ninaivenisapthamaai8

NN_Pic-5140ef0c

நினைவே நிசப்தமாய்  – 8

“விஜய், நீ நான் இங்க இருக்கிறதா சொல்லு” மித்திலா உறுதியாக கூற, மறுப்பாக தலை அசைத்தான் விஜய்.

“உன்னை கொல்ல சொல்லி எனக்கு கட்டளை வரும். அது உன் உயிருக்கு ஆபத்து” அவன் குரலில் பதட்டம்.

“என் மேல உனக்கு என்ன அக்கறை?” அவள் குரலில் கேலி.

“என்னை பார்த்தா, அக்கறை இல்லாதவங்க எல்லாரையும் கொல்லறவன் மாதிரியா இருக்கு?”  அவன் குரலில் கடுப்பு.

“நீ அடைச்சு வச்சிருக்கேன்னு சொல்லு. கொலை செய்தால் சட்ட சிக்கல்லுன்னு எதையாவது சொல்லி சமாளி.” அவள் குரலில் பிடிவாதம்.

அவன் அவளை கூர்மையாக பார்த்தான். ‘இவளுக்கு எத்தனை தைரியம்?’ அவன் மனம் அவளை பாராட்டி கொண்டது.

அவள் பக்கம் சாய்ந்துவிடுமோ என்று அச்சம் கூட கொண்டது. இருக்கும் நிலைமையை மறந்து!

“ரவீந்தர் கொலை செய்ய மாட்டான். செய்திருந்தா, உங்க அண்ணனை , என் அப்பாவை கொன்றுக்கணும்” அவள் படபடவென்று பொரிய, ‘இதெல்லாம் எனக்கு தெரியாதா?’ அவன் அறிவு பேசினாலும், உதடுகள் மௌனித்து கொண்டு, அவன் செவிகள் அவள் பேசுவதை கேட்டு கொண்டது.

“அவன் உன்னை சிக்க வைக்க பார்க்குறான்” அவள் உதடுகள் இலவச ஆலோசனை வழங்கியது.

“…” அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

“நீ பேச மாட்டியா?” அவளிடம் சந்தேகம்.

“என்ன பேசணும்? நீ சொல்றது தான் சரின்னு சொல்லணுமா? இல்லை தப்புனு சொல்லணுமா?” அவனிடம் நிதானம்.

“நீ நினைக்குறதை சொல்லு. உனக்கு தெரிந்ததை சொல்லு” அவள் குரலில் எரிச்சல்.

“நான் எதுவும் நினைக்கலை. எனக்கு எதுவும் தெரியாது” அவன் குரலில் அத்தனை அடக்கம்.

“எதுமே தெரியாத நீ, எப்படி இவ்வளவு தூரம் ரவீந்தரை நெருங்கின?” அவள் குரலில் கேள்வி.

“ஹா… ஹா…” அவன் சிரிப்பு அர்த்தத்தை பொதித்து கொண்டு ஒலித்தது.

அந்த சிரிப்பில் அறியாமை இல்லை. கம்பீரமும், அவன் அழுத்தமும் ஒளிந்து இருந்ததை மித்திலாவின் அறிவு படம் பிடித்து கொண்டது.

விஜயின் இந்த கம்பீரத்தை கூட, அவள் இந்த வீட்டில் தான் பார்க்கிறாள்.  அவள் அடைத்து வைக்க பட்டிருந்த வீட்டில் விஜயின் செயல்பாடுகள் வேறு மாதிரி இருந்ததை மித்திலாவின் மூளை ஒருமுறை நினைவு கூர்ந்து கொண்டது.

“சிரிச்சது போதும். நாம, செய்ய போறதை பேசுவோம்.” அவள் அவனின் சிரிப்புக்கு முற்று புள்ளி வைத்தாள்.

“நீ என்னை பத்தி ஏதாவது சொல்லற மாதிரி ரவீந்தரை நெருங்கனும். என்னை கொலை செய்தா, நான் எல்லா விஷயத்தை வெளிட்டிருவேன்னு, நான் சொன்ன முதல் பொய்யை, இப்பவும் சொல்லு.” அவள் கண்சிமிட்டினாள்.

“உனக்கு எதுமே தெரியாதா?” அவன் குரலில் விசாரிப்பு.

“ம்… அவன் ஏதோ செய்யறான். அவன் தான் என் அப்பாவின் நிலைமைக்கு காரணுமுங்கிறது மட்டும் தான் தெரியும். நான் வச்சிருந்த சிப் கூட, நான் செத்துட்டா தான் என் நண்பர்கள் கிட்ட விஷயத்தை அனுப்பும். அதுவும் நான் இறந்த விஷயத்தை மட்டும் தான்.” அவள் குரலில் இப்பொழுது நிதானம்.

“ஏன் உன் நண்பர்கள் கிட்ட நீ எதுமே சொல்லலை?” அவன் புருவம் சுருங்கியது.

அவள் எழுந்து ஜன்னல் ஓரம் சென்று, “நான் யாரையும் சிக்கலில் சிக்கவைக்க விரும்பலை. நான் ரவீந்தரை அத்தனை சாதாரணமா இடைபோடலை. என் உயிருக்கோ, உன் உயிருக்கோ கூட ஆபத்து வரலாம்.”

“அருண் என்ன பாவம் பண்ணார்?” விஜயின் குரலில் நக்கல்.

“அருண் மீடியான்னு யோசிச்சேன்” அவள் குரலில் விளக்கம்.

“ம்…” அவன் கேட்டுக் கொள்ள, “அருண் விஷயத்தை சொன்னதும் சம்மதிச்சது எனக்கே ஆச்சரியம் தான்” அவள் கண்களில் சிந்தனை.

“அங்க தான் எனக்கு அருண் மேல சந்தேகம் வருது” அவன் குரலில் யோசனை.

“என்னது?” அவள் கண்களில் சந்தேகம்.

“எப்படி உள்ள போறது, ரவீந்தரை பார்க்கறதுன்னு நான் முடிவு செய்துக்கறேன். உன் விஷயத்தை எப்படி சொல்லணும்னு நான் பார்த்துக்கறேன். நம்ம திட்டம் என்ன?” அவள் பேச்சை அவன் திசை திருப்பினான்.

“நான் ரவீந்தரை பார்க்கணும்?” அவளிடம் பேராவல்.

“பார்த்து என்ன பண்ண போற?” அவன் அவள் ஆவலை மனதில் குறித்து கொண்டு கேட்டான்.

“ரவீந்தர் போட்டோ வேணும். அவன் குரல் கூட நம்மக்கிட்ட சரியா இல்லை. அவன் புகைப்படம் வைத்து எதையாவது கண்டுபிடிக்க முடியுமான்னு பார்க்கணும்.” அவள் அடுக்கி கொண்டே போனாள்.

“விளையாடுறியா? நான் அவனை பாக்குறதே பெரிய விஷயம். இதுல அவன் கூட செல்ஃபியா எடுக்க முடியும்? நீ என்னை சாவடிக்க பார்க்குற” அவன் தலை மறுப்பாக அசைந்தது.

“நான் உனக்கு ஒரு குட்டி கமெரா தரேன்.” அவள் தன் திட்டத்தை துவங்க, “அங்க கேமரா எல்லாம் செட் ஆகாது. உள்ள போகும் பொழுதே மாட்டிப்பேன்” அவனிடம் மீண்டும் மறுப்பு.

மித்திலா அவன் முன் குட்டி கருவி ஒன்றை நீட்டினாள்.

“என்ன இது?” அவன் கேட்க, “ஜாம்மிங் டிவைஸ். இந்த டிவைஸ், எல்லா எலக்ட்ரானிக் டிவைஸையும் ஜாம் பண்ணிடும்” அவள் கண்கள் பெரிதாக விரிந்தது.

“இந்த கருவி, எல்லா மின்னணு உபகரணங்களையும் இதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருமுன்னு சொல்லறீயா?” அவன் நம்பாமல் மீண்டும் ஒருமுறை தமிழில் உறுதி செய்து கொண்டான்.

“எஸ். கேமரா கூட ஒர்க் பண்ணாது.” அவள் கூற, “அப்ப, நான் கொண்டு போற கமெரா?” அவன் தெளிவாக சந்தேகம் கேட்டான்.

“நீ, ரவீந்தரை பார்க்க போகும் பொழுது, கேமரா மட்டும் தான் கொண்டு போக போற, இந்த ஜாம்மிங் டிவைஸை அவன் ரூமுக்கு கொண்டு போகாத. அது மட்டுமில்லை, இந்த ஜாம்மிங்க் டிவைஸ் மூலமா நீ எல்லா எலக்ட்ரானிக் டிவைசையும் உன் கன்ட்ரொலில் கொண்டு வர முடியும்.” அவள் குரலில் சிடுசிடுப்பு.

அந்த சிடுசிடுப்பு அவனுக்கு பிடித்திருந்தது. ஏதுவும் அறியாதவன் போல் கேட்பதும், அவள் விளக்கம் கொடுப்பதும் அவனுக்கு சற்று ஆர்வமாக இருந்தது.

அவன் கேலி புரியாமல் அவளும் விளக்கினாள்.

“சரி, ரவீந்தர் கிட்ட இருக்கிற காமெரால நான் கொண்டு போகிற கேமரா மாட்டிக்கிட்டா?” அவன் மீண்டும் கேள்வியை தொடுத்தான்.

“ஒன்னு, நீ வெளிய வந்த பிறகு தான் மாட்டுவோம். அதை சமாளிப்போம். அங்கேயே மாட்டினா நீ சமாளி” அவள் தோள்களை அசட்டையாக குலுக்கினாள்.

“இதுக்கு முன்னாடி எந்த கொல்ல கூட்டத்துக்கு தலைவியா இருந்த?” மீண்டும் அவன் சந்தேகத்தோடு நிறுத்தினான்.

“ஹலோ…” அவள் குரலில் இப்பொழுது அப்பட்டமான கோபம் தெரிந்தது.

“ஓகே கூல்…” அவன் சமாதானம் செய்ய, அவள் முறைப்பு நீடித்து கொண்டே இருந்தது.

“ஜூஸ் தரட்டுமா? உனக்கு சமைக்க தெரியாது. நான் தான் தரணும்.” அவன் சமரசம் தொடர அவள் சிரித்து கொண்டாள்.

அவளோடு அவன் சிரிப்பும் இணைந்து கொண்டது.

“நான் மனம் விட்டு சிரிச்சி ரொம்ப நாள் ஆகுது.” சிரிப்பினோடு அவள் குரலில் சொல்லிலடங்கா வேதனை.

அவன் கண்களில் அவனறியாமல் அக்கறை தேங்கி கொண்டது. “இப்படி, ஏதாவது சாப்பிடுறியான்னு கேட்குற அப்பாவும், இப்ப கேட்குற நிலைமையில் இல்லை” அவள் குரல் கரகரத்தது.

‘சற்று முன் இருந்த தைரியசாலி பெண்ணா இவள்?’ அவன் எண்ணுகையில், அவள் குரல் கர்ஜித்தது.

“என் நிலைமைக்கு காரணமானவங்களை, நான் கண்டிப்பா கண்டுபிடிச்சே தீருவேன். இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது.”

அவள் கர்ஜனையில், ‘இவள் தான் மித்திலா’ அவன் கணக்கிட்டு கொண்டான்.

மறுநாள் விஜய், தான் பணி செய்யும் இடத்தில், மித்திலா  கூறியது போல் அனைத்து கருவிகளையும் தன் ஜாம்மிங் டிவைஸ் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.

விஜய் பணிபுரியும் இடத்தில் பல பழங்கள் இருந்தன. காய்கறிகள் அடுக்க பட்டிருந்தன. பழங்கள், காய்கறிகள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் தயாராகி கொண்டிருந்தன.

விஜயின் நடையில் வழமையான கம்பீரம் இல்லை. ஏதோ, சோம்பலாகவே நடந்து கொண்டிருந்தான். அவன் கண்கள், சாதுரியம் அற்றவன் போல் சுருங்கி கொண்டன.

அவன் நடக்கும் பொழுது சில பொருட்களை கீழே தட்டிவிட்டான்.

“பாஸ், உன்னை உங்க அண்ணன் முகத்துக்காகத்தான் வேலைக்கு வைத்திருக்கிறார். இல்லைனா, உன்னை எப்பொழுதோ வெளிய அனுப்பிருப்பார். உங்க அண்ணன் கார்த்திக் எவ்வளவு திறமைசாலி தெரியுமா?” ஒரு குரல் விஜய்யை திட்ட, விஜய் அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான்.

“ஏன் விஜய் கிட்ட வம்புக்கு போற? அவன் ஒரு முட்டாள் முரடன்னு தெரியாதா?” அருகில் இருப்பவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர்.

“எடுத்து வை விஜய்” மீண்டும் ஒரு குரல்.

அவர்கள் சொன்னதை அப்படியே செய்தான் விஜய்.

“பாரு, சொன்னால் சொன்னதை அப்படியே செய்வான். அது தான் பாஸ் அவனை வைத்திருக்கார். கொஞ்சம் அசடு.” மீண்டும் ஒரு குரலின் சலசலப்பு.

அங்கு அலைபேசி உபயோகிக்க கூடாது என்பது விதி. அனைவரும், அதை கடைபிடித்து கொண்டிருந்தனர்.

விஜய் அதற்கு விதிவிலக்கு. ரவீந்தரிடமிருந்து எப்பொழுது வேணுமின்னாலும் அழைப்பு வரும். அதற்காக இந்த ஏற்பாடு.

விஜயின் கண்கள் பழத்தை, அதன் மூலம் வரும் பொருட்களை அளவிட்டு கொண்டது.

‘இதுல ஆபத்து இருக்கிற மாதிரி தெரியலை’ அவன் விழிகள் பழங்களை நோட்டமிட, அறிவு சிந்தித்து கொண்டது.

‘மித்திலா புத்திசாலி தான். இந்த டிவைஸ் மூலம், எல்லா கேமராவும் நம்ம கண்ட்ரோலில் இருக்கு.’ அவன் மனம் மித்திலாவை மெச்சி கொண்டது.

இப்பொழுது, தன் அலைபேசியை, ப்ளூ டூத்தை மற்றும் அவன் வைத்திருந்த குட்டி கேமராவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான் விஜய்.

ரவீந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. ரவீந்தர் பல கேள்விகள் கேட்டும், மித்திலாவை பற்றிய சில தகவல்களை கூறி தான் அவனை நேரில் சந்திக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறினான் விஜய்.

ரவீந்தரிடம் பதில் இல்லை. அழைப்பு துண்டிக்கபட்டது.

சில நிமிடங்களில், மீண்டும் அழைத்து ரவீந்தர் சம்மதம் தெரிவிக்க, விஜய் அந்த தகவலை மித்திலாவிடம் பரிமாறிக்கொண்டான்.

விஜயின் அலைபேசி ப்ளூடூத், மித்திலாவோடு இணைக்கப்பட்டு, அவன் கேமராவும் மித்திலாவின் மடிக்கணினியோடு இணைக்கப்பட்டிருந்தது.

விஜய் ரவீந்தரின் அறைக்குள் நுழைய, மித்திலா கேமரா மூலம் ரவீந்தரை பார்த்த மாத்திரத்தில் அரண்டு போனாள். 

“விஜய், அவன் ஆபத்தானவன். ஓடி வந்திரு… சீக்கிரம் வெளியே வா…” அவள் குரல் ப்ளூடூத் ஹெட் செட் வழியாக தந்தியடிக்க அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அதற்குள் ரவீந்தர் விஜயின் கழுத்தை பிடித்திருந்தான். ” ப்ளூடூத் மூலமா யார்கிட்ட பேசுற? யாரை கேட்டு கேமரா கொண்டு வந்திருக்க?”

விஜயின் மூச்சு திணறியது. ‘கேமரா, ப்ளூடூத் ஹெட்செட் இரண்டும் ரொம்ப சின்னது. ரவீந்தர் எப்படி இரண்டையும் சட்டுன்னு கண்டுபிடித்தான்.’ அவனுள் கேள்வி.

“நான் என் ஃபிரென்ட் கிட்ட தான் பேசினேன்” விஜய் சமாளிக்க முயற்சிக்க, “மொபைல் எடு, நான் பார்க்குறேன்” கேட்டுக்கொண்டே, ரவீந்தர் விஜயின் அலைபேசியை எடுத்தான்.

‘ஐயோ, மித்திலா…’ அவன் மனம் தன்னையும் மறந்து அவளை நினைத்து அச்சம் கொண்டது.

அதே நேரம் மித்திலாவின் மனமோ, ‘விஜய்… விஜய்…’ என்று துடிக்க ஆரம்பித்தது.

‘நான் தான் அவனை மாட்ட வச்சிட்டேனோ?’ அவள் மனம் குற்றம் உணர்ச்சியில் தவிக்க, அறிவோ, ‘விஜயின் உயிருக்கு ஆபத்து. அடுத்த பலி நீ தான்.’ என்று எச்சரிக்க ஆரம்பித்தது.

அலுவலக அறையில், ரவீந்தர் விஜயின் கழுத்தை நெருக்கி அவனை சுவரோடு அலேக்காக தூக்கி இருந்தான். விஜயின் விழிகள் பிதுங்கி, நாக்கு வெளியே தள்ள ஆரம்பித்தது.

தொடரும்…