Ninaivenisapthamaai-7

NN_Pic-af0ab294

Ninaivenisapthamaai-7

  • Renuka
  • November 13, 2020
  • 0 comments

நினைவே நிசப்தமாய்  – 7

அருணின் குரலை கேட்ட, மித்திலா பதட்டத்தோடு விஜயை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் முகத்தில் தோன்றிய புன்னகையில் இன்னும் குழம்பி போனாள்.

“விஜய்…” என்று மித்திலா அழைக்க, “என்ன மித்திலா, உன்னை கொன்று விடலாமா?” அவன் அழுத்தமாக கேட்டு கொண்டே அவளை நெருங்கினான்.

மித்திலாவின் அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது.  அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இறங்கி மெல்ல மெல்ல பின்னே நகர்ந்தாள்.

அவன் அழுத்தமான காலடி ஓசையோடு அவளை மெதுவாக, நிதானமாக நெருங்கினான்.

அவள் பின்னே நகர்ந்து நகர்ந்து சுவரோடு மோதி நின்றாள்.

“விஜய் விளையாடாத!” அவள் குரலில் பயம் கலந்த அதிர்ச்சி.

அவள் விழிகள் வேகவேகமாக உருள, அவன் புன்னகை விரிந்தது. அந்த சிரிப்பு அவளுக்கு அச்சத்தையே கொடுத்தது. அதில், ஏதோவொன்று மறைந்து இருப்பது போன்ற உணர்வு அவளுள் எட்டி பார்த்தது.

 அவள் அவன் கழுத்தை அழுத்த, அவள் மூச்சு சற்று சிரமமானது. அவள் தன் கண்களை இறுக மூடினாள். அவள் நெற்றியில் வியர்வை துளிகள்.

“என்ன தைரியத்தில் இங்க வந்த?” அவன் கேட்க, அவள் தன் மூச்சை உள்ளிழுத்து நிதானித்தாள்.

அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை சரேலென்று விலக்கி அவன் கழுத்தை நெருக்கி இருந்தாள் மித்திலா.

“இந்த தைரியத்தில் தான். நான் கராத்தே படிச்சவ” அவள் குரலில் எகத்தாளம்.

அவன் முகத்தில் ஒரு மெச்சுதல் பார்வை.

அவள் கைகளை பின்னே மடக்கி, அவன் அவளுக்கு வலியை கொடுத்தாலும், அவள் அவனுக்கு சவாலாக தான் இருந்தாள்.

“பரவால்லை, நீ உன்னை காப்பாத்திப…” அவன் கூற, “வேற வழி?” அவள் உணர்ச்சி துடைத்த குரலில் கூறினாள்.

அவன் கைகள் தளர்வடைந்து ஆசுவாசத்தை கொடுத்தது. அவளும், அவனிடமிருந்து விலகி கொண்டாள்.

“பயந்துட்டியா?” அவன் பார்வை அவளை அளவிட்டு கொண்டது.

“ஆமாம், லைட்டா… என் உள் மனம் உன்னை நல்லவன்னு சொல்லுச்சு. என் கண்டுபிடிப்பும். அதிலிருந்த நம்பிக்கையில் தான் நான் உன்னை தேடி வந்தேன்.” அவள் கூற,  அவன் அவளுக்கு தண்ணீரை நீட்டினான்.

“இப்படி எல்லாரையும் நம்பாத” அவன் குரல் அவளை எச்சரித்தது.

“அருண் கெட்டவனா?” அவள் குரலில் நடுக்கம்.

‘இல்லை…’ என்பது போல் அவன் தலையசைத்தான்.

“அப்ப, ஏன் இப்படி பேசுறான்?” அவள் கேட்க, “அது அருண் கிடையாது” அவன் தோள்களை குலுக்கினான்.

“யாரு?” அவள் அவன் முன்  நின்றாள்.

“எனக்கு எப்ப ரவீந்தர் கிட்ட இருந்து கால் வந்தாலும், வேறவேற குரலில் தான் வரும். சில சமயம் தெரிந்த குரலில். பல சமயம், பல தெரியாத குரலில். எனக்கு ரவீந்தர் குரல் கூட சரியா தெரியாது” விஜய் கூற, மித்தில்லா அவனை யோசனையாக பார்த்தாள்.

“நீ, ரவீந்தரை பார்த்தது கூட இல்லையா?” மித்திலாவிடம் மீண்டும் அதிர்ச்சி.

“இல்லை” அவன் குரலில் ஏமாற்றம்.

“இத்தனை நாள் நீ என்னத்த கிழிச்ச?” அவள் குரலில் ஏளனம்.

அவன் அவளை முறைக்க, “இல்லை ரவீந்தர் யாருன்னு தெரியாது. ரவீந்தர் தான்னு என்ன நிச்சயம்?” அவள் குரலில் சமாளிப்பு.

“நீ என்னத்த கண்டுபிடிச்சியோ, அதே தான். உங்க அப்பா, எங்க அண்ணன் ஒரே இடத்தில் வேலை பார்க்குறாங்க. அங்க தான் ஏதோ பிரச்சனைன்னு கண்டுபிடிச்சிருக்கேன். அந்த தலைமையில் ஏதோ பிரச்சனைன்னு கண்டுபிடிச்சிருக்கேன்.” அவன் நிறுத்த, அவளிடம் மௌனம்.

“நீ அதை அருண் கிட்ட சொல்ல போக  அருணையும் சிக்கலில் மாட்டி வச்சிருக்க. நான், அண்ணன் வேலை பார்க்குற இடதுக்குள்ள போய், அங்க என் திறமை எல்லாம் மறைத்து அவங்க நம்பிக்கையை சம்பாதிச்சிட்டு வந்திருக்கேன். அதுல கிடைத்தது தான் உன்னை கடத்துற வேலை” அவன் படபடவென்று பேசினான்.

“அப்படி என்ன தான் வேலை செய்யறாங்க?” அவள் குரலில் கேள்வி.

“உணவு பொருட்கள் வியாபாரம் தான்” அவனிடம் சலிப்பு.

“உனக்கு எதுவும் தப்பா தெரியலையா?” அவள் கேட்க, அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“ஆனால், அங்க இருக்கிற உணவு பொருளில் தான் ஏதோ பிரச்சனை இருக்கு. அண்ணா, கத்தியை பார்த்தா பழமுன்னு பேசுறான். அப்புறம் மறந்துடறான்.” அவன் குரலில் யோசனை விரைவி கிடந்தது.

“அப்பாவும், பழம், பழம்ன்னு தான் சொல்ல ஆரம்பிப்பாங்க. அதுக்கு மேல எதுவும் அப்பாவுக்கு நியாபகமில்லை.” அவள் குரலில் ஏதோ பதட்டம்.

“உங்க அப்பாவும், அண்ணா மாதிரி ஃபுட் கிரியேஷன்  டீமா?” அவன் கேட்க, அவள் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“ஏதோவொரு ஃபுட் ப்ரொடெக்ட்ஸ்ல தான் பிரச்சனைன்னு நான் நினைக்குறேன்.” அவளிடம் யோசனை.

“இருக்கலாம். ஒருவேளை அது பழங்கள் மூலமா இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.” அவன் கூற, “நீ தெளிவாவே பேச மாட்டியா?” அவள் கோபம் கொண்டாள்.

“உன்னை மாதிரி அவசரப்பட்டு மாட்டிக்க சொல்லறீயா?” அவன் குரலில் சிடுசிடுப்பு.

“நான் இங்க வந்தது அவனுக்கு தெரிஞ்சிருக்குமோ?” அவள் கேட்க, “அது அவனா? அவளோ?” அவன் சிரித்தான்.

“இப்ப அது தான் முக்கியமா? பெயரை பார்த்தாலே தெரியலை, அது அவன் தான்னு…” அவள் சீற, “ம்… அப்படி தான் தோணுது. ரவீந்தரை சந்திக்க போறேன்னு சொல்லிட்டு போனது தான் அண்ணன் நல்லா இருந்த கடைசி நாள். வந்தும் தூங்கினான். அப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டான். ” அவன் ஜன்னல் வழியாக மெளனமாக வானத்தை பார்த்தான்.

அவன் தேதியையும் பகிர, அவளும் தன் தந்தைக்கும் அது போலவே நடந்ததையும் அதே தேதியையும் பகிர்ந்து கொண்டாள்.

அவர்கள் நினைவுகளுக்கு ஏற்பட்ட நிசப்தம் போல, அங்கும் நிசப்தம் நிகழ்ந்தது.

அந்த அமைதியை கலைப்பது போல, “அப்பா, பழைய ஆள். எதுவுமே லேப்டாப்ல இல்லை. ரவீந்தர் அப்பா, விஜயேந்திரன் தான் அப்பாவுக்கு நண்பர். அப்புறம், அவர் வேற வேலையா ஆபீஸ் வரத்திலை. ரவீந்தர் தான் எப்பயாவது வருவார். நாங்க அவரை ரொம்ப பார்குறதில்லைன்னு அப்பா சொல்லுவாங்க” மித்திலா பேச அவன் தலை அசைத்து கொண்டான்.

” உங்க அண்ணன் கிட்ட எந்த விஷயமும் இல்லையா? அவர் லேப்டாப்…” என்று மித்திலா கேட்க, “எல்லாம் பாஸ்வார்ட் ப்ரொடெக்டட்” அவன் கூற, “எடுத்திட்டு வா ஹேக் பண்ணிடுவோம்” என்று கூறினாள் மித்திலா.

“என்னால் முடியலை. நீ ஹக்கெரா?” அவள் புருவம் உயர்ந்தது.

‘இல்லை…’ அவன் தலை அசைக்க, “நான் பழங்கள், காய்கள் பத்தி ஆராய்சசி பண்றவன். எனக்கு இதில் அவ்வளவு அறிவு கிடையாது.” அவன் பரிதாபமாக கூறினான்.

“சாப்ட்வெர் என் ஏரியா. நீ எடுத்துட்டு வா.” மித்திலா குரலில் உறுதி.

அவன் அவளை சந்தேகமாக பார்க்க, “நீ என்னை நம்பி தான் ஆகணும் விஜய். உனக்கு வேற வழி இல்லை. நீ இப்ப நிக்கறது முட்டு சந்து. உனக்கு உதவி வேணும். எனக்கு உள்ள போக வழி தெரியும். அவனை நெருங்க முடியும். ஆனால், அதுக்கு மேல அவனை கண்டுபிடிக்க உன் உதவி எனக்கு வேணும்.” அவள் பேச்சில் நிதர்சனம்.

விஜய் தன் சகோதரனின் மடிக்கணினியை எடுத்து வந்தாள்.

அனைத்தையும் பார்த்த அவர்களுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இருவர் முகத்தில் சோகம் அப்பி கொண்டது.

மித்திலா மேலும் மேலும் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்க, “ஹைப்ரிட்” என்ற வார்த்தை பல இடங்களில் தட்டுப்பட அவள் புருவம் சுருங்கியது.

அவளால் மேலும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ரவீந்தர் நான் இங்க இருக்கிறதை கண்டுபிடிச்சிருப்பானா? ஏன் இப்படி போன் பண்ணினான்?” சட்டென்று கேட்டாள் மித்திலா.

“இல்லை, தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அது என் அடுத்த அசைன்மென்ட். உன்னை தேடி கொல்லனும்.” விஜய் எங்கோ பார்த்தப்படி அசட்டையாக கூறினான்.

மித்திலாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள். “பயப்படாத, நீ இப்ப பாதுகாப்பான இடத்தில தான் இருக்க” அவன் குரல் அவளுக்கு ஆறுதலாய்.

“நீ, ரவீந்தர் கிட்ட நான் இங்க இருக்கேன்னு சொல்லு.” அவள் குரலில் உறுதி.

“லூசா நீ?” அவன் எகிற, “நாம ரவீந்தரை பார்த்தாகணும்” அவள் குரலில் அத்தனை ஆர்வம்.

“அதுக்கு?” அவன் கேள்வியாய் நிறுத்த, அவள் தன் திட்டத்தை கூற அவன் வெடவெடத்து போனான்.

இருவரும் அறியவில்லை, அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை.

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!