NNA5A

நீயும் நானும் அன்பே

அன்பு-5A

 

தங்களது பகுதிக்குள் வந்த நவீனாவை, கண்டும் காணாதது போல கண்கட்டாமல் கண்ணாமூச்சி தனக்குள் ஆடிய சங்கர், தாயின் சொல்கேட்டு ஏதோ எடுக்கச் சென்றவளைப் பார்வையாலேயே தொடர்ந்திருந்தான்.

 

இது தெரியாத மூவரும், நவீனா சென்ற திசையினை நோக்கியபடியே இருந்தவர்கள், தங்களுக்குள் பேசியவாறு நவீனாவைப் பின்தொடர்ந்து அதே அறைக்குள் நுழைவதைக் கண்டான் சங்கர்.

 

நவீனா அனைவரோடும் அவ்வளவு இலகுவில் பேசமாட்டாள் என்பதை  அவள் வந்த சிறிது நாட்களிலேயே கண்டு கொண்டிருந்தான்.  அப்படி இருக்க, வந்த ஓரிரு நாளில் இவர்களோடு நெருக்கம் வர வாய்ப்பில்லை.

 

அறைக்குள் சென்று பேசும் அளவிற்கு நால்வருக்குள் எந்த ரகசியத்திற்கும் வாய்ப்பில்லை என்பதைவிட அவன்மனம் சொன்ன சங்கதி உவப்பாக இல்லை. தான் அங்கு செல்வது தற்போது வேறு மாதிரியான பிரச்சனைகளை உண்டாக்கும் என அறிந்தவன், அங்கு விளையாண்டபடி இருந்த வராவை அழைத்தான்.

 

சில நொடிகள் வராவிற்கு பிடித்தமான பொதுவான விடயங்கள் பேசியவன், நவீனா மற்றும் மற்றையோர் பற்றிக் கூறாமல், வழியை கை காட்டி

 

‘அங்க என்ன சத்தம்னு போயி பாத்துட்டு வா வரா, எலியா பெருச்சாளியானு தெரியல,  ரொம்ப நேரமா ஏதோ உருட்டற மாதிரியே கேக்குது என வராவை நவீனா சென்ற அறைநோக்கி அனுப்பியிருந்தான்.

 

அதற்கு முன்பே நடப்பு நிகழ்வுக்கு வந்த நவீனா, தாயின் அறிவுரைகளை சட்டென அசைபோட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், எதிரில் நின்ற மூவரையும் தைரியமாகவே எதிர்கொண்டிருந்தாள்.

 

மூன்று சகோதரிகளின் பேச்சை, மாறி மாறிக் கேட்டவளுக்கு வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளவே சற்று நேரம் வேண்டியிருந்தது.

 

‘இது என்னடா என் காலக் கொடுமை, என மனம் தனது நிலையை எண்ணி வருந்தினாள்.

 

‘இந்த அரை டிக்கட்டை பாக்கறதா, அந்த சங்கரு பத்தி சொல்றதெல்லாம் உண்மையா? என்னனு தெரியலையே! என மூவரின் வார்த்தையில் நம்பிக்கை வராமல் இருந்தது பெண்ணிற்கு.

 

தனது மனதை வெளிக் காட்டாமல் துடிப்போடு வழமைபோல இயல்பாக நின்றிருந்தாள்.

 

நின்றிருந்த மூவரில், தனக்கருகே நின்ற ஒருத்தியைப் பார்த்து வஞ்சமில்லாமல் இதமாகச் சிரித்தவள்,

 

“மூனு பேருக்கும் ஒரே பதில்தான்! சொன்னா சப்புன்னு போயிரும். அதுனால தனித்தனியாவே சொல்றேன்!, என இடைவெளிவிட்டவள்,  

 

“ஒருத்தர சிரிச்சே மயக்கிறலாம்னா, மத்த… அன்பு, பாசம், தெறமைக்கெல்லாம் இங்க வேலயே இல்லையே!, என ஒருத்திக்கு பதிலளித்துவிட்டு, மூவரையும் மாறி மாறிப் பார்க்க, நவீனா பேசுவதை விழி விரிய ‘என்னா பேசுது என்பதுபோல கேட்டிந்தார்கள் மூவரும்.

 

“நீங்க என்னவோ கேட்டீங்களே, அதென்ன… அவங்க முன்னாடி போய் நின்னுக்கிறேன்னா? ஆங் பாக்குற பக்கமே போய் போய் நிக்கிறேன்னு தான சொன்னீங்க!, என இன்னொருத்தியை பார்த்துக் கேட்டாள்.

 

“…”பெரிய இவளாட்டம் என்னன்வோ பேசுது

 

“…”இதெல்லாம் பேசி நாம கேக்கனும்னு இருந்துருக்கு

 

“…” ‘அழுகுணியா இருக்கும்னு வாயக் குடுத்தா, நண்டு மாதிரி இருந்துகிட்டு நம்மளையே போட்டுப் பாத்திரும்போலயே

 

“காரியத்துல கண்ணா இருக்குறவங்க, எங்க வேலையோ அந்த இடத்தத் தேடித்தான போவாங்க! வம்பு வளக்க நினைக்கிறவங்கதான் யாருமேலடா பழிபோடலாம்னு மத்தவங்கள வேடிக்கை பாத்திட்டே தெரிவாங்க”, என கூறியவள் அத்தோடு விட்டுவிடும் எண்ணமில்லாமல்

 

“ஒங்க மச்சான் இருக்குற பக்கந்தான் எனக்கு வேல இருந்திருக்கும். நா போயிருப்பேன். மத்தபடி எனக்கு அவரைத் தேடிப்போயி மயக்கணும்னு தேவையில்ல! மயக்குற அவசியமோ, எண்ணமோ எனக்கு இப்பனு இல்ல எப்பவுமே இல்ல!, என்று முடித்திருந்தாள்.

 

இதோ பார்றீ, சின்னப்புள்ளை மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசற?சீறினாள் மற்றொருத்தியான காயத்திரி.

 

இருங்கக்கா வர்றேன்! அந்தச் சின்னப்புள்ளைகிட்டதான வந்து நீங்க இத்தனை கேள்வி கேட்டீங்க! இன்னும் உங்க கேள்விக்கு வரல. பேசறது எனக்கு ஒன்னும் புதுசில்ல. எங்கயும் போயி வாயக் குடுத்து வம்புல மாட்டக் கூடாதுன்னுதான் பேசாம இருக்கேன். மத்தபடி எனக்கு பேசத் தெரியாம இல்ல!

 

திடீரென நவீனா சராமாரியாக பேசுவதைப் பார்த்து வாயடைத்து நின்றனர் மூவரும்.

 

சிறியவள் அத்துடன் விடவில்லை. எதிர்த்தவளின் கேள்விக்கு தாவினாள்.

 

என்னக்கா எனக்கில்லன்னா, ஒனக்கில்லன்னானு பேசிக்கிட்டு…! அவரென்ன பொருளா? அவரும் மனுசந்தான? அவருக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும்ல? முடிஞ்சா அவர் மனங்கோணாம நடந்துகிட்டு, நீங்க பிரியப்படற மாதிரி, அவரை உங்க பக்கம் வரமாதிரி மயக்குங்க!  அதவிட்டுட்டு வில்லி மாதிரி எங்கிட்டப் போயி சில்லி டயலாக்லம் விட்டுட்டிருக்கீங்க!, என ஏளனமாக சொல்லிச் சிரித்திருந்தாள் நவீனா.

 

இறுதியாக ஒரே வரியில் தான் சொல்ல வந்ததையும் சொன்னாள் சிறியவள்.

 

சுருக்கமா ஒன்னு மட்டும் சொல்றேன். நீங்க நெனக்கிற மாதிரி நானில்ல! என்று சற்று தணிவான குரலில் கூறிக்கொண்டிருக்கும்போதே, ஏவியவனின் உத்தரவை ஏற்று, வரா ஆராய்ச்சிக் கண்ணோடு வர, நவீனாவோடு மற்ற அக்காமார்களும் ஒரே இடத்தில் இருக்கக் கண்டாள். 

 

முதுகைக் காட்டி நின்றிருந்தவர்கள் வரா வருவதை அறிந்திருக்கவில்லை. ஆனால் நவீனா, வரா தங்களை நோக்கி வருவதைக் கண்டு கொண்டிருந்தாள்.

 

வராவைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தவளுக்கு, அவள் வாயிக்கு அவலாக விரும்பாமல், முன்பைவிட முகத்தை இன்னும் இலகுவாக வைத்துக் கொண்டு,

 

“அவ்வளவு தானாக்கா உங்க டவுட், அத்தை தேடுவாங்க.  வந்து ரொம்ப நேரமாச்சில்ல…, என்று நவீனா கேட்டு முடிக்கும் முன்னே அங்கு வந்திருந்த வரா,

 

“என்ன டவுட்டுக்கா?, என்ற கேள்வியை நவீனாவைப் பார்த்தபடியே கேட்டவள், மற்ற மூவரையும் உன்னிப்பாக மாறி மாறிப் பார்த்தாள்.

 

மூவரும் உம்மென்ற முகத்தோடு, வரா அங்கு வந்ததால் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் நின்றிருக்க, நவீனா அங்கிருந்து சசிகலா இருந்த அடுக்களையை நோக்கிக் கிளம்பியிருந்தாள்.

 

வராவை உடன் அழைத்துக் கொண்டு, சசிகலாவிடம் சென்று பொருட்களை ஒப்படைத்தவள், சற்றுநேரத்தில் சொல்லிக் கொண்டு, தங்களது பகுதிக்கு நகர்ந்திருந்தாள் நவீனா.

 

சகோதரியோடு வீட்டிற்கு வந்தவள், மீண்டும் யு டர்ன் எடுத்து சங்கரிடம் வந்திருந்தாள் வரா.  நேரில் அவள் காதில் கேட்டதை, தான் யூகித்ததை சங்கரிடம் கூறிவிட்டு அடுத்த கட்ட அவளின் விளையாட்டுப் பணிகளைப் பார்க்கச் சென்றிருந்தாள்.

 

அறைக்கு வந்தவளுக்கு, மூவர் பேசிய வார்த்தைகளையும், அதற்கு தான் பதில் பேசியதையும் யோசித்துப் பார்த்தபடியே இருந்தவள், தனது தாய் தனக்கு இதுவரை கூறிவந்த அறிவுரைகளை எரிச்சலாக கேட்டிருந்தவளுக்கு, சில உண்மைகள் புரிவதுபோல தோன்றியது.

 

தாய் இதுவரை தனது நலனுக்காக கூறியிருந்தாலும், இதுவரை அதற்கு வேலை வராமல் இருக்க, ‘எதுக்கு இந்தம்மா ஓட்ட ரெக்கார்டு கணக்கா சொன்னதையே சொல்லி வெறுப்பேத்துறாங்க என்று எரிச்சல் பட்டவளுக்கு, மூவரையும் சமாளிக்க, தான் இன்று எடுத்த முயற்சியில் அவரின் அனுபவ வார்த்தைகள் கைகொடுத்திருந்தது.

 

யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும், பெரியவர்களை மரியாதையோடு எவ்வாறு நடத்த வேண்டும், தனது வயது ஆண், பெண் இருபாலரோடும் எங்ஙனம் பேச வேண்டும், இளையவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என  அனைத்திற்கும் வரைமுறையை நவீனாவிற்கு வரையறுத்ததோடு, அலுக்காமல் கூறி வளர்த்த தனது தாயை தற்போது நன்றியோடு நினைவு கூர்ந்தாள் நவீனா.

 

‘சும்மா என்ன லொடலொடனு அம்மா பேசுறாங்கனுதான் அப்ப நினைச்சேன், நான் இந்தளவுக்கு யோசிக்கலை.  நல்ல வேலை எங்காதுல போட்டு விட்டீங்க என மனதில் தனது தாயை எண்ணிப் புகழ்ந்திருந்தாள்.

 

ஆனாலும், இங்கு நடந்ததைப் பற்றித் தாயிடம் பகிரும் எண்ணமெல்லாம் பெண்ணுக்கு இல்லை.  ஆனால் மனம் அதற்குமேலும் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்திருந்தது.

 

யோசனைகள் ரயில் பெட்டியைபோல இன்னும் நீளவே, சங்கரைப் பற்றி மூவரும் தன்னோடு சந்தேகித்துப் பேசியதை, சங்கரின் செயல்களாகக் குறிப்பிட்டதை, மனச்சிலேட்டில் நினைவு எனும் பெயிண்டால் குறித்துக் கொண்டது.

 

அசைபோட ஆயிரம் விடயங்கள் அவளுக்கு இருக்க, இதுவும் வந்து சேர்ந்திருந்தது.  சோர்வில்லாமல் சோதனை ஓட்டத்தைத் துவங்கியிருந்தாள் பெண்.

 

பத்து நாட்களும் பயங்கர வேகத்தில் சென்றிருந்தது.  அன்றைய நிகழ்விற்குப் பிறகு பெண், சசி அத்தையோடு மட்டும் அதிகம் இழையவில்லை.

 

கேட்டதற்கு பதில் என்றளவில் வீட்டோடு இருந்துவிட்டாள்.  நவீனாவின் இயல்பு மாறியதை அறிந்தவனோ ஏதோ நடந்திருக்கிறது என்பதை யூகித்திருந்தான் சங்கர்.

 

வராவின், ‘ஏதோ தவிட்டுனு பேசிட்டு இருந்தாங்க மச்சான் என்ற பேச்சின் மூலம் எந்த முடிவுக்கு வர இயலவில்லை. ‘நல்லா கேட்டியா என வராவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியாதநிலை சங்கருக்கு.

 

தாயிடம் தனது எரிச்சலைக் காட்ட, பெற்றவளோ மருமகளை எவ்வளவோ உடன் அழைத்தும், பத்து நிமிடங்களுக்குமேல் அங்கு நில்லாமல் மீண்டும் அவள் பகுதிக்குச் செல்பவளை என்னவென்று சொல்லி நிறுத்த எனத் தெரியாமல் இருவருக்கிடையே மாட்டிக்கொண்டு விழிபிதுங்கியிருந்தார் சசிகலா.

 

பேச்சில், பேசும் முறையில் எந்தச் சுணக்கமும் இல்லாமல் எப்பொழுதும் போல இருந்த நவீனாவை, “ஏன் உங்க பெரியம்மாமாருங்கதான அங்க வந்திருக்காங்க.  எல்லாரு கூடவும் வந்து அங்க பேசிட்டு இருக்கலாம்ல, என்ற சசியின் அழைப்பிற்கு

 

சிரிப்பை மட்டுமே பதிலாக்கியவளை, “சிரிச்சே மழுப்பு.  சமையல்கட்டுக்குள்ள போயிட்டு வரதுக்குள்ள ஓடி வந்துர்ற?  ஏன் இப்படி பண்ற நவீனா?, என்று அலுத்துக் கொண்டார்.

 

“ஒன்னுமில்லத்தை, சும்மா வந்து அங்க உக்காந்திட்டு இருக்கறதுக்கு, இங்க வந்தா வாண்டூஸ் கூட எதாவது விளையாட போவேன்ல, அதான் வந்துட்டேன், என்றவளை நம்பாமல் பார்த்தார் சசிகலா.

 

அவளாகவே சில விளையாட்டுகளில் விரும்பி கலந்து கொள்வதும், சில விளையாட்டுகளைத் தவிர்த்து ஒதுங்குவதையும் இதுவரை கவனித்திருந்தார் சசிகலா.

 

கூட்டமான நேரத்தில் பொடிசுகள் மட்டுமே விளையாட்டு மோகத்தில் தெரிந்தனர்.  சற்று பெரியவர்கள் அனைவரும் பொறுப்பாக, ஓரிடத்தில் அமர்ந்து எழுந்தையும் கவனித்திருந்தார் சசிகலா.

 

மிகவும் வற்புறுத்தாமல் நவீனாவை விட்டிருந்தார்.  நவீனாவோ தனது கண்ணில் ஆராய்ச்சிக் கண்ணாடியை அணிந்து கொண்டு, அனைவரையும் என்பதைவிட சங்கரைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினாள்.

 

பெண்ணின் தன்மீதான கழுகுப் பார்வையை அறியாதவன், காதல் பார்வையால் அவளுக்குத் தெரியாமல் அபிசேகம் செய்யும் எண்ணத்தோடு, ஏக்கத்தோடு வீட்டிற்குள்ளேயே பெண்ணைத் தேடித் திரிந்தான்.

 

சங்கரின் நடவடிக்கைகளை அதன்பிறகு உற்று கவனிக்கத் துவங்கினாள் நவீனா.  பெண்கள் கூறுவதை முதலில் நம்பியிராதவள், தன் கண்ணையே ஒற்றனாக்கி சில விடயங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

 

ஆனாலும், தான் கண்டு கொண்டதை சங்கர் கண்டு கொள்ளக்கூடாது என்பதில் குறிப்பாக முன்னெச்சரிக்கையுடன் பெண் நடந்து கொண்டாள்.

 

முளைக்கொட்டு விழா துவங்கியபோது ஒன்னும் தெரியாமல் இருந்தவள், விழா முடிந்தபோது, பல விடயங்களை அறிந்து கொண்டிருந்தாள்.

 

சங்கருக்கு தங்களது மகளை மணமுடித்துக் குடுக்க, இந்த வீட்டில் பிறந்த அனைத்து பெண் மக்களுக்குமே விருப்பம் இருக்கிறது என்பதையும் தெரிந்து தெளிந்திருந்தாள்.

 

இதில் தனது பெற்றோரின் அவா பற்றி அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

 

மற்றபடி, தனது சித்திக்குமே அப்படியொரு விருப்பம் இருப்பதை அவரின் பேச்சிலிருந்து அறிந்து கொண்டிருந்தாள் பெண்.

 

அதுபோல, ராஜவேலு வழி பெண்மக்களுக்கும் சங்கருக்கு தங்களின் பெண்ணைக் கொடுக்க விருப்பம் இருந்தது.  யாருக்கு அந்த வாய்ப்பு வந்தாலும், வாய்ப்பை பயன்படுத்த சந்தோசமாகவே காத்திருந்தனர்.

 

அது சங்கரின் பொறுப்பான செயல், கல்வி, பாரபட்சமின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம், முரடனாக இருந்தாலும் பாசக்காரனாக இருப்பது என இதுவரை அதற்கான காரணங்களை அறிந்துகொண்டிருந்தாள்.

 

கெட்ட பழக்கவழக்கம் எதுவும் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம்.

 

அனைத்திற்கும் சிகரம் வைப்பதுபோல, மற்றவர்களைவிட அவனுக்குரிய பங்காக ஏராளமான சொத்துகள் இருந்ததும், ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

 

இவை அனைத்தையும் பெண்களின் பேச்சின் மூலமாக யூகமாகவே ஓரளவு அறிந்து கொண்டிருந்தாள் நவீனா.

 

‘மனுசன் நம்மைப் பாக்கறது சரி.  வந்து பேசாத வரை ஒன்னும் பிரச்சனை இல்லை.  பேசினாத்தான் வாயி தந்தி அடிக்கும். மனசு மந்தமா ஆகிரும்.  அதனால அவங்க வந்து எதுவும் எங்கிட்ட நேருல பேசிறக் கூடாது என தனக்குள் வேண்டுதல் வைத்திருந்தாள் பெண்.

 

தனக்கு எப்படியும் இருபத்தியோரு வயதிற்குமேல் தானே திருமணம் என்று ஒன்றைப் பற்றிப் பெற்றோர் பேசுவார்கள்.  அதுவரை அமைதியாகவே நடப்பதை வேடிக்கை பார்த்திருப்போம் என்ற முடிவுக்கு முடிவாக வந்திருந்தாள் நவீனா.

 

சங்கரின்மேல் தனக்கு எந்த உணர்வும் இதுவரை வந்திராத நிலையில், இதைப்பற்றி இனி யோசிக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தாள்.

 

சங்கரின் பார்வையைக் கண்டவளுக்கு, அவளின் மீதான அவனது ஆர்வம் புரிந்தது.  ஆனாலும், தன்னிடம் இதைப்பற்றிப் பேசவோ, அவனது மனவிருப்பத்தை தன்னிடம் பகிராமல் இருப்பதைப்பற்றி புரியாமல் இருந்தாள்.

 

மேலும் இலகுபேச்சைக்கூட இனி சங்கரோடு வைத்துக் கொள்வது, சில சிக்கல்கள் மட்டுமன்றி, மனஸ்தாபங்களையும் குடும்பத்திடையே உண்டு செய்யும் என்பதை பெண் உணர்ந்திருந்தாள்.

 

சங்கரும் அதை தனக்கு சாதகமாக்கி, பின்னாளில் தந்தை மறுத்தால் என்ற யோசனையும் வந்தது.

 

அனைத்து பெண் மக்களைவிட, புஷ்பா மற்றும் வெற்றி இருவருமே சங்கரின் அப்பா மற்றும் சசிகாலாவைக் கொண்டு நெருங்கிய உறவு என்பது பிளஸ் என்பதையும் மனம் உணர்ந்தது.

 

ஆனாலும், ஆணாக முன்வந்து தன்னிடம் இதுவரை எதுவும் சொல்லாதபோது, தானாக எதையும் மனதில் யோசிக்க வேண்டாம் என்று தனக்குள் கட்டுப்பாட்டை விதித்திருந்தாள் பெண்.

 

சங்கர் விருப்பம்போல அவன் இருக்கட்டும்.  தான் தனது பெற்றோர் விருப்பம்போல நடக்க உறுதியாக எண்ணி முடிவெடுத்துவிட்டாள் பெண்.

———————————–

வெற்றிக்கு மாற்றல் வந்ததை அடுத்து, மாற்றலான இடத்தில் பணியில் சேருமுன், மகளை வந்து பார்க்க மானகிரிக்கு வந்திருந்தார்.

 

நவீனாவிற்கு தாய் உடன் வராத வருத்தம் நிறைய இருந்தது.

 

“ஏம்பா அம்மா வரலையா?, ஏக்கமாக கேட்ட மகளை

 

“முடியலடா… அப்பா உன்னைக் குவார்டர்லி லீவுக்கு அங்க அழைச்சிட்டு போறேன்மா, என்று வருத்தத்தோடு முடித்திருந்தார் மனிதர்.

 

மத்திய அரசாங்க உத்யோகமானாலும் தந்தையின் வருமானத்தையும், பொறுப்பினை அறிந்தவள்தான் பெண்.

 

வெற்றி தனது தாயிக்கு வேண்டி மாத செலவினங்கள், வீட்டு செலவினம், தற்போது நந்தா, நவீனாவின் படிப்பிற்கான செலவினம் என அனைத்தையும் ஒருவருடைய வருமானத்தை நம்பியிருப்பதால்தான் இந்த முடிவினை எடுத்திருக்கிறார் என்பது புரிந்தாலும், ஒரு ஆதங்கத்தில் கேட்டிருந்தாள் பெண்.

 

மேலும் தற்போது புதிய இடத்தில போய் செட்டில் ஆகும் வரை செலவினங்களை கட்டுப்படுத்துவது சற்று கடிமாகவே இருக்கும் என்று தாய் அவ்வப்போது பேசும் வார்த்தைகளில் கவனித்திருக்கிறாள்.

 

காலையில் வந்தவர், அன்று மாலையே கிளம்பியிருந்தார்.

 

ஆனாலும், முன்பைப்போல மனம் வாடவில்லை.  ஓரளவு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் நவீனா.

/////////////