நினைவே நிசப்தமாய் 2
நிஷா, பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தது என்னவோ சில நொடிகள் தான்.
விறுவிறுவென்று அந்த இடத்தை காலி செய்தாள். அங்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது போன்ற உணர்வு. அருண் ஓட்டிய கார் சாவியை எடுத்தாள். இப்பொழுது நிஷா காரை சாலையில் செலுத்த ஆரம்பித்தாள்.
அருகே இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்றாள்.
அவள் கண்கள் அருணை தேடியது. அங்கு அருண் இல்லை. நிஷிவாவின் இதயம் அதன் துடிப்பை அதிகரித்து கொண்டது.
அருணை பற்றி அவள் அங்கு விசாரிக்க, அங்கிருந்த காவல் துறையினரோ, அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல், அவளை மேலும் கீழும் பார்த்தனர்.
நிஷாவிற்கு குழப்பம் மேலிட்டது. அவளுக்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை.
“வேற ஸ்டேஷன்னுக்கு என் ஹஸ்பண்டை கூட்டிட்டு போயிருக்காங்களானு கேளுங்க சார்.” அவள் கெஞ்சினாள்.
அங்கு இருந்த காவல் அதிகாரி நிஷாவின் மேல் இரக்கம் கொண்டு விசாரிக்க ஆரம்பித்தார்.
அந்த இடம் நிஷாவுக்கு அசௌகரியமாக இருந்தது. அங்கிருந்த சிலரின் பார்வை அவள் உடலை சில்லிட செய்தது.
“அப்படி எதுவும் இல்லை. அருண் என்று யாரும் இல்லை” காவல் துறை அதிகாரியின் குரல் நேர் கோடாக ஒலித்தது.
நிஷா மீண்டும் மீண்டும் பல கேள்விகளை தொடுத்தாள்.
அவளை சித்த பிரமை பிடித்தவள் போல் அனைவரும் பார்க்க, வேறு வழியின்றி வெளியே வந்து தன் காரை சாலையில் செலுத்தினாள்.
அவர்கள் பார்வைக்கு ஏற்ப, ‘உண்மையில் சித்த பிரமை பிடித்துவிடுமோ?’ என்ற அச்சம் அவளுள் எழுந்தது.
எப்படி காரை செலுத்தி கொண்டிருக்கிறாள், என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால், நிஷா காரை செலுத்தினாள்.
மணி இரவு ஒன்பதை எட்டி இருந்தது. நிஷா வீட்டிற்கு வந்தாள்.
‘யார் கிட்ட உதவி கேட்பேன்? அருண் வீட்டிலேயும் யாரும் உதவ மாட்டாங்க. என் வீட்டிலையும் உதவ மாட்டாங்க. நான் என்ன செய்வேன்?’ அவள் கண்களில் கண்ணீர்.
அதே நேரம்,
மித்திலா ஒரு இருட்டு அறையில் தன் கைகால்களை அசைக்க ஆரம்பித்தாள். அவளால் அத்தனை தூரம் அசைக்க முடியவில்லை.
அவள் கண்கள் கட்டப்பட்டிருந்தது. தன் உடையை எண்ணி பார்த்தாள். ‘நீச்சல் உடை தான்.’ அவள் மனம் அசை போட்டு கொண்டது.
‘ஆனால், அத்தனை ஆபாசமாக இருக்காது. தோள் முதல், கால் பகுதிக்கு மேல் வரை மறைத்திருக்கும்.’ தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
‘இப்படி நீச்சல் குளத்தில் ஆபத்து வருமுன்னு நான் நினைக்கலை’ அவள் சிந்தனை ஓட ஆரம்பித்தது.
‘யார் என்னை கடத்தி இருப்பாங்க? அந்த அருணா? அவனை நல்லவன்னு தானே சொன்னாங்க.’ அவள் தன் கைகளை அசைக்க ஆரம்பித்தாள்.
‘நான் அங்க வந்தது அருணுக்கு மட்டும் தானே தெரியும். இல்லை, அருண் யார்கிட்டயாவது சொல்லி அவங்க என்னை கடத்தி இருப்பாங்களா?’ அவள் சிந்தனையை தடை செய்வது போல், “டொக்… டொக்…” என்ற காலடி ஓசை கேட்டது.
“யாரு?” அவள் குரலில் அழுத்தம்.
“ஏன், யாருன்னு சொன்னா என்ன பண்ணுவ?” ஓர் ஆண் குரல்.
அவளிடம் அமைதி. அவள் கண்கள் கட்டப்பட்டிருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை. கைகளும், கால்களும் பிணைக்கப்பட்டிருந்தது என்பதை மெல்ல உணர்வு வரவர புரிந்து கொண்டாள்.
ஏதோ ஒன்று அவளை தீண்ட, அவள் உடல் சிலிர்த்தது. நிச்சயம் அவன் கரங்கள் இல்லை. அவன் ஒரு அடியேனும் தள்ளி நிற்பதை அவள் உள்ளுணர்வு கூறியது.
ஆனால், ஏதோ ஒன்று அவள் தேகத்தை மெல்ல மெல்ல தீண்டுவது போல் உணர்ந்தாள். அவள் முகத்தில் ஆரம்பித்த தீண்டல், அவள் தோள்வளைவுக்குள் செல்ல, “ஏய்…” அவள் கர்ஜித்தாள்.
“வாயை மூடு” அவள் கழுத்து பகுதியை அழுத்தியபடி மீண்டும் கர்ஜனை.
வலியில் கண்களை இறுக மூடினாள் மித்திலா.
அந்த தீண்டல் மெல்ல மெல்ல இறங்கி, அவள் இடையை தொடுகையில் சட்டென்று நின்றது.
“ம்..ச்…” மித்திலா எரிச்சலை வெளிப்படுத்தினாள்.
இடையில் ஓர் அழுத்தம், “ஹா.. ஹா…” பெருங்குரலில் சிரித்தான் அவன். சிரித்து முடித்த அவன், “பளார்…” என்று அவன் கன்னத்தில் அறைந்தான்.
“உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை.” அவன் குரலில் நக்கல்.
“கண்ணை திறந்துட்டு பேசு. அதுக்கு தைரியம் இல்லை.” அவள் குரலிலும் அவனுக்கு நிகராக நக்கல்.
“யாரை பார்த்து பயமுன்னு சொல்ற?” அவன் அவள் கை, கால்கள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டு, கண்கட்டையும் வேகமாக இழுக்க சுருண்டு விழுந்தாள் மித்திலா.
எழுந்து கொள்ளும் பொழுதே, அவனை கணக்கிடட ஆரம்பித்தாள்.
“என்னை பார்த்துட்டா, நான் யாருன்னு தெரிஞ்சிருமா?” அவன் குரலில் ஏளனம்.
குட்டையான கேசம், சிக்கென்ற உடை , வடிவான எழில் தோற்றம், வட்ட முகம், சிவந்த மேனி, அவன் கண்கள் அவளை அளவிட்டு கொண்டிருக்க அவள் தன்னை நிதானித்து கொண்டாள்.
அவளிடமிருந்து சற்று இடைவெளிவிட்டு தான் நின்று கொண்டிருந்தான். அவள் கண்கள், அவன் கைகள் நோக்கி சென்றது.
‘சிப் டிடெக்டர். இதை வச்சி தான் என்னை தொட்டிருக்கான்’ அவளுள் மெல்லிய நிம்மதி.
‘இவன் யார்? எனக்கு அருணை கூட தெரியாது. இன்னைக்கு தான் பார்க்கணும்னு நினச்சேன். இந்த குரல் அருண் குரல் மாதிரி இல்லை. ஆனால், அவனிடமும் ஒரு முறை தான் பேசியிருக்கேன்’ அவள் எண்ணவோட்டம் சற்று வேகமாக தான் இருந்தது.
“என்ன யோசிச்சி முடிச்சிட்டியா? நான் யார்?” அவன் குரல் அக்கறை போல் ஏளனம்.
“கண்டுபிடிக்க என்ன இருக்கு. ஒரு பொண்ணை கடத்திட்டு வந்த நீ அயோக்கியன் தான்” அவள் குரலில் ஏளனம்.
“ஏய்” அவன் அவள் கழுத்தை சுவரோடு நெருக்கினான்.
அவள் முகத்தில் புன்னகை.
“பார்த்து… என்னை கொன்னுடாத. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் தான் உனக்கு நல்லது. நான் செத்துட்டா, நீ செய்யுற அத்தனை அயோக்கியத்தனமும் ஊருலகம் எல்லாம் பரவிடும்.” பரிதாபம் போல் அவளிடம் ஏளனம்.
சரேலென்று என்று அவன் கைகளை விட அவள் தரையில் விழுந்தாள்.
அவள் எழுந்து சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள். அவன் வேகமாக நாற்காலியை அவள் முன் இழுத்து போட்டு கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
“இடுப்பில் சேலையை கட்டாம, சிப் வச்சிக்கிட்டு வந்தா நீ என்ன பெரிய…” வார்த்தைகளை முடிக்காமல் அவன் நறநறத்தான்.
“அதை எடுத்து வெளிய போட எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?” அவன் கோணலாக சிரிக்க, அவனிடம் சொடக்கிட்டாள் அவள்.
“எடுடா, அயோக்கிய ராஸ்கல். எடுத்த மறுநிமிஷம் என் உயிர் போகும். உன் லட்சணம் தெருத்தெருவா நாறும்” அவள் கண்களில் வெற்றியின் கொக்கரிப்பு.
‘இவ என்னத்த செஞ்சி தொலைச்சிருக்கானு தெரியலியே.’ அவன் சற்று நிதானித்தான்.
“நான் பொண்ணு, சமயலறையில் கடுகு தாளிக்குறவன்னு நினைச்சியா? உன்னை தாளிச்சிருவேன். ஜாக்கிரதை.” அவன் மௌனத்தில் அவள் அவனை மிரட்டி பார்த்தாள்.
“ஏய்… ரொம்ப பேசாத. உன்னை என்னால் என்ன வேணா பண்ண முடியும். ஆனால், என் தொழில் அதில்லை. தப்பு பண்ணி என் வாழ்க்கையை நான் முடிச்சிக்க மாட்டேன்.”
“கெட்டவன். கேடு கெட்டவன் இல்லைன்னு சொல்றியா?”
அவள் பேச்சில் அவனுக்கு சுவாரசியம் பிறந்தது. அவள் அழகு அவனை அவள் பக்கம் இழுத்தது.
“பத்திரமா வெளிய போகணுமுன்னா இப்படி பேசாதா” என்று கூறிவிட்டு, அவன் கொண்டு வந்த உடையை அவள் மேல் தூக்கி எறிந்துவிட்டு சென்றான் அவன்.
படபடவென்று உடையை மாற்ற ஆரம்பித்தாள் மித்திலா.
‘இவனுக்கு என்னை கொலை செய்யும் எண்ணமில்லை. அப்படின்னா நான் எதையோ கண்டுபிடிச்சிருக்கேன்னு கண்டுபிடிச்சிட்டான்.’
‘இப்ப என்னை என்ன செய்ய போறான்?’
‘நான் இங்க இருந்து எப்படி தப்பிக்க? இந்த இருட்டில் வெளிய ஒண்ணுமே தெரியாது.’
‘என்ன செய்யலாம்?’
அந்த அறைக்குள் அவள் எண்ண அடுக்கில் அடுக்கடுக்கான கேள்விகள்.
அறைக்கு வெளியே, அவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
‘மித்திலாவுக்கு என்ன தெரியும்?’
‘சிப்பை இடுப்பில் வச்சிக்கிட்டு இருக்கா. அவ இருக்கும் ரூமில் அது டீஅக்டிவேட் ஆகியிருக்கும். இருந்தாலும், வேற யாருக்கும் தகவல் கொடுப்பாளோ?’
‘இவளை என் வழியில் சரிகட்டுறது அவ்வளவு கஷ்டமில்லை. ஆனால், இவளுக்கு பின்னாடி நிறைய பேர் இருக்காங்களோ? இல்லைனா இவ்வளவு தைரியமா இருக்க மாட்டா’ அவன் அறிவு எச்சரித்தது.
‘விட்டு பிடிப்போம். என் ஸ்டைலில்.’ அவன் குறுநகையோடு நகர்ந்துவிட்டான்.
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மித்திலா. சேலைக்கு மாறி இருந்தாள்.
ஜன்னலை திறக்க முயன்றாள். இருளில், காற்று வேகமாக வீசியது. கருமேகம் பிசாசு போல் கரிய உருவத்தோடு நகர்ந்தது.
பரந்து விரிந்த மரங்கள் கோரமாக ஆடியது. ஒவ்வொன்றும் ராட்ச்ச மரங்கள் போல் காட்சி அளித்தன. அதிலிருந்து இரு கண்கள் இவளை உற்று பார்ப்பது போல் இருந்தன. ஆந்தையின் சத்தம் அந்த இருளை பீறிட்டு கொண்டு வந்தது.
சுற்று புறத்தில் வீடுகள் எதுவுமில்லை. சுற்றிலும் காடு என்பதை புரிந்து கொண்டாள்.
‘காடுக்கு இடையில் என்னை அடைத்து வைத்திருக்கிறானா?’ கண்களை வெளியே மீண்டும் சுழல விட்டாள்.
கும் இருட்டு. இருட்டு மட்டுமே. வீசிய காற்று அவள் தேகத்தை தீண்டியது. அது காற்று என்பதை விட மரண அபாயம் போல் உணர்ந்தாள் அவள்.
மெல்ல கைகளை நீட்டி, ஜன்னலை மூட எத்தனிக்கையில் அவள் கழுத்தில் வெப்பமான காற்று பரவ, அவள் திரும்பினாள்.
கோரமான கண்கள், அகோரமான பற்கள் பதிக்கப்பட்ட பழஉருவம் கொண்ட முகமூடி இருக்க, “அப்ப்பா…” என்று அலறினாள் அவள்.
அவன் தான் மீண்டும். முகமூடியை விலக்கினான்.
“என்ன பயந்துட்டியா?” அவன் குரலில் உல்லாசம்.
“இல்லை ரொம்ப பேசுனியா, உன் பயத்தின் அளவை பார்க்கலாமுன்னு பார்த்தேன்” அவள் கன்னம் தொட அவன் எத்தனிக்க, அவனிடம் மீண்டும் புன்னகை.
அவள் இதய துடிப்பு இப்பொழுது பன்மடங்கு எகிறியது.
‘இவன் யார்? எதற்காக என்னை இங்கு வைத்திருக்கிறான்?’ அவளுள் குழப்பம். அறையில் நிசப்தம்… நிசப்தம்… நிசப்தம் மட்டுமே!
தொடரும்…