NN 15

NN 15

சாலையில் கௌதம் காரை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் . அவன் மனதோ அவன் உரைத்த வார்த்தைகளை அவனுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி அவனைச் சித்ரவதை செய்து கொண்டிருந்தது.

“ அது என்ன எப்போது பார்த்தாலும் எனக்கே எதோ ஒன்று ஆகிற மாதிரி கனவு ? ஏன் உன் ஆளுக்கெல்லாம் உன் கனவில் ஒன்றும் ஆகாதா ? “ அவன் காயத்ரியைப் பார்த்து விளையாட்டாய் கேட்ட கேள்வி அவனை இப்பொழுது உயிருடன் எரிந்து கொண்டிருந்தது.

‘ கடவுளே என் சிவாவைக் காப்பாற்று ! நான் தெரியாமல் சொல்லிய வார்த்தைகள் பலிக்குமென்றால் நான் பேசியிருக்கவே மாட்டேனே! என் உயிரைத்தானே அவர்கள் கேட்பது என் நண்பனை விட்டுவிடு ! ஆண்டவா! ‘

கௌதமின் மனது உள்ளே எரிமலையாய் குமுற வெளியே உணர்ச்சி துடைத்த முகத்துடன் வாகனத்தை இயந்திரம் போல் செலுத்திக் கொண்டிருந்தவன் சாலையில் சிவா ஓட்டி சென்ற தனது கார் கண்ணில் படுகிறதா என்று கழுகுபோல் தேடிக்கொண்டிருந்தான்.

பாதி தூரம் கடந்திருந்தும் கண்ணில் கார் தெரிந்த பாடில்லை.
காயத்ரியோ கடவுளை வேண்டிக்கொண்டே சிவாவின் மொபைலிற்கு அழைத்துக் கொண்டேயிருந்தாள்.

‘க்ரீஈஈஈஈஈஈச்’ சாலையைத் தேய்த்துக்கொண்டு புழுதி கிளப்பி பெரிய அதிர்வுடன் அவர்கள் கார் நின்றது.

“ அண்ணா என்னாச்சு? “ காயத்ரி விழிகள் விரியப் பயத்துடன் கௌதமை பார்க்க.

அவனோ கதவினை திறந்து சாலையில் ஓடத்துவங்கி இருந்தான்.

“ என்னாச்…..” கேட்டுக்கொண்டே இறங்கியவள் உயிர் உறைந்து நின்றாள்.

மக்கள் கூட்டம் முற்றுகையிட அந்த தண்ணீர் லாரி சாலை நடுவில் எதிலோ மோதி நின்றுகொண்டிருந்தது!

“சிவா…..” உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினாள் காயத்ரி…

கூடி நின்றவர்களைத் தள்ளிக்கொண்டு “சிவா சிவா …” என்று அலறிக்கொண்டே அவள் போராடி மக்களை விலக்கியபடி முந்தி முன்னே செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

” கண்ணுமுன்னு தெரியாம ஓட்ட வேண்டியது , நிறுத்துடான்னா நிக்குறானா ! இவங்களை ! ” என்று ஒருவர் கத்திக் கொண்டு இருக்க

“ஆமா சார் மனுஷன் உயிர்னா அவ்ளோ கேவலமா ? ” என்று இன்னொருவன் பொங்க

இதெற்கெல்லாம் மேலே எதுவுமே புரிந்துகொள்ள முடியாதபடி மக்கள் கூச்சல் வேறு.

தாங்கமாட்டாமல் மொத்த சக்தியையும் பயன்படுத்தி ஆவேசமாகக் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு முன்னேறினாள். அவள் கண்ட காட்சியில் உறைந்து நின்றாள்.

சாலையோரமாய் சிவா ஒட்டி வந்த கௌதமின் சிகப்பு கார் உருக்குலைந்து கிடந்தது. காரின் கண்ணாடிகள் நசுங்கி சல்லி சல்லியாய் கண்ணாடி துகள்கள் சாலையில் சிதறி இருக்க. அதனருகில் கௌதம் அங்கிருந்த ஆம்புலன்ஸின் கதவருகே நின்றிருந்தான்!

“சிவா…” உயிர் சக்தி மொத்தத்தையும் திரட்டி அலறியவள் அங்கே சாலையிலேயே மயங்கி விழுந்தாள்.

அவள் அலறிய அலறலில் திரும்பிய கௌதம் ‘ இவளை மறந்தேனே! ‘ “ காயத்ரி….” ஓடிவந்தவன் அவளை கைகளிலேந்தி ஆம்புலன்ஸிற்கு எடுத்துச்சென்றான்.

சிறிது நேரம் கழித்து கண்விழித்த காயத்ரி கட்டுப்பாடின்றி திமிறி அலறி கையிலிருந்த ட்ரிப்ஸ் வயரை பிய்த்தெறிந்து ஆம்புலன்ஸிலிருந்து வெளியேற

“எண்ணமா உட்காருமா! இப்போதான் மயக்கம் தெளிஞ்சுருக்கு மறுபடி மயக்கம் வரப்போவது ! “ அங்கிருந்த செவிலியர் அவளைத் தடுக்க முயல “ விடுங்க என் சிவா…” வாயில் வார்த்தை வரவில்லை அங்கே பேசி நேரம் கடத்த அவளால் முடியாது..கண்களில் தேடல் மட்டுமே..இதயம் துடிக்க மறந்து போனதோ..செவிலியரைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள் காயத்ரி.

“ சிவா ! சிவா! “ பைத்தியம் போல் சுற்றிச் சுற்றிப் பார்த்துத் தேடினாள்.

கண்ணீரும் வியர்வையும் முழுவதாய் நினைத்திருக்க மழையில் நனைந்த சிறு குருவிபோல் துடித்துக் கதறிக்கொண்டிருந்தாள் காயத்ரி .

“ காயத்ரி! “ உரக்கக் கத்தியபடி தன்னவளை ஓடி வந்து அணைத்துக்கொண்டான் சிவா !

“ இங்க இருக்கேன் காயு. குட்டிமா ! “ அவனால் அவள் வேதனையைத் தாங்க முடியவில்லை .

“ சிவா சிவா! உங்களுக்கு ஒன்னும் ஒன்னும் “ வாயில் வார்த்தையே வரவில்லை.. தலை முதல் கால் வரை அவனைச் சரி பார்த்தாள். கைகளிலும் கால் முட்டிகளிலும் சிராய்ப்புக்கள் சட்டையிலும் ஜீன்ஸிலும் ரத்தம் தோய்ந்திருக்க அவன் சிவந்த கன்னங்களில் சிராய்த்து ரத்த தடம் இருக்க

நூலிழையில் தப்பியிருக்கிறான்! உணர்ந்தாள் பேதை.

“ அவனுக்கு ஒன்னும் ஆகல. என்ன சார் கொஞ்சம் சில்லறை வாரி இருக்கிறார் அவ்வளவே! “ மெல்லிதாய் புன்னகைத்த படி வந்துசேர்ந்தான் கௌதம்.

“என்னாச்சு சிவா எப்படி தப்பினீங்க? “ காயத்ரி படதட்டம் குறையாமல் கேட்க.

“ நான் சொல்றேன் நீ போ அங்க எஸ் ஐ வெயிட் பன்றார் ! “ கௌதம் சிவாவை அனுப்பி வைத்தான்.

“ வா சொல்றேன்! “ காயத்ரியை தோளில் பற்றி தாங்கியபடி பேசிக்கொண்டே அழைத்துச் சென்றான் கௌதம்

“ நீ சொன்னபடி என்னைத் தூக்கத்தான் லாரி டிரைவரை விலைக்கு வாங்கி இருக்குறாங்க ..அவனும் வாங்கின காசுக்குக் காரை தூக்கப் பின்தொடர்ந்து இருக்கான்.”

“ஐயோ” காயத்ரி அலற. அவள் தோளை இதமாய் தட்டி கொடுத்து கௌதம் தொடர்ந்தான்

“நீ மன்னிப்பு கேட்கத்தான் தான் போன் பன்றேன்னு நம்ம அறிவாளி போன்காலை எடுக்கலை . கோவத்தில் சயிலன்ட் மோடுல போட்டுருக்கான். அப்புறம் தான் பயப்புள்ள பின்னாடி நம்ம லாரி மாமா வருவதை கவனிச்சு இருக்கான். நீதான் எங்களுக்கு எல்லாத்தையும் கனவு கண்டு பிளாஷ் நியூஸ் சொல்வாயே சோ பயப்புள்ள காரை வேகமா ஓட்டி இருக்கான் அதுல போன் உள்ளவே கீழேவிழுந்துருச்சு..”

“ ஐயோ “ மீண்டும் அலற

பெருமூச்சொன்றை விட்டு தொடர்ந்தான் கௌதம்
“ நம்ம பயலும் தப்பிக்க தெருத்தெருவா சுத்தி இருக்கான்! அதேநேரம் அந்த லாரி ஒட்டின நல்லவன் இடிக்கும் தறுவாயில் மனம் மாறி இருக்காப்புல. ஆனால் மனுஷங்க மனசு மாறுற வேகத்துக்கு லாரி நிற்குமா சொல்லு ? “ வெற்றுப் புன்னகையைச் சிந்தியவன்

“ஐயோ! “ காயத்ரி மறுபடி அலற

“ ஹேய் அய்யோகுய்யோன்னு சவுண்ட் விட்டுக்கிட்டே இருந்தா நான் சொல்லமாட்டேன் போ ! “ கடிந்து கொள்ள

“ சரி சரி பேசல சொல்லுங்க அண்ணா தயவுசெய்து! “ கெஞ்சினாள் காயத்ரி.

“ அது ! “ புன்னகைத்த கௌதம் மீண்டும் தொடர்ந்தான் “ பிரேக் அடித்து இருக்கான் நல்லவன் ஆனால் அதுக்குள்ள காரை லாரி இடிச்சுடுச்சு..என்ன அவன் எதோ வேகம் குறைக்க முயற்சி செய்ததாலே அவ்ளோ சேதாரம் இல்லை. “

“ஐயோ அண்ணா! “ காயத்ரி அவன் சொல்லச் சொல்ல கற்பனை செய்திருந்தவள் துடித்தாள்.

“நீ வேற ஐயோ குய்யோன்னு போடி ! “ தோளிலிருந்து கையை எடுத்து கௌதம் அவளைத் தாண்டி இரண்டு எட்டு வைக்க

“ அண்ணா மன்னிச்சுடுங்க! அவர் எப்படித் தப்பினார் சொல்லுங்கள் ! “ காயத்ரி மீண்டும் அழும் நிலைக்குச் செல்ல. விளையாட்டைக் கைவிட்டுத் தொடர்ந்தான் கௌதம்

“ வேறஎன்ன? ஆச்சு வேற வழி இல்லைன்னு புரிந்ததும் சார் காரை சாலை ஓரமா ஒட்டி மரத்தில் விட்டு கிழ குதிச்சுட்டாப்புல! அதான் விழுந்து சில்லறை வாங்கி இருக்கான் வேற சேதாரம்அவ்வளவாய் இல்லை . இப்போ திருப்தி தானே மா ? “ வலியை மறைத்து தன் உடன்பிறவா தங்கை மனதைச் சாந்தப் படுத்த புன்னகைத்தான் கௌதம்.

அவன் மனமோ அமைதி இன்றி தவித்துக்கொண்டிருந்தது. தன்னால் தன் உயிர்த் தோழன் மரண வாயிலைத் தொட்டு வந்திருக்கிறான். அவன் சில காயங்களுடன் தப்பி இருந்த பொழுதும். சிவாவின் உடலிலிருந்த சிராய்ப்புக்கள் கௌதமின் மனதில் கீறல்களாய் விழுந்து மனதைக் கிழித்துக் கொண்டிருந்தது

அவர்கள் அந்த லாரியை அடைந்த நேரம்.

அங்கே லாரியின் பின்னாலே “ சார் பாவம் சார் கொஞ்சம் கருணை காட்டுங்கள் சார் ! “ சற்று வயதான ஏட்டய்யாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் சிவா

“ தண்ணியே இல்லையென்று மக்கள் கஷ்ட படுகிறார்கள் சார் கொஞ்சம் தண்ணி விடுங்கள் சார் “ சிவா கெஞ்சி கொண்டிருந்தான்

“ சார் அதுக்கெல்லாம் எனக்கு அதிகாரம் இல்லை படிச்ச பையனா இருக்கீங்க ஆக்சிடென்ட் கேசு சார் நான் இப்போது ஏதும் செய்ய முடியாது “ ஏட்டு அவர் தரப்பு நியாயத்தைச் சொல்ல .

” சார் , அதான் புள்ள சொல்லுதுல்ல ? அடிபட்ட மவராசனே எங்களுக்காக பேசுது. எங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்திட்டு போங்க! இல்ல லாரி இம்மி நகுற முடியாது ! ” என்று கையில் குடத்துடன் ஒரு நடுத்தர வயது பெண் மிரட்ட

” யக்கோவ் நீங்க இருங்க ! சார் நவுருங்க ! நாங்களே பிடிச்சுக்குறோம் ! அல்லாரும் குடத்தை எடுக்கிட்டு வாங்க ! ஒத்துங்க ! ” என்று ஏட்டை விட்டால் இழுத்துத் தள்ளி இருப்பார் வேறொரு பெண்.

“ விடுங்க குணா சார்! “ எஸ்ஐ அங்கே வந்தார்

“ பாத்துக்கலாம் சார்! தண்ணி இல்லாம கஷ்டப்படுகிறோம் நமே இப்படி இருந்தால் என்ன செய்ய பரவால்ல விடுங்கள் சமாளிக்கலாம் ! “

மேலதிகாரி சொல்ல வேறுவழியின்றி தண்ணீர் திறக்க சம்மதித்தார் ஏட்டு.

“ சரி சார் நீங்க கிளம்புங்கள் ஏதாவதுன்னா கால் பண்றோம் சார் “ எஸ்ஐ சொல்ல மூவரும் விடைபெற்றனர்.

கௌதம் காரை ஓட்ட. பின் சீட்டில் காயத்ரியின் கையில் அவள் ட்ரிப்ஸ் வியரைப் பிய்த்து எரிந்ததாதல் ஏற்பட்ட காயத்தைப் பார்த்து

“ ஏன்டா செல்லம் இப்படி பண்ணே. கொஞ்சம் பொறுமை வேணும்டி உனக்கு “ சிவா அவள் காயத்தை வருடியபடி கொஞ்ச

“உங்களுக்குத்தான் எவ்ளோ சிராய்ச்சி இருக்கு ரொம்ப எரியுதா கண்ணா ! “ அவள் அவன் காயங்களை வருட

“ அடேய் ! தள்ளி உட்காருங்கடா ! சும்மா கீச்சு மூச்சுன்னு ! ஹேய் பிசாசு டேய் நல்லவனே நோ டச்சிங் தள்ளி உட்காரு .. இல்ல இபப்டியே இறக்கி விட்டுருவேன் உங்க ரெண்டு பேரையும் ! “ ரியர் வியூ கண்ணாடியில் இருவரையும் பார்த்து போலியாய் மிரட்டினான் கௌதம்.

வீடுவந்து சேர்ந்த பின் அனைத்தையும் உதயாவிடம் சொல்லி அவளை சமாதானம் செய்வதற்குள் மூவருக்கும் கண்விழி பிதுங்கி விட்டது.

“ என் மேல இவளோ லவ்வா உங்க மூணு பேருக்கும் ! நான் ரொம்ப லக்கி ! “ என்று சொல்லி கொண்டே சிவா கைகள் விரித்து நிற்க கௌதம் காயத்ரி உதயா முவரும் ஒன்றுசேர அவனை அனைத்துக்கொண்டனர்.

சிவா கண்கள் குளமாகின பெற்றோரை இழந்து தாத்தாவையும் இழந்து தன்னந்தனியாய் நின்ற நேரம் உறவாய் வந்த கௌதம் உதயா. உறவாய் இருந்தும் நெருங்க முடியாமல் இருந்த காயத்ரி. இப்பொழுது அவனே அவனுக்காய். ஒரு புது குடும்பமாய் ஒன்றாய் அன்பாய் ..இனி அவர்கள் நால்வரும் அனாதை இல்லை. ஒரே குடும்பம் அன்பால் மட்டுமே பிணைக்கப்பட்ட குடும்பம் ! அவன் குடும்பம் !

வலி மறந்து புன்னகைத்து தன் குடும்பத்தினரை அணைத்துக்கொண்டான் சிவா.

அன்றிரவு தன் அறையில் சிவா அவன் அருகில் கௌதம்.

“ உன்மையை சொல்லு சிவா ! என்ன நடந்தது ? நாம சொன்னதை காயத்ரி உதயா நம்பலாம். நான் நம்பல சொல்லு டா. என்னதான் ஆச்சு? “ கௌதம் விடுவதாய் இல்லை.

“ ஒன்றும் இல்லை நீ தூங்கப் போடா ! “ சிவா சிரிக்க

“வேணாம்டா அடிச்சுடுவேன் ! ” என்று கௌதம் முறைக்க

” கூல் கூல் ! முதலில் எனக்கு ஒன்றும் ஆகலை , இரண்டாவது டிரைவர் வாக்குமூலம் கொடுத்தாச்சு , மூணாவது…” என்று இழுத்தவன் அவன் பொறுமை இழப்பதைப் பார்த்து ” மூணாவது இந்த ஏற்பாட்டைப் பண்ணது சுதாகரன் இல்லை ,காயத்ரி மேடமுடைய விசிறி ராக்கேஷ் ! ” என்று முடித்தான்

” என்ன ராக்கேஷா?? அவன் எப்படி ? ” என்று கௌதம் திடுக்கிட்டான்.

” அவன் ஏன்டா ? ” என்று கௌதம் குழம்ப

” பின்ன சார் என்னை காருக்கு போக சொல்லிவிட்டு அவனை அடிச்சது மட்டும் இல்லாமல் அவன் வீட்டுக்கும் ஆள் அனுப்பி பய வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏத்தி விட்டுடீங்க போல இருக்கிறதே அதான் அவன் இப்படி ஒரு பிளான் பண்ணி இருக்கிறான் ! இந்நேரம் அவனை நம்ம ஆளுங்கள் ரவுண்டு பண்ணி இருப்பார்கள் ! ” என்று சொன்னவன் மேலும் .

” நம்மகிட்ட என்ன பிரச்சனையென்றால் எது நடந்தாலும் நாம அந்த சுதாகரனையே சந்தேக படுகிறோம் ! அப்போ அப்போ கொஞ்சம் மாத்தி யோசிக்கணும் “

கௌதம் தலையைப் பிடித்துக்கொண்டான்.

“ சரி நீ ஏன் என் கிட்டச் சண்டை போட்டு கார் எடுத்தே? “ கௌதம் பாயிண்டை பிடித்தான்

“ போடா இவனேஅதான் உனக்கே புரியுதுல்ல போ ! “ சிவா சொல்வதாய் இல்லை.

“ சொல்லபோறியா இல்லையா ? “ கௌதம் பொறுமை இழந்தான்.

“ சரி டா! அவ கனவைக் கேட்டதிலிருந்து எனக்கு நிம்மதி இல்லை உன்னையும் நான் இழக்க விரும்பலை அதான் உன்ன எப்படி காப்பாற்றலாமென்று யோசிச்சேன் நம்ம பாடி கார்ட்ஸ் விட்டு அந்த சுத்தக்காரனை தூக்கிடலாமென்று முடிவு செய்தேன்.

ஆனால் அவன் ஊரிலேயே இல்லையாம் அவன் அமெரிக்கா போயிருக்கிறான் பொண்ணோட ! அவர்கள் என்னிடம் திரும்பி வருகிறதுக்குள்ள நீ காரை சர்வீஸ் விடுறேனு கிளம்புறே!

அதான் லாரி ட்ரைவரை பிடிக்கும் வரை உன் கரை ஏதாவது காரணம் சொல்லி நானே ஓட்டலாமென்று நெனச்சேன் . எனக்கு ஏதாவது ஆனால் பரவால்ல உனக்கு எத்தனாவது ஆனா நான் தயங்கமாட்டேன் டா கௌதம் “ உணர்ச்சி வசப்பட்ட சிவாவின் குரல் உடைந்தது.

தன் நண்பன் தெரிந்தே உயிர் விடத் துணிந்து இருக்கிறான் அவனுக்காக. இப்படி ஒரு நண்பன் கிடைக்க என்ன தவம் செய்தேனோ மனம் துடித்தது.

“ உனக்கு ஏதாவதுன்னா காயத்ரி நிலைமையை நினைத்து பார்த்தியா அறிவுகெட்ட முண்டம் ! “ கௌதம் கடிந்து கொண்டான்.

“ தெரியும்டா அவ வறுத்த படுவாளென்று ஆனால் இப்படி உடைந்து போவாளென்று நினைக்கவில்லை. நான் தான் சின்ன வயசுலேந்து அவளை விரும்புறேன் அவ கொஞ்ச நாளாகத்தானே என்னை விரும்புறா சோ தாங்கிடுவான்னு நெனச்சேன் டா. ஆனா கையில் ரத்தம் சொட்ட . சிவா சிவான்னு கத்திக்கொண்டே பைத்தியக்காரி மாதிரி நின்னா பார் உலகம் மறந்து தன்னை மறந்து…அவ கண்ணுல நான் பார்த்த மரண வலி. என்னால தாங்க முடியலடா கௌதம் நான் எதிர் பார்க்கவே இல்ல “ சிவா கௌதமின் தோளில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தான்.

“ காதலுக்கு எதுடா நாள் கணக்கு . 10 வருஷம் காதலித்தாலும் 10 செகண்ட் காதலித்தாலும் உணர்வு ஒன்றுதாண்டா மடையா ! இனி இப்படிக் கிறுக்கு வேலை செய்யாதே. எது வந்தாலும் சேர்ந்தே சமாளிப்போம் ! சத்தியம் பண்ணு! “

“ போடா நீ என்ன சொன்னாலும் கேட்பேன் டா..இந்த பில்டிங் மேலிருந்து குதிக்க சொல்லு ! “ சிவா வசனம் பேச

“ சொன்னா ? “ கௌதம் விஷமமாய் புன்னகைத்தான்.

சிவாவோ “ குதிப்பேன்டா! ஆனால் என்ன இப்போ காலு வலிக்குது மாடி ஏற முடியாது ! சரி ஆன அப்புறம் குதிக்கிறேன்! “ சிரிக்க

“ லிப்ட் இருக்குடா கவலை இல்லை “ கௌதம் மேலும் புன்னகைக்க

சிவாவோ “ நீ ஒருத்தன் போதுமடா எனக்கு. ஆகமொத்தம் விடமாட்டே ஹா ஹா “ சிரித்தவன் கௌதமை அணைத்துக்கொண்டான்

‘ செய்வான்! சொல்லாமலே எனக்காக உயிர் கொடுக்க துணிந்து இருக்கிறான் ! கிறுக்கன் ! ‘ மனதில் நண்பனை எண்ணி எண்ணி பூரித்தவன் சிவாவை உறங்க வைத்து அவனருகேயே உறங்கினான்.

அனால் அவளோ உறக்கமின்றி துடித்துக்கொண்டிருந்தாள்.

error: Content is protected !!