Nn 22

கௌதம் காயத்ரியுடன் பேசியபின்பு நொடியும் தாமதிக்காமல் தன் உடல் சோர்வையும் மறந்து காரை நோக்கி ஓடத் துவங்கினான்.

பின்னே ஓடிய சிவாவும் காரில் ஏறும்பொழுது கௌதமிடம்

” டேய் இப்பவாவது சொல்லு வேர் ஈஸ் ஷீ ? அப்படி எங்கத்தான் போயிருக்கா? ”

” அவ அவன் கூடப் பக்கத்தில் எதோ பீச் ரிசார்ட் போயிருக்கா டா ! ” என்ற கௌதம் கோவமாய் சொல்லாச் சிவாவும் ஒரு கணம் ஆடித்தான் போனான்

நாடித்துடிப்பு பலமடங்கு எகிற ” அறிவு கெட்ட முண்டம் ! அங்க வந்து வச்சுக்குறேன் உன்னை ” அவனும் முற்றிலும் வெறியேறித்தான் இருந்தான்.

கௌதம் தன் காரில் முன்னே செல்லத் தன் காரில் பின்தொடர்ந்தான் சிவா.

இருவரும் அந்த ரிஸார்ட்டை அரை மணிநேரத்தில் அடைந்தனர்.

அங்கே காரைப் பார்க் செய்து மறுபடி காயத்ரிக்குக் கால் செய்த கௌதம்

” எங்கே இருக்கே ? ” என்று கத்த ” அங்கேயே இரு வரேன் ! “

தன் காரிலிருந்து வெளியேறிய சிவாவிடம்

கௌதம் வேகமாக நடந்த படியே ” டேய் வாடா அங்க பீச் கிட்டதான் இருக்காங்களாம் ! லூசு லூசு இருட்டின பிறகு இப்படி இங்கேயெல்லாம் தனியா வரலாமா ? அதுவும் நம்ம துணை இல்லாம ? உன்மேல் தான் சிவா தப்பு ! ” என்று பழியைத் தூக்கி சிவாவின் மேல் போட்டான்.

” நான் என்னடா செஞ்சேன் ! ” என்று சிவாவும் எகிற

கௌதமோ ” நீ ஒழுங்கா அவகிட்ட பாசமா இருந்து இருக்கனும் ! நாலு இடத்துக்குக் கூட்டிட்டு போய் இருக்கனும். எதுவும் செய்யாம கோட்டைவிட்டுட்டு இப்போ வந்து குத்துதே குடையுதேன்னு ! ” என்று கடிந்து கொள்ள

” ஹே அவளோ படிக்கிற பொண்ணு என்னால அவ மனசு அலைபாயக் கூடாதுன்னு என்னைக் கட்டுப்பாடோட வச்சுக்கிட்டேன் அது ஒரு குற்றமா ? ” என்று சிவாவும் விடாமல் பதில் தந்தபடி கௌதமிற்கு ஈடாய் ஓடினான்.

இருவரும் காயத்ரி சொன்ன கடற்கரையை ஒட்டி அழகான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த ரெசார்ட்டின் பீச் உணவகத்தை அடைந்தனர்.

அங்கோ பலபேர் இருக்க அந்தப் பீச் உணவகத்தில் காயத்ரியைத் தேடி ஆளுகொருபுரம் தேடியபடி நடக்கத் துவங்கினர்.

திடீரென்று மிதமான ஒலியில் ஓடிக்கொண்டிருந்த இசை நிறுத்தப் பட்டு நிசப்தம்பரவியது.

சிவாவின் சட்டையைப் பின்னாலே யாரோ இழுக்க வெடுக்கென்று திரும்பியவன் யாரும் இல்லத்தைக் கண்டு விழிக்க

“அங்கிள் கிழ பாருங்க “ என்று ஒரு பிஞ்சுக் குரல் கேட்டு அவன் கீழே பார்க்கக் கையில் ஒற்றை ரோஜாவுடன் ஒரு சின்னப் பெண் குழந்தை நின்றிருந்தது

அக்குழந்தை அந்த ரோஜாவை அவனிடம் நீட்ட ” என்ன கண்ணா ! யார் கொடுத்தா ? “ குழந்தையின் உயரத்திற்குக் குனிந்து அவன் கேட்கப் பதிலளிக்காமல் அக்குழந்தை ஓடிவிட்டது.

‘நேரங்கெட்ட நேரத்துல’ என்று அலுப்புடன் அப்பூவை அவன் எரியப்போக, அங்கே ஸ்பீக்கரில் இசை அலறத் துவங்கியது, எதிரே ஒரு பெண் அவனை நோக்கி வேகமாக ஓடிவர, சிவா ஒரு நிமிடம் அரண்டு விட்டான்.

அவனை நோக்கிப் புன்னகைத்த படி ஓடிவந்த அப்பெண் அவனைச் சுற்றி சுற்றி நடனம் ஆடத் துவங்கினாள். ’ இதென்ன ரோதனை !’ என்று அவன் அவளைக் கடக்க முயலும்பொழுது டக்கென்று அருகிலிருந்த மேசையிலிருந்து ஒருவன் எழுந்து அப்பெண்ணுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்தான்.

இவர்களைத் தாண்டி அவன் கௌதமை தேட அவனையும் வேறொரு பெண்ணும் ஆணும் அவனைச் சுற்றி ஆட அவனோ நகர முடியாமல் திணறிக் கொண்டு இருந்தான்.அங்கிருந்த மக்களிலிருந்து ஒவ்வொருவராக அவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டமே இசைக்கு ஏற்றார் போல அட துவங்கினர்.இசை முடியும் நொடி

திடீரென்று வெளிச்சம் அனைத்தும் அணைக்கப் பட்டுச் சிவாவின் மேல் மட்டும் வெளிச்சம் அடிக்கும்படி லயிட் போடப் பட்டது அந்த வெளிச்சத்தின் வீரியத்தில் கண்கூச எதுவும் தெரியாமல் அவன் நிற்க.

” சிவா ! ” என்று அவன் காதிற்கு வெகு அருகில் குரல் கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பியவன் கண்ட கட்சியில் சிலையாகித்தான் போனான்!

அவன் முன் ஒரு காலைத் தரையில் ஊன்றி ஒரு காலை மண்டியிட்டுக் கையில் ரோஜா மலர்க்கொத்துடன் அவனைப் பார்த்துக் கண்களில் காதில் மின்ன அழகாய் புன்னகைத்தாள் காயத்ரி.

அந்த மலர்க்கொத்தின் நடுவே இருந்த ரோஜா வடிவிலான சிறிய பெட்டியைத் திறந்து அதிலிருந்த அழகிய மோதிரத்தைப் பூவுடன் நீட்டிக் காதல் பொங்கும் குரலில் கிள்ளையாய்

“ஐ லவ் யூ சிவா! இனி என் வாழ்க்கையில் எல்லாமுமா என் கூடவே இருப்பீங்களா ? வில் யு மேரி மீ (என்னைத் திருமணம் செய்துகொள்வீர்களா) ?”

இதற்கு மேலும் தன் காதலை அவனுக்கு உணர்த்தச் சொற்கள் கிடைக்காமல் இமைக்கவும் மறந்து அவனது அழகிய நீல நயனங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதில் இந்த உலகத்தையே மறந்து எங்கோ விண்வெளியில் பறப்பதைப் போல் உணர்ந்தாள் !

அவன் கண்களையே இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்பினாள். தன் வாழ்க்கையின் இறுதிவரை அவனின் நீல நயனங்களிலேயே மூழ்கிவிட விரும்பினாள்.

சிவாவோ தன்னவளின் எதிர்பாரா காதல் தாக்குதலில் உறைந்துவிட்டான். கால்கள் வேர்கொண்டனவோ இம்மியும் அசையாமல் அவன் நிற்க இதயமோ இருமடங்காகத் துடித்தது.

சிவாவின் பதிலுக்காக அந்த இடமே அமைதியில் உறைந்திருக்க அந்தக் கடற்கரையை ஆலைகள் முத்தமிடும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

அவளுடைய இதயம் மீண்டும் கண்கள் வழியாக அவனைக் கேட்கத் தொடங்கியது ’ என் உயிரே, நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? ‘

அவள் அவனுடைய பதிலுக்காகக் காத்திருக்கவில்லை,

“கால் முட்டி வலிக்குதுப்பா ! சீக்கிரம் எதாவது சொல்லேன்! ” என்று அவள் சிரித்தவாறே மெல்லிய குரலில் கெஞ்ச.

சிவாவின் கண்களோ அவள்மீதே ஒட்டியிருந்தது. அவ்வளவு அழகான ஆச்சரியத்துடன் அவன் மனம் மகிழ்ச்சியில் மூழ்கிச் சொல்லும் வார்த்தை ஒவ்வொன்றிலும் அவன் உயிர்க்காதல் மிளிர

“ஐ லவ் யூ டூ காயத்ரி! எஸ் ஐ வில் மேரி யு டியர் ! (நான் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்)
காயத்ரி இந்தத் தருணத்திற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்ததைப் போல் உணர்ந்தாள். நொடியும் தாமதிக்காமல் அவள் மலர்க்கொத்தில் இருந்த ரோஜா வடிவிலான பெட்டியிலிருந்த அழகிய மோதிரத்தை எடுத்து அவனின் விரலில் அணிவித்து மென்மையான முத்தையும் அக்கைகளுக்குப் பரிசளித்தாள்.

சிவா, சுற்றியுள்ள உலகத்தை மறந்து தனது காதலியைத் தோளைப் பிடித்து உயர்த்தி அவளைக் காற்றுகூட புகா வண்ணம் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். ஏற்கனவே அவன் மனதில் கட்டுண்டவள் இப்பொழுது அவன் கரங்களில் அடைக்கலமானாள்.

திசையறியாது சுற்றித்திரிந்த சிறு பறவை தாய் பறவையைக் கண்டுபிடித்து அதன் அரவணைப்பில் அடைக்கலமானதுபோல் பாதுகாப்பாய் உணர்ந்தாள்.

காற்றெங்கும் காதல் பரவ இருவரின் உள்ளங்கள் மட்டுமல்லாது உயிர்களும் ஒன்றாய் கலந்தது.

பலத்த கைதட்டல்கள் எழுப்பிய ஒலி அவர்களை இவ்வுலகத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது. சிவாவும் காயத்ரியும் சுற்றியிருந்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்தனர்.

அவர்களைச் சுற்றி இருந்த மக்கள் அனைவரும் ‘ஹே’ என்று கத்தி ஆர்ப்பரிக்க. அவர்களின் நெருங்கிய நண்பர்களான கௌதம், உதயா, லட்சுமி, ஸ்ரீவத்சன், சுப்பு அனைவரும் இந்த ஜோடியைச் சூழ்ந்து கொண்டனர். கௌதம் சிவாவை ஆரத்தழுவி அவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

நண்பர்கள் அவர்களை மாறி மாறி வாழ்த்த இன்னும் இன்ப அதிர்ச்சியிலிருந்த மீளாத சிவாவோ காயத்ரியைத் தான் பார்த்துக் கொண்டே இருந்தான். பிளாஷ் டான்ஸ் ஆடி உதவிய பிளாஷ் மாப் குழுவிற்கு நன்றி தெரிவித்து விட்டு சிவாவின் பக்கம் திரும்பினாள் காயத்ரி.

அவள் சற்றும் எதிர் பார்க்காத நேரம் அவளை நெருங்கி இறுக்கி அணைத்துக் கொண்டான் சிவா.

ஏற்கனவே தங்களின் அன்பை அறிந்திருந்த பொழுதும் அனைவரின் முன்னிலையில் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்ட இத்தருணம். சிவா அவளைத் திருமணம் செய்துகொள்வேனென்று வாக்குறுதி கொடுத்த இந்நொடி அவளின் மனதில் இந்நாள் வரை இல்லாத மனநிறைவைத் தந்தது

மனமெங்கும் பொங்கிய சந்தோஷமும் நிம்மதியும் அவள் கண்கள் வழியே ஒற்றை அனந்த நீர்த் துளியாய் வெளிப்பட்டது.

“காயு நான் தான் இதெல்லாம் செய்திருக்கணும்! உனக்கு என்னைப் பிடிக்கும்னு தெரியும் ஆனா இவளோ பிடிக்குமா ? ஏன்டா ! ” சிவாவின் குரல் தழுதழுத்தது.

“ஏய் சில்லி! யார் சொன்னது ஆம்பிளைங்க தான் ப்ரொபோஸ் செய்யணும்னு ? என் சிவா என்னை விரும்புறார்ன்னு எனக்குத் தெரியும் ஆனால் என்ன நீங்கக் கொஞ்சம் ஸ்லோ ! அதான் பொறுமை இல்லாம நானா ப்ரொபோஸ் பண்ணிட்டேன்! “

“இருந்தாலும் ஒரு பெண்ணா நீ இப்படியெல்லாம் நான் செய்யணும்னு ஆசை பட்டிருப்பேல்ல? மன்னிச்சுடு டா ! “ அவன் மனம் வருந்த

“அய்யய்ய என்ன இது ? இதுவும் எனக்கு ஒருவிதத்தில் நல்லாத்தான் இருந்தது சிவா. சொல்லப்போனா நேத்து ராத்திரி தூக்கமே இல்லை தெரியுமா ?

இந்த நிமிஷத்தை நெனச்சு நெனச்சு படபடப்பு ஒரு புறம், நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு எனக்கு ஆவல் ஒரு புறம்.” முகம் நாணத்தில் சிவக்க அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து எங்கோ பார்வையைச் செலுத்தியவள் மேலும் தொடர்ந்தாள்.
“இன்னிக்கி காலைச் சொன்னேன்ல வயத்துல பட்டாம்பூச்சி அதுகூட இதை நெனைச்சுத்தான்! “ புன்னகைப்படி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஹாஹா இது தான் விஷயமா ? இது தெரியாம நீ டேட்டிங் போகத்தான் அவளோ பரபரப்பா இருக்கேன்னு நெனச்சேன்டா ! “ என்றவன் தன்னவள் தனக்காக இவ்வளவு யோசித்ததையும் அவள் தன் மேல் கொண்டிருந்த அளவில்லா நேசத்தையும் எண்ணி பெருமிதம் கொண்டான். அதை ஒரே நெற்றி முத்தமாய் வெளிப் படுத்தினான்.

“காயு! இந்தப் பார்ட்டி, மோதிரம் இதெல்லாத்துக்கும் பணம் எங்கேந்து வந்தது? “ புருவம் சுருக்கி கேட்க

அவளோ மௌனம் காக்க. பதில் வராததைக் கண்டு அவள் தோளைப் பற்றி எட்டி நிறுத்திய சிவா புருவம் சுருக்கி

“காயு இதெல்லாத்துக்கும் கண்டிப்பா நிறைய செலவாயிறுக்கும். சொல்லு எப்படி சமாளிச்சே ? “ தீர்க்கமாகக் கேட்க

“இந்த இடம் எவ்வளோ அழகா இருக்குல்ல ! ஸ்ரீவட்சன் தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான் தெரியுமா? “ அவள் பேச்சை மாற்றியபடி நடக்க.

“காயு! “

“ம்ம் என்ன? “ கேட்டப்பாடி அவள் மிரட்சியைக் காட்டிக் கொள்ளாமல் நில்லாது நடக்க

அவள் கரம்பற்றி இழுத்தவன் அருகிலிருந்த மரத்தில் அவளைச் சாய்த்து அவன் கைகளை இருபுறமும் ஊன்றி அணைக் கட்டியபடி அவள் முகத்திற்கு நேரக் குனிந்து அவள் கண்ணை உற்றுப் பார்த்தபடி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

‘ஆஹா விடமாட்டான் போல இருக்கே ! சமாளி…சமாளி ’

“சரி சரி முறைக்காதீங்க! பார்ட் டைம்ல இன்டர்நெட்ல வேலை செய்து சேர்த்து கொஞ்சம்…”என்றவள் அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி அவனின் நெஞ்சின் மேல் ஒற்றை விரலை வைத்துத் தூரம் தள்ள முயல

அவனோ அசைந்து கொடுக்காது “ம்ம் அப்புறம் ? “

“அப்புறம் பேங்க்ல இருந்தது கொஞ்சம் அப்புறம்…அப்புறமென்ன அவளோதான்…” அவனைத் திசை திருப்ப அவன் நெற்றியின் மேல் விழுந்த கற்றை முடியை ஒதுக்கியவள் மெல்ல அவன் கன்னங்களை வருடியபடி… “ போகலாமா தேட போறாங்க பாவம்! “ என்றபடி குழைய

அவனோ குரலில் கண்டிப்புடன் “ஒன்னும் தேடமாட்டாங்க! ம்ம் சொல்லு அப்புறம்…” அவன் விடுவதாய் இல்லை

“அதான் சொன்னேனே எல்லாம் சேர்த்துத்தான். இல்லாட்டி என்கிட்டே ஏது இவ்ளோ ? “ சொன்னவள் உதட்டைக் கடித்துக்கொள்ள.

இன்னும் அவளை நெருங்கி அவள் காதருகே ஹஸ்கி குரலில் “ம்ம் மேல சொல்லு பேபி அப்புறம் ? “ அவன் கடைசி அஸ்திரத்தையும் பயன்படுத்த

‘ ஆஹா இவன் வேற காத்துக்கிட்ட புஸ்ஸு புஸ்ஸுன்னு மூச்சுவிட்டுப் படுத்துறானே! ‘

“வளையல்.” என்றிழுத்தவள் அவன் அருகாமையில் நாணத்தில் முகம் சிவக்க அவன் கண்களைப் பார்க்கமுடியாமல் அவன் சட்டை காலரைப் பார்த்தபடி “ வித்துட்டேன்! “

அதிர்ந்துதான் போனான் “வாட் ? வளையலை வித்துட்டியா? என்னடி சொல்றே? “

“ம்ம் வித்துட்டேன்!”

“இடியட்! இதெல்லாம் இல்லைன்னு யார் அழுதா ? என்ன வேலை பார்த்திருக்கே? “ அவன் முகமெல்லாம் சிவப்பேற

“ப்ளீஸ் டியர் கோவப்படாதீங்க! சாரி! “

“அடிச்சேன்னா தெரியும். நீ போட்டிருந்த ஒரே நகை அதான் அதையும் வித்து…போடி ! “ வெறுப்புடன் அவன் விலக

அவன் சட்டை நுனியைப் பற்றித் தன்னிடம் இழுத்தவள் கெஞ்சும் குரலில்

“ப்ளீஸ்….கோவப்படாதீங்க! என் கையில் வளையலா இருந்தது… உங்க விரலில் மோதிரமா இருக்கு அவ்வளவு தானே!” என்றவள் துணிந்து அவன் கண்களைப் பார்க்கக்

கலங்கிய கண்களுடன் அவளைக் கண்டவனோ நொடியும் தாமதிக்காமல் தன் உணர்வுகளை முத்தமாய் வெளிப்படுத்தினான்.

அந்த இருள் சூழ்ந்த இரவும் மரத்தில் இலைகளின் மறைவும் அந்த இடத்திலும் அவர்களுக்குத் தனிமையைத் தந்தது.

” ஹோய் ரவுடி தங்கச்சி ! எங்க இருக்கே ? “ என்றபடியே வந்த கௌதமின் குரல் கேட்டுச் சுய நினைவிற்கு வந்த சிவா வெருட்டென்று விலகி

“ சாரி காயு! ச்ச்சே பப்ளிக் பிளேஸ்ல சாரி டா.இனி இப்படி நடந்துக்க மாட்டேன்! சாரி…வெரி சாரி” விடாமல் மன்னிப்பு கேட்க

“என்னடா மரத்துக்கிட்டச் சாரி கேட்கிறே? சந்தோஷத்துல நட்டு கிழண்டு போச்சா ? “ சிரித்தபடி கௌதம் அவனை நெருங்கியபொழுது அங்கே காயத்ரியைக் கண்டு

“நீயும் இங்கதான் இருக்கியா ? “ கௌதம் புன்னகைத்தபடி கேட்க

” ஏண்டா கரடி” என்று சிவா சிடுசிடுக்க

“நான் கரடியா ? அநியாயம் டா டேய் ! ” கௌதம் அலுத்துக்கொள்ள.

“ நல்லவளே என் குழப்பத்தைத் தீர்த்துட்டு ரொமான்ஸ் பண்ணு. மொதல்ல அந்தப் பொந்திலிருந்து வெளியே வா ! ஏதான பூச்சி பொட்டு இருக்கபோது ! ”

வெட்கமும் அதிர்ச்சியாய் மரத்தோடு ஒன்றி இருந்தவள் கௌதமின் குரல் கேட்டுத் தன்னை ஓரளவிற்குச் சமன் செய்துகொண்டாள்.

சிவாவையோ கௌதமயோ பார்க்காது தரையைப் பார்த்தபடி

“ சாரி அண்ணா இன்னிக்கி நிறையச் சுத்த விட்டேனோ ? “ என்று சிரித்தபடி வெளியேற.

கௌதமோ அவள் தலையைப் பிடித்துச் செல்லமாய் ஆட்டி

“ஆமா ரொம்பவே ! இன்னிக்கி உன் பின்னாடி நடந்ததற்குத் திருவண்ணாமலையைச் சுற்றி நடந்திருந்தால் கிரிவலம் முடிச்ச புண்ணியம் கெடச்சுருக்கும் ! ”

“சாரி அண்ணா ! எனக்கு லேட்டாத்தான் தெரியவந்தது மன்னிச்சுடுங்க ப்ளீஸ் ! ”

“ ஆமா கேட்க மறந்துட்டேன் உன்கூட வந்தவன் யார் அவன்? “ என்று சிவா காதல் மயக்கம் தெளிந்து மெதுவாக மலையேற.

‘ ஆஹா யாரும் கேட்கலையேன்னு நெனச்சேன் ! ‘ மனதில் எண்ணியவள் அவனை இப்பொழுதும் ஏற்றெடுத்துப் பார்க்கத் தயங்கி ” அவன்தானே ? சொல்றேன் வாங்க! “

சிறிது தூரம் நடந்தபின் அங்கே இருந்த ஆண்கள் கூட்டத்திலிருந்த அவ்வாலிபனை நோக்கித் தொண்டையை செருமி “ பப்பி! “ என்று சற்று உரக்க அழைத்தாள்

“என்ன காயு பக்கத்தில் தானே இருக்கேன் இத்தனை சத்தமா கூப்படணுமா என்ன ? ” என்று சிவா கேட்க

” உங்களை யார் கூப்பிட்டா ? ” என்று அவள் எங்கேயோ பார்க்க.

“நான் தானே பப்பு ? “என்று சிவா புருவம் உயர்த்த.

“நான் கூப்பிட்டதது ‘பப்பி’ ‘ பப்பு’ இல்ல ” என்று அவள் அவன் நாடியைச் செல்லமாகப் பிடித்துக் கொஞ்சினாள்.

அதே கருப்பு உடை அணிந்த மாஸ்க் போட்ட வாலிபன் அவர்களை நோக்கி வர ” வா பப்பி ! உன்ன இவங்க பார்க்கணுமாம் ! சீக்கிரமா தான் வாயேன் ! ” என்று காயத்ரி ஆர்வமாய் அந்த வாலிபனை நோக்கிக் கைநீட்ட

சிவா பொறுமை இழந்து அந்த வாலிபனை நோக்கிக் கோவமாய் முன்னேற.

” கம்மிங் கம்மிங் டோன்ட் ஷவுட் காயத்ரி ! (வரேன் வரேன் கத்தாதே ! ) ” என்ற படியே காயத்ரியின் அருகில் அவன் வந்து நிற்க.

சிவா கௌதம் இருவரும் பேச்சிழந்து நின்றனர். “ எவளோ திர்மிறிருந்தா இவன் இப்படி என் எதிரே இவகிட்ட ஈஷிக்கிட்டு நிற்பான் ? “ என்று சிவா முணுமுணுக்க

“ இது பப்பி, இவன் முழுப்பெயர் பவன் குமார் நாங்க பப்பின்னு கூப்பிடுவோம் ! என்கூட கம்ப்யூட்டர் கிளாஸ்ல படிச்சான் இப்போ லண்டனில் செட்டில் ஆகிட்டான் ! “ என்று சொல்ல

” இவர் சிவா இவரைத்தான் நான் ” என்று முடிக்காமல் காயத்ரி வெட்கத்துடன் நிறுத்த.

“காட் இட் ! யுவர் பியான்ஸே ராயிட்? இப்போதானே பார்த்தேன் உன் ப்ரோபோசல் ! ” என்று சொன்னவன்.

சிவாவை நோக்கி ” வாழ்த்துக்கள் சிவா ! ” என்று கை நீட்ட. சிவாவும் சற்று அழுத்தமாகவே கைகுலுக்கினான்.

” வாவ் ! ஸ்ட்ராங் மேன் ! நீங்க நல்ல உடல் பயிற்சி செய்வீங்களோ ! ” என்று சிவாவைப் பார்த்துப் புன்னைதான்.

“ இவர் கௌதம் அண்ணா” என்று அவள் கௌதமை காட்ட, கௌதமும் கைக்குலுக்க கைகளை நீட்ட… பவனோ அவனைக் கட்டிப் பிடித்து.

” நீங்க ரொம்ப அழகா கம்பீரமா இருக்கீங்க கௌதம் ? ஆர் யு சிங்கிள் (நீங்கள் திருமணமாகாதவரா)? ” என்று ஆர்வமாய் கேட்டான்.

திருதிருவெனக் கௌதம் முழிக்கக் காயத்ரியோ சிரிப்பைக் கட்டுப் படுத்திக்கொண்டு

” அவருக்கு ஆள் இருக்கு பவன், அவர் நான் காட்டினேன்ல லட்சுமி அவளைத் தான் கல்யாணம் செய்துக்க போறார் ! ” என்று இப்பொழுதும் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல

” நோ வே ! என்ன இது ? போ காயத்ரி ! ” என்று பவன் அலுத்துக் கொண்ட நிமிடம்.

“டேய் பவன் உன்னை எங்கெல்லாம் தேடுறேன் தெரியுமா? நான் சொன்ன என் நண்பன் வந்துட்டான் அறிமுகம் செய்றேன் ! ” என்று சுப்பு அவனை இழுத்துக்கொண்டு சென்றுவிட

அவ்வளவு நேரம் கட்டுப் படுத்திய சிரிப்பு பீறிட உரக்கச் சிரித்தாள்.

” அவன் சொன்னதென்ன அவ்ளோ பெரிய ஜோக்கா ? என்னை அவன் அழகுன்னு சொன்னது ஒரு குத்தமா ? ” என்று கௌதம் சிணுங்க

“ஐயோ அண்ணா ! அவனைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா?” என்று சிரித்துக் கொண்டே அவன் காதில் எதோ சொல்ல

“ஐயோ ஆண்டவா! ஏன் உனக்கு நான் தான் கிடைத்தேனா ?அடப்பாவி இதற்குத்தான் என்னைச் சிங்கிளான்னு கேட்டானா ? ஜஸ்ட் மிஸ் ! ” என்று கௌதம் புலம்ப

“என்னடா?” என்று சிவா அவனைக் கேட்க, கௌதமும் அவன் காதில் எதோ சொல்ல “அவனா அவன் ?” என்று கேட்டு சிவாவும் சிரித்துக்கொண்டே காயத்ரிக்கு ‘ஹை ஃபய் ‘ கொடுக்க

“பிச்சுடுவேன் உங்க இரண்டு பேரையும்! “ செல்லமாகப் புன்னகையுடன் மிரட்டினான் கௌதம்.

“ ஜோக்ஸ் அபார்ட்! இவனா உன் டேட்? நீ சொல்ற படி பார்த்தல் அவனுக்குப் பெண்களே பிடிக்கக் கூடாதே! பின்னே அவன் எப்படி உன் கூட டேட் ?” என்று சிவா தன் சந்தேகத்தைக் கேட்க.

“சொன்னேன்ல அவன் என் பிரென்ட். ரொம்ப நாளைக்குப் பிறகு ஊருக்கு வரேன்னு சொல்லி இருந்தான். முன்னாடி நாங்க எல்லாரும் குரூப்பா எம்.ஜி.எம் போயிருக்கோம்.

திரும்பவும் அங்கே போலாமான்னு கேட்டான் அதான் போனோம். இதெல்லாத்தையும் நேற்றே சொல்லி இருப்பேன் உங்களைச் சும்மா கொஞ்சம் வெறுப்பேத்தலாமுன்னு டேட்ன்னு பொய் சொல்லி விளையாடினேன் ! ” என்று அவள் சிவாவையும் கௌதமையும் புன்னகையுடன் நக்கலாய் பார்க்க

கௌதமோ “யேய் வாலு உன்னை! நான் காலையிலிருந்து லூசு மாதிரி உன் பின்னாடியே சுத்தறேன். ச்சே எல்லாமே வீணா? இதற்கு நான் ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு பீல் செஞ்சேன் தெரியுமா? ” என்று அலுத்துக்கொள்ள

சிவாவோ தலைமுடியாய் கோதியபடி பார்வையை எங்கோ செலுத்தி அமைதியாய் இருக்க

“ என்ன சிவா ரொம்ப கஷ்ட படுத்திட்டேனா? சாரி ! “ என்று காயத்ரி கொஞ்சலாய் அவன் தோளில் சாய்ந்து கேட்க

அவள் தலையை மென்மையாய் வருடிக் கொடுத்து

“இல்லை காயு நான் தான் சாரி சொல்லணும். உன் பின்னாடியே கௌதமை அனுப்பி…நானும் வந்து. சாரி டியர் என்னை மன்னிச்சுடு மா ” என்று மனம் வருத்தியவன் மேலும்

” ஒன்னு மட்டும் எனக்குப் புரியலை எதற்கு அவன் அடையாளத்தை மறைக்க மாஸ்க் போடணும் ? அதுனாலதான் எண்ணங்களுடைய சந்தேகம் அதிகரித்தது ”

“அதானே அவன் என்ன அவளோ பெரிய அப்பாடக்கரா? எதற்கு இப்படி மறைஞ்சு மறைஞ்சு உன்கூட ஊரைச் சுத்தணும்? ” என்று கௌதமும் கேட்டான்.