NMK-6
NMK-6
நின் முகைக் காதல்
6
காலையில் ஆதவிற்கு முன் எழுந்து, தீட்சா குளித்து கிளம்பி , அவனுக்கும் ஒரு சட்டையை எடுத்து அழகாக ஐயர்ன் செய்து வைத்தாள்.
லேசாக கண்களை விழித்துப் பார்த்த ஆதவ், கண்ணாடி முன் நின்று அவள் தலை சீவிக் கொண்டிருப்பதைக் கண்டான்.
கண்ணாடியில் அவள் முகம் கண்டதும், அவனுக்கும் முகம் மலர்ந்தது.
நேற்று அவளிடம் கோபித்துக் கொண்டது கூட அவனுக்கு மறந்தது. அவள் முகத்தை கண் விழித்ததும் காணவே அவன் இத்தனை நாள் போராடியது. அதற்கு முன் நேற்றைய விஷயம் ஒன்றுமில்லை என்றானது.
“என்ன காலைலேயே எங்கயோ கிளம்பிட்ட மாதிரி இருக்கு?” குப்புறப் படுத்து அவளிடம் கேட்டான்.
அழகாக திரும்பியவள் அவன் விழித்ததைக் கண்டு,
“எழுந்தாச்சா.. ம்ம் கிளம்புங்க? நானும் உங்க கூட கம்பனிக்கு வரேன். உங்கள சைட் அடிக்கும் அந்தப் பொண்னுங்க உங்களுக்கு ஏத்தவங்களான்னு நான் பார்க்கணும். அதுக்காகவே நான் தினமும் வரப்போறேன்.” சிரித்த முகமாகக் கூறினாள்.
‘என்னது தினமும் வந்து வேற எவளோடையோ என்னைக் கோத்து விட போறியா? என்ன நடக்கப் போகுதோ!’ தலையைச் சிலுப்பிக் கொண்டே எழுந்தவன்,
“சரி நான் ரெடி ஆயிட்டு வரேன். சேர்ந்தே போகலாம்.” அவள் அருகில் வந்தவன்,
“முதல் தடவ கம்பனிக்கு வர, இப்படி சுடிதார் போட்டுட்டு வந்தா நல்லா இருக்காது, சோ புடவை கட்டிகறியா ப்ளீஸ்?” வேண்டுதலாகக் கேட்க,
“என்ன ஆதவ் இப்படி கேட்கறீங்க. புடவை கட்டிட்டு வான்னு சொன்னா போதாதா? இடையில் கை வைத்து முறைத்தாள்.
“எனக்கு அப்படிக் கேட்க உரிமை இல்லையே.” சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.
அவளுக்குத் தான் மனம் குற்ற உணர்வில் குத்தியது. இத்தனை நல்லவனை வருத்துகிறோமே என வலித்தது.
அவன் வெளியே வரும்போது அவள் அழகிய பிங்க் நிறப் புடவையில் நின்றாள்.
“எப்படி இருக்கு?” குழந்தை போல் அவள் கேட்க,
மயங்கி நின்றவன், “சிம்ப்ளி வாவ்..!” பாராட்டினான்.
அவனும் அவள் தனக்காக ஐயர்ன் செய்து கொடுத்த சட்டையை அணிந்து கொண்டு, தலைக்கு ஜெல் போட்டு தூக்கி நிறுத்தி அனழகனாய் வந்தான்.
கீழே அனைவரும் டிபன் சாப்பிட அமர்ந்திருக்கையில்,
“வாவ்.. தீட்சா அழகா இருக்கா.. என்ன தீட்ச்சா நீயும் ரெடி ஆகி வந்திருக்க?” சரண்யா அவளை அதிசயமாகப் பார்க்க,
“நானும் கம்பனிக்கு வரலான்னு இருக்கேன் அக்கா.” அமைதியாகக் கூறினாள்.
சரண்யா சொன்னதில் தீட்சா இறங்கி வந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதவ். பிங்க் நிற புடைவைக்கு மேச்சிங்காக பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டிருக்க அவளது உதடுகள் அவனை கட்டிப் போட்டு விட்டது.
“என்ன டா? அதுக்குள்ள அவளையும் கம்பனிக்கு வர சொல்லிட்டியா?” ராகேஷ் உண்டு கொண்டே கேட்க,
அவனது குரலில் சுயம் பெற்று, “அவ தான் இங்க போர் அடிக்குதுன்னு சொன்னா, சோ ஒரு சேன்ஜ்கு கம்பனி வர சொன்னேன்.” எதார்த்தமாகக் கூறிவிட,
“ஆமா , இங்க வீட்டுல எவ்வளோ நேரம் தான் அவளும் சுத்தி சுத்தி வருவா. அங்க வந்தா கொஞ்சம் வேலை அப்படி இப்படின்னு டைம் பாஸ் ஆகும். போயிட்டு வா மா.” உமாவும் சம்மத்தித்தார்.
“வெல்கம் வெல்கம்..” ராகேஷ் அவளை கம்பனிக்கு வரவேற்றான்.
“தேங்க்ஸ் மாமா.” மெல்லிதாய் புன்னகைத்தாள்.
“ம்ம் அப்போ உன்னை நான் இன்னிக்கு ஃபேக்டரிக்கு
கூட்டிட்டு போய் காட்டறேன்” சரண்யா இணைந்து கொண்டாள்.
ஆதவ்வுடன் கிளம்பி காரில் சென்றாள் தீட்சண்யா. ஆதவ், யார் இவனை சைட் அடிக்கும் பெண்கள் என்று கேட்டால், யாரைக் காட்டுவது என குழம்பிக் கொண்டிருக்க,
கம்பனியில் அவனை நிறைய பெண்கள் சைட் அடிப்பது என்னவோ உண்மை தான். ஆனால் இவனுக்குத் தான் யாரையும் அவ்வளவாகத் தெரியாது.ராகேஷும் சரண்யாவும், ஏன் அவனது பிஏ கூட ‘எல்லாப் பொண்ணுங்களும் உன்னைத் தான் பார்க்குதுங்க’ என்று கூற, இவன் தான் தீட்சண்யாவைத் தவிற வேறு யாரையும் பார்ப்பதில்லை என்று சபதம் ஏற்றிருந்தான்.
இன்று அவளுக்கு யாரைக் காட்டுவது என்று கூட அவனுக்கு ஐடியா இல்லை. அவள் போக்கிற்கே விட்டு விடலாம் என முடிவு செய்து கம்பனிக்கு அவளுடன் வந்தான்.
அனைவரும் வழக்கம் போல அவனுக்குக் குட் மார்னிங் சொல்லி அமர, கூட வந்த தீட்சண்யாவைப் பார்த்து அனைவருமே, இருவரின் ஜோடிப் பொருத்தம் பற்றித் தான் சிலாகித்தனர்.
அவனது அரைக்குச் சென்றவன், “இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு, அப்பறம் அண்ணி வந்ததும் அவங்க கூட ஃபேக்டரிக்கு ரவுண்ட்ஸ் போயிட்டு வா.”
“நீங்க வரலையா?” கண்களை விழித்து அவள் கேட்க,
“இல்ல. எனக்கு சில பைல்ஸ் முடிக்கணும். நீங்க போயிட்டு வாங்க.” தன்னுடைய பிஏ வை இன்டெர்காமில் அழைத்தான்.
“சுந்தர் கொஞ்சம் உள்ள வா”
அடுத்த இரண்டு நிமிடத்தில் கதவைத் தட்டிவிட்டு சுந்தர் உள்ளே நுழைந்தான்.
“குட் மார்னிங் பாஸ். ஒ மேடம்! வெல்கம். குட் மார்னிங்” சிரித்தபடி அவளையும் வரவேற்றான்.
“குட் மார்னிங்” அழகாக புன்னகைத்தாள். அப்போது தான் அவனை எங்கோ பார்த்தது போல் இருக்க,
“உங்கள எங்கயோ பார்த்திருக்கேனே..!” சந்தேகமாக அவனைக் கேட்டாள்.
சுந்தர் பதறியபடி, “உங்க கல்யாணத்துல பார்த்திருப்பீங்க…மேடம்..” அவசரமாக மழுப்பியவன், ஆதவ்விடம் திரும்பி,
“பாஸ். நேத்து நீங்க வெறிஃபை பண்ண அனுப்பின பைஃல்ஸ் எல்லாம் ஹார்ட் காபி எடுத்து அனுப்ப ரெடியா இருக்கு. உங்க ஈமெயில்க்கு ஏற்கனவே ஸ்கேன் பண்ணி அனுப்பிருக்கேன். நீங்க பாத்துட்டு அந்தந்த கம்பனிக்கு அனுப்ப வேண்டியது தான். வேற எதாவது வேணுமா பாஸ்?” அவசரமாக அவன் நெளிந்து கொண்டு கேட்பதிலேயே , தீட்ச்சா வின் கண்களில் இவன் எங்கோ பட்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டான்.
அவள் முன்பு ரியாக்ட் செய்யாமல்,
“ஓகே. தேங்க்ஸ். வேற எதாவது வேணும்னா கூபிட்றேன்” அனுப்பிவிட்டான்.
தீட்ச்சா இன்னும் யோசனையாக இருப்பதைக் கண்டு,
“என்ன யோசிக்கற? எந்த பொண்ணுனு என்னை சைட்அடிக்கரான்னா?” அவளை வேண்டுமென்றே திசைத் திருப்பினான்.
‘அட ஆமா அத மறந்தே போயிட்டேன்..’ புத்தியில் உரைக்க,
“ஆமா..எனக்கு உடனே யார் யார் உங்கள சைட் அடிக்கறாங்கன்னு லிஸ்ட் ரெடி பண்ணனும்..”
“ஹா..ஹா.. லிஸ்ட்டா ? அத்தனை பொண்ணுங்க கம்பனில இருப்பாங்களா?” அவளைக் கண்டு சிரிக்க,
“நான் இன்னிக்கு பூரா உங்க தான் இருப்பேன். உங்கள யார் யார் பாக்கறான்னு நான் கவனிச்சே ஆகணும்.” கால் மேல் கால் போட்டு அவள் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவன் வேலையில் மூழ்க, தீட்சா சரண்யா வருவதைக் கண்டாள்.
“வா தீட்சா, நாம ஃபேக்கடரிக்கு போலாம்.” சரண்யா அழைத்தாள்.
“இல்ல அண்ணி, நான் நாளைக்கு வரேன். இன்னிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” அவள் ஆதவ்வைப் பார்க்க,
ஆதவ்வோ ‘இவள் யாரிடம் என்ன சொல்கிறாள்! சரியான லூசா இருக்காளே! ’ என்பதைப் போல் சரண்யாவை சங்கடமாகப் பார்க்க,
சரண்யா ஆதவ் தீட்சா விடம் ஏதோ ரொமான்ஸ் கற்பனை பண்ணிக் கொண்டு சிரித்தாள்.
“ஒ!! நடக்கட்டும்…! நான் தான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..” சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.
சரண்யா சென்றதும், “என்ன தீட்சா அண்ணி கிட்ட ஒளரிட்டு இருக்க…?” பல்லைக் கடித்த படி ஆதவ் கேட்க,
அப்போது தான் அவளது மரமண்டையில் உரைத்தது.
“ஸ்ஸ்…. ஐயோ அவங்க என்ன நெனச்சிருப்பாங்க..சாரி சாரி ஆதவ்…நான் இந்தப் பொண்ணுங்கள பாக்கறது அவங்களுக்குத் தெரிஞ்சிருமா? அப்போ நம்ம டீலிங் பத்தி வீட்ல சொல்லிடுவாங்களோ?” அவள் மூளைக்கு எட்டியவரை அவள் விஷயங்களை அடுக்கிக் கொண்டு போக,
தலையில் கை வைத்து தேய்த்துக் கொண்டான் ஆதவ்.
“என் அறிவு ஜீவி! ஏன் இப்போ பதற்ர? அவங்க நினைக்கறது வேற. நீ சொல்றது வேற. உன்னோட லவ் மேட்டர் நான் சொன்னா தான் மத்தவங்களுக்குத் தெரியும், இல்ல நீ சொல்லணும். இப்போ அண்ணி என்ன நெனச்சுட்டு போறாங்க தெரியுமா? யப்பா….!” கண்மூடி பெருமூச்சு விட்டு தன் சட்டைக் காலரை காத்து வருமாறு ஆட்டிக் கொண்டான்.
எழுந்து அவன் சீட்டின் அருகில் வந்தாள் தீட்சா..
“என்ன ஆதவ் நினச்சிருப்பாங்க?”
கண்ணைத் திறந்து அவள் அருகில் இருப்பதைக் கண்டவன், அவளது புடவை சற்று விலக பிங்க் நிறத்திற்கு மேட்சிங்காகத் தெரிந்த அவளது இடை தான் அவன் கண்களுக்கு நேராக இருந்தது.
“சொல்லுங்க ஆதவ்?”
‘என்னத்த சொல்றது…வெல்வெட் கேக் மாறி இருக்கன்னு சொல்லட்டுமா?!’
கஷ்டப் பட்டு பார்வையை இடையிலிருந்து அவளது முகத்திற்கு மாற்றினான்.
“என்ன நினைப்பாங்களா? உனக்கும் எனக்கும் இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு. நமக்குள்ள ஒண்ணுமில்லன்னு நமக்கு மட்டும் தான் தெரியும். வெளிய இருந்து பார்த்தா, நாம இங்க ரொமான்ஸ் பண்றோம்னு நினைப்பாங்க. உனக்கு இப்படி ஒபென்னா சொன்னா தான் புரியுமா” அவன் கூறியதில் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ச்சே! நான் எவ்வளோ முட்டாளா இருக்கேன்ல..இது கூட என்னால யோசிக்க முடியல..ஐயோ” என அவனுக்கு எதிரே சென்று மீண்டும் அமர்ந்தாள்.
தலையில் கை வைத்து அவள் டென்ஷனாக அமர்ந்திருப்பதைக் கண்டவன், அருகில் சென்று,
“கூல். இதுக்குப் போய் டென்ஷன் ஆகாத. இனிமே அவங்க நினச்சத போய் நாம மாத்த முடியாது. சோ அப்படியே இருக்கட்டும். அவங்க பார்வைல நாம ஹஸ்பன்ட் அண்ட் வைய்ஃப் தான். சோ அதுல தப்பில்ல. சரியா?” அவளிடம் குனிந்து அவன் கூற, அவளது கவலை சிறிது மறைந்தது.
“ம்ம் அது கரெக்ட் தான். ஆனா…” ‘நாம தான் பிரியப் போறோமே’ என சொல்ல வந்ததை ஏனோ சொல்லாமல் விட்டாள். அவனை மீண்டும் வருத்த அவளுக்கு மனமில்லை.
“ஆனா வெல்லாம் வேணா… நீ என்கூட வா!” எழுந்துகொண்டான்.
“எங்க? பேக்டரிக்கா? ஃபைல்ஸ் பாக்கணும்னு சொன்னீங்களே?”
“அதுக்குத் தான். நான் எப்பவுமே ஒரு கம்பனி கூட டீல் பண்றதுக்கு முன்னாடி அவங்களோட பழைய காண்ட்ராக்ட் எல்லாம் சேகரிச்சு என்னோட ஃபைல் லைப்ரரில வெச்சுடுவேன். அங்க எனக்கு வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” கூறிவிட்டு தன் சட்டையை சரி செய்தபடி முன்னே சென்றான்.
அவன் பின்னே இவளும் செல்ல, அப்போது தான் கம்பனியின் இன்டீரியர் பார்த்தாள். மிகவும் நேர்த்திகாய இருந்தது. இவர்களது ஒரு இரும்பு தயாரிக்கும் கம்பனி. கரடு முரடாக இருக்கும் என எதிர்ப்பார்த்தவளுக்கு இது ஆச்சரியத்தை அளித்தது.
அவளது ஆச்சரியம் அவனுக்கு புரிய, அவளுக்கு விளக்கினான்.
“இது மெயின் கம்பனி. இங்க நீ இரும்பு கம்பியும், காயிலும் இருக்கும்னு எதிர்ப்பார்க்காத. அது எல்லாம் ஃபேக்டரில மட்டும் தான். இங்க எல்லாமே டாகுமென்ட்ஸ் பைல்ஸ் அப்பறம் பூரா சாப்ட்வேர் ரிலேடட் வேலைகள் மட்டும் தான் நடக்கும்.”
“ஒ!! இருந்தாலும் இன்டீரியர் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. வால்பேப்பர் லைட்ஸ் சேர்ஸ் எல்லாம் சரியான நிறத்துல மேட்சிங்கா அமச்சிருக்கீங்க. நைஸ்” சிலாகித்தாள்.
“தேங்க்ஸ்..” என அவளுடன் சேர்ந்து நடக்க, அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண் , இவனை வைத்த கண் எடுக்காமல் பார்க்க, சரியாக அவளை கவனித்தாள் தீட்சா.
“நம்பர் ஒன்” என மெதுவாகக் கூற,
“என்ன?” அவள் புறம் திரும்பினான்.
“இல்ல..ஒண்ணுல்ல..” உதட்டை நீட்டிச் சிரித்தாள்.
அவன் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைய, அங்கு நிறைய கம்பார்ட்மென்ட்கள் அமைக்கப் பட்டு அனைத்திலும் ஃபைல்கள் அடுக்கப் பட்டு இருந்தது.
அந்த அறையில் அமர்த்தப் பட்டிருந்த பெண் எழுந்து நின்று,
“என்ன ஃபைல் சார்? நான் கொண்டு வரேன்” என்றாள்.
“பரவால்ல. நான் எடுத்துக்கறேன்.” அவளை கை காட்டி அமரச் சொன்னான்.
பின்னால் வந்த தீட்ச்சாவைப் பார்த்ததும்,
“நீங்க யார்?” என்றாள். பாவம் அவள் ஆதவின் திருமணத்திற்கு வரவில்லை.
“நான்..நான்..” தீட்ச்சா தடுமாற,
அதைக் கண்டவன், ‘என் பொண்டாட்டின்னு சொல்ல முடியல மேடம்க்கு’ நினைத்துக் கொண்டு,
“தீட்ச்சா.. கம் ஹியர்” குரல் கொடுத்தான்.
அவனே கூப்பிட்ட பிறகு அவளை அனுப்பாமல் இருக்க அந்தப் பெண்ணால் முடியவில்லை. அப்போது தான் அவள் கழுத்தில் இருந்த புதுத் தாலியை கவனித்தவள், ‘ஒ! இவ தான் பொண்டாட்டியா…’ என காய்ந்தாள்.
அவளது கண்களில் பொறாமை எட்டிப் பார்க்க அதையும் கவனித்தாள் தீட்ச்சா.
‘நம்பர் டூ’ சிரித்த படி ஆதவின் அழைப்பிற்குச் சென்றாள்.
அவளை ஒரு பெயர் சொல்லி அந்த ஃபைல் எடுக்கச் சொன்னான். அவள் சென்று அதற்கான செக்ஷனில் தேடிக் கொண்டிருக்க
ஆதவ் இரண்டு மூன்று ஃபைல்களை எடுத்துக் கொண்ட பின், இவள் இன்னும் வராததைக் கண்டு அவளது செக்ஷனுக்குச் சென்றான்.
தீட்சா அங்கிருந்த குட்டி ஸ்டூலில் ஏறி மேலே இருந்த பைஃலை எடுத்துக் கொண்டிருக்க, மீண்டும் அவளது வெல்வெட் இடையில் ஆதவின் பார்வை பதிந்தது.
அவள் கீழே இறங்கப் போக, அவளது ஹீல்ஸ் செருப்பு சறுக்கலைத் தர, அவள் தடுமாறினாள்.
“ஹேய் பார்த்து பார்த்து” அவளைத் தோளில் பிடித்து நிறுத்தினான்.
அவன் கைகள் பட்டதில் அவளுக்குத் தான் குறுகுறுத்தது. சிலிர்த்து நெளிந்தாள்.
“தேங்க்ஸ்” என்கவும் அவன் விலகிக் கொள்ள,
“போலாமா?” அந்த அறையை விட்டு வெளியேற, கதவைத் திறந்து
“யூ ஃபர்ஸ்ட்” என்றான்.
சிரித்தபடி அந்தப் பெண்ணைப் பார்க்க, அவள் முகம் கடு கடுவென இருந்தது. பின்னே இத்தனை அழாகான முதலாளிக்கு திருமணம் ஆனால் கடுப்பு இருக்கத் தானே செய்யும். அதுவும் அவன் அவளைத் தாங்கியதை இங்கிருந்தே பார்த்துக் கொண்டு வேறு இருந்தாள். புகைச்சல் காது வழியாக வராத குறை தான்.
தீட்ச்சாவோ அதைப் புரிந்து கொள்ளாமல், அந்தப் பெண்ணின் பொறாமையைத் மேலும் தூண்டி இவன் மேல் போஸஸிவ் வருகிறதா என்று பார்க்க நினைத்து, அவனது கையைப் பிடித்து,
“ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்” அவனையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.
அவனுக்கோ அவளது செய்கை சிரிப்பைத் தந்தது. அதே சமயம் அவனுடன் அவள் ஒட்டிக்கொள்வது பிடித்தும் இருந்தது.