NIRAL MOZHI -17.1

நேரம் 12:05, நல் கேர் இடத்தில்!

உயிருக்குப் பயந்து, ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு… அந்த வீட்டிற்குள், அங்கேயும் இங்கேயும் ஓடி… ஓடி… மிலா களைத்துக் கொண்டிருந்தாள்.

ஏன்?

கட்டுக் கடங்காத கோபத்தில், கணினியைத் தூக்கி சுவரில் எறிந்தவன்… மனிதத்தன்மையே இல்லாமல் மிலா மற்றும் ஜெர்ரியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் செய்கையில் பயந்தவள், ஜெர்ரியைத் தோளில் போட்டுக் கொண்டு, இறுக்கமாக அணைத்தபடி எழுந்து நின்றாள்.

‘ஏன் இப்படிச் செய்கிறான்?’ என்று மிலாவிற்குப் புரியவேயில்லை.

அடுத்த நொடி… மேசையிலிருந்த விசைப் பலகையைத் தூக்கி, அவர்கள் இருவரின் மேல் எறிந்தான்.

எதிர்பார்க்கவில்லை! மிலா, எதிர்பார்க்கவில்லை!!

எனவே, திரும்பி நிற்க மட்டும்தான் முடிந்தது. அதுவும், ஜெர்ரியின் மேல் படாமல் இருப்பதற்காக!!

விசைப்பலகை வந்த வேகத்திற்கு, அவளது தோள்பட்டையின் மேல் விழுந்து… பின் தரையில் விழுந்து உடைந்து சிதறியது.

வலி! அப்படியொரு வலி! கை, உடல் இரண்டும் வலியில் நடுங்கியது!!

‘ஏன் இந்தத் தாக்குதல்? இதிலிருந்து எப்படித் தப்பிக்க?’ என்று தெரியாமல், மிலாவிற்கு அழுகை வந்தது.

அடுத்தடுத்து வந்த நொடிகளில்…

அளவுகடந்த கோபத்தில்… நல் கேர், தன் பொறுமை மற்றும் நிதானத்தை இழந்தான். இப்படித்தான் எறிய வேண்டும் என்ற வரையறை இல்லாமல், இஷ்டத்திற்கு எறிய ஆரம்பித்தான்.

தண்ணீர் பாட்டில்கள்… காஃபி கோப்பைகள்… இப்படிக் கைக்கு கிடைக்கும் பொருட்களையெல்லாம் எடுத்து எறிந்து கொண்டிருந்தான்.

அவனின் இந்தத் தாக்குதலில் இருந்து, தப்பிக்க வேண்டியே… வீட்டின் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு மிலா ஓடிக் கொண்டிருந்தாள்.

மேலும், ஓடி… ஓடிக் களைத்துக் கொண்டிருந்தாள்.

எறிந்த பொருட்கள் சில, அவளின் மேல் பட்டுக் காயத்தை உண்டாக்கின.

கன்னத்தில் ஆழமான கீறல்… முழங்கையில் ஒரு வெட்டு… தோள்பட்டைக் காயம்… இவையெல்லாம் சேர்ந்து அவளைத் தடுமாறச்  செய்தன.

மேலும், அவளைப் பலவீனப் படுத்தும் விடயங்கள் நிரம்ப இருந்தன.

அவளுக்குள் இருந்த பயம்!

ஜெர்ரியின் அழுகை!!

இரண்டு நாட்களாக, சாப்பிடாமல் இருப்பதினால் ஏற்பட்ட சோர்வு!!

ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு ஓடும் அளவிற்கு, உடலில் தெம்பில்லை!

ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் ஓட முடியவில்லை! அவ்வளவுதான் நின்றுவிட்டாள்!!

அவள் நின்றதைக் கண்டதும், ‘என்னிடமிருந்து நீ தப்பிக்கவே முடியாது?’ என்ற குரூர திருப்தியுடன், நல் கேர்… அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சென்னை சாலையில்…

நாள் கணக்கு, நேரக் கணக்கு என்பதெல்லாம் போய், இனி ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்றானது!!

ஒருபுறம்… முரளி விரைவாக வந்து கொண்டிருந்தார்.

மற்றொரு புறம்… ‘ மிலா மற்றும் ஜெர்ரி, என்ன நிலையில் இருக்கிறார்களோ?’ என்ற பதற்றத்தில், நிகில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தான்.

நல் கேர் வீட்டின் வெளியே… இந்த நொடியில்!

காலையில் ஆணையர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பில், அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தனர்.

அதன்படி, சிறப்பு பிரிவு காவலர்கள் வந்திருந்தனர்.

மேலும், என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதியின் ஆய்வாளருக்குக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனவே, அப்பகுதி காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் வந்திருந்தனர்.

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைத் துரிதமாகக் காவலர்கள் செய்ய ஆரம்பித்தனர்.

அடுத்தடுத்து வந்த நொடிகளில்…

அந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும், சற்று நேரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்!

அந்தத் தெருவிலிருந்து வெளியேறிச் செல்ல இருக்கும் வழிகள் அனைத்திலும், சிறப்பு பிரிவு காவலர்கள் நிறுத்தப்பப்பட்டனர்!

கொஞ்சம் குறுகலான தெரு என்பதால்… அங்கே நின்று கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அகற்றப்பட்டு, போலீஸ் வேன் மற்றும் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

மேலும், மற்ற எந்த வாகனங்களும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

அடுத்த நொடியில்…

நல் கேர் வீட்டைச் சுற்றி, சில காவலர்கள் நிறுத்தப்பட்டனர். அவனிடம் துப்பாக்கி இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாது. எனவே அனைத்துக் காவலர்களும் கேடயம் ஏந்திக் கொண்டு நின்றனர்!

மொத்தம் இரண்டு தளங்கள் கொண்ட வீடு அது! மேல்தளம் மற்றும் கீழ்தளம்! வீட்டைச் சுற்றி கொஞ்சம் இடம் இருந்தது! அதைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது!!

வீட்டின் கீழ்தளத்தில் ஆட்கள் யாரும் வசிக்கவில்லை என்பதை, அருகிலிருந்தவர்களிடம் விசாரித்த போது தெரிந்து கொண்டார்கள்!

எனினும், நான்கு காவலர்கள் கீழ் தளம் முழுவதையும் சன்னல் வழியாகச் சோதனை செய்து, அதை உறுதி படுத்திக் கொண்டனர்.

இனி மேல்தளம்! நல் கேரின் இடம்!!

மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு சிறப்பு காவலர்கள்! நால்வரின் கைகளிலும் துப்பாக்கி வைத்திருந்தனர்!! 

மேலும், நால்வரும் ‘கான்பிரன்ஸ் காலில்’ இணைந்திருந்தனர். ஏதேனும் தேவை என்றால், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு!!

நால்வரும், மேல் தளத்திற்குள் செல்லத் தயாராயினர்.

இந்த நொடியில்…

முரளியும், துணை ஆணையரும் ஜீப்பில் வந்து இறங்கினர்.

வந்தவுடன், அங்கு நின்றுகொண்டிருந்த அப்பகுதி காவல் ஆய்வாளரிடம்… துணை ஆணையர் நடப்பதைக் கேட்டறிந்து கொண்டார்.

முரளி ஒரு ஓரமாக நின்று கொண்டார். அக்கணம், கைப்பேசியில்  நிகில் அழைத்தான்.

‘என்ன?’ என்று முரளி கேட்டதற்கு, ‘ஆட்டோவை அனுமதிக்கவில்லை’ என்று சொன்னான். பின், முரளி அங்கிருந்த காவலர்களிடம் பேசி, அவனை மட்டும் உள்ளே அனுமதிக்கச் சொன்னார்.

ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்து வந்து, நல் கேர் வீட்டின் அருகே இருந்த சுற்றுச் சுவர் பக்கமாக நின்று கொண்டான்.

அந்த வீட்டைப் பார்த்தான். உள்ளேதான், மிலா மற்றும் ஜெர்ரி இருக்கிறார்கள் என்று தெரியும்.

ஆனாலும், ‘தான் எதுவும் செய்ய முடியாது. அதாவது, செய்யக் கூடாது. மீறிச் செய்தால், அது கடமையைச் செய்ப்பவர்களின் குறுக்கே நிற்பது போல் ஆகிவிடும்’ என்று மூளைக்குப் புரிந்தது.

இருந்தும், ‘எதையாவது செய்து உள்ளே சென்று, அவர்களைக் கூட்டிக்கொண்டு வர முடியாதா?’ என்று மனம் துடித்தது.

இதுவரை, அவன் மூளை ஓடிய ஓட்டத்திற்கு இணையாக… இந்தக் கணத்தில், அவன் மனம் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால், மூளை அடையாத களைப்பையும், சோர்வையும்… மனம் அடைந்து கொண்டிருந்தது!

வீட்டின் உள்ளே… இந்த நொடியில்!

நடப்பதையெல்லாம் பார்த்து, பயந்து போய் மிலாவின் தோள்களில் ஒரு நிலையில் இருக்காமல் ஜெர்ரி திமிறிக் கொண்டிருந்தான். அவனைச் சாமளிக்க முடியாமல், மிலா தடுமாறினாள்.

நல் கேர் கோபத்தைக் கண்டு, அரண்டு போய் நின்று கொண்டிருந்தாள்.

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது! உடல் முழுவதும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. மேலும், ஓடியபொழுது ஏற்பட்ட காயங்கள்! அதன் வலிகள்!!

அந்த நொடியில், அவளுக்கு ஒன்று புரிந்தது. அது! இனி ஓடிச் சமாளிக்க முடியாது என்று!!

எனவே, ‘தப்பிக்க வேறேதும் வழியிருக்கா?’ என பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். மூச்சிரைத்தவாறே பார்வையைச் சுழல விட்டாள். அறையைச் சுற்றி வந்த அவளது பார்வை, ஒரு இடத்தில் நிலைத்து நின்றது.

நிலைத்து நின்ற இடம், அந்த வீட்டின் பால்கனி இருக்கும் அறை!!

தப்பித்து வெளியே செல்லத்தான் முடியாது. அந்தப் பால்கனியில் நின்று, உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டால் என்ன? என்று மிலாவிற்குத் தோன்றியது. அந்த நொடி, மனம் தைரியம் கொண்டது.

ஆனால், அடுத்த நொடியே… உதவிக்கு ஆட்களை அழைக்கும் வரை, ‘இவன் சும்மா இருப்பானா?’ என்ற கேள்வி வந்ததும், மனம் தளர்ந்தது.

இல்லை! தளரக் கூடாது. உடல் தளர்ந்தாலும்… மனம் தளரக் கூடாது! இருவரும் தப்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், ஜெர்ரியையாவது இவனிடமிருந்து காப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

பால்கனி அறையைப் பார்த்துக் கொண்டே… இப்படி யோசித்து முடித்திருந்தாள்.

நான்கு நொடிகள் கடந்திருந்தன!

அதே நான்கு நொடிகள்… அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நல் கேர், அவள் பார்வை நின்ற இடத்தைப் பார்த்தான். ‘என்ன யோசிக்கிறாள்?’ என்று புரிந்தது.

ஐந்தாவது நொடியில்!

அறையின் ஒரு ஓரத்தில் இருந்து, ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு… பால்கனி இருக்கும் அறை நோக்கி, மிலா ஓடிச் சென்றாள்.

அதே நொடியில், அறையின் மற்றொரு ஓரத்தில் இருந்து… நல் கேர் ஓடி வந்தான்.

ஓடி வந்த வேகத்தில், அறையின் உள்ளே நுழைந்த மிலா… அடுத்த நொடியே ஜெர்ரியை கிழே இறக்கிவிட்டாள். பின், பட்டென்று கதவை அடைக்கும் போது… நல் கேர் வந்து கதவைப் பிடித்துக் கொண்டான்.

‘ஐயோ’ என்று இருந்தது மிலாவிற்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!