நிலவொன்று கண்டேனே 6

காலையில் கண்விழித்த நித்திலாவிற்குத் தலை பாரமாக இருந்தது. மாத்திரைகளின் வீரியமா? என்னவென்று தெரியவில்லை. அடித்துப் போட்டாற் போல தூங்கி இருந்தாள்.

மாத்திரை என்றவுடன் யுகேந்திரன் தான் ஞாபகத்திற்கு வந்தான். நேற்று இரவு மாத்திரை கொடுத்துவிட்டு முத்தமிட்டானே! நிச்சயமாக அது கனவில்லை. அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

நேற்றைய நிகழ்வுகள் நினைவில் வர, குனிந்து தன் உடையைப் பார்த்தாள். மெல்லிய மஞ்சள் வண்ணத்தில் ஒரு சுடிதார். கைக்கு அகப்பட்டதை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்று நன்றாகப் புரிந்தது. ஆனாலும், அவளுக்கு அளந்து தைத்தாற் போல அத்தனை கச்சிதமாகப் பொருந்தியது.

ஃபோன் சிணுங்கவும் படுத்தபடியே திரும்பிப் பார்த்தாள். யுகேந்திரன் தான் அழைத்துக் கொண்டிருந்தான். அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ.”

“குட் மார்னிங் நித்திலா.”

“குட் மார்னிங்.” அவள் குரல் நலிந்திருந்தது.

“என்னம்மா? இன்னும் பெயின் இருக்கா?”

“ம்… லேசா இருக்கு.”

“டாக்டர் ரெண்டு நாளைக்கு பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்காங்க. அதனால லீவு சொல்லிடு.”

“ம்…”

“என்னால இப்போ அங்க வர முடியாது நித்திலா. இன்னைக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு. ஃபாரெஸ்ட் வரைக்கும் போகணும். நான் ஈவ்னிங் கண்டிப்பா வர்றேன்.”

“ம்…”

“பங்கஜம் அம்மா நேரத்துக்கு மாத்திரை குடுப்பாங்க. சமத்தா சாப்பிட்டுட்டுத் தூங்கணும், புரியுதா?”

“ம்…”

“நித்திலா… பேசமாட்டியா?” அவன் குரல் கரகரப்பாக வந்தது. நேற்றிலிருந்து அவன் ஒருமையில் அழைத்துக் கொண்டிருப்பதை அவள் மனம் அவசரமாகக் குறித்துக் கொண்டது.

“என்ன… பேச?”

“ஓயாமப் பேசுற நித்திலாவா இது?”

“……” அவள் மௌனம் அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க,

“ஓகே டா. நான் ஈவ்னிங் பார்க்கிறேன்.” என்றுவிட்டு டிஸ்கனெக்ட் பண்ணினான்.

மெதுவாக எழுந்த நித்திலா பாத்ரூமிற்குள் நுழைந்தாள். குளிக்க முடியுமா என்று தெரியவில்லை. நெற்றியில் இருந்த பான்டேஜில் நீர் படாமல் முகத்தைக் கழுவிக் கொண்டாள்.

இவள் வெளியே வரவும், பங்கஜம் அம்மா காஃபியை நீட்டினார்.

“இப்போ எப்பிடி இருக்கு கண்ணு?”

“பரவாயில்லைம்மா.”

“நல்ல சத்தான ஆகாரமா குடுங்கன்னு தம்பி சொல்லிட்டுப் போயிருக்கு. நான் சூப் பண்ணுறேன் கண்ணு. கொஞ்ச நேரத்துல குடிப்பீங்களாம்.”

“ம்… சரிம்மா.” காஃபியைக் குடித்தபடி ஹாலுக்கு வந்தவள், வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த மனிதனைக் கண்டதும் திகைத்து விட்டாள்.

“பங்கஜம் அம்மா… யாரது? இங்க இருக்கிறது?” அவள் குரலில் பதட்டம் இருந்தது. அவசரமாக வந்த பங்கஜம்,

“தம்பியோட ஏற்பாடு கண்ணு. ராத்திரி பூராவும் இங்க தான் காவலுக்கு இருந்தாங்க. நீங்க எங்க வெளியே போனாலும் அவிங்க கூட வருவாங்களாம்.” என்றார்.

நித்திலாவிற்கு எல்லாம் விசித்திரமாக இருந்தது. என்ன நடக்கிறது இங்கே? நேற்று வரை தன் கட்டுப்பாட்டில் இருந்த வீட்டில், இன்று தான் அன்னியம் போல உணர்ந்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கூர்க்கா வந்தார். கையில் ஏதோ இருந்தது.

“அம்மிணி… தம்பி வீட்டு ட்ரைவர் இதைக் குடுத்துட்டுப் போனார். உங்ககிட்ட தம்பி இதைக் குடுக்கச் சொன்னாங்களாம்.” காஃபிக் கப்பை பங்கஜம் அம்மாவிடம் நீட்டியவள் அதை வாங்கிக் கொண்டாள்.

வெள்ளைப் பேப்பரில் அழகாகச் சுற்றப்பட்டிருந்தது. வாங்கும் போதே நித்திலாவிற்கு அது ரோஜாக்கள் என்று புரிந்தது. பேப்பரைப் பிரித்தாள்.

நீள நீளக் காம்புகளுடன், கத்தையாக, நல்ல அடர் சிவப்பில் உயர் ரக ரோஜாப் பூக்கள் ஒரு ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது. பூக்களைப் பார்த்தவுடன், கூர்க்காவும், பங்கஜம் அம்மாவும் ஒரு புன்னகையுடன் சட்டென்று நகர்ந்து விட்டார்கள். நித்திலாவிற்கு ஒரு மாதிரியாகிப் போனது.

ரிப்பனுக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கார்ட் இருந்தது. முத்துப் போல எழுத்துக்கள். படித்தாள்… கண்களில் நீர் கோர்த்தது.

‘நீலக்கரு விழியில் ஓலை கொண்டு மை எழுதி, ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி, வாரித் தலை சீவி வகிடெடுத்துப் பின்னலிட்டு, வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ’-

‘நான் தாயுமானவன், தந்தையானவன், அன்புச் சேவகன், அருமை நாயகன்’-

வரிகள் இப்படி முடிந்திருக்க, கடைசியில் -உன் கவிஞன்- என்று முடித்திருந்தான்.

அதற்கு மேலும் அங்கு நின்றிருந்தால் தான் உடைந்து போவோம் என்று தோன்றவும், நித்திலா சட்டென்று ரூமிற்குள் போனாள். எவ்வளவு அடக்கியும் கேவல் ஒன்று வெடித்துக் கொண்டு வெளியேறியது.

()()()()()()()()()()()()()()()()()()()()()()

நேரம் மாலை ஐந்தைத் தாண்டி இருந்தது. காலையில் புறப்பட்டு வந்த யுகேந்திரன் இன்னும் வீடு திரும்பவில்லை. வேலைகள் அவனை உள்வாங்கிக் கொண்டன.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகிப் போனதால் பொள்ளாச்சியை அண்மித்திருந்த, அவன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காட்டுப் பகுதியில் ஒரு சில முன்னேற்றங்கள் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள்.

அதில் முதற் கட்டமாக ஒரு சில இடங்களில் இயற்கையைப் பாதிக்காத வகையில் சின்னதாக வீதிகள் அமைத்தார்கள். இராத் தங்கலுக்கும் மக்களுக்கு அனுமதி இருந்ததால் இது போன்ற சின்னச் சின்ன வசதிகள் தேவைப்பட்டன. அன்றைய நாள் முழுவதும் அங்கேயே கழிந்தது யுகேந்திரனுக்கு.

வீதிகளை அமைத்தாலும் மரங்களுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி வேலையை நடத்துவதில் யுகேந்திரன் மிகவும் கண்ணுங் கருத்துமாக இருந்தான்.

இருந்தாலும்… மனம் முழுவதும் நித்திலா வசமே இருந்தது. நேற்று இரவு வீட்டிற்குப் போகும் போதே பதினொன்று ஆகிவிட்டது.

அம்மாவிற்கு, ‘தாமதம் ஆகும்’ என்று மட்டும் தகவல் சொல்லி இருந்தான். வேறு ஒன்றும் சொல்லவில்லை. அவரைப் பதட்டப்படுத்த அவனுக்கு விருப்பம் இல்லை. எப்படியும் டாக்டர் ஆன்ட்டி மூலமாக விஷயம் அவர் காதுக்குப் போகும் என்று யுகேந்திரன் அறிவான்.

இரவு முழுவதும் அத்தனை ஆழ்ந்த உறக்கம் இல்லை யுகேந்திரனுக்கு. அதீத மகிழ்ச்சியா? என்னவென்று தெரியவில்லை. தூக்கம் அவனைத் தழுவாமல் எட்ட நின்று வேடிக்கை பார்த்தது.

நிலா… நிலா… நிலா… மனம் முழுதும் அந்தப் பெண் தான் நிறைந்திருந்தாள். நடந்த நிகழ்வு மனதுக்கு வேதனை தந்திருந்தாலும், அப்படியொன்று நடந்திருக்காவிட்டால் தன் கூட்டை விட்டுத் தான் வெளியே வந்திருக்கப் போவதில்லை. அது யுகேந்திரனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்திருந்தது.

நண்பரோடு பேசிக் கொண்டிருந்தாலும், அவன் கண்கள் நித்திலாவை வட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தன.

அந்த இரு சக்கர வாகனம் அவளை நெருங்கும் போதே அவனுக்குப் புரிந்தது. ஏதோ விரும்பத்தகாத ஒன்று நடக்கப் போகிறதென்று.

முழுதாக முகத்தை மறைக்கும் வகையில் கறுப்பு நிற ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். பின்னால் அமர்ந்திருந்தவன் அவள் புடவை முந்தானையைப் பிடித்தபோது உயிரே போனது யுகேந்திரனுக்கு.

எப்படித்தான் அவளிடம் போய்ச் சேர்ந்தானோ? அவனுக்கே தெரியாது. கூனிக் குறுகி கிழிந்த ஜாக்கெட்டோடு அவள் தன்னிடம் ஒண்டிய நொடி யுகேந்திரனுக்குப் புரிந்தது, அவள் தான் இனித் தன் உலகம் என்று.

இனி யாருக்காகவும், எதற்காகவும் அந்தப் பெண்ணை அவனால் விட்டுக் கொடுக்க முடியாது. அதில் அத்தனை உறுதியாக இருந்தான்.

அவனுக்கும், அவளுக்கும் இடையிலான வாழ்க்கையில் நிறையக் கருத்து வேறுபாடுகள் வரலாம். மோதல்கள் வரலாம். இருந்தாலும் தனக்கான துணை அவள் தான் என்று அவன் மனதுக்கு நன்றாகப் புரிந்தது.

தனது நிதானத்திற்கும், அவளின் வேகத்திற்கும் பொருத்தமே இல்லையென்றாலும், அந்தப் பெண்ணின் பின்னால் மனம் போவதை அவனால் தடுக்க முடியவில்லை.

“அம்மா…” அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் யுகேந்திரன். வானதி கூப்பிட்ட குரலுக்கு சட்டென்று வராமல் கொஞ்சம் தாமதித்த போதே மகனுக்குப் புரிந்தது. அம்மாவின் காதுக்கு விஷயம் வந்து விட்டது என்று.

“குளிச்சிட்டு வந்திர்றேன், காஃபி குடுங்க.‌ அவசரமா வெளியே போகணும்.” சொல்லிவிட்டு ரூமிற்குள் போனான். வானதியின் தலை மட்டும் தான் ஆடியது. எதுவும் பேசவில்லை. மனதுக்குள் சிரித்துக் கொண்டான் மகன்.

குளித்து முடித்து ரெடியாகியவன் ரூமை விட்டு வெளியே வந்தபோது, காஃபியை நீட்டினார் வானதி. அம்மாவையே பார்த்தபடி காஃபியை அருந்தினான் மகன்.

“கேக்க நினைக்கிறதைத் தாராளமாக் கேக்கலாம்.” அவன் குரலில் சிரிப்பிருந்தது.

“வெளி மனுஷங்க சொல்லித் தெரியும் போதே புரியல்லையா? நமக்குக் கேக்குற தகுதி இல்லைன்னு.” முகத்தை நாலு முழத்தில் நீட்டிக் கொண்டு சொன்னார் வானதி.

ஒரு புன்சிரிப்போடு காஃபியைப் பருகியவன், காலிக் கப்பை மேஜையில் வைத்தான். அம்மாவின் தோளில் கைகளை மாலையாகப் போட்டவன்,

“என்ன சொல்லச் சொல்லுற வானதி? எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்லச் சொல்லுறயா?” என்றான். அவன் கேள்வியில் முகத்தைத் திருப்பிக் கொண்டார் வானதி.

“சாரிம்மா… நான் பண்ணுற காரியம் உங்களுக்குப் பிடிக்காதப்போ எப்பிடி நான் அதை உங்ககிட்ட சொல்ல முடியும்?”

“பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன் யுகேந்திரா?”

“ஒத்து வராதுன்னு சொன்னீங்களேம்மா?”

“அதையும் தாண்டி உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தா, அம்மா வேணாம்னு சொல்லுவேனாப்பா?”

“அப்போ ஓகே சொல்லுவீங்களா? எனக்குப் பர்மிஷன் குடுக்குறீங்களா வானதி மேடம்?” கேலியாகக் கேட்டாலும், அவன் முகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.

“போடா.” வெடுக்கெனச் சொல்லிவிட்டு நகர்ந்தார் வானதி. அவருக்கு முன்னால் வழியை மறித்தபடி வந்து நின்றான் யுகேந்திரன்.

“அம்மா! யாரை வேணும்னாலும் நான் சமாளிச்சிடுவேன். ஆனா அங்க ஒருத்தி உக்காந்திருக்கா பாரு… அவளுக்கு எப்பிடித்தான் என்னைப் புரியவைக்கப் போறேனோ தெரியலையே…” மகனின் நடிப்பில் பக்கென்று சிரித்தார் வானதி.

“ஏன் யுகேந்திரா?”

“நேத்து அவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. அத்தனை பேரையும் விட்டுட்டு எங்கிட்டத் தானே ஒட்டிக்கிட்டா. அதுல இருந்தே அவளுக்கு அவளோட மனசு புரிய வேணாமா?”

“ரொம்பக் கஷ்டப் பட்டாளாப்பா?” ஒரு பெண்ணாக வானதியின் முகத்தில் இப்போது கவலை தெரிந்தது. யுகேந்திரன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.

“எல்லாரும் கொஞ்சம் வயசுல பெரியவங்களா இருந்ததால இங்கிதமா நடந்துக்கிட்டாங்கமா? இதுவே இளவட்டங்களா இருந்திருந்தா… இந்நேரத்துக்கு யூடியூப்ல வந்திருக்கும்.”

“ஐயையோ!”

“ம்… சேலையை இழுத்த வேகத்துல ஜாக்கெட்…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தடுமாறினான் யுகேந்திரன். வானதியின் முகமும் கசங்கிப் போனது.

“சரி விடுப்பா. யாரு செஞ்ச புண்ணியமோ ஒன்னுமாகலை. அது சரி… இப்போ ஐயா எங்க பயணம்?” சூழ்நிலையை இலகுவாக்க கேலியில் இறங்கினார் வானதி. அது சரியாக வேலை செய்தது.

“வேற எங்க? அம்மிணியைப் பார்க்கத்தான்.”

“டேய்! நான் உன்னோட அம்மாடா?”

“அதுக்கென்ன வானதி… உங்கிட்ட சொல்லாம நான் ஏதாவது பண்ணி இருக்கேனா?”

“அதுக்காக? சைட் அடிக்கப் போறதையும் சொல்லிட்டுப் போவியா?”

“ஏன்? அதுல என்ன தப்பு? மண்ணாந்தை மாதிரி முழிச்சிக்கிட்டு நிப்பா. இதுல நான் சைட்டு அடிச்சிட்டாலும்…”

“ஹா… ஹா… நல்லா வேணும்பா உனக்கு. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் யுகேந்திரா. சப் கலெக்டர் உனக்கு மண்ணாந்தையா? கேள்விப்பட்டா உன்னை ஒரு வழி பண்ணிடுவா.”

“பண்ணினாலும் பண்ணுவா.” சொன்னவன் சட்டென்று வானதியின் காலைத் தொட்டான்.

“கடுமையான போருக்குப் போகும் உங்கள் மகனை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அன்னையே!”

“வெற்றியோடு திரும்பி வா மகனே!”

“எதுக்கும் உங்க மகனை ஒரு தடவை நல்லாப் பார்த்துக்கோங்க வானதி.”

“சரி சரி விடு. கெஞ்சிப்பாரு… இளகலையா? சட்டுன்னு கால்ல விழுந்துரு. அதை விட பெஸ்ட் ஒன்னுமே கிடையாது.”

“கால்லயா?” யுகேந்திரனின் முகம் அஷ்ட கோணலானது.

“ம்… ஏன்? பொண்டாட்டி காலப் பிடிக்க மாட்டீங்களோ?”

“இதுக்கு அவளே தேவலை…” சொன்னவன் காரை நோக்கிப் போனான். வானதியின் சிரிப்பு அவனைத் தொடர்ந்தது.

()()()()()()()()()()()()()()()()()()()

யுகேந்திரன் நித்திலாவின் வீட்டை அடைந்த போது கூர்க்கா கேட்டைத் திறந்து விட்டார். ஒரு தலையசைப்போடு காரை உள்ளே செலுத்தியவன் வீட்டினருகே நிறுத்தினான்.

பங்கஜம் அம்மா வெளியே வந்தவர் இவனைப் பார்த்ததும் புன்னகைத்தார்.

“வாங்க தம்பி.”

“ம்… நித்திலா எங்கம்மா?” யுகேந்திரனின் கேள்விக்குக் கண்ணால் பதில் சொன்னார் அந்த அம்மா. அவரின் ஜாடையில் திரும்பிப் பார்த்தான் யுகேந்திரன்.

வீட்டுக்கு முன்னால் இருந்த அந்தச் சின்னத் தோட்டத்தில் இருட்டில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் கண்ணுக்குத் தெரியும் தொலைவில் அவளைக் கண்காணித்தபடி அமர்ந்து இருந்தார் யுகேந்திரன் நியமித்த மனிதர்.

பங்கஜம் அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தவன் தோட்டத்திற்குப் போனான். இவன் கண்ணசைவில் அந்த மனிதர் விலகிப் போனார்.

“நித்திலா! இப்போ எப்பிடி இருக்கு?” அவள் பக்கத்தில் அமர்ந்தபடியே கேட்டான் யுகேந்திரன்.

“ம்…” என்றபடி தலையைக் குனிந்து கொண்டாள் பெண்.

“சாப்பிட்டு, மாத்திரை எல்லாம் போட்டாச்சா?”

“இப்போதான் பங்கஜம் அம்மா குடுத்தாங்க.” அவள் பதிலில் ஒரு விலகல் தெரிந்தது.

“என்னாச்சுடா? ஏன் ஒழுங்காப் பேச மாட்டேங்குற?”

“உங்களுக்கு என்ன சார் ஆச்சு? ஏன் இப்பிடியெல்லாம் நடந்துக்கிறீங்க?”

“நான் என்ன பண்ணினேன் நித்திலா?”

“நீங்க… நான்…” மேலே சொல்ல முடியாமல் தடுமாறினாள் பெண். அவள் கண்களை நேராகப் பார்த்தான் யுகேந்திரன்.

“ஏன்? பிடிக்கலையா?”

“ஒத்து வராது சார்.”

“அதுதான் ஏன்?”

“உங்க லெவல் வேற சார். அதுக்கு ஈடு குடுக்க என்னால முடியாது. கஷ்டப்படுவீங்க.”

“புடிச்சிருக்கா? இல்லையா? அதுக்கு மட்டும் பதில் சொல்லு.”

“உங்களை எனக்கு நிறையப் புடிக்கும். ஆனா அது மட்டும் வாழ்க்கை இல்லை.”

“வேற எது வாழ்க்கை நித்திலா? எனக்கு உன்னைப் புடிக்குது. உனக்கு என்னைப் புடிக்குது. இதை விட வேற என்ன வேணும்?”

“இதையெல்லாம் தாண்டி நிறைய…”

“நித்திலா! நீ விதண்டாவாதம் பண்ணுற.” அவளை இடைநிறுத்தியது அவன் குரல்.

“உங்களுக்கு எம்மேல வந்திருக்கிறது காதல் இல்லை. பரிவு… அனுதாபம். இது எத்தனை நாளைக்கு நிலைக்கும்?” அவள் கேள்வியில் அவன் கண்கள் லேசாகச் சுருங்கின.

“என்னோட காதலை இப்போ, இங்க நான் நிரூபிச்சா நீ மிரண்டுருவ நித்திலா. வேணாம்… என் அன்பைச் சந்தேகிக்காதே.” மிரட்டலாகச் சொன்னவன் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பெஞ்சில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவன், இப்போது அவள் புறமாகத் திரும்பி உட்கார்ந்தான்.

“ஏன் பெண்ணே! காலையில் நான் அனுப்பிய மலர்கள் என் காதலை உன்னிடம் சொல்லவில்லையா?” கவிதை போல அவன் கேட்க, அவள் கண்களில் நீர் கோர்த்தது.

“நீங்க என்னைப் பலவீனப் படுத்துறீங்க யுகேந்திரன்.”

“அப்பாடா! இன்னைக்குத்தான் அம்மிணி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டிருக்காங்க.”

“ப்ளீஸ்… சீரியஸாப் பேசுங்க.”

“என்னோட நிலான்னு வந்துட்டா எனக்கு இப்பிடித்தான் பேச வரும் பொண்ணே!” அவன் பேச்சில் அவள் சட்டென்று எழுந்தாள். அவள் கையைப் பிடித்தவன், அவளை நகர விடாமல் நிறுத்தினான்.

“உட்கார் நித்திலா!” அவன் வார்த்தைகள் லேசாகச் சுட்டது. கண்களில் கோபம் தெரிந்தது. பெஞ்சில் அவளை இருத்தியவன், அவள் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினான்.

“நித்திலா… இது சப் கலெக்டர் ஆஃபிஸுமில்லை, இப்போ நீ சப் கலெக்டரும் இல்லை. இது நம்ம வீடு, இங்க நான் தான் புருஷன், நீதான் பொண்டாட்டி. புரியுதா… இதுல எந்த மாற்றமும் இல்லை. நீ சொன்னியே எங்கம்மாக்கிட்ட, ‘எனது வீட்டை இல்லமாக்கினாள்’ ன்னு. அது மாதிரி ஒரு வாழ்க்கையை நாம வாழணும்.” அவன் பேசப் பேச அவன் கண்களையே பார்த்தபடி, இமைக்காமல் அமர்ந்திருந்தாள் நித்திலா.

“வீட்டுக்கு வெளியே நீ என்ன சாகசம் வேணும்னாலும் பண்ணு. உம் புருஷனா உன்னோட அத்தனை செயல்களுக்கும் நான் உனக்குத் துணையா, பாதுகாப்பா இருப்பேன். ஆனா, விலகிப் போக நினைக்காதே. அது இனி நடக்காது.”

“இதுக்கு உங்க வீடு சம்மதிக்காது யுகேந்திரன்.”

“யாரு சொன்னா? நான் இப்போ இங்க தான் வர்றேன்னு எங்கம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்.”

“உங்க பிடிவாதத்தால சம்மதிச்சிருப்பாங்க. உறவுகளோட அருமை உங்களுக்குப் புரியாது யுகேந்திரன். அது இல்லாதவங்களுக்குத் தான் அதோட அருமை தெரியும்.” அவள் கண்ணீர்க் குரலில் சொல்லவும், அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தான் யுகேந்திரன். வாய் தானாகப் பாடியது.

“நான் தாயுமானவன், தந்தையானவன், அன்புச் சேவகன், அருமை நாயகன்…” நித்திலா எதுவும் பேசவில்லை. நிலம் பார்த்து அமர்ந்திருந்தாள்.

“ரொம்பக் கெஞ்ச வைக்காதே கண்ணம்மா…”

“கவிஞரே! நீங்க இந்த விஷயத்துல அத்தனை உறுதியாகவா இருக்கீங்க?” அவள் சஞ்சலத்தோடு கேட்கவும் அவன் புன்னகைத்தான்.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் நித்திலா. ஏன்னா… இப்பவே உனக்கு வயசு இருபத்தெட்டு. கரெக்டா? சீக்கிரமா ரெண்டு குழந்தைங்க பெத்துக்கணும். இல்லைன்னா பின்னாடி உனக்கு டெலிவரி ப்ராப்ளம் ஆயிடும்.” சொல்லிக் கொண்டே போனவன், சற்று நிறுத்தி அவள் முகத்தைப் பார்த்தான்.

“நான் எவ்வளவு உறுதியா இருக்கேன்னு உனக்கு இப்போதாவது புரியுதா?” யுகேந்திரன் கேட்கவும் அவள் முகத்தில் ஆச்சரியம் தான் தெரிந்தது.

“நிலா… இப்பிடி சிச்சுவேஷன்ல பொண்ணுங்க லேசா வெக்கப்படுவாங்கன்னு படிச்சிருக்கேன்…” அவன் சொல்லவும் சட்டென்று எழுந்தவள், வீட்டினுள் போனாள். முகத்தில் லேசாக நாணம் வந்தது போல் தெரிந்தது யுகேந்திரனுக்கு.

வலது கையால் தலையைக் கோதிக்கொண்டு போகும் தன் நிலவையே பார்த்தபடி இருந்தான் யுகேந்திரன். முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை மலர்ந்தது.

 

error: Content is protected !!