nk20

nk20

நிலவொன்று கண்டேனே 20

நித்திலா ஆஃபீசில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஃபோன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தாள். அன்பரசு தான் அழைத்துக் கொண்டிருந்தார்.

“சொல்லுங்க மாமா.”

“அம்மிணி, ஆஃபீசுக்கு வெளியே தான் நிக்கிறேன். ஃப்ரீயா இருக்கியாம்மா?”

“ஐயோ! என்ன மாமா பேச்சு இது? நீங்க தாராளமா உள்ளே வாங்க.” சொன்னவள் சட்டென்று வெளியே போனாள். எதிரே அன்பரசு நடந்து வருவது தெரிந்தது. கூடவே இன்னும் ஒருவர்.‌

நித்திலாவைப் பார்த்ததும் அன்பரசு தூரத்தில் இருந்த படியே புன்னகைத்தார். கூடவே வருபவரிடம் ஏதோ சொல்லிப் புன்னகைப்பது தெரிந்தது.

“வாங்க மாமா.” வந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்றவள் அமரச் செய்து விட்டுத் தானும் அமர்ந்தாள்.

“சொல்லுங்க மாமா.”

“அம்மிணி, இவர்தான் ராஜலிங்கம்.” அதற்கு மேல் அன்பரசு எதுவும் சொல்லவில்லை. நித்திலாக்குப் புரிந்து போனது.

“வணக்கம் ஐயா!” அழகாக வணக்கம் வைத்தாள் பெண்.

“வணக்கம் அம்மிணி.”

“நடந்த விஷயம் கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்குது ஐயா. இருந்தாலும் என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க? நான் என்னோட கடமையைத் தானே செய்யணும்?” அங்கே ஒரு கனமான அமைதி நிலவியது. நித்திலாவே தொடர்ந்தாள்.

“உங்க பால்பண்ணைக்கு எதிராப் புகார் வருது. நான் ஆக்ஷன் எடுக்கலைன்னா அது தப்பு இல்லையா? அப்பவும் உங்க மேல தப்பு இல்லை, தப்பெல்லாம் உங்க பையன் மேலே தான்னு நல்லாத் தெரியுது. ஆனாலும் என்ன பண்ண முடியும் சொல்லுங்க? லைசென்ஸ் உங்க பேர்ல தான் இருக்குது. நடவடிக்கை உங்க பேர்லதானே எடுக்க முடியும்.”

“புரியுது அம்மிணி.”

“மேலே மேலே தப்புப் பண்ணுறார் ஐயா உங்க பையன். மாமா மேல அருவாள் வெட்டுப் பட்டது போலீஸ் கேஸ் ஆச்சுது. ஹாஸ்பிடல்ல போலீஸுக்கு தகவல் சொல்லிட்டுத்தான் சிகிச்சையை ஆரம்பிச்சாங்க. அதைக் கூட மாமா வேணாம்னு சொல்லிட்டாங்க. உங்க முகத்துக்காக.” 

ராஜலிங்கத்துக்கு நிலைமையின் வீரியம் புரிந்தது. எதுவும் பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்.

“தொழில் பண்ணுங்க ஐயா. உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நாங்க பண்ணுறோம். ஆனா நியாயமான முறையில பண்ணுங்க. மக்களுக்குக் கேடு இல்லாத வகையில என்ன வேணும்னாலும் பண்ணுங்க.”

“புதுசா அப்ளை பண்ணி இருக்கிற லைசென்ஸுக்கு…” முடிக்காமல் இழுத்தார் ராஜலிங்கம்.

“நீங்க எனக்கு வாக்குக் குடுங்க ஐயா. மக்களுக்குக் கெடுதல் இல்லாம நல்ல முறையில பண்ணையை நடத்துவேன்னு நீங்க எனக்கு வாக்குக் குடுங்க. லைசென்ஸ் வாங்கிக் குடுக்கிறது எம்பொறுப்பு.”

இப்போது ராஜலிங்கத்தின் முகம் ஆச்சரியத்தைக் காட்டியது. அன்பரசைத் திரும்பிப் பார்த்தார் மனிதர்.

“என்ன லிங்கம் அப்படிப் பார்க்கிறே? என்ற மருமகள் சொன்னா ஒரு சொல்லுத்தான்.”

“எப்படி ஐயா? ஏற்கனவே எங்கமேல தப்பான அபிப்ராயம் வந்திருக்கு. இதுக்கு மேலே எப்படி?”

“ஐயா… அதை நான் பார்த்துக்கிறேன். ஏன்? தப்புப் பண்ணுறவங்க திருந்தவே மாட்டாங்களா? ஆனா திரும்பவும் தப்பு நடந்திடக் கூடாது ஐயா.” அமைதியாகச் சொன்னாள் நித்திலா.

“நீ என்ன சொல்லுற லிங்கம்?” அன்பரசு மீசையைத் தடவினார்.

“இதுக்கு மேலே நான் என்ன சொல்ல இருக்கு ஐயா? நீங்க தான் பெரிய மனுஷன்னு பார்த்தா, உங்க மருமகள் அதைவிடப் பெரிய மனுஷியா இல்லை இருக்கு.” நெகிழ்ந்து போய்ச் சொன்னார் ராஜலிங்கம்.

பால்பண்ணை வைப்பதற்கு லைசென்ஸ் கிடைக்க இருப்பதை விட தனது மகனின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று எண்ணிக் கொண்டார் மனிதர்.

வந்த வேலை சுமூகமாக முடிந்து போகவும் இரண்டு பேரும் இன்முகமாகவே கிளம்பிப் போனார்கள். நித்திலாவிற்கும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

அன்று டின்னர் அமர்க்களமாக இருந்தது. வானதி கொஞ்சம் சிரத்தை எடுத்துப் பதார்த்தங்களைத் தயார் பண்ணி இருந்தார். அதிலும் விஷேடமாக அன்பரசுவிற்குப் பிடித்தமான பதார்த்தங்களே டேபிளை அலங்கரித்திருந்தன.

“மாமா… இன்னைக்கு டின்னர் களைகட்டுது இல்லை?” வேண்டுமென்றே வானதியைச் சீண்டினாள் நித்திலா. 

“யுகேந்திரா! இந்த வீட்டுல யாரு மாமியார் யாரு மருமகள்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு.” வானதியின் அங்கலாய்ப்பில் அன்பரசும் நித்திலாவும் களுக்கென்று சிரித்தார்கள். யுகேந்திரன் கூடப் புன்னகைத்துக் கொண்டான்.

“என்ன ஆச்சுப்பா இன்னைக்கு?”

“யுகி… இன்னைக்கு என்ற மருமகள் பேசின பேச்சுல லிங்கம் அப்படியே உருகிப் போய்ட்டாருன்னா பாரேன்.”

“இல்லை மாமா… அவருக்கு அவரோட மகன் பண்ணுறது தப்புன்னு நல்லாவே புரியுது. அதைத் திருத்திக்க ஒரு வாய்ப்புக் கிடைச்சப்போ டக்குன்னு புடிச்சிக்கிட்டார்.”

“அது வாஸ்தவம் தாம்மா. ஆனா வழி நெடுக மனுஷன் எங்காதைப் புண்ணாக்கிட்டாரு.”

“ஏம்ப்பா?”

“என்ற மருமகளுக்கு என்னைப் போலவே பெரிய மனசாம்.” சொன்னவர் வேண்டுமென்றே வானதியைப் பார்த்து மீசையை நீவி விட்டார்.

“ஆமா… பெரிய ஆஸ்கார் அவார்டு தான் போங்க.” வாய்க்குள் முணுமுணுத்தார் வானதி.

“இங்கப்பாரு நித்திலா… இதுக்கப்புறமும் அந்தப் பால்பண்ணை ஓனர் உங்கிட்ட வம்பு வளத்தான்… அதுக்கப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.”

“ஏனுங்கம்மிணி… என்ன பண்ணப் போறீங்க?” மனைவியைச் சீண்டினார் அன்பரசு.

“ஆ… அவன் அனுப்பின ஆளுக்கு மட்டும் தான் அருவாள் பிடிக்கத் தெரியுமா? அடுப்பங்கரையில நிக்கிற எங்களுக்கு அருவாள் பிடிக்கத் தெரியாதா?”

“ம்… நீ பண்ணினாலும் பண்ணுவே கண்ணு.”

“பண்ணினாலும் இல்லை… கண்டிப்பாப் பண்ணுவேன். சொல்லி வைங்க அந்த லிங்கத்துக்கிட்ட.” அதட்டலாகப் பேசியவர் கிச்சனுக்குள் போய்விட்டார். 

அங்கிருந்த மூவரின் கண்களும் ஒன்றையொன்று சந்தித்துச் சிரித்துக் கொண்டன.

மேலும் இரண்டு மாதங்கள் உருண்டோடி இருந்தன. நித்திலாவுக்கு அது ஏழாவது மாதம். அன்பரசு அவ்வளவு பிடிவாதம் பிடித்துத் தடபுடலாக வளைகாப்பிற்கு ஏற்பாடு பண்ணி இருந்தார்.

நித்திலா கொஞ்சம் மறுத்துப் பார்த்தாள். யார் கதையையும் அன்பரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. தான் பார்க்காத மகனின் திருமணக் கோலத்தை இப்போது இதை சாக்காக வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஒரு பிடியாக நின்று விட்டார்.

வானதியும் கணவரின் ஆசைக்கு மறுப்புச் சொல்லவில்லை. அவருக்குமே நித்திலாவுக்கு வளையல் அடுக்கிப் பார்க்க ஆசையாக இருந்தது.

‘யுகி… எதுக்குப்பா இவ்வளவு க்ராண்ட்டா பண்ணணும்? சிம்ப்பிளாப் பண்ணலாமே?’ இதே கேள்வியைப் பலமுறை கேட்டு விட்டாள் நித்திலா.

‘விடு கண்ணம்மா… அப்பா ஆசைப்படுறார். நம்ம கல்யாணத்தைத் தான் அவர் பார்க்கலை. அதுவே எனக்குப் பெரிய குற்ற உணர்ச்சியா இருக்கு. இதுக்கும் தடை சொல்ல முடியாதுடா.’ இதுதான் யுகேந்திரனின் பதிலாக இருந்தது.

பொள்ளாச்சியில் ஜோரான ஒரு மண்டபம் பிடித்திருந்தார் அன்பரசு. சீமந்தமா? கல்யாணமா? என்று வாயைப் பிளக்கும் அளவிற்கு அலங்காரங்கள் கண்ணைப் பறித்தன. 

தனது இத்தனை வருட வாழ்க்கையில் அறிமுகமாகியிருந்த அத்தனை பேரையும் அழைத்திருந்தார் அன்பரசு. கூட்டம் அலை மோதியது. 

சுபமுகூர்த்த நேரத்தில் வண்ணப்பட்டுடுத்தி சர்வபூஷித அலங்காரத்தோடு மேடைக்கு அழைத்து வரப்பட்டாள் நித்திலா. பார்க்கப் பார்க்கக் கண்கள் தெவிட்டாத அழகாக இருந்தது அவள் கோலம். 

அன்பரசு முன் வரிசையில் அமர்ந்து கொண்டு கண் இமைக்காமல் பார்த்தபடி இருந்தார். கை மீசையைத் தடவிக் கொண்டது, எப்போதும் போல. பக்கத்தில் கண்கள் கலங்க வானதி அமர்ந்திருந்தார்.

“மாப்பிள்ளை எங்கேப்பா?” யாரோ வயதில் மூத்தவர் குரல் கொடுக்க, பட்டு வேஷ்டி சட்டையில் யுகேந்திரனும் வந்து சேர்ந்தான். 

பெரிய குத்துவிளக்கு இரண்டு தீபமேற்றி வைக்கப்பட்டிருந்தது. பலவகையான வாசம் மிக்க பூக்கள், பழங்கள், இனிப்புகள், மஞ்சள் குங்குமம், கண்ணாடி வளையல்கள், பல்வகை சாதங்கள், சித்ரான்னங்கள் என அந்த இடமே நிரம்பி வழிந்தது.

யுகேந்திரனின் கண்கள் நித்திலாவை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தன. மணப்பெண் அலங்காரத்தில் கர்ப்பிணிக்கே உரிய தேஜசோடு கணவனின் கண்களை ஈர்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

“தம்பி… வூட்டுக்காரியை ரசிச்சது போதும், மாலையைப் போடுங்க.” எங்கோ இருந்து வந்த குரலில் சபையே சிரித்தது. யுகேந்திரனின் முகம் சிவந்து போனது.

கூடி நின்ற உறவுப் பெண்கள் மாலையைக் கொடுக்க நித்திலாவின் கழுத்தில் அதை அணிவித்தான் கவிஞன். அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து இரு கைகளிலும் கன்னங்களிலும் சந்தனம் பூசி விட்டான்.

யாரோ ஒரு பெண் வளையல்த் தட்டை நீட்ட அதைத் தவிர்த்தவன் தனது ஷேர்ட் பாக்கட்டில் இருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்து நித்திலாவிற்கு அணிவித்தான்.

“வைர வளையலா மருமகனே! நீங்க கலக்குங்க.” அத்தை முறைக்காறப் பெண்ணொருத்தி சீண்டிப் பார்க்க நித்திலாவே ஆச்சரியப்பட்டுப் போனாள்.

‘யுகீ… என்ன இதெல்லாம்?’ அவள் கண்கள் கேட்ட கேள்வியைப் புறக்கணித்தவன் பன்னீர் தெளித்து அறுகரிசி படைத்து மனைவியையும் தன் குழந்தையையும் வாழ்த்தி ஆசீர்வதித்தான்.

இதில் விஷேடம் என்னவென்றால் யுகேந்திரன் இங்கே அனைத்தையும் செய்யும் போது பின்னணியாக ஒருவரைப் பாட ஏற்பாடு பண்ணி இருந்தான்.

எந்த விதமான இசையும் இல்லாமல் அழகான குரலில் இனிமையாக, தெளிவாகப் பாடல் வந்து கொண்டிருந்தது.

‘நான் தாயுமானவன் தந்தையானவன் அன்புச் சேவகன் அருமை நாயகன்…’

நித்திலாவின் கண்கள் கலங்கிப் போனது. கணவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். எப்படிப்பட்ட மனிதன் இவன்? பார்ப்பவர்கள் அத்தனை பேரும் பொறாமைப்படும் அளவிற்கு ஒரு வாழ்க்கையைத் தனக்குக் கொடுத்திருக்கிறானே! மனது கிடந்து விம்மியது.

உட்கார்ந்து இருந்த படி தன்னையே அண்ணாந்து பார்த்திருந்த மனைவியின் கண்களைத் துடைத்து விட்டான் யுகேந்திரன். கூடியிருந்த சபையை மறந்து போனவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். 

“ஓ…” இளவட்டம் ஒன்று ஓப்போட்டது. சட்டென்று சுதாரித்துக் கொண்டு நகர்ந்து விட்டான். 

அடுத்து வானதி வந்து நித்திலாவை ஆசீர்வதித்தார். குடும்பத்திலிருக்கும் வயதான சுமங்கலிகளை அவர் அழைக்கப்போகவும் வானதியைத் தடுத்தாள் நித்திலா.

“என்னம்மா?”

“அத்தை… மாமாவை வரச்சொல்லுங்க.”

“மாமாவா? அவர் எதுக்கும்மா?”

“உங்களுக்கு அடுத்ததா மாமாதான் என்னை ஆசீர்வாதம் பண்ணணும்.”

“நித்திலா… இது லேடீஸ் ஃபங்ஷன் டா.”

“பரவாயில்லை அத்தை, மாமாவைக் கூப்பிடுங்க.” நித்திலாவின் வற்புறுத்தலில் வானதி லேசாகத் தயங்கினார். 

“கொழுந்தனாரே! உன்ற மருமகள் என்னமோ சொல்லுது. வந்து என்னன்னு கேளு.” வயதான பெண்மணி ஒன்று மேடையில் நின்றபடியே குரல் கொடுத்தார். அவர் அன்பரசுக்கு அண்ணி முறைக்காரி.

‘இந்த வெண்கலக் குரல் அண்ணி எதுக்கு அங்க நின்னுக்கிட்டு என்னைக் கூப்பிடுது?’ அன்பரசு கொஞ்சம் திகைத்துப் போனார். 

“அட! என்ன யோசனை? வாங்க கொழுந்தனாரே.” மீண்டும் சத்தமாகக் குரல் வரவும் சங்கடத்துடனேயே எழுந்து போனார் அன்பரசு. வானதி கூட வாய்க்குள் சிரித்துக் கொண்டார். 

“என்னம்மா?” நித்திலாவின் அருகில் போன அன்பரசு கனிவாகக் கேட்டார்.

“உன்ற மருமகளுக்கு அவளோட மாமனார் ஆசீர்வாதம் பண்ணணுமாம். அதான் கூப்பிடச் சொன்னா. ஆசீர்வாதம் பண்ணு கொழுந்தனாரே.”

“அண்ணீ… நான்…”

“அட! சீமந்தத்துல பொண்ணுங்க தான் ஆசீர்வாதம் பண்ணணும்னு சட்டமா என்ன? வாயும் வயிறுமா இருக்கிற பொண்ணு ஆசைப்படுதில்லை. பண்ணு கொழுந்தனாரே.” 

அண்ணியின் வற்புறுத்தலில் மருமகளுக்கு நலுங்கு வைத்தார் அன்பரசு. அந்த வயதான அண்ணி ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்லப் பின்பற்றியவர் நித்திலாவை ஆசீர்வதித்தார்.

“மகன் வூட்டுக்காரிக்கு வைர வளையல் போட்டு விட்டான். உன்ற மருமகளுக்கு நீ வெறுங் கண்ணாடி வளையல் தான் போடப்போறியா கொழுந்தனாரே?” 

அந்த அண்ணியின் கேள்வியில் திக்கு முக்காடிப் போனார் அன்பரசு. இப்படியொரு நிலை வரும் என்று தெரியாததால் அவர் நித்திலாக்கு எதுவும் வாங்கியிருக்கவில்லை.

“பரவாயில்லை பாட்டி. மாமாவோட ஆசீர்வாதமே போதும்.” அன்பரசு சங்கடப்படுவதைக் காணப் பொறுக்காமல் சட்டென்று சொன்னாள் நித்திலா.

“அட! நீ சும்மா இரு கண்ணு. உன்ற மாமன் என்னதான் பண்ணுறான்னு பார்ப்போமே.” கிழவியின் குசும்பு தீர்ந்தபாடில்லை.

அன்பரசு சில கணங்கள் தான் தாமதித்தார். சட்டென்று அவர் கையிலிருந்த யாழி முகங்கொண்ட பொன்காப்பைக் கழட்டியவர் தன் மருமகள் கையில் அணிவித்தார். கை மீசையைத் தடவிக் கொண்டது.

“மாமா! என்ன இது? பாட்டி ஏதோ கேலிக்காகச் சொல்லுறாங்க.” திடுக்கிட்ட நித்திலா அவசரமாகச் சொன்னாள். அன்பரசுவிடம் இருக்கும் ஐம்பொன் காப்புகளில் ஒன்று அது. அவர் குடும்பப் பாரம்பரியத்தில் வழிவழியாக மூத்த பிள்ளைகளுக்குச் சொந்தமான சொத்து அது.

“பரவாயில்லைம்மா. எங்க குடும்ப நகை இது. எனக்கு அப்புறமா யுகிக்குப் போக வேண்டியது. யுகிக்கிட்ட இருந்தா என்ன? உங்கிட்ட இருந்தா என்ன? எல்லாம் ஒன்னுதானே?” சுலபமாகச் சொன்னார் அன்பரசு.

வானதியும் யுகேந்திரனும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

அன்பரசையும் வானதியையும் அருகருகே நிறுத்தி இளையவர்கள் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். மனமெல்லாம் நிறைந்து போனது மூத்த தம்பதிகளுக்கு.

பெண்களெல்லாம் அடுத்ததாக நலுங்கு வைத்தார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ராஜலிங்கம் தன் மனைவியோடு விழாவிற்கு வந்திருந்தார். அவர் மனைவியும் நித்திலாவிற்கு வளையல் அடுக்கவும் பார்த்திருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

தான் காணாத தன் மகனின் கல்யாணக் கோலத்தைக் கண்ட மகிழ்ச்சியில் அன்பரசு நெகிழ்ந்து போய் நடமாடிக் கொண்டிருந்தார். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் இனிதே நிறைவு பெற வீடு வந்து சேர்ந்தார்கள் அன்பரசு குடும்பத்தினர். 

இரவு இதமாக நகர்ந்து கொண்டிருக்க ‘பார்பிக்யூ’ ஏரியாவில் அமைதியாகக் கால் நீட்டி அமர்ந்திருந்தான் யுகேந்திரன். சுற்றி வர இருள் சூழ்ந்திருக்க மனம் நிர்மலமான அமைதியில் திளைத்திருந்தது.

வாழ்க்கையின் பக்கங்களை லேசாகப் புரட்டிப் பார்த்தான் யுகேந்திரன். இதழ்க்கடை ஓரம் கீற்றாக ஒரு புன்னகை மலர்ந்தது.

ஜென்மங்கள் எல்லாம் இணையப் போகும் இந்தப் பெண்ணைத் தனக்கு ஒரு வருடமாகத் தான் தெரியும் என்ற உண்மையை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நீக்கமற நிறைந்தவள். அவன் இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் துணை நின்றவள். தூரத்தில் அவள் நடந்து வருவது தெரியவும் இமைக்க மறந்து பார்த்திருந்தான்.

“என்ன கவிஞரே, இங்க உக்காந்து இருக்கீங்க?” வளைகுலுங்க அவன் பக்கத்தில் வந்து நின்றாள் நித்திலா. கைநீட்டி அவளை அழைத்தவன் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டான். 

அவள் ஏழு மாத வயிறு அவனை முட்டி நின்றது. அவள் வளையல்களோடு கொஞ்ச நேரம் விளையாடியவன் அவளை மார்போடு அணைத்துக் கொண்டான்.

“கண்ணம்மா…”

“ம்…”

“மனசுக்கு ரொம்பவே நிறைவா இருக்குடா.”

“எனக்கும் தான்.” 

“வளையலைக் கழட்டக்கூடாது சரியா?”

“இவ்வளவு வளையலோட எப்படி யுகி ஆஃபீஸ் போக முடியும்?”

“பரவாயில்லைடா. இந்த வளையல் சத்தத்தைக் குழந்தையால உணர முடியும். அது குழந்தையோட மூளை வளர்ச்சிக்கு நல்லதுன்னு சொல்லுறாங்க.”

“சரிப்பா.”

“அது மட்டுமில்லாம வயிறு, கர்ப்பப்பைக்கான வர்மப் புள்ளிகள் வளையல் போடுற இடத்துலதான் இருக்குதாம். இந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டா தாய் சேய் உடல்நலத்துக்கு நல்லது எங்கிறது நம்ம முன்னோர்களின் கண்டுபிடிப்பு.”

பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று நிறுத்தினான். தன் மேல் சாய்ந்திருந்த நித்திலாவின் வயிற்றில் எதையோ உணர்ந்தான் கவிஞன்.

“கண்ணம்மா! என்ன அது?” வார்த்தைகள் வரமறுத்தது யுகேந்திரனுக்கு.

“எது?”

“நான்… எனக்கு… என்னவோ ஃபீல் பண்ணினேன்.”

“ரொம்பப் பேசுறீங்களாம். உங்க பொண்ணு சொல்லுறா.” மனைவியின் பதிலில் யுகேந்திரன் மதிமயங்கிப் போனான்.

“ஏய்! என்ன சொல்லுற நீ? இது… இது…” பேச்சை மறந்தவன் அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். முன்போல இப்போதும் குழந்தையின் அசைவை அவனால் உணர முடிந்தது. 

“நீங்கதான் பேசுறீங்கன்னு உங்க பொண்ணுக்கு நல்லாவே புரியுது கவிஞரே!”

“அப்படியா என்ன?”

“ம்… இங்கே கையை வெச்சுக்கிட்டு நீங்க பேசுங்க. அப்போப் புரியும் உங்களுக்கு.” சொன்னவள் அவன் கரத்தை எடுத்துத் தன் வயிற்றில் வைத்தாள்.

கரத்தை விலக்கியவன் அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் முத்தம் வைத்தான். அவன் பேசாமலேயே அசைவு தெரிந்தது. மீண்டும் மீண்டும் முத்தமிட ஓயாது அந்தப் பிஞ்சு ஸ்பரிசத்தை உணர்ந்தான் கவிஞன். 

“என் சின்னக் கண்ணம்மா…” கண்கள் கலங்க முகத்தை அவள் வயிற்றில் அழுத்தமாகப் புதைத்தான் யுகேந்திரன். 

“கவிஞரே! என்ன இது? எனக்கு வலிக்குது.” லேசாகச் சிரித்தபடி சொன்னாள் நித்திலா. அவசரமாக அவளிடமிருந்து விலகியவன் மலர்ந்து சிரித்தான். அந்தச் சிரிப்பில் உலகையே வென்ற கர்வம் தெரிந்தது. அந்தச் சிரிப்பை இமைக்க மறந்து பார்த்திருந்தாள் பெண்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்…

வானதியின் குரல் மிகவும் கோபமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கூடவே ஒரு இளங்குரல் பதிலுக்குப் பதில் பேசியபடியே இருந்தது. 

“ஆண்டவா! எம் பையனை வளக்கிறதுக்குக் கூட நான் இவ்வளவு கஷ்டப்படலை. இந்தப் பொண்ணு என்னை என்ன பாடு படுத்துது.” 

“பாட்டி… நான் தப்புப் பண்ணலை.” ஆங்காரமாக வந்தது பதில்.

“தப்புப் பண்ணாமத் தான் உன்னோட மிஸ் அவ்வளவு பேசினாங்களா?”

“அந்த மிஸ்ஸுக்கு என்னைப் பிடிக்காது. அதான் தப்புத் தப்பா என்னைப் பத்திச் சொல்லுறாங்க.”

“அடிங்… சின்னக் கழுதை. மிஸ்ஸையே தப்புச் சொல்லுவியா நீ?” வானதி துரத்த நாலு கால்ப் பாய்ச்சலில் அன்பரசுவிடம் ஓடினாள் நிரஞ்சனா. யுகேந்திரன் நித்திலாவின் சீமந்த புத்திரி.

“தாத்தா… வானதிக்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க.” கத்திக்கொண்டே அன்பரசுவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அன்பரசுவின் நெஞ்சில் வாகாய் சாய்ந்து கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருந்தான் இரண்டு வயது யுகன். நித்திலாவின் பேட்டி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க அம்மாவை டீவியில் பார்த்தபடி இருந்தது குழந்தை.

“என்னாச்சு கண்ணு? எதுக்குப் பாட்டி திட்டுறாங்க?” அன்பரசு கேட்க பேத்தியை முந்திக் கொண்டு பாட்டியிடமிருந்து பதில் வந்தது.

“நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க. பேரன்ட்ஸ் மீட்டிங் க்கு இன்னைக்குப் போனா மானம் போச்சுது எனக்கு. இவளோட மிஸ் ஒரு நல்ல வார்த்தை சொல்லலை இவளைப் பத்தி.”

“எதுக்கு அந்த மிஸ் சொல்லணும்? க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் நான்தான்.” அன்பரசு அமர்ந்திருந்த சோஃபாவிற்குப் பின் புறமாக இருந்து வந்தது பதில். 

“சரி விடு கண்ணு. சின்னப் பொண்ணு ஏதோ தெரியாமப் பண்ணிட்டா.” 

“தெரியாம இல்லைத் தாத்தா. தெரிஞ்சே தான் பண்ணினேன்.”

“கேட்டீங்களா? அவ தெரிஞ்சு தான் எல்லாமே பண்ணுறா.” வீட்டினுள் இத்தனை அமளி நடந்து கொண்டிருக்க அப்போதுதான் உள்ளே நுழைந்தார்கள் யுகேந்திரனும் நித்திலாவும்.

யுகன் அப்பாவிடம் தாவிக் கொள்ள நிரஞ்சனா தாத்தாவிடம் சரணடைந்து கொண்டாள். வானதியிடமிருந்து தப்ப வேண்டும் என்றால் அதற்குச் சரியான இடம் அன்பரசு தான் என்பது அந்தப் பிஞ்சுக்கும் தெரிந்திருந்தது.

“என்னடா கண்ணு பண்ணினீங்க?” பேத்தியின் தலையைத் தடவிய படி கேட்டார் அன்பரசு.

“எல்லாரும் தப்புப் பண்ணுறாங்க தாத்தா. ஏன் இப்படிப் பண்ணுறீங்கன்னு நான் கேட்டேன். இது தப்பாத் தாத்தா?”

“தப்பில்லை கண்ணு. நீங்க அதை மிஸ்கிட்ட சொல்லி இருக்கலாமே? அவங்க என்னன்னு கேட்டிருப்பாங்க இல்லை?”

“ஒரு தரம் கேப்பாங்க தாத்தா. அதுக்கப்புறம் மறந்திடுவாங்க.”

“அப்படி என்ன கண்ணு தப்புப் பண்ணினாங்க?” யுகேந்திரனும் நித்திலாவும் ரூமிற்குள் போகாமல் நடந்து கொண்டிருந்த பஞ்சாயத்தை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள்.

“குப்பையை ஒழுங்கா குப்பைத் தொட்டியில போட மாட்டேங்கிறாங்க தாத்தா. மிஸ் லைன்ல வாங்கன்னு சொன்னா ஒழுங்கா லைன்ல நிக்க மாட்டேங்கிறாங்க. நவீன் பென்சிலை வனஜா அவன் பர்மிஷன் இல்லாம எடுக்கிறா. சொன்னா அப்படித்தான் எடுப்பேன்னு சொல்லுறா தாத்தா.” பட்டியல் நீண்டு கொண்டே போனது.

“பார்த்தீங்கல்லை. எதுக்கு இவளுக்கு இந்தத் தேவையில்லாத வேலை? போனோமா… படிச்சோமா… வந்தோமான்னு இருக்க வேணாம். ஊர் வம்பையெல்லாம் அள்ளிக்கிட்டு வர்றா.” வானதியின் குரலில் கோபம் இருந்தது.

“ஐயோ பாட்டி! உங்களுக்கு ஒன்னும் தெரியலை. அம்மாவோட ஸ்பீச் அன்னைக்கு நீங்க கேக்கலையா? நம்மைச் சுத்தி என்ன தப்பு நடந்தாலும் நாம தட்டிக் கேக்கணுமாம். சும்மா பார்த்துக்கிட்டு போகக் கூடாதாம்.” மகளின் சாமர்த்தியமான பேச்சில் யுகேந்திரனின் முகத்தில் புன்னகை அரும்பியது. அன்பரசு மீசையைத் தடவிக் கொண்டார். 

“பென்சிலை எடுத்துட்டான்னு வனஜாவை நீ குத்தம் சொன்னே. அவ அம்மா என்னடான்னா உன்னைக் குத்தம் சொல்லுறா. உனக்குப் பயம் வரலையா?” 

“ஐ டோண்ட் கெயார் பாட்டி. ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’. அப்பா சொல்லிக் குடுத்திருக்காங்க பாட்டி. இல்லையாப்பா?” ஸ்டைலாகக் கேட்டது அந்தக் கவிஞனின் சின்னக் கண்ணம்மா. 

“எல்லாரும் செல்லம் குடுத்துக் குடுத்து அவளைக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கி வெச்சிருக்கீங்க. என்ன வேணும்னாலும் பண்ணுங்க.” சத்தம் போட்டபடியே கிச்சனுக்குள் போய்விட்டார் வானதி. 

டின்னரை முடித்து விட்டு எல்லோரும் தூங்குவதற்கு ஆயத்தமாக டைனிங் டேபிளைக் க்ளீன் பண்ணிக் கொண்டிருந்தாள் நித்திலா.

“என்ன கண்ணம்மா? சின்னவ இந்தப் போடு போடுறா?” மனைவிக்கு உதவிய படி கேட்டான் யுகேந்திரன். 

“இவளை யாருப்பா என்னோட ஸ்பீச்சை எல்லாம் கேக்கச் சொன்னாங்க. அத்தை என்னை இல்லை தப்பா நினைக்கப் போறாங்க.”

“யாரு? வானதியா? அவ்வளவு சத்தம் போட்டுட்டு எங்கிட்ட வந்து ‘இந்தச் சின்ன வயசுல எவ்வளவு பொறுப்பா இருக்கா பார்த்தியா யுகேந்திரா’ ன்னு ஒரே பெருமை.” யுகேந்திரன் சொல்ல நித்திலா சிரித்தாள்.

“தூங்கிட்டாங்களா யுகி?” கேட்ட படியே அடுத்த ரூமை எட்டிப் பார்த்தாள் நித்திலா. பின்னோடு வந்தான் யுகேந்திரன். அவர்கள் அங்கே கண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அன்பரசு ஒரு புறமும் வானதி மறுபுறமும் தூங்க நடுவில் பேரக் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். யுகன் தாத்தாவின் மார்பை ஆக்கிரமித்திருக்க, நிரஞ்சனா பாட்டியின் கழுத்தை கட்டிப் பிடித்திருந்தாள். 

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். 

“தோப்புக்குப் பக்கத்துல இருக்கிற நிலத்தை வாங்கிற விஷயம் என்னாச்சு யுகி?” கேட்டபடியே தங்கள் ரூமிற்குள் வந்தாள் நித்திலா. 

“கூடிய சீக்கிரம் முடிச்சிடலாம் நித்திலா.” கட்டிலில் சாய்ந்த படி பதில் சொன்னான் யுகேந்திரன்.

“இந்த நிரஞ்சனா…” ஏதோ ஆரம்பித்த மனைவியின் வாயில் விரல் வைத்துத் தடுத்தான் யுகேந்திரன்.

“இது நமக்கான நேரம் கண்ணம்மா. நாடு, வீடு, குழந்தைகள் எல்லாத்தையும் மறந்திட்டு என்னை மட்டும் கவனி.” கண்டிப்பாக வந்தது கணவனின் குரல்.

“என்ன? கவிஞர் இன்னைக்கு செம மூட்ல இருக்கார் போல?”

“ஏன்? கவிஞருக்கு மூட் வரக்கூடாதா? அத்தனை வயசாச்சா என்ன?”

“ஐயையோ! நான் அப்படிச் சொல்லலை கவிஞரே.” கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள் நித்திலா.

“நித்திலா…”

“ம்…”

“இந்த ஞாயிற்றுக்கிழமை நீ ஃப்ரீயா?”

“என்ன விஷயம் யுகி? சொல்லுங்க ஃப்ரீ ஆகிக்கிறேன்.”

“இலக்கிய விழா ஒன்னு இருக்கு கோயம்புத்தூர்ல.”

“அடடா! நீங்க பேசுறீங்களா கவிஞரே?”

“ம்…”

“அப்போ முதல் வரிசையில எனக்கு டிக்கெட் வாங்கிக் குடுங்க. என்ன தலைப்பு கவிஞரே?”

“இலக்கியக் காதலில் விஞ்சி நிற்கும் பெண் கதாபாத்திரங்கள்.”

“கவிஞரே! அப்போ பிச்சு உதறப் போறீங்கன்னு சொல்லுங்க.”

“எனக்குக் காதல் சொல்லிக் கொடுத்தவளே நீதானே கண்ணம்மா.”

“போச்சுடா! கவிஞர் உளற ஆரம்பிச்சாச்சு.” போலியாக சலித்துக் கொண்டாள் நித்திலா. 

அந்தக் கவிஞனின் உளறல்களே அந்த அறை முழுதும் சற்று நேரத்திற்கு வியாபித்து நின்றது. வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்ததோடு வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை சேர்த்தன அந்த இரு ஜீவன்கள்.

 

error: Content is protected !!