Ninaive_Nisapthamaai-1

NN_Pic-dcbb79df
Renuka

நினைவே நிசப்தமாய்  1

காலை  மணி எட்டு ஐம்பதித்து ஐந்து.

அருண் துணிகளை அடுக்கி கொண்டிருக்க, நிஷா உர்ரென்று அமர்ந்திருந்தாள்.

 “நிஷா, நீ இப்படி இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்கலை”

“அருண், நீ பண்றதும் தான் எனக்கு சுத்தமா பிடிக்கலை. எப்ப பாரு வேலை வேலைன்னு போய்டுறே. ஐ ஹேட் யு”

“போற இடத்துக்கெல்லாம் உன்னை கூட்டிட்டு போனா, நான் எப்படி எல்லாரையும் சைட் அடிக்கிறது?”

“டேய்…” அவள் அவன் மார்பில் குத்த கையோங்க, அவன் அவள் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டு, அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

“நிஷா” அவன் குரலில் இப்பொழுது குழைவு.

“என்னை சமாதானம் செய்யாத” அவள் குரலில் கோபம்.

“என்ன நிஷா? போகும் போது, இப்படி தடங்கல் பண்ற?”  அவன் குரலில் கொஞ்சல்.

நிஷா முகத்தை திருப்பி கொண்டாள். அவள் ஜிமிக்கி அவள் திரும்பிய பக்கமே ஆடியது.

அவள் மேனியும் விறைத்துக் கொண்டு  அவள் கோபத்தை வெளிக்காட்ட, அவளை தன் பக்கம் திருப்பி அவள் இதழ்களுக்கு ஒரு அவசர அணைப்பு கொடுத்து விடுவித்தான் அருண்.

“இது என்ன அவசர அணைப்பு திட்டமா?”  அவள் இன்னும் மலை இறங்கவில்லை.

“நான் இப்ப என்ன செய்யணும்?” அருண் முறுக்கி கொண்டான்.

“நானும் உன் கூட வருவேன்.” அவள் குரலில் பிடிவாதம்.

‘நான் போறதே ஒரு வில்லங்கமான வேலை’ அவன் புருவம் சுருங்கியது.

“நீ எங்கயோ தங்கி தானே உன் வேலையை பார்க்க போற? உன் வேலை முடியுற வரைக்கும் நான் ரூமில் இருக்கேன். இங்க தனியா இருக்குறதை அங்க இருக்க போறேன்” அவள் குரலில் இப்பொழுது கெஞ்சல்.

“எனக்கு யாரு இருக்கா?” அவள் கண்கள் குளமாக.

“சரி வா. எனக்கு மட்டும் உன்னை பிரிய விருப்பமா?” அவன் கையணைப்புக்குள் அவள் வந்திருந்தாள்.

‘எதுவும் பிரச்சனை வந்திருமோ?’அவன் இதயம் சற்று வேகமாக துடித்தது. பதட்டமாக துடித்தது.

அவள் இதயம் ஆனந்தமாக துடித்தது.

‘வந்தாலும் இன்னைக்கு வராது. கொஞ்ச நாள் ஆகும்’ தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

இருவரும், ஊருக்கு வெளியே இருக்கும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை நோக்கி பயணித்தனர்.

நிஷா வளவளத்து கொண்டிருந்தாள். அருண் அவள் பேச்சை கேட்டபடி காரை செலுத்தி கொண்டிருந்தான்.

நிஷா, அருண் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரையும் அவர்கள் வீட்டில் ஏற்று கொள்ளவில்லை. ஒரு குழந்தை பிறந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்கள் காதல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்திருந்தார்கள்.

 மணி நான்கு. அவன் மணியை பார்த்துக்கொண்டான் .

‘வேலை இரவு பத்து மணிக்கு தான். யாருக்கும் சந்தேகம் வராமல் வேலையை முடிச்சிட்டு கிளம்புறோம். இவ வேற கூட வந்திருக்கா. நிஷாவை பத்திரமா திரும்ப கூட்டிட்டு போகணும். ‘ அருண் செக் இன் செய்து நிஷாவை அழைத்து கொண்டு அறையை நோக்கி சென்றான்.

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைக்குள் சென்றதும், “அடப்பாவி அருண், இப்படி ஒரு சூப்பர் இடத்துக்கு தான், என்னை கழட்டி விட்டு வரலாமுன்னு இருந்தியா?”

“நிஷா பேபி” அவன் குரலில் தாகம்.

அவள் இப்பொழுது முறுக்கி கொண்டாள். “நான் தானே அடம் பிடிச்சி வந்தேன். நான் சொல்றதத்தை தான் நீ கேட்கணும்.”

அருண் புன்னகையோடு தான் கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

“எத்தனை நாளைக்கி இங்க இருக்க போறோம் அருண்?”

“நாளைக்கி காலையில் கிளம்புறோம்.”

“டேய், கொலை கொள்ளை பண்ற மாதிரி ராத்திரியோட ராத்திரியா வேலையை முடிச்சிட்டு கிளம்பனும்னு சொல்ற.”

அருணின் பார்வை ஜன்னல் வழியாக வெளியே சென்றது.

அதில் நீச்சல் குளம். பெண்கள் சுதந்திரமாக சுதந்திரமான உடையில்  நீச்சலடித்து கொண்டிருந்தார்கள்.

‘இப்பல்லாம் பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம்.’ அவன் முகத்தில் புன்னகை.

‘பெண்கள் நீச்சலில் எனக்கு என்ன பார்வை? அதுவும் நிஷா இப்படி என்னை பார்த்தா?’ எண்ணத்தோடு முகம் திருப்ப எத்தனித்தான்.

அப்பொழுது தான் அவளை கவனித்தான்.

நீச்சல் உடையில் அவள். ‘அதுக்குள்ளே வந்துட்டாளா? நம்ம வேலை இரவு பத்து மணிக்கு தானே?’ அவன் மணியை பார்த்தான். மணி நாலரை.

‘அவள் தானா?’ என்ற சந்தேகம் அவனுக்கு.

 அவள் முகம் சரியாக தெரியவில்லை. சட்டென்று தான் கொண்டு வந்த பைனாகுலரை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.

நீச்சல் குளம் அருகே, வேகவேகமாக நடந்து கொண்டிருந்தாள். அந்த உடை அவளுக்கு சிக்கென்று பொருந்தி அவள் அங்கத்தை மறைத்தாலும், அவள் அங்க வடிவை தெளிவாக காட்டியது.

நீச்சல் குளத்தில் அவள் தற்பொழுது நீந்தியதன் அடையாளமாக நீர் துளிகள் அவள் கழுத்திலிருந்து பாதம் வரை அவள் உடை தேகம் என உருண்டு ஓடியது.

இப்பொழுது, அவள் நீச்சல் குளத்தில் இருக்கும் பெண் என்ற எண்ணம் அவனுக்கு மறந்து போனது.

‘இவள் தான் அவள்.’ அவன் மனம் அவள் வாட்ஸாப்ப் ப்ரொஃபைல் படத்தோடு அவள் முகத்தை ஒப்பிட்டு பார்த்து கொண்டது.

அவள் முகம் சிந்திப்பது போல் பாவனை காட்டியது.

‘என்ன யோசிப்பா? என்ன பிரச்சனையா இருக்கும்?’ “மித்திலா” அவள் பெயரை அவன் உதடுகள் உச்சரித்து.

‘கொஞ்சம் அல்டரா மாடர்னோ?’ அவன் மனம் கணக்கிட ஆரம்பித்திருந்தது.

‘நான் வந்த வேலை ரொம்ப வில்லங்கமோ?’ அவன் நெற்றியில் வியர்வை துளிகள்.

“அருண் சைட் அடிக்காத” நிஷா அவனை பார்த்து கண்சிமிட்டினாள்

அவள் குரலில் திரும்பி, தன் மனைவியை பார்த்துவிட்டு மீண்டும் நீச்சல் குளம்  பக்கம் திரும்பினான். அவளை காணவில்லை. கண்களை சுழட்டினான்.

அருகே இருக்கும் அறைக்கு அதற்குள் அவளால் சென்றிருக்க முடியாது.  அவன் மனம் கணக்கிட ஆரம்பித்தது.

நீச்சல் குளத்தை பார்த்தான். ‘நீந்த ஆரம்பிச்சிருப்பா போல?’ பலர் நீந்திக்கொண்டிருக்க, மீண்டும் அங்கு பார்ப்பது அத்தனை நாகரிகம் இல்லை என்று முடிவு எடுத்துக்கொண்டான்.

அவன் வந்து அமர்ந்ததும், நிஷா பைனாகுலரை எடுத்து அவன் பார்க்கும் திசையை பார்த்தாள்.

“டேய்…” அவள் பைனாகுலரை வைத்துவிட்டு, அவன் முன் கோபமாக நின்றாள்.

“ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“என்ன சிரிப்பு?” அவள் குரலில் கடுப்பு.

“ஒய், என் வேலை அப்படி” அவள் கூந்தலை அவன் வருடினான்.

“வா, வெளிய போயிட்டு வருவோம்” அவன் கூற, இருவரும் வெளியே கிளம்பினார்.

“நீச்சல் குளம் பக்கம் போவோமா?” நிஷா கேட்க, ‘மித்திலா இருப்பாளோ?’ என்ற எண்ணம் தோன்ற, “வேண்டாம் நிஷா” அவன் மறுப்பு தெரிவித்துவிட்டான்.

இருவரும் இடையோடு கைகளை வளைத்து கொண்டு நிதானமாக நடந்தனர். காதல் பறவைகளாக அவர்கள் வேறு உலகத்திற்கு சஞ்சரித்தனர். அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில், பல வெளிநாட்டவர்களும் இருந்தனர். அவர்கள் காதலும் எல்லை இல்லாமல் அரங்கேறி கொண்டிருந்தது.

நிஷா, அருண் இருவரும் அவர்கள் அறை நோக்கி திரும்பினர்.

அறைக்குள் வந்தும் இருவருக்கும், ஒருவரையொருவர் விலக மனமில்லை நின்றனர்.

அவளை கையணைப்புக்குள் வைத்துக் கொண்டே, பின்னோடு கதவை தாளிட்டேன் அருண். தன் மனைவியை தன் மீது சாய்த்து கொண்டு அவன் இடது கை அவள் வெற்றிடையை நீவியது. அவன் வலது கை, அவள் முகத்தை கைகளில் ஏந்தியது.

நிஷாவின் முகத்தில் வெட்க புன்னகை. தன் கணவனின் முகம் பார்ப்பதை தவிர்த்து, அவனுள் புதைய தயாராகி அவனின் சுவாச காற்றை அனுபவிக்க ஆரம்பிக்கையில், அவர்கள் சாய்ந்திருந்த கதவு, “தட்… தட்…” என்ற சத்தத்தோடு அதிர்ந்தது.

இருவரும் பதட்டத்தோடு விலகி நின்றனர்.

“யாரா இருக்கும்?” நிஷாவின் குரலில் யோசனை.

அருணின் நெற்றியில் வியர்வை துளிகள். ‘பிரச்சனை வருமுன்னு தெரியும். ஆனால், இப்ப எப்படி?’ அவன் தன் கண்களை இறுக மூடி திறந்தான்.

‘நான் வந்த வேலையே இன்னும் முடியலையே? வேலை பத்து மணிக்கு தான்.’

 மணியை பார்த்தான்.

‘ஏழரை தானே ஆகுது? யாரா இருக்கும்’ தன் நமட்டை கடித்தான்.மீண்டும், “தட்… தட்…” என்று சத்தம்.

அருண் நிதானமாக கதவை திறந்தான். அங்கு காவல் துறையினர்.

உள்ளே நுழைந்தவர்கள், அருணின் கன்னத்தில், “பளார்…” என்று அறைந்தனர்.

“நீ தானே அருண்?” காவல் அதிகாரியின் குரல் கோபமாக ஒலித்தது.

அவன், ‘ஆம்’ என்பது போல தலை அசைத்தான்.

“என்ன சார் பண்றீங்க?” நிஷா குறுக்கே வந்தாள்.

“பொம்பளைன்னு பார்க்குறேன். இல்லைன்னு, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” அந்த காவல் அதிகாரியின் குரல் கர்ஜித்தது.

“அருண், என்ன இது?” அவள் அருணிடம் அச்சம் கலந்த குரலில் கேட்டாள்.

“அதை கேளு. அந்த பொண்ணை என்ன பண்ண?” காவல் அதிகாரியின் குரலில் நக்கல்.

“எந்த பொண்ணு?” அருண் அசட்டையாக கேட்டான்.

அவன் கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்தது. அவன் உதட்டில் ரத்தம் கசிந்தது.

“என்ன பண்றீங்க?” நிஷா உள்ளே புக, அவள் கன்னத்தில் அடுத்த அறை.

காவல் அதிகாரியின் வேகத்தில், நிஷா கீழே விழுந்தாள். “அருண்…” அவளின் அலறல் சத்தம்.

“நிஷா, நீ பேசாம இரு.” அருணின் அதட்டலில் நிஷாவிடம் மௌனம்.

“சார், பிரச்சனை என்கிட்டே தானே? அவங்களை ஏன் அடிக்கறீங்க?” அருண் இப்பொழுது எகிறினான்.

“அங்க அடிச்சா இங்க கோபம் வருது! இது யார்? பொண்டாட்டி தானா? இல்லை தள்ளிட்டு வந்த கேஸா?” காவல் அதிகாரி அருணின் முகத்தில் ஒரு குத்துவிட்டார்.

“சார், நான் யாருன்னு தெரியாம என் மேல கை வைக்கறீங்க” அருண் தன்மையாக பேசினான்.

“என்னடா திமிரா பேசுற? அந்த பொண்ணை எங்க? கடத்திட்டியா? கொன்னுட்டியா? நீச்சல்குளம் முழுக்க ரத்தம்” காவல் அதிகாரி கூறிய செய்தியில் அருண் உறைந்து நின்றான்.

 

‘விஷயம் பெருசோ?’ நிஷா அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள்.

அருண் அந்த நேரத்திலும் தன் மனைவியை பார்த்தான்.  ‘இவளை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாது.’ தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டான்.

“கேட்கறேன்ல, அந்த பொண்ணை என்ன பண்ண?” காவல் அதிகாரி அருணை சுவரோடு நெருக்கினார்.

அருணுக்கு மூச்சு முட்டியது. “எந்த பொண்ணு?” அவன் குரலில் அழுத்தம்.

“மித்திலா” நிதானமாக கூறினார் காவல்அதிகாரி .

“எனக்கு அப்படி யாரையும் தெரியாது. நான் வொய்ஃப் கூட டைம் ஸ்பென்ட் பண்ண வந்தேன்” நிலைமையை தனக்கு சாதகமாக்கி கொண்டு அருண் காவல் அதிகாரியின் கைகளை விலக்கினான்.

காவல்அதிகாரி, அருணை கரகரவென்று இழுத்து சென்றனர்.

“பயப்படாத, உனக்கு பிடிச்ச படத்தை பாரு. எல்லாம் சரியாகும்” கூறிக்கொண்டே அருண் காவல் அதிகாரி கூட சென்றான்.

‘யார் அந்த பெண்? என்ன நடக்கிறது? எதுக்கு அருண் படம் பார்க்க சொல்றான்?’ தொடர் சிந்தனையோட்டத்தோடு, அந்த அறையின் மெத்தையில் திக் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் நிஷா.

தொடரும்…