nk3

nk3

நிலவொன்று கண்டேனே 3
அன்று வெள்ளிக்கிழமை. பொள்ளாச்சி கொஞ்சம் பதட்டமான சூழ்நிலையில் இருந்தது. பொள்ளாச்சி தாலுக்காவில் அடங்கும் கிராமம் ஒன்றில் இயங்கி வந்த பால் பண்ணை ஒன்றிற்கு, கலெக்டரின் தலைமையில் அன்று சீல் வைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி, அவரோடு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் என, அந்த ஏரியாவே கலவரப்பட்டுப் போய்க் கிடந்தது.
யாருக்கும் எந்தத் தகவலும் தெளிவாகத் தெரியவில்லை. மக்கள் அறிந்ததெல்லாம், குறிப்பிட்ட பால் பண்ணை சீல் வைக்கப்பட்டது தான். தொலைக்காட்சியிலும் சரியான தகவல் எதுவும் சொல்லப்படவில்லை.
யுகேந்திரன் சோஃபாவில் உட்கார்ந்த படி தாடையைத் தடவிக் கொண்டிருந்தான். முகம் அத்தனை தெளிவாகத் தெரியவில்லை.
“யுகேந்திரா.”
“ம்…” அம்மாவின் குரலில் நிமிர்ந்து பார்த்தான்.
“எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு கண்ணு.”
“ஏம்மா?”
“இந்தப் பொண்ணு, கொஞ்சம் பெரிய இடத்துல கை வெச்சிருக்கேப்பா.” அம்மாவின் கவலையில் இருந்த நியாயம், யுகேந்திரனுக்கும் புரிந்தது. சம்பந்தப்பட்ட பால்பண்ணையின் சொந்தக்காரர், அந்த ஏரியாவில் பெரிய புள்ளி. சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
“பெரிய இடம்னாலும், சின்ன இடம்னாலும் நியாயம் எல்லாருக்கும் ஒன்னுதாம்மா.”
“அது நமக்குத் தெரியும், பழி பாவத்துக்கு அஞ்சாதவனுங்களுக்குத் தெரியுமா? வயசுப் பொண்ணு. மனசு கிடந்து அடிச்சிக்குது.”
“ம்… அந்தப் பொண்ணு தன்னோட கடமையைச் செய்யுது. பாக்கலாம், ப்ரெஸ் மீட்டிங்ல என்ன சொல்லுறாங்கன்னு. சரியான தகவல் தெரியாம, நாமளும் ஒன்னும் பேசக்கூடாதும்மா.”
“நீ ஆயிரஞ்சொல்லு கண்ணு. எனக்கென்னவோ மனசு கிடந்து அடிச்சுக்குது. மூக்கும் முழியுமா வேற இருக்கா. இந்தப் பொண்ணை யாரு பெரிய படிப்பெல்லாம் படிக்கச் சொன்னா? இந்நேரத்துக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி இருந்தா, ரெண்டு புள்ளைங்க பொறந்திருக்கும்.” கவலையும், பதட்டமும் சேர்ந்து கொள்ள, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் புலம்பினார் வானதி.
“இங்கப்பார்றா… ஏம்மா வானதி, உங்க ஹீரோயினை நீங்களே இப்பிடிப் பேசலாமா?”
“சும்மா போடா, ஹீரோயினும் வேணாம், ஒன்னும் வேணாம். அந்தப் பொண்ணு நல்லா இருந்தாலே போதும்.”
“அப்பிடியா?”
“ஏஞ்சாமி, எனக்கு மட்டும் தான் அந்தப் பொண்ணு ஹீரோயினா? பேசாம, உனக்கும் ஹீரோயின் ஆக்கிடலாமா?” கண்ணடித்தபடி கேட்டார் வானதி.
“ஏனுங்க அம்மிணி, உங்களுக்கு சப் கலெக்டர் மருமகள் கேக்குதுங்களாக்கும்?”
“ஏன்? என்ர புள்ளைக்கு என்ன குறை சாமி? நாங்கெல்லாம் ஆசைப்பட்டா, என்ன தப்பு சாமி?” பேசி முடித்து விட்டு, அம்மாவும், மகனும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
எப்போதும் இந்தப் பேச்சு வந்தால் கோபப்படும் மகன், அன்று கேலி பேசிச் சிரிப்பதை, வானதியின் மனம் குறித்துக் கொண்டது. சற்று நேரத்தில் யுகேந்திரனும் வேலைக்குக் கிளம்பிவிட்டான்.
சரியாக மாலை நான்கு மணியளவில், ப்ரெஸ் மீட்டிங் ஆயத்தமானது. பொள்ளாச்சி மக்கள் அனைவரும், ஆவலுடன் அந்த நிகழ்வை எதிர்பார்த்திருந்தார்கள். ஏனென்றால், சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருந்தது பெரிய புள்ளி, அரசியல் பின்புலமும் உண்டு.
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்தது. சப் கலெக்டர், காவல் துறையினர், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் என, பலர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
நித்திலாவின் முன் ஒலிவாங்கிகள் பொருத்தப் பட்டிருந்தன. காமெராக்கள் பளிச்சிட, கொஞ்ச நேரம் அதை அனுமதித்தாள். சிம்பிளான காட்டன் புடவையில், எந்தவித அலங்காரங்களும் இன்றி அமர்ந்திருந்த பெண்ணை, யுகேந்திரன் பார்த்தபடி இருந்தான்.
“அம்மா… டீ வி பாக்குறீங்களா?”
“ஆமா யுகேந்திரா.”
“அப்போ சரிம்மா.” தன் அலுவலகத்தில் அமர்ந்தபடி நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அம்மாவிற்குத் தகவல் சொன்னான்.
தொண்டையை லேசாகச் சரி பண்ணிக் கொண்டு, பேச ஆரம்பித்தாள் நித்திலா. தைரியமும், நேர்மையும் மட்டும் தான், என் அழகுகள் என்பது போல இருந்தது அவள் தோற்றம். யுகேந்திரன் முகத்தில் லேசான புன்சிரிப்பொன்று தோன்றியது.
“பொள்ளாச்சி தாலுக்காவில் அடங்கும் மேற்கண்ட கிராமத்தில், இது நாள் வரை இயங்கி வந்த பால்பண்ணை ஒன்று, எனக்குக் கிடைத்த புகாரின் பேரில் சோதனை இடப்பட்டது. சோதனை முடிவில், பால்பண்ணையிலிருந்து வெளியே போகும் பால் தரமில்லாதது என்று உறுதிப்படுத்தப் பட்டதால், பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. பண்ணையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.” சொல்லி முடித்தவள், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்காகக் காத்திருந்தாள்.
“மேடம், எதனால பால் தரமில்லாப் போச்சுன்னு சொல்றீங்க?”
“பால்ல நிறைய கலப்படம் பண்ணி இருக்காங்க.”
“பால்ல தண்ணீர் சேக்குறது, எல்லா இடத்திலேயும் நடக்குது தானே மேடம்?”
“ஆமா, ஆனா இங்க அதையும் தாண்டி, வடிகஞ்சி, பால் பவுடர், சர்க்கரை, உப்பு எல்லாம் கலந்திருக்காங்க. நீண்ட நாள் பால் கெட்டுப் போகாம இருக்க, குளோரின், ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேத்திருக்காங்க. பால் நுரைக்கணும்னு சோப்பு சேத்திருக்காங்க.” 
“எல்லா சோதனைகளும் ரொம்ப ரகசியமா நடந்திருக்கே மேடம்? அது ஏன்?”
“குற்றங்களைக் கண்டுபிடிக்கிறதை விட, குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பாம பாதுகாக்கிறது தான், இப்ப பெரிய சவாலா இருக்கு.” இதை நித்திலா சொல்லும் போது, இங்கே யுகேந்திரனின் கண்கள் பளிச்சிட்டன.
“இந்தச் சோதனையில ஏதோ ஒரு ஒழிவு மறைவு இருந்தா மாதிரி தெரியுது மேடம்.” அந்த நிருபர், வேண்டுமென்றே கேள்விகளைக கேட்பது போலத் தோன்றியது நித்திலாவிற்கு. இருந்தாலும் பதில் சொன்னாள்.
“இதே மாதிரி ஒரு சம்பவம், கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி கோவையில நடந்துது சார். ஒரு ரெஸ்டாரன்ட்ல, கெட்டுப் போன சிக்கனை வித்திருக்காங்க. புகாரின் அடிப்படையில, உணவு மாதிரி ஆய்வு செய்யப்பட்டு, கெட்டுப் போன உணவுன்னு ஊர்ஜிதமாகி இருக்கு. ஆனா, கோர்ட்ல அது எங்க ரெஸ்டாரன்ட் சாம்பிளே இல்லைன்னு சொல்லித் தப்பிச்சிட்டாங்க. அந்தத் தவறு இங்கேயும் நடந்திரக் கூடாது இல்லையா?”
“இருந்தாலும் மேடம்…” அதற்கு மேல் நித்திலாவின் பொறுமை பறந்தது. அந்த நிருபரை முழுதாகப் பேசக் கூட அனுமதிக்கவில்லை அவள்.
“சார், உங்க பிரச்சினை என்ன? நீங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்க? எல்லாத்தையும் தண்டோரா போட்டு சொல்லிட்டு, குற்றவாளியை தப்ப விடச் சொல்லுறீங்களா? என் வேலையை எப்பிடிப் பண்ணணும்னு, எனக்குத் தெரியும்.” காட்டமாகச் சொன்னவள், அடுத்த கேள்விக்குத் தாவி விட்டாள்.
அந்த நிருபரின் முகம் கொஞ்சம் களையிழந்து போனது. பார்த்திருந்த யுகேந்திரன் முகமும், கொஞ்சம் சங்கடத்தைக் காட்டியது. 
‘எதற்கு இந்தப் பெண்ணிற்கு இத்தனை கோபம் வருகிறது? பொறுமை என்பது, மருந்திற்கும் இல்லையே இவளிடம்.’ மனதிற்குள் நினைத்தபடியே, அவளைப் பார்த்திருந்தான்.
“குற்றவாளியோட நிலைமை இப்போ என்ன மேடம்?” இன்னொரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
“பாலில் கலப்படம் நடக்குதுன்னு வந்த புகாரின் அடிப்படையில தான், சோதனையை ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது, அங்க கலப்படம் மட்டும் இல்லை, இரசாயனப் பாலும் தயாரிக்கப்படுதுன்னு.”
“இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க மேடம்.”
“இரசாயனப் பவுடர் ஒரு கிலோவை, பத்து லீட்டர் நீரில் கலந்தா, அந்த நீருக்கு பாலோட தன்மை வந்திடும். இந்தப் பால் செயற்கையானதுன்னு, பால்மானி கருவியால கூட கண்டுபிடிக்க முடியாது.” அந்த நொடி அங்கிருந்த அனைவர் முகத்திலும், ஒரு அதிர்ச்சி தெரிந்தது.
“இந்தப் பால் உயிர் பறிக்கும் ஆபத்துக் கொண்டதால, சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்ட்ரல் கவர்மென்ட் ஆக்ட் செக்ஷன் 59 உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆக்ட், 2006 59 இன் பிரகாரம், ஏழு வருடம் சிறைத்தண்டனையும், பத்து லட்சம் ரூபாய் அராதத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.”
“சம்பந்தப்பட்டவர்கள் இப்போ போலீஸ் கஸ்டடியிலயா இருக்காங்க மேடம்?” 
“அது சம்பந்தமான கேள்விகளுக்கு, சார் உங்களுக்கு பதிலளிப்பாங்க.” தனக்குப் பக்கத்தில் இருந்த போலீஸ் அதிகாரியைக் காட்டி விட்டு, சாய்ந்து அமர்ந்தாள் நித்திலா.
பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த யுகேந்திரனின் முகத்தில் மட்டுமல்ல, வானதியின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் தெரிந்தன.
                        °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அன்று ஞாயிற்றுக்கிழமை. அந்த மண்டபம், பார்வையாளர்களால் முழுதாக நிரம்பி இருந்தது. நித்திலா ஸ்கூட்டியைப் பார்க்கிங்கில் விட்டு விட்டு, உள்ளே வந்தாள்.
‘இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதில், மக்கள் இத்தனை ஆர்வமாக உள்ளனரா?’ வியப்போடு தன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். 
இந்த முறை காலதாமதம் செய்யாமல் டிக்கட் வாங்கியதால், இரண்டாம் வரிசையில் இடம் கிடைத்திருந்தது. சப் கலெக்டரின் குணம் தெரிந்ததால், விழாக்குழுவினர் அவளை முன் வரிசைக்கு அழைக்கவில்லை. முகமன் கூறியதோடு சரி.
பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் இவளோடு பேச ஆரம்பிக்க, சற்று நேரம் அவர்களோடு அளவளாவினாள். அங்குமிங்கும் அலைந்து திரிந்த சத்தியமூர்த்தி தான், இவள் கண்ணில் பட்டார். ஆனாலும், அவள் கண்கள் பேரனைத்தான் தேடியது.
அன்று, யுகேந்திரன் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்திருந்தான். கொஞ்ச நாட்களாகக் கட்சி விஷயமாக வெளியூரில் இருந்த அப்பா, அன்றுதான் வீடு திரும்பி இருந்தார். நாளை மீண்டும் பயணப்பட்டு விடுவார் என்பதால், அவரோடு சிறிது நேரம் செலவழித்திருந்தான்.
இன்று யுகேந்திரனுக்குக் கொடுக்கப் பட்டிருந்த தலைப்பு ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’. அரங்கத்திற்குள் போகாமல், பக்கத்தில் இருந்த அறையில், தாத்தாவோடு கொஞ்சம் அது பற்றி விவாதம் பண்ணிக் கொண்டிருந்தான்.
நித்திலாவிற்குத் தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. யுகேந்திரனின் அன்றைய ‘இராவணன்’ பற்றிய பேச்சை மிகவும் ரசித்திருந்தாள். சொல்லப் போனால், அவன் பேச்சைக் கேட்கவேண்டும் என்பதற்காகத்தான், இன்றைய விழாவிற்கே வந்திருந்தாள். இது சம்பந்தமாகப் பேசுவதற்கென்று சத்தியமூர்த்தியை அழைக்க, அது அவரோடு அழகான ஒரு நட்பை உருவாக்கி இருந்தது.
யுகேந்திரனின் முறை வரவும் மேடைக்கு வந்தவன், முகமன் கூறி பேச்சை ஆரம்பித்தான். நாலா பக்கமும் கண்களைச் சுழல விட்டபடி பேச்சை ஆரம்பித்தவன், ஓரிடத்தில் சட்டென்று ஸ்தம்பித்தான். 
தானிருந்த இடத்தில் இருந்தபடியே, இவனுக்கு வணக்கம் வைத்தாள் நித்திலா. அவளை இவன் சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை. புன்னகையொன்றைப் பரிசாகத் தந்தவன், பேச்சைத் தொடர்ந்தான்.
குற்றாலக் குறவஞ்சியில் நான்கைந்து பாடல்களைச் சுவை பட விளக்கியவன், கடைசியாகக் ‘காதலன்’ திரைப்படப் பாடலுக்கு வந்தான். அரங்கமே உற்சாகமானது.
“நண்பர்களே! காதலன் படத்தில் ஒரு பாடல் வரும். ‘இந்திரையோ? இவள் சுந்தரியோ? தெய்வ ரம்பையோ? மோகினியோ?’. இந்தப் பாட்டை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?”. அவன் கேட்கவும், முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர்,
“தம்பீ! நீங்க நல்லாப் பாடுவீங்கன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். சினிமாப் பாடல்னு வேற சொல்லுறீங்க. நேயர் விருப்பம், அந்தப் பாடலைப் பாடுங்க தம்பி.” என்றார். 
யுகேந்திரன் திகைத்துப் போனான். இதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சபையில் சின்னச் சலசலப்பு ஏற்பட்டது. 
“பாடுங்க சார்.” பின்னாலிருந்து இன்னொரு குரலும் வர, யுகேந்திரனின் நிலை, தர்ம சங்கடமானது. நித்திலா ஆர்வமாகப் பார்த்திருந்தாள். 
‘ஓ… ஐயா பாடுவாரா?’ மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
யுகேந்திரன் அந்தப் பெண் குரல்ப் பாடலை, அவன் ஆண்மை ததும்பும் குரலில் பாடவும், அரங்கமே கட்டுப்பட்டுக் கேட்டது. பாடி முடித்து அவன் பேச ஆரம்பிக்கவும், அவனைப் பேச விடாமல் அத்தனை கரவொலி. புன்னகையோடு அதை அனுமதித்தான். அந்தப் புன்னகை அத்தனை அழகாக இருந்தது.
“இந்தப் பாடலில் திரிகூடராசப்பக் கவிராயர், கதாநாயகி தன் தோழிகளுடன் பந்து விளையாடும் காட்சியை வர்ணிக்கிறார். சங்குப் பூச்சிகள் அணியாகச் செல்லும் அந்தத் தெருவில், கதாநாயகி தோழிகளுடன் விளையாடுகிறாள். இதில் சிறப்பு என்னவென்றால், நாயகியின் அழகை வர்ணித்த கவிராயர், அவளது விளையாட்டு நுட்பத்தையும் வர்ணிக்கிறார். பந்தை அவள் அடிக்கும் போது, அவள் கரம் முந்துகிறதா? விழி முந்துகிறதா? இல்லை மனம் முந்துகிறதா?” இந்த இடத்தில் நிறுத்தி, அந்தப் பாடல் வரிகளை மீண்டும் பாடிக் காண்பித்தான். அத்தனை பேரும் மெய்மறந்து போயிருந்தார்கள்.
“இதை மும்முனைப் போட்டியாக வியக்கிறார்கள், பார்த்துக் கொண்டிருந்தவர்கள். இந்தப் பாடலை நான் தெரிவு செய்த காரணம் என்ன தெரியுமா? இன்றைய நவீன விளையாட்டுகளில், அதுவும் குறிப்பாக டென்னிஸ் விளையாட்டில், இந்த யுத்தியைத்தான் இன்று பின்பற்றுகிறார்கள். பந்தை அடிக்கும் போது, முதலில் மனம் அதன் இலக்கைக் கணிக்க வேண்டும். பின்பு கண்கள், அதன் பிறகே கைகள் அடிக்க வேண்டும்.” 
இந்தப் பரிமாணத்தில் யோசித்த போது, நித்திலாவிற்கு அந்தப் பாடல் அத்தனை சுவையாக இருந்தது. பாடல் மட்டுமல்ல, அவன் சொன்ன விதமும் அத்தனை ரசிக்கத்தக்கதாக இருந்தது.
விழா முடியவும், யுகேந்திரன் கொஞ்சம் வேகமாகக் கார் பார்க்கிங்கிற்கு வந்தான். நேரம் ஏழைத் தாண்டி இருந்தது. இன்று டின்னர் அப்பாவோடுதான் என்று வானதி கட்டளையே போட்டிருந்தார்.
“வணக்கம் கவிஞரே!” அந்தக் குரலில் திரும்பிப் பார்த்தான் யுகேந்திரன். சப் கலெக்டர் நின்று கொண்டிருந்தார். ட்ரைவர் டோரைத் திறந்தவன், அதை மூடிவிட்டு அவள் புறமாகத் திரும்பினான்.
“என்னாச்சு சார்? லேட்டாத்தான் வந்தீங்க. இப்போ விழா முடிஞ்சதும் ஓடுறீங்க. எங்களோட எல்லாம் பேச மாட்டீங்களா?” அவளின் வெளிப்படையான பேச்சில், யுகேந்திரன் திகைத்துப் போனான்.
“அப்படியில்லை மேடம். அப்பா இன்னைக்கு வீட்டுல இருக்காங்க. சேந்தாப்போல ரெண்டு நாள் வீட்டுல இருந்தாலே அபூர்வம். அதான்…”
“அந்த மேடமை முதல்ல கட் பண்ணுங்க. நித்திலா, இது நல்லா இருக்கில்லை?”
“ஐயையோ! சப் கலெக்டரை பெயர் சொல்லி கூப்பிடுறதா?”
“சார்! இங்க நீங்க கவிஞர், நான் உங்க ரசிகை, அவ்வளவுதான். அதை விடுங்க சார்…”
“யுகேந்திரன்…”
“நைஸ் நேம். ஆனா எனக்கு நீங்க கவிஞர் தான். அதெப்படிங்க? தேடித் தேடிப் படிப்பீங்களா?”
“தேடித் தேடிப் படிப்பேன், தேடித் தேடிப் பிடிப்பேன்.”
“இது… இது… இதான்! எப்பிடி உங்களால எல்லாம் இப்பிடிப் பேச முடியுது?”
“அது எப்பிடீன்னு தெரியலைங்க. ஆரம்பிச்சா அதுவா வருது.”
“லக்கி சார் நீங்க. உங்க தாத்தாவை இன்னைக்கே புடிச்சு, உங்க அடுத்த விழாவுக்கு டிக்கெட் வாங்கணும். அடுத்த முறை முதல் வரிசையில இடம் புடிக்கணும்.” அவள் பேச்சில், மெதுவாகச் சிரித்தான் யுகேந்திரன். அந்தச் சிரிப்பு நித்திலாவை லேசாக அசைத்தது. 
“கிளம்புங்க சார். அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க.”
“ஓ கேங்க. நான் கிளம்புறேன்.” காரில் ஏறி உட்கார்ந்தவன், அதை ஸ்டார்ட் செய்தான். தலையசைத்தவள், திரும்பி நடந்தாள்.
“நித்திலா…” அவன் குரல், அவளை நிறுத்தியது. மீண்டும் காருக்குப் பக்கத்தில் வந்தாள்.
“சொல்லுங்க சார்.”
“மக்களுக்கு நல்லது பண்ணணும் தான், இல்லேங்கலை. ஆனா உங்க பாதுகாப்பையும் கொஞ்சம் பாத்துக்கோங்க.” இதைச் சொல்லும் போது, யுகேந்திரனின் குரல் குழைந்து போயிருந்தது.
“எனக்கு என்ன சார் ஆபத்து வந்திரப் போகுது? அப்பிடியே வந்தாலும், அதைப் பாக்க முடியுமா சார்?”
“கூட அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்களா? இல்லை இனிமேல்தான் வருவாங்களா?” அவன் கேள்வியில், மர்மமாகப் புன்னகைத்தாள் பெண்.
“அதைப்பத்தி இன்னொரு நாள் பேசலாம் சார். நீங்க கிளம்புங்க. அம்மா காத்திருப்பாங்க.” அவள் சொல்லவும், ஒரு தலையசைப்போடு காரை நகர்த்தினான் யுகேந்திரன். 
டின்னரை முடித்து விட்டு, அம்மாவும், மகனும், அப்பாவோடு நன்றாக அரட்டை அடித்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் வானதி தூங்கி வழியவும், யுகேந்திரன் தனது ரூமிற்கு வந்துவிட்டான். 
கையில் ஒரு புத்தகத்தோடு கட்டிலில் சாய்ந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்படி அப்பாவோடு நேரம் செலவழித்தது, மனதுக்கு இதமாக இருந்தது. 
மனதில் தோன்றிய மகிழ்ச்சியோ, என்னவோ? கூப்பிடாமலேயே நித்திலாவின் முகம் நினைவில் வந்தது. அந்தப் பெண்ணின் செய்கையில் தான் ஒரு படபடப்பென்று எண்ணி இருந்தான். ஆனால், பேசிய பிறகுதான் தெரிந்தது, பேச்சும் அதே போல் என்று.
தன் வயதும், அவள் வயதும் பேசும் பேச்சுக்களால் இல்லாத அர்த்தங்களை எல்லாம் தோற்றுவிக்கும் என்று தெரிந்திருந்தும், எப்படிப் பேசுகிறாள்? ஆச்சரியமாக இருந்தது யுகேந்திரனுக்கு.
தனக்குச் சரியென்று மனதில் தோன்றுவதை எல்லாம், தடையின்றிப் பேசுகிறாள். சரியான ‘டாம் பாய்’ என்று எண்ணிக் கொண்டான். 
இதற்கு மேல் இனியெங்கே படிக்க… கையிலிருந்த புத்தகத்தை, மேஜை மேல் வைத்தவன், டீ வீயை உயிர்ப்பித்தான். எல்லா சானல்களிலும், ஏதோ ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. 
ஒரு சானலில், திரைப்படம் சட்டென்று நிறுத்தப்பட்டு, ப்ரேக்கிங் நியூஸ் ஒளிபரப்பானது.
கட்டிலில் சாய்ந்திருந்த யுகேந்திரன் எழுந்து அமர்ந்தான். அவர்கள் காண்பிக்கும் இடம் தனக்குப் பரிட்சயம் போல் தெரிந்தது. ஊன்றிப் பார்த்தான். நிச்சயமாக அது சப் கலெக்டரின் வசிப்பிடம் தான். வீட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

error: Content is protected !!