NinaiveNisapthamaai-3

NN_Pic-a1bd194f

NinaiveNisapthamaai-3

  • Renuka
  • October 19, 2020
  • 0 comments

நினைவே நிசப்தமாய்  3

கருமையான இருள் சூழ்ந்த நிசப்தமான நேரம். அவனின் அருகாமை. அவளுள் பதட்டம். மித்திலாவின் இதய துடிப்பு எகிறியது.

“தட்… தட்…” அவள் இதய துடிப்பின் சத்தம் அந்த காரிருளை கிழித்து கொண்டு கேட்டது.

“என்ன உன் பயம் இப்படி வெளிய வரைக்கும் கேட்குது?” அவனிடம் நக்கல்.

“அதெல்லாம் இல்லை. எனக்கென்ன பயம்?” அவளின் குரலில் மட்டும் தெனாவட்டு.

“உன்கிட்ட ஆயுதம் இல்லை” அவன் பேசி முடிப்பதற்குள் அவள் கேள்வி அவனை இடைமறித்து.

“அப்படின்னு யார் சொன்னா?” அவள் புருவம் உயர்ந்தது.

‘பியூட்டி பார்லர் போவா போல’ புருவத்தின் வளைவை ரசித்தான் அவன்.

அவள் அவன் பதிலுக்காக காத்திருக்க, “யார் சொல்லணும்? உன்னை அப்படிப்பட்ட உடையில் தான் நான் கடத்தினேன். நீ எங்கயும் எதையும் மறைத்து வச்சிருக்க முடியாது”

அவள் பார்வை அவனிடம் ஏளனமாக சென்றது.

“நீ உன் இடுப்பில் மறைத்து வச்சிருக்கிற சிப்யை நான் கண்டுபிடிச்சிட்டேன்” அவளின் ஏளனத்திற்கு அவன் பதில்.

“உன் சிப் டிடெக்டர் சரியாதான் வேலை செஞ்சிற்கு” அவளிடம் மீண்டும் நக்கல்.

“என்ன திமிர்? என் சிப் டிடெக்டர் நீ உன் உடம்பில் வச்சிருக்கிற சிப்பையும் கண்டுபிடிச்சிருச்சு. அதை எப்படி செயலிழக்க செய்யணுமோ, அதை செய்தாச்சு. உன்னை எவனும், எவளும் ட்ராக் பண்ண முடியாது. நீ எங்க இருக்கன்னு கண்டுபிடிக்க முடியாது.” அவன் குரல் எச்சரித்தது.

 “ஹா… ஹா…” கலகலவென்று சிரித்தாள்.

பேசும் இடைவெளியில் தன்னை சுதாரித்து கொண்டாள்.

“அந்த இதய துடிப்பு சத்தம், உன்னோடது.” அவள்  உறுதியாக கூறினாள்.

“என்ன உளறுற?” அவன் புருவத்தை சுருக்க, “உன்னால என்னை என்ன பண்ண முடியும்?” அவள் கேள்வி அவனை நோக்கி துப்பாக்கியின் தோட்டா போல் பாய்ந்தது.

“உன்கிட்ட நகம் கூட இல்லை. நகத்தில் சேருகிற அழுக்கு கூட பிடிக்காதோ. அவ்வளவு சுத்தமோ?” அவன் அவள் நீண்ட விரல்களை ரசித்தான்.

“என்னை ஏதாவது பண்ணனும்னு நீ நினைச்சிருந்தா, அப்பவே பண்ணிருக்கலாம். உன் குறி அது இல்லை. அப்படி என்னை நீ தாக்க வந்தாலும், என்கிட்டே நகம் தான் இல்லை. பல் இருக்கு. ஒரு பெண்ணுக்கு பல் கூட ஆயுதம் தான்” அவள் அங்கிருந்த மெத்தையில் அமர்ந்தாள்.

“என்னை கொல்லப்போறியா? எங்க கொலை செய் பார்ப்போம். உன் ரகசியம் எனக்கு தெரியும். என் சிப் செயலிழந்து ஒரு சில நாட்களில், உன் மொத்த ரகசியமும் வெளியுலகத்திற்கு போகும்” அவளிடம் நிதானம் மட்டுமே.

“ஏய்” அவன் அவள் கழுத்தை நெரித்திருந்தான்.

“உனக்கு என்ன தெரியும்?” அவன் கழுத்தை அழுத்த, அவள் மூச்சு திணறியது.

“நீ யார்?” அவள் மூச்சு திணறியது.

“அதை தெரிஞ்சி நீ என்ன பண்ண போற?” அவன் அவளை வேகமாக விட, அவள் நெற்றி அங்கு இருந்த இரும்பு கம்பியில் மோதியது.

அவள், “ஆ….” என்று அலறினாள். ரத்தத்தை கைகளால் துடைத்து கொண்டாள். “உன் பெயர் என்ன?” அது தான் முக்கியம் போல் அவளின் வினா அமைந்தது.

“தெரிஞ்சி என்ன பண்ண போற?” அவன் தன் கைகளை இடுப்பில் வைத்து கொண்டு கேட்டான்.

அவள் சுவரோடு சாய்ந்து குறுகி அமர்ந்திருந்தாள்.

“நான் யாரை முழுசா அழிக்க போறேன்னு எனக்கு தெரியணும்” அவள் மூச்சை உள்ளிழுத்து கொண்டு, அவள் எண்ணத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தினாள்.

அவன் தன் வலது பூட்ஸ் காலால் அவள் முகத்தை  ஏந்தினான்.

“பெயர் கூட தெரியலை. நீயெல்லாம் என்னை அழிக்க போறியா?” அவன் புருவம் உயர்த்தினான்.

அவள் பார்வை அவன் கருப்பு நிற பூட்ஸிடம் சென்றது. அத்தனை தூய்மை.

‘மோசமான மனிதர்கள் வெளியில் சுத்தமாக தான் இருப்பார்க்ள போலும். உள்ளே தான் முழு அழுக்கு போல?’ அவள் மனம் அவனை இடை போட்டது.

“கேட்குறேன்ல? என் பெயரை கூட தெரியாம, என்னை அழிக்க போறியா?” அவன்  காலால் அவள் நெஞ்சோரம் மெல்லிய அழுத்தத்தை கொடுத்தபடி கேட்டான்.

“உன் அழிவு என்னிடம் தான் ஆரம்பம். அதுக்கு உன் பெயர் தேவை இல்லை” அவள் உறுதி, அவனை மெய்சிலிர்க்க வைத்தது.

“அப்புறம் எதுக்கு என் பெயர் கேட்குற மித்திலா?” அவன் கூற, ‘என் பெயர் தெரியும் போலும்’ அவள் பார்வையை படித்தான் அவன்.

“உன் பூர்விகமே தெரியும்” அவன் சிரித்தான். அந்த சிரிப்பு சத்தத்தில், அவளுக்கு அவன் பெயர் கூட தெரியவில்லை என்ற ஏளனம் பொதிந்து கிடப்பது அவளுக்கு புரிந்தது.

‘இவனுக்கு தெரியாது. கண்டுபிடிக்க இவன் கையாளும் யுக்தி.’ அவள் அறிவு எச்சரிக்க, அவளிடம் மௌனம்.

ரத்தம் இப்பொழுது வடிய ஆரம்பித்துவிட்டது.

அருகே இருந்த மருந்தை எடுத்து அவள் நெற்றியில் அழுத்தினான்.

மருந்து தீ என காந்தியது. “அப்ப்பா…” அவள் அலறினாள்.

“என்ன இதுக்கே அலறுற? இன்னும் நீ என்னவெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு” அவன் பார்வை அவளை விதவிதமாக தீண்டியது.

“பளார்…” என்று அவள் கை அவன் கன்னத்தை பதம் பார்த்தது.

அவன் இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அவள் கன்னத்தில் அவன் இரண்டு முறை அறைந்தான்.

“உனக்கு என்ன டீ வேணும்? என்ன தெரியும் உனக்கு? பணமா… இல்லை…” அவன் முடியை கொத்தாக பிடித்து கேட்டான்.

அவள் கண்கள், முகம் அனைத்தும் வலியை மட்டுமே காட்டியது. 

“என்னை கடத்தினது நீ. நீ தான் சொல்லணும். உனக்கு என்ன வேணும்? நான் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்.” அவள் குரலில் உறுதி.

அவள் கண்கள் அவன் கைகளில் இருந்த ராட்ச்ச பழ முகமூடியை தழுவி மீண்டது.

“அயோக்கிய ராஸ்கல். நான் இழந்தது நிறைய. அது உனக்கும் தெரியும். நீ சொல்றா நீ பண்ண தப்பை” அவள் அவனை மிரட்டவே செய்தாள்.

‘ஒரு பெண்ணை இதற்கு மேல் எப்படி தாக்குவது?’ அவனுக்கு தெரியவில்லை.

அவளை விட்டுவிட்டு வெளியே சென்றவன், மீண்டும் வந்து அவள் கன்னத்தை அழுத்தமாக பிடித்து, “உன் சாவு இங்க தான் டீ” அவன் அவளை

 மிரட்டிவிட்டு சென்றான்.

அவன் சென்றதும் வேகமாக ஓடி சென்று கதவை தாளிட்டு கொண்டாள்.

   மித்திலாவின் உடல் எங்கும் வலி. அவள் கண்கள் வலியால் கலங்கியது. அவள் மனஉறுதி, அவள் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டது.

‘நான் நினைச்சது எனக்கு கிடைச்சாகனும். இவன் யார்? இவன் தான் என் அப்பாவின் இந்த நிலைக்கு காரணமா? கண்டுபிடிப்பா இந்த மித்திலா’ அவள் மனமும், அறிவும் ஒருசேர உறுதி எடுத்து கொண்டது.

‘அப்படி என்னால கண்டுபிடிக்க முடியலைன்னா, என் உயிர் போகணும். இவனை பத்தியாவது இந்த உலகத்துக்கு தெரியணும். இனி யாரும் பாதிக்கப்பட கூடாது’ அவள் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அதே நேரம் கதவுக்கு வெளியே, அவன்.

‘இவளுக்கு என்ன தெரியும்? இவள் தான் விஷயத்தை மீடியாவுக்கு கொண்டு செல்ல நினச்சா. ஆனால், இவளுக்கு எது வரைக்கும் தெரியும்னு எனக்கு தெரியணும். விஷயம் வெளிய தெரிஞ்சா, என் திட்டம் எல்லாம் கெட்டு போய்டும்.’ அவன் தலையை பிடித்து கொண்டான்.

‘இவளிடம் எப்படி விஷயத்தை கறப்பது? அதுவும் வெளி உலகத்திற்கு சந்தேகம் வராமல். இவ ரொம்ப நாள் இங்க இருந்தா எனக்கு ஆபத்து.’

‘இவளை இரெண்டு நாள் அடைத்து வைப்போம்’ அவனின் அறிவு அவனுக்கு வழி காட்டியது.

***

மறுநாள் காலை,

நிஷா தன் பிறந்த வீட்டிற்கு சென்றாள்.

“இங்க ஏண்டி வந்த?” அவள் தந்தையின் குரல்.

“அப்பா, அவரை காணும் ப்ப்பா” நிஷாவின் விசும்பல் சத்தம்.

“ஓ… உன்னை ஏமாத்தி விட்டுட்டு ஓடிட்டானா?” அவர் குரலில் வெறுப்பு மட்டுமே.

பின்னே அவள் தாய் வர, “அம்மா, அருணை போலீஸ் கூட்டிட்டு போனாங்க. அப்புறம் காணும் அம்மா. எனக்கு ஏதாவது உதவி பண்ணுங்களேன்” அவள் கதறினாள்.

“நான் தான் சொன்னேனில்லை. அவனை பார்த்தாலே பொறுக்கி மாதிரி தான் இருக்கு. அங்கையும் இங்கையும் கிழிஞ்சு போன  ஜீன்ஸ். எப்பப்பாரும் ஒரு கேமரா.”  நிஷாவின் தாயின் குரலில் குற்றசாட்டு.

“அம்மா…” நிஷா அலறினாள்.

“இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை. அவனை தலை முழுக்கிட்டு இப்படியே வா. உன்னை ஏத்துக்கறோம்” தாயின் குரலில் ஆணை.

நிஷா பதிலேதும் சொல்லாமல் அவள் காரை நோக்கி சென்றாள்.

அருண் வீட்டில் இவள் மீது குற்றம் செலுத்தப்பட, நிஷா அருணின் அலுவலகம் நோக்கி சென்றாள்.

அருணின் நிலைமையை அவள் எடுத்துரைக்க செல்ல, அங்கு ஒருவர் அவளை இடைமறித்தார்.

நிஷா, அருணை பற்றி விசாரிக்க, “அப்படி ஒருவன் அந்த அலுவலகத்தில் பணிபுரியவே இல்லை” என்ற தகவல் வர நிஷாவின் இதயம் அதன் துடிப்பை ஒரு நொடி நிறுத்தி கொண்டது.

அவள் அறிவு செயலிழக்க, ‘அருண் நல்லவன். அருண் உன் கணவன். அருண் உன் காதலன். அருண் உனக்காக எதையும் செய்வான்’ அவள் மனம் மட்டுமே துடித்தது.

மனம் அறிவையும் பணி புரிய உந்தியது.

“என் அருண் ஏதோ தப்பு பண்ணிருக்கலாம். ஆனால், அவன் என்னை ஒரு  நாளும் ஏமாற்ற மாட்டான்” தனக்கு தானே அவள் அதரங்கள் அவளுக்கு ஆறுதல் பேசியது.

செய்வதறியாமல் அவள் மீண்டும் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள்.

அருண் காவல் அதிகாரிகள் முன் கடைசியாக சொன்ன வார்த்தைகளை அசை போட ஆரம்பித்தாள். ‘பயப்படாத, உனக்கு பிடிச்ச படத்தை பாரு.’

அவளுக்கும் எதுவும் புரியவில்லை. சிந்தித்தபடியே அவள் வீட்டை அடைந்தாள்

 வீட்டு வாசலில் ஒரு பெட்டி இருந்தது. அவள் காலில் தட்டு பட்டது

வெளியே மெல்லிய ரத்த கறை. அவள் அதை கைகள் நடுங்க திறந்து பார்த்தாள். 

திறந்து பார்த்த அவள், “வீல்…” என்று கத்தினாள்.

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!