nk18
nk18
நிலவொன்று கண்டேனே 18
நித்திலாவிற்கு அது ஐந்தாவது மாதம். வயிறு லேசாக மேடிட்டிருந்தது. அலங்காரத் தேர் போல அவள் அசைந்தாடி நடப்பதை ரசிப்பதே யுகேந்திரனின் முழு நேர வேலையாக இருந்தது.
தோட்ட வேலையும் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நித்திலாவும் தோப்புக்குச் சென்று விடுவாள்.
கணவனின் தோளில் சாய்ந்த படி இருவரும் இலக்கியம் பேச ஆரம்பித்தார்கள் என்றால் பொழுது போவதே தெரிவதில்லை.
அப்போது நேரம் காலை ஆறு முப்பது. கூடிய வரை வீட்டில் இருக்கும் நேரங்களை எல்லோரோடும் செலவழிப்பாள் நித்திலா.
வானதி அனைவருக்கும் காஃபி கொடுக்க, அன்பரசு பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தார். கணவன் மனைவிக்குள் எந்த விதமான முன்னேற்றமும் தெரியவில்லை.
அன்பரசுக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இருப்பது போலவே தோன்றவில்லை. மனைவி அருகிலிருப்பதே சொர்க்கம் என்பது போல அமைதியாகிப் போனார்.
நித்திலாவிற்குத் தான் மண்டை காய்ந்து போனது. யுகேந்திரனை வேறு துளைத்து எடுப்பாள்.
‘விடு கண்ணம்மா… அவங்க என்ன சின்னப் பசங்களா? நாம சமரசம் பண்ணி வைக்க. எப்போ தோணுதோ அப்போ பேசிக்கட்டும்.’ என்று முடித்து விடுவான்.
அன்று பத்திரிகையின் தலைப்புச் செய்தி பால்பண்ணை உரிமையாளரைப் பற்றி இருந்தது. அவர் பெயர் ராஜலிங்கம். கடும் முயற்சியின் விளைவாக அவருக்கு பெயில் கிடைத்திருந்தது.
பேப்பரை நித்திலாவிடம் நீட்டினார் அன்பரசு. வாங்கிப் பார்த்தவள் புன்னகைத்தாள்.
“நேத்தே ஆஃபீசுக்கு நியூஸ் வந்திடுச்சு மாமா.” இவர்கள் பேச்சைக் கவனித்த படி இருந்த வானதி சட்டென்று பேப்பரை வாங்கிப் பார்த்தார். முகம் இருண்டு போனது.
“இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா மாமா… புதுசா ஒரு பண்ணை ஆரம்பிக்கிறதுக்கு லைசன்சுக்கு அப்ளை பண்ணி இருக்காங்க. கெட்டிக்காரத்தனமா மகனோட மாமனார் பெயர்ல அப்ளை பண்ணி இருக்காங்க.”
மருமகள் சொல்வதை அமைதியாக உள்வாங்கிக் கொண்டிருந்தார் அன்பரசு. யுகேந்திரன் முகத்திலும் யோசனை தெரிந்தது.
“இங்கப்பாரு நித்திலா… நீ இப்போ இருக்கிற நிலைமையில இதையெல்லாம் போட்டுக் குழப்பிக்காதே.” வானதியின் பேச்சில் நித்திலா லேசாக அதிர்ந்து போனாள்.
“அத்தை… அது…” ஏதோ பேச ஆரம்பித்தவளை யுகேந்திரனின் பார்வை தடுத்தது.
“நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுதும்மா. இது உன்னோட டியூட்டி, நான் இல்லேங்கலை. ஆனா… இப்போ நீ இருக்கிற நிலைமையில… எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலைம்மா.” வானதியின் முகத்தில் கவலை அளவுக்கதிமாகவே தெரிந்தது.
“நம்ம மக்கள் ரொம்பவே பழி பாவத்துக்கு அஞ்சமாட்டேங்கிறாங்க நித்திலா. நீ நல்லது தான் பண்ண நினைக்கிறே. ஆனா உனக்கு அவங்க பிரதி உபகாரமா பண்ணினது எல்லாம் என்ன? ஸ்கூட்டியை எரிச்சாங்க… அதுக்கப்புறமா…”
“அம்மா… எதுக்கு இப்போ தேவையில்லாம பழசையெல்லாம் பேசிக்கிட்டு.” அவசரமாக அம்மாவை இடைமறித்தது மகனின் குரல்.
“எனக்கு என்னோட நாடு முக்கியம் யுகி. ஆனா, அதை விட என்னோட வீடு ரொம்பவே முக்கியம்பா.” வலியோடு சொன்ன வானதி சமையலறைக்குள் போய்விட்டார்.
மாமனாரின் முகத்தைப் பார்த்தாள் நித்திலா. அவளின் தலையைத் தடவிக் கொடுத்தவர் எழுந்து வெளியே போய்விட்டார்.
“கண்ணம்மா… வா… நீ வந்து ரெடியாகு. ஆஃபீசுக்கு லேட்டாகுது இல்லையா?” அவள் கைப்பிடித்து ரூமிற்குள் அழைத்துச் சென்றான் யுகேந்திரன்.
“இங்கப்பாரு கண்ணம்மா… அம்மாவை நீ தப்பா எடுத்துக்காதே.”
“என்ன பேச்சு யுகி இது? நான் எதுக்கு அத்தையைத் தப்பா நினைக்கப் போறேன்?”
“இல்லைடா… அவங்களுக்கு உன்னோட ஹெல்த் ரொம்பவே முக்கியம். அதனால தான் இப்படிப் பேசுறாங்க.”
“எனக்கும் புரியுதுப்பா. அதுக்காக கடமையை செய்யாம இருக்க முடியுமா?”
“அதுவும் சரிதான், இல்லேங்கலை. நீ அதிரடியா எந்த நடவடிக்கையும் எடுக்காத கண்ணம்மா. எப்படியும் அவங்களுக்கு லைசன்ஸ் கிடைக்காம பண்ணிடலாம்.”
“பயப்படுறீங்களா யுகி?” அவள் கேட்டு முடிக்கும் போது அவளை இறுக அணைத்திருந்தான் யுகேந்திரன்.
“சத்தியமாப் பயப்படுறேன் கண்ணம்மா. உனக்கு ஏதாவது ஆகிடுமோ? நம்ம குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் நான் பயப்படுறேன்.” அவன் பதிலில் ஆச்சரியப் பட்டாள் நித்திலா.
“என்ன யுகி இப்படிப் பேசுறீங்க?”
“நித்திம்மா… வாழ்க்கையில சில விஷயங்களுக்குப் பயப்படத்தான் வேணும். அவங்க எவ்வளவு பெரிய தைரியசாலியா இருந்தாலும்.”
“கல்யாணம் பண்ணினது தப்போன்னு முதல் முதலா நினைக்கத் தோணுது கவிஞரே!” அண்ணாந்து அவன் முகம் பார்த்துச் சிரித்தாள் நித்திலா. அவன் முகத்தில் இன்னதென்று வகைபிரித்துக் கூறமுடியாத ஒரு புன்னகை தோன்றியது.
ஆபீசில் கொஞ்சம் பிஸியாக இருந்தாள் நித்திலா. காலையில் வீட்டில் நடந்த நிகழ்வுகள் மனதுக்குப் பாரமாக இருந்தாலும் அதை ஒரு மூலையில் தள்ளிவிட்டு நடப்புக்கு வந்திருந்தாள்.
கதவு மெலிதாகத் தட்டப்படும் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தாள். அன்பரசு தான் வந்து கொண்டிருந்தார்.
“மாமா…”
“உக்காரும்மா…” அவசரமாக எழுந்த பெண்ணைக் கையமர்த்தித் தடுத்தார் அன்பரசு.
“சொல்லுங்க மாமா… ஏதாவது முக்கியமான விஷயமா?”
“ஆமாம்மா… வீட்டுல வச்சு இதைப் பேச முடியாது. அதான் நான் இங்க கிளம்பி வந்திட்டேன்.”
“ஓ… பரவாயில்லை, எதுவா இருந்தாலும் சொல்லுங்க மாமா.”
“கண்ணு… உன்னோட அத்தையை நீ தப்பா நினைக்கக் கூடாதும்மா. ஏதோ ஒரு ஆதங்கத்துல இன்னைக்கு அப்படிப் பேசிட்டா.”
அன்பரசுவின் பேச்சில் நித்திலாவின் முகத்தில் புன்னகை தோன்றியது. மகன் வீட்டில் பேசியதை அப்பா ஆஃபீசில் பேசுகிறார் என்று எண்ணிக் கொண்டாள்.
“இல்லை மாமா, நான் அத்தையைத் தப்பா நினைக்கலை.”
“தப்பா நினைக்கலைன்னாலும் மனசுல ஒரு வருத்தம் தோணியிருக்கும். என்னடா, நம்ம கடமையைச் செய்ய விடாமக் கையைக் கட்டுறாங்களேன்னு?” மாமனாரின் சாமர்த்தியத்துக்கு ஒரு ‘சபாஷ்’ போடத் தோன்றியது நித்திலாவிற்கு.
“ராஜலிங்கம் அவ்வளவு மோசமான ஆள் கிடையாது கண்ணு. எங்கேயோ தப்பு நடக்குது. நம்ம பசங்க தான், சொன்னாப் புரிஞ்சுக்குவாங்க. மாமாக்கு ஒரு வாரம் டைம் குடும்மா. நான் அதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணுறேன்.” நிதானமாகச் சொன்னார் அன்பரசு.
“மாமா… இந்தக் கரிசனம் மருமகள் மேலேயா? இல்லை… அத்தை இன்னைக்கு ரொம்ம்ம்ப வருத்தப்பட்டாங்கன்னா?” சரியாக அன்பரசுவின் நாடியைப் பிடித்தாள் நித்திலா.
முகத்தில் அசடு வழிந்தாலும் கம்பீரமாகக் கை மீசையைத் தடவிக் கொண்டது.
“அம்மிணி… இப்போ நான் உண்மையைச் சொல்லவா? இல்லை… பொய்யைச் சொல்லவா?”
“பொய்யெல்லாம் வேணாம் மாமா. அந்த அழகான உண்மையை உங்க வாயால சொல்லுங்க.”
“போக்கிரி…”
“மழுப்பாதீங்க மாமா.”
“சரி கண்ணு… நான் ஒத்துக்கிறேன். உங்க அத்தைக்காகத் தான் இவ்வளவு தூரம் யோசிக்கிறேன், போதுமா?”
“எப்படி மாமா? இவ்வளவு அன்பை மனசுல வச்சுக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம இருக்க முடியுது உங்களால?” நித்திலாவின் பேச்சில் கசப்பாகப் புன்னகைத்தார் அன்பரசு.
“அவளுக்கு நான் குடுத்த வலி கொஞ்சம் அதிகம் இல்லையாம்மா? அது அத்தனை சீக்கிரம் ஆறாது. வேற யாராவதா இருந்தா முகத்துல கூட முழிக்க மாட்டாங்க. ஆனா உங்கத்தை என் கூடவே இருக்காளே… அதுவே எனக்குப் போதும்மா.”
உணர்ச்சி மேலிடக் கரகரப்பாகப் பேசியவர் சட்டென்று எழுந்து வெளியே போய்விட்டார். போகும் மனிதரையே பார்த்தபடி இருந்தாள் நித்திலா.
டின்னர் டைம். எல்லோரும் டைனிங் டேபிளில் அமைதியாக உண்டு கொண்டிருந்தார்கள். வானதி பார்த்துப் பார்த்துப் பரிமாறிக் கொண்டிருந்தார்.
கணவரோடு பேச்சு வார்த்தை இல்லை என்பதெல்லாம் வேறு விஷயம். அன்பரசுவின் ப்ளேட்டில் என்ன தீர்ந்தாலும் உடனேயே அங்கு வானதி ஆஜரானார்.
நித்திலா கணவனிடம் கண்களால் அதைச் சுட்டிக்காட்ட யுகேந்திரன் வாய்க்குள் சிரித்துக் கொண்டான். சும்மா உட்கார்ந்து சாப்பிட்டால் அது நித்திலா அல்லவே!
“அத்தை… இன்னும் எத்தனை நாளைக்குத் தான் மாமா கூட பேசாம இருப்பீங்க. ஏதாவது பேசுங்க அத்தை.”
அன்று மதியம் அன்பரசுவை ஆஃபீசில் பார்த்ததில் இருந்து நித்திலாவை இந்தக் கேள்வி அரித்துக் கொண்டே இருந்ததனால் கேட்டே விட்டாள் பெண்.
வாய் அருகினில் சாப்பாட்டைக் கொண்டு போன அன்பரசுவின் கை அந்தரத்தில் நின்றது.
“நித்திலா… பேசாம சாப்பிடு.” வானதியின் குரல் ஒரு வித பதட்டத்தோடு வந்தது.
“அம்மா! அவ இப்போ என்ன தப்பா சொல்லிட்டா? நித்திலா கேக்கிறது நியாயம் தானே? இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அப்பாவோட பேசாம இருப்பீங்க? பேசுங்கம்மா.” யுகேந்திரனும் லேசாக வற்புறுத்தினான்.
வானதி சட்டென்று எதுவும் சொல்லவில்லை. தன்னை நிதானப் படுத்திக் கொள்ள, கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டார்.
“யுகேந்திரா! உயிரைக் கொடுத்து உன்னோட பொண்டாட்டியைக் காப்பாத்தின உன்னோட அப்பாவை நீ மன்னிக்கலாம். ஆனா… என்னோட நம்பிக்கையில மண்ணை அள்ளிப் போட்ட எம் புருஷனை மன்னிக்க நான் தயாரில்லை.”
வார்த்தைகள் முனையில் விஷம் தோய்ந்த அம்பு போல அத்தனை வீரியமாக வந்து விழுந்தது. வானதி சொல்லி முடித்த போது அன்பரசுவின் முன்னால் இருந்த ப்ளேட் எங்கேயோ பறந்து போய் வீழ்ந்தது. செயாரை உதைத்துத் தள்ளியவர் சின்க்கில் கை கழுவினார்.
“இப்போ எதுக்கு அம்மிணி உம் மாமனாருக்கு இவ்வளவு கோபம் வருது? நான் ஏதாவது சொன்னா சாப்பிடாம பாதியிலேயே எந்திரிச்சு போயிடுவாங்களோ?” வானதிக்கு இத்தனை கோபம் வந்து நித்திலா இதுவரை பார்த்ததில்லை.
அன்பரசு எதையும் கவனிக்காமல் ரூமிற்குள் போய் விட்டார். வானதியும் கிச்சனுக்குள் சென்றுவிட யுகேந்திரனைப் பரிதாபமாகப் பார்த்தாள் நித்திலா.
“சாரி யுகி. நான் ஏதோ நன்மை நடக்கும்னு பேசப் போக இப்படியாகிப் போச்சு. சாரிப்பா.” மனைவியின் கவலையில் லேசாகப் புன்னகைத்தான் யுகேந்திரன்.
“என்னப்பா? நான் இவ்வளவு சீரியசாப் பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க சிரிக்கிறீங்க?”
“நித்திம்மா… பேசாமச் சாப்பிடு. ஆனா, நடக்கிற கூத்தை மட்டும் பாரு.”
“கூத்தா?”
“ம்… மிஸ்டர். அன்பரசை என்ன நினைச்ச நீ? பக்காவா ப்ளான் பண்ணித்தான் மனுஷன் பாதி சாப்பாட்டுல எந்திரிச்சு போய்ட்டாரு.”
“ஓ! ஏன் அப்படிப் பண்ணினாங்க?”
“வானதி மேடமுக்கு நானோ இல்லை அப்பாவோ பாதி சாப்பாட்டுல எந்திரிச்சா மனசு தாங்காது. எனக்கு ஏதாவது வானதி கிட்ட ஆகணும்னா நானும் இதே டெக்னிக்கைத் தான் யூஸ் பண்ணுவேன்.”
“அட! சொல்லவே இல்லையே?”
“ம்… இப்பப் பாரு. பால் க்ளாசோட அம்மணி வருவாங்க. நீ கண்டுக்காதே. மூஞ்சைத் தூக்கி வெச்சுக்கிட்டு நீ பாட்டுக்குச் சாப்பிடு. பாலை அவங்களே அவங்க புருஷனுக்குக் குடுக்கட்டும்.”
“யுகீ! சூப்பர் ஐடியா. இப்பப் பாருங்க நம்ம பர்ஃபோமன்ஸை.”
“அம்மிணி! ஓவர் ஆக்ட் பண்ணிடாதே. வானதி கண்டு பிடிச்சிடும்.”
“நோ… நோ…” அவர்கள் பேசி முடித்த போது கிச்சனில் ஏதோ பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் கையில் பால் க்ளாசோடு வந்தார் வானதி.
கணவனும் மனைவியும் ஏதோ மன சங்கடத்தில் இருப்பவர்கள் போல முகத்தை வைத்துக் கொண்டு உணவை அளைந்து கொண்டிருந்தனர்.
“ம்ப்ச்…” சலிப்பாக உச்சுக் கொட்டியவர் ரூமிற்குள் சென்றார். நடையில் லேசான தயக்கம் இருந்தது. அவர் உள்ளே சென்றது தான் தாமதம் இளையவர்கள் இருவரும் ரகசியமாகப் புன்னகைத்துக் கொண்டார்கள்.
“யுகி… மாமா சொதப்பிட மாட்டாங்களே?”
“மாட்டார்னு நினைக்கிறேன்.” யுகேந்திரன் சொல்லி முடிக்கும் போது ரூமிற்குள் பெரிய வாய்த்தர்க்கம் கேட்டது. நித்திலா பயந்தே போனாள்.
“என்ன யுகி? மாமா சத்தம் தான் கேக்குது. ரொம்பக் கோபமா இருக்காங்களோ?”
“இருக்கலாம்.”
“கோபத்துல அத்தை மேலே கை நீட்டிருவாங்களோ?”
“சேச்சே! வானதி கால்ல வேணும்னா விழுறதுக்கு சான்ஸ் இருக்கு. மத்தபடி… நீ சொன்னது நடக்க வாய்ப்பே இல்லை கண்ணம்மா.”
இங்கே யுகேந்திரன் சொன்னது தான் அங்கே அச்சுப் பிசகாமல் நடந்து கொண்டிருந்தது. ரூமிற்குள் நுழைந்த வானதி யாரோ எதிரிக்கு வைப்பது போல பாலை மேஜை மேல் வைத்து விட்டுத் திரும்பினார். அன்பரசுக்கு வந்ததே கோபம்.
“ஏய் நில்லு! உங்கிட்ட இப்போ நான் பால் கேட்டேனா? உன்னை யாரு இதைக் கொண்டு வரச் சொன்னா?” என்றார்.
‘இத்தனை வயதுக்கு மேல் மருமகளை வீட்டில் வைத்துக் கொண்டு சண்டை போடுவதா?’ என்று நினைத்த வானதி கதவை மூடினார்.
“நான் என்ன சொல்லுறேன், நீ என்ன பண்ணுற?”
“உங்க பிரச்சினை இப்போ என்ன?” நீண்ட நாட்களுக்குப் பின் மனைவி தன் முகம் பார்த்துப் பேசவும் நெகிழ்ந்து போனார் அன்பரசு. ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை.
“ஒழுங்கா உக்காந்து சாப்பிட்டிருந்தா நான் ஏன் இதைத் தூக்கிட்டு வரப்போறேன்.”
“ஒழுங்கா உக்காந்து சாப்பிடுற மாதிரியா இருந்துச்சு உன் பேச்சு? இதுக்கு உன்னோட கையால விஷத்தைக் குடுத்திருக்கலாம் நீ.”
“ஆமாஞ் சாமி. நீங்க பண்ணினதையெல்லாம் இந்தக் காதால கேட்ட பிறகும் அந்த விஷத்தைக் குடிக்காம நிக்கிறேன் பாருங்க, அது என் தப்புத் தான்.” கலங்கிய குரலில் வானதி சொல்லவும் அன்பரசு முழுதாக உடைந்து போனார்.
“வானதி… வானதிக் கண்ணு… ஏம்மா இப்படியெல்லாம் பேசுற?”
“வேற எப்படிப் பேச? அரசியல் அரசியல்னு ஊர் ஊரா அலைஞ்சீங்க. என்னைக்காவது ஏதாவது சொல்லி இருப்பேனா? அம்மாவும் இல்லாம வயசு போன காலத்துல தனியா நிக்கிறாரு என்னோட அப்பா. ஒரு நாள் ஒரு பொழுது அவருக்குப் போய் ஒரு உபகாரம் பண்ணி இருப்பேனா? எம் புருஷன் எங் குடும்பம்னு உங்களுக்காகத் தானே வாழ்ந்தேன். அதுக்கு நீங்க குடுத்த சன்மானமா சாமி இது?”
“வானதி!”
“சந்தி சிரிச்சிது. எம் புள்ளை நொறுங்கிப் போனான். ஏதோ, கடவுள் புண்ணியம். வந்த புகார் அந்த மகாராசிக்கிட்ட வந்தது. இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்? யுகேந்திரனையும் இல்லை உள்ளே தூக்கி வச்சிருப்பாங்க?”
“தப்புத்தான் அம்மிணி… பெரிய தப்புத் தான். கேக்கக் கூடாததைக் கேட்டுப் பண்ணிட்டேன். மன்னிக்க மாட்டியா?”
“எதுக்கு மன்னிக்கணும்? கண்ட களவாணியும் சொல்லுறதைக் கேக்கிறப்போ எம் முகம் ஞாபகம் வரலை? நம்ம புள்ளை முகம் ஞாபகம் வரலை? இதெல்லாம் ஞாபகம் வராத மனுஷனை எதுக்கு மன்னிக்கணும்?”
“சரி, மன்னிக்க வேணாம்… ஆனா எங்கூடப் பேசு கண்ணு. நீ என்ன சொன்னாலும் நான் கேக்கிறேன். இந்த பாழாப்போன அரசியல் உனக்குப் பிடிக்கலையா? விட்டுர்றேன். இனி நீ சொல்லுற படிதான் எல்லாமே.”
“நான் சொன்னா விட்டுருவீங்களா?”
“வேணாம்னு நீ சொல்லு… சத்தியமாத் தூக்கித் தூரப் போட்டிர்றேன்.” அவரை நம்பாத பார்வை பார்த்தார் வானதி.
“என்னை நம்பலாம் கண்ணு.”
“சரி, முதல்ல வந்து சாப்பிடுங்க, வெறும் வயித்தோட தூங்காம.” சொல்லிவிட்டு நகர்ந்த வானதியின் கைப் பிடித்துத் தடுத்தார் அன்பரசு.
“கொஞ்சம் மன்னிக்கலாமில்லை கண்ணு…” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அவர் கேட்ட தோரணையில் பக்கென்று சிரித்தார் வானதி. அந்த ஒற்றைச் சிரிப்பில் அன்பரசு பூரித்துப் போனார்.
“பேசாம சாப்பிட வாங்க.” சொல்லி விட்டு மனைவி நகர அவரைப் பின் தொடர்ந்தார் மனிதர்.
இதுவரை அமைதியாக இருந்த டைனிங் டேபிளில் பாத்திரங்களின் சத்தம் கேட்கவும் லேசாகக் கதவை நீக்கிப் பார்த்தாள் நித்திலா.
அன்பரசு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அவருக்குப் பக்கத்தில் நின்றபடி வானதி பரிமாறுவது தெரிந்தது. வானதி நித்திலாவிற்கு முதுகைக் காட்டியபடி நின்றிருந்ததால் நித்திலாவை அவர் காண வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் வானதியை ஏமாற்ற முடியுமா?
“யாரது… இன்னும் தூங்காம இங்கே வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறது?” திரும்பிப் பார்க்காமலேயே ஒரு அதட்டல் போட்டார்.
“ஐயோ! அத்தை நான் நல்ல தூக்கம். அது உங்க மகன்.” சத்தமாக உளறியவள் ஓடிப்போய்ப் போர்வைக்குள் புகுந்து கொண்டாள்.
“ஹா… ஹா…” யுகேந்திரனின் சிரிப்பு வெளியே இருந்த அன்னை தந்தைக்குமே சிரிப்பை வர வைத்தது.
“யுகி… ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க போல.” என்றாள் முணு முணுப்பாக.
“நான் தான் சொன்னேன்ல கண்ணம்மா. இந்த மீசையை முறுக்கிறதெல்லாம் வெளியே தான். வீட்டுல வானதி வைக்கிறது தான் சட்டம்.”
“என்னப்பா, ரகசியத்தை எல்லாம் இப்படிச் சட்டுன்னு போட்டு உடைக்கிறீங்க?”
“கண்ணம்மா… உனக்கொரு உண்மை தெரியுமா?”
“என்ன?”
“எந்தக் கணவன் தன் மனைவி கிட்டத் தோக்கிறானோ, அவன் தான் வாழ்க்கையில ஜெயிக்கிறான்.”
“அப்படியா? அப்போ ஐயா எப்படி?”
“இதுக்கு பதில் நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா?”
“தெரியும் தான்… இருந்தாலும்… நீங்க உங்க வாயாலே சொன்னா…” அவன் டீ ஷர்ட் காலரைத் திருகிய படியே அவள் சொல்லவும் ஒரு தினுசாகப் பார்த்தான் யுகேந்திரன்.
“ஆஹா! வாய்ஸ் ஒரு ரேன்ஞ்சுல இருக்கே? இது சரி வராதே கண்ணம்மா.” கேலியோடு சொன்னவனின் தோளில் ஓங்கி ஒரு அடி வைத்தவள் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
“ஹேய்! மெதுவா…” அவன் தன்னைக் கண்டு கொண்டதில் முகமெல்லாம் சிவந்து போனது பெண்ணுக்கு. அருகிலிருந்த டேபிளில் ஃபோனை வைத்திருந்தவள் அதைக் கை நீட்டி எடுத்தாள். அந்த இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு வந்தது பாடல்.
‘ராசாவே உன்னை நான் எண்ணித்தான், பல ராத்திரி மூடலை கண்ணைத் தான்…
ஒரு பூ வெச்சேன் பொட்டும் வெச்சேன் வாழத்தான், நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்…
பாடலில் மயங்கிய யுகேந்திரன் மனைவியைப் பின்னோடு அப்படியே அணைத்துக் கொண்டான். கை அவள் மேடிட்ட வயிற்றைத் தடவிக் கொடுத்தது.
நித்திலாவும் தலையைக் கணவன் மார்பில் சாய்த்துக் கொண்டாள். ஏதோ வார்த்தைக்குள் அடங்காத சுகம் ஒன்று அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
ரூமை விட்டு வெளியே கசிந்த பாடல் வரிகளில் அன்பரசு லேசாக மீசையைத் தடவிக் கொள்ள, ஏதோ வேலை இருப்பது போல கிச்சனுக்குள் நழுவிக் கொண்டார் வானதி.