NIRAL MOZHI -18.1

NIRAL MOZHI -18.1

மருத்துவமனை

ஆம்புலன்ஸ்-ல் வரும் பொழுதே, மிலா மற்றும் ஜெர்ரிக்கு முதலுதவிகள் கொடுக்கப்பட்டிருந்தன.

மருத்துவமனை வந்த பின்னர்… நிகில், ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு, குழந்தைகள் பிரிவிற்குச் சென்றான். மிலா, பெரியவர்கள் பிரிவிற்குக் கூட்டிச் செல்லப்பட்டாள்.

ஜெர்ரிநிகில்

மருத்துவர் பரிசோதிக்க ஆரம்பித்ததும், ஜெர்ரி அழ ஆரம்பித்தான்.  நிகிலின் சட்டையைப் பிடித்து கொண்டு, அவனோடு இறுக்கமாக ஒட்டிக் கொண்டான்.

பயம்! இன்னும் கொஞ்ச நாள், அது இருக்கத்தான் செய்யும்!! ஜெர்ரிக்கு மட்டுமல்ல, மிலாவுக்கும்தான்!

அடுத்த இரண்டு நிமிடங்களில், மருத்துவர் பரிசோதித்து முடித்திருந்தார்.

“சிவியர் டீஹைடிரேஷன் ஆகியிருக்கு. அதான், அழும் போதுகூட கண்ணீர் வரலை. ஐஸ் அன்ட் லிப்ஸ் ரொம்ப ட்ரை-யா இருக்கு” என்றார்.

‘என்ன செய்ய?’ என்பது போல் நிகில் மருத்துவரைப் பார்த்தான்.

“ஓரல் ரீ-ஹைட்ரேஷன் இஸ் நாட் இனஃப். ஐவி ரீ-ஹைட்ரேஷன் போயிடலாம்” என்று சொன்னார்.

 ஐவி ரீ-ஹைட்ரேஷன்-க்காக, அடுத்தடுத்து மருத்துவர் செய்த காரியங்களில், ஜெர்ரியின் அழுகை அதிகரிக்கத்தான் செய்தது.

எல்லாம் முடிந்து மருத்துவரும் செவிலியரும் சென்ற பின், சற்று நேரம் ஜெர்ரியின் அருகில் நிகில் அமர்ந்திருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக ஜெர்ரியின் அழுகை குறைந்தது.

அடுத்து சில வினாடிகளில்… நிகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்க, ஜெர்ரி தூங்க ஆரம்பித்திருந்தான்.

அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற பின், அங்கே பணியில் இருந்த செவிலியரிடம், தன் நிலையைக் கூறி… ஒரு அரை மணி நேரம் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு… மிலாவைப் பார்க்கச் சென்றான்.

நிகில்-மிலா

முதலில் மருத்துவரைப் பார்த்து பேசிவிட்டு… பின், மிலாவின் அறைக்கு வந்தான். அவள் அருகில் அமர்ந்து கொண்டு, ‘மிலா’ என்று இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தான். கண் திறக்கவே இல்லை. மயக்கத்தில் இருந்தாள்.

நெற்றியில் இருந்த காயங்களுக்குத் தையல் போடப்பட்டிருந்தது. கன்னத்தின் காயத்திற்கு மருந்து இடப்பட்டிருந்தது. கை முட்டியில் ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. அவளுக்கும் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. 

மேலும், தோள்பட்டைக் காயத்திற்கு ‘ஸ்கேன்’ எடுத்துப் பார்த்திருந்தனர். லேசான தோள்பட்டை எலும்பு முறிவு இருப்பதாக ஸ்கேன் முடிவு வந்திருந்தது.

எனவே, மூன்று வாரங்களுக்கு ‘ஸ்லிங்’ உபயோகிக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.

சற்று நேரம் இருந்தான். பின், ஜெர்ரியின் அறைக்குச் சென்றான். இப்படியே, இங்கேயும் அங்கேயும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான்.

நேரம் கடந்தது.  இரவு வந்தது.

டெல்லியிலிருந்து வந்துவிட்டார்கள். விமான நிலையத்திலிருந்து நேரே மருத்துவமனைக்கே வரச் சொல்லியிருந்தான், நிகில்.

‘ஏன்? எதற்கு?’ என்று காரணம் எதுவும் நிகில் சொல்லவில்லை. இருந்தும், அந்த இரவில் அனைவரும் மருத்துவமனை வந்துவிட்டார்கள்.

அவர்கள் வரும் போது, நிகில் ஜெர்ரியின் அறையில் இருந்தான்.

அறையின் உள்ளே நுழைந்து… ஜெர்ரியின் நிலையைப் பார்த்ததுமே, பாமினியும் திலகமும் அதிர்ந்து அழுதுவிட்டனர்.

“என்னாச்சு நிகில்? உனக்குத்தான அடி பட்டிருக்குன்னு சொன்ன? இது எப்படி??” என்று ஆஷா கோபமும் வருத்தமும் கலந்த குரலில் கேட்டாள்.

“அண்ணி” என்று ஆரம்பித்து, அவர்களுக்கு நடந்ததைச் சொன்னான். மேலும், “போலீஸ் கண்டுபிடிச்சப்புறம், உங்களையெல்லாம் கூப்பிடலாம்னு நினைச்சேன்” என்று, தன் செயலுக்குக் காரணம் சொன்னான்.

“தப்பு நிகில்! நீ சொல்லியிருக்கனும்” என்று கோபப்பட்ட மீரா, “பாரு, எப்படி இருக்கன்னு?” என்று, நிகிலின் ஓய்ந்து போன தோற்றத்தைப் பார்த்துக் கேட்டாள்.

நிகில் அமைதியாக இருந்தான். பாமினி ஒருமுறை மகனைப் பார்த்தார். இன்னும் கண்ணீர் அதிகமானது.

அடுத்த நொடியே, “நிகில், மிலா எங்கடா?” என்று ஆஷா ‘அவளுக்கும் அடிபட்டிருக்கா?’ என்ற சந்தேகக் குரலில் கேட்டாள்.

ஆஷா அப்படிக் கேட்டதும், திலகம் பயந்து போய் நிகிலைப் பார்த்தார்.

“அவளுக்கும் கொஞ்சம் அடிபட்டிருக்கு. வேற வார்டு-ல இருக்கா” என்று மெதுவாகச் சொன்னான்.

“ஐயோ” என்ற திலகம், “அவளை, இப்போ பார்க்க முடியுமா நிகில்?” என்று கேட்கும் போதே, அவர் குரல் தடுமாறியது.

“வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்” என்று நிகில் சொன்னதும், திலகம் எழுந்தார்.

ஜெர்ரியின் அருகிலிருந்து அழுது கொண்டிருந்த பாமினியைப் பார்த்து, “ம்மா” என்று அழைத்தான்.

பாமினி கலங்கிப் போய் இருந்தார். மகன், மருமகள் மற்றும் பேரனின் நிலை… மேலும் ஷில்பாவிற்கு ஏற்பட்ட முடிவு என்று அத்தனையையும் நினைத்துக் கலங்கிப் போயிருந்தார். ஆதலால், நிகிலின் அழைப்பை அவர் கவனிக்கவேயில்லை.

அம்மாவின் நிலை கண்ட நிகில், “அண்ணி” என்றான் ஆஷாவைப் பார்த்து!

“சொல்லு நிகில்?”

“நீங்க இங்கே பார்த்துக்கோங்க. நான் ஷில்பா விஷயமா வெளியே போகணும்” என்றான்.

அவன் ‘எதைச் சொல்கிறான்?’ என்று புரிந்தது. இருந்தும், “உன் அண்ணங்க நாளைக்கு காலைல வந்துருவாங்க நிகில். அவங்க வந்தப்புறம் போகலாமே?” என்று ஆஷா கேட்டாள்.

“இதுவே லேட் அண்ணி. இதுக்கு மேல லேட் பண்ண முடியது ” என்று நிகில் மறுத்துவிட்டான்.

“இந்த நேரத்தில போனா, ஹாஸ்ப்பிட்டல் பார்மாலிட்டீஸ் பார்க்க முடியுமா நிகில்??” என்று மீரா கேட்டாள்.

“அட்லீஸ்ட் அங்கே போய் இருக்கிறேனே அண்ணி. ஏர்லி மார்னிங் டாக்டர்ஸ் வந்ததுக்கு அப்புறமா… மத்த பார்மாலிட்டீஸ் பார்த்துக்கிறேன்” என்றான். 

“இல்லை நிகில்…” என்று ஆஷா தொடங்கும் போது…

“ஆஷா! அவன் போகட்டும். நீ, அவனுக்குத் துணைக்குப் போ. நான், மீரா, திலகம்… இங்கே பார்த்துப்போம்” என்றார், அதுவரை கலங்கிப் போயிருந்த பாமினி!

“ம்மா நீங்க?” என்று நிகில் கேள்வியாகக் கேட்டான்.

‘அந்த அளவிற்கு தைரியம் எனக்கில்லை’ என்பது போல் கையசைத்தார். பின், ஷில்பாவை நினைத்து அழ ஆரம்பித்தார்.

அவர் அழுவதைக் கண்டு, நிகிலும் கண் கலங்கினான். ஏற்கனவே திலகம், மிலாவை எண்ணி அழுது கொண்டிருந்தார்.

மொத்தத்தில் யாரும் யாரையும் சமாதானப் படுத்தும் நிலையில் இல்லை. எனவே நிசப்தம் மட்டும்தான்.

இரண்டு நிமிடங்களில், ஆஷா நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

முதலில்… நிகிலைப் பார்த்து, “நிகில், நீ அம்மாவை மிலாகிட்ட கூட்டிட்டுப் போ. நான், ஒரு ரெண்டு நிமிஷம் அத்தைகிட்ட பேசிட்டு வர்றேன்” என்றாள்.

‘ம்ம்’ என்று தலையசைத்தவன்… திலகத்தைக் கூட்டிக் கொண்டு, மிலாவின் அறைக்குச் சென்றான்.

அவர்கள் சென்றதும்,

அடுத்து மீராவைப் பார்த்து, “நீ கேப் அரேஞ் பண்ணு மீரா” என்று சொல்லிவிட்டு, பாமினி அருகே வந்து ஆஷா அமர்ந்தாள்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தார்.

“அழாதீங்க. இப்படியே அழுது, திரும்பவும் உடம்பு சரியில்லைன்னா, அவனுக்குத்தான் கஷ்டம்” என்றாள்.

‘சரி, அழலை’ என்பது போல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

பின், மீரா வந்ததும், அவளைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு… மிலா இருக்கும் அறைக்கு ஆஷா சென்றாள்.

அங்கே…

திலகம் அழுதுகொண்டிருந்தார்.

அவருக்கு நிகில் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான். ஆஷா வந்ததும், சற்று நேரம் திலகத்துடன் இருந்துவிட்டு… நிகிலுடன் சேர்ந்து கிளம்பினாள்.

முதலில் வீட்டிற்குச் சென்று, காவல் நிலையத்திலிருந்து கொடுக்கப்பட்டச் சான்றுகளை எடுத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.

அரசு மருத்துவமனை

ஷில்பாவின் உடலை வாங்குவதற்காக… ஆஷா, நிகில் வந்திருந்தனர். முதலில் மருத்துவர் வருவதற்காகக் காத்திருந்தனர். பின், மருத்துவமனை நடைமுறைகள் எல்லாம் முடிக்க வேண்டும் எனக் காத்திருந்தனர். 

இவர்கள் காத்துக் கொண்டு இருக்கையில், நிகிலின் அண்ணன்கள் வந்துவிட்டனர். அதன் பின், அவர்கள் இருவரும் அனைத்தையும் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆஷா, நிகிலின் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

நிகில் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து, “என்னாச்சு நிகில்?” என்று கேட்டாள்.

‘ஒன்னுமில்லை’ என்று தலையாட்டியவன், கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.  நிகில், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தான். கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.

“அழாத” என்று சொல்லி, அவன் கைகளில் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

“கஷ்டமா இருக்கு அண்ணி. ஷில்பா… ஷில்பாக்கு இப்படி… ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே அழுதான்.

சிறிது நேரம் அழட்டும், அதுதான் அவன் மனதிற்கு நல்லது என்று விட்டுவிட்டாள்.

சற்று நேரத்திற்குப் பின், கண்ணீர் கொஞ்சம் மட்டுப்பட்டது. தண்ணீர் தந்தாள். குடித்துக் கொண்டான்.

இன்னும் சங்கடமாகத்தான் இருந்தது. சகஜ நிலைக்கு வரவில்லை என்றாலும், சமநிலைக்கு வந்திருந்தான்.

நடைமுறைகள் முடிந்து, நிகில் கையெழுத்திட்டு ஷில்பாவின் உடலைப் பெற்றுக் கொண்டான்.

பின், நால்வரும் சென்று முறையாக ஷில்பாவின் உடலைத் தகனம் செய்தனர்.

அதன் பிறகு, நேரே வீட்டிற்குச் சென்றுவிட்டனர். ‘மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு உணவு சமைக்க வேண்டும்’ என்று ஆஷா வீட்டில் இருந்து கொண்டாள்.

நிகிலிற்கு… காலை உணவு, அதன் பின் எடுக்கவேண்டிய மருந்துகள் கொடுத்து, அவன் பெரிய அண்ணனுடன் மருத்துவமனை அனுப்பி வைத்தாள்.

அன்று மட்டுமல்ல, அதன்பின் வந்த நாட்களிலும்… ஆஷாவும் மீராவும்தான் வீடு, சமையல் என அனைத்தையும் பார்த்துக் கொண்டனர். நிகிலின் அண்ணன்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்தார்கள்.

நிகிலும், திலகமும்… மிலாவைப் பார்த்துக் கொண்டனர். பாமினி… ஜெர்ரி மற்றும் மீராவின் மகளைப் பார்த்துக் கொண்டார்.

ஆறு நாட்கள், இப்படியே நகர்ந்தது.

மிலாவை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கூட்டி வந்தார்கள்.

ஏழாவது நாளில்

இரவு உணவு முடிந்ததும், அனைவரும் வீட்டிற்குள் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். நிகில், ஜெர்ரி… இருவரும் வீட்டின் வெளியே காரிடோரில் நடந்து கொண்டிருந்தனர்.

அக்கணம், நிகிலிற்கு முரளியிடம் இருந்து அழைப்பு வந்தது. அவனே நினைத்துக் கொண்டிருந்தான், ‘என்ன நடக்கிறது?’ என்று கேட்டறிய! ஆனால், அவரே அழைத்துவிட்டார்.

இதுவரை, வழக்கு விடயமாக நிறைய நடந்திருந்தது.

மற்ற மாநிலங்களில் நடைபெற்ற மால்வேர் அட்டாக்கிற்கு காரணமான, போட்டி நிறுவனங்கள் மீது விசாரணை தொடங்கியிருந்தது.

மேலும், முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிறுவனங்களைப் பிற டென்டர் எடுக்க முடியாத வண்ணம், அரசாங்கம் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

‘டார்க் வெப் ஏஜென்ட்’ முறையாக கைது செய்யப்பட்டு, ஆந்திரமாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

பரோடாவில் மட்டுமல்ல, டெல்லி மற்றும் மும்பையில் நடைபெற்ற முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் பற்றிய விசாரணைகள் ஆரம்பித்திருந்தன.

இதற்கு முன் தடை செய்யப்பட்டிருந்த நிறுவனங்களின் தடைகளை நீக்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகின்றது.

மேலும், காவல்துறை விசாரணையில்… ‘நிகிலை அடித்த அடியாட்கள் எங்கிருக்கிறார்கள்?’ என்று நல் கேர் சொன்னதை வைத்து… அந்த அடியாட்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதெல்லாம், நாளிதழ்களில் வந்த செய்திகளின் மூலம் நிகில் அறிந்துகொண்டான்.

எனினும், முரளியிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான்! இதோ அவரே அழைத்துவிட்டார்!!

ஜெர்ரியை விளையாடச் சொல்லிவிட்டு… அழைப்பை ஏற்று, “சொல்லுங்க முரளி. என்ன விஷயம்?” என்றான்.

“நம்ம டிபார்ட்மென்ட் சார்பா, அவனை இன்வெஸ்டிகேட் பண்ணியாச்சு நிகில்”

“ஓ” என்றவன், “என்ன சொன்னான்?” என்று கேட்டதும்,

முரளி, சைபர் கிரைம் யூனிட்டில் நடந்த நிகழ்வுகளை நிகிலிடம் சொல்ல ஆரம்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!