ninaivenisapthamaai-10

NN_Pic-e4c4a197

ninaivenisapthamaai-10

  • Renuka
  • November 29, 2020
  • 0 comments

நினைவே நிசப்தமாய்  – 10

நேரம் செல்ல செல்ல விஜயின் இதய துடிப்பு அதிகரித்து கொண்டே போனது. சற்று நேரத்தில், மித்திலா வெளியே வந்தாள்.

அவளிடம் நிசப்தம். விஜயை பார்த்ததும் அவள் கண்களில் ஒளிர்வு. அவனிடம் ஏதையோ சொல்ல வந்து எதையோ மறந்து போனவள் போல் விழித்தாள்.

விஜயின் உடல் நடுங்கியது. அவள் செய்கையில் நடந்ததை அவனால் யூகித்து கொள்ள முடிந்தது.

“இவளை கூட்டிட்டு, நீ கிளம்பு” ரவீந்தர் என்னும் ரோபோட்  குரலில் கட்டளை.

அதன் கட்டளைக்கு அடிபணிந்தான் விஜய்.

அவன் வண்டியை செலுத்தினான் அருணுக்கு கொடுத்த விலாசத்தை நோக்கி. அவன் கவனம் சாலையில். எண்ணமோ, திக் பிடித்தாற்போல்.

மித்திலாவிடம் மௌனம். மௌனம் மட்டுமே.

விஜய் ஊரை விட்டு மெல்ல மெல்ல வெளியே  சென்றான். அத்தனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை வந்தடைந்தான். தோட்டத்திற்கு இடையில் ஆராய்ச்சி கூடம் போல் ஒரு இடம் காட்சி அளித்தது.

அவன் கதவை தட்ட, அருண் கதவை திறந்தான். அப்பொழுது இருந்த சோர்வு இப்பொழுது அருணின் முகத்தில் இல்லை.

விஜயின் கண்கள், அருணின் மனைவியை தேட, “நிஷா, உள்ள உங்க அண்ணி கூட இருக்கா” அவன் பதில் பட்டென்று.

“ம்… நம்ம எல்லார் உயிர்க்கும் ஆபத்து இருக்கு. உயிர்க்கு இல்லைனாலும்…” விஜயின் வார்த்தைகள் முடிக்க முடியாமல் தடுமாறின.

“ம்…” தலை அசைத்தான் அருண்.

மித்திலா ஒரு ஓரமாக படுத்துவிட்டாள். அருண் அவளை மேலும் கீழும் பார்த்தான், “உங்க அண்ணன், இவ அப்பா வரிசையில் இவளா?” அருணின் முகத்தில் கேள்வி.

“உங்களுக்கு எல்லாம் தெரியுமோ?” விஜயிடம் கேள்வி.

“ரொம்ப தெரியாது. ஆனால் ஓரளவுக்கு தெரியும். அவங்க குடுக்கிற பழத்தில் எதுவோ இருக்கு. ரவீந்தர் என்னை அப்படி தான் மிரட்டினான். விஷயம் முடிஞ்ச பிறகு உனக்கு கொடுக்கறேன். நான் ஒருவேளை அவனுக்கு தேவைப்படலாம்ன்னு சொன்னான்” அருணின் வார்தைகள் யோசனையினோடு வெளி வந்தது.

“அவன் இல்லை, ரவீந்தர் ரோபோட்” விஜயின் குரலில் சலிப்பு.

“இல்லையில்லை, விஜயேந்திரன் கிட்ட தான் உங்க அண்ணன் கார்த்திக் வேலை பார்த்தான். அவருக்கு ஒரு பையன் உண்டு. அவன் ரவீந்தர் தான்.” அருணின் குரலில் உறுதி.

“ம்… இருக்கலாம். ஆனால்,  இது ரோபோட். மித்திலா சொன்னா. நானும், பார்த்தேன்” விஜய் குரலில் விளக்கம். அருணின் கண்களில் அதிர்ச்சி.

“அது, தான் இப்ப என்ன பண்றதுன்னு தான் தெரியலை?” விஜய் குரலில் புலம்பல். அருணிடம் மௌனம்.

சிறிது நேரத்தில், “கத்தி… பழம்… ருசி…” மித்திலாவின் குரலில், அவள் துடிப்பான பேச்சு நினைவு வர, விஜயின் கண்கள் கசிந்தது.

அவன் இதயமும் அவளுக்காக இளகியிருப்பதை அப்பொழுது தான் அருண் உணர்ந்தான்.

அவன் கண்கள், அவளை அந்த நொடி உரிமையோடு அளந்தது.

அவன் கண்கள் சட்டென்று அவள் கைப்பையில் நின்றது. வேகமாக அவள் அருகே சென்று அவள் கைப்பையை எடுத்தான். அவள் அதை இறுக்கிபிடித்து, “பழம்…” என்றாள்.

விஜயின் கண்களில் மலர்ச்சி. அவள் தலைக்கோதி, “நீ டிரஸ் மாத்திட்டு வா” அவன் கூற, அப்பொழுது விஜயின் அண்ணி பூஜா அங்கு வர, மித்திலாவை அவளோடு அனுப்பி வைத்தான்.

அந்த பையை பதட்டமாக திறந்து பார்த்தான் விஜய். அதனுள், குட்டி குட்டி ஸ்ட்ராபெர்ரி போன்ற அழகான பழங்கள். ‘கெட்டிக்காரி…’ மித்திலாவை மெச்சி கொண்டான்.

“இந்த பழத்தை வச்சி தான் அவன் ஏதோ பண்றான், நான் இதை என் லேப்க்கு கொண்டு போனால் என்னனு கண்டுபிடிச்சிருவேன்.” விஜய் அந்த பழங்களை அருணிடம் காட்டியடி பதட்டம் அடைந்தான்.

“பழத்தை வைத்து தான் எல்லா தப்பும் நடக்குது” அருணின் குரலில் அழுத்தம்.

விஜய் அருணை பார்க்க, “நாம ரோட்டில் விக்கிற கொய்யா பழத்தை, வாழை பழத்தை நம்புறத்தில்லை. பெரிய பெரிய கடையில் இருக்கிற வித்தியாச வித்தாயசமான பழத்தை நம்புறோம். நானும் அப்படி தான்.” அருணின் குரலில் வருத்தம்.

‘அருணுக்கு, என்னவெல்லாம் தெரியும்?’ விஜயின் கவனம் முழுதும் இப்பொழுது அருணிடம்.

“நானும், நிஷாவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களை வீட்டில் ஏத்துக்கலை. எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால், எங்களை வீட்டில் ஏத்துப்பாங்கன்னு நினைச்சோம். நிஷாவும் கர்பமானா. அவளுக்கு விதவிதமா பழங்கள் வாங்கி கொடுக்க, ஆசைப்பட்டு கார்த்திக் கிட்டே கேட்டேன்.”

“அவன் சொல்லி தான், உங்க அண்ணன் ஆராய்ச்சி செய்து பழங்கள் வர சூப்பர்மார்க்கெட்ல பழம் வாங்கி நிஷாவுக்கு கொடுத்தேன். நிஷா அந்த பழத்தின் ருசியில் மயங்கி, அதை தொடர்ந்து சாப்பிட ஆரம்பிச்சா. கொஞ்ச நாளில் பயங்கர வயிற்றுவலி. குழந்தையும் கலைஞ்சிருச்சு.” அருணின் கண்களில் கண்ணீர்.

“பலர் பழம் வாங்கி சாப்பிடுறாங்க. ஆனால், நிஷாவுக்கு மட்டும் ஏன் அப்படின்னு தெரியலை. டாக்டர்ஸ் காரணம் எதுவும் சொல்லலை. பொத்தம் பொதுவா, நம்ம ஊரில் விளையுற பழங்களை வாங்கி சாப்பிடுங்க. ஹைபிரிட் ஃப்ரூட்ஸ் எல்லாம் வேண்டாமேன்னு முடிச்சகிட்டாங்க.” அருண் தன்னை மீட்டு கொண்டான்.

“நான் கார்த்திக் கிட்ட சொல்லி பழத்தை கொடுத்தேன். உங்க அண்ணன், அப்புறம் பல பழங்களை ஆராய்ச்சி பண்ணான்” அருண் நிறுத்தினான்.

“என்ன நடந்தது?” விஜயின் குரலில் பதட்டம்.

“எல்லருக்கும் இப்படி ஆகும்னு சொல்ல முடியாது. ஆனால், விஜயேந்திரன் நிறுவனம் செய்யுற எல்லா பழத்திலும் ஏதோவொரு பிரச்சனை இருக்கு. டயபெட்டிக் பேஷண்ட்ஸ் கூட நம்பி பழங்கள் சாப்பிடுவாங்க. ஆனால், ஹைபிரிட் பழங்களில் சுகர் நிறைய இருக்கு. அது மாதிரி குழந்தைகள் விரும்பி சாப்பிடுற மாதிரி குட்டி குட்டி மினி ஃப்ரூட்ஸ் கண்டுபிடிச்சாங்க. அது குழந்தைகளை பாதிக்க கூடியது.” அருணின் கண்களை இறுக மூடினான்.

“அங்க தான் பிரச்சனை ஆரம்பம் ஆச்சா?” விஜயின் கேள்வி கூர்வாளாக இறங்கியது.

“ஆமா, அருண். உங்க அண்ணனும், டீமும் அதை கண்டுபிடிச்சி சொன்னாங்க. அதை சொன்னப்ப, விஜயேந்திரன் ஒத்துக்கிட்டதாக தான் உங்க அண்ணன் சொன்னான். அப்புறம், என்ன நடந்ததுன்னு  தெரியலை. என் நண்பனின் இந்த நிலைக்கு நான் தான் காரணமுன்னு என் மனசாட்சி உறுத்தலோடு இருந்தேன்.”

“மித்திலா கிட்ட இருந்து வந்த ஃபோன் காலில் ஏதாவது தடயம் கிடைக்குமான்னு யோசிச்சேன். மித்திலாவை பார்க்க போனேன். அதுக்கு அப்புறம், எல்லாம் மாறிடுச்சு. ரவீந்தர், நீ சொல்ற மாதிரி பார்த்தா ரோபோட் எல்லாம் கண்டுபிடிச்சிருச்சு.” அருண் தன் மனதில் இருந்ததை கொட்டி முடித்தான்.

“இப்ப எல்லாம் நாசமா போச்சு” அருணிடம் இப்பொழுது புலம்பல்.

“இல்லை, நம்ம கையில் பழம் இருக்கு. என்னால் நிச்சயம் இது என்னனு கண்டுபிடிக்க முடியும்” விஜய் வேலையை விறுவிறுவென்று ஆரம்பித்தான்.

சில பொழுதுகளில்,  பழத்தில் உள்ள விஷப்பொருளையும் கண்டுபிடித்தான். அதற்கு மாற்று மருந்தையும் கண்டுபிடித்தான்.

மித்திலாவுக்கு அவன் மருந்தை கொடுக்க, பாதிக்க ஆரம்பித்த அவள் நரம்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் மீள ஆரம்பித்தது. அப்பொழுது தான் பாதிப்பு ஏற்படிருந்ததால் மித்திலா உடனே குணமடைந்துவிட்டாள்.

விஜயின் கண்களில், அத்தனை மகிழ்ச்சி. மருந்தை அவன் அண்ணனுக்கும் கொடுத்தான். உடனடியாக இல்லையென்றாலும், கார்த்திக்கும் சில நாட்களில் மீண்டுவிட்டான்.

இதற்குள் ரவீந்தர் என்னும் ரோபோட் செயலிழக்கப்பட்டிருந்து. விஜயேந்திரன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிந்தார்.

ரவீந்தர் தன் தந்தையின் சூழ்நிலை அறிந்து அவசரமாக வெளிநாட்டில் இருந்து திரும்பி இருந்தான்.

“அப்பா, நீங்க பண்ணது எவ்வளவு தப்பு தெரியுமா?” ரவீந்தரின் குரலில் அத்தனை கோபம்.

“என்னடா தப்பு? நம் பிசினெஸ்ஸை வளர்த்து, உன்னை ராஜாவாக்கலாமுன்னு பார்த்தேன்.” வயது முதிர்ந்த அவர் முகத்தில் ஆத்திரம்.

“கார்த்திக் தம்பி விஜய். அவனை மாதிரி புத்திசாலியா இருப்பானானோன்னு சந்தேகத்தில் தான் கூடவே வச்சிருந்தேன். பார்க்க முட்டாள் மாதிரி இருந்துகிட்டே கழுத்தை அறுத்துட்டான்.” விஜயேந்திரன் குரலில் கர்ஜனை.

“வல்லவனுக்கு வல்லவனும், எத்தனுக்கு எத்தனும் ஒருவன் இருப்பான் அப்பா.” ரவீந்தர் குரலில் நிதானம்.

“கார்த்திக் அண்ட் டீமுக்கு நினைவு வந்திருச்சுன்னா. எல்லாம் மோசம். நான் எப்படி தப்பிக்க?” விஜயேந்திரன் குரலில் பதட்டம்.

“அப்பாவா இருந்தாலும், நீங்க தண்டனை அனுபவித்து தான் ஆகணும்.” ரவீந்தர் குரலில் உறுதி.

சில நாட்களில், விஜயேந்திரனால் பாதிக்கபட்ட மித்திலாவின் தந்தை, கார்த்திக் மற்றும் அவர்கள் குழுவினரும் விஜயின் உதவியோடு நிசப்தமான அவர்கள் நினைவுகளை மீட்டு தன்னிலைக்கு மீண்டு இருந்தனர்.

வழக்கு தொடுக்கப்பட்டு, விஜயேந்திரனுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

அதற்கு ரவீந்தரும் துணை நின்றான். இந்த மனிதன் ரவீந்தர், விஜயேந்தரால் இயக்கப்படும் ரோபோட் இல்லை என்று விஜய், மித்திலா அறிவுக்கு புரிந்தாலும் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சற்று தடுமாறினர்.

“நான் தான்… நான் பண்ண ரோபோட்டை டெஸ்ட் பண்ணனும்னு நினச்சேன். கடைசியில் அப்பா அதை இப்படி எல்லாம் யூஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கலை. அப்பா, பண்ணிட்டு இருந்த தப்புக்கு, நானும் உடன் இருந்த மாதிரி ஆகிடுச்சு.” ரவீந்தர் மன்னிப்பு கோரினான்.

அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி. ஆனால், இதுவெல்லாம் நிகழ காரணமான விஜய் மற்றும் மித்திலாவை காணவில்லை.

அவர்கள் தனிமையை தேடி இருந்தார்கள். அவர்கள் காதல் மொழி பேசி கொண்டிருந்தார்கள். எந்த உந்துதலுமின்றி காதல் அவர்கள் நினைவுகளை நிசப்தமாக்கி கொண்டிருந்தது.

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!