nk16
nk16
நிலவொன்று கண்டேனே 16
உல்லாசப் பயணிகளைக் கருத்திற் கொண்டு அமைக்கப்பட்டிருந்த அந்தத் தொங்கு பாலத்தில் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள் யுகேந்திரனும் நித்திலாவும்.
அந்தி நேரத் தென்றல் அவர்கள் மேனி தழுவ மங்கையும் அந்தக் கவிஞனின் தோள் சாய்ந்து இதமாகத் தழுவி இருந்தாள்.
மசக்கை கொஞ்சம் நித்திலாவை வாட்டியது என்று தான் சொல்ல வேண்டும். வேலைக்கும் போவதால் கொஞ்சம் சிரமப் பட்டாள் பெண். ஆனால், அத்தனைக்கும் ஈடு கொடுத்தான் கணவன்.
தனக்கொரு தாய் இருந்திருந்தால் கூட இந்த அளவு தாங்கி இருப்பாளா என்று எண்ணும் அளவிற்கு அவளை மடி தாங்கிக் கொண்டான்.
தோப்பிலும் ஊடு பயிர்களின் நடவு நடந்து கொண்டிருந்தது. அதையும் கவனிக்க வேண்டி இருந்ததால் மாலைப் பொழுதுகளை முழுதாக அவளுக்கென ஒதுக்கினான்.
இன்று ஏனோ காட்டுக்குப் போகலாம் என்று அவள் ஆசைப்படவும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு பொடி நடையாக இரண்டு பேரும் தொங்கு பாலம் வரை வந்திருந்தார்கள்.
சுற்றி வர இருந்த மரங்களின் பசுமை குளிர்ச்சியை மட்டுமல்லாது ஒரு விதக் கருமையையும் அந்நேரத்துக்கு அங்கு கொடுத்தது.
“யுகி…”
“ம்…”
“அத்தை ஏதாவது சொன்னாங்களா?”
“எதைப் பத்திடா?”
“நம்ம வீட்டுக்கு நாம எப்போ போறோம்னு…”
“…………” கணவனின் மௌனம் அவளைச் சங்கடப்படுத்த நடையை நிறுத்தினாள் நித்திலா.
“இதைப் பத்திப் பேசினா நீங்களும் மௌனமாகிடுவீங்களா யுகி?”
“அப்படி இல்லை நித்திலா…”
“பின்ன எப்படி? உங்கப்பாவையே நீங்க தண்டிப்பீங்களா யுகி? தாத்தா அன்னைக்கு சொன்னதைக் கேட்டீங்க இல்லை. உங்கப்பா எவ்வளவு வருத்தப்பட்டுப் பேசி இருக்காங்க.”
வானதியிடம் எதையும் சொல்லாத போதும் யுகேந்திரனையும் நித்திலாவையும் உட்கார வைத்துத் தான் அன்பரசைச் சந்தித்ததைச் சொல்லி இருந்தார் சத்தியமூர்த்தி.
சும்மாவே மாமனாருக்கு வக்காலத்து வாங்குவாள் நித்திலா. இப்போது கேட்கவா வேண்டும்?
“பண்ணின தப்பை அவர் உணர்ந்திட்டார் யுகி. இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும்? செத்த பாம்பை இன்னும் எத்தனை தரம் திருப்பித் திருப்பி அடிக்கப் போறீங்க?”
“அப்படி இல்லைம்மா…”
“உங்கப்பா பண்ணினது தப்புன்னு சொன்னவளும் நான்தான். அதே அப்பா இப்போ நல்லவர்னு சொல்லுறவளும் நான்தான். புரிஞ்சுக்கோங்க. அம்மாவும் மகனும் இப்படியே அடம்பிடிச்சீங்க… நானும் தாத்தாவும் உங்கப்பாவோட போய் இருந்திருவோம் சொல்லிட்டேன்.”
தன்னை விட்டு விட்டுக் கோபமாக அவள் விலகிப் போகவும் யுகேந்திரனின் முகத்தில் புன்னகை அரும்பியது. கொஞ்ச தூரம் நடந்தவள் களைப்பாக உணரவும் பாலத்தின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு நின்று விட்டாள்.
அதற்கு மேலும் யுகேந்திரன் தாமதிக்கவில்லை. விரைவாக மனைவியின் அருகே சென்றவன் அவளை மீண்டும் தோள் சாய்த்துக் கொண்டான்.
“எதுக்கு இப்போ இவ்வளவு கோபம்? நடக்கக் கூட முடியலை.” லேசாக அவளைக் கடிந்தபடி பாலத்தைக் கடந்தான் யுகேந்திரன்.
மழை லேசாகத் தூற ஆரம்பித்திருந்தது.
அவனிலிருந்து விலகியவள் மரக் கிளையின் மேல் சாய்ந்து கொண்டாள். மழைத்துளி ஒன்று அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது.
“அத்தைக்கிட்ட பேசுங்க யுகி… ப்ளீஸ். நான் பேசினா ஏதாவது தப்பாகிடுமோன்னு பயமா இருக்கு. அதனால தான் சொல்லுறேன்… நீங்க பேசுங்க.”
“சரிடா.” சொன்னவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான். ஏதோ யோசனையில் எங்கோ பார்த்திருந்த நித்திலா எதேச்சையாகக் கணவனைத் திரும்பிப் பார்க்க சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான் யுகேந்திரன். நித்திலாவின் நெற்றி சுருங்கியது.
இரண்டொரு நாட்களாகக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அவள் பார்க்காத போது பார்ப்பதும், பார்த்தால் முகத்தைத் திருப்புவதுமாக ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருந்தான் கவிஞன்.
அவனருகில் போனவள் அந்த முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினாள். அவன் மனம் புரிந்தது பெண்ணுக்கு.
“என்ன கவிஞரே! எதற்கிந்த விளையாட்டு?” அவள் தன்னைக் கண்டு கொண்டதில் யுகேந்திரனின் முகம் சற்றே சிவந்து போனது.
“உன்னைக் கஷ்டப்படுத்திப் பார்ப்பதற்கு இந்தக் கவிஞனுக்குத் தைரியம் இல்லை கண்ணம்மா.”
“கஷ்டம்னு நான் சொல்லவே இல்லையே?”
“நீ சொல்லாவிட்டால் எனக்குப் புரியாதா? நான் பெருமையாக மார்தட்டிக் கொள்கிறேன். ஆனால் பாடனைத்தும் உனக்குத் தானே. இது என்ன நியாயம் கண்ணம்மா?”
“இதுதான் இயற்கையின் நியாயம் கவிஞரே. இதற்கு நான் மட்டும் விதிவிலக்கா?” அவள் முகத்தில் முகாமிட்டிருந்த நீர்த்துளிகளைத் துடைத்தவன் இதமாக அணைத்துக் கொண்டான்.
“இப்போதெல்லாம் முன்னம் இருந்ததை விட ரொம்பவும் அழகாக இருக்கிறாய். சரியாகச் சொன்னால் ஜொலிக்கிறாய்.” கணவனின் பாராட்டில் உச்சி குளிர்ந்தவள் அவன் முகம் பார்த்துச் சோர்வாகச் சிரித்தாள்.
“போகலாம் கண்ணம்மா. அதிகம் வெளியே திரியக் கூடாதாம், வானதியின் கட்டளை.” சொல்லிய படியே மனைவியை அழைத்துக் கொண்டு காருக்குப் போனான் யுகேந்திரன். மழை இன்னும் கொஞ்சம் கனமாகத் தூற ஆரம்பித்திருந்தது.
………………………………………………………………………………………………….
காலம் அதன் போக்கில் வேகமாக இரண்டு மாதங்களைக் கடந்திருந்தது. எல்லோரும் தங்கள் வேலைகளில் மூழ்கிப் போனார்கள், அன்பரசைத் தவிர.
வானதி இல்லாமல் மனிதர் பாதியாகிப் போயிருந்தார். வீடு வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. ‘தான்’ என்ற கர்வம் தொலைந்து போய், தான் இத்தனை நாள் வாழ்ந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் புரிந்தது.
யாருமற்ற தனிமை அவரை வெகுவாக வாட்டியது. பழைய படி அரசியல், கட்சி என்று எதிலும் ஒரு பிடிப்பு வரவில்லை. உண்பதைக் கூடக் கடமைக்காகத் தான் செய்தார்.
அன்று ஒரு வேலை விஷயகாக மின்சார சபை வரை வந்திருந்தார் அன்பரசு. கூடவே நான்கைந்து தொண்டர்கள். வந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கவும் முருகனை விட்டு விசாரிக்கச் சொன்னார். போன வேகத்திலேயே திரும்பி வந்தார் முருகன்.
“ஐயா, சப் கலெக்டரோட இன்னும் கொஞ்சப் பேர் ஏதோ வேலை விஷயமா வந்திருக்காங்களாம். நம்ம சின்ன அம்மிணியை நான் அங்க பார்த்தேன்.”
“ம்… தாமதம் ஆகுமாமா?” மீசையை நீவியபடியே கேட்டார் அன்பரசு.
“இல்லைங்க ஐயா… இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்களாம். பெருமட்டுக்கு வேலையை முடிச்சிட்டாங்களாம்.”
“ம்…” காரை விட்டிறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தார் அன்பரசு. அந்தப் பெண்ணைப் பற்றிய பேச்சு வந்ததும் மனம் ஏனோ இளகிப் போனது.
சத்தியமூர்த்தி நடந்தது எல்லாவற்றையும் அன்பரசுவிடம் சொல்லி இருந்தார். முழுதாக அந்தப் பெண்ணை மனம் மன்னிக்கா விட்டாலும் அவள் தனக்காக வானதியிடம் பேசினாள் என்று கேள்விப் பட்டதிலிருந்து மனம் லேசாக வளைந்து கொடுத்தது.
கர்ப்பமாக வேறு இருக்கிறாளாமே… அந்தச் சிந்தனை ஓடும் போதே முகத்தில் ஒரு இனம்புரியாத கர்வம் குடியேற கை தானாக எப்போதும் போல் மீசையை நீவிக் கொடுத்தது.
தூரத்தில் நித்திலா நடந்து வருவது தெரிந்தது. தானாகப் போய்ப் பேச சங்கடப் பட்டாலும் தன் இருப்பை உணர்த்தி விடும் நோக்கோடு காரை விட்டு இறங்கினார் அன்பரசு.
சங்கடமெல்லாம் அன்பரசுவிற்குத்தான், நித்திலாவிற்கு அல்ல. இவரைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று அங்கே வந்தவள் அன்பரசுவின் காலைத் தொட்டு வணங்கினாள். மனிதருக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.
“கண்ணு கண்ணு… என்ன பண்ணுறே? அதுவும் இந்த மாதிரி நேரத்துல…” பதறிப் போனார் அன்பரசு.
“பரவாயில்லை மாமா. தாத்தா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிறதால எம் புள்ளைக்கு ஒன்னும் ஆகிடாது.” சொல்லிய படியே சிரித்தாள் நித்திலா. அந்தச் சிரிப்பு அன்பரசுவையும் தொற்றிக் கொண்டது.
“எப்படி இருக்கீங்க மாமா? வேளா வேளைக்கு சாப்பிடுறீங்களா?” அந்தக் கேள்வியில் மனிதரின் முகம் மீண்டும் கடினப்பட்டுப் போனது. ஒற்றைப் புருவம் மேலேற ஒரு பார்வை பார்த்தவர் சட்டென்று நகர்ந்து விட்டார்.
நித்திலாவுக்குக் கொஞ்சம் கஷ்டமாகிப் போனது. அவருக்குத் தன் மேல் கோபம் இருப்பது நியாயம் தான் என்று புரிந்தாலும் மனது லேசாக வருத்தப்பட்டது.
யுகேந்திரன் மேல் காதல் கொண்ட நாளிலிருந்து தந்தை ஸ்தானத்தில் தான் வைத்துப் பார்த்திருந்த மனிதர். இன்று தன்னைப் புறக்கணித்து விட்டுப் போகும் போது ஏனோ கொஞ்சம் வேதனையாகத் தான் இருந்தது.
சட்டென்று விலகி நடந்த அன்பரசுவிற்கும் மனம் ஏனோ அடித்துக் கொண்டது. வாயும் வயிறுமாக இருக்கும் பெண். அதுவும் தன் குடும்ப வாரிசைச் சுமக்கிறாள். அவளிடம் போய் இப்போது இப்படி நடந்து கொண்டோமே…
மனம் கேட்காமல் நடந்து போனவர் திரும்பிப் பார்த்தார். நித்திலா அரசு வாகனத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அவளுக்குச் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த சைக்கிள் ஒன்று அவளைக் குறி வைத்து வந்தாற் போல இருந்தது அன்பரசுவிற்கு.
ஏதோ சரியில்லை என்று மனசு சொல்ல சைக்கிள் ஓட்டுபவனைக் கூர்ந்து பார்த்தார் அன்பரசு. சைக்கிளின் ஹான்டில் பாரோடு சேர்த்தபடி யாருக்கும் தெரியாமல் அருவாள் ஒன்றை வைத்திருந்தான்.
“அம்மிணி…” கூவிய படி வேட்டியை மடித்துக் கட்டியவர் ஓடி வந்து நித்திலாவை இழுப்பதற்குள் வீசிய அருவாள் அன்பரசுவின் கையில் இறங்கி இருந்தது.
“முருகா…” அன்பரசுவின் கர்ஜனையில் அந்த இடமே அதிர்ந்தது. கண நேரத்திற்குள் நடந்து முடிந்திருந்த அந்த நிகழ்வைச் சுற்றி இருந்தவர்கள் கிரகிக்கும் முன் சைக்கிள் சிட்டாகப் பறந்திருந்தது.
ட்ரைவர் முருகனும் அன்பரசுவோடு கூட வந்தவர்களும் ஓடி வந்த போது, நித்திலா மாமனாரின் இடது கையில் தொய்ந்து சாய்ந்து கொண்டிருந்தாள். வலது கையில் ரத்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.
“என்ற மருமகளைப் புடி முருகா…” அன்பரசுவின் உத்தரவில் நித்திலாவைத் தாங்கிக் கொண்டார் முருகன். அத்தனை ரத்தத்தைப் பார்த்த மாத்திரத்தில் மூர்ச்சை ஆகியிருந்தாள் பெண்.
காரிலிருந்த சிறிய டவள் ஒன்றைக் கொண்டு வந்தவர்கள் அன்பரசுவின் கையை இறுக்கிப் பிடித்தார்கள். அப்போதும் ரத்தம் கட்டுப்படவில்லை, டவள் நனைந்து போனது.
“ஐயா! சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம். ரத்தம் நிக்கிற மாதிரித் தெரியலை.”
“முதல்ல என்ற மருமகளைக் கார்ல ஏத்துங்கப்பா. ஆண்டவா! வாயும் வயிறுமா இருக்கிற பொண்ணு… என்ன ஆச்சுன்னு தெரியலையே…” புலம்பிய படியே காரில் ஏறினார் அன்பரசு. முருகன் தன் சின்ன அம்மிணியைப் பத்திரமாக காரில் கிடத்தி இருந்தார். இந்தப் பெண்ணுக்கு ஒன்றென்றால் தம்பி தாங்க மாட்டாரே என்று மனம் கிடந்து பதறியது அவருக்கு.
கட்டுமஸ்தான உடம்பென்றாலும் அதிகமாக ரத்தம் வெளியேறவும் லேசாகக் கண்கள் சொருகியது அன்பரசுவிற்கு. முருகனின் கைகளில் கார் வேகமெடுத்தது.
ஹாஸ்பிடலை வந்தடைந்ததும் உடனேயே இருவருக்கும் சிகிச்சையை ஆரம்பித்திருந்தார்கள் வைத்தியர்கள். நினைவு தப்புவதற்கு முன்பும்,
“முருகா… சின்ன அம்மிணி பத்திரம்.” என்று சொல்லி விட்டுத்தான் கண்களை மூடினார் அன்பரசு.
அவசர அவசரமாக அவருக்கு ரத்தம் ஏற்றினார்கள். அருவாள் நல்ல ஆழமாக வலது கையில் இறங்கி இருந்தது. அணிந்திருந்த வேஷ்டி சட்டையெல்லாம் ரத்தக் கறையாக இருக்க அனைத்தையும் அகற்றி இருந்தார்கள். நித்திலாவிற்கும் முதலுதவி நடந்து கொண்டிருந்தது.
முருகனுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. யுகேந்திரனை அழைத்தவர் அவசரமாகத் தகவல் சொல்லி இருந்தார். தோப்பில் வேலையாக நின்றிருந்தவன் அனைத்தையும் உதறி விட்டு அடுத்த அரை மணி நேரத்தில் ஹாஸ்பிடலில் நின்றிருந்தான்.
அப்பா ஒரு புறம், மனைவி இன்னொரு புறம், குழந்தைக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்ற பயம் மற்றொரு புறம் என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.
வானதிக்கும் முருகனே தகவல் சொல்லி இருந்தார். அப்பாவும் மகளும் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார்கள்.
“என்னப்பா யுகேந்திரா? என்ன ஆச்சு?” வானதிக்குப் பேச்சை முந்திக்கொண்டு அழுகை வந்தது.
“தெரியலையேம்மா… கால் வரவும் பதறியடிச்சுக்கிட்டு ஓடி வந்தேன். நான் யாரைன்னு யோசிப்பேன்?” யுகேந்திரனின் குரலும் தவித்தபடியே வந்தது.
“யுகேந்திரா! கவலைப் படாதே. ஒன்னும் ஆகாது. நீயே இப்படிக் கிடந்து தவிச்சா அம்மாக்கு யாரு ஆறுதல் சொல்லுறது?” பேரனுக்கு ஜாடை மாடையாக வானதியின் நிலைமையை ஞாபகப் படுத்தினார் சத்தியமூர்த்தி.
ஹாஸ்பிடலில் இருந்து போலீசுக்குத் தகவல் போயிருந்ததால் இதுவரை அவர்களுக்கு வாக்கு மூலம் கொடுத்துக் கொண்டிருந்த முருகன் அப்போதுதான் ரூமை விட்டு வெளியே வந்தார்.
“தம்பீ…” யுகேந்திரனைக் கண்ட மாத்திரத்தில் பாய்ந்து வந்தார் மனிதர்.
“முருகா! என்ன ஆச்சு?” யுகேந்திரனை முந்திக் கொண்டு வந்தது வானதியின் குரல்.
“அம்மிணி! நானும் ஐயாவும் ஒரு வேலையா ஈ பி வரைக்கும் வந்திருந்தோம். அங்க நம்ம சின்ன அம்மிணியும் வந்திருந்தாங்க. ஐயாவோட பேசிட்டு அப்பால போகும் போது யாருன்னு தெரியலை… ஒரு காவாலிப் பய அருவாளோட வந்திருக்கான்.”
முருகன் சொல்லும்போது யுகேந்திரனின் கை முஷ்டி இறுகியது. வானதி கண்கள் குளமாக நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார்.
“யாரு செஞ்ச புண்ணியமோ… இன்னைக்கு நம்ம ஐயாவை அந்த இடத்துக்குச் சாமி கொண்டு வந்து சேத்திருக்கு. அருவாளோட அந்தப் பொறுக்கி வந்ததை நம்ம ஐயா பார்த்துட்டாங்க. ஓடிப் போய் சின்ன அம்மிணியை இழுக்கும் போது வீசின அருவாள் ஐயா கையில இறங்கிருச்சு.”
“ஐயையோ!” வானதியின் கண்களில் கண்ணீர் இறங்கியது.
“அவ்வளவு ரத்தத்தைப் பார்த்த உடனே நம்ம சின்ன அம்மிணி மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க.”
“என்ன சொல்லுற முருகா? நித்திலா கீழே விழுந்தாளா?” அந்தச் சேதியைக் கேட்ட போது வானதியின் மனம் ஏதேதோ எண்ணிப் பதறியது.
“ஆ… இல்லை அம்மிணி… நம்ம ஐயாவை என்ன நினைச்சீங்க? ஒரு கைல ரத்தம் வழியுது… அடுத்த கையால நம்ம சின்ன அம்மிணியைத் தாங்கிக் கிட்டாங்க இல்லை.” அந்த நிலைமையிலும் பெருமை பேசினார் முருகன்.
“சின்ன அம்மிணியையும் கார்ல தூக்கிப் போட்டுக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு வேகமா வந்தோம். ஆனா அதுக்குள்ள ஐயா மயங்கிட்டாங்க. அப்பவும் எங்கிட்ட ‘முருகா சின்ன அம்மிணி பத்திரம்’ னு சொன்னாங்க அம்மிணி.”
முருகனின் வாக்கு மூலத்தில் அங்கிருந்த மூவரும் ஸ்தம்பித்துப் போனார்கள். வானதி பொங்கிப் பொங்கி அழ, யுகேந்திரன் மறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
சீஃப் டாக்டர் ரூமை விட்டு வெளியே வரவும் எல்லோரின் கவனமும் அங்கே சென்றது. யுகேந்திரன் முன்னே செல்லவும் டாக்டர் அவனை அடையாளம் கண்டு கொண்டார்.
“பயப்பட ஒன்னுமில்லை தம்பி. ப்ளட் கொஞ்சம் கூடுதலாவே போயிருக்கு. அப்பா க்ரூப் எங்க கிட்ட இருந்ததால உடனேயே குடுக்க ஆரம்பிச்சுட்டோம். பல்ஸ் நார்மலாத்தான் இருக்கு.”
“டாக்டர்… என்னோட வைஃப்…”
“வெறும் மயக்கம் தான். நிறைய ப்ளட்டைப் பார்த்த உடனே ஷாக் ஆகிட்டாங்க. அவ்வளவுதான்.”
“இல்லை டாக்டர்… அவங்க…” யுகேந்திரனின் தடுமாற்றத்தில் புன்னகைத்தார் டாக்டர்.
“உங்க ட்ரைவர் சொன்னார்ப்பா. டோன்ட் வொர்ரி, பேபிக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை.” அந்த வார்த்தைக்குப் பின் தான் ஏல்லோருக்கும் மூச்சு சீரானது.
“தான்க் யூ டாக்டர்.” யுகேந்திரன் ஆத்மார்த்தமாகச் சொல்லப் புன்னகைத்தார் டாக்டர்.
நித்திலாவின் அறைக்குள் எல்லோரும் நுழைய சோர்வாக அமர்ந்திருந்தாள் பெண். உள்ளே வந்தவர்களைக் கண்டதும் அவள் கண்கள் தானாகக் கலங்கியது.
“நித்திம்மா…” தாவி வந்து அணைத்துக் கொண்டார் வானதி.
“அத்தை… மாமா… மாமாக்கு எப்படி இருக்கு? பெரிய அருவாள் அத்தை. எம்மேல… எம்மேல… மாமாதான்…” மேலே பேச முடியாமல் திணறினாள் இளையவள்.
“ஒன்னுமில்லைடா… மாமாக்கு ஒன்னுமில்லை. நீ டென்ஷன் ஆகாதடா. அது குழந்தைக்கு நல்லதில்லை. நீ இப்போ அமைதியா இருக்கணும் நித்திம்மா.” சொன்னவர் யுகேந்திரனை அர்த்தத்துடன் பார்த்து விட்டு ரூமை விட்டு வெளியேறி விட்டார்.
தனிமை கிடைக்கவும் நித்திலாவை அள்ளி அணைத்துக் கொண்டான் யுகேந்திரன். கைகள் மென்மையாக அவள் வயிற்றைத் தடவிக் கொடுத்தது.
“யுகி… எவ்வளவு பெரிய அருவாள் தெரியுமா? மாமாவோட சத்தத்துக்குத் திரும்புறேன்… அந்த அருவாள் என்னை நோக்கி வருது. அந்த நிமிஷம் எனக்கு உங்க ஞாபகம் தான் வந்துது. இனி என்னோட யுகியை என்னால பார்க்க முடியாதான்னு தான் தோணிச்சு.”
அவள் பேசி முடிக்கவும் அவன் அணைப்பு இன்னும் இறுகிப் போனது. நடந்ததை நினைத்தும் பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தான்.
“நித்திம்மா… நீ இப்போ ரொம்ப அலட்டிக்கக் கூடாது கண்ணம்மா. அது பேபிக்கு நல்லது இல்லைடா. இங்கப்பாரு… எதைப் பத்தியும் யோசிக்காம அமைதியா இருடா.”
“எப்படி யுகி? மாமா மட்டும் இல்லைன்னா இப்போ நீங்க என்னோட…” அவளை மேலே பேச விடாமல் வாயை மூடினான் யுகேந்திரன்.
“சொல்லாத கண்ணம்மா.” அவன் கைகளை விலக்கியவள் அவனைக் கண்கள் கலங்கப் பார்த்தாள்.
“என்னடா?”
“மாமா பாவம் இல்லை யுகி?”
“ம்…”
“அவங்க ரொம்ப நல்லவங்க யுகி. அவங்களைத தண்டிக்க நினைக்காதீங்க.” கலங்கிய குரலில் சொன்ன மனைவியை அணைத்துக் கொண்டான் யுகேந்திரன். அவன் கண்களும் கலங்கிப் போயிருந்தன.
“இதுக்கு மேலேயும் அவங்களைத் தனியா விடுறது நியாயம் இல்லை யுகி. ப்ளீஸ்… அத்தைக்கிட்ட பேசுங்க.”
“சரிடா… நான் பேசுறேன். நீ கொஞ்சம் அமைதியா இருடா.”
“யுகி… மாமாவைப் பார்த்தீங்களா?”
“இல்லைம்மா… மயக்கமா இருக்காங்க. ப்ளட் நிறையப் போயிருக்கு இல்லையா? டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு டாக்டர் சொன்னாங்க.”
“ஓ… அப்போ அத்தை மாமா கூட இன்னும் பேசலையா?”
“பேசுவாங்க கண்ணம்மா… நீ கொஞ்சம் அமைதியா இரு நித்திலா. நீ சொல்லுற மாதிரியே எல்லாம் நான் பண்ணுறேன்டா.”
“கண்டிப்பாப் பண்ணுவீங்களா யுகி.”
“கண்டிப்பாப் பண்ணுறேன். நம்ம வீட்டுக்கே நாம எல்லாரும் போகலாம். அம்மாவை அப்பாக் கூட பேச வைக்கலாம். எல்லாமே பண்ணலாம் நித்திலா. நீ கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டு தூங்கும்மா… ப்ளீஸ்.”
“யுகி…”
“எதுவும் பேசக் கூடாது. அதான் நான் சொல்லிட்டேன்ல. உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லையா நித்திலா?”
“இருக்கு யுகி.”
“அப்போ கண்ணை மூடிக்கிட்டு தூங்கு.” பெரிய போராட்டத்திற்கு மத்தியில் அவளைச் சமாதானப் படுத்தி இருந்தான் யுகேந்திரன்.
அம்மாவிடம் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? ஒன்றும் புரியவில்லை. ஆனால் பேசவேண்டும். இதை இப்படியே விட்டு விட முடியாது. ஏதேதோ எண்ணியபடி வானதியைத் தேடிக் கொண்டு போனான் யுகேந்திரன், அங்கே இன்னொரு எரிமலை வெடித்துக் கொண்டிருப்பதை அறியாமல்.