NK1

NK1

நிலவொன்று கண்டேனே 1

‘மலேஷியா எயார்லைன்ஸ் 190′ பேரிரைச்சலோடு சர்ரென்று ரன்வேயில் வந்து இறங்கியது. காப்டனின் அறிவிப்பைத் தொடர்ந்து, பயணிகள் ஆரவாரமாக ஃப்ளைட்டை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

யுகேந்திரன் அமைதியாக அமர்ந்திருந்தான். ஆரவாரத்திற்கும், அவனுக்கும் வெகு தூரம். ‘எதற்கு இந்த மனிதர்கள் இப்படி முட்டி மோதுகிறார்கள்?’ என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. கிட்டத்தட்ட முப்பதை நெருங்கிய தோற்றம். ஆறடி இரண்டங்குலத்திற்கு ஏற்ற எழுபது கிலோ வெயிட். ஹோம் ஜிம்மில் முறுக்கேறிய உடம்பு.

இவன் அமைதியைப் பார்த்து, எயார் ஹோஸ்ட்டஸ் புன்னகைத்தாள். அமைதியாகப் பதிலுக்குப் புன்னகைத்தவன், தன் பையை எடுத்துக்கொண்டு இறங்கினான். இப்போது கொஞ்சம் இடம் கிடைத்தது. வாசலில் நின்று வாழ்த்தியவர்களுக்கு, எப்போதும் போல இப்போதும் ஒரு வசீகரப் புன்னகை.

ஒற்றைப் பையை லேசாக உருட்டிக் கொண்டு வெளியே வந்தவன், ஃபோர்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்துக் கொண்டு சற்று உட்கார்ந்தான். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று விமானங்கள் தரை இறங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இத்தனை கூட்டம் சாத்தியமில்லை.

கோயம்புத்தூர் விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது. மக்களின் சுறுசுறுப்பைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தவன், ஆரவாரம் சற்று அடங்கியதும் வெளியே வந்தான்.

அம்மா கட்டாயம் வந்திருப்பார் என்று தெரியும்.

அப்பா எப்போதும் பிஸி என்பதால், சிறுவயது முதல் எல்லாவற்றிற்கும் அம்மா தான். ஆனாலும், அப்பாவைக் குறை எல்லாம் சொல்ல முடியாது. பையன் மேல் உயிரையே வைத்திருந்தார்.

பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ‘பழையாறு’ தான், யுகேந்திரனின் சொந்த ஊர். ஊரின் பெயருக்கு ஏற்றாற் போல, அவன் தாத்தா ‘சத்தியமூர்த்தி’ ஒரு தமிழ்ப் பண்டிதர்.

தமிழில் இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், ஊருக்குப் பொருத்தமாக, தன் ஒற்றை மகளுக்கு ‘வானதி’ என்று பெயர் வைத்திருந்தார்.

அப்பா ‘அன்பரசு’ அந்தத் தொகுதியின் MLA. யுகேந்திரன் பிறந்தது முதல், அப்பா அரசியலில் தான் இருக்கிறார். நிற்க நேரம் இல்லாமல், காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு அலையும் மனிதர்.

அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்தபோதும், ஒரு சாதாரண குடும்பத்தில் பெண் எடுத்திருந்தார் அன்பரசு. காரணம், வானதி கொள்ளை அழகு. ஜாடையில், பழைய நடிகை ‘வைஜெயந்தி மாலா’வைப் போல் இருப்பார். நல்ல களையான முகம். கொஞ்சம் அழுத்திப் பிடித்தால், சிவந்து போவார். அப்படியொரு நிறம்.

யுகேந்திரன் நிறத்திலும், தோற்றத்திலும் அம்மாவைக் கொண்டே பிறந்திருந்தான். ‘ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள்’ என்பார்களே, அப்படியொரு செழுமை அவனிடம். அவனைக் கடக்கும் பெண்களின் பார்வை, ஒரு நிமிடம் அவனை மொய்த்துத் தான் செல்லும்.

இன்டியன் ஃபாரெஸ்ட் சர்வீஸில், ‘கன்ஸர்வேட்டர்’ பதவியில் இருந்தான். இந்த நிலையை எட்டுவதற்குள், முப்பது நெருங்கி இருந்தது. பொள்ளாச்சியின் காடு சார்ந்த பகுதிகள், யுகேந்திரனுக்கு அத்துப்படி. அவன் உலகமே அதுதான்.

என்னதான் இன்றைய நாகரிகத்தில் மூழ்கி இருந்தாலும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும், யுகேந்திரன் அடிப்படையில் ஒரு பழமைவாதி.

ஆரம்ப காலத்தில் தாத்தாவின் தமிழைக் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ, தமிழ் மீது அத்தனை ஆர்வம். இன்றைக்கும், இவன் தமிழ்ப் புலமையைப் பார்த்து விட்டு, மேடைப் பேச்சுக்களுக்கு அழைப்பவர்களும் உண்டு.

நிதானமாக நடந்து வந்தவனின் தலையைக் கண்டதும், வானதி கையை ஆட்டினார். அதிகமாக ஒன்றும் இல்லை. ஒரு வாரம் மகனைப் பிரிந்திருந்த ஏக்கம், அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஹாய் யுகேந்திரா… ஒரு சுத்துப் பெருத்த மாதிரித் தெரியுது. ஃப்ரெண்ட்ஸோட செமையா ஜாலி பண்ணினயோ?” அம்மாவின் பேச்சில், சிரித்தான் மகன்.

இதுதான் வானதி. முப்பது வயது இளைஞனின் அம்மா என்று, சொல்ல முடியாது. பேச்சு, சிந்தனை எல்லாவற்றிலும், இன்றைய இளவட்டங்களுக்கு ஈடு கொடுக்க அவரால் முடியும்.

“ம்… அட்டகாசம். முதல் மூனு நாள் சிங்கப்பூர். அதுக்கப்புறம் கோச்ல எல்லாரும் மலேஷியா போனோம். ஒரு வாரம் போனதே தெரியலைம்மா.”

“கல்யாணம் நல்ல படியா நடந்துதாப்பா?”

“ஆமாம்மா, ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு வித்தியாசமான அனுபவம்.”

“வாவ்!” ஆச்சரியப் பட்டார் வானதி. யுகேந்திரனின் நண்பனுக்குத் திருமணம். ஆனால், அவன் இப்போது இருப்பது மலேஷியாவில்.

பேசியபடியே இருவரும் கார் பார்க்கிங்கிற்கு வந்திருந்தார்கள். வானதி ட்ரைவரை அழைத்து வந்திருந்தார். அந்த black Audi ஐ ஒரு தரம் தடவிக் கொடுத்தான் யுகேந்திரன்.

“ஆமா… அம்மாவை மிஸ் பண்ணலை. ஆனா காரை மட்டும் கொஞ்சு. அப்பிடி என்னதான் இருக்கோ, இந்தக் கார்ல?” அங்கலாய்த்த அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான் யுகேந்திரன்.

“அஞ்சு வருஷம், சிறுகச் சிறுகப் பணங்கட்டி வாங்கின என்னோட கார்மா. என்ன இவ்வளவு சுலபமாச் சொல்லிட்டே?”

“ஆமா… நீதான் மெச்சிக்கணும். உன் சம்பாத்தியத்துக்கு, இதை விட பெட்டராவே வாங்கலாம். ஆனா நீதான் கஞ்சப்பயலாச்சே.”

“நீங்க MLA பொண்டாட்டி. இப்பிடித்தான் பேசுவீங்க. நான் சாதாரண கவர்மென்ட் சர்வன்ட் மா. எதிர்காலத்தைப் பத்தியெல்லாம் யோசிக்கணும் இல்லை?”

“ஆஹா… ஆஹா… முதல்ல கல்யாணத்தைப் பண்ணுங்க சார். அதுக்கு அப்புறமா எதிர்கா…லத்தைப் பத்தி யோசிக்கலாம்.” நீட்டி முழக்கினார் வானதி.

இதுவரை அமைதியாகப் பார்த்திருந்த ட்ரைவர் முருகன், யுகேந்திரனுக்கு வணக்கம் வைத்தார். நம்பிக்கையான மனிதர். பத்து வருடங்களாக இவர்களிடம் வேலை பார்க்கிறார்.

“வணக்கம் தம்பி.”

“வணக்கம் அண்ணா. உங்க முதலாளி அம்மாவோட பேச்சைக் கேட்டீங்களா அண்ணா?”

“அம்மா சொல்லுறது சரிதானே தம்பி. ஒத்தைப் புள்ளை. ஒரு கல்யாணம் பண்ணிப் பாக்கணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்கும் தானே.” பேச்சு பேச்சாக இருக்க, கார் கிளம்பியது.

வழி நெடுகிலும் அம்மாவும், மகனும் சளசளவென்று பேசிக்கொண்டே வந்தார்கள்.

“அப்புறம், சிங்கப்பூர் எப்பிடி இருக்கு யுகேந்திரா?”

“அது இருக்கும்மா அம்சமா, எப்போவும் போல. என்ன க்ளீன், என்ன நேர்த்தி… அந்த மக்களையெல்லாம் எப்பிடிப் பாராட்டுறதுன்னே புரியலைமா.” ரசித்துச் சொன்னான் யுகேந்திரன்.

“ம்… நம்ம ஊர்லயும், இந்த ‘பெனால்ட்டி’ சிஸ்டத்தை கொண்டு வரணும்பா. அப்போ தான் எல்லாரும் திருந்துவாங்க.”

“நம்ம ஜனங்க, என்ன சிஸ்டத்தைக் கொண்டு வந்தாலும் திருந்த மாட்டாங்க.”

“அப்பிடிச் சொல்ல முடியாதுப்பா. இன்னைக்கு பொள்ளாச்சியே சும்மா அதிருதில்லை.” அம்மாவின் பேச்சில், ஆச்சரியமாகப் பார்த்தான் யுகேந்திரன்.

“அம்மா சொல்லுறது சரிதான் தம்பி. நீங்களே ஆச்சரியப் படுவீங்க. நம்ம மக்கள்தானா இதுன்னு?” முருகனும் பேச்சில் இணைந்து கொள்ள, இப்போது கார் பொள்ளாச்சியை நெருங்கியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. வீதிகள் கொஞ்சம் நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்று, எதிர்பார்த்திருந்தான் யுகேந்திரன். நிலைமை அதற்கு எதிர்மாறாக இருந்தது.

வாகனங்கள் வரிசை கட்டி நிற்க, மக்கள் கூட்டம், கூட்டமாக வீதியில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஏரியாவே ஆரவாரமாக இருந்தது.

“என்னம்மா நடக்குது இங்க?”

“அக்கடச் சூடு யுகேந்திரா.” அம்மா காட்டிய திசையில், திரும்பிப் பார்த்தான் யுகேந்திரன்.

ஒரு பெண் வேலையில் மும்முரமாக நின்று கொண்டிருந்தாள். அவள் தலைமையில், இளைஞர்கள் சிலர், திறந்திருந்த பாதாளச் சாக்கடைகளை மூடிக் கொண்டிருந்தார்கள். நெற்றியில் வழிந்த வியர்வையை, புறங்கையால் துடைத்து விட்டுக் கொண்டிருந்தாள். குர்த்தா, லெக்கின்… கூந்தலைத் தூக்கி உயரமாக ஒரு கொண்டை போட்டிருந்தாள்.

“யாரு தெரியுதா?”

“யாரும்மா?”

“நம்ம ஏரியா சப் கலெக்டர்.”

“வாட்?”

“ஹா… ஹா… இதுக்கே ஷாக் ஆனால் எப்படி மகனே? இன்னும் உனக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன குழந்தாய்!” நாடக பாணியில் பேசிய அம்மாவை, அவன் கவனத்தில் கொள்ளவில்லை. அவன் பார்வை அந்தப் பெண்ணிலேயே இருந்தது.

நல்ல வெடு வெடுவென்று வளர்ந்திருந்தாள். ஐந்தரை அடி இருப்பாளோ? வெயில் பட்டுப் பட்டு, அந்தச் சருமம் கறுத்திருந்தது. பெண்மைக்குரிய எந்த இலக்கணமும் இல்லாமல், அசால்ட்டாக ரோட்டில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா பண்ணுறாங்க?”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி, மூடாமக் கிடந்த பாதாள சாக்கடையில ஒரு பெரியவர் விழுந்துட்டாரு.”

“ம்…”

“மீடியா முழுதும் இது தான் பேச்சு. அரசியல் வாதிகள் இதையெல்லாம் என்னன்னு பாக்க மாட்டேங்குறாங்க. ஓட்டுக் கேக்குறப்போ வர்றதோட சரி. அதுக்கப்புறம், மாயமா மறைஞ்சு போறாங்கன்னு ஒரே ரகளை.”

“ம்…”

“அதுக்கு நம்ம ஹீரோயின், குடுத்தா பாரு ஒரு விளக்கம்…”

“ஹீரோயினா…?”

“ம்… நான் அந்தப் பொண்ணோட தீவிர ரசிகைப்பா.”

“இது எப்போ இருந்து?”

“நேத்துல இருந்து. கலெக்டரை நேத்து நம்ம ஊர் கோயில்ல பாத்தேன். ஆட்டோகிராஃப் வேற வாங்கினேன்.” பெருமையாகச் சொன்ன அம்மாவை, வாய் பிளந்து பார்த்தான் யுகேந்திரன்.

“ம்ப்ச்… அதை விட்டுட்டு நீ விஷயத்துக்கு வாப்பா.”

“சரி… சொல்லுங்க.”

“அடுத்த நாளே, பேப்பர்ல அதிரடிப் பேட்டி.”

“யாரு? இந்தம்மாவா?”

“என்ன? யுகேந்திரா… மரியாதை குறையுது?” காட்டமாகக் கேட்டார் வானதி.

“ஓ… சாரி சாரி. என்ன சொன்னாங்க கலெக்டர்?”

“நம்ம மக்களைச் சாடினாங்கப்பா. ஓட்டுப் போடும் போது சிந்திக்காம, உங்க தலைவனைத் தெரிவு செய்யுறீங்க. இப்போ வந்து அதைப் பண்ணலை, இதைப் பண்ணலைன்னு ஏன் புலம்புறீங்க? ஒவ்வொன்னுக்கும் உங்க தலைவன் வந்து நிக்க மாட்டான். உங்களுக்கு ஒரு தேவைன்னா, நீங்கதான் களத்துல இறங்கணும். சும்மா மத்தவங்களைக் குத்தம் சொல்லக் கூடாதுன்னு, செமையா ஒரு பேட்டி.”

“ஒரு வாரம் நாட்டுல இல்லை. அதுக்குள்ள இத்தனை ரண களமா?”

“பொண்ணு அதிரடி. சார்ஜ் எடுத்து ஒரு வாரத்துலேயே, ஊர் அமக்களப்படுது.”

“சிங்கப்பூர் போகும் போது நியூஸ்ல பாத்தேன். புதிய கலெக்டர் வர்றாங்கன்னு சொன்னாங்க. நான், ஏதோ வயசானவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன்.”

“நல்லா நினைச்சே போ. இவங்க மாதிரி யங்ஸ்டர்ஸ் தான், இப்போ நாட்டுக்குத் தேவை யுகேந்திரா.”

“ம்… அது உண்மைதான்.”

“சும்மா மெஸேஜ் குடுத்துட்டுப் போகலை. அதை செயல்லயும் காட்டுறாங்க. பேப்பர்ல பெரிய விளம்பரம். வர்ற ஞாயிற்றுக்கிழமை, பொள்ளாச்சி ஏரியா முழுக்க சிரமதானப் பணி. கலெக்டர் தலைமையில நடக்கப் போகுது. ஆர்வமுள்ளவங்க கலந்துக்கங்க, அப்பிடீன்னு.”

“ம்…”

“பாத்தேயில்லை… எப்பிடி ஏரியா களை கட்டுதுன்னு!”

“இருந்தாலும்… ஒரு பொண்ணு…”

“ஏய்! என்ன? பொண்ணு, கிண்ணுன்னு இழுக்கிற. ஏன்? பொண்ணுங்க இதெல்லாம் பண்ணினா ஏத்துக்க மாட்டீங்களா?”

“ஐயையோ! நான் அப்பிடிச் சொல்லலைம்மா. தாராளமா பண்ணட்டும்.” தன் மேல் எகிறிய அம்மாவுக்காக, தணிந்து போனான் யுகேந்திரன். இருந்தாலும் மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது.

பெண்மை என்றால், ஒரு நளினம், நாசூக்கு இதெல்லாம் இருக்க வேண்டும். இப்படித்தான் நினைப்பான் யுகேந்திரன். ‘இதென்ன? இந்தப் பெண் இப்படி நடு ரோட்டில், அதுவும் இந்தக் கொளுத்தும் வெயிலில் நிற்கிறது?’

ஏதோ, ஒரு அதிசயப் பிறவியைப் பார்ப்பதைப் போலவே அவன் கண்கள் அவளை நோட்டமிட்டது.

ஆனால், அவள் செய்ய நினைக்கும் மாற்றம், மெச்சத் தக்கதாக இருந்தது. ஒரு அரை மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, வீடு வந்து சேர்ந்திருந்தார்கள் அம்மாவும், மகனும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

‘ஹோ’ என்ற இரைச்சலோடு, பெண்கள் குழுவொன்று வாலிபால் ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆசிரமத்திற்குப் பின்னால் இருந்த மைதானத்தில், பெரிய ‘நெட்’ கட்டி, விளையாட்டு மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது.

நித்திலா விளையாட்டில் மும்முரமாக மூழ்கியிருந்தாள். அங்கிருந்த டீனேஜ்களுக்கு சளைக்காமல் இருந்தது அவள் ஆட்டம். இளம் கலெக்டர் கைக்குப் பந்து வந்த போதெல்லாம், எதிர் அணியினர் கொஞ்சம் திணறித் தான் போயினர்.

‘மேடம்’ இந்த வார்த்தைக்கே பழக்கப் பட்டிருந்தவள், ‘அக்கா’ என்ற அழைப்பில் சற்று பரவசமாக உணர்ந்தாள். விசில் சத்தத்தில் ஆட்டத்தை முடித்தவர்கள், கை குலுக்கி சிரித்துக் கொண்டனர்.

வியர்க்க, விறு விறுக்க ‘மதர் நான்ஸி’ இன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். புன்னகையே உருவாக அமர்ந்திருந்தார் மதர்.

“தான்க் யூ மை சைல்ட். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. கலெக்டர், அதுவும் எங்க ஆசிரமத்துக்கு. என்னால நம்பவே முடியலை.”

“இதுல என்ன மதர் இருக்கு? வெளிநாடுகள்ல எல்லாம், ப்ரைம் மினிஸ்டர் சாதாரணமா ட்ரெயின்ல பிரயாணம் பண்ணுறாங்க. மினிஸ்டர் எல்லாம் சைக்கிள்ல வேலைக்குப் போறாங்க. நம்ம நாட்டுல தான், என்னமோ இந்தப் பதவியில இருக்கிறவங்களை எல்லாம், தேவதூதன் மாதிரி ட்ரீட் பண்ணுறோம்.”

“சத்தியமான வார்த்தைம்மா.”

“விவசாயி, போஸ்ட் மேன், ப்ளம்பர் இது மாதிரி, கலெக்டரும் சாதாரண ஒரு தொழில். அவ்வளவுதான். உண்மையைச் சொன்னா, மத்தவங்க எல்லாம் அவங்கவங்க கடமையை ஒழுங்காச் செய்யுறாங்க…” மீதியை முடிக்காமல், மதரைப் பார்த்து விஷமமாகப் புன்னகைத்தாள் நித்திலா.

அவள் செய்கையில், வாய் விட்டுச் சிரித்தார் மதர். அவள் நெற்றியில் சிலுவை போட்டவர்,

“காட் ப்ளெஸ் யு மை சைல்ட். உன்னை, நீயே கேலி பண்ணிக்குறேயே நித்திலா.” என்றார்.

“மதர், உங்களுக்கு ஒன்னு தெரியுமா? தன்னைத் தானே கேலி பண்ணுறவங்க, ஆரோக்கியமான மனப்பாங்கு உள்ளவங்களாம்.”

“உன்னை நீயே கேலி பண்ணாட்டியும், உனக்கு ஆரோக்கியமான மனம்தான் நித்திலா. இங்க இருக்கிற பசங்களுக்கு நீ பெரிய முன்னுதாரணம். உன்னோட பெறுமதியான நேரத்துல, கொஞ்சத்தை இங்க செலவு பண்ணுறதுக்காக, நான் உனக்கு ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன்மா.”

“ஐயோ மதர்! நீங்க வேற… ஆக்ஷூவலா, இங்க வர்றதால எனர்ஜியை ஏத்திக்கிறது நான்தான். நான் வளர்ந்ததும், இது மாதிரி ஒரு சூழல்ல தானே. இங்க இருக்கிறவங்களோட உணர்வுகளை, என்னால புரிஞ்சுக்க முடியும்.” புன்னகையோடு கூறியவள், மதரிடம் விடை பெற்றுக் கொண்டாள்.

தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணியவள், நேராக வீடு வந்தாள். கூர்க்கா கேட்டைத் திறந்து விட, அவரைப் பார்த்துப் புன்னகைத்தவாறே உள்ளே நுழைந்தாள் நித்திலா.

நேரம் மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. சமையலுக்கு இருக்கும் அம்மாவையே, இரவில் துணைக்கும் வைத்துக் கொள்வாள். சமையலறையிலிருந்து வாசம் வந்தது.

லேசாக உள்ளே எட்டிப் பார்த்தாள். பங்கஜம் அம்மா சமையலில் படு மும்முரமாக இருந்தார்.

“பங்கஜம் அம்மா…”

“சொல்லுங்கம்மா.” இவள் குரலில் திரும்பியவர், அவசமாகக் கைகளைப் புடவைத் தலைப்பில் துடைத்தார்.

“இன்னும் ஒரு அவர்ல சாப்பிடுறேன். நீங்க நிதானமா ரெடி பண்ணுங்க.”

“சரிம்மா.”

தனது ரூமிற்குள் போன நித்திலா, நன்றாக ஒரு குளியல் போட்டாள். இன்று முழுவதும் வெயிலில் நின்றதால், கச கசவென்றிருந்தது.

குளியலை முடித்துக் கொண்டு ஒரு நைட்டியை அணிந்தவள், ஹாலிற்கு வந்தாள். இந்த ஒரு வார காலமாக, புதிய இடம், புதிய வீடு, புதிய மனிதர்கள் என, எல்லாம் புதிது.

ஹாலிற்கு முன்பாக இருந்த அந்தச் சிறிய இடத்தில், தோட்டம் போல நான்கைந்து செடிகள் இருந்தது. புதிதாக இன்னும் கொஞ்சம் செடிகள் நடவேண்டும் என, மனதுக்குள் திட்டம் போட்டுக் கொண்டாள்.

நித்திலா IAS.

அவள் பெயருக்குப் பின்னால் இருக்கும் மூன்றெழுத்தை அடைய, அவள் நிறையவே போராட வேண்டி இருந்தது. திறமைகள் இருந்த போதும், போராட்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அவள் வளர்ந்தது ஒரு அனாதை இல்லத்தில்.

தாய், தகப்பன், குலம், கோத்திரம் எதுவும் தெரியாது. சொந்தம் என்று சொல்லிக் கொள்ள, ஒரு ஈ, காக்கா கிடையாது. அவள் வளர்ந்த இல்லம் தான், அவள் உலகம். அங்கிருந்தவர்கள்தான், அவள் சொந்த பந்தம்.

இவளின் கல்விப் புலமையைக் கண்ட அந்த இல்லத்தின் மதர், அவளை வெகுவாக ஊக்குவித்தார். அந்த வகையில் அவள் பாக்கியசாலி.

தட்டுத் தடுமாறி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கைப்பற்றி, இந்த நிலையை அடைந்த போது, வயது இருபத்தியெட்டு.

தனிக்கட்டை என்பதால், எங்கு மாற்றல் கிடைத்தாலும் கவலையில்லை. இரண்டு பைகள், ஒரு ஸ்கூட்டி. இவைதான் அவளின் சொத்து. சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும். இது மட்டும் தான், அவளின் தாரக மந்திரம்.

பொறுமையைக் கற்றுக் கொடுக்க ஒரு குடும்பம் இல்லாமல் போனதால், எல்லாவற்றிலும் தடாலடியாகத்தான் இறங்குவாள். நிதானத்திற்கும், நித்திலாவுக்கும் வெகு தூரம். அதனால் போகும் இடமெல்லாம், கொஞ்சம் எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்வாள் பெண். ஆனால், அதைப்பற்றி அவளுக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை.

இந்தத் தனிமை மட்டும் தான் அவள் சாஸ்வதம். இடத்துக்குத் தக்க ஒன்றிரண்டு மனிதர்களின் பழக்கம். ரயில் ஸ்நேகத்தைப் போல. தற்போது அவள் சொந்தங்களாக, கூர்க்கா, பங்கஜம் அம்மா, மதர் நான்ஸி.

புன்சிரிப்பொன்று உதட்டில் உறைய, பெருமூச்சோடு உள்ளே போனாள் நித்திலா.

 

error: Content is protected !!