NPG-10

NPG-10

கீதாஞ்சலி – 10

கண் இமைக்கும் நேரத்தில் அவர்களை நெருங்கி இருந்தான் ராகுல் ரவிவர்மன். ராகுல் ஓடி வருவதைப் பார்த்த அவர்கள் நால்வருள் ஒருவன் மட்டும் அமிர்தாவின் கையைப் பற்றிக் கொள்ள மற்ற மூவரும் அவர்கள் இருவரையும் மறைத்தாற் போல முன்னால் வந்து நின்றார்கள்.

ராகுலை அடையாளம் கண்டு கொண்ட மூவருள் ஒருவன் பரிகாசமாகச் சிரித்தான்.

“டேய், இங்கப் பாருங்கடா, நம்ம இசை அமைப்பாளர் சாரு… சார் உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம். நீ பாட்டுக்கு கண்டும் காணாம போவியா? அதை வுட்டுட்டு…”

அதற்குள் காருக்குள் இருந்த ஒருவன் உரக்கக் குரல் கொடுத்தான்.

“டேய்… அவன் கிட்ட என்ன பேச்சு? அவனை அடிச்சுப் போட்டுட்டு அவளை இழுத்துட்டு வாங்கடா. யாராவது வர்றதுக்குள்ள சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணுவோம்.”

அதைக் கேட்டு அலட்சியமாகச் சிரித்தான் ராகுல்ரவிவர்மன். கண்கள் மட்டும் இமைக்காமல் அந்த நால்வரையுமே உறுத்து விழித்த வண்ணம் இருந்தது. கண்களாலேயே அவர்களை மிரட்டிக் கொண்டு இருந்தான்.

“ஐயோ அம்மா… பார்வை எல்லாம் பலமே இருக்குதே. எங்களுக்கு பயமா இருக்கே” நக்கலடித்தான் மற்றொருவன்.

“வெறும் பாதாமும் பிஸ்தாவுமா சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைச்சிருப்ப. நீ எல்லாம் எங்க அடி எல்லாம் தாங்க மாட்ட சார். பேசாமப் போயிடு” இது அமிர்தாவைப் பிடித்து வைத்திருப்பவன்.

ராகுலின் கண்கள் ஒரு நொடி அவன் கையில் சிக்கி இருக்கும் அமிர்தாவின் கைகளைத் தொட்டு மீண்டது. இன்னமும் அவன் கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் அமிர்தா. ஆனால் அவன் பிடி உடும்புப் பிடியாக இருந்தது.

இவர்கள் பேசுவது எதுவுமே காதில் விழாததைப் போல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவர்களை நோக்கி முன்னேறிய வண்ணம் இருந்தான் ராகுல்ரவிவர்மன்.

“யேய் என்ன? நாங்க பாட்டுக்கு சொல்லிகினே இருக்கோம். நீ பாட்டுக்கு வந்துகினே இருக்க. டேய் இவன் அடங்க மாட்டான் போல டா. வாங்கடா மியூசிக்குக்கு மியூசிக் சொல்லிக் கொடுப்போம்” மூவரும் ராகுலை நோக்கி முன்னேறி வர,

சரியாக அந்த நேரம் கௌஷிக்கும் அங்கு வந்து சேர்ந்தான். காரில் சந்தோஷ் இருந்ததாலும் அதுவும் ஏற்கனவே சந்தோஷ் கொஞ்சம் பயந்து போய் இருந்ததாலும் கௌஷிக் காரை விட்டு இறங்கவில்லை. தானும் வந்து விட்டதை ராகுலுக்குத் தெரிவிக்கும் வகையில் மெர்சிடிசின் ஹாரன் ஒலி மட்டும் ஒரு தினுசாக சன்னமாக ஒலித்து அடங்கியது.

இங்கு வந்து சேர எடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் யார் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமோ அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தான் கௌஷிக். அதற்குள்ளாக சத்யவதியும் கௌஷிக்கிற்கு அழைத்து அமிர்தா பேசிய அனைத்து விபரங்களையும் தெரிவித்திருந்தார். தாங்கள் அமிர்தாவைப் பார்த்து விட்ட விபரத்தை அவரிடம் கூறி குழந்தை நிலாவுடன் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியும் இருந்தான் கௌஷிக்.

எப்படியும் போலீஸ் இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள். அதுவரையில் இந்த நால்வரையும் சமாளிப்பது ராகுலுக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்று கௌஷிக்கிற்கு நன்றாகவே தெரியும். அதனால் கொஞ்சம் நிதானமாகவே காருக்குள் அமர்ந்து அவர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் கையில் மட்டும் ராகுலின் பாதுகாப்பிற்கென கைவசம் வைத்திருக்கும் துப்பாக்கி தயாராக இருந்தது.

ராகுலை நெருங்கி இருந்த மூவரில் ஒருவனின் கை உயர்ந்தது மட்டும் தான் தெரியும். அடுத்த நொடி சூறாவளியில் சிக்கிக் கொண்ட இலைகளாகிப் போனார்கள் அம்மூவரும். அடி ஒவ்வொன்றும் இடி போல் விழுந்தது. மிதி ஒவ்வொன்றும் யானை மிதிப்பதைப் போல் ‘வதக் மிதி’யாக இருந்தது. அடி வாங்குகையில் தான் ராகுலைக் குறைத்து மதிப்பிட்ட தங்கள் மடத்தனத்தை நொந்து கொண்டே வீழ்ந்து கொண்டிருந்தார்கள் அம்மூவரும்.

இவர்களின் கதியைப் பார்த்துவிட்டு அமிர்தாவைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தவன் அவளை வலுக்கட்டாயமாக காருக்கு இழுத்துச் செல்ல, காருக்குள் இருந்தவனோ காரை ஸ்டார்ட் செய்து கிளம்பத் தயாரானான். அவனிடமிருந்து விடுபட முடியாமல் “ரவீ…” என்று உரக்கக் கத்தியிருந்தாள் அமிர்தவர்ஷினி.

சிறு வயது முதலே எல்லோருக்கும் அவன் ராகுல் என்றால் அமிர்தாவிற்கு மட்டும் எப்பொழுதுமே அவன் ரவி தான். அவளின் அந்த அழைப்பில் நிலைமை உணர்ந்து இன்னும் வேகமாக, பலமாக சுழன்றடித்தான்.

அமிர்தாவைக் காருக்குள் ஏற்றும் கடைசி நொடியின் விளிம்பில் அவளைப் பிடித்திருந்தவனை நெருங்கி இருந்தான் ராகுல். இவனை அருகில் பார்க்கவுமே அவனுடைய கை தானாக அமிர்தாவின் மீதிருந்த பிடியைத் தளர்த்தியது.

அவனிடமிருந்து விடுபட்டவள் வேகமாக ராகுலின் பின் வந்து நின்று கொண்டு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். ஒற்றைக் கையில் அடக்க முடியாத நன்கு வலுவேறியிருந்த அவனுடைய திரண்ட புஜத்தை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

அமிர்தாவின் இதயம் படபடக்கும் வேகத்தைத் தன் கையின் வழியாக உணர்ந்தான் ராகுல். அவன் கோபம் இன்னும் இரண்டு மடங்கானது. அந்தக் கோபத்தை அப்படியே அமிர்தாவை இவ்வளவு நேரமும் பிடித்து வைத்திருந்தவனுடைய கையின் மீது காட்டினான். ராகுலின் கோபத்தைத் தாக்குப் பிடிக்க முடியாத அந்தக் கையின் எலும்பு நொறுங்கிப் போனது.

அதற்குள் அந்த இடத்திற்குப் போலீஸ் வந்து சேர, மொத்தமாய் அனைவரையும் அள்ளி ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போனார்கள். கீழே இறங்காமல் காரின் உள்ளேயே இருந்தவன் மட்டும் காரைக் கிளப்பிக் கொண்டு தப்பித்து விட அவனையும் போலீஸ் விரட்டிப் பிடித்தது.

காவல்துறை வாகனம் கிளம்பிய பிறகு தங்களது காருக்குத் திரும்பி வந்து சந்தோஷ் அமர்ந்திருந்த இருக்கையின் பக்கத்துக் கதவை ராகுல் திறக்க, “அப்பா” என்றழைத்து இறுக்கமாகக் கழுத்தோடு கட்டிக் கொண்டான் சந்தோஷ். மிகவும் பயந்திருந்தான் என்பது அவன் கழுத்தை இறுக்கியிருந்த விதத்திலேயே தெரிந்தது.

என்னதான் கௌஷிக் கூடவே இருந்திருந்தாலும் சந்தோஷிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தாலும் சந்தோஷின் மனமும் கண்களும் எதிரில் பார்க்கவே அச்சுறுத்தும் தோற்றமுள்ள அத்தனை பேருக்கு நடுவில் தனித்து நிற்கும் தந்தையையே சுற்றி சுற்றி வந்தது. மிகவும் பயந்து போனான் குழந்தை.

தந்தை அங்கு தனியே அத்தனை பேருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க இங்கு தன்னுடன் சொகுசாக அமர்ந்திருக்கும் அவனுடைய ‘கௌ அங்கிள்’ மீது கூட லேசாகக் கோபம் எட்டிப் பார்த்ததுப் பையனுக்கு. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே, அது இது தானோ?

“ஒன்னும் இல்லடா குட்டி. என் சந்தோஷ் பிரேவ் பாயாச்சே. எதுக்கும் பயப்பட மாட்டானே” ஆறுதலாக அவன் தலையை வருடிக் கொண்டே கூறினான் ராகுல். முதல் முறையாகத் தன் வாரிசின் ஸ்பரிசத்தை ஆழ்ந்து உணர்ந்து தனக்குள் நிரப்பிக் கொண்டான் ராகுல். சின்னவனின் இந்த அக்கறை தகப்பனை மிகவும் நெகிழ்த்தி இருந்தது.

“நோ அப்பா, ஐ அம் நாட் அஃப்ரெய்ட், பட் ஐ வாஸ் வரிட் அப்பா” பேச்சு பேச்சாக இருந்தாலும் ராகுலை விட்டு அகலவில்லை சந்தோஷ்.

எல்லா மகன்களுக்குமே தங்களுடைய தந்தை தான் முதல் ஹீரோ. ஆனால் இந்த ஹீரோ இதுவரைத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதே இல்லையே. அதனால் கொஞ்சம் வியப்புடனே,

“யூ ஆர் அ கெரிஸ்மடிக் ஹீரோ அப்பா” என்று சொல்லிக் கொஞ்சம் தயக்கத்துடன் தகப்பனின் கன்னத்தில் முத்தம் வைத்தான் சின்னவன்.

இதுவரை தான் வாங்கிய அத்தனை அத்தனை விருதுகளும் பரிசுகளும் சாதாரணமாகத் தோன்றியது ராகுலுக்கு, மகனின் ஓற்றை வரிப் பாராட்டிற்கு முன். கன்னத்தில் பதிந்த சில்லென்ற ஸ்பரிசம் பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்திற்கே அரசனாக உணர வைத்தது. கண் மூடி அந்த இனிமையைத் தனக்குள் சேகரித்துக் கொண்டான் அந்த மெல்லிசைக்காரன்.

இவர்கள் இருவரையுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அமிர்தா. அவளுக்கும் அந்த ஆறுதலும் அணைப்பும் இப்பொழுது மிகவும் தேவையாக இருந்தது.

தன்னையும் இது போல அரவணைத்து “ஒன்னுமில்ல, பயப்படாதே” என்று யாராவது சொல்வார்களா என்று அவளது ஒவ்வொரு அணுவும் ஏங்கியது. ஆனால் அப்படி அரவணைத்துக் கொள்ளக் கூடிய ஒருவரும் தற்சமயம் இவ்வுலகில் இல்லை என்ற உண்மை முகத்தில் அறைந்தது.

அடுத்ததாகத் தான் அரவணைத்துக் கொள்ளக் கூடிய ஒரே ஜீவனானத் தன் நிலாவைக் காண மனம் ஏங்கியது. அவளின் ஏக்கம் புரிந்தாற் போல,

“சந்தோஷ் குட்டி அங்க பாருங்க, ஆன்ட்டி ரொம்ப பயந்து போய் இருக்காங்க. போங்க நீங்க போய் ஆன்ட்டியைக் கூட்டிட்டு வந்து உங்க பக்கத்துல உட்கார வைச்சுக்கோங்க. நீங்க கூட இருந்தா ஆன்ட்டிக்கு ரொம்பத் தைரியமா இருக்குமாம்.”

ராகுல் சொல்லவும் மறு பேச்சில்லாமல் கார் சீட்டில் இருந்து இறங்கிச் சென்று அமிர்தாவின் கைகளைப் பற்றிக் காரை நோக்கி இழுத்து வந்தான் சந்தோஷ். காரில் அமர்ந்த பிறகும் கூட அமிர்தாவின் கைகளை சந்தோஷ் விடவே இல்லை. அவள் கைகள் நடுங்கிக் கொண்டே இருப்பதைப் பார்த்தவன்,

“ஆன்ட்டி, பயப்படாதீங்க. டோன்ட் வர்ரி” என்றுப் பெரிய மனிதத் தோரணையில் கூறினான் சந்தோஷ். சற்று முன் தான் ஏங்கி எதிர்பார்த்த அரவணைப்பு கிடைத்து விட்டதாகவே தோன்றியது அமிர்தாவிற்கு. இது வரையில் கலங்காமல் இருந்த அந்தக் கண்களிரண்டும் இப்பொழுது தாரைத் தாரையாகக் கண்ணீரை உகுத்தது.

அதற்குள் இச்சம்பவம் குறித்து யாரிடமோ அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த கௌஷிக்கும் வந்து சேர அந்த மெர்சிடிஸ் பென்ஸ் காவல் நிலையத்தை நோக்கி விரைந்தது.

************

அங்கு காவல் நிலையத்திலோ, மாட்டிக் கொண்ட அனைவரும் அட்க்ஷரம் பிசகாமல் ஒரே வரியைத் தான் திரும்பத் திரும்பப் படித்தார்கள்.

‘இந்தப் பொண்ணு தனியா நடந்து போய்க்கிட்டு இருந்துச்சு சார். ஆள் ஷோக்கா இருக்கே, தூக்கிடலாம்னு நினைச்சோம். அதுக்குள்ள இவர் வந்து காரியத்தைக் கெடுத்துட்டாரு.’

போலீஸ் எத்தனை முறை அடித்து விசாரித்த போதும் அவர்கள் யாரும் இதைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. அமிர்தாவும் எதுவும் மறுத்துப் பேசவில்லை.

எனவே காவல் நிலையத்தில் பெண்ணைக் கடத்த முயன்றதாக மட்டுமே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள். உண்மை காரணம் வெளி வராமலேயே போனது.

ஆனால் வீடு திரும்பியதும் முதல் வேலையாகக் கௌஷிக் அந்தக் கேள்வியை அமிர்தாவிடம் கேட்டான். அவனுக்குத் தான் சத்யவதி அழைத்து எல்லா விபரங்களையும் சொல்லி இருந்தாரே. காவல் நிலையத்தில் அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்திற்கும் அமிர்தா சத்யவதியிடம் கூறிய விடயங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவே இல்லையே.

“அமிர்தா உண்மையைச் சொல்லு, வந்தவங்க யாரு?”

“எனக்குத் தெரியாது கௌஷிக் அண்ணா. அவங்களை நான் முன்ன பின்ன பார்த்தது கூடக் கிடையாது.” கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிய பதிலளித்தாள் அமிர்தா.

“நீ அவங்களைப் பார்த்தது கிடையாது அப்படிங்குறதை நான் ஒத்துக்கிறேன். ஆனா இந்த வேலையை யாரோ சொல்லித் தான் அவங்க செஞ்சிருக்காங்க. இது உனக்குத் தெரியும். உனக்குத் தெரியுங்கிறது எனக்கும் தெரியும். அந்த யாரோ யாரு அப்படிங்குறது தான் இப்ப என் கேள்வி” நிறுத்தி நிதானமாக அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டான் கௌஷிக்.

“டேய், கௌஷிக், என்னடா சொல்ற? யாரோ அனுப்பி இருக்காங்களா? யாரு அனுப்பி இருக்கா? எதுக்காக இப்படி செய்றாங்க?” குழப்பத்துடன் கேட்டான் ராகுல்.

“அதைத் தான் ராகுல், நானும் கேக்குறேன். அவங்க என்ன பண்ணப் போறாங்கங்குறது இவளுக்கு எப்படி முன்னாடியே தெரிய வந்தது. அம்மாவுக்கு கால் பண்ணி நிலாவுக்கு வேற யாருமே இல்லை. நீங்க எப்படியாவது அவளைப் பார்த்துக்கங்கன்னு அழுதிருக்கா.”

“அது… அது வந்து… அவங்க தொடர்ந்து ஃபாலோ பண்ணதால பயந்து போய் அப்படி சொன்னேன்.”

“சரி, நீ பயத்துல அப்படி சொன்னதாவே வைச்சுக்குவோம். அப்படி பயந்து போனவ அவங்க கிட்ட இருந்து தப்பிக்க ஒன்னு மறுபடியும் ஃபேக்ட்ரிக்குள்ளயே போயிருக்கணும் இல்ல வீட்டுக்கு ஓடி வந்திருக்கணும். ரெண்டும் செய்யாம ஏன் ஹை வேய்ஸ் ரோட்டுக்குப் போன?”

“அங்க போனா ஏதாவது வண்டி வரும். உதவி கேட்கலாமின்னு…”

“அந்த உதவியை உங்க ஃபேக்டரிக்கே திரும்பப் போய் கேட்டிருக்கலாமே?”

“…………” பதிலில்லை அமிர்தாவிடம்.

“உன் எண்ணமெல்லாம் நீ அவங்க கிட்ட மாட்டக் கூடாதுங்குறதுல இல்லை. நீயே மாட்டிக்கிட்டாலும் நீ எங்கே தங்கி இருக்கேங்கிற விவரம் அவங்களுக்குத் தெரியக் கூடாது அப்படிங்கிறதுல தான் உன் முழு கவனமும் இருந்திருக்கு.”

“……….”

“அவங்க யாரு எப்படிப்பட்டவங்கங்கிறதும் உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதனால தான் அங்க காப்பகத்துல இருக்குற குழந்தைங்க யாருக்கும் ஆபத்து வந்துடக் கூடாதுன்னு அம்மா கிட்ட சொல்லி இருக்க.

அவங்க யாரு என்னன்னு முன் கூட்டியே தெரிஞ்சதால தானே அப்படிப் பேசியிருக்க? அவனுங்க போலீஸ் ஸ்டேஷன்ல சொன்ன கதைக்கும் நீ சொல்றதுக்கும் கொஞ்சம் கூட ஒத்தே வரலையே?”

இப்பொழுதும் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது அமிர்தாவிடமிருந்து.

“அம்மாடி அமிர்தா, உன்னை சுத்தி என்ன தான் மா நடக்குது? நீ ஃபோன்ல பேசினப்போ என் ஈரக்குலையே நடுங்கிப் போச்சும்மா. இவங்க ரெண்டு பேரும் சரியான நேரத்துக்கு அங்க வரலைன்னா உன் கதி என்ன ஆகியிருக்கும். கொஞ்சம் யோசிச்சுப் பாரு.” படபடப்பாகப் பேசிக் கொண்டே போனார் சத்யவதி.

‘பெருசா ஒன்னும் நடந்திருக்காது அத்தை. எங்க அம்மா, அக்கா போன இடத்துக்கே என்னையும் அனுப்பி வைச்சிருப்பாங்க’ மனதோடு எண்ணிக் கொண்டாளே தவிர வாய் திறந்துப் பேசவில்லை அமிர்தா.

“நீ ஏதாவது சொன்னா தானேம்மா நாங்க எப்படி இந்த சிக்கலைத் தீர்க்குறதுன்னு யோசிக்க முடியும். இப்படி ஒன்னுமே பேசாம இருந்தா என்னம்மா அர்த்தம்?” பரிதவிப்பாகக் கேட்டார் சத்யவதி.

“உனக்கு ஒரு ஆபத்துங்கவும் தன்னோட உயிரைப் பத்தியோ இல்ல கார்ல இருந்த தன் மகனோட உயிரைப் பத்தியோ கொஞ்சம் கூட யோசிக்காம உனக்காக வந்து நின்னானே, அவனுக்கு மரியாதை கொடுத்தாவது என்ன நடந்துச்சுன்னு உண்மையைச் சொல்லு அமிர்தா.

இல்ல, இப்பவும் உனக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா நாளைப் பின்ன ராகுலுக்கோ இல்ல சந்தோஷுக்கோ அதே ஆட்களால ஏதாவது ஆபத்து நேர்ந்தா அதுக்கு நீ தான் காரணமா இருப்ப. சொல்லிட்டேன்.” எவ்வளவு கேட்டாலும் மழுப்பியே பதில் சொல்லும் அந்தப் பெண்ணின் மீது சரியான கோபம் வந்தது கௌஷிக்கிற்கு.

கடைசியாக கௌஷிக் சொன்ன விஷயம் அமிர்தாவைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அப்படியும் நடக்குமோ? தன்னால் இவர்களுக்கு எதுவும் பாதிப்பு வந்து விடுமோ?

அதுவும் சந்தோஷுக்கு எனும் பொழுது அதனைக் கற்பனை செய்து பார்க்கக் கூட அவள் மனம் விரும்பவில்லை. கண்கள் இரண்டும் அவசரமாக அறைக்குள் அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கும் சந்தோஷையும் நிலாவையும் தொட்டு மீண்டது.

ராகுலைப் பார்க்க அவன் முகமோ தீவிர பாவத்தைத் தத்தெடுத்திருந்தது. அந்தக் கண்கள் இரண்டும் அவளையே உற்று நோக்கிய வண்ணம் இருந்தன.

“என்ன நடந்திருந்தாலும் பரவாயில்ல, சொல்லிடு அமிர்தா. அப்ப தான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்க முடியும்” சத்யவதியும் தன் பங்கிற்குக் கேட்க, அதற்கு மேலும் மறைக்க விருப்பமில்லாமல் அமிர்தா தன் வாய்ப் பூட்டை உடைத்தாள்.

“அவங்க எல்லாரும் நிலா தாத்தாவோட ஆளுங்க. நிலா அப்பாவோட அப்பா” சொல்லிவிட்டுக் கொஞ்சம் இடைவெளி விட்டாள் அமிர்தா.

“அவங்க எதுக்கும்மா உன்னைக் கடத்த முயற்சி பண்ணனும்?” சத்யவதி கேட்க,

“ஏன்னா அவங்க வீட்டு வாரிசா நிலா இருக்குறது அவங்களுக்கு விருப்பமில்ல” கத்தி சொல்லியபடி அப்படியே தரையில் மடிந்து அமர்ந்தாள் அமிர்தா.

“நிலாவோட அப்பா ஜீவா. கும்முடிப்பூண்டி பக்கம் ஆந்திரா பார்டர்ல தான் இவங்க சொந்த ஊர்.

மா… ம்க்கூம்… ஜீவாவோட அப்பா ஜாதிக் கட்சித் தலைவர். அரசியல் செல்வாக்கு உள்ளவர். கோடிக்கணக்குல சொத்து வைச்சிருக்கிறவர். ஜாதிக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவார். எந்தப் போலீசும் அவங்க ஊர்ல ஒன்னும் பண்ண முடியாது. அங்க இவங்க வைச்சது தான் சட்டம்.

அவரோட ஒரே பையன் ஜீவா அவர் பேச்சை மீறி லவ் மேரேஜ் பண்ணினது அவருக்குப் பெரிய அவமானமா போச்சு. இந்தக் கல்யாண விஷயம் தெரிஞ்சதும் அதிர்ச்சியில மா… ஜீவா அம்மா இறந்தே போயிட்டாங்க. அதுவும் அவர் கோபத்துக்கு ஒரு காரணம்.

ஆனா மா…ஜீவாவுக்கு அவங்க அம்மா இறந்தது தெரியாது. தெரிஞ்சிருந்தா அப்பா தன்னைக் கண்டந்துண்டமா வெட்டிப் போட்டாலும் பரவாயில்லைன்னு அப்பவே கிளம்பி இருப்பாங்க. ஆனா அவங்களுக்குத் தெரியாது.

அவங்க அப்பாவுக்குப் பயந்து எங்க எல்லாரையுமே சென்னையை விட்டுக் காலி பண்ணி டெல்லி பக்கம் கூட்டிட்டுப் போயிட்டாங்க. நொய்டாவில தான் ஒரு வருஷத்துக்கும் மேல இருந்தோம். நிலா பிறந்தப்புறம் அவளை அவங்க அம்மா கிட்ட காட்டணும்னு மா…ஜீவாவுக்கு ரொம்ப ஆசை.

நிலாவோட ஃபர்ஸ்ட் பர்த்டேவை ஒட்டி இங்க தமிழ் நாட்டுக்குக் கிளம்பி வந்தோம். ஜீவாவோட ஃப்ரெண்டோட கார் எடுத்துக்கிட்டுக் கிளம்பினோம். வழியில கார் ரிப்பேராகி நின்ன போது நிலா ரொம்ப அழுகை.

நான் அவளைத் தூக்கிக்கிட்டு காரை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் நடந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு அவ அழுகை அடங்கின அப்புறம் திரும்பி வந்து பார்த்தப்போ”

அதற்கு மேல் சொல்ல முடியாமல் அழுகை பீறிட்டு எழுந்தது அமிர்தாவிற்கு. சத்யவதி, கௌஷிக், ராகுல் மூவருமே அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள். சத்யவதி ஆறுதலாக அவளைத் தன் தோள் சாய்த்துக் கொண்டார்.

“காரை லாரி வைச்சு… அக்கா, மாமா எல்லாருமே ஸ்பாட்லேயே… அம்மா மட்டுந்தான் உயிரைக் கையில புடிச்சுக்கிட்டு இருந்தாங்க.”

பெரும் விசும்பல்களுக்கிடையில் கூறி முடித்தாள் அமிர்தா. ஒவ்வொரு தடவையும் அவள் ஜீவாவை மாமா என்று குறிப்பிட வந்து பின் ஜீவா என்று மாற்றியதை யாரும் கவனிக்கவில்லை.

“என்ன ஆனாலும் நிலாவை மட்டும் அவங்க கண்ல காட்டக் கூடாதுன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டு அம்மாவும்… அம்மாவும்…”

அதற்கு மேல் தொடர முடியவில்லை அமிர்தாவால். அதற்கு மேலும் அவளைப் பேசச் சொல்லும் துணிவும் யாருக்கும் அங்கிருக்கவில்லை. கேட்ட விஷயத்தின் தாக்கம் அவர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருந்தது.

“அதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸ் ஹெல்ப்போட தான் நிலாவை அவங்க கண்ல படாம காப்பாத்தி ஒரு வழியா இங்க வந்து சேர்ந்தோம். இப்பவும் கண்டுபிடிச்சிடுவாங்களோங்கிற பயம் இருந்துகிட்டே தான் இருக்கும். எங்களால யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு தான் நான் யார் கூடவும் சரியா பேசுறது கூட கிடையாது. அத்தையைக் கூட இதுக்காகத்தான் தள்ளியே வைச்சிருப்பேன்.”

அமிர்தா சொல்லி முடிக்கவும் அவளுடைய இத்தனை நாள் இறுக்கத்திற்கும் காரணம் புரிந்தது மற்றவர்களுக்கு.

“இப்பவும் பிரச்சனை முடிஞ்சு போகலை. எனக்குத் தெரிஞ்சு அவங்களுக்கு நிலாவும் நானும் அந்த ஆக்சிடென்ட்ல இறக்கலைங்கிற விஷயம் தெரிய வந்திருக்கணும். அப்போல இருந்தே எங்களை அவங்க தேடிக்கிட்டு இருந்திருக்கணும். இப்போ நியூஸ்ல வந்தது அவங்களுக்கு ஈசியா போச்சு. வந்துட்டாங்க”

இதைச் சொல்லவும் ராகுல் திடுக்கிட்டுப் போனான். எத்தனை பெரிய சிக்கல் இந்தப் பெண்ணிற்குத் தன்னால் நேர்ந்திருக்கிறது என்று எண்ணித் துணுக்குற்றான். எப்படியாவது இந்தப் பெண்ணையும் அந்தக் குழந்தையையும் சிக்கலில் இருந்து காப்பாற்றியே தீருவது என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

இவ்வளவு அழகுக் குழந்தை தங்கள் வீட்டின் வாரிசாகக் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்தப் பெரிய மனிதர்(!). ஜாதிக்காக சொந்த மகனைக் கொல்லும் அளவிற்குக் கூட இந்நாட்டில் இன்னும் ஆட்கள் இருக்கிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்கவில்லை அந்த மெல்லிசைக்காரனுக்கு.

“சரி, அப்போ இந்தப் பிரச்சனை தீர என்ன தான் வழி?” கேட்டார் சத்யவதி.

“ஒரே வழி தான் இருக்கு அத்தை. நாங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்குறது தானே அவங்க பிரச்சனை? நானே குழந்தையோட அவங்க முன்னாடி போய் நின்னுட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சு போயிடும்” விரக்திச் சிரிப்புடன் கூறினாள் அமிர்தா.

“ஆக… இந்தாங்க எங்க உயிரை எடுத்துக்கோங்கன்னு அவனுங்க முன்னாடி போய் நிக்கப் போற. அப்படித்தானே?” பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தை அடக்க பிரம்ம பிரயத்தனம் பண்ணிக் கொண்டே கேட்டான் ராகுல்.

“இதுக்கும் மேல என்னால வேற என்ன தான் பண்ண முடியும். நான் ஓடி ஓடி களைச்சுப் போயிட்டேன்” ஆயாசமாக வெளிவந்தது அமிர்தாவின் குரல்.

“அப்படி எல்லாம் உன்னை விட்டுட முடியாது” பட்டென்று பதில் வந்தது ராகுலிடமிருந்து.

“அப்போ நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ” நொடியும் தாமதமின்றி ராகுலைப் பார்த்துக் கூறியிருந்தார் சத்யவதி.

“அத்தை…”

“சத்யாம்மா…”

இருவரும் ஒரு சேர அதிர்ச்சியில் உரக்கக் கூவினார்கள்.

“இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் இருந்தீங்க. இவளைக் காப்பாத்திட்டீங்க. இதுக்கப்புறம் இவளை யார் காப்பாத்துவா? அதான் தெளிவா சொல்றாளே, பிரச்சனை இன்னும் முடியலை. திரும்ப வருவாங்கன்னு. ஒவ்வொரு தடவையும் யாரையாவது எதிர்பார்த்துக்கிட்டே இருக்க முடியுமா?

அது மட்டுமில்லாம நிலா அவங்க வீட்டோட வாரிசா இருக்குறது தானே அவங்க பிரச்சனை. அதை நீ மாத்து. இவளை அவங்க வீட்டு மருமகளா இல்லாம உன்னோட மனைவியா மாத்து. நிலாவை உன்னோட பொண்ணா தத்தெடுத்துக்கோ” தீர்மானமாகச் சொன்னார் சத்யவதி.

“இல்லத்தை அது சரியா வராது” என்று அமிர்தாவும்,

“இல்ல சத்யாம்மா, நான் இதுக்கு வேற ஏற்பாடு பண்றேன்” என்று ராகுலும் மாற்றி மாற்றி மறுப்புக் கூற,

“என் வயசுக்கு இதான் சரியான முடிவா இருக்குமுன்னு தோனுது. நான் கௌஷிக், கௌசல்யாவை எப்படிப் பார்க்கிறேனோ அதே மாதிரி தான் உங்க ரெண்டு பேரையும் பார்க்கிறேன். உங்க ரெண்டு பேருக்கும் அதே மாதிரி எண்ணம் என் மேல இருந்தா நான் சொல்றதைக் கேளுங்க. அப்புறம் உங்க இஷ்டம்” சொல்லிவிட்டு சத்யவதி எழுந்து குழந்தைகளிடம் சென்றுவிட ராகுலும் அமிர்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.

அவர்கள் இருவரையும் பார்த்தபடி கௌஷிக் அமர்ந்திருந்தான்.

error: Content is protected !!