NNA6A

NNA6A

நீயும் நானும் அன்பே

அன்பு-6A

 

வாரயிறுதி நாளாதலால், நவீனாவின் மாமன்மார்கள் அன்றைய நாளை ஏற்கனவே திட்டமிட்டபடி, நண்பர்களோடோ, அல்லது வாரநாள்களில் விட்டுப்போன வேலைகளைச் செய்து முடிக்கும் எண்ணத்தோடோ ஆளுக்கொரு திசையில் நன்பகலில் கிளம்பிச் சென்றிருந்தார்கள்.

 

அதனால் அவர்கள் வீட்டில், வயதானவர்கள், வீட்டுப்பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சங்கரைத் தவிர வேறு யாரும் இல்லை. 

 

சங்கரும் தனது நண்பர்களை பண்ணையில் விட்டுவிட்டு, நவீனாவை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

 

நவீனாவிற்கு முதலுதவி செய்து, அவள் உறங்கத் துவங்கியதும், மீண்டும் பண்ணைக்குச் சென்று நண்பர்களை மதிய உணவிற்காக வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

 

நண்பர்களை மதிய உணவை உண்ணச் செய்து, அவர்களை இளைப்பாறச் செய்தான். பின்னர் நண்பர்களிடம் கூறிக்கொண்டு, அவன்மட்டும் காரைக்குடி சென்று, தெரிந்த மருத்துவரிடம் தனிப்பட்ட முறையில், அன்று மாலையே நவீனாவின் கணுக்கால் சுளுக்கின் தீவிரத்தை அறிந்து கொள்ள வேண்டி, அனுமதி வாங்கி வந்திருந்தான்.

 

ஐயாமார்கள் இருவரும் வயோதிகம் காரணமாக நிறைய அலைய இயலாது.  அதனால் அன்றைய நிலையை கருத்தில் உணர்ந்து, அடுத்தநாள் தான் கல்லூரிக்கு கிளம்ப வேண்டியிருப்பதால் முன்னேற்பாடாக அவனாகவே சென்று நவீனாவிற்கு அப்பாயிண்ட்மென்ட் வாங்கி வந்திருந்தான் சங்கர்.

]]]

சங்கரை அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை என்பதைத் தவிர, அவனின் அந்தக் கேள்வியை எதிர்பார்த்தே இருந்தாள் பெண்.

 

உண்மையில் வீக்கம் இன்னும் அப்படியேதான் இருந்தது.  ஆனால் படுக்கையை விட்டு இன்னும் கால்களை நகர்த்தாததால், வலியின் அளவு நவீனாவிற்கு சரியாகத் தெரியவில்லை.

 

இருந்தாலும் கேட்டவனுக்கு பதில் சொல்ல வேண்டுமே!

 

படுக்கையிலிருந்து கீழே இறங்க முயற்சித்தாள் நவீனா.

 

நவீனாவின் செயலைக் கண்டு, பேசாமல் பார்த்திருந்தான் சங்கர்.

 

காலை நகர்த்தும்போது, முன்னைப்போல உயிர்போகும் வலி இல்லை.  இறங்கி கால்களை ஊன்றி நின்றாள். வலி இன்னும் இலேசாக இருப்பதை உணர்ந்தவள்

 

“ரெஸ்ட்ல இருக்கும்போது வலி தெரியல! நிக்கும்போது லைட்டா இன்னும் பெயின் இருக்கு!, என்றாள்.

 

“ம்ஹூம்…”, எனக் கேட்டுக் கொண்டவன், அதற்குமேலும் அங்கிருந்து நகராமல், எதுவும் பேசாமல் யோசனையோடு நின்றிருந்தான்.

 

அதற்குமேலும் அங்கு நின்றவனை, ஏனோ புரியாத புது உணர்வில் பார்த்தாள் நவீனா.

 

‘இன்னும் என்ன?

 

“இனி…, தொண்டையை செறுமிக் கொண்டு தன்னை சரிசெய்தவன், “.. ஸ்கூலு விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூலுன்னு இருக்கிறதா இருந்தா, நீ இங்க இரு!

 

“இல்லைன்னா?, நவீனா அதிர்ச்சியோடு சங்கரைப் பார்த்துக் கேட்டிருந்தாள்.

 

“… இல்லைனா, உங்கப்பாவ வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லிரலாம்னு ஐயாகிட்ட சொல்லிருக்கேன்!, கடினமான குரலில் வேறுபக்கம் பார்த்தபடி முடிவாக உரைத்தான்.

 

‘இப்ப என்ன நடந்துபோச்சுன்னு? எனும் மனக் கேள்வியோடு சங்கரை முறைத்துப் பார்த்தவள்,

 

“ஒரு தடவை தெரியாம, அதுவும் வரப்புல தான வழுக்கி விழுந்துட்டேன்!  அதுக்கு…! இதெல்லாம் போயி யாராவது அப்பாகிட்டச் சொல்லுவாங்களா?”, என இழுத்தவளை, கையைக் காட்டி நிப்பாட்டு எனும் செய்கையின் மூலம் நவீனாவை பேசாமல் இருக்கச் சொல்லியிருந்தான்.

 

“யாராவது, எப்டி வேணா இருந்துட்டுப் போகட்டும்!  ஆனா நான் சொல்லுவேன்!, என்று பெண்ணிடம் திடமாகக் கூறியவன்,

 

“இப்ப நடந்தது உனக்கு வேணா சாதாரணமா இருக்கலாம்!  இன்னிக்கு சாயந்திரம் உங்க அப்பா போன் பண்ணும்போது இங்க நடந்ததைச் சொல்லுவோம்.  அப்போ அவரு எப்டி ரியாக்ட் பண்றாருன்னு பாப்போமா?, என்று தீவிரமாகவே பெண்ணை நோக்கிக் கேட்டான்.

 

சங்கரின் வார்த்தையில் பதறியவள், “இல்லை வேணாம்!  அப்பா, அம்மா ரெண்டுபேரும் இதைக் கேள்விப்பட்டா ரொம்ப சங்கடப்படுவாங்க! என்னவோ ஏதோன்னு பதறிருவாங்க!, என மறுத்திருந்தாள்.

 

“அவங்க பதறக்கூடாது! சங்கடப்படக்கூடாது!  ஆனா இங்க இருக்கிறவங்க எப்டிப் போனாலும் உனக்கு கவலையில்லை அப்டித்தான?”, பெண்ணின் பேச்சைக் கொண்டே, பெண்ணைக் கேள்வியால் மடக்கியிருந்தான்.

 

“அப்டியில்லை!, என்று இழுத்தவள், “நான் என்ன வேணுனா போயி விழுந்தேன்!  தெரியாம தான விழுந்துட்டேன்!  அதுக்குப்போயி ரொம்பத்தான் பண்றீங்க!”, நின்றதால் கணுக்காலில் வந்த வலியைவிட, தன்னை சங்கர் கேட்ட கேள்வியினால் உள்ளத்தில் வலி மிகுந்ததாக உணர்ந்தாள் நவீனா.

 

நவீனாவின் வார்த்தைகளைக் கேட்டவன், “விசயத்தைக் கேள்விப்பட்டு, என்ன பண்ணனு உங்கப்பா உன்னைக் கேப்பாரா முதல்ல? இல்லை எங்களை வந்து கேப்பாரா?

 

சங்கரின் கேள்வியில் தன்னையே தனக்குள் விசாரித்து, கேப்பாங்களோ!.. ஆமா!என பெண்ணின் மனம் முடிவு சொல்லியது.

 

“புள்ளையோட தப்பாவும் இருக்கலாம்னு யோசிச்சி, உங்கிட்ட வந்து விசாரிச்சபின்ன, ‘எம்புள்ளை சுழிதாங்காம போயி அதுவா விழுந்துச்சுன்னு சும்மா விட்ருவாரா எங்களை!  எதுவும் கேக்கமாட்டாரா?, என்ற சங்கரின் அசட்டையான கேள்வியில், பதில் சொல்ல இயலாமல் விழித்தாள் நவீனா.

 

“உனக்கு எதாச்சும் ஒன்னுனா உங்கப்பா வந்து எங்ககிட்டதான முதல்ல கேப்பாரு!  பொம்பிளைப் புள்ளை வேற! காலு, கையில எதாவது பிசகு வந்திட்டா குடும்பத்துக்குள்ள மனவருத்தம் வந்திராதா?”, என மூச்சு விடாமல், முகத்தை உர்ரென்று வைத்துப் பேசியவனைக் கண்டு ‘எப்பப் பாத்தாலும் கோவமா! என அமைதி காத்தாள்.

 

“வெறும் சுளுக்குக்குப் போயி, நான் சுருக்குப் போட்டு நின்ன மாதிரி சொல்லுறீங்க!, என்ன பதில் அவனிடம் சொல்ல எனத் தெரியாமல், சட்டெனத் தோன்றியதைக் கேட்டுவிட்டு, ‘தன் பேச்சின் திசை தனக்கு ஆவண செய்யாது என புத்தி உணர்த்த, பல்லைக் கடித்து தன்பேச்சை அத்தோடு நிறுத்தியிருந்தாள் பெண்.

 

“ம்… அவ்வளவு தானா!  நம்ம ஊருப்பக்கம் ஒன்னு சொல்லுவாங்க…, என்று இழுத்தவனை பார்த்தவள் மேலே என்ன என்பதுபோல பார்க்க,

 

“வரப்புல வழுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான், பனை மரத்துல இருந்து விழுந்து பொழைச்சவனும் இருக்கான்னு சொல்லுவாங்க! அதனால வரப்பை நம்ம சாதாரணமா எடுக்க முடியாது, என்று முடித்தவனை

 

‘அப்டியா என்பதுபோல ஆச்சர்யமாகப் பார்த்தவளை நோக்கி

 

“சரி இப்ப அது எதுக்கு நமக்கு? ஓன் விசயத்துக்கு வருவோம்! உனக்கு சுளுக்கு பிடிச்சதை இன்னிக்கு நைட் உங்கப்பா பேசும்போது கண்டிப்பா சொல்லுவோம்!  அப்டியே சுருக்குப் பத்தி நீ சொன்னதையும் காதுல முன்கூட்டியே போட்டு வச்சிரலாம்!, சிரிப்பை மறைத்தவாறே கூறியவனை நிமிர்ந்து பார்த்தவள்

 

“இனி நான் எங்கயும் போகலை!, என பூமியைச் சுற்றி பரவியிருக்கும் வாயுவின் அளவு வறுத்தத்தோடு கூறியவள், “ஆனா, நீங்களும் எதுவும் அப்பாகிட்ட சொல்ல வேணாம்!, என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கூறினாள்.

 

அவனின் இதழில் மறைத்திருந்த அவனது அடக்கிய நகைப்பைக் கண்டவள், ‘என் நிலம உங்களுக்கு சிரிப்பா இருக்கு!  பாத்து சிரிங்க! இல்லைனா பல்லுல சுளுக்கிறப் போது! என எண்ணியபடியே தலையை மீண்டும் குனிந்திருந்தாள்.

 

குனிந்தபடியே தீவிர சிந்தனையில் இருந்தவளைக் கண்டவன், ‘சரியான கேடிடீ நீ! என எண்ணியவனாய், “சாயந்திரம் காரைக்குடியில் இருக்கிற டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மென்ட் வாங்கியிருக்கேன்.  கிளம்பி ரெடியா இரு!”, என்றவன்

 

“கவனமா இருந்திருந்தா இப்டி நடக்காது! கவனம் இல்லாம இருக்கிறவங்களுக்குதான் இப்ப நான் சொன்ன கட்டுப்பாடுலாம்!, என்றபடியே சிரிப்போடு நகர்ந்தவனை ஓரப்பார்வையில் கண்டவளுக்கு, உள்ளுக்குள் கோபம் வந்தாலும் வெளிக்காட்டவில்லை.

 

‘என்னாத்துக்கு இந்த நக்கல் சிரிப்பு என்று எண்ணியவாறு நின்றவள், சங்கரின் பேச்சைக் கேட்டு குனிந்தபடியே தலையை ஆட்டியிருந்தாள்.

 

நிமிராது தலையாட்டியவளைக் கண்டு, ‘நமக்குன்னு வந்து சேந்துருக்கு பாரு, மண்டையாட்டி மாணிக்கம்! என நினைத்தபடியே,

 

“வழக்கமா சித்தப்பா எல்லாரும் வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு திரும்ப சாயந்திரம் ஆகிரும்! இன்னிக்கு லீவுதான். ஆனாலும் எல்லாரும் வெளிய ஏதோ ஒரு வேலையா காலையில போனவங்க, இன்னும் சாப்பிடக்கூட வீடு திரும்பலை!

 

‘இதேன் எனக்குத் தெரியுமே.  இப்ப எதுக்கு இதை எங்கிட்ட சொல்றாக

 

“உதவிக்கு யாருமில்லாத வீட்டுல, இப்ப உனக்கு நடந்த மாதிரி எதாவது வீக்டேஸ்ல நடந்திட்டா, ஐயாமாரு தான் உன்னைக்  கூட்டிப்போயி கவனிக்கனும்.  இப்ப அவங்க உன்னைக் கவனிக்கிற நிலமையிலயா இருக்காங்க!

 

வயசானவங்களை கருத்தா பாத்துக்கற வயசு நமக்கு வந்திருச்சு!  அவங்களுக்கு தொந்திரவு தரக்கூடாதுன்னு தெரியாத அளவுக்கு இன்னும் நீ சின்னப் புள்ளை இல்ல! இன்னொருமுறை இதுமாதிரி நடக்காதபடி கவனமா இரு!

 

வீட்டுல நாலு காரு இருந்தாலும், வீட்டு பொண்ணுங்களை, டிரைவரை மட்டும் நம்பிலாம் எப்பவும் வெளியே அனுப்பமாட்டோம்!

 

அப்டியிருக்கிற இந்த வீட்ல எப்டி இருந்தா எல்லாருக்கு நல்லதுன்னு யோசிச்சு, கவனமா நடந்துக்க!, என்றவன் அதற்குமேல் நவீனாவிடம் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பியிருந்தான் சங்கர்.

 

சங்கரின் ‘கவனத்தை கவுண்ட் செய்தவாறு ‘எத்தனை கவனம்? என மனதிற்குள் கேட்டபடியே போய், கட்டிலில் படுத்திருந்தாள் நவீனா.

]]]

மாலை மருத்துவமனைக்கு கிளம்புமுன் மாமன்மார்கள் வந்து பேச்சிற்கு நலம் விசாரித்துவிட்டு,

 

“உடம்பைப் கவனமாப் பாத்துக்கம்மா! என்று கவனமாகக் கூறிவிட்டு அகன்றிருந்தார் ஒருவர்.

 

‘குடும்பமே கவனமான குடும்பம் போல

 

“வரப்பில நடக்கத் தெரியாம போயி, இப்டி வகையா விழுந்து வச்சு, யாராவது இப்டி வந்து வலியோட இருக்கக் கண்டுருக்கோமா!  பாத்து போயிருக்கக் கூடாதா? என்று நொந்திருந்த மனதை, மெனக்கெட்டு வந்து கேட்டு, நையாண்டி செய்திருந்தார் இன்னொரு மாமா.

 

“நல்ல வேளை சுளுக்கோட போச்சு.  நீ பாட்டுக்கு காலு, கையினு எல்லாத்துலயும் அடிவாங்கிட்டு வராம இருந்தியே!, என அவரவருக்குத் தோன்றியதைக் கூறியதோடு அகன்றிருந்தார்கள்.

 

தங்களது வாரயிறுதி நாளான அன்று, DD நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியைப் பார்க்க, அங்கிருந்து அகன்றிருந்தனர்.

 

கருப்பு, வெள்ளை தொலைக்காட்சிக்கே அருகில் உள்ள வீட்டிலிருந்து பெரும்பான்மையினோர் வந்து கூடுவர்.

 

அப்டியிருக்க இவர்களது புதிய கலர் தொலைக்காட்சிக்கு, வீட்டு வாசலில் சந்தைபோலக் கூட்டம் கூடிவிடுவர்.

 

மினி திரையரங்கு போல, அந்த வீட்டின் காம்பவுண்டு வரை மக்கள், இடம் கிடைத்தவர்கள் அமர்ந்தும், அமர இடமில்லாமல் நின்றும், நிகழ்ச்சிகளைப் பார்த்துச் செல்வர்.

 

மொழி புரிந்தாலும், புரியாவிட்டாலும், அக்கம் பக்கம் மட்டுமன்றி, வீட்டிலுள்ளவர்களும் விடாமல் பார்ப்பார்கள்.

 

வெள்ளியன்றும் ஜேஜே என இருக்கும் அவர்களது வீடு. தமிழ் நிகழ்ச்சிகளுக்கு இன்னும் கூடுதலாக கூட்டம் இருக்கும். “ஒளியும் ஒலியும் பார்க்க வரும் கூட்டம் காம்பவுண்டு சுவரின் மீதெல்லாம் நிரம்பி வழியும்.

 

அன்றும் கூட்டம் ஓரளவு இருக்க, எதையும் கவனிக்கும் நிலையில் இல்லாதவள், காரைக்குடிக்கு சிகிச்சைக்காக கிளம்பியிருந்தாள்.

]]]

 

முல்லை ஆச்சி, சசிகலா அத்தை மற்றும் சங்கர் மூவருடன் மருத்துவமனைக்குச் சென்று திரும்பியிருந்தாள் நவீனா.

 

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு, ‘இளவயது என்பதால் ஒன்னும் பிரச்சனை அதிகம் இருக்காது என்று கூறி, ‘பதினைந்து நாட்களுக்கு அதிகமான எடையுடைய பொருட்களை, தண்ணீர் குடம்போல எதையும் தூக்க வேண்டாம் என்று கூறியிருந்தார் மருத்துவர்.

 

மேலும், ஓடாமல், ஆடாமல், காலுக்கு அதிக வேலை கொடுக்காமல் பதினைந்து நாட்களுக்கு, அவர் கொடுத்திருந்த மாத்திரைகளை சரியான நேரத்தில் உட்கொள்ளும்படியும், அதன்பின் ஒருமுறை வந்து கணுக்காலை காட்டிச் செல்லுமாறும் கூறி அனுப்பியிருந்தார்.

 

அதற்குமேல் சங்கர் அவளிடம் எதையும் கூறவில்லை.  ஆனாலும் பெண்ணுக்கு வருத்தம் இருந்தது.

 

‘இந்த டீடா முன்னாடி அசிங்கப்பட்டுட்டீயே நவீ!என மனம் முரண்டியது.

 

‘இந்த மனுசன்(சங்கர்) மெச்சுர மாதிரி இல்லைனாலும், ஓரளவு பேரு வாங்கற அளவு. ஏதாவது செஞ்சு. குனிஞ்ச தலைய நிமித்தி, நிக்கல் ராடு கணக்கா துருப்பிடிக்காம நிக்கிறோம்!, என்கிற சைலண்டான சபதமெடுத்து, தனிப்பட்ட கொள்கை முடிவோடு வலம் வந்தாள் பெண்.

 

வீட்டில் உள்ள பெண்களின் ஒட்டுமொத்த கவனிப்பும், அரவணைப்பும், ஊட்டமான உணவும், விரைவில் நவீனாவை பழைய நிலைக்கு கொண்டு வந்திருந்தது.

]]]

 

குளம், மற்றும் கண்மாயில் நீரின் இருப்பு பெரும்பகுதி வற்றியிருந்தது.  கண்மாயில் மீன்கள் கிடப்பதால், தூண்டில், வலை மற்றும் சேலைத்துணி கொண்டு மீன் பிடித்தலை, அவ்வூர் மக்கள் தினசரி அவர்களது தேவைக்கிணங்க பிடித்து சமைத்தனர்.

 

வாரயிறுதி நாள்களில் சாந்தனுவோடு சேர்ந்து, வீட்டிலுள்ள ஒரு இளங்கூட்டம் சென்று மீன் பிடித்து வந்தது.

 

உயிரோடு பலவகை மீன்களை பார்த்தவளுக்கு ஆசையாக இருந்தது.  ஆனாலும் சங்கரின் கவனம் என்கிற சொல்லை எண்ணி அமைதியாக இருந்தாள் பெண்.

 

வீட்டிற்கு வந்த வராவும், ‘இனி உன்னை எங்கையும் வெளியே கூட்டிட்டுப் போகக் கூடாதுன்னு சங்கரு மச்சான் சொல்லிருக்காக! என நவீனா கேட்கும் முன்பே, அவளிடம் வந்து தானாகக் கூறி, தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருந்தாள் வரா.

 

‘சரிதான் போடீ என்று நவீனாவும் வராவை விட்டிருந்தாள்.

 

ஆனாலும் மீன்பிடித்து வந்து, இவர்கள் அளக்கும் அனுபவக் கதையை கேட்பவளுக்கு, ஆசையாக இருந்தது.

 

‘கவனமா போயிட்டு, கமுக்கமா சேஃபா வீட்டுக்கு வந்திட்டா என்ன?என ஒரு மனம் யோசனை சொன்னது நவீனாவிற்கு.

 

இன்னொரு மனம், ‘போன தடவை போன மானம் மரியாதையே இன்னும் திருப்பாம அடகுலதான் கிடக்கு!  இன்னும் வட்டிக்கு மேல வட்டினா, இந்த நவீனா நிலைமை கஷ்டந்தான்!, என தன்மீதே கழிவிரக்கம் கொள்ளச் செய்திருந்தது.

]]]

காலாண்டு தேர்வுக்கான நாள் நெருங்குவதால், படிக்கும் நேரத்தை நீட்டியிருந்தனர்.

 

சாந்தனு, நவீனா இருவரும் தங்களது பாடங்களைப் படித்து முடிக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டனர்.

 

மற்றவர்கள் விரைவிலேயே பாடங்களை முடித்துவிட்டு, அக்கம் பக்கம் பிள்ளைகளோடு, அவர்களது காம்பவுண்டிற்குள்ளேயே விளையாடுவார்கள்.

 

அன்றும் அதுபோல அமர்ந்து நவீனா படித்துக் கொண்டிருக்க, சாந்தனு வீட்டுக் கணக்கை அற்பணிப்போடு செய்து கொண்டிருந்தான்.

 

சாதாரணமாக இருந்த வீடு, டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்களின் சலசலப்பிலும், சலசலப்பைக் கேட்டு உள்ளிருந்தவர்கள் என்னவென்று வாயிலில் போய் பார்க்கவும், பரபரப்பான சூழலுக்கு சற்று நேரத்தில் மாறியது.

 

ஒன்றும் புரியாமல் இருவரும் அமைதியாகப் பார்த்திருந்தனர்.

 

கையில் இரண்டு ட்ரங்கு பெட்டியுடன் ஒருவர், மற்றும் ஒரு சுட்கேசுடன் நவீனா வயதொத்த சிறுமியும், வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள் நவீனா.

 

“யாரு சாந்தனு இவங்க?”, அருகில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவனை, வாசலைக் காட்டி மெதுவான குரலில் வினவினாள் நவீனா.

 

நவீனா காட்டிய திசையை எட்டிப் பார்த்தவன் சற்று நேரம் எடுத்துக் கொண்டு, “இது தாஸூ பெரியப்பா மாதிரி தெரியுது! தாடியெல்லாம் இருக்கறதால சரியா எனக்கு அடையாளம் தெரியல!”, என சாந்தனு தலையைச் சொரிந்தபடியே, அதேபோன்ற மெதுவான குரலில் நவீனாவிற்கு பதில் கூறினான்.

 

“இவ்வளவு நாளா இவங்க எங்கிருந்தாங்க?”, அடுத்து தொடர்ந்தாள்.

 

“மெட்ராஸ்லதான்!

 

“என்னாது! மெட்ராஸ்லயா? அப்ப எங்க அம்மா, அப்பா இவங்களைப் பத்தி இதுவரை எதுவும் சொன்னதில்லையே!”, சந்தேகத்தின் பூட்டாக இருந்தவள், பூட்டைத் திறக்கும் சாவியாக எண்ணி, சாந்தனுவிடம் விடாது கேட்டாள்.

 

“ஸ்… இதுபத்தி இதுக்குமேல இப்ப பேச வேணாம்!, என்று உதட்டில் விரல் வைத்து நிறுத்துமாறு செய்கை செய்தான் சாந்தனு.

 

அத்தோடு நடப்பதை வேடிக்கை மட்டுமே அனைவரும் பார்த்திருந்தனர்.

]]]

ராஜவேலு, தங்கவேலு இருவரும் நடுக்கூடத்தில் அமர்ந்து, வீட்டிற்கு வந்த ஹரிதாசனுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

 

நீண்டநேரப் பேச்சிற்குப் பிறகு, அன்னம்மாள் ஆச்சியை அழைக்க சிறுபிள்ளையை அவர்களது போர்ஷனுக்கு அனுப்பியிருந்தனர்.

 

முக்கிய விடயம் பேச அழைப்பதாகக் கூறி அழைத்து வரச் சொன்னதால், அன்னம்மாளும் சற்று நேரத்தில் அங்கு வந்திருந்தார்.

 

மகனை அங்கு அந்நேரத்தில் முற்றிலும் எதிர்பார்த்திராவர் முகம், மகனைக் கண்டதும் சங்கு பூவைப் போல மலர்ந்திருந்தது. 

 

அருகில் நின்ற சிறுமியைக் கண்டதும் மலர்ந்திருந்த முகம், கதிரவனின் கதிருக்கு வெளுத்தது போல சிரிப்பு மாறியிருந்தது.

 

மூவரும், வீட்டிற்கு வந்திருந்த தாஸுடன் சற்று நேரம் பேசினர்.  உடன் வந்திருந்த சிறுமி அமைதியாக பேசுபவர்ளையே பார்த்திருந்தாள்.

 

முடிவாக, அன்னம்மாள் வசிக்கும் பகுதிக்குள், தாசனும், அவருடன் வந்திருந்த சிறுமியும்  சென்றிருந்தனர்.

]]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!