NMK-4

WhatsApp Image 2021-02-14 at 8.20.45 AM-0f2d15f2

NMK-4

நின் முகைக் காதல்
4

“அம்மா நான் தீட்சா வ கூட்டிட்டு ரிசாட் போறேன். நைட் சாப்பிட்டு வந்துடறோம்.” ஆதவ் காலை காபியின் போது கூற,
தீட்சா அப்போது அங்கில்லை என்றறிந்து மகனிடம் பேசினார் உமா.
“தாராளமா கூட்டிட்டு போ ஆதவ். ஆனா அவ சின்னப் பொண்ணு. அவளுக்கும் ஆசைகள் கனவுகள் இருக்கும். அதுவுமில்லாம அவ தாயில்லா பொண்ணு.” என நேற்று அவளோடு பேசிக் கொண்டிருந்ததைக் கூற,
“தெரியும்மா. நீங்க எனக்கு இதை சொல்ல வேண்டியதில்ல. அவளுக்கு என்ன வேணும்னு அவளுக்கே தெரியல. அவங்க அப்பா அவளுக்கு சாய்ஸ் குடுக்காம அவளைப் பத்தி புரிஞ்சுக்காம வளத்துடார்.
நான் அவளுக்கே அவள புரிய வைக்கத் தான் முயற்சி பண்றேன். சீக்கிரமே புரிஞ்சுப்பா. நீங்க அதைப் பத்தி வொர்ரி பண்ணிக்காதீங்க. ஐ வில் டேக் கேர். இதெல்லாம் பாத்துத் தானே மா அவள கல்யாணம் பண்ணனும்னு உங்க கிட்ட சொன்னே. மூணு வருஷாமா அவள பாக்கறேன்மா.” புன்னகை தோன்றக் கூறினான்.
“சரி டா. அவ நோகாம பார்த்துக்கோ. அது தான் நான் கேட்கறது.” என்றார்.
“கண்டிப்பா” வாக்களித்தான்.
அவன் ரூமிற்குச் செல்ல அவள் அப்போது தான் குளித்து ஒரு நைட்டியுடன் வந்து நிற்க, அவனும் கதவைத் திறந்து வந்தான்.
அவனைக் கண்டவளின் இதயம் ஒரு நொடி படபடத்தது. ஏனெனில் அவனோடு இருந்த இரு இரவுகளுமே புடவையிலும் சுடிதாரிலும் தான் இருந்தாள். நைட்டியில் அவன் முன் முதன்முதலில் நிற்கிறாள்.
அவனுக்கும் இது புதிது. அவளுக்கு எப்படியோ, அவன் மனது முழுக்க அவள் மேல் காதலுடன் இருக்கும் அவனுக்கு இதயம் நழுவவே செய்தது.
“நீ டிரஸ் மாத்து நான் குளிச்சுட்டு வரேன்.” அவசரமாக பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
தீட்சன்யாவிற்கு சிரிப்பு வர அவள் இதழ்கள் விரிந்தது.
அவன் வருவதற்குள் அழகிய லாவெண்டர் நிற ஃபூட் லாங் குர்தி ஒன்றை அணிந்திருந்தாள். லேசான ஒப்பனையுடன் நீண்ட கூந்தலை சிறு கிளிப் கொண்டு விரித்துவிட்டிருந்தாள்.
அவளின் இடையைக் கச்சிதமாகப் பிடித்திருந்த அந்த உடை அவனுக்கு மிகவும் பிடித்திருக்க,
அவளை ஒரு நொடி ரசித்தான். அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ, உடனே, “நான் கீழ வெய்ட் பண்றேன். நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க” அங்கிருந்து அகன்றாள்.
ஆதவ் வந்த பின் இருவரும் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினர்.
மகாபலிபுரம் தாண்டி ஆதவின் கார் பறந்தது. இனிமையான பாடல்கள் மட்டும் ஒலித்துக் கொண்டிருக்க, இருவரும் மௌனத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தனர்.
ஊரின் சலசலப்பு அடங்கிய ஓரிடத்தில் அமைந்த ரிசார்ட் ஒன்றில் காரைச் செலுத்தினான். அங்கே பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ரிசெப்ஷனுக்குள் நுழைந்தனர்.
“ரூம் புக் பண்ணிருக்கீங்களா சார்? என்ன பேர்ல?” வரவேற்பில் இருந்தவன் கேட்க,
“மிஸ்டர் அண்ட் மிச்செஸ் ஆதவ் கிருஷ்ணா” பாக்கெட்டில் கைவிட்டபடி நின்று அவன் கூறியதை, புருவத்தை சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள் தீட்சண்யா.
“ஒன் மினிட்” அவன் கணினியில் பெயரைப் பார்த்து ஆதவ் புக் செய்திருந்த அறையின் சாவியைக் கொடுத்தான்.
“தேங்க்ஸ்” என்றவன்,
“வா” ஒற்றை வார்த்தையில் தீட்சாவை அழைத்துச் சென்றான்.
அறைக்கு வந்த பிறகு,
“எதுக்கு ரிசெப்ஷன்ல அந்த நேம்ல புக் பண்ணிருக்கீங்க?” அவனை சந்தேகமாகக் கேட்டாள்.
“அப்படி குடுத்தா தான் கவுரவமா இருக்கும். இல்லனா வேற மாதிரி பார்ப்பான்.” சுருக்கமாகச் சொல்லி சிரித்தான்.
“ஸ்ஸ்ஸ்”என உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
“சாரி”
“அத விடு. உன் ஆளு நம்பர் கிடைச்சிருச்சு..பேசறியா?” என்றான்.
கண்களில் ஆச்சரியத்தைக் காட்டியவள், “அதுக்குள்ள எப்படி?” என்க,
அவன் தோளைக் குலுக்கி விட்டு,
“கிடச்சுது. இந்தா பேசு..அதுக்காகத் தான் உன்னை தனியா கூட்டிட்டு வந்தேன்.” ஒரு நம்பர் எழுத்தப்பட்ட சீட்டையும், தன்னுடைய செல்போனையும் கொடுத்துவிட்டு,
“நீ வேணா இங்க பேசு. நான் வெளிய இருக்கேன்.” அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் சென்றான்.
அவன் போவதை எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், பிறகு போனைப் பார்க்க,
‘சத்யா என்ன சொல்லுவானோ’ என யோசித்தாள்.
துணிந்து அந்த சீட்டைப் பார்த்து நம்பரை அழுத்தியவள், காதில் போனை வைக்க, ரிங் போனது.
“ஹலோ..”
“ஹல்லோ சத்யா..நான் தீட்சண்யா பேசறேன்” திக்கித் திணறி பேசிவிட்டாள்.
“ஹே! தீட்சா. எப்படி இருக்க?எங்க இருக்க?” குரலில் சிறிது ஆர்வம் தெரிய, அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
“சத்யா, நீங்க ஊருக்குப் போன பிறகு என்ன ஆச்சு தெரியுமா? எங்க அப்பா எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாரு.” சிறு பிள்ளை குறை சொல்வதைப் போலக் கூற,
“வாட்…? என்ன சொல்ற..?” குரலில் அதிர்வை உணர்ந்தாள்.
“ஆமா, ஆனா நான் இப்போ அவர் கிட்ட நம்ம விஷயத்தைப் பத்தி சொல்லிட்டேன். அவரும் நம்மள சேர்த்து வைக்கறதா சொல்லிருக்காரு. அவர் போன் தான் இது.இப்போ சொல்லு. நான் கிளம்பி வந்துரட்டுமா? இல்ல நீ இங்க வந்து என்னை கூட்டிட்டு போறியா?” அவள் தன்னுடைய மனதில் இருந்த திட்டத்தை அவனிடம் அனுமதியின்றி கூறிக் கொண்டிருக்க,
அவனோ , “ஹே ஹே.. என்ன சொல்ற.. என்னால இப்போ அங்க வரவும் முடியாது. உன்னையும் இங்க கூப்பிட்டு முடியாது. சரி நீ இப்போ அவர் கூட அவர் வீட்ல தான இருக்க..”
“ஆமா…!” ‘இது என்ன கேள்வி..’ என்பதைப் போலக் கேட்க,
“நீ உடனே இந்தக் கல்யாணம் பிடிக்கலன்னு உங்க வீட்டுக்குப் போயிடு.” என்றான்.
“விளையாடறியா.. எங்க அப்பா என் தோலை உரிச்சுடுவாறு. எனக்கு இது தான் சேஃப். நான் இங்க பத்திரமா இருக்கேன். ஆதவ் கிட்ட இருந்தா சேஃப்பா இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” திடமாகக் கூறினாள்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றோருவனுக்கோ உச்சி குளிர்ந்து போனது.
“நீ சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா? சரி உங்க அப்பா வீட்டுக்கு போகலனா உன் ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போ.” என்றான் சத்யா.
“வேற எங்கயும் நான் போனாலும் எங்க அப்பாக்கு தெரிஞ்சிடும்.” அலுத்துக் கொண்டாள்.
“சோ அவனோட அவன் ரூம்ல தான் இருப்ப இல்ல..உன்ன வந்து நான் கூட்டிட்டு போகணும்.அப்படித் தானே” குரலில் முன்பிருக்கும் அன்பு சிறிதும் இல்லை.
“எனக்கு வேற இடமில்லை சத்யா.” வருத்தத்தோடு கூறினாள்.
“எனக்கு இப்போ நைட். ..நான் அப்பறம் பேசறேன்” என இணைப்பைத் துண்டித்தான்.
அங்கிருந்த சோஃபா வில் செய்வதறியாது அமர்ந்தவள், சத்யாவின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடியாமல் தவித்தாள்.
‘தன்னிடம் பேசுவதை விட, இரவு உறங்குவது அவனுக்கு முக்கியமா’ என கோபம் வந்தது.
தீட்சா மனதில் அதையும் இதையும் யோசித்துக் கொண்டிருக்க, அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான் ஆதவ்.
“பேசிட்டியா? என்ன சொன்னான்?” கேட்டபடி அவளுக்கு எதிரே வந்தமர்ந்தான்.
ஆதவ்விடம் அவன் பாதியிலேயே வைத்துவிட்டான் என்று கூற அவளுக்கு அசிங்கமாக இருக்க,
“ஆங்.. சொல்லிருக்கேன். கண்டிப்பா எதாவது ஒரு முடிவு எடுத்துட்டு எனக்குக் கூப்பிடுவான்” அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் திணறினாள்.
இவர்களின் உரையாடல் அனைத்தையும் ஆதவ் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். சொல்லப் போனால், இப்படியெல்லாம் பேசவேண்டும் என சத்யாவை மிரட்டித் தான் பேசவைத்தான். அந்த சீனின் டைரக்டரே ஆதவ் தான். அவள் கூறியதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
“சரி. அவன் சொல்றப்ப சொல்லட்டும். வா இங்க பின்னாடி நிறையா கேம்ஸ் இருக்கு. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்.” அழைத்துச் சென்றான்.
முதலில் மூடில்லாமல் கிளம்பிச் சென்றவள், அங்கே போனதும், அவனுடன் சேர்ந்து காரம் போர்ட், ஷட்டில் என விளையாட ஆரம்பித்தாள்.
நடுவே அவளுக்காகப் பார்த்துப் பார்த்து ஜூஸ், பழங்கள் என உண்ணக் கொடுத்தான். அவன் கொடுத்த நேரங்களில் எல்லாம் அவளுக்கு லேசான பசி இருந்தது உண்மை. அதை அறிந்து அவன் நடந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒவ்வொன்றிலும் அவளுடன் நட்பாக அவன் நடந்து கொண்ட விதம் அவளுக்கே அறியாமல் அவனை ரசிக்க வைத்தது. விளையாடிக் களைத்தவளை,
“காலைலேந்து சாப்பிடல, வெறும் ஜூஸ் , லைட்டா பழம், இது மட்டும் தான் சாப்பிட்டு இருக்கோம். ஏன்னு தெரியுமா?” ஆதவ் அவளிடமே கேட்க,
“ம்ம் ஹூம்..” மீண்டும் உதட்டைப் பிதுக்கினாள்.
“இந்த ரிசார்ட்ல மதியம் சூப்பர் சாப்பாடு இருக்கும். ட்ரேடீஷனல் லஞ்ச். இந்தக் கிராமத்துப் பக்கம் எல்லாம் வாழை இலைல சாப்பாடு போடுவாங்கல்ல, அது மாதிரி இந்த ஐம்பது ஐட்டம் பரிமாறுவாங்க. அதுக்குத் தான், லைட்டா சாப்பிட சொன்னேன். இப்போ உனக்கு பசில அந்த இலையே காலி ஆகும். வா” முன்னே நடந்தான்.
‘என் மேல ஏன் இவ்வளோ அக்கறை காட்டனும் இவங்க. நான் அவன விட்டு போறேன்னு சொல்லியும், கொஞ்சம் கூட கோபம் இல்லாம, கரிசனம் காட்ட யாரால முடியும்.’ ஆதவ் மேல் மரியாதை இன்னும் பெருகியது.
சாப்பிட அமர்ந்திருக்கும் போது கூட, எது எது என்ன அளவு என்பதைக் கூட அவனே அவளுக்காக சொன்னான்.
“இதை டேஸ்ட் பண்ணிப் பாரு. ஃபஸ்ர்ட் கொஞ்சம் ஸ்வீட்டோட ஸ்டார்ட் பண்ணு.” அவளுக்குக் கை காட்ட,
அவன் சொன்ன படி அவளும் உண்டாள். கடைசியில் அவளுக்கு என்னென்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத் தான் அவன் அத்தனை உணவினையும் அவளை உண்ணச் செய்திருந்தான்.
ரூமிற்கு வந்த பிறகு, அவள் உண்ட மயக்கத்தில் இருக்கிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது.
கொஞ்ச நேரம் படுத்துக்கோ, என்றான். அவன் சொன்ன மறு நொடி அவளும் முடியாமல் பெட்டில் படுத்து விட, அவனோ டிவி பார்த்துக் கொண்டு அங்கிருந்த சோஃபாவில் கால் நீட்டி படுத்தான்.
ஒரு மணி நேரத்தில் அவள் எழுந்துவிட, அவளின் அசைவை வைத்து அவனும் எழுந்தான்.
“சாரி நல்லா தூங்கிட்டேன். உங்கள எழுப்பிட்டேனா?”
“தூங்கத் தானே சொன்னே. இல்ல நான் மதியம் தூங்கரதில்ல. சும்மா தான் படுத்திருந்தேன்.” சமாதனம் போல சொல்ல,
அவனிடம் ஏதோ சொல்லத் தயங்கினாள். அதை அவனும் உணர்ந்தான். ஆனால் இப்போது கேட்க வேண்டாம் என விட்டான்.
“நீ ரெப்ரெஷ் பண்ணிட்டு வா”
அவள் வந்த பின்பு, “என்கிட்டே ஏதோ கேட்கணுமா?” நிதானமாகக் கேட்க,
‘இவனுக்கு எப்படித் தெரிந்தது. கண்ணைப் பார்த்தே கண்டு பிடிச்சுடுவான் போல. கஷ்டம்.’ தன்னையே நொந்து கொண்டாள்.
“இல்ல..அது.. நான் போறேன்னு சொல்லியும் என் மேல இவ்வளோ அக்கறையா நடந்துகறீங்களே..அதான் ஏன்னு …” முடிக்காமல் திணற,
“என்னடா இது வம்பா போச்சு. அதுக்காக உன் மேல கோபப் பட்டா , நீ என்கூட இருந்துடுவியா?” புருவம் உயர்த்திக் கேட்க,
அவன் கண்ணைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.
“நான் போன பிறகு..இல்ல அதுக்கு முன்னாடியே நீங்களும் ஒரு பொண்ண பார்த்து ஓகே பண்ணுங்க. நீங்க அவ கூட வாழனும்” தன் தவறை சரி செய்தவதாக அவள் கூறினாள்.
‘நான் ஓகே பண்ண ஒரே பொண்ணு நீ தான். அவ கூடத் தான் வாழ்ந்துட்டும் இருக்கேன்.’ மனம் மகிழ்ச்சியில் அலுத்தது.
“ஒ..பாத்துடலாமே. என் கம்பனிலேயே நிறையா பொண்ணுங்க இருக்காங்க. ரொம்ப நாளா என்னை சைட் அடிச்சுக்கிட்டு. அதுல ஒன்ன ஓகே பண்ணிடவேண்டியது தான்.”
அவன் விளையாட்டுக்குக் கூற, அவளோ ஆர்வமானாள்.
தன் தவறுக்குத் துணையாக அவனையும் அதே தவறை செய்யவைக்க அவளது குழந்தை மனம் போராடியது.
“வாவ் ..சூப்பர்.. அப்போ நானும் உங்க கூட கம்பனிக்கு வரேன். உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன்” குதூகலமானாள்.
‘அடிப்பாவி. என் பொண்டாட்டி டி நீ. எனக்கே இன்னொரு பொண்ண செட் பண்ணறேன்னு சொல்றியே.. நீ எல்லாம் எங்க உருப்பட போற. என் நிலைமை தான் பாவம்.’
ஆனால் அவள் அவனோடு கம்பனிக்கு அன்று வர முடியாது என்று கூறியதும் அவனுக்கு இருந்த கோபம் இப்போது அவள் வருவதில் காணமல் போக. நாள் முழுதும் அவளைத் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ளும் ஆசையில் சரி என்றான்.
அவளும் தனது குற்ற உணர்விலிருந்து வெளியே வருவாள் என அதற்காகவும் ஒத்துக்கொண்டான்.
“உங்களுக்கு அவங்கள்ள யாரையாவது புடிச்சிருக்கா?” அடுத்த கேள்வியை சகஜமாக அவள் கேட்க ஆரம்பிக்க,
அதையே அவள் பக்கம் திருப்பினான்.
“அவங்கள யாரையும் எனக்கு பர்சனலா தெரியாது. கம்பனி ஸ்டாஃப் அவ்வளோ தான். நான் போறப்ப வரப்பலாம் என்னையே பார்த்துட்டு இருப்பாங்க. சைட் அடிக்கறது நல்லா தெரியும். அத அப்பறம் பார்க்கலாம். உனக்கு ஏன் சத்யாவ புடிச்சுது. அதை சொல்லு. உங்க அப்பாவ பத்தித் தெரிஞ்சும் எப்படி லவ் பண்றேன்னு சொன்ன.?”
“ம்ம்.. இப்படி கேட்டா என்ன சொல்றது. சரி உங்களுக்கு சுருக்கமா சொல்றேன்.” என அவன் அருகில் சோஃபாவில் வந்து அமர்ந்தாள்.
‘சொல்லு..அப்போ தான் உனக்கே நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியும்’
“ம்ம்..நான் ரெடி” கேட்கத் தயாரானான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!