“மறைஞ்சு மறைஞ்சா? என்ன சொல்றீங்க இரண்டுபேரும்? அவனுக்குச் சின்ன வயசிலிருந்து டஸ்ட் அல்ர்ஜி (தூசி ஒவ்வாமை) மாஸ்க் இல்லாட்டி பாவம் தும்மிக்கிட்டே இருப்பான் அதான் தூசி தும்பு பறக்குமிடமெல்லாம் மாஸ்க் போட்டுக்கிட்டு சுத்துவான் ” என்றவள் இவர்களைக் குழப்பமாய் பார்க்க
“டேய் சிவா! அப்போவே சொன்னேன்ல டா?” என்று கௌதம் சிவாவை முறைக்க
என்ன இன்றைக்கு ஒரே சொதப்பலும் மன்னிப்பும்மா இருக்கு என்றெண்ணிக் கொண்ட சிவா வருத்தத்துடன் ” சாரி டா கௌதம்” என்று அவனிடம் மன்னிப்பு கேட்க
“விடு விடு இதெல்லாம் ஒரு விஷயமா? “ என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தூரத்தில் பவன் குமார் வருவதைப் பார்த்த கௌதம் “ஐயோ!” என்று அலறி அவர்களை விட்டு விலகி வேறு திசையில் ஓடிவிட்டான்.
இதைப் பார்த்துச் சிரித்த படியே இருந்த காயத்ரியின் கையை ஆசையாய் பிடித்துக் கொண்டான் சிவா
“காயு ! ஐ ரியலி லவ் யு ! ” என்று முணுமுணுத்தவன் ” காயு ! டேட் தானே போன இதெல்லாம் எப்போ ஏற்பாடு பண்ணே வாலே ? எப்போ போட்ட திட்டம் இது எல்லாம் ? ம்ம் ” என்று கொஞ்சலாய் கேட்க
“நான் இங்க நேர வரேன்னு உதயா கிட்ட சொல்லிட்டேன். உதயா உங்களையும் கௌதம் அண்ணாவையும் இங்க கூட்டிட்டு வரத்தாகத்தான் திட்டம். ஆனால் கௌதம் அண்ணா காலையே என்னைப் பின் தொடர்வதை உதயா சொல்லிடா.”
சிவாவோ அதிசயித்து “ ஆகா உனக்குத் தெரியுமா ? சரி மேல சொல்லு! “
“ம்ம்” என்று தொடர்ந்தாள் காயத்ரி
“மாலையில் நீங்களும் அங்க கிளம்பிட்டதா சொன்னா. சரி அப்படியே இங்க வர வச்சுடலாம்ன்னு இங்க வந்துட்டோம்! பாவம் பவனைப் போய்த் தப்பா நெனச்சு கொடுமை டா ! கொடுமை!.
சொல்லப்போனா அவன் தான் இந்தப் பிளாஷ் மாப் டான்ஸ் ஐடியா கொடுத்தவனே ” என்று சொன்னவள் அவன் தோளில் மீண்டும் சாய்ந்து கொண்டாள்
” நான் என்ன கண்டேன் ? ஆத்திரக் காரனுக்குப் புத்திமட்டு ! இப்போ ஏத்துக்குறேன் காயு…” அவளிடம் சொன்னவன் காதலாய் அவள் தோளை அணைத்துக்கொண்டு அவள் காதருகில்
“நீ நிஜமா இன்னிக்கி ரொம்ப அழகா இருக்கே தெரியுமா ? இவ்ளோ நாள் குட்டி பெண்ணா தெரிஞ்ச நீ இப்போ என் கண்ணுக்குக் கொஞ்சம் வளைந்த பெண்ணா தெரியுறே! “ என்று கிரக்கமாகச் சொன்னவன்
விஷம புன்னகையுடன் “எனக்குக் கூட மூட் கொஞ்சம் தாறுமாறா போகுற மாதிரி இருக்கே என்ன செய்யலாம் ? “ என்று வார்த்தைகளை இழுத்தவன் அவளைக் கண்ணோடு கண் பார்க்க
” என்ன லொள்ளா? இந்த அழகான நீல கண்ண அப்படியே குத்திடுவேன் ஆமா ! திரும்பு வேற எங்கயானபாருங்க ஆமா “ என்று சிணுங்க
“ஏண்டி என்ன கண்ணு உனக்குப் பிடிக்கலையா ?” என்று அவன் சோகமாக
“லூசா நீங்க ? எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே உங்க கண்ணுதான் தெரியுமா? எவளோ ப்ளூ ! ப்பா பார்த்தாலே பறக்குற மாதிரி இருக்கும்! அதை உற்றுப் பார்க்கத் தைரியம் இல்லாம தானே எங்கேயோ பாருங்கன்னு சொல்றேன் ! அது புரியாம” என்று வெட்கப் பட
“ஆஹா. சும்மா உத்து பார்த்தாலே வெட்க படுவேன்னு தெரியாம போச்சே ! ச்சே இவளோ நாள் வீணாக்கிட்டேனே!” என்று அவன் அவள் முகத்தை நோக்கிக் குனிய
“பப்ளிக் பப்ளிக் ! “ என்று அவனை மெல்ல விலக்கியவள் ஒன்னு ஒரேயடியா சாருக்கு காதல் பொங்கும் இல்லை மொத்தமா சந்நியாசி மாதிரி விலகிப் போய்விட வேண்டியது “ செல்லமாய் காயத்ரி அலுத்துக்கொள்ள.
“நான் என்ன வேணும்னேவா செய்றேன்? ஒரு மனசு நீ சின்னப் பொண்ணு உன் படிப்பு கெடக்கூடாதென்று என்னைக் கண்டிக்கும், ஒரு மனசு எனக்கு உன்மேல் இருக்கிற காதலை உனக்குக் காட்ட என்னைத் தூண்டிவிடும். எனக்குள்ளேயே போராட்டம் இருக்கவேதான் தள்ளித் தள்ளி இருக்க முயற்சி செஞ்சேன்” அவளின் பலநாள் குழப்பத்தைத் தீர்த்து வைத்தான்.
“இப்போ ஓகேவா காயு ? இல்லை இன்னும் ஏதேனும் சந்தேகம் இருக்கா?” அவள் மூக்கை பிடித்து ஆட்டியபடி சிவா கேட்க
“ இருக்குடா நிறைய இருக்கு ! “ என்றபடி வந்து சேர்ந்தான் கௌதம்
“என்னடா! “ சிவா சிணுங்க
“ஒன்னு பசிக்குது சோறு போடுவியா மாட்டியா? இரண்டு இங்க இப்படியே கொஞ்சிக்கிட்டு இருந்தா வீட்டுக்கு எப்போ போறது? மூணு…மூணு…“ என்று இழுத்தவன்
சிவாவின் காதில் எதோ கேட்க “ டேய் நீ இவ அண்ணன் டா “ என்று அவனை அடிக்கச் சிவா துரத்த ஒரே சந்தோஷ ரகளைதான்.
சில நாட்கள் கழித்து உதயாவின் திருமணத்திற்கு இரு வாரங்களிற்கு முன்பு ஒரு பிரபல நகைக்கடைக்குச் சிவா, கௌதம், காயத்ரி, லட்சுமி மற்றும் உதயா சென்றடைந்தபொழுது.
மற்ற அனைவரும் முன்னே செல்லத் தயங்கியபடி பின்னே மெதுவாக நடந்து சென்றாள் காயத்ரி
கௌதம் சிவாவின் காதில் ஏதோ கிசுகிசுக்க சிரித்தபடி “நான் பாத்துக்குறேன் டா ! “ என்றவன் காயத்ரியின் கையைப் பற்றி “நான் கூடவே இருப்பேன் டியர்! “ அன்பாய் சொன்னபடி அவளை அழைத்துச்செல்ல.
வேண்டிய நகைகளை உதயா தேர்வு செய்துவிட கடைசியாய் காயத்ரிக்குத் தேவையானதைச் சிவா தேர்வு செய்ய
சிறு பயம் கலந்த குரலில் “சிவா ! கண்டிப்பா உங்க மனசை மாத்திக்க மாட்டிங்களா? “ கெஞ்சுதலாய் கேட்க
“ம்ம் மறுபடி மொதல்லிருந்தா? “ புருவம் உயர்த்தி அவன் சிரிக்க
“உங்களுக்குன்னா தெரியும் எனக்குன்றதுனால தானே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க ! “ கோவித்துக்கொண்டு அவள் திரும்பிக்கொள்ள
ஏதும் பேசாது எழுந்து சென்ற சிவா சில நிமிடங்களில் திரும்பினான்.
‘கௌதம் கிளம்புவோம் ? கீழ்த்தளம் போகணுமாம் ! “ சிவா சொல்ல அவன் சொன்ன தளத்திற்கு அனைவரும் சென்றனர்.
அங்கே இருந்த நடுத்தர வயது ஆணிடம் “ஆசாரி ? “ கௌதம் கேட்க
“ம்ம்” என்ற ஆசாரி “ யாருக்கு ? “ என்றபடி அவர்களைப் பார்க்க.
“எனக்குக் காது குத்தனும் ! “ சொன்ன படி முன்னே சென்ற சிவா ஆசாரி சொன்ன இடத்தில் அமர்ந்தான்.
பதறிய காயத்ரியோ “சிவா ! என்ன செய்றீங்க? எனக்காகத் தானே வந்தோம்! “
புன்னகையை மட்டுமே பதிலாய் தந்தவன் தன் இருகாதுகளிலும் துளையிட்டு கடுக்கன் அணிந்துகொண்டான்!
ஆசாரி அவன் காதுமடல்களைத் துளையிட்ட பொழுதும் முகத்தில் புன்னகை மாறாது தன்னவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ‘உன் வலியை வாங்கிக்கொள்ள என்னால் முடியாது ஆனால் அதற்கீடாய் இருமடங்காக முன்னதாகவே பெற்றுக்கொண்டேன்! ‘
அவளோ அவன் தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இப்படி ஒன்றிக்கிரண்டாய் வலியைத் தாங்கும் தன்னவனைக் காணமுடியாமல் வாய்மூடி அழைத் துவங்கினாள்.
செக்கச்சிவந்த காதுகளில் அழகிய சிறிய ஒற்றை வைரக்கல்லைக் கொண்ட கடுக்கனுடன் புன்னகைத்தபடி அவன் எழ. நொடியும் தாமதிக்காமல் விரைந்து சென்று ஆசாரி முன் அமர்ந்தாள் காயத்ரி.அவள் கரங்களை ஆதரவாய் பற்றி அருகிலேயே இருந்தான் சிவா.
அவர் கூறிய கம்பியைத் தன் மூக்கின் அருகே எடுத்து வந்ததையோ, அது அவள் மூக்கினை குத்தி கிழித்து துளையிட்டதையோ, பின்னர் அதன் மிகச் சிறிய வைர மூக்குத்தியை அவர் அணிவித்ததையோ அவள் பொருட்படுத்தவில்லை வலியும் பெரிதாய் தோன்றவில்லை.
அவள் கவனம் முழுதும் ரத்த சிவப்பேறி இருந்த சிவாவின் காதுகளின் மேலேயே இருந்தது.
மூக்குத்தி அணிவித்து ஆசாரி விலக. சிவாவோ “ஆ….ச்சு ! “ சிறு பிள்ளையிடம் சொல்வதைப் போலப் பாசமாய் சொல்லி அவள் நெற்றியை தன் நெற்றியால் முட்டினான்.
“ரொம்ப அழகா இருக்கு காயு! குட்டி மூக்குக்குக் குட்டி மூக்குத்தி “ அதை ரசித்தபடியே கூறி அவளுடன் எழுந்தான்
“ஆச்சா சார் ? “ ஆசாரி கேட்க மீண்டும் அதே புன்னகையைச் சிந்தினான் சிவா
நேரே ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றவர்கள் தேவையானதை வாங்கிக்கொண்டு அமர. கௌதம் மட்டும் கோவம் கொஞ்சமும் குறையாமல் உர்ர் என்றிருந்தான்.
“டேய் கௌதம் என்னாச்சுன்னு இப்படி உம்முன்னு இருக்கே? “
“பேசாதே! “ கௌதமோ கோவமாய் எங்கோ பார்க்க
“சீ நீ என்ன சின்னப் பையனா டூ விட? “
“வேணாம்டா நல்லா வந்துரும் வாய்ல சொல்லிட்டேன்”
“பரவால்ல நீ பேசு போதும்! இப்ப என்ன ஆச்சு ? “
“இன்னும் என்னடா ? காயத்ரி உன் வற்புறுத்தலுக்காக மூக்கு குத்திண்டா! அவளை இம்ப்ரெஸ் செய்ய நீ காது குத்திகிட்டே நியாயம் !
என் காதையும் ஏண்டா குத்தவச்சே ? லட்சுமி என்ன மூக்கு குத்திக்கமாட்டேன்னு சொன்னாளா ? இல்லை உதயா மறுத்தாளா ? எதுக்குடா நான் கடுக்கன் போடணும்? “ அவனை முறைக்க
“பின்னக் காயு என்னால குத்திண்டா அவ மேல இருக்குற பாசத்தைக் காட்ட நான் காது குத்திண்டேன்! அப்போ என்மேல இருக்குற பாசத்துல நீ காது குத்திண்டது நியாயம் தானே ?“. ‘ இதெல்லாம் ஒரு விஷயமா ? ‘ என்பது போல் சொல்ல
“டேய்! உன் மேல பாசத்தைக்காட்ட நானா குத்திக்கணும் ! நீயா குத்தவச்சு பாசம்னு அடிச்சு விடக் கூடாது! “
பெண்கள் அனைவரும் சிரித்துவிடச் சிவாவும் சேர்ந்து கொண்டான்
“சரி சரி விடுடா எனக்காக இல்லை ! உதயாக்காக ஒரு காது லக்ஷ்மிக்காக ஒரு காது இது சரிவா ? “ அசால்ட்டாகக் கௌதமை கோர்த்துவிட்டு ஐஸ் கிரீமை உன்னத்துவங்கினான்.
கௌதமோ “ஊர்ல நிறைய பிரென்ட் வச்சிருக்கிறவனெல்லாம் நிம்மதியா இருக்கான்! ஒரே ஒரு பிரெண்டை வச்சுக்கிட்டு நான் படுற பாடு…அய்யய்யய்யயோ! “ சந்தானம் ஸ்டைலில் சொல்லிச் சிரித்தபடி சகஜமானான்.
உதயாவின் திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பு
பட்டுப் பாட்டி ஊரிலிருந்து ஒருவாரம் முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தார். அவர் மேற்பார்வையில் மேகிமாவின் கைவண்ணத்தில் விதவிதமாய் ஸ்வீட் காரமென ப்ரெத்யேகமாய் சீர் பட்சணங்கள் தயாராகியது.
வாசலில் பந்தலும் தோரணமும் வீடு முழுவதும் மாக்கோலமும் வீட்டைச் சுற்றி அலங்கார விளக்குகளும் மின்ன அந்த வெள்ளை மாளிகையைத் தங்க நிறத்தில் ஜொலித்தது.
தன் அறையில் தனக்கு வேண்டியவற்றைப் பெட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் உதயா அவளுக்கு உதவியாய் காயத்ரியும் இருக்க. ஆண்கள் இருவரும் ஹாலில் திருமணத்திற்காகப் போட்டிருந்த பட்டியலைச் சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.
கௌதம் சிந்தனையாய் “மூணு மாசம் நிமிஷமா ஓடிப்போன மாதிரி இருக்கு டா! “
சிவாவும் ஆம் என்று தலையசைத்த படி “ஆமான்டா! இப்போதான் அவங்க சம்பந்தம் பேச வந்ததுபோல இருக்கு”
கௌதமோ சற்று வருத்தம் தோய்ந்த குரலில் “ம்ம் இவ்ளோ நாள் கூடவே இருந்தா பெரிசா தெரியலை இப்போ 2 நாளில் வேற வீட்டு பொண்ணா ஆகப்போறா மனசு இன்னும் அதை அசிஸ்ப்ட் பண்ண மாட்டேங்குது. பரவால்லைன்னு பேசிக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டு இருக்கலாமோ ? “ என
சிவா கௌதமின் தோளில் கைபோட்டபடி ஆதரவாய் “புரியுது டா ஆனா என்னிக்கி இருந்தாலும் அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்துத்தானே ஆகணும்? பையன் நல்ல பையனா இருக்கான். அவன் அப்பா அம்மாவும் உதயாகிட்ட பாசமா இருக்காங்க! ஒரு ஒரு விஷயத்துக்கும் போன் பண்ணி அவ விருப்பத்தைக் கேட்குறாங்க. நல்ல குடும்பமா தெரியுது ! நாமளே தேடிப் போனாலும் இப்படி அமையணுமே ! “
கௌதம் முகம் சற்று மலர்ந்து “கரெக்ட் தான் சிவா ! சொல்லபோனா அத்தை மாமான்னு கூப்பிடாதே அம்மா அப்பான்னே கூப்பிடுன்னு சொல்லி இருகாங்க பார். நல்ல மனுஷங்க தான். இதே பாசம் அவமேல எப்போவும் இருந்தா போதும் “ என்று சொல்ல
சிவாவும் புன்னகையுடன் “கண்டிப்பா அவ நல்லபடியா சந்தோஷமா வாழ்வா ! டேய் தலைக்கு மேல் வேலை இருக்கு அதைக் கவனிப்போம் மனசை கொழப்பிக்காதே. இப்போ சந்தோஷமா அவளைக் கல்யாணம் பண்ணி கொடுக்றது தான் நம்ம ஒரே எண்ணமா இருக்கனும் புரியுதா ? “ என்றான்
“ம்ம் “ அரைமனதாய் தலையசைத்தான் கௌதம்.
உதயாவின் அறையிலோ
“உதயா இந்தா. “ காயத்ரி அவளின் டெட்டி பொம்மையைக் கொண்டுவந்திருந்தாள்.
கண்கள் விரியா ஆசையாய் பொம்மையை வாங்கிக்கொண்ட உதயா “ஹை இன்னிக்கி இதைக் கட்டிண்டு தூங்கவா ? “ ஆரவமாய் கேட்க.
“இன்னிக்கி இல்லை என்னிக்குமே உனக்குத்தான். வச்சிக்கோ ! “
“ஹே என்னடி இது ? வேண்டாம் இதுன்னா உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு எனக்குத் தெரியும் இன்னிக்கி ஒரு நாள் போதும் ! “
“ம்ம்ஹும் இதை எடுத்துண்டு போய் என் ஞாபகமா கூடவே வச்சிக்கோ ! “
மேலும் அவள் விடாது வற்புறுத்தப் பொம்மையைக் கொண்டுசெல்ல ஒப்புக்கொண்டாள் உதயா.
“சரி டி இனி தினமும் இதைக் கட்டிண்டு தூங்குறேன் ! சந்தோஷமா? “ உதயா புன்னகைக்க
“எதுக்கு ஸ்ரீவத்ஸன் என்னை உதைக்கவா? இது உன் கூடவே வச்சிக்கோ ஆனா ஸ்ரீவத்ஸனை கட்டிக்கோ ! “ காயத்ரி கண்ணடித்துக் கிண்டல் செய்யக் கன்னம் சிவந்தவளோ
“சீ போடி வாலு ! “ சிணுங்கியபடி “ஆமா அப்போ நீ தூங்கும்போது எதைக் கட்டிப்பே ? “ உலகமகா சந்தேகத்தைக் கேட்க
“அதுக்குத்தான் உங்க சிவா அண்ணா இருக்காரே ! “ இதெல்லாம் பெரிய சந்தேகமா என்பதுபோல் சாதாரணமாகக் காயத்ரி கூற
“நீ ரொம்ப தேறிட்டேடி காயு ! “ தோழியை அணைத்துக்கொண்டாள் உதயா
“எல்லாம் தானா வர்றது தான்…இருந்தாலும் நீ தான் இப்போ என்ன சீனியர் ஆகப்போரே ! “ மேலும் அவள் உதயாவை சீண்ட
பொருள் புரியாது விழித்தவளோ காயத்ரி அவள் காதில் அர்த்தம் சொன்ன நொடி குங்குமமாய் சிவந்தாள்.
சென்னையிலேயே பெரிய திருமண மண்டபம் ஒன்றில் மிகப் பிரமாண்டமாய் உதயா ஸ்ரீவத்ஸன் திருமண வைபவம் துவங்கியது.
ஊரில் அனைவரும் அதிசயித்துமூக்கின் மேல் விரல் வைக்கும்படி திருமணத்தை மிக மிகப் பிரமாண்டமாய் ஏற்பாடு செய்திருந்தனர் கௌதமும் சிவாவும்.
முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு பிறகு வரவேற்பு நிகழ்ச்சி என்று அனைத்திலும் நண்பர்கள் தூரத்து உறவினர்கள் தொழில் நண்பர்கள் எனக் கூட்டம் அலைமோதியது.
காலை முகூர்த்த நேரத்தில் உதயாவின் கழுத்தில் ஸ்ரீவத்ஸன் திருமாங்கல்யம் அணிவிக்கும் நேரம் மனநிறைவில் கௌதமும் சிவாவும் கண்கலங்கி விட்டனர்.
நண்பர்கள் திரளாய் மணமக்களைச் சூழ்ந்து கொண்டு அடித்த லூட்டியில் மண்டபமே அதிர்ந்தது. அன்றும் அதற்க்கு மறுநாளும் ஒவ்வொரு சடங்கும் விமர்சையாகவே நடந்தது.
மண்டபத்திலிருந்து கிளம்பும்பொழுது ஸ்ரீவட்சனின் தந்தை கௌதமையும் சிவாவையும் மனதார பாராட்டித் தள்ளினார்.
“சின்னப் பசங்களா இருந்தாலும் இத்தனை பொறுப்பாய் ஜாம் ஜாம்ன்னு கல்யாணத்தை நடத்திடீங்களே ! உதயா கொடுத்துவைத்த பெண்!. ரொம்ப சந்தோஷமா இருக்கு!,
இந்தக் காலத்துப் பசங்கள், எப்போதும் பிசினெஸ்னு சுத்துறீங்க நம்ம வழக்கம் எல்லாம் தெரியாதோன்னு நெனச்சேன், ஆனா இப்படி ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்துச் செய்து எந்த ஒரு குறையும் வைக்காமல் ஜமாய்ச்சுடீங்க ! “ என்றார் பெருமிதமாக.
“ஆமா நாங்க நெஜமாவே வியந்து போய்ட்டோம் ! “ என்றவாறே அவர்கள் அருகில் வந்தார் உதயாவின் மாமியார். கூடவே உதயாவும் காயத்ரியும்.
மேலும் அவர் ” அதுவும் முகூர்த்த நேரம் நானும் வேலையா இருந்துட்டேன். பாவம் பெண்ணுக்கு மடிசார் கட்ட யாரும் இல்லைன்னு மறந்து போனேன் ஆனா பாருங்கோ குழந்தை அத்தனை பாந்தமா கட்டிண்டு வந்தா நான் அசந்தே போயிட்டேன் !
இத்தனை வருஷம் ஆச்சு கல்யாணம் ஆகி எனக்கே அவ்ளோ பாந்தமா கட்டவராதுன்னா பாருங்கோ ! ” என்று சொல்லிக் கொண்டே,உதயாவை மெச்சுதலாய் பார்த்தவர் ” எப்படி கத்துண்டே மடிசார் கட்ட ? அந்த பட்டுப் பாட்டி சொல்லிக் கொடுத்தாளா ? ” என்று கேட்க
மிரட்சியாய் காயத்ரியைப் பார்த்த உதயாவோ அடிக்காத மொபைலை பார்த்தபடி ” அம்மா அவர் கூப்படறார் இதோ வரேன்! “ என்று நழுவ, காயத்ரியோ ‘அது தைத்த ரெடி மேட் மடிசார்’ என்று எப்படிச் சொல்வதெனத் தயங்க.
“அதுதான் ரெடிமேட்ஆச்சே !” என்று ஆர்வக்கோளாறாய் கௌதம் உளறச் சிவா அவன் காலை யாருக்கும் தெரியாமல் மிதிக்க. காயத்ரியோ சற்று கலவரமாக உதயாவின் மாமியாரைப் பார்க்க.
அவரோ ” அருமை அப்படி கூட வர்றதா தெரியாம போச்சே, எங்க தைச்சேள்? எனக்கும் விலாசம் கொடேன் மா ! “ என்று கேட்க. அப்போதுதான் காயத்ரிக்கு மூச்சே வந்தது.
“ம்ம்ம் அடுத்தது இனி உங்க இரண்டுபேர் கல்யாணம்தான் ! எல்லாருமா சேர்ந்து ஜமாய்ச்சுடலாம் ! “ என்று இருவர் தோளையும் தட்டிக்கொடுத்தார் ஸ்ரீவத்சனின் தந்தை.
அன்று உதயா புகுந்த வீடு புறப்படும் முன்னர் உதயாவை அழைத்துச் சில அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர் கௌதமும் சிவாவும்.
“நேரமாச்சாம் உதயா ராகுகாலத்திற்கு முன்னாடி கிளம்பணுமாம் ! “ என்றபடி அங்கே வந்த ஸ்ரீவத்ஸன் “என்ன ரகசியம் இங்கே ? நானும் இனி உங்க கேங் தானே, என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கோங்க அண்ணா“ என்று சிரிக்க
“கேங்கா ? ஹா ஹா…” என்று சிரித்த கௌதமோ
“ ரகசியமெல்லாம் ஒன்னும் இல்லை ஸ்ரீவத்ஸா, உதயா கிட்ட என்ன சொன்னோம்னா , உன் கண்ணில் ஒரு சொட்டு தண்ணி வரக் கூடாது, வெங்காயம் கூட மாப்பிள்ளை தான் நறுக்கணும், மீறி உன்னை அழவைச்சா ஒரு கால் போடு போதும். அங்க வந்து நாங்க மாப்பிள்ளையை ரொம்ப பாசமா கவனிப்போம் என்று சொன்னோம் அவ்ளோதானே டா சிவா? “ விஷமமாய் சிரித்தபடி சொல்ல
கலவரமாக ஸ்ரீவத்ஸனோ “ஐயோ அண்ணா ! நான் அழாம இருக்கணும்னு சொல்லுங்க! இவ கிட்டேந்து என்னைக் காப்பாத்துறது தான் உங்க முழுநேர வேலையா இருக்கும் பாருங்க! “ என்று பாவமாய் சொல்ல
உதயா வரிந்து கொண்டு “ ஏய் என்ன நக்கலா வீட்டேன்னு வை “ என்று ஸ்ரீவத்ஸனை பார்த்துப் போலியாய் எகிற
“உதயா என்ன இது?” என்று கௌதம் முறைக்க
“சும்மா லுலுலாய்க்கு ! “ என்று நாக்கை துருத்தி காட்டிவிட்டு ஸ்ரீவத்ஸனின் தோளில் சாய்ந்துகொண்டு புன்னகைத்தாள் உதயா.
உதயா புகுந்த வீடு செல்லக் காரில் ஏறும் நேரம் அவள் எதிரில் தன்னை கட்டுப்படுத்தி வைத்து வைத்துக்கொண்டு புன்னகையுடன் வழியனுப்பிய கௌதம் வீட்டிற்குத் திரும்பியவுடன் கண்கலங்கி அமைதியாய் அமர்ந்துவிட்டான்.
அருகிலிருந்த பட்டுப் பாட்டி கௌதமின் தலையைப் பாசமாய் கோதியபடி
” கண்ணா…உதயா நல்லா வாழணும்னு பகவானை சேவிச்சுக்கோ. இப்படி அழக் கூடாது கண்ணைத் துடைப்பார்ப்போம்! “அவன் கண்ணில் வழியும் நீரைத் துடைத்துவிட்டவர் மணக்க மணக்க ஆவிபரக்கும் பனங்கற்கண்டு பாலை மூவருக்கும் கலந்து கொடுத்தார்.
பாட்டியோ இப்பொழுது கௌதம் சிவா இருவரையும் பார்த்து
“நேற்று லிருந்து எவளோ அலைச்சல் வேலை இரண்டுபேரும் களைச்சு போயிருக்கேள்! போங்கோ போய் எல்லாரும் நல்லா ஓய்வெடுங்கோ சரியா? நீயும் போமா காயத்ரி ! ” என்று அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்
ஆனால் மூவருமே உறக்கம் வராமல் தவிக்கச் சிவா வாட்ஸப்பில் கௌதமிடமும் காயத்ரியிடமும் “ எல்லாரும் ஒண்ணா மொட்டை மடியில் தூங்கலாமா ? “ என்று கேட்க
” சரி “என்று அவர்கள் இருவரும் பதிலளித்தனர்!
மாடியில் நிலவைப் பார்த்தபடியே படுத்துக் கொண்டு
” இப்போவே வீடு வெறிச்சோடி போன மாதிரி இருக்கு” என்று காயத்ரி தழுதழுக்க
சிவாவும் ” ஆமா உதயா இந்த வீட்டுக்கு வந்த அப்புறம் தான் எனக்கு வாழ்க்கையில் மறுபடி சந்தோஷமே வந்தது, என் தங்கை இல்லாத குறையை அவதான் தீர்த்து வச்சா ! என்னமோ பேசாம ஸ்ரீவத்ஸனை வீட்டோடு மாப்பிள்ளையா கேட்டு இருந்து இருக்கனும் ச்சே தப்பு பண்ணிட்டேன் ! ” என்று புலம்ப
கௌதமின் நிலையோ பாவமாக இருந்தது, விடாமல் கண்களிலிருந்து நீர் வழியத் தன்னை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான், எதுவும் பேசாமல் சிவாவை நெருங்கிப் படுத்துக்கொண்டான்.
மெல்ல அவன் விசும்பும் சத்தம் கேட்டு ” கௌதம் ப்ளீஸ்” என்று அவனை ஆறுதலாய் தோளில் சாய்த்துக் கொண்ட சிவா மெல்ல அவன் முதுகை வருடிக் கொடுத்துச் சமாதானம் செய்து உறங்க வைத்தான்.
சற்று தொலைவில் படுத்து இருந்த காயத்ரியும் கண்கலங்கியபடி மெல்லச் சிவாவை நெருங்கி அவனின் முதுகை அணைத்தவாறு உறங்கி விட்டாள்
இவர்கள் நிலை இப்படி இருக்க அங்கு உதயாவோ முதல் இரவு அறையில் ” டேய் எல்லாம் உன்னால்தான், அவசரமா கல்யாணம் செஞ்சு என்ன கூட்டிண்டு வந்துட்டே எனக்கு இப்போவே அவங்களை பார்க்கணும் இல்லை எனக்குத் தூக்கமே வராது! “ என்று ஸ்ரீவத்ஸனை படுத்தி எடுத்து விட்டாள்.
“இனி ஒரு ஒரு வாரக் கடைசியும் அங்க கூட்டிண்டு போறேண்டி, எப்போ வேணும்னாலும் உடனே போய்ப் பார்க்கலாம்,கோவப்படாதே ப்ளீஸ்” என்று என்று கெஞ்சிக் கெஞ்சி அவன் இல்லற வாழ்வைத் துவங்குவதற்குக்குள் கண்விழி பிதுங்கி விட்டான்
மறுநாளே இருப்புக் கொள்ளாமல் பாட்டியும் ஊருக்குச் சென்று விட இவர்களது வாழ்க்கை வழக்கம்போல் தொடர்ந்தது, கல்லூரியில் தினமும் உதயாவை சந்தித்தாலும் வீட்டில் அவள் இல்லாத வெறுமை பெரிதாகவே தோன்றியது காயத்ரிக்கு. அவ்வப்போது உதயாவை எண்ணி ஒருவர் மாற்றி ஒருவர் அழுவது மற்ற இருவரும் தேற்றுவதாய் நாட்கள் உருண்டோடியது.