nk14

nk14

நிலவொன்று கண்டேனே 14
ஒரு வாரம் ஓடிப் போயிருந்தது. வாழ்க்கை ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது நித்திலாவிற்கும் யுகேந்திரனுக்கும். 
இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தாள் நித்திலா. அவள் வேலைப்பளு அவன் அறிந்தது என்பதால் யுகேந்திரனும் அவளை வற்புறுத்தவில்லை.
‘வாழ்க்கை வயது இரண்டுமே நமக்கிருக்கிறது. வேலையைக் கவனி.’ என்று சுருக்கமாக முடித்து விட்டான்.
தம்பதிகள் சப் கலெக்டர் வாசஸ்தலத்திற்கு குடிபெயர்ந்து விட்டார்கள். வானதி சத்தியமூர்த்தியின் வீட்டிலேயே தங்கி விட்டார். 
சப் கலெக்டரின் குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், தான் அதிகப்படி என்று தோன்றியது அவருக்கு. அத்தோடு, புதுமணத் தம்பதிகள்… அவர்களுக்கு இடைஞ்சலாக எதற்கு இருக்க வேண்டும்?
காலையில் ஏழு மணிக்கெல்லாம் தோப்புக்குப் போய் விடுவான் யுகேந்திரன். திருமணத்திற்கு மறுநாளே நித்திலாவை அழைத்துக் கொண்டு போய் அவர்களுக்குச் சொந்தமான இடத்தைக் காட்டி இருந்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள் வரிசையாக நின்றிருந்தன. நித்திலா வாய் பிளந்து பார்த்து நின்றாள்.
‘கவிஞரே! இவ்வளவு பெரிய தோப்பா?’ அவள் ஆச்சரியத்துக்கு அளவில்லாமல் போனது.
‘இத்தனையும் உங்களுக்குச் சொந்தமா?’ அவள் கேட்டபோது முறைத்துப் பார்த்தான் யுகேந்திரன். சட்டென்று தன்னைத் திருத்தியவள்,
‘சரி… சரி… வாய் தவறி வந்திடுச்சு. இத்தனையும் நமக்குச் சொந்தமா?’ என்றாள்.
‘ஆமா நித்திலா. தாத்தாவோட அப்பா கொஞ்சம் கொஞ்சமா வாங்கிச் சேர்த்த நிலம். தாத்தாக்கு இதுல பெருசா ஆர்வம் வரலை. சரியா பராமரிக்காம விட்டுட்டாங்க.’
‘ம்…’
‘குத்தகைக்கு விட்டதோட சரி. இனிமேல் அப்படி இருக்காது. எல்லாம் ஒழுங்கா ப்ளான் பண்ணி தென்னைகளைப் பராமரிக்கணும். ஊடு பயிர் உற்பத்தி பண்ணணும்.’
‘வெரி குட் ஐடியா யுகேந்திரன். அப்படிப் பண்ணும் போது இன்னும் கொஞ்சப் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும்.’
‘கண்டிப்பா.’
‘லேடீஸ் க்ளப் மீட்டிங்ல அன்னைக்கு கொஞ்சம் லேடீஸ்க்கு வேலைவாய்ப்புத் தேவைன்னு சொல்லி இருந்தாங்க. உங்களால அவங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா யுகி?’
‘என்ன படிச்சிருக்காங்கன்னு கேளுடா. அவங்கவங்க தரத்துக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணிக்கலாம்.’
‘தான்க்யூ யுகி.’
ஒரு வாரம் தேவையான அனைத்தையும் திட்டமிட்டுக் கொண்டவன் இப்போது வேலைகளை ஆரம்பித்திருந்தான்.
காலையில் கிளம்பிப் போனால் நண்பகல் நேரத்துக்குத் தான் வீடு திரும்புவான். வரும் போதே நித்திலாவையும் அழைத்துக் கொண்டு வந்து விடுவான். 
பங்கஜம் அம்மா சமையலை முடித்து அவர்களுக்குப் பரிமாறி விட்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவார். முன்போல முழு நாளும் அங்கு தங்குவதைத் தவிர்த்திருந்தார். 
இளையவர்களின் தனிமையே எல்லோருக்கும் முக்கியமாகப் பட்டது.
சிறிது நேர ஓய்விற்குப் பிறகு நித்திலாவை ஆஃபீசில் விட்டு விட்டு வானதியோடு கொஞ்சம் நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் யுகேந்திரன். 
அதன் பிறகு தோப்புக்குப் போனால் இரவு தான் வீடு திரும்புவான். அதன் பிறகு அது அவர்களுக்கான நேரம். திகட்டத் திகட்ட வாழ்க்கையை அனுபவித்தார்கள்.
தோப்பிலிருந்த தென்னைகளுக்கு நடுவே ஊடுபயிர்களை உருவாக்குவதற்காக அன்று களமிறங்கி இருந்தான் யுகேந்திரன். வேளாண்மை அதிகாரியைத் தொடர்பு கொண்டதில் பப்பாளியும் வாழையும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்று அறிவுரை வழங்கி இருந்தார்.
நித்திலாவின் பயணங்களைப் பெரும்பாலும் தன்னோடு இருக்குமாறு பார்த்துக் கொண்டான் கணவன். ஆனால், இன்று எத்தனை மணிக்கு வேலை முடியும் என்று தெரியாததால் அரசு வாகனத்தை உபயோகப் படுத்தும் படி தகவல் அனுப்பி இருந்தான்.
ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து சேர்ந்தவளுக்கு அவனில்லாமல் என்னவோ போல் இருந்தது. முருகனை அழைத்துக் கொண்டு தோப்புக்கு நடையைக் கட்டி விட்டாள்.
கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு மேல் வேலை பார்ப்பது தூரத்திலிருந்து பார்த்த போதே நித்திலாவிற்குத் தெரிந்தது. கணவனைத் தேடிய கண்கள் அவன் கோலம் பார்த்து ஆச்சரியத்தில் விரிந்தன.
“ட்ரைவர் அண்ணா! என்ன? உங்க தம்பி இந்தக் கோலத்துல நிக்குறாங்க?” 
“முதலாளி இல்லையா அம்மிணி… ஒரு கை குறைஞ்சிருக்கும். அதான் தம்பி மடிச்சுக்கட்டிக்கிட்டு இறங்கிட்டாங்க போல.” 
அவர் வார்த்தை அத்தனை உண்மையாகத்தான் இருந்தது. தோப்புக்கு வரும் போது எப்போதும் வேஷ்டி சட்டையில் தான் வருவான் யுகேந்திரன். அதற்கே அவள் அவ்வளவு மயங்கிப் போவாள்.
இன்று… வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெறும் பனியனோடு நின்றிருந்தவனைப் பார்த்த போது நித்திலாவிற்கு வார்த்தை வரவில்லை. 
ஃபோனை எடுத்தவள் அவனை வகை வகையாகப் படம் பிடித்துக் கொண்டாள். திரும்பிப் பார்த்த முருகன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார். 
காரை விட்டிறங்கியவள் நேராக யுகேந்திரனிடம் தான் சென்றாள். அங்கே அப்போது அவளை அவன் எதிர்பார்க்கவில்லை.
“கவிஞரே! இது என்ன புதுப் பரிமாணம்?” அவள் குரலில் ஆவலாகத் திரும்பியவன் மலர்ந்து சிரித்தான்.
“ஹேய் நித்திலா… நீ எப்போ வந்தே? தனியா வந்தியா என்ன?”
“இல்லையில்லை… ட்ரைவர் அண்ணன் வந்தாங்க.”
“ஓ… எதுக்குடா இங்க வந்தே? வீட்டுல ரெஸ்ட் எடுத்திருக்கலாமே?”
“ம்ஹூம்… நீங்க இல்லாம செம போர். நல்லாவே இல்லை, அதான் கிளம்பி வந்துட்டேன். ஆமா… இது என்ன கோலம் கவி… இல்லையில்லை. இனிமேல் கவிஞர் இல்லை, பண்ணையாரே!”
“ஹா… ஹா…”
“இப்ப எதுக்கு ஆளை மயக்குற இந்தச் சிரிப்பு?”
“ஓஹோ! அப்போ அம்மிணி மயங்கிப் போயிருக்கீங்களா?” அவன் குரல் வேறாக இருந்தது.
“இல்லையா பின்னே?”
“அட! கூட்டம் இருக்கிற தைரியத்துல பேச்செல்லாம் பலமா இருக்கு?”
“பண்ணையாரே… ஆனாலும் நீங்க இத்தனை வல்லவரா இருக்கக் கூடாது.”
“இங்கப்பாருடா! அம்மிணி என்னைப் பாராட்டுறாங்க.”
“ம்… நீங்க நல்லவரு… வல்லவரு… நா…லும் தெரிஞ்சவரு…” சிரிப்பாக முடித்தவள் அந்த நாலை நாலு முளம் நீட்டிச் சொன்னாள்.
“அப்பிடிப் போடு அருவாளை.” சுற்றத்தை மறந்தவன் கண்களில் காதலோடு அவளை நெருங்கினான். 
திடுக்கிட்டுப் போனாள் நித்திலா. அவன் நெஞ்சில் கை வைத்துத் தடுத்தவள்,
“ஐயோ! யுகி என்ன பண்ணுறீங்க?” என்றாள். சுற்றி நின்றிருந்த பெண்களில் சிலர் புன்னகையோடு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
“மானம் போகுது. வேலையைப் பாருங்க.” சொன்னவள் அந்தப் பெண்களிடம் நகர்ந்து விட்டாள். 
அந்தப் பெண்களிடம் பேச்சுக் கொடுத்த படியே அவர்களின் குறைகளையும் ஒரு சப் கலெக்டராகக் கேட்டுக் கொண்டவள், ஃபோனில் அவர்கள் சொன்னதைப் பத்திரப் படுத்திக் கொண்டாள்.
நன்றாக இருள் சூழ்ந்து விடவும் வேலையை அத்தோடு முடித்துக் கொண்டார்கள். அந்த ப்ளாக் ஆடி அவர்களின் வருகைக்காகக் காத்து நின்றது.
“நித்திலா… வரும் போது சொல்லிட்டு வந்திருக்கலாம் இல்லை? எனக்கு வேறொரு செட் ட்ரெஸ் எடுத்துட்டு வரச் சொல்லி இருப்பேன்.”
“எதுக்கு யுகி?”
“இங்கேயே ஒரு குளியல் போட்டிருக்கலாம்.”
“ஐய்யே! இந்த ஓபன் ப்ளேஸ்லயா?”
“ஏய்… நானென்ன பொண்ணா? ஒளிஞ்சிக்கிட்டு குளிக்கிறதுக்கு?”
“ஏன்? பொண்ணுங்க மட்டும் தான் ஒளிஞ்சுக்கிட்டு குளிக்கணுமா? அதென்ன? ஷேர்ட்டைக் கழட்டிட்டு ஆர்ம்ஸ் காட்டிட்டு நிக்குறீங்க? சுத்தி வர அத்தனை பொண்ணுங்க நிக்குறாங்க? வகுந்திருவேன்.” 
நிஜமாகவே அவள் கண்களில் கோபம் இருந்தது. காரை நோக்கி நடந்து கொண்டிருந்தவன் அவள் பேச்சில் அவளைத் தென்னை மரத்தோடு சாய்த்திருந்தான்.
“குளிச்சு ஃப்ரெஷ்ஷா வந்திருக்கே… அழுக்குப் பண்ண வேணாம்னு பார்த்தா… என்னடி வம்பு பண்ணுற?” தென்னையோடு சாய்ந்திருந்தவள் மேல் முழுதாகச் சரிந்தான் யுகேந்திரன். அவள் முகம் லேசாக வாடி இருந்தது.
“என்னடா?”
“உங்களை யாரு இங்கெல்லாம் வந்து வேலை பார்க்கச் சொன்னாங்க யுகி.”
“நித்திம்மா… இது நம்ம தோப்புடா. இங்க வேலை பார்க்குறதுல என்ன தப்பு?”
“தப்பு கிடையாது… அதுக்காக இந்தக் கோலத்துலயா நிப்பாங்க?”
“ஏய் பொண்ணே! வேலை செய்ய வேணாமா?”
“எத்தனை லேடீஸ் நின்னாங்க. சின்னப் பொண்ணுங்க வேறே…” சிணுங்கிய அவள் முகத்தில் தெரிந்த பொறாமையில் வாய்விட்டுச் சிரித்தான் யுகேந்திரன்.
“அடியேய்! நிறைய வருஷமா நம்ம தோப்புலயே வேலை பார்க்கிறவங்க. அவங்களுக்கு நான் படியளக்குற முதலாளி… புரியுதா?”
“ஆமா… முதலாளி ஹேன்ட்ஸம்மா இருந்தா பார்க்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு பாருங்க.” அவள் வாய்க்குள் முணுமுணுக்க, அந்த வாயை இறுக மூடினான் யுகேந்திரன்.
அடுத்த நொடி அவனைப் பிடித்துத் தள்ளி விட்டவள் விடு விடுவென காரை நோக்கிப் போய் விட்டாள். நடையில் கூடத் தெறித்த அவள் கோபத்தில் தலை கோதிப் புன்னகைத்தான் கவிஞன்.
      ×××××××××××××××××××××××××××××××××××××××××××××
வாழ்க்கை வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அன்றோடு அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது.‌
ஆபீசில் வேலையில் மூழ்கிப் போயிருந்தாள் நித்திலா. அறைக் கதவு அவள் அனுமதியின்றி சடாரென்று திறக்கவும் ஒரு எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தாள். யுகேந்திரன் கூட அவள் அனுமதியின்றி உள்ளே வருவதில்லை.
அண்ணாந்து பார்த்த அவள் விழிகள் உறைந்து போனது. தன்னை அறியாமலேயே எழுந்து நின்றாள் பெண். ஏனென்றால்… உள்ளே வந்து கொண்டிருந்தது அன்பரசு.
யுகேந்திரன் அறுபதுகளை எட்டும் போது எப்படி இருப்பான் என்று படம்பிடித்துக் காட்டியது போல ஒரு தோற்றம். சாயல் வானதியைப் போல இருந்தாலும், அந்தக் கம்பீரமும் மிடுக்கும் எங்கிருந்து தன் கணவனுக்கு வந்திருக்கிறது என்று புரிந்தது நித்திலாவிற்கு.
தைரியமாக அவள் எதிரே உட்கார்ந்தவர் அவரின் அடர்ந்த மீசையை நீவிக் கொண்டார். இடது கை அவளை உட்காரும்படி ஆணை இட்டது. நாற்காலியின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள்.
“ம்… மிஸஸ். நித்திலா யுகேந்திரன் ஐ.ஏ.எஸ்.” ஒவ்வொரு எழுத்தாக அவர் உச்சரிக்க அந்தக் குரலின் கம்பீரத்தில் திகைத்துப் போனாள் நித்திலா. அத்தனை அழகிய வானதி இந்த மனிதரிடம் வீழ்ந்ததில் ஆச்சரியமே இல்லை. உண்மையிலேயே இவர் வில்லன் தானா? அவள் சிந்தனையைக் கலைத்தது அவர் குரல்.
“அம்மாவும் புள்ளையுமாச் சேர்ந்து அம்மணியைக் குடும்பத்துக்குள்ள கொண்டு வந்துட்டாங்களா? இந்த அன்பரசு வெளியே வந்தா அவனோட முதல் எதிரி நீதான்னு தெரியும் இல்லையா? அதான்… அவசர அவசரமா எம் பையனை உனக்கும் எனக்கும் நடுவுல நிறுத்தி இருக்கா என்ற ஊட்டுக்காரி. தமிழ் வாத்தியார் பொண்ணு எப்பவுமே கெட்டிக்காரி தானே!”
அந்தப் பேச்சில் நித்திலா திகைத்துப் போனாள். இப்படியொரு கோணத்தை அவள் சிந்தித்துப் பார்க்கவில்லை. அப்படியென்றால்…
“ம்… ரொம்ப யோசிக்காத கண்ணு. அந்த விசுவாமித்திரரை மயக்கின மேனகை நீதான். அதுல சந்தேகப்படாதே… இல்லைன்னா அப்பன் சொன்னதைக் கூடக் கேக்காம இந்த ஊரையே உங்கூட வலம் வருவானா எம் பையன்?”
அவள் மனதில் தோன்றிய சந்தேகத்தை முளைவிடு முன் கிள்ளி எறிந்தவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் நித்திலா. இவர் இன்னும் கொஞ்சம் நல்லவராக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.
“உன்னோட பேருக்குப் பின்னால இருக்கிற மூன்றெழுத்து நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்சதா இருக்கலாம். ஆனாப் புதுசா சேத்திருக்கியே ஆறெழுத்து… அது நான் உருவாக்கினது.”
இதற்கு மேலும் பேசாமல் இருக்கத் தேவையில்லை என்று தோன்றியது நித்திலாவுக்கு.
“அந்த ஆறெழுத்தைக் கஷ்டப்பட்டு சுமந்து பெத்த எம் மாமியாரே எங்கிட்ட அதைத் தூக்கிக் குடுத்துட்டாங்க.”
“உன்னோட மாமியார் வெறும் பத்து மாசம் தான் சுமந்திருக்கா. நான் முப்பது வருஷமா இங்க சுமக்கிறேனே… அது உனக்குத் தெரியுமா கண்ணு?”
தனது வலது கையால் இடது மார்பை அவர் பட்டுப் பட்டென்று அடித்துக் காட்டிய போது நித்திலாவுக்குமே லேசாக வலித்தது.
‘எங்கப்பாக்கு இதெல்லாம் பண்ணத் தெரியாது நித்திலா.’ அன்று சொன்ன யுகேந்திரனின் குரல் இன்று காதில் கேட்டது பெண்ணுக்கு.
“அத்தனை வருஷம் நெஞ்சில வெச்சு சுமந்திட்டு எதுக்கு முதுகில குத்தினீங்க?” ஆக்ரோஷமாக வந்தது அவள் கேள்வி. யுகேந்திரனின் ரணத்தைக் கூட இருந்து பார்த்தவள் அல்லவா?
“ம்… அங்க தான் அன்பரசு கொஞ்சம் சறுக்கிட்டான் கண்ணு.” உறுமலாக ஆரம்பித்தவர் தனக்குத் தானே பேசிக் கொண்டார்.
“கண்ணூ… அரசியல்ல கிட்டத்தட்ட முப்பத்தைஞ்சு வருஷமா இருக்கேன். அங்க இதெல்லாம் சாதாரணம். இதேதான் தொழில்னு பண்ணாட்டியும் அப்பப்ப இப்படியெல்லாம் நாலு காசு பார்க்கிறது தான். என்ன? எப்போவுமே வீடு வரைக்கும் எதுவும் வராம பார்த்துக்குவேன். இந்த முறை அம்மிணி குட்டையைக் குழப்பிட்டீங்க.”
“சத்தியமூர்த்தி ஐயாவோட மருமகன் மாதிரிப் பேசுங்க… மாமா.” முதன் முறையாக அவரை உரிமையோடு அழைத்தாள் பெண். தன் கற்றை மீசையை மீண்டும் ஒரு முறை நீவிக்கொண்டார் மனிதர்.
“அம்மிணி… இந்த நேர்மை நியாயம் இதெல்லாம் கேக்க நல்லாத்தான் இருக்கும். ஆனாப் பைசாப் பிரயோஜனம் இல்லாதது. நான் நல்லவனா இருந்தா மட்டும் நாடு திருந்திருமா என்ன? அடிக்கிறவன் அடிச்சிக்கிட்டுத் தான் இருப்பான்.”
இந்த வியாக்கியானத்திற்கு என்ன பதில் சொல்வதென்று நித்திலாவிற்குப் புரியவில்லை. அமைதியாகப் பார்த்திருந்தாள். அவர் வாதம் அவருக்கே நெருடியதோ என்னமோ… மீண்டும் அவரே ஆரம்பித்தார்.
“அதே சத்தியமூர்த்தி ஐயாவுக்காகத்தான் என்னையே நான் எவ்வளவோ மாத்திக்கிட்டேன்… சரி அதை விடு. இப்போ எதுக்கு பேங்க்ல பணம் போட்டிருக்காரு ஐயா?”
“நீங்க கார் வாங்கக் குடுத்த பணமாம். அது உங்க பையனுக்கு வேணாமாம்.”
“அப்போ இத்தனை நாள் வளர்த்து விட்டிருக்கேனே… அதுக்கு என்ன பண்ணப் போறாராம்?”
“அதனால தான் வேலையையே விட்டுட்டாங்களே.”
“என்ன?” அன்பரசுவின் கண்களில் திகைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், அதை வெகு சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டவர் மீசையை மீண்டும் நீவிக்கொண்டார்.
“ம்… பயலுக்கு எப்பவுமே ரோஷம் ஜாஸ்திதான்… அம்மாவைப் போல. சரி விடு கண்ணு. இப்போ என்ன பண்ணுறாரு ஐயா?”
“தென்னந் தோப்பைக் கையில எடுத்திருக்காங்க. ஒரு ரூபா சம்பாதிச்சாலும் அவங்களுக்கு அதை நேர்மையா சம்பாதிக்கணுமாம். நான் என்ன பண்ண? அவங்க அப்பா வளர்ப்பு அப்படி.” கேலியாகச் சொன்னாள் நித்திலா.
அதை உணரும் நிலையில் அன்பரசு இல்லை. மகனின் நிலை அவரைப் பாதித்ததோ என்னவோ முகம் இரண்டொரு கணங்கள் கவலையைக் காட்டியது.
“அம்மிணி… என்ற புள்ளை ராஜா மாதிரி வாழ்ந்தவன். அவனுக்கு இந்தத் தோப்பு தொரவெல்லாம் சரி வராது. அவன் நோகுறதைப் பார்க்குற சக்தி எனக்கில்லை.”
“மனசளவுல உங்களால ரொம்பவே நொந்து போய்ட்டாங்க… நீங்க வெறும் உடம்பு வலிக்கு மருந்து போட நினைக்கிறீங்க.”
அவள் சொன்னதுதான் தாமதம், உட்கார்ந்திருந்த நாற்காலியை ஒற்றைக் காலால் உதைத்துத் தள்ளியவர் கதவை நோக்கி வேகமாகப் போனார். போன வேகத்துக்குச் சட்டென்று திரும்பியவர்,
“அம்மிணி… என்ற வீடு, வீடு மாதிரி இல்லை. அதைக் கலைச்ச நீதான் மறுபடியும் அதை மாத்தோணும். இல்லைன்னா இந்த அன்பரசோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டி வரும். சொல்லிப் போட்டேன்.” சிங்கம் போல கர்ச்சித்தவர் விடு விடுவென நடந்து விட்டார். நித்திலாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
‘அப்பாவுக்கும் மகனுக்கும் என்னோட ஆஃபீஸ் செயாரை உதைக்குறதே வேலையாப் போச்சு.’ மனசுக்குள் பொறுமியபடி மூலையில் கிடந்த நாற்காலியை நிமிர்த்தி வைத்தாள் நித்திலா.
“என்னடா இது வம்பாப் போச்சு! மகன் என்னடான்னா… ‘என் வீட்டை இல்லமாக்கினாள்’ ன்னு கவிதை சொல்லுறாரு. அப்பா என்னடான்னா… ‘என் வீட்டைக் கலைச்சுட்டே’ ன்னு குத்தஞ் சொல்லுறாரு. ஆண்டவா! நீதான் என்னைக் காப்பாத்தணும்.” 
வாய்விட்டே புலம்பியவள் முயன்று வேலையில் கவனத்தைத் திருப்பினாள்.
அன்றிரவு டின்னரை முடித்து விட்டு பாத்திரங்களை ஒதுக்கி முடித்தவள் கணவனைத் தேடினாள். தோட்டத்தில் உட்கார்ந்திருந்தான்.
அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டவள் அவன் கை வளைவில் தலை சாய்த்துக் கொண்டாள். அவளை மடி தாங்கிக் கொண்ட யுகேந்திரன் அவள் முகம் பார்த்தான்.
“என்ன சொன்னாரு எம்.எல்.ஏ?” அந்தக் கேள்வியில் கொஞ்சம் அதிர்ந்து போனாள் நித்திலா.
“ஓ… அதுக்குள்ள நியூஸ் வந்திடுச்சா?” கேட்டபடியே அவன் முகவடிவை அளந்தாள் பெண்.
“யுகி…”
“………..”
“நமக்கொரு பையன் பொறந்தா அது அவர் மாதிரிப் பொறக்கணும்.”
“நித்திலா!” அதட்டலாக வந்தது அவன் குரல்.
“அம்மாடியோவ்! என்ன ஒரு கம்பீரம்… என்ன ஒரு தேஜஸ்… எனக்கு உங்களை விட அவரைத்தான் இப்போ ரொம்பப் பிடிச்சிருக்கு.” 
தன் கை வளைவில் சுகமாகச் சாய்ந்திருந்தவளை உதறிவிட்டு உள்ளே போனான் யுகேந்திரன். சுதாகரித்துக் கொண்டவள் நேராக உட்கார்ந்தாள். 
கோபமாகப் போகும் கணவனைப் பார்த்த போது உதட்டில் புன்னகை மலர்ந்தது.
‘எத்தனை நாளைக்காம் இந்த வீராப்பு?’ மனதில் எண்ணமிட்ட படி நித்திலாவும் உள்ளே போனாள்.

error: Content is protected !!