NPG-1

NPG-1

கீதாஞ்சலி – 1

சூரியனுடன் கூடி இருந்த வானமகள், சூரியன் விடைபெறவும் நாணத்தோடு இரவு உடை மாற்றப் போக அவள் நாணத்தின் காரணமாக வானம் செம்மையைப் பூசிக் கொண்டு செவ்வானமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. அந்த அற்புதக் காட்சியை நின்று ரசிக்க நேரமில்லாமல் அல்லது மனமில்லாமல் வேக வேகமாக கடந்து செல்லும் விந்தை மனிதர்களும் வாகனங்களும்.

அந்த வேடிக்கை மனிதர்களில் ஒருவனாகத் தன்னுடைய காரை சென்னையின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு பப்பை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான் ராகுல் ரவிவர்மன். தென்னிந்தியாவின் மிகச் சிறந்த இளம் இசையமைப்பாளர். அவன் வைத்திருக்கும் காரும், அதன் வேகமுமே அவன் குணத்தைச் சொல்லும்.

பல வகைக் கார்கள் வீட்டில் இருந்தாலும் அவன் விரும்பி அமெரிக்காவில் இருந்து தருவித்துக் கொண்ட வாகனம் அவனுடைய கோர்வெட். இந்தியாவில் அந்தக் கார் விற்பனை கிடையாது. ஆனாலும் தனக்குப் பிடித்த மாடல் கார் என்ற ஒரே காரணத்துக்காக அதன் விலைக்கும் மேலே இரண்டு மடங்குப் பணம் வரியாக செலுத்தி இறக்குமதி செய்து கொண்டான். அதன் வடிவத்தை இந்திய சாலைகளுக்கு ஏற்ப சற்றே பிரத்யேகமாக மாற்றி வடிவமைத்து.

தனக்கு ஒரு விஷயம் தேவை என்று தோன்றினாலோ அல்லது ஒரு விஷயத்தின் மீது பிடித்தம் ஏற்பட்டாலோ என்ன விலை கொடுத்தும் அதை அடையத் தயங்காதவன். இதைப் பிடிவாதம் என்று எடுத்துக் கொண்டால் அவன் பிடிவாத குணம் உடையவன்.

வெற்றி இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை அடையும் வரை விடாமல் முயற்சி செய்து வெற்றி பெறும் திறமைசாலி என்று நினைத்தால் அவன் மிகத் திறமையானவன். பிடித்தத்திற்கு எந்தளவுப் பிடிவாதம் உள்ளதோ அதே அளவுப் பிடிவாதம் பிடித்தமின்மைக்கும் உள்ளது.

ஆள் அரவமில்லாத பகுதியில் உள்ள அந்த ஐந்து நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற பப்பின் முன் அசுர வேகத்தில் வந்து நின்றது அந்தக் கோர்வெட். கோர்வெட்டில் இருந்து இறங்கிய ராகுல் ரவிவர்மன் வேலட் பார்க்கிங்காக அங்கு நின்று சொண்டிருந்தவனிடம் ஸ்டைலாக சாவியைத் தூக்கி எறிந்துவிட்டு, எப்பொழுது வெளியே வந்தாலும் அணியும் குளிர் கண்ணாடியையும் தொப்பியையும் சரி பார்த்துவிட்டு வேக நட்டையிட்டு அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

அங்கு டிரெஸ் கோட் மற்றும் இன்ன பிற விஷயங்களைக் கண்காணிப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு ஆஜானுபாகுவான உருவங்களுள் ஒன்று மில்லிமீட்டருக்கு சற்றும் அதிகமில்லாமல் ஒரு புன்னகையைத் தந்துவிட்டு விரைவாகச் சென்று விஐபிக்களுக்கான பிரத்யேக வழியைத் திறந்து விட்டது.

பதிலுக்கு அதே மில்லிமீட்டர் புன்னகையைப் பரிசாகத் தந்தவன், தாடிக் காட்டிலிருந்து அந்தப் புன்னகை வெளிப்படும் முன்னமே அந்த இடத்திலிருந்து விரைந்திருந்தான். இச்செயல்பாடுகளே சொல்லாமல் சொன்னது ராகுல்ரவிவர்மன் இந்த இடத்திற்கு மிகவும் பரிட்சையமானவன் என்று.

விரைவாக பாரை நோக்கிச் சென்றவன் அங்கு நின்றவாறே “கண்ணா” என்று குரல் கொடுக்க நொடி நேரத் தாமதமுமின்றி “அண்ணா” என்று பதில் குரல் வந்தது. அதன் பிறகு எந்தப் பேச்சும் இல்லை. விறுவிறுவென்று ராகுலைப் போன்ற விஐபிக்களுக்கான கண்ணாடித் தடுப்பறையுடன் கூடிய விஐபி லௌஞ்ச் (VIP Lounge) என்ற பகுதிக்குச் சென்றுவிட்டான் ராகுல்.

பின்னாடியே ராகுலால் கண்ணா என்று அழைக்கப்பட்ட சர்வர் தன்னுடைய மொபைல் பிஓஎஸ் சிஸ்டத்துடன் ராகுல் முன் வந்து நின்றான். அவனிடம் ஒரு ஷாம்பைனும் சைட் டிஷும் ஆர்டர் செய்துவிட்டு,

“போன வாரம் நீதானே நான் இங்க இருக்குறதை அவனுக்கு ஃபோன் பண்ணிப் போட்டுக் கொடுத்தது” என்று வினவினான் ராகுல்.

“அண்ணா என்னண்ணா நீங்க என்னையப் போய் சந்தேகப்படுறீங்க. நான் உங்காளுண்ணா” என்றான் அந்த சர்வர்.

“டேய் இதையே தானே போன வாரம் அவன் கிட்டயும் சொன்ன?”

“போங்கண்ணா… நான் வேற ஏதோ சொன்னதை நீங்க தப்பா கேட்டிருப்பீங்கண்ணா.”

“போதையில இருந்தாலும் கேட்டுக்கிட்டு தான்டா இருந்தேன். மவனே நான் இன்னைக்கு ஃபுல் ரிலாக்ஸ் ஆகணும். அதுக்கு முன்னாடியே அவன் வந்து நின்னான்னு வை, வெளிய நிக்கிறானுங்க பாரு ரெண்டு வளர்ந்து கெட்டவனுங்க அவனுங்க கிட்ட காசு கொடுத்து உன்னைப் பிரட்டி எடுத்திடுவேன். பார்த்துக்க”

வெளியில் நிற்கும் இரண்டு வளர்ந்தவர்களும் தன்னை சராமாரியாக வெளுத்து வாங்குவதைப் போன்று கற்பனை செய்துப் பார்த்தான் அந்த சர்வர். கற்பனையில் விழுந்த அடிக்கே பயந்துத் தலையைக் குலுக்கி அந்த நினைவில் இருந்து மீண்டு வந்தவன்,

“என்கிட்ட இப்படித்தான் சொல்லுவீங்க. அப்புறம் அவர் வந்த உடனே, ‘நான் ஒரு ஃபுல் முடிஞ்ச உடனேயே உன்னைக் கூப்பிட சொன்னேன்டா. இவன் தான்டா ஃபோன் பண்ணலை’ன்னு என்னையவே அவர் கிட்ட போட்டுக் கொடுப்பீங்க.”

“அப்படியா சொன்னேன்? இருக்காதேடா” என்று தன் தாடியைத் தடவியவாறே ராகுல் யோசனை செய்யத் தொடங்க,

“வெளியில் நிக்கிறவங்களாவது நீங்க காசு கொடுத்தா அடிக்க மட்டும் தான் செய்வாங்க. எதாவது ஏடாகூடமா நடந்து உங்க பேரு எதாவது நாளைக்குப் பேப்பரில வந்துச்சு உங்க ஃபிரெண்ட் என் உயிரை எடுத்துட்டுத் தான் மறுவேலை பார்ப்பாரு” என்று பயத்துடன் அந்த சர்வர் சொல்ல,

“செஞ்சாலும் செய்வான்” என்று சொல்லியவாறே அடக்க மாட்டாமல் வெடிச் சிரிப்பு சிரித்தான் ராகுல்ரவிவர்மன். அந்தச் சிரிப்பில் திருப்தியடைந்தவனாக ஒரு சிறு தலை அசைப்புடன் வெளியேறிய அந்த சர்வர் முதல் வேலையாகத் தன் அலைப்பேசியை எடுத்து அந்த அவருக்கு அழைப்பு விடுத்தான்.

இவ்வளவு நேரமும் ‘அவன்’ என்று ஏகவசனத்தில் ராகுலாலும், ‘அவர்’ என்று மரியாதையாக அந்த சர்வராலும் அழைக்கப்பட்ட நபர் கௌஷிக். ராகுல்ரவிவர்மனின் பால்ய கால நண்பன். காலத்தின் கோலத்தால் நடுவில் இவர்கள் இருவரும் பிரிந்திருந்தாலும், ராகுல் ஒரு இசையமைப்பாளர் ஆனபிறகு அவனைத் தேடி வர கௌஷிக்கிற்கு சிறு தயக்கமும் இருக்கவில்லை.

ராகுலும் நீண்ட நாள் கழித்து சந்தித்தத் தோழனைத் தன்னுடனே வைத்துக் கொண்டான். ராகுலைப் பொறுத்த வரையில் அவனுடைய ஃபிரெண்ட், ஃபிலாசஃபர், கைட், மேனேஜர், ஆடிட்டர் அனைத்தும் கௌஷிக் தான். ஆடிட்டர் பதவி எதனாலென்றால் கௌஷிக் சிஏ முடித்தவன். அவன் வந்த பிறகே ராகுலின் வரவு செலவு கணக்குகள் முறையாகப் பேணப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பலவிதமான முதலீடுகளும் செய்யப்பட்டு வந்தது.

சர்வரின் அழைப்பு ஏற்கப்பட்டதற்கு அடையாளமாக, “ஹலோ” என்று குரல் ஒலித்தது.

பப்பின் பெயரைச் சொன்ன சர்வர், “இன்னைக்கு இங்க தான் சார்” என்றான்.

“ஹ்ம்ம்ம்… எப்போ வந்தான்? விஐபி லௌஞ்ச்-ல தானே இருக்கான்?”

“இப்ப தான் சார். அஞ்சு நிமிஷம் கூட இருக்காது. ஆமா சார் தனியா தான் இருக்காரு.”

“சரி, யாரும் போட்டோ எதுவும் எடுக்காம பார்த்துக்கோ. நான் ஒரு ஒன் ஹார்ல அங்க வர்றேன்.”

“ஓகே சார்” என்ற சர்வர் ராகுல் கேட்டவற்றை எடுப்பதற்காக பாருக்குள் நுழைந்தான்.

ஆர்டர் செய்தவற்றை வந்து வைத்துவிட்டுப் போன பிறகு ராகுலை யாரும் நெருங்கவில்லை. மீண்டும் தனிமையே துணை. யாருக்காக இந்த வாழ்க்கை என்று சலிப்பாக இருந்தது ராகுலுக்கு.

பணம், பேர், புகழ் அனைத்தும் அளவுக்கதிகமாகவே இருக்கிறது. இருந்தும் இந்தத் தனிமைத் துயர் தீர வழியிருப்பதாகத் தோன்றவில்லை. நினைக்க நினைக்க அவன் முன்பிருந்த பாட்டில் வேகமாக காலியாகத் தொடங்கியது. மெல்ல ஸ்ருதி கூடத் தொடங்கியது அந்த இசையமைப்பாளருக்கு.

பிறக்கும் பொழுதே தாயை இழந்தவன் ராகுல்ரவிவர்மன். தாயில்லா பிள்ளையைத் தன் மகனைப் போல் வளர்த்தது ராகுலின் அக்கா. இருவருக்கும் பதினான்கு வருட காலம் வயது வித்தியாசம். அதனால் தமக்கை தாயாகவே மாறிப் போனாள்.

தமக்கைக்குத் திருமணம் முடித்தக் கையோடு ராகுலின் தந்தையும் இவனுடைய ஐந்தாம் வயதிலேயே மரணமடைந்து விட, அதற்குப் பிறகு ராகுலின் உலகமே அவனது அக்காவும் அவள் கணவரும் தான். அவர்கள் இருவருக்குமே கூட ராகுல் தான் பெறாத பிள்ளையாகவே ஆகிப் போனான்.

இந்த வாழ்க்கையும் ராகுலுக்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை. ராகுலின் பனிரெண்டாவது வயதில் ஒரு விபத்தில் அவன் அக்காவும் அத்தானும் கூட இறந்துவிட, அதன் பிறகு ராகுல் வளர்ந்ததெல்லாம் ஒரு போர்டிங் பள்ளியில் பாதிரியாரின் கண்காணிப்பில்.

அந்தப் பாதிரியார் இசையில் ராகுலுக்கு இருந்த அதீத ஆர்வத்தை இனம் கண்டு அவனுக்கு முறையான இசைப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மும்பைக்கு அனுப்பி வைத்து இசையில் பட்டப் படிப்பும் படிக்க வைத்தார்.

ராகுல் முதன் முறையாக இசையமைத்து வெளியிட்ட ஒரு ஆல்பமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தர, அவனுடைய இருபத்தி ஓன்றாம் வயதில் திரைத்துறையில் கால் பதித்தான். வரிசையாக ராகுல் இசையமைத்த அனைத்துத் திரைப்படங்களும் வெற்றி பெற தென்னிந்தியாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவனாகிப் போனான் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே.

பணம், பெயர், புகழ், அந்தஸ்து அனைத்தும் வந்த வேகத்தை விட அதிவேகமாக ஒரு காதல். எவ்வித காத்திருப்பும் அவசியமற்றுப் போக காதல் வந்த அதே வேகத்தில் திருமணம். ஒருவருக்கொருவர் முழுதாகப் புரிந்து கொள்ளாமல் நடந்தத் திருமணம் நடந்த வேகத்திலேயே விவாகரத்தில் வந்து முடிந்தது.

எல்லாம் முடிந்த போது கையில் ஒரு வயது மகனுடன் மீண்டும் தனித்து நின்றான் ராகுல். ஏனோ மகனை மட்டும் விட்டுத் தர மட்டும் விருப்பமில்லை. அவனை உரிமை கோரவும் ஆளில்லை, ஆகையால் அதிகம் போராடாமலே மகனை ராகுலின் வசம் ஒப்படைத்தது நீதிமன்றம். மீண்டும் தன்னை வளர்த்த பாதிரியாரிடமே மகனுடன் சென்று நிற்க,

அவரோ ‘உனக்கு யாருமில்லாம வந்தே உன்னை வளர்த்தேன். இவன் உன் மகன். இவனுக்கு அப்பான்னு சொல்லிக்க நீ இருக்க. நீதான் இவனை வளர்க்கணும்’ என்று சொல்லி உதவிக்கென்று அவருக்குத் தெரிந்த ஆதரவற்ற ஒரு பெண்மனியையும் அனுப்பி வைத்தார்.

ராகுல் நடந்தவற்றை மறக்க, தன் கவலையைப் போக்கவென மது, மாது என்று தீயவழிகளில் தன்னைத் தொலைக்க, அவன் மகன் சந்தோஷ்ரவிவர்மனோ முழுக்க முழுக்க வீட்டு வேலையாட்களிடமே வளரலானான்.

இந்த நிலையில் தான் கௌஷிக் ராகுலிடம் வந்து சேர்ந்தான். ஆனால் என்ன முயன்றும் கௌஷிக்காலும் ராகுலை மாற்ற முடியவில்லை. அதனாலேயே சந்தோஷ் மீது கூடுதல் பாசம் கௌஷிக்கிற்கு.

தன் முன் இருந்த முழு பாட்டிலும் காலியான பிறகும் மனம் அமைதியடைய மறுத்தது ராகுலுக்கு. அமர்ந்தவாக்கிலேயே அங்கிருந்த மற்றொரு பார் அட்டென்டரிடம் மற்றுமொரு ஸ்காட்ச்சை ஆர்டர் செய்துவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

பாரை ஒட்டியிருந்த டான்சிங் ரூமிலிருந்து மெல்லிய ஒலியில் இசை கசிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒன்று உந்தித் தள்ள மிக லேசாகத் தள்ளாடியபடியே கதவைத் திறந்து கொண்டு டிஸ்கோத்தே பாருக்குள் நுழைந்தான்.

எங்கும் இருள் சூழ்ந்திருக்க, அங்கு கூடியிருக்கும் இளைஞர் பட்டாளத்துக்குப் போட்டியாக பல வண்ண விளக்குகளும் சோபையுடன் நடனமாடிக் கொண்டிருந்தது. அருகிலிருப்பது ஆணா பெண்ணா என்று இனம் காண முடியாத அளவிற்குக் கூட்டமும் பேரிரைச்சலும்.

அந்தக் கூட்டத்திற்குள் மெல்ல நீந்தி சென்று அங்கிருந்த டிஜேவிடம் சென்றான் ராகுல். “விச் நம்பர் டூ யூ வான்ட் ஸர்” என்று அந்த டிஜே ஆட்டத்தினூடே வினவ,

“கேன் ஐ ப்ளே யுவர் ரோல் ஃபார் சம்டைம்” என்று அந்த டிஜேவிடம் கேட்டு விட்டு மியூசிக் சிஸ்டத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான் ராகுல். அதன் பிறகு இவனுடைய பிரத்யேக மிக்சிங் டெக்னிக்கைப் பயன்படுத்தி சவுண்ட் ட்ரேக்கை ஒலிக்கவிட மொத்த அரங்கமும் இசையால் அதிர்ந்தது.

ஒலியைக் கூட்டியும் குறைத்தும் ராகுல்ரவிவர்மன் காட்டிய வித்தையில் அங்கிருந்த மொத்த கூட்டமும் மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தது. அதில் ஓரிருவர் ராகுலை அடையாளம் கண்டு கொள்ள மெல்ல கூட்டத்திடையே ‘ஆர்.வீ’ என்ற ஆரவாரம் பற்றத் தொடங்கியது.

மொத்த அரங்கமும் ‘ஆர்.வீ, ஆர்.வீ’ என்று ஆர்ப்பரிக்கத் தொடங்க, அங்கிருந்த சில பெண்களோ “ஆர்.வீ, ஐ லவ் யூ” என்று உரக்கக் கத்தினார்கள்.

இசையின் அளவை சற்றே கட்டுக்குள் கொண்டு வந்து, “லவ் யூ டூ கேர்ள்ஸ்” என்று தன் இரண்டு கைகளையும் உதட்டில் வைத்து அவர்களுக்கு பறக்கும் முத்தத்தை ராகுல் பறக்க விடவும், கௌஷிக் அந்த பப் பௌன்சர்ஸ்சுடன் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.

வாங்கிய பறக்கும் முத்தத்தை நேரடியாகவே திருப்பிக் கொடுத்திட பெண்கள் ராகுலை மொய்க்கத் தொடங்கும் முன் அந்த பௌன்சர்ஸ் அவனை சுற்றி வளைத்துப் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார்கள். கௌஷிக் உடன் இருந்ததால் ராகுலால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது. எதாவது பேசினால், கௌஷிக் திட்டியே இருக்கும் போதையையும் இல்லாமல் செய்துவிடும் வாய்ப்பு இருப்பதால் ராகுலுக்கும் அவர்களுக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

வெளியில் வந்து வேலட் பார்க்கிங்கில் காருக்காக இரண்டு நிமிடங்கள் காத்திருக்கும்படி ஆனது. அப்பொழுது அந்த சர்வர் ஓடிவந்து ராகுலுடைய கூலிங் கிளாஸ், வேலட் போன்றவற்றைத் திருப்பி அளிக்க, அதை வாங்காமல் அவனை முறைத்துக் கொண்டு நின்றான் ராகுல்.

“சார் பாருங்க சார், அண்ணன் முறைக்கிறாரு” என்று அவன் கௌஷிக்கிடம் சரணடைய,

“அங்க என்ன பார்வை? கார் வந்திடுச்சு பாரு. போ… போய் கார்ல ஏறு” என்று ராகுலிடம் கூறினான் கௌஷிக்.

“நீ போய் உட்காருடா. நான் பில் பே பண்ணிட்டு இவனுக்கு டிப்ஸ் குடுத்துட்டு வரேன். எவ்வளோ நல்லா கவனிச்சிருக்கான் என்னை…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பதிலளித்தான் ராகுல்.

“பில்லும் கொடுத்தாச்சு. டிப்சும் கொடுத்தாச்சு. கூட்டம் சேர்றதுக்கு முன்னாடி இப்போ நீ கார்ல ஏறப் போறியா இல்லையா?” என்று பதிலுக்கு கௌஷிக் பல்லைக் கடிக்க, ஒன்றும் சொல்லாமல் வந்து நின்ற காரில் ஏறிக் கொண்டான் ராகுல்.

தான் ஓட்டி வந்த காரை டிரைவரை வரச் சொல்லி அவர் வசம் ஒப்படைத்துவிட்டு ராகுலின் கோர்வெட்டையும், ராகுலையும் தன் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கௌஷிக். இருக்கையை சற்று சாய்த்து ராகுல் கண் மூடி அமர்ந்திருக்கப் பயணம் தொடக்கத்தில் அமைதியாகக் கழிந்தது.

“டேய்… நீ ஓட்டுறது ஸ்போர்ட்ஸ் கார். இப்படி கட்டை வண்டி வேகத்துக்கு ஓட்டிக்கிட்டு வர்ற” என்று முதலில் அமைதியைக் கலைத்தது ராகுல்.

“எந்த வண்டியா இருந்தா என்ன? இந்த ஊர்ல இந்த ஸ்பீடுக்கு மேல ஓட்ட முடியாது. கூடாது. இஷ்டம்னா உக்காரு. இல்லைன்னா இறங்கிப் போய்கிட்டே இரு. செம காண்டுல இருக்கேன். ஏதாவது பேசுன கடிச்சு வைச்சிருவேன் பார்த்துக்க” என்றான் கௌஷிக்.

“ரொம்பக் கோவமா இருக்கியோ?” என்ற ராகுலின் கேள்விக்கு ஒரு முறைப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

“சரி சரி பட்டுக்கோ பட்டுக்கோ நல்லா கோவப்பட்டுக்கோ. என் மேல கோவப்படவும் கூட நீ ஒருத்தன் தானடா இருக்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் ராகுல்.

நான் சமூகத்தில் உயர்ந்தவன், மிகப் பெரும் இசையமைப்பாளன், என்னிடம் வேலை செய்பவன் நீ என்பது போன்ற எந்த எண்ணமும் ராகுலின் மனதில் இருந்தது இல்லை. கௌஷிக் மனதிலும் இது போன்ற எண்ணங்களை வளரவிட்டதுமில்லை.

இருவரைப் பொருத்த வரையில் சிறு வயதில் எவ்வாறு நண்பர்களாக இருந்தார்களோ அதுவே இப்பொழுதும் தொடர்கிறது. கௌஷிக்கிற்கு ராகுலின் நலன் மட்டுமே முக்கியம். ராகுலுக்கு கௌஷிக் தான் எல்லாமுமே. சிறு வயதில் செய்ததைப் போலவே இப்பொழுதும் அடித்துக் கொள்வார்கள். அடுத்த நொடியே கூடியும் விடுவார்கள். எந்தக் கருத்து மோதலும் இதுவரை இருவரையும் பாதித்ததில்லை.

“ஏன்டா இப்படி பண்ற? போனமா, யாருக்கும் தலையைக் காட்டாம வேலையை முடிச்சோமா வந்தோமான்னு இருன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது. டிஸ்கோத்தே ரூமுக்குள்ள நீ எதுக்குடா போன?” கோவம் சற்றும் குறையாமல் கௌஷிக்.

“ம்ச்… எவ்வளவு அடிச்சாலும் ஸ்ருதி ஏறலை மச்சான். அதான் அங்க சத்தம் வந்துச்சா அப்படியே அங்க போய் கொஞ்சம் ஸ்ருதி ஏத்திக்கிட்டு, முடிஞ்சா ஸ்ருதியைக் கூட்டிக்கிட்டு வரலாம்ன்னு போனேன்.”

இறுதியாக ராகுல் சொன்ன ஸ்ருதியின் அர்த்தம் நன்றாக விளங்கியதால் மறுபடியும் ஒரு முறைப்பைப் பரிசாகத் தந்தான் கௌஷிக்.

“என்ன? என்ன முறைப்பு? அதான் கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி கரெக்டா வந்துட்டியே. அப்புறம் என்னடா லுக்கு? ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு.”

“திருந்தவே மாட்டியாடா நீ? இப்ப எல்லார் கையிலேயும் ஸ்மார்ட் ஃபோன் இருக்கு. எவனாவது போட்டோ எடுத்துப் பத்திரிக்கைக்கு கொடுத்துட்டான்னா? நாளைக்குக் காலையில எல்லா பேப்பர்லயும் அப்புறம் இதான் இருக்கும் ‘பிரபல இசையமைப்பாளர் பப்பில் பெண்களுடன் உல்லாசம்’ ன்னு கொட்டை எழுத்துல போடுவாங்க. இதெல்லாம் தேவையா உனக்கு?”

“இதுவரை பேப்பர்ல என் பேரு அசிங்கமா வராதது மாதிரியே பேசுற. அதெல்லாம் அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே வந்தாச்சு. பிரபல இசையமைப்பாளரின் மனைவி கிரிக்கெட் வீரருடன் ஆட்டம் பாட்டம் ஓட்டமுன்னு எழுதிக் கிழிச்சாச்சு. அதுக்குக் காரணம் என்னன்னு விவாத மேடை வைச்சு நடத்தாத குறையா அலசி ஆராய்ஞ்சாச்சு.

இதுக்கு மேல என்ன இருக்கு? போனவ என் சந்தோஷம், மானம், மரியாதை எல்லாத்தையும் மொத்தமா தூக்கிட்டுப் போயிட்டா. விடுறா”

“டேய் ராகுல், கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காத. டூ யூ ஸ்டில் லவ் ஹர்?”

“சீச்சீ அசிங்கமா பேசாத. அருவருப்பா இருக்கு. நான் தான் லூசுத்தனமா காதல், கண்றாவின்னு… அப்போ நீயும் என் பக்கத்துல இல்லைல்ல, அதான் சரியா முடிவெடுக்கத் தெரியாம எல்லாத்தையும் நானே சொதப்பிக்கிட்டேன்.

நீ ஏன்டா ஆரம்பத்துல இருந்தே என் கூட இல்லாம போன? அது கூட வேணாம். பேசாம நீ பொண்ணா பொறந்திருக்கலாம் டா.”

ராகுல் இப்படிச் சொல்லவும் காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு அவனைப் பார்க்கும்படி நன்றாகத் திரும்பி அமர்ந்து, “ஏன்டா உனக்கு இந்த விபரீத ஆசை” என்றான் கௌஷிக்.

“நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தேன்னு வை, நான் உன்னைத் தான் டா கல்யாணம் பண்ணியிருப்பேன். நீ ஏன்டா பொண்ணா பொறக்கலை? ஏன்டா?” என்று கேட்டுக் கொண்டே இரு கைகளாலும் சராமாரியாக ராகுல் கௌஷிக்கை அடிக்கத் தொடங்க, கௌஷிக்கும் பதிலுக்கு ராகுலை அடிக்க ஆரம்பித்திருந்தான். ஒரு கட்டத்தில் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட கண்ணில் நீர் வரும்வரை சிரித்தார்கள்.

“சரி அதெல்லாம் வேண்டாம். நீ சூர்யா. நான் தேவா. என் தளபதிடா நீ” என்று சொல்லி கௌஷிக்கின் தோளோடு அணைத்துக் கொண்டான் ராகுல்.

“ம்க்கூம் அவ்ளோ சீனெல்லாம் இங்க கிடையாது. வேணா ‘நண்பேன்டா’ன்னு சொல்லிக்கோ.”

“யூ மீன் ஆர்யா அன்ட் சந்தானம்? பட் ஒய்டா?”

“ஏன்னா அதுல தான் சந்தானம் சார் ஒரு டயலாக் சொல்லுவாரு. ‘பத்துப் பதினைஞ்சு ஃபிரெண்ட்ஸ் வைச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஃபிரெண்டை வைச்சுக்கிட்டு நான் படுற பாடு’ அப்படின்னு. அது எனக்கு ரொம்ப நல்லாவே பொருந்தும்டா. என் பாடும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டே வண்டியைக் கிளப்பினான் கௌஷிக்.

இருவரும் வீடு வந்து சேரும் பொழுது மணி பத்தைத் தாண்டியிருந்தது. வீடென்று சொல்ல முடியாத அளவிற்குப் பரந்து விரிந்த மாளிகையாகவே காட்சியளித்தது ராகுலின் இல்லம்! வீடும் தோட்டமும் வேலைக்காரர்களின் புண்ணியத்தில் பளிச்சென்று ஜொலித்தது. ஆனால் அந்த வீட்டில் ஒரு உயிர்ப்பு இல்லை.

எப்பொழுதும் போல் அந்த வீட்டின் வெறுமையை வெறுத்தவனாக ராகுல் மாடிக்குத் தன்னறைக்கு செல்ல முயல, அவனை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த பிறகே மாடிக்குச் சென்று விட்டு வந்தான் கௌஷிக்.

கௌஷிக் மாடியில் இருந்து இறங்கும் நேரம் சட்டென்று சந்தோஷின் அறையில் விளக்கு எரிந்தது. யோசனையுடன் கௌஷிக் அங்கு செல்ல, அவன் கதவைத் திறக்கும் முன்னரே கதவைத் திறந்து கௌஷிக்கைப் பார்த்துச் சிரித்தான் சந்தோஷ்.

“சந்தோஷ் குட்டி, இன்னும் தூங்கலையா நீங்க? தனியா என்ன பண்றீங்க? தூக்கம் வரலைன்னா கமலா பாட்டியைக் கூப்பிடலாம் தானே?” என்று கேட்டுக் கொண்டே அவனைத் தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்து தலையைக் கோதிக் கொடுத்தான் கௌஷிக்.

“இல்ல அங்கிள். பாட்டி ரொம்ப டயர்டா தெரிஞ்சாங்க. அதான் தூங்கச் சொல்லிட்டேன்” தன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடுப் பேசும் அந்தச் சிறுவனையே ஆதூரமாக சிறிது நேரம் பார்த்திருந்தான் கௌஷிக்.

மனது கனத்துப் போனது. கடவுளே இந்தக் குழந்தைக்கு எதற்கிந்த சாபம் என்று மனம் ஊமையாக அழுதது. தாய் திரும்பியும் பார்க்காமல் இருக்க, தந்தையோ அருகில் இருந்தும் கவனிக்க மறுக்கிறான்.

ராகுலிடம் கேட்டால் ‘நான் பாசம் வைக்கும் யாரும் எனக்கு நிலைப்பதில்லை’ என்று விரக்தியான பதில் வரும். அல்லது ‘அவனைப் பார்த்துக்கத்தான் கமலாம்மா இருக்காங்களே’ என்று விட்டேத்தியான பதில் வரும்.

கமலாம்மா பார்த்துக் கொள்வார் தான். அவருமே கூட வயதானவர் வேறு. ஆயிரம் பேர் பார்த்தாலும் தாய் தகப்பன் பார்ப்பது போல் வருமா? இதை எல்லாம் எப்பொழுது தான் இந்த ராகுல் புரிந்து கொள்ளப் போகிறானோ என்று எண்ணிய பொழுது ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது கௌஷிக்கிற்கு.

“அங்கிள், டேட் ட்ரிங்க பண்ணியிருக்காங்களா?” தயங்கித் தயங்கிக் கேட்டான் சந்தோஷ்.

அவன் கேட்ட கேள்வி சுரீரென்று கௌஷிக்கைத் தாக்கியது. ஏழு வயதுச் சிறுவன் இவனுக்கெப்படி இந்த விவரமெல்லாம் தெரிய வந்தது! சந்தோஷ் இயல்பிலேயே அப்படித்தான். வயதுக்கு மீறிய புத்தி சாதுர்யம் அவனுக்கு உண்டு. அதுவுமில்லாமல் அவன் படிக்கும் பள்ளியும் அப்படி.

“ஏன்டா கண்ணா அப்படிக் கேட்குற?”

“இல்ல நேத்து நீங்க போனதுக்கப்புறம் டேட் வந்து என்னைக் கொஞ்சுனாங்க. அப்ப அவங்க மேல ஒரு பேட் ஸ்மெல் வந்தது. என் பிரெண்ட் ஆத்மி சொல்லியிருக்கா. அவங்க டேடியும் இப்படித்தானாம்” பெரிய கண்களை உருட்டிக் கொண்டு கைகளை அசைத்துக் கொண்டு கதை சொல்வது போலச் சொன்னான் சந்தோஷ்.

ஒரு கணம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த கௌஷிக், “அப்படியெல்லாம் எதுவும் இல்ல சந்தோஷ் குட்டி. உங்க டேட் நேத்து குளிக்க மறந்திருப்பானா இருக்கும். அவனுக்கு அதைக் கூட அவன் பி.ஏ நான் வந்து தானே நியாபகப்படுத்த வேண்டியிருக்கு” என்று சலிப்பாகச் சொல்வது போல் சொல்ல, கைகளால் வாயை மூடிக் கொண்டு கிளுக்கிச் சிரித்தான் சின்னவன்.

மேலும் சில பல கதைகள் பேசி அவன் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்டு கௌஷிக் எழுந்து வர, சரியாக அவன் கதவை மூடும் நேரம், “கௌ அங்கிள், குட் நைட்” என்று சொல்லிவிட்டுப் போர்வைக்குள் சுருண்டு கொண்டான் சந்தோஷ்.

இந்த ‘கௌ அங்கிள்’ ஐ வைத்து இருவரும் அடித்துக் கொள்வார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று கௌஷிக்கும், அப்படித்தான் அழைப்பேன் என்று சந்தோஷும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வார்கள்.

இப்பொழுது சொன்னால் கௌஷிக் எப்படியும் சண்டை போட மாட்டான் என்பதை யூகித்து விவரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டது அந்த வாண்டு. கௌஷிக்கும் அவன் யூகிப்பைப் பொய்யாக்காமல் சிரித்துக் கொண்டே “குட் நைட் சந்தோஷ்” என்று சொல்லிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு நைட் லேம்ப்பைப் போட்டு விட்டுக் கிளம்பினான்.

ராகுல் எவ்வளவோ வற்புறுத்தியும் அங்கேயே ஒரே வீட்டில் தங்க மறுத்துவிட்டான் கௌஷிக். ஆரம்பத்திலிருந்தே தனி வீடுதான். தன் வீட்டிற்கு செல்லும் வழியில் சந்தோஷுக்காகவாது ராகுலின் வாழ்க்கையை சீர்படுத்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே தன் பயணத்தைத் தொடர்ந்தான் கௌஷிக்.

error: Content is protected !!