நள்ளிரவு 12 மணி பெஷன்ட் நகர் வீதி முழுவதும் அமைதியில் உறைந்து போய் இருந்தது.

 அந்த அமைதியை கலைக்கும் முகமாக திடீரென்று 

“நானே வருவேன்…..இங்கும் அங்கும்….” என்ற பாடல் உயர் சத்தத்தில் ஒலிக்க வேகமாக நடந்து கொண்டிருந்த சரோஜா கால்கள் பின்ன சட்டென்று நின்றாள்.

 அச்சத்தோடு சுற்றிலும் சரோஜா தேடிப் பார்க்க அங்கு யாருமே இல்லை. 

ஆனால் அந்த பாடல் மட்டும் நிற்காமல் ஒலித்துக் கொண்டிருந்தது. 

“இந்த நேரத்தில் யாரு இந்த பாட்டை போட்டிருப்பா?? அய்யோ இந்த ஏரியால இன்னைக்குனு பார்த்து யாரையும் காணோமே….எங்க இருந்து இந்த பாட்டு வருது…..??” என்றவாறு சரோஜா தன் பார்வையை சுழல விட அப்போது தான் அவளுடைய கைப்பையில் இருந்து அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதை சரோஜா கண்டு கொண்டாள். 

அவசரமாக தன் கைப்பையினுள் இருந்த போனை எடுத்துப் பார்த்த சரோஜா அதில் அலாரத்திற்காக அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக அந்த பாடலை ஆஃப் செய்தாள். 

“கண்டிப்பாக இந்த வேலையை அந்த தடிமாடு கணேஷ் தான் செய்திருப்பான்….அவனை வீட்டுக்கு போய் கவனிச்சுக்குறேன்….தடிமாடு…தடிமாடு….” என்று திட்டிக் கொண்டே மேலும் வேகமாக நடக்கத் தொடங்கினாள் சரோஜா. 

அப்போது அவளது போன் திடீரென்று ரிங்க் ஆக தூக்கி வாரிப் போட பயத்தோடு நின்ற சரோஜா 

“இந்த ராத்திரி நேரத்தில் தானா எனக்கு கால் வரணும்?? என்னைப் பயம் காட்டுறதுக்குனே இப்படி எல்லாம் நடக்குதோ தெரியல….” என்று கோபத்தோடு முணுமுணுத்துக் கொண்டே போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தாள்.

 “ஹலோ யாரு???” என்று சரோஜா கேட்க மறுமுனை வெகு அமைதியாக இருந்தது. 

காதில் இருந்த போனை எடுத்து ஒருதரம் பார்த்துக் கொண்டவள் திரையில் அன்னவுன் பெயர் வரவும் குழப்பத்துடன் மீண்டும் போனை தன் காதில் வைத்தாள்.

 “ஹலோ யாருங்க இது?? போன் பண்ணிட்டு ஷைலண்டா இருக்கீங்க??” என்று சற்று கோபத்தோடு கேட்கவும்

 மறுமுனையில்

 “அக்கா…..” என்று ஹீனமான குரல் ஒன்று ஒலித்தது.

 “கணேஷ்….” என்று அதிர்ச்சியாக முணுமுணுத்தவள் 

“டேய் கணேஷ் என்னடா ஆச்சு???” என்று பதட்டமாக கேட்டாள். 

“அக்கா….அக்கா….வீட்டுக்குள்ள யாரோ வந்துருக்காங்கக்கா….எனக்கு பயமா இருக்குக்கா…சீக்கிரம் வாக்கா…அக்கா….அக்கா…..” என்று கணேஷ் கூறவும்

 “டேய் கணேஷ் விளையாடதடா….எனக்கு பயமா இருக்கு….கணேஷ் உண்மையை சொல்லுடா….” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே போன் சட்டென்று கட் ஆனது. 

“அய்யோ நான் இப்போ என்ன பண்ணுவேன்…அவசரத்திற்கு ஒரு ஆட்டோ கூட காணோமே….” என்று பதட்டமாக கூறிக் கொண்ட சரோஜா ஓட்டம் பாதி, நடை பாதியாக தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.

 ஏதோ ஒன்று வித்தியாசமாக தோன்றவும் திரும்பிப் பார்த்த சரோஜா அப்போது தான் அந்த பகுதியில் தெரிந்த வித்தியாசத்தை கண்டு கொண்டாள். 

அவளது வீட்டில் மாத்திரமே ஒரே ஒரு லைட் எரிந்து கொண்டிருக்க மற்ற பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது. 

“இந்த நேரத்தில் பவர் கட்டா?? ஆனா நம்ம வீட்டில் லைட் எரியுதே எப்பிடி???” என்று யோசித்துக் கொண்டே சரோஜா வீட்டுக் கதவில் தட்டுவதற்காக கை வைக்க கதவு தானாக திறந்து கொண்டது. 

“என்ன இன்னைக்கு எல்லாம் ஒரே மர்மமாக நடக்குது??” என்று யோசித்துக் கொண்டே சரோஜா வீட்டினுள் கால் வைக்க வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த அந்த ஒரு லைட்டும் ஆஃப் ஆனது.

 “முருகா….” என்று தன் கண்களை இறுக மூடிக் கொண்ட சரோஜா தன் கையில் இருந்த தன் கைப்பையை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள்.

 மூடிய கண்களை திறவாமலேயே “கணேஷ்….” என்று சரோஜா அழைக்க எந்த பதிலும் வரவில்லை. 

மெல்ல தன் கண் திறந்து பார்தத் சரோஜா தன் போனை எடுத்து அதில் டார்ச்சை ஆன் செய்தாள். 

அந்தோ பரிதாபம் போனில் பேட்டரி ஐந்து வீதமே இருந்தது.

 “காலையில் யார் முகத்தில் முழிச்சேனோ தெரியல…இன்னைக்கு எல்லாம் எனக்கு எதிராகவே நடக்குது…ஈவ்னிங் ஆபீஸ் முடிய லேட் ஆச்சு…ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர்றதுக்கு ஆட்டோ, பஸ் எதுவும் கிடைக்கல….வீட்டுக்கு வந்தா இங்க இப்படி இல்லாம் நடக்குது…..இதுல இந்த கணேஷ் வேற….டேய் கணேஷ் எங்கடா இருக்க??” என்றவாறு விட்டால் அழுதுவிடுவேன் என்ற நிலையில் வீட்டைச் சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டு நின்றாள் சரோஜா.

 அப்போது வீட்டின் மூலையில் இருந்த ஒரு அறையில் இருந்து

 “அக்கா….” என்ற சத்தம் வரவும் வேகமாக அந்த அறையை நோக்கி ஓடிச் சென்றாள் சரோஜா.

 ஓடிச் சென்ற வேகத்தில் எதிரில் இருந்த டீபாயில் சரோஜா இடித்துக் கொள்ள அவளது கையில் இருந்த போன் நழுவிச் சென்று மூலையில் சென்று விழுந்து ஆஃப் ஆனது. 

“அம்மா….” என்றவாறே தன் அடிபட்ட காலை பிடித்து தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற சரோஜா மூலையில் சென்று விழுந்த தன் போனை மறுகையினால் அள்ளி எடுத்தாள்.

 கவலை ஒரு புறம், அச்சம் ஒரு புறம், ஆற்றாமை ஒரு புறம் என கண்கள் கலங்க தன் போனை வெறித்துப் பார்த்த சரோஜா கால் வலி தாங்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு மெல்ல மெல்ல சத்தம் வந்த அந்த அறையை நோக்கி சென்றாள்.

 “கணேஷ்….” னெ;று மெல்லிய குரலில் சரோஜா அழைக்க

 “அக்கா…..” என்று அறையின் மூலையில் இருந்து சத்தம் வந்தத.

 கையில் இருந்த போனை சிரமப்பட்டு பொருத்தி எடுத்த சரோஜா அதில் டார்ச்சை ஆன் செய்தாள். 

இறுதியாக உயிர் பிரியும் தறுவாயில் உயிர் தொண்டைக்குழிக்குள் நிற்பது போல சரோஜாவின் போன் மங்கலாக அதன் வெளிச்சத்தை அந்த அறை முழுவதும் பரப்பியது. 

மங்கலான அந்த வெளிச்சத்தில் அந்த அறையை பார்வையிட்டவள் அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். 

அறைக் கதவைத் தாண்டி ஐந்து அடி தூரத்தில் இரத்த வெள்ளத்தில் கணேஷ் வீழ்ந்து கிடந்தான். 

“கணேஷ்…..” என்று அலறலோடு இரண்டே எட்டில் அவனை நெருங்கிய சரோஜா

 “டேய் என்னடா ஆச்சு உனக்கு?? யாருடா உன்ன இப்படி பண்ணா?? கணேஷ் விளையாடதடா….கணேஷ்….கணேஷ் இங்க பாருடா….உனக்கு எதுவும் ஆகாதுடா….அம்மா….அம்மா…யாராவது வாங்களேன்……ப்ளீஸ்” என்று சத்தமிட அந்த சத்தம் மீண்டும் அவளுக்கே எதிரொலித்ததே தவிர வேறு எந்த மாற்றமும் அங்கு நடக்கவில்லை. 

“அக்கா….உன் பின்னாடி…..” என்றவாறே கணேஷ் மயக்கமடைய சரோஜாவிற்கு அவன் சொன்ன வார்த்தைகளை உள் வாங்கவே ஒரு சில கணங்கள் தேவைப்பட்டது. 

பயத்தில் முகமெல்லாம் வேர்வைத் துளிகள் பூக்க அச்சத்தோடு மெல்ல தன் பின்னால் சரோஜா திரும்பிப் பார்த்தாள். 

கையில் நீண்ட கத்தியில் இரத்தம் சொட்டச் சொட்ட முகத்தை மறைத்த வண்ணம் நெடிய நபர் ஒருவர் சரோஜாவை நெருங்கி வர சரோஜாவிற்கு சப்த நாடிகளும் ஒடுங்கிப் போனது. 

தன் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் 

“நீ யாரு???” என்று சரோஜா கேட்கவும் 

கூர்மையாக அவளைப் பார்த்த அந்த நபர் ஒரே பாய்ச்சலில் கத்தியோடு அவள் மேல் பாய

 “அம்மா……” என்ற அலறலோடு கணேஷின் மேல் வீழ்ந்தாள் சரோஜா. 

“அய்யோ…அம்மா…..காலங்கார்த்தாலேயே என்னைக் கொல்லுறாலே…..என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா???” என்று கணேஷ் ஒருபுறம் சத்தமிட 

மறுபுறம் சரோஜா “கொலை…கொலை….காப்பாற்றுங்க…காப்பாற்றுங்க….” என்று கணேஷின் மேல் வீழ்ந்து கத்திக் கொண்டிருந்தாள்.

 “அடடா…..காலையிலேயே உங்க கூத்தை ஆரம்பிச்சுட்டீங்களா???” என்றவாறே வந்த சரோஜா மற்றும் கணேஷின் அன்னை வித்யா அவர்கள் இருவரும் இருந்த நிலையைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டார். 

“ஏய் சரோஜா….எதுக்கு டி இந்த கத்து கத்துற….எய் சரோஜா எந்திரி….எந்திரி….” என்று சரோஜாவை எழுப்ப வித்யா படாதபாடு பட வித்யாவின் சத்தத்தில் சரோஜா மெல்ல தன் கண் திறந்து பார்த்தாள்.

தன் கீழே இருந்த கணேஷை ஆச்சரியமாகப் பார்த்த சரோஜா 

“டேய் கணேஷ் நீ இன்னும் சாகலயா??” என்று கேட்க 

அவளை முறைத்துப் பார்த்த கணேஷ் 

“காலங்கார்த்தாலேயே என்ன கேள்வி கேட்குறானு பாருமா இவள….” என்று குற்றம் சாட்ட அப்போது தான் சரோஜா தான் இத்தனை நேரம் கண்டது கனவு என்பதை உணர்ந்தாள். 

“என்ன சரோஜா இதெல்லாம்???” என்று வித்யா கேட்கவும் 

அவரைப் பார்த்து வாய் விட்டு சிரித்த சரோஜா தான் கண்ட கனவை விவரித்துக் கூறத் தொடங்கினாள். 

சரோஜா கனவை கூறி முடிக்கவும் அவளை தன் மேல் இருந்து தள்ளி விட்ட கணேஷ் 

“உன் கனவுல நீ சாகறுதுல லாஜிக் இருக்கு….செவனேனு இருக்குற என்னை எதுக்கு சாவடிக்குற??? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டன்…” என்று கோபமாக கூறவும் 

அவன் தலையை கலைத்து விட்ட சரோஜா 

“ஆனாலும் எனக்கு அப்போவே ஒரு டவுட்டா…நீ என்ன வார்த்தைக்கு வார்த்தை அக்கா அக்கானு கூப்பிட்ட….அப்போவே எனக்கு லைட்டா தோணுச்சு….இவன் நம்மள இவ்வளவு மரியாதையா பேசமாட்டானேனு….ஆனா இப்போ தான் புரியுது…கனவுல மட்டும் தான் நமக்கு மரியாதைனு…..” என்று போலியாக வருத்தப்படுவது போல கூறவும் அவர்கள் இருவரையும் வித்யா முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றார்.

தற்செயலாக வித்யாவின் புறம் திரும்பிய கணேஷ் அவரின் கோபமான முகத்தைப் பார்த்து விட்டு மெதுவாக அந்த இடத்தை விட்டு நழுவிச் செல்ல சரோஜா மாத்திரம் தான் கண்ட கனவை எண்ணி சிர்த்துக் கொண்டு இருந்தாள். 

சிரித்துக் கொண்டிருந்த சரோஜாவின் தலையில் தட்டிய வித்யா 

“ஏழு கழுதை வயசாகுது இன்னும் சின்னப் பசங்க மாதிரியே நடந்துட்டு இருக்க…..ராத்திரி நேரத்தில் கண்ட கண்ட பேய் படமும், பேய் கதைப் புத்தகமுமா படிக்க வேண்டியது காலையில இப்படி காட்டுக் கத்து கத்த வேண்டியது….அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க வீட்டுல ஏதும் பிரச்சினையானு கேட்குறாங்க….உன் கூட தினம் இதே வேலையாப் போச்சு….இந்த லட்சணத்துல டிடெக்டிவ்ல வேலை வேற….” என்று திட்டிக் கொண்டிருக்க சரோஜாவோ வாகாக கட்டிலில் சாய்ந்து விட்ட தன் உறக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள். 

சரோஜாவிடமிடருந்து எந்த பதிலும் வராமல் போகவே அவளைத் திரும்பி பார்த்த வித்யா

“இவ திருந்த மாட்டா….” என்று விட்டு அறையை விட்டு வெளியேறிச் சென்றார்.

வித்யா சென்றதும் ஓரக் கண்ணால் அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சரோஜா சிரித்துக் கொண்டே குளியளறைக்குள் நுழைந்து கொண்டாள். 

சரோஜா 25 வயது நிரம்பிய துடுக்குத் தனம் நிறைந்த பெண். எந்தளவிற்கு துடுக்குத் தனம் உள்ளதோ அதே அளவிற்கு அவளிற்கு இருட்டு, தனிமை என்றால் பயம். 

வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும் தினமும் வித்யாவின் தையை பிடித்துக் கொண்டே இரவில் தூங்கச் செல்வாள்.

சராசரியான பெண்களின் உயரத்தை விட சற்று உயரமான சரோஜா மாநிறத்தில் பார்ப்பதற்கு களையாக இருப்பாள். சரோஜாவின் தந்தை ஈஸ்வர் சரோஜாவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போதே ஆக்ஸிடெண்ட் ஒன்றில் இறந்து விட இரண்டு வயது கைக் குழந்தையாக இருந்த கணேஷ் மற்றும், சரோஜாவோடு தனியாளாக நின்ற வித்யா தையல் வேலை செய்து தன் குழந்தைகள் இருவரையும் படிக்க வைத்து ஆளாக்கி இருக்கிறார். 

கணேஷ் ஷாப்ட்வேயார் கம்பனி ஒன்றில் பணி புரிந்து வர சரோஜா பிரைவெட் டிடெக்டிவ் ஒன்றில் பணி புரிந்து வருகிறாள். சிறு வயது முதலே துப்பறியும் வேலைகளில் ஆர்வம் கொண்டிருந்த சரோஜா க்ரைம் கம்பந்தமான கோர்ஸ் ஒன்றை முடித்து விட்டு வெகு சிரமப்பட்டு இந்த வேலையில் சேர்ந்திருந்தாள். தன் பயத்தினால் இந்த வேலை போய் விடக் கூடாது என்பதற்காக இது நாள் வரை தன் பலவீனத்தைப் பற்றி மற்றவர்களுக்கு காட்டிக் கொள்ளாமல் வெகு சாதுர்யமாக சமாளித்துக் கொண்டு இருக்கிறாள் சரோஜா.

குளித்து முடித்து விட்டு தனக்கு பிடித்த லாவண்டர் நிற சுடிதாரை அணிந்தவள் நேராக பூஜையறைக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு டைனிங் டேபிளை நோக்கி சென்றாள். 

சரோஜா டைனிங் டேபிளை நோக்கி வருவதைப் பார்த்ததும் தன் போனை எடுத்த கணேஷ் சென்னை 28 பட “சரோஜா சாமான் நிக்காலோ……” என்ற பாடலைப் போட அடுத்த நொடி சரோஜா பத்ரகாளியாக கணேஷின் முன்னால் வந்து நின்றாள்.

“என்ன அக்கா என்ன ஆச்சு???” என்று கணேஷ் பாவமாக கேட்கவும் 

அவன் கையில் இருந்த போனைப் பறித்த சரோஜா

“இன்னொரு வாட்டி இந்த பாட்டைப் போட்டேன்னு வை அப்புறம் பாட்டு போட போனும் இருக்காது…பாட்டு கேட்க காதும் இருக்காது…” என்று மிரட்டலாக கூறிக் கொண்டிருக்கையில் 

சமையலறையில் இருந்து வெளியே வந்த வித்யா 

“மறுபடியும் என்ன சத்தம்??” என்று கேட்கவும் சரோஜா சட்டென்று கணேஷிற்கு எதிரில் இருந்த கதிரையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

கணேஷ் சரோஜாவைப் பார்த்து கேலியாக சிரிக்கவம் அவனை முறைத்துப் பார்த்த சரோஜா “உன் சாவு என் கையில் தான்டா….” என்று சைகையில் கூறவும்

“அதையும் பார்த்துடலாம்…” என்ற கணேஷ் காப்பிட்டு விட்டு தன் ஆபீஸ் நோக்கிப் புறப்பட்டான். 

தன் பிளேட்டில் இருந்த உணவை வேக வேகமாக உண்டு முடித்த சரோஜா அவசரமாக கிளம்பி செல்வதைப் பார்த்த வித்யா “எதுக்கு இவ்வளவு அவசரமாக போகப் போற சரோஜா?? உனக்கு ஆபீஸ் 10 மணிக்கு தானே??” என்று கேட்டார். 

“இன்னைக்கு எங்க ஆபீஸோட எம்.டி பாரின்ல இருந்து வர்றாருமா…அதுதான் நேரத்துக்கு போறேன்….ஒரு வேளை எம்.டி யங் மேன்னா இருந்தா உனக்கு மாப்பிள்ளை பார்க்குற வேலை மிச்சம் ஆகுமே….: என்று கண்ணடித்துக் கூறவும் 

அவளது தலையில் தட்டிய வித்யா 

“எப்போ பாரு விளையாட்டு….” என்று செல்லமாக கடிந்து கொண்டார்.

“நீ அப்படி எல்லாம் பயப்படாதேமா….உன் பொண்ணு அப்படி எல்லாம் பண்ண மாட்டா….அதோட வரப் போறவரு 40 பிளஸ் தான்….” என்று வருத்தத்துடன் கூறுவது போல கூறவும்

அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்த வித்யா “கேடிப் பொண்ணு பத்திரமாகப் போயிட்டு வா….” என்று சரோஜாவை வழி அனுப்பி வைத்தார். 

தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சரோஜா 

“நைட் கனவுல நான் நடந்துலே வந்தேன்….என் ஸ்கூட்டி என்ன ஆகி இருக்கும்??” என்று யோசித்துப் பார்த்தவள்

“இப்போ இது ரொம்ப முக்கியம்…” என்று தன் தலையில் தட்டிக் கொண்டு தன் ஆபீஸ் நோக்கிப் புறப்பட்டாள். 

ஆபீஸ் சென்ற சரோஜா தன் பைக்கை பார்க் செய்து கொண்டிருக்கையில் “ஹாய் சரோ….” என்று தன் பின்னால் கேட்ட குரலில் சலித்துக் கொண்டு திரும்பிய சரோஜா முகத்தில் வேண்டா வெறுப்பாக வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு திரும்பிப் பார்த்து “ஹாய் நவீன்…” என்று கூறினாள்.

நவீன் சரோஜாவோடு ஒரே ஆபீஸில் பணி புரிபவன். அது மட்டுமின்றி எல்லாப் பெண்களுடனும் கதை அளந்து கொண்டு இருப்பவன். அதனால் என்னவோ சரோஜாவிற்கு நவீனைக் கண்டாலே பிடிக்காது. 

பிறர் மனதை காயப்படுத்திப் பழக்கம் இல்லாததால் சரோஜா நேரடியாக நவீனைத் தவிர்த்துக் கொள்ள முடியாமல் பொதுவாக பேசி விட்டு சென்று விடுவாள். 

இன்னும் சிறிது நேரம் நின்றால் நவீனிடம் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்தததனால் தன் போனை எடுத்து வேறு யாரிடமோ பேசுவது போல பேசிக் கொண்டே லிஃப்டினுள் நுழைந்த சரோஜா வேகமாக தன் கேபினை நோக்கிச் சென்றாள். 

வழக்கம் போல தன் வேலையில் மூழ்கிப் போய் இருந்த சரோஜா 

“ஹேய்….சரோஜா எம்.டி வந்துட்டாராம்…வா போகலாம்…” என்ற தன் சக தோழி கார்த்திகாவின் குரலில் நிமிர்ந்து பார்த்தாள். 

“எம்.டி வந்துட்டாரா???” என்றவாறே தன் முன்னால் இருந்த பைலை மூடி வைத்து விட்டு எழுந்த சரோஜா கார்த்திகாவோடு வரவேற்பறையை நோக்கிச் சென்றாள். 

நாற்பது வயது மதிக்கத்தக்க சற்று பருத்த உடலுடன் நடந்து வந்த புதிய நபரைப் பார்த்து எல்லோரும் சிநேகமாகப் புன்னகைக்க பதிலுக்கு எல்லோரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டவர் எல்லோர் முன்னிலையிலும் வந்து நின்றார். 

“எல்லோருக்கும் வணக்கம்….என்னை இற்க இருக்குற நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்காது…என்னோட பெயர் ராஜஷேகர்….இந்த எம்.ஆர் டிடெக்டிவோட எம்டி…. இந்த கம்பெனியை என் பிரெண்ட் தனபால்கிட்ட பொறுப்பு கொடுத்துட்டு நான் வேற ஒரு இன்வெஸ்டிகேஸன் வேலையா பாரின் போயிட்டேன்…இப்போ அகைன் இந்த கம்பெனியை பொறுப்பு எடுக்கலாம்னு இருக்கேன்…அது மட்டுமில்லாமல் எம்ப்ளாயிஸ் எல்லாம் அகைன் செக் பண்ணி ரீ ஜாயின் பண்ணுறதா முடிவெடுத்து இருக்கோம்….நாளைக்கு ஸார்ப்பா எட்டு மணிக்கு இந்த வேலை ஸ்டார்ட் ஆகும்…..ஷோ ஆல் தி பெஸ்ட் பார் எவ்ரி வன்….” என்று விட்டு ராஜஷேகர் சென்று விட அனைவரும் உள்ளே சென்ற ராஜஷேகரையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றனர்.

“வந்த முதல் நாள்லே நம்ம வேலைக்கு இந்த ஆள் ஆப்பு வைச்சுடுவார் போல இருக்கே….” என்று கார்த்திகா வருத்தத்துடன் கூறவும்

அவள் தோளில் கை போட்டுக் கொண்ட சரோஜா

“கூல் டவுன் மா….இதுக்கே இவ்வளவு டென்ஷன் ஆனா எப்படி??? வேணா இப்படி பண்ணலாம்…..நம்ம நாளைக்கு அவருக்கே இன்டர்வியூ வச்சிடுவோம்….என்ன ஓகேவா???” என்று கேட்கவும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்ட கார்த்திகா அதன் பிறகு அவள் வேலைகளில் மூழ்கிப் போக சரோஜாவும் அவள் வேலைகளில் மூழ்கிப் போனாள்………

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!