nk10
nk10
நிலவொன்று கண்டேனே 10
யுகேந்திரன் ஆஃபீஸில் கொஞ்சம் பிஸியாக இருந்தான். இந்த வாரம் முழுதும் வேலைப்பளு அவனை லேசாக அழுத்தி இருந்தது.
நித்திலா வேறு தொடர்பில் இல்லை. அவளுக்கும் முக்கியமான வேலை ஏதோ ஒன்று வந்து விட அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
அந்த ஒரு வார காலம் எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று படம்பிடித்துக் காட்டினாற் போல இருந்தது. மனதுக்குள் சிரித்துக் கொண்டான் யுகேந்திரன்.
வீட்டில் கணவன் மனைவி இருவரும் பொறுப்பான பதவிகளில் இருந்தால் இப்படித்தான் போலும். ஆஃபீஸ் டெலிஃபோன் சிணுங்கவும் காதுக்குக் கொடுத்தான் யுகேந்திரன்.
“ஹலோ.”
“சார், சப் கலெக்டர் ஆஃபீஸ்ல இருந்து பேசுறோம்.”
“சொல்லுங்க சார்.”
“மேடம் உங்களை மீட் பண்ணணுமாம். அப்பாயின்மென்ட் கேட்டாங்க.”
“ஓ… இன்னைக்கு ஃப்ரீயா இருக்காங்களா?”
“இப்போ மீட்டிங்ல இருக்காங்க. ரெண்டு மணிக்கப்புறம் ஃப்ரீ ஆகிடுவாங்க. உங்களுக்கு வசதிப்படுமான்னு கேக்கச் சொன்னாங்க சார்?”
“லன்ச்சுக்கு அப்புறமா ஃபாரெஸ்ட் வரைக்கும் போற வேலை இருக்கு… ம்… பரவாயில்லை, நான் வேற யாரையாவது அரேன்ஜ் பண்ணுறேன். நீங்க மூனு மணிக்கு ஃபிக்ஸ் பண்ணிடுங்க.”
“தான்க் யூ சார்.”
“ஓகே பை.” சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான் யுகேந்திரன். என்னவாக இருக்கும்? அஃபீஷியலாக அப்படி என்ன பேசப் போகிறாள்?
வண்டாகக் கேள்விகள் குடைய மதிய உணவை முடித்தவன் சரியாக மூன்று மணிக்கு சப் கலெக்டர் ஆஃபீஸில் இருந்தான்.
அவளைப் பார்க்கும் ஆவல் பொங்கி வழிந்தது. ஒரு வாரமாகப் பார்க்கவும் இல்லை, சரியாகப் பேசவும் இல்லை.
“ஹாய் நித்திலா.”
“வாங்க கவிஞரே.” வாய் இணக்கமாகப் பேசினாலும், முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது.
“சாப்பிட்டியா?”
“ம்…”
“அப்போ ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?”
“கொஞ்சம் வேலை ஜாஸ்தி.”
“அது எப்போவும் இருக்கும். நாம தான் நம்மளைக் கவனிச்சுக்கணும், புரியுதா?”
“ம்…” முணு முணுத்தவள் அவன் பக்கமாக ஒரு ஃபைலை நகர்த்தி வைத்தாள். யுகேந்திரனின் புருவங்கள் கேள்வியாக வளைந்தன.
“படிங்க…”
“எனிதிங் சீரியஸ்?” கேட்டபடி ஃபைலைப் பிரித்தான் யுகேந்திரன். படிக்கப் படிக்க அவன் முகம் செந்தணல் ஆகிப் போனது.
முழுதாக ஒரு ஐந்து நிமிடங்களில் படித்து முடித்தவன், அந்த ஃபைலைத் தன் புறங்கையால் அடித்து வீசினான். பக்கத்துச் சுவரில் ஃபைல் மோதி நிற்க, உள்ளே இருந்த காகிதங்கள் திசைக்கொன்றாகப் பறந்தது.
நித்திலா நிமிர்ந்து அமர்ந்தாள். இதுவரை முகத்தில் இருந்த வலி மறைந்து இப்போது ஒரு கடினத்தன்மை வந்திருந்தது.
“மிஸ்டர் யுகேந்திரன்… திஸ் இஸ் சப் கலெக்டர் ஆஃபீஸ், அன்ட் யூ ஆர் டாக்கிங் டு சப் கலெக்டர்.” அவள் பார்வை, செய்கை அனைத்தும் மாறிப் போயிருந்தது. அந்த நிலையிலும் யுகேந்திரன் அவளின் ஆளுமையை ரசித்தான்.
“சாரி மேடம்.” கொஞ்சம் பெரிய மூச்சுக்களாக எடுத்துத் தன்னைச் சமன் செய்து கொண்டான்.
அவன் விசிறியடித்த அத்தனை பேப்பர்களையும் எழுந்து போய் பொறுக்கி எடுத்தாள் நித்திலா. யுகேந்திரன் அமைதியாகவே இருந்தான்.
தன்னை நிதானப் படுத்திக்கொள்ள சற்று நேரம் எடுத்தவன் அதன் பிறகே பேச ஆரம்பித்தான்.
“சொல்லுங்க மேடம்.”
“நீங்க தான் சொல்லணும் ஆஃபீஸர்.”
“இந்தப் புகார்ல எந்த ஆதாரமும் இல்லைன்னு நான் சொல்லுவேன்.”
“ஆதாரம் இல்லாத ஒரு புகாரை உங்க வரைக்கும் கொண்டு வந்து உங்க நேரத்தை நான் வீணடிப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா?”
“நான் உங்களைத் தப்பாச் சொல்லலை மேடம். இது தப்பான தகவல்னுதான் சொல்லுறேன்.”
“இல்லை யுகேந்திரன். எல்லாம் பக்காவா இருக்கு.”
“இதை ஏன் காலதாமதா எங்கிட்ட சொல்லுறீங்க? புகார் கைக்கு வந்த உடனேயே நீங்க என்னை அணுகி இருக்கலாமே?”
“மிஸ்டர் யுகேந்திரன்… இதுல இருக்கிற விஷயம் எத்தனை நம்பகத் தன்மையானதுன்னு நான் உறுதிப்படுத்திக்கணும் இல்லையா? அதோட…”
அவள் சொல்லத் தயங்கவும் அவளைக் கூர்மையாகப் பார்த்தான் யுகேந்திரன்.
“உங்க இலாகா சம்பந்தப்பட்ட விஷயம் உங்ககிட்ட வராம எங்கிட்ட வரும் போதே புகார் பண்ணினவங்க உங்களை நம்பலைன்னு தானே அர்த்தம்?”
“அப்போ… நீங்களும் என்னை நம்பலையா?”
“வேலைன்னு வந்துட்டா நான் யாரையும் நம்ப மாட்டேன்.” அந்தப் பதிலில் அவன் முகம் கடுகடுத்தது.
“சரி… நீங்க சொல்லுறீங்க என்கிறதால நான் பொறுமையா கேட்கிறேன் மேடம். என்னோட கட்டுப்பாட்டுல இருக்கிற ஃபாரெஸ்ட் ஏரியாவுல ஒரு துரும்பு கூட இதுவரைக்கும் என் அனுமதியில்லாம வெளியே போனதில்லை.”
“ம்…”
“அப்பிடி இருக்கும் போது இது எப்பிடி சாத்தியமாகும்னு நீங்க நினைக்கிறீங்க?” அவன் குரலில் அத்தனை உஷ்ணம் இருந்தது.
“நல்ல கேள்வி தான் ஆஃபீஸர். ஆனா உங்க அனுமதியில்லாம இது நடந்திருக்கலாம் இல்லையா?” அந்தக் கேள்வியில் புன்னகைத்தான் யுகேந்திரன்.
“சான்ஸே இல்லை மேடம்.”
“மிஸ்டர் யுகேந்திரன்… ஆதாரங்கள் உண்மைதான். அதுல எந்த விதமான சந்தேகமும் வேண்டாம்.”
“புகார் குடுத்தது யாரு மேடம்?”
“அவங்க தன்னை வெளிப்படுத்திக்கலை. வேற வேற இடங்கள்ல இருந்து போஸ்ட் பண்ணி இருக்காங்க. தகவல்களை தனித்தனியா அனுப்பி வைச்சிருந்தாங்க.”
“யாரு இதுல சம்பந்தப்பட்டிருக்காங்க? உங்க ரிப்போர்ட் படி பார்த்தா… ஒரு பெரிய புள்ளியோட சப்போர்ட் இல்லாம இதைப் பண்ண முடியாது. ஏன்னா… கடத்தப்பட்ட மரங்கள் கைமாறின விதம் அப்பிடி. அது ஏதாவது சொன்னாங்களா?”
“ம்…”
“யாரு?”
“……..” அவள் மௌனம் அவனைக் கலவரப்படுத்தியது.
“நித்திலா…”
“எம்.எல்.ஏ அன்பரசு.”
“நித்திலா!” யுகேந்திரன் உதைத்துத் தள்ளிய நாற்காலி மூலையில் போய் விழுந்தது. ஆத்திரத்தை அடக்க அவன் பகீரதப் பிரயத்தனங்கள் செய்வது அப்பட்டமாகத் தெரிந்தது.
அந்த ரூமின் ஜன்னலை நோக்கிப் போனவன் அதன் இரும்புக் கம்பிகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவன் இருதயம் துடிப்பது அவனுக்கே கேட்டது.
‘என்ன பேசுகிறாள் இந்தப் பெண்? கிறுக்குப் பிடித்து விட்டதா இவளுக்கு?’ மனதோடு புலம்பியபடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்கும்போது நித்திலாவிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவன் அருகில் சென்று அவனை சமாதானம் செய்ய, வாரியணைத்து மடி சாய்த்துக் கொள்ள… மனம் துடித்தது. இருந்தாலும் அவள் அமர்ந்திருந்த நாற்காலி அவளைக் கட்டிப் போட்டது.
நடந்தது வேறு ஒன்றுமல்ல. சப் கலெக்டர் ஆஃபீஸுக்கு ஒரு புகார் அந்த வாரம் வந்திருந்தது. இது வழமை என்பதால் நித்திலா சாதாரணமாகத்தான் பிரித்தாள். ஆனால்… உள்ளே இருந்த தகவல் வெடிகுண்டை விட வீரியமாக இருந்தது.
யுகேந்திரனின் எல்லைக்குள் இருக்கும் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் கடத்தப்படுவதாக அதில் சொல்லப்பட்டிருந்தது.
நித்திலா அதை முதலில் சந்தேகத்தின் அடிப்படையிலான ஒரு சாதாரணப் புகார் என்று தான் நினைத்தாள். ஆனால் அடுத்த நாள் வந்த ஆதாரங்கள் அவளை வேரோடு சாய்த்தன.
ஒரே நாளில் அத்தனை விஷயத்தையும் அனுப்பாமல் தன் முகம் மறைத்துக் கொண்டு கடிதங்கள் வந்து சேர்ந்தன. ஒவ்வொரு கடிதமும் வெவ்வேறு இடங்களில் இருந்து தபாலில் சேர்க்கப்பட்டிருந்தது.
நிலைமையின் தீவிரம் நித்திலாவை உடனேயே காரியத்தில் இறங்கச் சொன்னது. மிகவும் நம்பகரமான ஆட்களை வைத்து ஆதாரங்களின் நம்பகத் தன்மையை சோதித்துக் கொண்டாள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தச் செய்கைக்கு எம்.எல்.ஏ வின் முழு ஆதரவு இருப்பது தான்.
நித்திலாவிற்குத் தனியாக டைப் செய்யப்பட்ட ஒரு லெட்டரும் வந்திருந்தது. அதில் குறிப்பிடப் பட்டிருந்ததாவது…
‘அப்பாவின் தவறை மகன் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால் நியாயத்திற்குப் பேர் போன சப் கலெக்டர் எதிர்கால உறவுகளை கருத்திற் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.’
இந்தக் கடிதத்தை அனுப்பி இருக்கும் நபர் தனக்கு அத்தனை தூரத்தில் இல்லை என்று நித்திலாவிற்கு நன்கு புரிந்தது. தனக்கும் யுகேந்திரனுக்குமான உறவு சம்பந்தப்பட்டவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
குழம்பிப் போனாள் பெண். சம்பவத்திற்கும் யுகேந்திரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நித்திலா நிச்சயமாக நம்பினாள்.
அப்படியே இருந்தாலும் இது எப்படிச் சாத்தியம்? இதுவரை இரண்டு முறை இது போல தேக்கு மரங்கள் கடத்தப் பட்டிருப்பதாகத் தகவல்கள் சொன்னது.
சாட்சியங்களை உறுதிப் படுத்தும் வரைதான் யுகேந்திரனிடம் எதுவும் சொல்லாமல் மறைத்தாள். அவனைப் பார்ப்பதும், அவனோடு பேசுவதும் தன்னைப் பலவீனப் படுத்தும் என்பதால் அந்த வாரம் அவனைக் கொஞ்சம் தவிர்த்திருந்தாள்.
சத்திய மூர்த்தியின் குடும்பத்தை அவளால் கிஞ்சித்தும் சந்தேகிக்க முடியாது. ஆனால்… அன்பரசு சத்திய மூர்த்தியின் வாரிசல்லவே. கொஞ்சம் அவனுக்குக் கால அவகாசம் கொடுத்தவள் இப்போது அழைத்தாள்.
“யுகேந்திரன்…” அது வரை வெளியே வெறித்துப் பார்த்தபடி நின்றவன் திரும்பிப் பார்த்தான்.
“நான் இன்னும் கொஞ்சம் உங்க கூட பேசணும்.” அவளை சிறிது நேரம் இமைக்காமல் பார்த்தவன் அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் வந்து அமர்ந்தான்.
“ம்…”
“என் தரப்பு ஆதாரங்கள் அத்தனையும் ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கு.”
“ம்…”
“நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும். நான் எந்த நடவடிக்கையையும் கைவிடப் போறதில்லை. சமூகமா? குடும்பமா? ன்னு வந்தா… என் பதில் சமூகம் தான். அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”
“யா… ஷ்யூர்.”
“இந்தப் பிரச்சினை யுகேந்திரன் சம்மந்தப்பட்டது என்கிறதால தான் நான் இன்னும் நடவடிக்கை எடுக்கலை. விஷயம் சீக்ரெட்டா இருக்கணும்.”
“……..”
“எந்தக் காரணத்துக்காகவும் குற்றவாளி தப்பிக்கிறதை நான் விரும்பலை, அதை என்னைக்கும் நான் அனுமதிச்சதும் இல்லை யுகேந்திரன்.”
“நித்திலா… உனக்குப் புரியலை. என்னோட அப்பா அரசியல்வாதி தான். நான் இல்லேங்கலை. அவர் காமராஜரோட வழித்தோன்றல் அப்பிடின்னு நான் ஆர்க்யூ பண்ணலை. ஆனா அவர் ஒரு நல்ல அப்பா. நான் சம்பந்தப்பட்ட விஷயத்துல அவர் தப்புப் பண்ண மாட்டார்.”
“ஒத்துக்கிறேன். பாசத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுட்டு ஒரு அதிகாரியா யோசிங்க யுகேந்திரன்.”
“சரி… அப்பிடியே இருந்தாலும் என்னைத்தாண்டி எதுவுமே நடக்கலையே நித்திலா. ரெண்டு தேதியில ரெண்டு சம்பவங்கள் நடந்ததா சொல்லப்பட்டிருக்கு. அந்த ரெண்டு…”
பேசிக் கொண்டிருந்தவன் தரவிற்காக அவள் கொடுத்த ஃபைலை மீண்டும் புரட்டினான். குறிப்பிடப் பட்டிருந்த அந்த இரண்டு நாட்களையும் தேடிக் கண்டு பிடித்தபோது மேற்கொண்டு பேச வாய் எழவில்லை யுகேந்திரனுக்கு.
அந்த இரண்டு தேதிகளையும் நன்றாக ஊன்றிக் கவனித்தான். ஒன்று… தான் அண்மையில் சிங்கப்பூர் போன தேதி. அடுத்தது… இரண்டு மாதங்களுக்கு முன் ஸ்ரீலங்கா போன தேதியைக் காட்டியது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்ற யுகேந்திரனை அழைத்திருந்தார்கள்.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவன், முக்கியமான இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்திருந்தான். ஐந்து நாட்கள் அந்தப் பயணத்திற்காக செலவழித்திருந்தான்.
எங்கோ ஏதோ தவறு நடந்திருப்பது அப்போதுதான் யுகேந்திரனுக்குப் புரிந்தது. ஃபோனை எடுத்தவன் அம்மாவை அழைத்தான். நித்திலா நடப்பது எல்லாவற்றையும் ஒரு அமைதியோடு பார்த்திருந்தாள்.
“அம்மா… என்னோட பாஸ்போர்ட்டை ட்ரைவர் கிட்ட குடுத்தனுப்புங்க. நான் சப் கலெக்டர் ஆஃபீஸ்ல இருக்கேன். கொஞ்சம் சீக்கிரமா அனுப்புங்க.”
சொன்னவனின் முகத்தில் லேசான பதட்டம் தெரிந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக தனித்து நிற்பது போல ஒரு உணர்வு தோன்றியது யுகேந்திரனுக்கு.
நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருந்தான். சரியாகப் பத்து நிமிடங்களில் அவன் கடவுச் சீட்டு அவன் கைகளில் இருந்தது.
தான் வெளி நாடுகளுக்குப் போயிருந்த தேதிகளையும் ஃபைலில் இருந்த தேதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தான். இரண்டும் அச்சுப் பிசகாமல் ஒன்றாக இருந்தது.
யுகேந்திரன் ஓய்ந்து போனான். உடம்பில் இருந்த அத்தனை சக்தியும் வடிந்து போனது. முகம் வெளிறிப் போக நிலைகுலைந்து போய் அந்த நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.
“யுகீ…” இது வரை அவனையே பார்த்திருந்த நித்திலா அவன் நிலையைக் காணப் பொறுக்காமல் எழுந்து வந்தாள்.
அவனைத் தன் வயிற்றோடு சேர்த்தணைத்துக் கொண்டவள் அந்த முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினாள்.
“யுகீ… இங்கப் பாருங்க. எதுக்கு இப்போ இப்பிடி உக்காந்திருக்கீங்க? என்னைப் பாருங்க யுகேந்திரன்.” அவள் குரல் அவன் காதுகளைச் சென்றடையவே இல்லை.
அவன் கன்னத்தில் நான்கைந்து முறை கொஞ்சம் பலமாக அடித்தாள் நித்திலா. அதைக் கூட அவன் உணரவில்லை. அவன் உடம்பில் லேசான ஒரு நடுக்கம் தெரிந்தது.
மேஜை மேலிருந்த நீரை எடுத்து அவனைப் பருகச் செய்தாள். அதன் பின்னர் தான் ஓரளவு அசைந்து கொடுத்தான் யுகேந்திரன்.
“நித்தி… நித்திலா… என்னால நம்பவே முடியலை. நான்… நான் பொத்திப் பொத்தி பாதுகாக்கிற இடம் அது. என் குழந்தை மாதிரி. அதுல… எப்பிடி?”
“புரியுதுங்க.”
“அதுவும்… அப்பா!”
“………..”
“இல்லைடா… எங்கேயோ தவறு நடந்திருக்கு. எனக்குக் கொஞ்சம் டைம் குடு. நான்… என்ன ஏதுன்னு பார்க்கிறேன். ப்ளீஸ் நித்திலா.” அவன் கெஞ்சலில் அவள் சர்வாங்கமும் பதறியது.
“ஓகே யுகேந்திரன். ஆனா எந்த இடத்திலேயும் விஷயம் லீக் ஆகக் கூடாது. அதுல கவனமா இருங்க.”
“ம்… தான்க்யூ.” சொன்னவனிடம் தனக்கு தனியாக வந்த லெட்டரையும் காட்டினாள் நித்திலா. அமைதியாகப் படித்தான் யுகேந்திரன்.
“ஆக… புகார் கொடுத்தவங்க இந்த ஏரியாவுல தான் இருக்காங்க… இல்லையா நித்திலா?”
“இருக்கலாம். ஆனா நம்மை கண் காணிக்குறாங்க என்கிறது உறுதி.”
இந்த ஒரு வாரமாகத் தான் ரகசியமாகச் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் அவன் பார்வைக்கு வைத்தாள் நித்திலா. வெட்டப்பட்ட மரங்கள் எங்கே கை மாறுகிறது, இதற்கு யாரெல்லாம் உடந்தை அனைத்தும் வெட்ட வெளிச்சமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து இடங்களிலும் அன்பரசுவின் பெயர் அடிபட்டதைப் பார்த்த போது யுகேந்திரன் நொறுங்கிப் போனான்.
“நித்திலா… இந்த விஷயத்தை என்னால நம்பவும் முடியலை. ஆனா… நீ குடுக்கிற ஆதாரங்களை என்னால புறக்கணிக்கவும் முடியலை.”
“புரியுது யுகேந்திரன்.”
“நான் இதை… இதை எப்பிடி அம்மா… அம்மாக்கிட்ட…” மேலே பேச முடியாமல் திணறினான்.
“இதைக் கேள்விப்பட்டா வானதி செத்துப் போயிடுவா…”
“யுகீ! என்ன பேசுறீங்க?”
“எனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே… அம்மா எப்படித் தாங்குவாங்க?”
அந்த அறையில் இருந்த கடிகாரம் தன் இருப்பைக் காட்டவும் தான் நேரத்தைப் பார்த்தாள் நித்திலா. ஆஃபீஸ் நேரம் முடிவடைந்திருந்தது.
“கிளம்பலாம் யுகேந்திரன்.” சொல்லிவிட்டு அவள் எழுந்து கொண்டாள். ஆனால் அவனோ அப்படியே உட்கார்ந்திருந்தான்.
“கவிஞரே! நம்ம கிளம்பினாத்தான் அவங்க ஆஃபீஸை பூட்ட முடியும். எழும்புங்க.”
“நித்திலா… என்னால இப்போ வீட்டுக்குப் போக முடியாது. அம்மா முகத்தை என்னால பார்க்க முடியாது.”
“ஓ…” சில நொடிகள் மௌனமாக இருந்தவள், வானதியைத் தொலைபேசியில் அழைத்தாள்.
“அத்தை… நான் நித்திலா பேசுறேன்.”
“சொல்லும்மா? எப்பிடி இருக்கே? இந்த வாரம் ரொம்ப பிஸியோ?” வானதியின் உற்சாகக் குரல் யுகேந்திரனுக்கும் கேட்டது.
“கொஞ்சம் பிஸிதான் அத்தை.”
“அதுக்காக… என் பையன் கூட பேசமாட்டியா நீ? என்னமோ மாதிரி இருந்தான். அது சரி… என்ன திடீர்னு அத்தை ஞாபகம்?”
“இல்லை… உங்க பையன் இப்போ எங்கூடத்தான் இருக்காங்க…”
“அட! இங்கப்பார்றா… ஐயா அங்க தான் இருக்காரா? அஃபிஷியலா நித்திலா?”
“ஆமா அத்தை. அப்பிடியே டின்னருக்கு வீட்டுக்குக் கூப்பிடலாம்னு பார்த்தேன். அதான் உங்க கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு…” நித்திலா முடிக்காமல் இழுத்தாள்.
“ஐய்யே! என்ன இது? ஸ்கூல் பசங்க மாதிரி பர்மிஷன் கேட்டுக்கிட்டு. நீ கூட்டிக்கிட்டு போம்மா. ஆனாலும் இது நியாயமில்லை நித்திலா?”
“ஏன் அத்தை?”
“என்னைக் கூப்பிடலை பார்த்தியா நீ?”
“உங்களை எப்பிடி அத்தை தனியாக் கூப்பிடுறது? ஒரு நாளைக்கு அத்தைக்கும் மாமாவுக்கும் ஸ்பெஷல் விருந்து வைக்கிறேன்.”
அவள் பேசும் போது யுகேந்திரன் முகத்தில் ஒரு கசப்பான புன்னகை தோன்றியது. அந்தப் புன்னகையை வலியோடு பார்த்தவள் அவன் தோள்களைத் தடவிக் கொடுத்தாள்.
“ஹா… ஹா… பொழச்சுக்குவே அம்மிணி.” கல கலப்பாகக் கேட்ட வானதியின் குரல் யுகேந்திரனை என்னமோ பண்ணியது. பேச்சை முடித்துக் கொண்ட நித்திலா,
“போகலாம் யுகேந்திரன்.” என்றாள்.
வீடு வந்து சேர்ந்த பிறகும் யுகேந்திரனின் அலைப்புறுதல் அடங்கவில்லை. நித்திலா எவ்வளவு பேசியும் யுகேந்திரனை சமாதானம் பண்ண அவளால் முடியவில்லை.
ஒரு ஏழு மணிபோல சமையலை முடித்து விட்டு பங்கஜம் அம்மா அன்று வீட்டுக்குக் கிளம்பி விட்டார். வெளியே கறுப்பனும் கூர்க்காவும் இருந்தார்கள்.
“சாப்பிடலாமா யுகேந்திரன்?”
“பசிக்கலை கண்ணம்மா.”
“எனக்குப் பசிக்குதுப்பா. வாங்க சாப்பிடலாம்.” வற்புறுத்தித் தான் அவனை டைனிங் டேபிளிற்கு அழைத்துச் சென்றாள்.
அவனை உட்கார வைத்து அவள் கையாலேயே பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.
அவள் அருகாமையை அவனுக்கு உணர்த்த அவள் எவ்வளவோ முயன்ற போதும் அதை உணர்ந்து கொள்ளும் மன நிலையில் யுகேந்திரன் இருக்கவில்லை.
“நீயும் உட்காரு நித்திலா.” அவளையும் உட்கார வைத்தவன், மீண்டும் சிந்தனைக்குள் மூழ்கிப் போனான்.
உண்டு முடித்தவன் மீண்டும் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டான். இவன் மேல் ஒரு கண்ணை வைத்தபடியே டைனிங் டேபிளைக் க்ளீன் பண்ணினாள் பெண்.
வேலைகளை முடித்துக்கொண்டு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் நித்திலா.
“நித்திலா…” அவன் குரலில் அத்தனை தயக்கம்.
“சொல்லுங்க யுகேந்திரன்.”
“நீ… நீ என்னைத் தப்பா நினைக்கலை இல்லை?”
“கவிஞரே! என்ன பேசுறீங்க நீங்க?” அவள் சொல்லி முடிப்பதற்குள் முகத்தைத் தன் கைகளால் மூடியவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். நித்திலா விறைத்துப் போனாள்.
“யுகீ… ஐயோ! என்ன இது? எதுக்கு இப்போ அழுறீங்க? யுகீ… என்னைப் பாருங்க. ப்ளீஸ்… அழாதீங்க.” அவள் பேச்சு எதுவும் அவனிடம் எடுபடவில்லை.
அதற்கு மேலும் பொறுக்க முடியாத நித்திலா அவனை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
“யுகேந்திரன்… நீங்க இப்பிடி பிஹேவ் பண்ணுறது என்னை ரொம்பவே சங்கடப் படுத்துது. நான் தப்புப் பண்ணுற மாதிரித் தோனுது. ப்ளீஸ்… எனக்கு சப்போர்ட் பண்ணுங்க.”
அவள் கண்ணீர்க் குரலில் சற்று நிதானத்திற்கு வந்திருந்தான் யுகேந்திரன். தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டவன் அவளிடமிருந்து விலகினான். அதற்கு அனுமதிக்காதவள் அவன் தலையைத் தன் மடி மீது சாய்த்துக் கொண்டாள்.
அந்த அருகாமை இப்போது இருவருக்குமே தேவைப்பட்டது. அவன் தலையை மென்மையாக அவள் வருடிக் கொடுக்க, அவள் இடது கையைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான் யுகேந்திரன்.
அந்த மோன நிலை எவ்வளவு நேரம் நீடித்ததோ தெரியாது. இருவரும் அப்படியே கண்ணயர்ந்து போனார்கள்.