப் பிரிகிறாளே! இந்தக் காதலுக்கு ஈடு இணை உண்டா? இவர்களையெல்லாம் இலக்கியங்கள் எப்படி மறந்து போகலாம்?”


“இப்படி எத்தனையோ இலக்கியக் காதலிகள் காதலில் விஞ்சி நின்றாலும் என் மனதுக்குப் பிடித்த கதாபாத்திரங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். எனது உரை சற்றேனும் உங்களை மகிழ்வித்திருந்தால் நான் நிறைவாக உணர்வேன். வாய்ப்பளித்த கல்விமான்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.”

 

error: Content is protected !!