WhatsApp Image 2021-02-14 at 8.20.45 AM-defe344c

                                                நின் முகைக் காதல் 

                                                                  3

 காலை ஆதவ் கண் விழிக்கும் முன் தீட்சண்யா எழுந்துவிட்டிருந்தாள். குளித்து முடித்து வெளியே வந்தவளை சோம்பல் முறித்தபடி எதிர்கொண்டான் ஆதவ்.

“குட் மார்னிங். என்ன இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்ட? உங்க வீட்லயும் அப்படித் தானா?” கண் சிமிட்டி அவளிடம் கேட்க,

அவனிடம் இப்போது சற்று நம்பிக்கை பிறந்திருக்க, நன்றாகவே பேச ஆரம்பித்தாள் தீட்சா.

“இல்ல. என் வீட்ல ஏழு மணி.. இல்ல லீவ்னா சில சமயம் பத்து மணிக்கு கூட எழுந்திருப்பேன். ஆனா இங்க எப்படின்னு தெரியாது, அதான் எழுந்துட்டேன்.”

தலைக்குக் குளித்திருப்பாள் போல. தலையில் சுற்றி இருந்த டவலையும் தாண்டி அவள் கழுத்தில் வழிந்த நீர்த்துளிகளை ரசித்தபடி அவள் கூறுவதைக் கேட்ட ஆதவ்,

“வெல், இங்கயும் நீ ஏழு மணிக்கு எழுந்துக்கலாம். யாரும் உன்ன எதுவும் சொல்ல மாட்டாங்க. அம்மா சமையலுக்கு ஆள் வெச்சிருந்தாலும், அவங்க கூட இருப்பாங்க. அண்ணி கிச்சன் பக்கம் போனா கூட வேணாம்னு தான் சொல்வாங்க. அதுனால டோன்ட் ஸ்ட்ரெஸ்.” சாதாரணமாகக் கூறி விட,

“ஒ” ஒற்றை வார்த்தையில் நிறுத்தினாள்.

“சரி நான் ரிப்ரெஷ் பண்ணிட்டு வரேன். நீ வேணா போய் காஃபி குடி.” அவன் போக்கில் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.

வேறு அங்கிருந்து என்ன செய்வது என நினைத்தவள் கீழே செல்ல,

உமா அவளைக் கண்டு, “என்ன இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்ட? தூக்கம் வரலையா?” என்க,

“இல்ல அ..அத்தை.. தூங்கினேன் ஆனா எழுந்துட்டேன்.” ஏனோ சிறு தயக்கம் இருந்தது பேச.

‘வெளியில் யாரிடமும் காட்டிக் கொள்ளாதே என்றானே. ஆனால் இது எத்தனை நாள் நிலைக்கும்.’ என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியதால் வந்த தயக்கம் போலும்.

“ நீ உன் வீடு மாதிரி இரு. மாதிரி என்ன, இது தானே இனிமே உன் வீடு. சமையல் எல்லாம் வேலைக்காரங்க பார்த்துப்பாங்க. நான் அவங்க கூட இருந்து கவனிச்சுபேன். எனக்கு வேற என்ன வேலை இந்த வீட்ல. உன் மாமா , ராகேஷ், சரண்யா அப்பறம் ஆதவ் எல்லாரும் வேலைக்குக் கிளம்பிடுவாங்க. நான் வீட்ட பாத்துப்பேன். உனக்கும் வேலைக்கு போகணும்னா ஆதவ் கிட்ட சொல்றேன். சும்மா அவன் கூட கம்பனிக்கு போயிட்டு வாயேன். இல்ல வீட்ல இருந்தாலும் சரி.” எதுவானாலும் அவள் இஷ்டம் எனக் கூறினார்.

அதற்குள் அவரே கிச்சனில் இருந்து காபியும் கொண்டு வந்து கொடுக்க,

“தேங்க்ஸ்.. நான் ஒரு ரெண்டு நாள் கழிச்சு  என்ன செய்யலாம்னு யோசிக்கறேன். இப்போ எதுவும் தோணல அத்தை..” என்றாள்.

“சரி மா. நம்ம தோட்டத்தை எல்லாம் வேணா போய் பார்த்துட்டு வா. வாக் போன மாதிரியும் இருக்கும். உனக்கும் கொஞ்சம் ப்ரெஷ்ஷா இருக்கும்” அவர் எழுந்து கிச்சனுக்குள் சென்று டிபன் வேளைகளில் வேலையாட்களை ஏவினார்.

தோட்டத்துக்கு சென்றவள், அந்தக் காலைப் பனியின் இதத்தை, வண்ண வண்ண பூக்களுக்கு நடுவில் நின்று உணர்ந்து கொண்டே, கையில் இறுக்கி அணைத்திருந்த காபி கப்பை தன் உதட்டில் வைத்து சிப்பிக் கொண்டாள். பின் தன் தலையில் இருந்த டவலை அவிழ்த்து தன் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

தனது அறையில் உள்ள பால்கனி வழியாக அவளைக் கண்ட ஆதவ், தன் காமெராவை உடனே எடுத்து வந்து தன் தேவதையை அழகாகப் படம் பிடித்தான்.

இது அவனுக்குப் புதிதல்ல. அவளை முதன் முதலில் கண்டது முதலே அவளை தன் கைப் பேசியில் படமெடுத்து வைத்திருந்தான்.

அவளுக்கே தெரியாமல் அவளை பார்க்கும் போதெல்லாம், இப்படி வித விதமாக எடுத்து வைத்திருந்தான். 

பிறகு கிளம்பி ரெடியாகி கீழே வர, உமாவின் கண்களுக்கு அகப் படாமல், நேரே தோட்டத்திற்குச் சென்றான்.

தீட்சாவைப்  பார்க்கும் போதெல்லாம் அவள் மீதுள்ள காதல் அதிகமாவதை அவன் உணர்ந்தான். அதற்காகவே மூன்று  வருடங்கள் காத்திருந்து அவள் தனது காலேஜ் முடித்த சமயம் உடனே திருமணத்தை வைத்துக் கொண்டான்.

அவன் காலடி சத்தத்தை உணர்ந்து அவள் திரும்ப, வெள்ளை நிற காட்டன் சட்டையும், நீல நிற ஜீன்சும் அணிந்து அட்டகாசமாக வந்து நின்றான்.

“அதுக்குள்ள கிளம்பிடீங்களா?”

“ம்ம் ஆமா. ப்ரேக்பாஸ்ட் முடிச்சுட்டு நான் கிளம்பிடுவேன். ராகேஷ் கொஞ்சம் லேட்டா வருவான் அண்ணி கூட. அப்பா இப்போலாம் லஞ்ச் சாப்பிட்டு தான் வராரு சில சமயம் வரமாட்டாரு. அவருக்கும் ரெஸ்ட் வேணுமே. ப்ரெண்ட்ஸ பார்க்க க்ளப் மாதிரி எங்கயாவது போய்டுவாரு.” என்றான்.

“ஒ… நான் என்ன பண்றது? எனக்கு இங்க போர் அடிக்குமே. அத்தை வந்து.. என்னையும் வேணா கம்பனிக்கு போக சொன்னங்க. ஆனா..?”

“வாயேன்.. கொஞ்ச நாள் டைம் ஸ்பென்ட் பண்ணு. வொர்க் பண்ண வேண்டாம். வேலை எல்லாம் எப்படி நடக்குதுன்னு சூப்பர்வைஸ் பண்ணு. டைம் போய்டும்.”

“நான் தான் கொஞ்ச நாள்ல போய்டுவேனே அப்பறம் எதுக்கு இதெல்லாம்.” அவள் அப்படிச் சொன்னதும்,

ஆதவ்விற்கு உள்ளே சுருக்கென கோபம் பொங்கியது.

‘உன்ன யார்  விட போறா..போய்டுவாளம்.. நீ என்கிட்ட ஆயுள் கைதியாகி ரெண்டு நாள்ஆச்சு.’ கோபத்தை கண்ணை மூடி அடக்கியவன்,

“ஓகே உன் இஷ்டம்.” என்றுவிட்டு விறுவிறு வென உள்ளே சென்று விட்டான்.

‘என்ன சொல்லிட்டேனு இப்படி கோவமா போறாங்க?’ யோசித்தபடியே பின்னால் சென்றாள்.

அதற்குள் அனைவரும் டைனிங் டேபிளிற்கு வந்திருக்க, ஆதவ்வின் பின்னால் வந்தவள், கேட்க வந்ததை விடுத்து அமைதியானாள்.

“வா ஆதவ்.. சாப்பிட உட்காரு. நீயும் வந்து சாப்பிடு மா” அவளையும் அழைத்தார் உமா.

ஆதவ் கம்பனிக்கு கிளம்பி இருப்பதைக் கண்டு,

“என்ன ஆதவ், இன்னிக்கே கம்பனிக்கு வரணுமா என்ன? தீட்சா கூட டைம் ஸ்பென்ட் பண்ணு. ஒரு வாரம் எங்கயாவது போய்ட்டு வாங்க. அப்பறமா நீ கம்பனி வா.” சரண்யா சொல்ல,

“அதான.. நீ ஏன் கிளம்பின ஆதவ்?” உமாவும் சேர்ந்து கொண்டார்.

“இல்லம்மா..கம்பனில உடனே அனுப்ப வேண்டிய ஃபைல்ஸ் பெண்டிங்ல இருக்கு, அதெல்லாம் முடிக்கணும்.நான் நாளைக்கு அவள வெளிய கூட்டிட்டு போறேன்.” இட்லியை சாப்பிட்ட படியே பதில் சொன்னான்.

“டேய், அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நேத்து தான் கல்யாணம் பண்ணிருக்க, இன்னிக்கு ஆபீஸ் வந்தா நல்லாவா இருக்கு.. நான் அந்த ஃபைல்ஸ் பாக்கறேன். நீ அவள கூட்டிட்டு ட்ரிப் போய்ட்டு வா.” ராகேஷ் அவனைத் துரத்தினான்.

“இல்ல டா. இன்னிக்கு முடியாது. கஷ்டம். நாளைக்கு பார்க்கலாம்”  அடுத்து யாரையும் பேசவிடாமல் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றான்.

தீட்சண்யாவிற்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தட்டைப் பார்த்தபடி இருக்க,

 ஆதவ் பேசியதற்கு வருந்துகிறாள் என்று தான் அனைவரும் நினைத்தனர்.

“நீ கவலைப் படாத தீட்சா, அவன இந்த வாரமே உன்கூட ட்ரிப் அனுப்ப வேண்டியது எங்க பொறுப்பு.. ஓகே..” ராகேஷ் மூத்தவனாக அவளிடம் பேச,

“பரவால்ல..எனக்கு ஒன்னும் வருத்தமில்ல. அவருக்கு வேலை  இருந்தா அதை முடிக்கட்டும். நாங்க அப்பறமா வெளிய போறோம்.” அவளும் அங்கிருந்து எழுந்து கைகழுவச் சென்றாள்.

மற்றவர்கள் ஒருவருக் கொருவர் முகத்தைப் பார்த்துக் கொள்ள,

“பாவம் அவளும் சின்ன பொண்ணு தான. ஏன் இந்த ஆதவ் இப்படி பண்றான். கொஞ்சம் கூட அக்கர இல்லாம இப்படி கோல்ட்டா  பிஹேவ் பண்ணா அந்த பொண்ணு எப்படி ஃபீல் பண்ணுவா..?” சரண்யா ஆதவைத் திட்டினாள்.

“நாளைக்கு பார்க்கலாம். அவன் அவள வெளிய கூட்டிட்டு போலனா, அடுத்த வாரம் அவங்கள கோவா அனுப்ப நான் ஏற்பாடு பண்றேன்.” முடிவாக ராகேஷ் கூறிச் சென்றான்.

இவர்கள் சென்றதும் ராஜவேல் வர, நடந்ததை கணவரிடம் கூறினார் உமா.

“அவளைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தைக் கால்ல நின்னு என்னை நடராஜன் கிட்ட பேச வெச்சான். இப்போ ஏன் இப்படி நடந்துக்கறான். அவன் என்ன செய்யறான்னே புரிய மாட்டேங்குது. ஆனா கண்டிப்பா அவள அவன் ரொம்ப விரும்பறான் உமா. எனக்கு நல்லா தெரியும். நீ கவலைப் படாத. அவனே எதாவது ப்ளான் வெச்சிருப்பான்.” மகனை ஓரளவு புரிந்து வைத்திருந்தார்.

ஆதவ் தங்களின் அறையில் நின்று கம்பனி ஃபைல் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்க,

“நீங்க என் மேல கோபமா இருக்கீங்களா?” கதவின் அருகில் வந்து நின்றாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தவன், மீண்டும் ஃபைலில் பார்வையை வைத்த படி,

“இல்ல. எனக்கு இன்னிக்கு வேலை இருக்கு.. அதான் போகணும். உனக்கு எதாவது வேணுமா?” சற்று இடைவெளி விட்டவன்,

“வேணும்னா அம்மா இருக்காங்க, கேளு. செய்வாங்க. பை” அவளை ஏறிட்டும் பார்க்காமல் கிளம்பிவிட்டான்.

அவளுக்குத் தான் தர்ம சங்கடமாகிப் போனது.

‘என்னை வெளிய கூட்டிட்டு போக வேண்டாம். நான் அதை எதிர்ப்பார்ர்க்கவும் இல்ல..ஆனா நான் அவங்க கம்பனிக்கு வரலன்னு சொன்னதுக்கு இந்தக் கோவமா?’ என அன்று முழுதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

கம்பனிக்குச் சென்றவன், தீட்சாவை தான் நினைத்துக் கொண்டிருந்தான். தான் கோபம் கொண்டிருக்கக் கூடாது என நினைத்தவன், உடனே வீட்டிற்கு போன் செய்தான். ஒரு வேளை அவள் எடுத்தால் பேசலாமென நினைத்தான்.

ஆனால் எடுத்தது உமா தான்.

“என்ன ஆதவ்?”

“ஒன்னும்மில்ல மா. சும்மா தான் பண்ணேன். நீங்க சாப்டீங்களா?” சாதாரணம் போலக் காட்டிக் கொண்டாலும், மகன் எதற்குப் போன் செய்தான் என தாய்க்கு தெரியாமல் இல்லை.

“இனிமே தான் நானும் உன் பொண்டாட்டியும் சாப்பிடனும். அவ உங்க ரூம்ல இருக்கா. கூப்பிடனுமா?” என்றார்.

“இல்ல வேண்டாம். சரி நான் வைக்கறேன்.” கட் செய்தான்.

உமா சிரித்துக் கொண்டார்.

மதியம் உணவின் போது உமா குரல் கொடுக்க, வந்து சாப்பிட்டாள் தீட்சா.

“தீட்சண்யா.. உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. நாளைக்கு அதை செய்ய சொல்றேன்.” உணவு பரிமாறிக் கொண்டே உமா கூற,

“எனக்கு அப்படி எல்லாம் எதுவும் தெரியாது. இது புடிக்கும் இது புடிக்காதுன்னு நான் யோசிச்சதே இல்லை. அதுக்குன்னு எல்லாமே சாப்பிடுவேன்னு இல்ல. சாப்பிட்ட பிறகு சிலது பிடிக்கலன்னா அப்படியே விட்டுடுவேன்.” சிறு பிள்ளையாய் அவள் கூற,

இன்னும் குழந்தையாக இருக்கிறாள் என்று உணர்ந்தார் உமா.

“சரி. நீ இனிமே ஒன்னு செய். நம்ம வீட்ல செய்யறது எல்லாம் சாப்பிட்டு பார்த்து எது நீ அதிகமா விரும்பி சாப்பிடறன்னு பாரு. அப்பறம் உனக்கே இது தான் உன் சாய்ஸ்னு புரியும்.சரியா?” அவளது தலையை வருட, அப்போது தான் தாயின் அருமை அவளுக்குப் புரிந்தது.

தனக்கு எது வேண்டும் எது வேண்டாம் என யோசிக்க வைக்கக்கூட அம்மா என்ற உறவு எத்தனை அவசியமான ஒன்று என்பதை முதன்முறையாக உணர்ந்தாள் தீட்சா.

அந்த நினைப்பு அவளுக்கு கண்களை நனைக்க, அதைக் கண்ட உமா பதறினார்.

“என்ன மா. நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா?”

கண்ணீரை உள்ளிழுத்தவள், “இல்ல இல்ல அத்தை.. எனக்கு இதெல்லாம் சொல்லித் தர அம்மா இல்ல. என் அப்பாவோட கண்டிப்புல வளர்ந்ததால எனக்கு எதுவுமே புரியல. சொல்லப் போனா சின்ன சின்ன விஷயங்களை கூட நான் இழந்து நிக்கறது இப்போ தான் தெரியுது. நான் இழந்ததை கூட அறியாம வளந்திருக்கேன் பாருங்க..” மெல்லிய கோடாக கண்ணீர் வழிந்து விட, உமாவிற்கு உள்ளம் கரைந்துவிட்டது.

“இனிமே நீ வருத்தப்படக் கூடாது. உனக்கு நான் ஒரு அம்மா தான். எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு. சரண்யாவும் நீயும் எனக்கு மகள்கள் தான்.

ஆதவ் உன்னை நல்லா பார்த்துப்பான். சாப்பிடு.” கடைசியில் ஆதவ்வில் வந்து நிற்க,

‘தான் இன்னும் எத்தனை நாள் இங்கு இருப்போம். சத்யா கூட போய்ட்டா இந்த உறவு?!’ என யோசித்தவளுக்கு அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.

பேசாமல் உண்டுவிட்டு மீண்டும் தன் அறைக்குச் சென்று உறங்கிவிட்டாள்.

அவளைப் பற்றி ஆதவ்விடம் சொல்ல வேண்டும் என உமா குறித்துக் கொண்டார்.

மாலையானதும் மீண்டும் உமாவுடன் தோட்டத்தில் பூ பறிக்கச் சென்றாள். பூவைத் தொடுத்து அவளுக்கு வைத்து விட்டார் உமா. அவருடன் சேர்ந்து காபி அருந்தியவள், உமாவுடன் அவர்களது வீடு பற்றியும் வீட்டில் உள்ளவர்கள் பற்றியும் பேசி சிரித்தாள். இப்படி எல்லாம் இருப்பது இதுவே முதல் முறை என உணர்ந்தாள்.

ராஜவேல் முதலில் வர, பின் ராகேஷும் சரண்யாவும் வீடு வந்தனர். ஆதவ் மட்டும் இன்னும் வரவில்லை. காலையில் கோபமாகச் சென்றானே , இப்போதும் அப்படியே வருவானோ. ஒரு வேளை சத்யாவைப் பற்றி தன் தந்தையிடம் கோபத்தில் கூறிவிட்டால், என யோசித்து வாசலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள் தீட்சா.

அவளின் பார்வையைக் கண்ட உமா,

“எங்க டா ஆதவ்? இன்னும் என்ன வேலை பாக்கறான்.” ராகேஷைக் கேட்க,

“அவன் கிளைன்ட்ட பாத்துட்டு வரேன்னு போனான். வந்திருப்பான்னு நெனச்சேன். ஏன் லேட்னு தெரியல.”

சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தான்.

“அப்பா… வந்துட்டியா.. இங்க ஒருத்தருக்கு கண்ணு பூத்துப் போச்சு” சரண்யா ஜாடையாக தீட்சாவைக் கிண்டல் செய்ய, உமாவும் சிரித்துக் கொண்டார்.

ஒரு நொடி தீட்சாவைக் கண்டவன், பின் தன் அறைக்குச் சென்றான்.

“போ மா. அவனுக்கு இந்த காஃபியைக் குடு. வந்ததும் கேட்பான்.” நாசூக்காக தீட்சாவை அறைக்கு அனுப்பி வைத்தார் உமா.

கதவு சாத்தி இருக்க, உள்ளே செல்லலாமா என யோசித்தவள், வெளியேவே நின்றால், கீழே இருப்பவர்கள் சந்தேகப் படுவார்கள் என கதவைத் திறக்கப் போக, அவனும் அவள் வருகிறாளா எனப் பார்க்க கதவைத் திறக்க,

கையில் காபியோடு அவன் மேலேயே மோதி விட்டாள்.

காபி அவன் மேல் சற்று சிந்தி விட,

“ஸ்ஸ்… அச்சசோ..சாரி சாரி.. சாரிங்க..” காபியை அருகில் இருந்த டேபிளில் வைத்தவள், தன் துப்பட்டாவினால், அருகில் வந்து அவன் இதயத்தின் பக்கம் சிந்தி இருந்த காபியைத் துடைக்க, ஆதவ் தடுமாறித் தான் போனான்.

அவள் வைத்திருத்த ஜாதிப் பூவின் வாசம் அவனை கிறங்க வைத்துக் கொண்டிருந்தது.

“போதும் போதும்… விடு” அவளை விலக்கினான்.

“காபி” அவள் நீட்ட,

அந்த அரைக் கப்பை மறுக்காமல் வாங்கிக் குடித்தான்.

“இனிமே நான் உள்ள வந்தா நீயும் வந்துடு. இல்லனா எல்லாரும் சந்தேகப் படுவாங்க.” தான் வந்தும் அவள் அசையாமல் இருந்து, பின் தன் தாய் ஜாடையாக காபியைக் கொடுத்து அனுப்பியது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளே வர வேண்டும் என நினைத்து அப்படிக் கூறினான்.

“ம்ம்ம்..” என்றாள்.

பின் முகத்தை கழுவி, வேறு உடை மாற்றி வந்ததும், இருவரும் சேர்ந்து சென்று அனைவரிடமும் சிறிது நேரம் பேசிக் கழித்து விட்டு, டின்னர் முடித்து தங்கள் அறைக்குள் வந்தனர்.

சத்யாவின் நம்பர் கிடைத்ததா எனக் கேட்க நினைத்தவள், அவனின் வேலை நினைவிற்கு வந்து, அதற்குள் எப்படி கிடைக்கும் என கேட்காமல் விட்டாள். அதற்கும் மேல் அவன் கோபம் தணிந்து பேசியதே பெரிதாகத் தோன்ற அந்த விஷயத்தை அத்தோடு மறந்தாள்.

அவள் கேட்காமல் இருந்ததே அவனுக்கு நிம்மதி தந்தது. அதனால், அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“நான் உன்னை வெளிய கூட்டிட்டு போகலன்னா எல்லாரும் தப்பா நினைப்பாங்க. நாளைக்கு இங்க இருக்கற ஒரு பீச் ரிசார்ட் கூட்டிட்டு போறேன்.” பெட்டின் நடுவில் தலையணையை வைத்துக் கொண்டிருந்தவளிடம் கூற,

“ம்ம் சரி” தலையாட்டினாள்.

வழக்கம் போல சிறிது நேரத்தில் குப்புறப் படுத்துத் தூங்குபவளை ரசித்துவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டு பின் உறங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!