NNA19

NNA19

நீயும் நானும் அன்பே

அன்பு-19

 

நவீனா வீட்டை அடைவதற்குள் நான்கு முறை அழைப்பு வந்து ஓய்ந்திருந்தது.  அலைபேசியை சைலண்ட் மோடிலும் போட முடியாத நிலை பெண்ணுக்கு.

 

கணவனோ, மாமியாரோ அழைத்து, அலைபேசி சைலண்ட் மோடில் இருந்து எடுக்காமல் விட்டுவிட்டால் என்னவோ, ஏதோ என்று பதறிவிடுவார்கள் என்பதால் பொறுமையோடு வீடு வந்து சேர்ந்திருந்தாள் நவீனா.

 

அலமேலு, பெண்ணிற்கு வேண்டியதை பார்த்து, பார்த்து செய்தாலும், பெண் எதிலும் ஈடுபாடில்லாமல் இருந்தாள்.

 

பசிக்குகூட உண்ணாமல் இருப்பவளை, வற்புறுத்தி உண்ணச் செய்வதை, தனது இன்றியமையாத பணியில் ஒன்றாக ஏற்றுக்கொண்டிருந்தார் அலமேலு.

 

சங்கர் தன்னவளைப் பற்றி அறிந்திருந்தமையால், அலமேலுவிற்கு அவ்வப்போது அழைத்துக் கூறிய வண்ணமிருந்தான்.

 

“அக்கா, நீங்க அவளை நல்லா பாத்துப்பீங்கனு தெரியும்!  ஆனாலும் அவ இப்ப இருக்கிற டென்சன்ல… சரியா சாப்பிடாம, தூங்காம, ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா…! அதனால நான் அங்க வர்றவரை… எனக்காக கொஞ்சம் நல்லா பாத்துக்கங்க!, என்று நேரம் கிட்டும்போதெல்லாம் அழைத்து, மனைவியின் நலனை எண்ணி அலமேலுவிடம் பேசியிருந்தான் சங்கர்.

 

“நம்ம நவீனாவை கவனிக்கறதைவிட வேற எனக்கு என்னப்பா பெரிய வேலை.  அதனால, நீ வருத்தப்படாம தைரியமா உன் உடம்பை சரியாக்கிட்டு வர வேலைய மட்டும் பாரு.  நீ இங்க வர்றவரை உனக்கு அந்த கவலையே வேணாம், என்று உறுதியளித்தமைக்கு ஏற்ப அலமேலு விசுவாசத்தோடு பெண்ணை கவனித்துக் கொண்டார்.

 

அத்தோடு விடாமல் நவீனாவிற்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி, ஓய்ந்துபோய் வருபவளை உத்வேகப்படுத்தினார் அலமேலு.

 

“எல்லாம் நம்ம சங்கரு தம்பிக்கு சரியாகி, ராசா கணக்கா பழையமாதிரி நடந்து வந்துரும்.  நீ அதுக்காக மனச போட்டு உழட்டாம நல்லா சாப்பிடு!, என்று நவீனாவிற்கு தன்னால் இயன்றவரை கூறினார்.

 

ஆனாலும்,  தன் துறை சார்ந்த மருத்துவ இனம், ‘மூட்டில் உண்டான பிசகை சரிசெய்து பழையவாறு நடக்கச் செய்வது எளிதில் நடவாத காரியம்.  குறிப்பாக மூட்டு முற்றிலும் சிதைந்த நிலையில் இருக்கும் சங்கரின் வலது மூட்டின்நிலை பழையவாறு மீள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் குறைவே என்று தன்னிடம் சொன்னதை மனதோடு வைத்துக் கொண்டு, ஊமையாக அழுதிருந்தாள் நவீனா.

 

ஊனமான ஒருவனோடு வாழப் பிடிக்காமல் அல்ல!

 

கம்பீரமாக நடந்து திரிந்தவனை, திருமணம் செய்து… தன்னால்தான், தன் கணவன் இதுபோன்ற எதிர்பாரா நிகழ்வுகளைச் சந்தித்ததோடு, இன்று காலின் மூட்டை இழந்து, நடக்க முடியாமல் இருக்கிறானோ என்கிற தாழ்வு எண்ணம் சமீபத்தில் எழுந்ததில் இருந்து மனதோடு வைத்து, பெண் மருகுகிறாள்.

 

தன்னவனுக்கு எங்கிருந்து திடீரென்று இத்தகைய பாதிப்பைத் தரக்கூடியவர்கள் உருவானார்கள்?  தன்னாலா?  இல்லை தற்போது அடிக்கடி அலைபேசியில் அழைத்து வரம்பற்ற பேச்சுக்களை வரைமுறையில்லாமல் பேசும் நபரின் கீழ்த்தரமான செயல்களாலா?

 

இல்லை வேறு யார் இதற்கு காரணம்? என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல், குன்றளவு குழப்பத்தோடு இருந்தாள் பெண்.

 

அலைபேசி விடயம்பற்றி யாரிடமும் இதுவரை வாயைத் திறந்தாளில்லை.

 

உயர்வாக எண்ணி, அவனைப் பின்பற்றி தானும் ஒரு மருத்துவராக இன்று இந்நிலைக்கு உருவாகிவரக் காரணமானவன், இத்தனை கீழ்த்தரமானவனா? என்று எண்ணும்போதே மனதை ஏதோ செய்தது. அருவெறுப்பாக பெண் உணர்ந்த தருணமது!

 

தங்கள் வீட்டில் இருக்கும்வரை கண்ணியமான முறையில் நடந்து கொண்டவன், மருத்துவம் படிக்க வந்த காலத்திலும், தன்னிடம் நல்ல முறையில் கண்ணியம் தவறாது நடந்து கொண்டவனுக்குள் இத்தகைய வக்கிர எண்ணங்கள் இருந்ததை, அவன் தன்னிடம் பகிர்ந்துகொள்ளும் முன்வரை பெண் அறிந்தாளில்லை! உணர்ந்தாளில்லை!

 

உறங்கிக் கொண்டிருந்த, மனஉணர்வுகளை எந்த தயக்கமும் இல்லாது, அவன் வெளிப்படுத்தத் துவங்கிய பிறகே… பெண், அவனிடம் இருந்து முற்றிலுமாக ஒதுங்க எண்ணி, சங்கரை திருமணத்திற்கு வற்புறுத்தியிருந்தாள்.

 

இல்லையெனில், தந்தை தன்னை வற்புறுத்தி ஒன்பதாம் வகுப்பில் படிக்க கட்டாயப்படுத்தி ஊருக்கு அனுப்பியது போன்றே, சாந்தனுவிற்கும் தன்னை கட்டாயத் திருமணம் செய்து கொடுத்துவிடுவார் என்பது பெண்ணுக்கு திண்ணம்.

 

பெண்ணுக்கு திருமணத்திற்கு அவசரமில்லை என்றாலும், தற்போது போன்ற தக்க தருணத்தை தவறவிட்டுவிட்டால், தன் எண்ணத்திற்கு மதிப்பு கொடாமல், பெரியவர்களது மனம்போல விடயம் நடந்துவிடலாம் எனக் கணித்தே, சங்கர் வீட்டாரிடம் பிடிவாதமாகவே திருமணத்தை நடத்திவிடுமாறு கூறியிருந்தாள் நவீனா.

 

திருமணத்திற்கு முன்புவரை பெண்ணின் மனதை மாற்ற அவ்வப்போது விடுதிக்கு அழைத்துப் பேசிய சாந்தனுவை கத்தரித்தவள், சங்கரிடம் எதுவும் அவனது கீழ்த்தரமான எண்ணங்களையும், பேச்சுக்களையும் பற்றிக் கூறாது திருமணத்திற்கு அவசரப்படுத்தியிருந்தாள்.

 

திருமணம் முடிந்து சங்கருக்கு காலில் பிரச்சனை வரும் முன்புவரை, தன்னை அழைத்துப் பேசாது… அடங்கி, ஒதுங்கி இருந்தவன், சங்கருக்கு நடந்த விபரீதத்திற்குப் பிறகு… ஏதோ அசட்டுத் தைரியத்தில்… நாளொரு முறை துணிச்சலோடு தவறாமல் அழைத்துவிடுகிறான்.

 

ஆரம்பத்தில் பதிந்து வைத்திருந்த எண்ணிலிருந்து சாந்தனு நவீனாவிற்கு அழைத்தால், பெண் அழைப்பை ஏற்காமல் இருக்கிறாள் என்று ஒவ்வொரு முறையும் வெவ்வேறு குறிப்பிட்ட ஐந்து எண்களில் இருந்து மாறி மாறி அழைப்பதை வழக்கமாக்கியிருந்தான்.

 

“என்ன டாக்டர்?  உங்க ஹீரோ நடக்கக் கூடிய வாய்ப்பை இழந்துட்டதா ஆர்த்தோஸ் எல்லாம் கைவிரிச்சிட்டதா சொல்றாங்க? உனக்குத் தெரிஞ்சிருக்குமே? நீ என்ன நினைக்கிற?, என்று நக்கலாக பேசிவிட்டு

 

“…நளாயினி மாதிரி காலத்துக்கும் காலொடிஞ்சவனை தூக்கி சுமக்கப் போறீங்களா டாக்டர்?”, என பெண்ணின் முடிவை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு வினவினான்.  பெண் அமைதியாக இருக்கவே… 

 

“உன் கஷ்டத்தை துடைச்சி அதுல இருந்து உன்னை மீட்டு வர நான் இருக்கேன்!  நான் உனக்காக எப்பவும் வயிட் பண்றேங்கறதை மறந்துற வேணாம்!, என்று முதன்முறை அழைப்பை ஏற்றபோது பேசத் துவங்கியவனை

 

“அது என் குடும்ப விசயம்!  அதைப் பத்தி உங்கிட்ட பேச எனக்கு பிரியமில்லைங்கறதைவிட… நேரமில்லை!  இனி எனக்கு போன் பண்ற வேலை வச்சுக்காத! மரியாதை கெட்டுப் போயிரும்!, என்று பேச்சை வளர்க்க பிரியமில்லாது வைத்திருந்தாள் நவீனா.

 

அடுத்த முறை அழைத்தவன், “அத்தை மக ஒன்றரைக் கால் புருசனோட கஷ்டப்படறாளேன்னு இரக்கப்பட்டு வந்து பேசுனா…! ரொம்பப் பண்ற நவீனா! மரியாதையில்லாம நீ பேசறதே எனக்கு ஒரு கிக்குதான். அதுனால அப்டியே பேசு, என்று சிரிப்போடு கூறியவன்

 

“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை டார்லிங்…! அவனை வேணானு சொல்லிட்டு வந்தா, உன்னை ஏத்துக்க பெருந்தன்மையோட இந்த மச்சான் தயாரா இருக்கேன்!  என்ன சொல்ற?, என்றவனை  எதிரில் நின்றிருந்தால் பெண் எரித்திருப்பாள்.

 

“ரொம்ப நன்றி டாக்டர்.  உங்க பெருந்தன்மைய ஏழை எளியவங்க, அன்னாடங்காச்சிங்க மாதிரி உள்ள மக்களுக்கு ஃபீரி சர்வீஸ் மாதிரி பண்ண மனசில்லைன்னாலும், டெடிகேட்டடா சர்வீஸ் பண்றதில காமிங்க! 

 

அதைவிட்டுட்டு… இந்த மாதிரி கேவலமான சர்வீஸ் எல்லாம் பண்ணி…. உங்க கையாலயே உங்க தலையில மண்ணை அள்ளிப் போட்டு, கேவலமா… அசிங்கப்பட்டுறாதீங்க!, என்று கோபமாக கூறியவள்

 

“…. குறிப்பா உங்க சர்வீஸ் எங்க வீட்டுல உள்ள யாருக்கும், எப்பவுமே தேவைப்படாது.  அதனால இனி இப்டிப் பேசறதை நிறுத்திக்கங்க! மீறி தொடர்ந்தா நடக்கப்போற எதுக்கும் யாரும் பொறுப்பெடுத்துக்க முடியாது!, என்று பேசிவிட்டு வைத்திருந்தாள்.

 

அடுத்தமுறை பேசியவன், “ரொம்பக் கெஞ்சறதால மிஞ்சுறியே நவீனா!  இந்த மாதிரி கைப்பட்ட பூவ யாராவது யூஸ் பண்ண நினைப்பாங்களா?

 

ஆனாலும் நான் உன்னை விடாம தேடி வர்றேனா அதுக்கு என்ன காரணம்? எவ்வளவு விரட்டுனாலும், திட்டுனாலும் உன்னைத் தேடித்தேடி வர்றேனா அது நான் உம்மேல வச்சிருக்கிற லவ்னாலதான்.  என்னைப் புரிஞ்சிட்டா உன்னை ராணி மாதிரி வச்சிக்குவேன், என்றவன்

 

“அத்தை பொண்ணுங்கறதோட, ஆசைப்பட்ட பொண்ணுங்கறதால மட்டுந்தான் நீ என்னை எவ்வளவு உதாசீனப்படுத்துனாலும் உன்னை விடாமத் தொந்திரவு பண்றேன். என் பெருந்தன்மைய தப்பாவே புரிஞ்சுக்கறீயே நவீனா?, என்று பேச

 

“மனுசத்தன்மையே இல்லாமப் போயிருச்சா உனக்கு.  எந்த மாதிரி சூழல்ல நான் இருக்கிறேன்னு தெரிஞ்சுகிட்டு வந்து, உதவி எதுவும் பண்ண மனசில்லைனாலும் ஒதுங்கிப் போகாம, இப்டி விடாமத் தொந்திரவு பண்றியே?  நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?, என்று கேட்க

 

“அதை புரூஃப் பண்ணத்தான எனக்கு ஒரு வாய்ப்பு கொடுன்னு கேக்கறேன் நவீனா, என்று குதர்க்கமாகப் பேசியவனை

 

எதிர்முனையில் இருந்தவனின் பேச்சில் இருதயம் நடுங்க, அது வார்த்தைகளில் தெரிய,

 

“கேடுகெட்டவன்னு கேள்விப்பட்டுருக்கேன்.  ஆனா இப்பதான் அந்த மாதிரி ஒரு ஆளை என் வாழ்நாள்ல சந்திக்கறேன்.  எம்புருசன் படுத்து இருக்காருங்கற தைரியத்திலதான இவ்வளவு பேசுற…! இன்னிக்கு ஒரு வார்த்தை இதைப்பத்தி சொன்னாலும், அடுத்த அரைமணிநேரத்தில நீ உயிரோட இருக்கமாட்ட… பாத்துக்கோ…! ரொம்பத் தைரியமானவனா இருந்தா எம்புருசங்கிட்ட நேருல வந்து மோது.  இல்லை முடிஞ்சா வந்து பேசு. அதைவிட்டுட்டு பொட்டை மாதிரி போனைப் போட்டு எங்கிட்ட தத்துப் பித்துன்னு உளறிகிட்டு இருந்த, நேருல வந்து என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, என்று கோபத்தில் கண்முன் தெரியாமல் கத்திவிட்டு வைத்திருந்தாள்.

 

இத்தனை பேசியும், விடாது தொந்திரவு தருபவனைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற யோசனையோடு இருந்தவள், அன்று மாலையே காரைக்குடிக்கு அலமேலுவோடு… மனம் சொன்ன முடிவினை ஏற்றுக் கிளம்பியிருந்தாள்.

======

செல்லும் வழியெங்கும் யோசனையோடே சென்றவள், மருத்துவமனையை அடைந்ததும், சற்றுத் தேறியிருந்த கணவனைக் கண்டு சாந்தமடைந்திருந்தாள்.

 

“இப்ப எப்டி இருக்கு?, என்று வந்தவுடன் வழக்கமான வினாவைக் கேட்டவளை

 

அருகில் வருமாறு அழைத்தவன், “மதியந்தான இதைப்பத்தி எங்கிட்ட கேட்ட… நானும் சொன்னேன், என்றவன்

 

“கை (காயம்)ஊண்ட்ல இருந்து புழுவா விழுந்ததை இமைக்கிற நொடியில சரி பண்ண ரமண மகரிஷியா நானு!  அரைநாள்ல எம்மூட்டு சரியாகிறதுக்கு நான் மகரிஷி இல்லை டாக்டரு!  சாதாரண மனுசன்!, என்று சிரித்தவாறே கூறியவன்

 

அருகில் வந்தளின் கைபற்றி மார்போடு வைத்துக் கொண்டான்.  தன் இதயத்துடிப்பை பெண்ணின் அண்மை மற்றும் தொடுதலால், இன்பமாக்கிக் கொண்டவன், “ரொம்ப டயர்டா தெரியறடீ…! இன்னிக்கு நைட் வீட்டுக்குப் போயி ஸ்டே பண்ணு.  அம்மா பாத்துக்குவாங்க!, என்றவனை

 

“முடியாது…! வீட்டுல போயி ரெஸ்ட் எடுக்க எதுக்கு நான் மெனக்கெட்டு கிளம்பி வரணும்.  நான் இங்கதான் இருப்பேன்!, என்று அடம்பிடிக்கும் குழந்தை தாயை விட்டு நகர பிரியமில்லாமல் காலைக் கட்டிக் கொள்வதுபோல, கணவனை அண்டியே அமர்ந்திருந்தாள்.

 

பெண்ணின் பேச்சின் தொனியோடு, நடவடிக்கையைக் கண்டு,  நவீனாவின் நிலையைப் புரிந்து கொண்டவன் பேசத் துவங்க… அங்கு வந்த தாயின் வரவில் நிமிர்ந்து தாயை நோக்க.. ‘மேற்கொண்டு எதுவும் பேசாதே எனும் தாயின் சைகையான செயலைக் கண்டு, மேற்கொண்டு பேசாமல் அமைதியாகியிருந்தான் சங்கர்.

 

அங்கு வந்திருந்த சசிகலா ‘மகனிடம் எதுவும் பேசாது இரு கண்சாடை காட்டிவிட்டு, மருமகளிடம் நலம் விசாரித்த சிறிதுநேரத்தில் அவரே வீட்டிற்கு கிளம்பியிருந்தார்.

 

ஒன்பதே முக்காலுக்கு மருத்துவமனைக்கு வந்தவளுக்கு பத்தரை மணிக்குமேல் அவள் வேண்டாத அழைப்பு மீண்டும் வரவே, அலைபேசியை எடுத்துப் புதிய எண்ணைக் கண்டவுடன், கணவனிடமே நீட்டியிருந்தாள்.

 

யோசனையோடு அலைபேசியை வாங்கி அமைதியாக காதில் வைத்தவன், யாரென்று தெரியாமல் முகமன் கூறி பேசத் துவங்குமுன், எதிர்முனை பேசியிருக்க பேச்சு முறை சற்று மாறியிருக்க அமைதியாகக் கேட்டிருந்தான்.

 

“என்ன சொல்றாரு உன் ஹீரோ?  எங்கிட்ட இல்லாதது அப்டியென்ன அவங்கிட்ட இருக்குதுன்னு அவனைக் கட்டிக்கிட்ட?, என்று பேசியவனின் குரலைக் கொண்டு யாரென்பதை நொடியில் கண்டு கொண்டவன்

 

அதற்குமேலும் பெண்ணிடம் பேசுவதாக எண்ணி, தன்னிடம் பேசியவாறு இருந்தவனின் பேச்சை இறுகிய முகத்தோடு கேட்டிருந்தான்.

 

“என்னடீ உம்புருசன் பக்கத்துல இருக்கானா?  அதுதான் திட்டக்கூட முடியாம வாயடைச்சு இருக்கியா?, என்று சாந்தனு கேட்க… சட்டை செய்யாமல்,  பெண்ணிடமே போனைக் கொடுக்க கையை நீட்டியிருந்தான் சங்கர். 

 

கண்கள் கலங்கியிருந்தாலும், அதைக் கணவனிடம் காட்டாது வாங்கிக் கொண்டவள், அழைத்தவனின் பேச்சைக் கேளாமலேயே, கணவன் முன் அழைப்பைத் துண்டித்துவிட்டு, கணவனுக்கு வேண்டியதை அவளாகவே பார்த்துப் பார்த்துச் செய்தாள்.

 

தன் மனநிறைவிற்காக தாதியாக மாறி கணவனைக் கவனித்துக் கொண்டாள்.  சங்கர் எவ்வளவோ மறுத்தும் பெண் காது கொடுத்து கேட்டாளில்லை.

 

தான் சென்ற நாள் முதல் அன்றுவரையுள்ள கேஸ் ஹிஸ்டரியை எடுத்துப் பார்க்கக் துவங்கினாள்.

 

அதுவரை இருந்த மனநிலை மாறிய சங்கர், சூழல் சரியில்லாததால் மருத்துவமனையில் வைத்துப் பேச பிரியமில்லாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

 

பெண்ணிடம் அவளது அலைபேசியை தருமாறு மீண்டும் கேட்டு வாங்கியவன், எப்போது முதல், எவ்வளவு நேரம் புதிய எண்களில் இருந்து பேசியிருக்கிறான் என்பதை மட்டும் மனக்கணக்கில் எடுத்துவிட்டு, மனைவிடமே அலைபேசியை திருப்பிக் கொடுத்திருந்தான்.

 

விடிவதற்குள் சாந்தனு தற்போது எங்கு தங்கியிருக்கிறான் என்பதை நண்பர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டவன், சாந்தனுவின் தினசரி நிகழ்வு பற்றியும் அறிந்து கொண்டு அமைதியாகியிருந்தான்.

 

கடந்த ஒன்றிரண்டு நாளாக ஒற்றைக் காலால் தாங்கியபடியே அவனது பணிகளை கவனித்துக் கொண்டவன், யாரையும் எதற்கும் தொந்திரவு செய்தானில்லை.

 

ஆனால் மதுரையில் இருந்து வந்த மனைவியின் வாடிய முகத்தைக் கண்டு ஏதோ சரியில்லை என்று உணர்ந்திருந்தவன், இரவில் படுக்கைக்கு செல்லும் வேளையில் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான்.

 

ஆனால், அதற்கு முன்பே பெண்ணிற்கு வந்த அழைப்பை அவள் ஏற்காது, அலைபேசியை தன்னிடம் கொடுத்ததில் இருந்து, தான் கேட்ட விடயங்கள் மூலமாக, சில விடயங்களை யூகித்திருந்தான். 

 

மனைவியின் மனஉளைச்சலான முகபாவனைக்கு, ‘இது போன்ற அழைப்பும் காரணம் என்பதைப் புரிந்து கொண்டிருந்தான்.

 

படுக்கைக்குச் செல்லுமுன் மனைவிடம் கல்லூரி, படிப்பு இதரவற்றைக் கேட்டறிந்தவன், “தனியா அங்க இருக்க கஷ்டமா இருக்கா?, என்று கேட்க

 

“ம்.., என்று தலையாட்டலை மட்டும் பதிலாக்கியவளை அருகில் வருமாறு அழைத்து,

 

“எல்லாம் சீக்கிரமா சரியாகிரும்.  கொஞ்ச நாள் பொறுத்துக்கோடீ!, என்று நெற்றியில் இதழ் பதித்து பெண்ணின் முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான்.

 

கணவனின் செயலில் அதளபாதாளத்தில் இருந்து மீண்டு வந்ததுபோன்ற நிலைக்கு வந்தவள், பழைய நிலைக்கு தன்னை மீட்டுக் கொள்ள முயன்றாள்.

 

அதன்பின் இலகுவான சில பேச்சுகள், கிண்டல்கள் என்று செல்லவே, இருவருமே மருத்துவமனை என்பதை மறந்து மகிழ்ச்சியோடு இருந்தனர்.

 

“என்ன பார்மரூ… இங்க இருக்கற நர்ஸ்ஸெல்லாம் என்னைப் பாத்ததுல இருந்து உம்முனு இருக்கறாங்க… நான் வந்ததுல எல்லாத்துக்கும் வருத்தமோ?, என்று கணவனைக் கிண்டலாகக் கேட்க

 

“எனக்கு என்னடீ தெரியும்?, என்று அப்பாவியாகக் கேட்ட சங்கரை

 

“வாம்மா, போம்மானு பவ்வியமா நீங்க அவங்ககிட்ட பேசறதென்ன…?  சார்… மோர்னு… போரடிக்கிற அளவுக்கு உங்களை அவங்க வந்து கவனிக்கறதென்ன? 

 

சிக்கா வந்து அட்மிட் பண்ண மாதிரி தெரியல்ல… நல்லா என்ஜாய் பண்ற மாதிரி தெரியுது?, என்று சிரித்தவாறே நவீனா கேட்க

 

“நீ சீக்கிரமா படிப்பை முடிச்சிட்டு வா… ஹாஸ்பிடல் ஒன்னைக் கட்டி… இவங்களையெல்லாம் அங்க வேலைக்கு கூப்பிடறதா இப்பவே அக்ரிமென்ட் பேசிட்டேன், என்று சங்கரும் பதிலுக்கு பேச

 

“அடக்கடவுளே… இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியல, என்று பொய்க்கோபத்தோடு பெண்ணும் பேச… என்று நேரம் சென்றதே தெரியவில்லை.

 

அன்றைய மனைவியின் நிகழ்வுகளை முன்பே கேட்டறிந்திருந்தவன், மனைவியின் நிலை உணர்ந்தவனாக, “சரி… போயி தூங்கு… நாளைக்கு பேசிக்கலாம். ரொம்ப டயர்டா இருப்ப, என்று பெண்ணை உறங்கக் கூறிவிட்டு தானும் படுத்திருந்தான்.

 

அழைப்பைப் பற்றியும், அழைத்தவனைப் பற்றியும் யோசிக்க, அதிகபட்சமாக ஒரு மணித்தியாலம் அவகாசம் எடுத்துக் கொண்டவன் உறங்கியிருந்தான்.

///////////

 

அடுத்த நாள் காலையில் தந்தையிடம், தங்கள் அளித்த புகாருக்கு காவல்துறை எடுத்த விசாரணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து வருமாறு கூறி அனுப்பியிருந்தான்.

 

கணேசனை காவல்துறை பிடித்து விசாரித்ததில் மூன்றாவதாக ஒரு நபரைக் காட்டி, ‘அன்னிக்கு உங்களை அப்டிப் போட்டு தியேட்டர்ல அடிச்சவனை எனக்கென்னனு விட்டுட்டியேப்பா… நீயெல்லாம் என்ன மனுசன்.  சோத்துல உப்பு போட்டுத் திங்கறவனுக்கு சூடு சுரனை வேணும் தம்பி.  இப்டி விட்டுட்டுத் திரிஞ்சா போற வாரவன் எல்லாம் கை வச்சிரப்போறான்’, எனும்  தூண்டுதலினால் பண்ணையில் சங்கரை தாக்குதல் நடத்தியதாக, காவல்துறை வாயிலாக தந்தை வந்து கூறியதை அறிந்து கொண்டிருந்தான் சங்கர்.

 

அவன் மூலமாக மற்றவர்களை விசாரிக்க, ஒவ்வொருவரும் பண்ணையில் வேலையின் போது, மற்றும் வேறு எதாவது சூழலில் சங்கரிடம் மோதியதோடு, பெரியளவில் பாதிப்படைந்தவர்கள் என்பதும் தெரிய வந்ததாகக் கூறியிருந்தார்.

 

இருவரைத் தவிர மற்ற அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதையும் அறிந்து கொண்டான்.

 

இருவருக்கு இலேசான காயமாதலால், மூன்று தினங்களுக்கு முன்பு இருவர் மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டதையும் அறிந்துகொண்டான்.

 

‘உங்க மகன்மேல எந்தத் தப்பில்லைனாலும், தறுதலைங்களுக்கு நல்லது கெட்டது தெரியுமா?  தன்னோட தப்பையே அவங்களுக்கு புரிஞ்சுக்க முடியாத தற்குறிங்க அவனுக…

 

வாங்குன அடியைவிட… நாளுபேரு பாக்க பொது இடத்துல வச்சு அடிச்ச கோபம், இப்டி… எல்லாரும் சேந்து வஞ்சம் வச்சு ஒன்னுகூடி இப்டி செஞ்சிட்டாங்க, என்று விளக்கியிருந்தது காவல்.

 

சங்கரை பழிதீர்க்க, எந்த பணமும் உபகாரமாக யாருக்கும் யாராலும் வழங்கப்படவில்லை என்றும், தகுந்த ஆதாரங்கள் இதுவரை சிக்காத நிலையில் சந்தேகத்தில் பெயரில் விசாரிக்க மட்டுமே முடிந்தது என்பதைப் பற்றியும், அன்றைய நிகழ்வில் அனைவருக்கும் நல்ல ஆழமான காயங்கள் உண்டாகி மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் காவல்நிலையம் சென்று வந்த தந்தையின் வாயிலாக அறிந்து கொண்டான் சங்கர்.

 

தற்போது, பணத்தால் காவல்துறையையே சிலர் விலைக்கு வாங்குவதை அறிந்து கொள்ள இயலாத அளவிற்கு சங்கர் சிறு பிள்ளையல்லவே.

 

முள்ளை முள்ளால் எடுப்பதுபோன்று, தானும் அதே போன்றதொரு நிகழ்வை மேற்கொள்ள முடிவு செய்திருந்தான் சங்கர்.

///////////////

அடுத்த நாள் பகல் முழுவதும் இலகுவான நிலையில் மருத்துவமனையில் இருந்தவன், டிஸ்சார்ஜ் பற்றி அறிந்து வர மனைவியை அனுப்பியிருந்தான்.

 

அதற்கிடையே நண்பர்கள் மூலமாக சில விடயங்களை கேட்டறிந்தவன், அடுத்த நாள் அதிகாலையில் தான் கேட்டதுபோன்ற வாகனத்தோடு மருத்துவமனைக்கு பின்னால் வந்து காத்திருக்கும்படி கூறிவிட்டு வைத்திருந்தான்.

 

முன்பைக் காட்டிலும் நல்ல முன்னேற்றம் சங்கரின் மூட்டில் இருப்பது ஆச்சர்யத்தை உண்டு செய்வதாகக் கூறிய மருத்துவர்கள், இரண்டு நாளில் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று உறுதி கூறியிருந்தனர்.

 

மனைவியின் சொல்லைக் கேட்டவன், “நீ மன்டே காலேஜ் போகனுமில்ல…! அன்னிக்கு இயர்லியரா டிஸ்சார்ஜ் பண்ணமுடியுமானு கேட்டுப் பாப்போம்.  முடிஞ்சா டிரைவரை காரை எடுக்கச் சொல்லி மதுரைக்கு போயிருவோம்!, என்க

 

“ஆச்சிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருங்க…! அவங்க உங்களை இவ்ளோ சீக்கிரமா மதுரைக்கு என்னைய நம்பி அனுப்ப மாட்டாங்க!, என்றாள் தன்னைப் புரிந்து பெண்.

 

“ம்…, என்று யோசித்தவன், அன்னம்மாளை அழைத்து வரக் கூறியிருந்தான்.

 

வந்தவர், “இன்னும் ஒரு மாசம் இங்கேயே இருக்கட்டும்த்தா… உடம்பைத் தேத்தி, காலையும் சரி பண்ணி சீக்கிரமா அனுப்பிவிடறேனே!, என்று பேத்தியிடம் கேட்டவரை

 

“நல்லா தேத்தி அனுப்புங்க ஆச்சி.  ஆனா எனக்கு ரெண்டு வாரத்துக்கு ஒருதடவைதான் ஊருக்கு வரமுடியும், என்று நவீனா தன் நிலையைக் கூற

 

“எங்களால முடிஞ்ச வரை நல்லா பாத்து அனுப்புறோம்டி அம்மா.  அப்புறம் நீ அங்க கூட்டிட்டுப் போயி உம்புருசனை நல்லா கவனி, என்று பேத்தியையும் விட்டுக் கொடுக்காமல் பேசியிருந்தார் அன்னம்மாள்.

 

அன்றைய பொழுதும் போயிருக்க, அவரவர் பணிகளை முடித்துவிட்டு அயர்வாக முடங்கியிருந்தனர். 

 

நவீனா அயர்வாக உறங்குவதைக் கண்டவன், தனது இயல்பு ஆடையை எடுத்து அணிந்து கொண்டு அரவமில்லாது அறையை விட்டு வெளியேறியிருந்தான் சங்கர்.

 

இரவுப் பணியில் இருந்த சில செவிலியர்கள், மருத்துவர்கள், இதர பணியாளர்கள், சற்று இளைப்பாற எண்ணி அயந்திருந்த நேரமது.

 

மருத்துவமனையின் பின்பகுதியில் இருந்த மதில்மீது அனாயசமாக ஏறி தன் ஒற்றைக் காலின் துணையோடு வெளியே குதித்தவன், முன்பே தனக்காகக் காத்திருந்த வாகனத்தில் கிளம்பியிருந்தான்.

 

போனதுபோல.. அடுத்து வந்த அரைமணி நேரத்தில் வந்த சுவடு எதுவும் தெரியாமல், திரும்பி வந்தவன், மருத்துவமனை உடையை மாற்றி படுக்கையில் படுத்திருந்தான்.

 

விடியலில் விடைபெற்ற மனைவியை அலமேலுவோடு மதுரைக்கு அனுப்பிவிட்டு, வீட்டிற்குச் செல்லும் உத்தியோடு நண்பர்கள் உதவிக்கு வர தயாராகியிருந்தான்.

 

சங்கரை காரில் அழைத்துக் கொண்டு வர தயாராக அனைத்தையும் எடுத்துக் கொண்டு காத்திருந்தவர்கள், எதிர்பாரா சூழலில் அங்கு சாந்தனுவின் குடும்பத்தை எதிரில் கண்டும் காணாததுபோல கிளம்பியிருந்தார்கள்.

 

“சித்தப்பா எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்காரு?  ஐயாவுக்கு எதுவும் உடம்புக்கு முடியலையோ?, என்று தந்தையிடம் சங்கர் வினவ

 

“சாந்தனு தங்கியிருந்த வீட்டுப் பக்கத்துல திருட வந்தவங்க… வீட்டில இருந்தவனை அடிச்சிப் போட்டுட்டு சாமாஞ்சட்டை எடுத்துட்டுப் போயிட்டாங்களாம்.  அதுல  அவனுக்கு ஏதோ பலமான அடின்னு இங்கதான் அட்மிட் பண்ணியிருக்காங்களாம், என்று நிறைய ‘ளாம் போட்டு தாஸ் கூற

 

“என்னப்பா சொல்றீங்க…? சாந்தனு நம்ம புஷ்பா அத்தை வீட்லல இருந்தான்!”, இயல்பாகவே கேட்டான் சங்கர்.

 

“அது உங்க கல்யாணத்துக்கு முன்ன!, என்றவர்,

 

“உனக்கும், நவீனாவுக்கு கல்யாணம் முடிஞ்சவுடனேயே மாப்பிள்ளை, சாந்தனுவைக் கூப்பிட்டு நீங்க வேற இடம் பாத்துக்கங்கனு சொல்லிட்டாராம்!, என்று சங்கரிடம் பகிர

 

இது சங்கருக்கு புதிய செய்தி.

 

மாமனாரு ரொம்ப விவரந்தான் என்ற நினைப்போடே, “இது யாருப்பா உங்களுக்கு சொன்னா!, என்று கேட்க,

 

“உங்க அத்தைதான் அப்பப்போ மாப்பிள்ளை, மருமயன் இல்லாத நேரம் பாத்து எங்கிட்ட பேசும்!, என்கிற உண்மையைக் கூற

 

“ஓஹ்…!, என்றவன்,

 

“அப்ப எனக்கு அடிப்பட்டதையும் சொல்லிட்டீங்களா?, என்க

 

“ம்…, என்ற அடங்கிய குரலில் கூறிய தந்தையைப் பார்த்தவன்,

 

“இதை எதுக்குச் சொன்னீங்க?, என்று கேட்டான் சங்கர்.

 

“நான் சொல்றதுக்கு முன்னாடியே தங்கவேலு சித்தப்பா சொல்லிட்டாரு.  அதான் உன்னைப் பத்தி விசாரிக்க போன் போட்டுச்சு.  அப்பதான்… மாப்பிள்ளை மெடிக்கல் லீவுல காரைக்குடி வந்திருக்கறதால எங்கயும் வெளிய போக முடியலைன்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசுச்சு!, என்று வருத்தத்தோடே கூறினார் தாஸ்.

 

வீட்டிற்கு வந்தவனை, அன்னம்மாளின் கைப்பக்குவத்தில் கவனித்துக் கொள்ள ஏதுவாக சமையல் நடந்து கொண்டிருந்தது.

 

அரிசி சார்ந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, பேரனுக்கு உடல் எடை கூடாத, ஆனால் சக்தி மிகுந்த ஆட்டுக்கால் சூப், காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட சூப், கொண்டைச் சேவல் ரசம், நாட்டுக்கோழி முட்டை, இயற்கை உணவுகள், பிரண்டை, முடக்கத்தான் கீரையில் உருவாக்கப்பட்ட சிறுதானிய ரொட்டிகள், தேங்காய் பால், கருப்பு உளுந்து கொண்டு வகைவகையாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், களி என்று பக்குவத்தோடு கவனிப்பு தொடர்ந்தது.

 

பேரனை அமர வைத்து சேவகம் செய்யாமல், நடக்கச் செய்து, காலில் அவ்வப்போது எலும்பு ஒட்டி இலை, கருப்பு உளுந்தில் இருந்து பக்குவமாகப் பிரித்தெடுக்கப்பட்ட எண்ணையோடு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து உருவாக்கப்பட்ட, ஒருவித எண்ணெய் கொண்டு தேய்த்து விட்டு, சங்கரின் மூட்டுகளைத் தேற்றினார்.

 

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என்ற ரீதியில், மானகிரிக்கு வந்த நவீனாவே கணவனின் முன்னேற்றத்தில் ஆச்சர்யப்பட்டிருந்தாள்.

 

அன்னம்மாளின் கவனிப்பைக் கண்டவளுக்கு, இந்த வயதிலும் பக்குவமாக பேரனைக் கவனித்துக் கொள்ளும் ஆச்சியைக் கண்டு பொறாமையாகக் கூட வந்திருந்தது பெண்ணுக்கு.

 

தான் இதுவரை இந்தளவிற்கு சங்கரைக் கவனித்ததில்லை என்கிற குற்றவுணர்வும் வந்து சேர்ந்து கொண்டிருந்தது.

 

சங்கரோ இது எதையும் கவனித்தானில்லை.  பாட்டியின் சொல்லுக்கு மறுப்புக் கூறாமல், ஒவ்வொன்றையும் கேட்டறிந்து செய்தவன்,

 

அன்று, “டூவிலரை இன்னிக்கு எடுக்கவா ஆத்தா?, என்று சிறுபிள்ளைபோல அன்னம்மாளிடம் கேட்க

 

“வண்டியை எடு,  ஆனா நான் சொன்னாதான் அதை எடுத்துட்டு வெளிய போகணும், என்ற கறாரான ஒப்பந்தத்தோடு வெளியில் வந்த அன்னம்மாள் பேரனை வண்டியை எடுக்கச் சொன்னார்.

 

வண்டியை எடுத்து அதில் அமர்ந்து இருந்தவனின் வலக்காலை ஊண்டச் செய்ததோடு, வலப்பக்க மூட்டுப்பகுதியை பிடித்து, அங்கங்கு வலி இருக்கிறதா என்று மூட்டுப் பகுதியைச் சுற்றிலும் அமிழ்த்தியவாறு கேட்டறிந்தவர், பேரனின் பதிலைக் கேட்டு,

 

“இல்லப்பு…! இன்னும் பத்து நாளு கழிச்சு வண்டி எடு ராசா!  இன்னிக்கு வேணாம்!, என்றிருந்தார் அன்னம்மாள்.

 

நவீனாவிற்கு ஆச்சியின் பத்திய முறைகளைவிட, மருத்துவ முறைகள் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

 

அலோபதியே கைவிரித்த கணவனை எந்த வித்தியாசமும் தெரியாமல் நடக்க வைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்திருந்தாள் நவீனா.

 

நீண்ட நேரம் நிற்க முடியாத நிலை மட்டும் இன்னும் நீடித்தது.  அதுநாள்படவே சரியாகும் என்றிருந்தார் அன்னம்மாள்.

 

“உம்புருசனுக்கு, உடம்பு வைக்காத… ஆனா சத்தான சாப்பாடா பாத்து சமைச்சுக் குடுக்கணும், என்று பேத்திக்கு அறிவுரை வேறு.

 

அனைத்தையும் ஆமோதித்தபடியே இருந்தவள், கடந்த பதினைந்து நாள்களாக சாந்தனுவிடமிருந்து எந்த முறையற்ற அழைப்பும் வராமல் போனதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதனை அறிந்து கொள்ள மனித மனம் விரும்ப, அதைப் பற்றியே எண்ணியிருந்தாள்.

 

கணவனோடு தனித்திருந்த வேளையில்… முதலில் சற்று நேரம் வம்பு வார்த்தை வளர்த்து, பிரிவின் துயரைத் துடைத்தவள்… இயல்பாகி இருந்தாள்.

 

உங்களை விட நான் எவ்வளவோ சின்னவ… ஆனா நீங்க வர வர ஸ்மார்ட்டாகிட்டு வரீங்க? என்று ஙஞன குரலில் கணவனிடம் கொஞ்சலாகக் கேட்டபடியே தோளில் சாய்ந்தவளை

 

“ம்… இதுக்கு நான் என்ன சொன்னா உனக்கு சந்தோசமா இருக்கும், என்று சங்கர் கேட்க

 

“உண்மையைச் சொன்னா, என்று பதிலைக் கூறினாள் நவீனா.

 

“ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்கறதால… அப்டித் தோணுது… வேற ஒன்னுமில்லை, என்றவன் இடப்பக்க மடியில் தன்னவளை அமரச் செய்து அணைத்தபடியே பெண்ணிடம் பேசினான்.

 

கணவனின் இலகுவான அணுகுமுறைகளைக் கண்டு, தைரியமாக தன் மனம் உழட்டிய சாந்தனுவின் விடயத்தைக் கேட்கவே, “வரலைன்னா விடவேண்டியதுதான…! ஏன் வரலைன்னு எங்கிட்ட வந்து கேட்டா! வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிறவன் என்னத்தைச் சொல்லுவேன்!, என்று சுள்ளென்று பதில் கூறியிருந்தான் சங்கர்.

 

இதற்குமேல் இதைப்பற்றி பேச நவீனாவிற்கு என்ன வேண்டுதலா? தொல்லை விட்டது என்று அத்தோடு விட்டுவிட்டாள்.

 

சாந்தனுவிற்கு அடிபட்டதோ, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதோ ஏதுவும் தெரியாத நிலையில் இருந்தாள்.

 

பெண் கேட்டும், சங்கர் அதைப்பற்றிப் பேசினானில்லை.

 

நவீனா வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து, வரா தன் தாயுடன் சங்கரைக் காண அங்கு வந்திருந்தாள்.

 

சங்கரை நலம் விசாரித்தவள், சாந்தனுவின் நிலையைப் பற்றி தனிமையில் தமக்கையிடம் கூறியதோடு, “அவுகள அங்க ஆஸ்பத்திரியிலேயேதான் இன்னும் வச்சிருக்காக…! சங்கரு மச்சானை விட அவுகளுக்கு அடி ரொம்ப பலம்போல!, என்று வருத்தத்தோடு பேசியவளைக் கவனியாமல்  வார்த்தைகளை மட்டும் பட்டும்படாமல் கேட்டுவிட்டு,

 

“இது எப்ப நடந்துச்சு!  எனக்குத் தெரியலையே!, என்று ஆச்சர்யமாக நவீனா வராவிடம் வினவ

 

ஆனால் மனமோ, ‘நல்லா வேணும்… எவனோ புண்ணியவான் அடிச்சதோட விட்டுட்டானே…! கொன்னுருக்கனும்!, என்று எண்ணியவாறே வராவிடமே கேட்டிருந்தாள்.

 

வராவின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு, நாள் கணக்கை வைத்துப் பார்த்தாள். ஒன்றும் புரிபடவில்லை. 

 

அன்று காலையில் கணவனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமுன், தான் மதுரைக்கு கிளம்பிச் சென்றது நினைவுக்கு வந்தது.

 

கடந்தமுறை தனது மனவலியை மறையாது கணவனிடம் பகிர்ந்து கொண்டதால், கணவன் மேற்கொண்ட ஏதோ திட்டமிடல் என்று புரிந்தாலும், அதைப்பற்றி கணவனிடம் மேற்கொண்டு கேட்க எண்ணவில்லை பெண்.

 

‘நல்லா வேணும்.  மனுசன் மாதிரியா பிகேவ் பண்ணான்.  கிறுக்கன்.  வாங்கிக்கட்டிக்கிட்டதாலதான் இந்த அமைதிபோல.  அடிஉதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டாங்கங்கறது சரியாதான் இருக்குது!  கேவலப் பய! இதுல டாக்டரூ வேற… இவன் லெட்சணம் தெரிஞ்சா…! இந்த மாதிரி ஆளுகிட்ட பொண்ணுங்க எப்டி நம்பி வந்து ட்ரீட்மெண்ட் எடுப்பாங்க!, என்று எண்ணியவளாக வராவோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

////////

 

நவீனாவிடம் விடைபெற்று, தங்கவேலுவின் பகுதிக்கு சென்ற வராவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 

அது என்ன?  அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!