NPG-3

NPG-3

கீதாஞ்சலி – 3

அமிர்தவர்ஷினி. ஐந்தரை அடி உயரத்தில் செதுக்கி வைத்த சிலை போன்ற உடலமைப்பு. வயதைக் குறைத்துக் காட்டவும், அழகாகத் தெரியவும் மெனக்கெடும் பெண்களுக்கு மத்தியில் புறத் தோற்றத்தில் சிறிதும் அக்கறை காட்டாத ஒரு பெண்.

என்னதான் அலட்சியமாக அலங்கரித்து இருந்தாலும், இயற்கை அவளுக்கென்று அமைத்த உருவ அமைப்பை மாற்ற முடியாதே. நிச்சயமாகக் கடந்து செல்வோர் திரும்பிப் பார்க்க வைக்கும் அலட்டலில்லாத அமைதியானப் பேரழகு.

முகத்தில் மற்ற பாகத்தை எல்லாம் அளவாகப் படைத்த அந்தப் பிரம்மன் இவள் கண்ணைப் படைக்கும் போது மட்டும் தயாளனாக ஆகிப் போனான் போலும். நீள் விழிகள் அழகுக்கு அழகு சேர்த்தது. அதை வெளிக்காட்ட மனமில்லாமல் முகத்தை மறைக்கும் அளவிற்குப் பெரிய கண் கண்ணாடி அந்தக் கண்களை சிறை செய்திருந்தது.

படிய வாரி முடியை இறுக்கமாகப் பின்னலிட்டிருந்தாள். அது அவள் இடையைத் தீண்டிக் கொண்டிருந்தது. நெற்றியில் ஒற்றை கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு. வலத்கை வெறுங்கையாக இருக்க இடது கையில் மட்டும் கறுப்பு நிற ரிஸ்ட் வாட்ச்.

கழுத்தில் இருப்பது வெளியே தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு சங்கிலி ஒன்று இதய வடிவ பென்டென்டுடன் தொங்கியது. அந்த சங்கிலியைப் பிடித்து விளையாடியபடியே இடுப்பில் இரண்டு வயதுக் குழந்தை நிரஞ்சலா.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்தே வந்ததால் கணுக்கால் வரைக்கும் ஏறியிருந்தது அந்தப் பாசிப்பயிறு பச்சை நிறத்தில் சந்தன நிற பார்டர் வைத்திருந்த காட்டன் புடவை.

அந்தக் காலை வேளையில் சாலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்களைத் தன் அரிசிப் பற்களைக் காட்டி ஈர்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சலா. குழந்தையின் முகத்தில் இருக்கும் சிரிப்பு மருந்துக்கும் தாயின் முகத்தில் இல்லை.

அன்று குழந்தை நிரஞ்சலாவிற்கு இரண்டாவது பிறந்தநாள். அம்மாவும் மகளுமாகக் கிளம்பி கோவிலுக்கு வந்திருந்தார்கள். இவர்கள் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்தது அந்த முத்து மாரியம்மன் ஆலயம்.

ஆலய முகப்பில் கிளை பரப்பியிருந்த ஆலமரத்தின் அருகில் வந்தவுடன் குழந்தையை இடுப்பிலிருந்து இறக்கி விட்டு அதன் காலணிகளைக் கழட்டி விட்டாள் அமிர்தவர்ஷினி.

கோவில் அர்ச்சகர் அம்மன் சந்நதியின் பிரகாரத்தில் அமர்ந்து அன்றைய தினசரி செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார். வார நாள் ஆதலால் அன்றுப் பெரிதாகக் கோவிலில் கூட்டமொன்றும் இல்லை. ஓரிருவரே பிரகார வலம் வந்து கொண்டிருந்தனர். குடுகுடுவென அவரை நோக்கி ஓடி வந்த குழந்தையைப் பார்த்தவர்,

“அடடே யார் வந்திருக்கிறது? நிரஞ்சலா பாப்பாவா? குழந்தை இன்னைக்குப் பட்டுப் பாவாடை எல்லாம் போட்டு நன்னா பேஷா கிளம்பி வந்திருக்காளே! உங்க ஆத்துல என்ன விசேஷம்டி குழந்தை?” என்று கேட்டபடி அமர்ந்த வாக்கிலேயே குழந்தை கையில் அருகிலிருந்த ஒரு ரோஜா பூவை எடுத்துக் கொடுத்தார்.

அவர் அப்படிக் கேட்கவும் சட்டென்று வெட்கம் வந்துவிட்டது குழந்தைக்கு. பாவாடையை ஒரு கையால் பிடித்தபடி கவனமாக ஓடிச் சென்று அங்கு வந்த அமிர்தவர்ஷினியின் கால்களைக் கட்டிக் கொண்டு புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“வாம்மா. நன்னா இருக்கியா? போய் அம்பாளை சேவிச்சுக்கோங்கோ. நான் இதோ வந்து தீபராதனைக் காட்டறேன்” என்று அர்ச்சகர் கூறவும் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அமிர்தவர்ஷினி.

கடந்த ஒரு வருட காலமாக அந்த ஊர் மக்களின் பொழுது போக்குப் பேச்சுப் பொருளாக மாறி இருக்கும் ஜீவன்கள் அமிர்தாவும் அவள் கையிலிருக்கும் குழந்தையும் தான்.

‘அந்தக் குழந்தை உண்மையிலேயே அவளோடது தானா?’

‘இவ அப்பா அம்மா அக்கா எல்லாரும் என்ன ஆனாங்க?’

‘அதெப்படி எல்லாரும் ஒரே நாளில இறந்து போவாங்க? இந்தப் பொண்ணு எதையோ மறைக்கிறா…’

‘நான் நினைக்கிறேன் இது ஏதோ காதல் கசமுசாவா இருக்கும். அதான் அவமானம் தாங்க முடியாம எல்லாரும் மொத்தமா போயிட்டாங்க போல இருக்கு.’

இப்படி ஆளுக்கு ஒரு அனுமானம் அமிர்தாவின் வாழ்க்கையைப் பற்றி. ஆனால் இது எதையும் அவள் காதில் போட்டுக் கொண்டதில்லை. யாருக்கும் நின்று பதில் சொன்னதுமில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று அனைத்தையும் / அனைவரையும் கடந்து சென்றுவிடுவாள் அமிர்தவர்ஷினி.

உண்மையான அக்கறை கொண்ட ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுள் அந்தக் கோவில் அர்ச்சகரும் ஒருவர். வாழ வேண்டிய வயதில் கையில் சின்னக் குழந்தையுடன் தனித்து நிற்கும் இந்தப் பெண்ணிடம் ஒரு வாஞ்சையுடன் கூடிய அனுதாபம் உண்டு அவருக்கு.

‘அம்மா தாயே லோகமாதா நீதானம்மா இந்தப் பொண்ணுக்கும் அந்தக் குழந்தைக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டணும்’ என்று மனதிற்குள் வேண்டியபடியே ஒரு பெருமூச்சுடன் அவரும் எழுந்து வந்தார்.

“ஒரு அர்ச்சனை பண்ணணும்” இது அமிர்தவர்ஷினி.

“பேஷா பண்ணிடலாம். பேர் நட்சத்திரம் சொல்லும்மா”

“நிரஞ்சலா, பரணி நட்சத்திரம், மேஷ ராசி”

விவரங்களைக் கேட்டுக் கொண்டு மந்திரத்தை ஓதியவாறே அர்ச்சகர் கர்ப்ப கிரகத்திற்குள் நுழைந்து விட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கண் மூடி நின்றாள் அமிர்தவர்ஷினி.

சென்ற வருடம் இதே நாளுக்கான ஏற்பாட்டின் போது தானே அவளது ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் தொலைத்தாள். நடந்து முடிந்த நிகழ்வுகள் நினைவுகளாக மாறிப் பேயாட்டம் போட கண்கள் நிறைவது போல இருந்தது.

பட்டென்று கண்களை அகலத் திறந்தவள் வந்த கண்ணீரை மீண்டுமாகக் கண்களுக்குள் உள்ளிழுத்துக் கொண்டாள். எதிரில் சர்வ அலங்காரத்தோடு சாந்த சொரூபிணியாக இருந்த அம்மனை உறுத்து விழித்தாள்.

‘எனக்காக வேண்டிக்க எதுவும் இல்லை. நீ எதையும் மிச்சம் வைக்கலை. இந்தக் குழந்தையையாவது நல்ல படியா வாழ வைக்க எனக்கு சக்தி கொடு’ வேண்டுதலா, கட்டளையா, மன்றாடலா எதுவென்றே புரியாத வகையில் அந்தத் தாயாருடன் அவள் பேச்சு வார்த்தையை நடத்தி முடிக்கவும் அர்ச்சகர் கையில் அர்ச்சனைத் தட்டோடு வரவும் சரியாக இருந்தது.

“நன்னா படிச்சு பெரிய ஆளா வரணும். தீர்க்காயுசா இருக்கணும்” என்று சொல்லியவாறே குழந்தையின் நெற்றியில் விபூதி குங்குமத்தைப் பூசி விட்டார் அர்ச்சகர்.

“இன்னைக்கு அவளுக்குப் பிறந்த நாள்” அர்ச்சகர் அவராக எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார் என்று தோன்றியதாலோ என்னவோ தானாகவே சொன்னாள் அமிர்தவர்ஷினி.

“அப்படியாம்மா ரொம்ப சந்தோஷம். அந்த அம்பாள் உன் குழந்தைக்கு எந்தக் கெடுதலும் வராம நல்லபடியா பார்த்துப்பா” என்று சொல்லி அவர் மீண்டும் ஆசிர்வதிக்க, ஒரு புன்சிரிப்புடன் தலையாட்டிவிட்டு குழந்தையுடன் பிரகார வலம் வரச் சென்றாள் அமிர்தவர்ஷினி.

பிரகார வலம் முடித்து வந்தவுடன் குழந்தையைக் கீழிறக்கிவிட்டுத் தானும் அமர்ந்தாள். அங்கே அதற்கு முன் அந்த அர்ச்சகர் படித்த செய்தித்தாள் கீழே இருக்க குழந்தை அதை விளையாட எடுத்தாள். அவள் கிழித்து விடக் கூடாதே என்றெண்ணிய அமிர்தா அதைக் குழ்ந்தையிடம் இருந்து வாங்கி மடித்து வைத்தாள்.

அந்த செய்தித்தாளில் முதல் பக்கத்தில் அன்றையத் தலைப்புச் செய்தியாக ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ராகுல்ரவிவர்மனுக்கு பத்மஸ்ரீ விருது’ என்று அவன் புகைப்படத்தொடு செய்தி வெளியிடப் பட்டிருந்தது. கூடவே இந்த ஆண்டு வேறு யார் யாரெல்லாம் இந்த விருதைப் பெறுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

ராகுல்ரவிவர்மனின் படத்தைப் பார்த்ததும் சின்னப் புன்சிரிப்பு ஒன்று அமிர்தவர்ஷினியின் முகத்தில் தோன்றி மறைந்தது. அந்த செய்தித்தாளை மடித்து இருந்த இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பி விட்டாள்.

*****—*****—*****

வீட்டை நெருங்கையிலேயே கௌஷிக்கின் அம்மா சத்யவதி அவர்கள் வீட்டு வெராண்டாவில் அமர்ந்திருப்பதுத் தெரிந்தது. குழந்தையுடன் தன் வீட்டிற்குள் சென்றவள் ஒரு சின்ன கிண்ணத்தில் செய்து வைத்திருந்த குலோப் ஜாமூன்களில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவள் குலோப் ஜாமூன்களை எடுத்து வைக்கும் வேகத்தைப் பார்த்துக் குழந்தை லேசாக உதட்டைப் பிதுக்கியது.

“ம்மா நிலா பாப்பாக்கு…” என்று குலோப் ஜாமூன்களைப் பார்த்து ராகம் படித்தாள் குழந்தை.

“சாப்பிடலாம் டா. நிலா பாப்பாவுக்குத் தானே அம்மா செஞ்சேன். இன்னைக்கு பாப்பாவுக்கு ஹேப்பி பர்த்டே இல்லயா? முதல்ல போய் சத்யா பாட்டிக்குக் குடுத்திட்டு வந்து பாப்பா சாப்பிடுவீங்களாம். போலாமா?” கேட்டுக் கொண்டே சத்யவதியின் வீட்டை நோக்கிச் சென்றார்கள் இருவரும்.

“அடடே நிலா பாப்பாவா! வாங்க, வாங்க. பட்டுப் பாவாடை எல்லாம் போட்டு அழகா இருக்கீங்களே நிலா பாப்பா” என்று கூறியவாறே அமிர்தாவின் கையிலிருந்த குழந்தையைத் தான் வாங்கிக் கொண்டார் சத்யவதி.

அவரும் பார்க்கிறார் அல்லவா, எங்கு சென்றாலும் அமிர்தா குழந்தையைத் தூக்கிக் கொண்டே செல்வதை. தன்னிடம் குழந்தையை விட்டுச் செல்லுமாறு பல முறை அமிர்தாவிடம் கேட்டிருக்கிறார் சத்யவதி.

அமிர்தா அதற்கு எப்பொழுதும் ஒப்புக் கொண்டதில்லை. ஒரு சிறு புன்சிரிப்புடன் கூடிய தலையசைப்பில் மறுத்து விடுவாள்.

“அத்தை இன்னைக்குப் பாப்பாவுக்குப் பிறந்த நாள். அவளை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை” சிறு வயது முதலே சத்யவதியை அத்தை என்றே அழைத்துப் பழகியிருந்தாள் அமிர்தா. குழந்தையின் கையில் ஸ்வீட்டைக் கொடுத்து சத்யவதியிடம் கொடுக்கச் சொன்னாள்.

“வா அமிர்தா உள்ளே வாம்மா. குட்டிப் பொண்ணுக்கு ஹாப்பி பர்த்டேவா?” என்று சொல்லியவாறே உள்ளே அழைத்துச் சென்று ஆசீர்வாதம் செய்து குழந்தையின் கையில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளை வைத்தார்.

“அத்தை பணமெல்லாம் வேண்டாம். உங்க ஆசீர்வாதம் மட்டும் போதும்” குழந்தையின் கையிலிருந்த காசை வாங்கித் திரும்ப சத்யவதியிடம் நீட்ட,

“அமிர்தா இதென்ன பழக்கம். ஆசையா குழந்தைக்குக் குடுத்ததைப் போய் திரும்பக் கொடுக்குற? நீ முன்னாடியே சொல்லியிருந்தா நான் குழந்தைக்குன்னு ஏதாவது வாங்கி வைச்சிருப்பேன். நீ தான் எதுவும் சொல்ல மாட்டேங்குறியே” சத்யவதி கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசவும் அமிர்தாவின் தலைத் தானாகக் குனிந்தது.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கக் குழந்தை குலோப் ஜாமூன் கிண்ணத்துடன் ஐக்கியமாகி இருந்தாள். “அச்சோ நிலாம்மா நான் தான் வீட்டுக்குப் போய் தரேன்னு சொன்னேன்ல? அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?” என்று அமிர்தா குழந்தையை கடிந்து கொள்ள,

“விடு அமிர்தா. குழந்தை தானே. அவ சாப்பிட்டா சரிதான். நிலா குட்டி பாட்டிக்கு ஒன்னு ஊட்டி விடுங்க” என்று சத்யவதி நிரஞ்சலாவிடம் சென்று கேட்க குழந்தையும் தன் பிஞ்சுக் கரத்தால் அவருக்கு ஊட்டி விட்டாள்.

“இது போதும் டா எனக்கு. என் செல்லக்குட்டி” என்று குழந்தையைக் கொஞ்சியவர், “இன்னைக்கு வேலைக்குப் போறியா அமிர்தா?” என்று அமிர்தாவிடம் கேட்டார். அந்த ஊரில் இருந்த பிஸ்கட் பேக்டரி ஒன்றில் க்வாலிட்டி கன்ட்ரோல் பிரிவில் வேலை செய்து வந்தாள் அமிர்தவர்ஷினி.

படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை தான். படித்தது எம்.ஏ ஜர்னலிசம். அதுவும் இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம். அந்தத் துறையில் இருக்கும் த்ரில்லுக்காகவும் சாகசத்திற்காகவுமே அந்தப் படிப்பை விரும்பிப் படித்தாள்.

இப்பொழுது தினசரி வாழ்வே கொஞ்சம் சாகசமாக செல்வதால் கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டாள். அதுவுமில்லாமல் அந்த பேக்ட்ரியில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளை அவர்களே ஒரு க்ரச் ஏற்பாடு செய்து கவனித்துக் கொள்கிறார்கள்.

அதுவும் அமிர்தாவிற்கு வசதியாகிப் போய்விட காலையில் ஒன்பது மணிக்குக் குழந்தையை க்ரச்சில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றால் மீண்டும் மாலை ஐந்து மணிக்குக் குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு திரும்பி விடலாம். யார் கையையும் எதிர்பார்க்காத அளவிற்கு சம்பளம். இப்போதைக்கு இது போதும் என்றே தோன்றியது அமிர்தாவிற்கு.

“ஆமா அத்தை. வேலைக்குப் போகணும். போய் சாப்பிட்டுட்டுக் கிளம்ப வேண்டியது தான். நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிக் கொண்டே குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

“பாப்பாவுக்கு டிரெஸ்சை மாத்தி விட்டுடு அமிர்தா. டிரெஸ்செல்லாம் ஜீராவைக் கொட்டி வைச்சிருக்கா பாரு.”

“சரி அத்தை” என்று கூறிவிட்டு வாசல் வரை சென்றாள் அமிர்தா. அவள் பின்னாடியே வந்த சத்யவதி,

“அமிர்தா இன்னைக்கு பேப்பர் பார்த்தியா? நம்ம ராகுலுக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிருக்காம். நான் இப்போ தான் பார்த்தேன். கௌஷிக்குக்கு ஃபோன் பண்ணப் போறேன். நீயும் பேசுறியா ராகுல் கிட்ட” என்று ஆவலே உருவாகக் கேட்டார் சத்யவதி.

“இல்ல அத்தை. நீங்க பேசுங்க. நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு தன் வீட்டை நோக்கி நடையை எட்டிப் போட்டாள் அமிர்தவர்ஷினி.

“எல்லாம் ஒண்ணு மண்ணா விளையாடி வளர்ந்த புள்ளைக தானே, ஒரு வார்த்தை பேசக் கூட மாட்டேங்குறாளே” என்று அங்கலாய்த்தவாறே தன் வீட்டிற்குள் சென்றார் சத்யவதி.

*****—*****—*****

கையில் அன்றைய செய்தித்தாளை வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் ராகுல்ரவிவர்மன். முடிச்சிட்டிருந்தப் புருவங்கள் அவன் சிந்தனையை உணர்த்தியது.

காலையில் வழக்கம் போல ஜாகிங் செய்யக் கிளம்பியவன் இடைவிடாது வந்த அலைப்பேசி அழைப்புகளால் ஓட்டத்தைத் தடை செய்துவிட்டு அமர்ந்திருந்தான். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பே விருது குறித்த செய்தி அவனுக்கு வந்திருந்தது.

இன்று தான் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதனால் காலையில் இருந்து திரையுலக நண்பர்கள், தெரிந்தவர்கள், படங்களில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள், பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள், விசிறிகள் என்று அழைப்பு வந்த வண்ணம் இருந்தது.

ராகுலின் சிந்தனையைத் தடை செய்தவாறு உரக்க வாழ்த்துக் கூறியவாறே வந்து அவனை அணைத்துக் கொண்டான் கௌஷிக்.

“வாழ்த்துகள் டா ராகுல். நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? நடுவுல ராகுல் சேப்டர் க்ளோஸ்னு பேசினாங்க டா. அவங்க முகத்தில எல்லாம் கரியைப் பூசுற மாதிரி திரும்ப வந்து ஜெயிச்சுக் காட்டிடா.

இதை நாம நிச்சயம் செலிப்ரேட் பண்ணியே ஆகணும். என்ன… என்ன பண்ணலாம் சொல்லு. ஒரு பெரிய கெட் டூ கெதர் அரேஞ்ச் பண்ணலாமா? சௌத்ல இருக்குற எல்லா முன்னணி ஆர்ட்டிஸ்டையும் கூப்பிடலாம். சும்மா ஜமாய்ச்சிடலாம்”

கௌஷிக்கின் ஆரவாரமும் மகிழ்ச்சியும் கொஞ்சமும் தன்னைத் தாக்காதவாறு இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தான் ராகுல். கௌஷிக்கின் அணைப்பிலிருந்து விலகிக் கொண்டவன் அமர்ந்திருந்த சோபாவில் தலையை சாய்த்துக் கொண்டான்.

முகத்தைப் பார்த்து கௌஷிக்கால் ராகுல் என்ன நினைக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.

“என்னடா”

“ம்ப்ச்… இந்த அவார்ட் ஃபங்க்ஷனுக்கு நாம போகாம இருக்க எதாவது வழி இருக்கா கௌஷிக்?”

“டேய் என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசுறியா? ப்ரெசிடென்ட் கையால விருது வாங்கப் போற. இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? ரொம்ப கூலா போக வேண்டாம்னு சொல்ற. ஏன் போக வேண்டாம்? எனக்கு ரீசன் சொல்லு முதல்ல.”

“ம்ச் இங்கப் பாரு” என்று சொல்லியவாறே அன்றைய மேகசினை கௌஷிக்கிடம் காட்டினான் ராகுல்.

“என்னடா இதுல என்ன?” அதைப் பார்த்தும் ஒன்றும் புரியவில்லை கௌஷிக்கிற்கு.

“யார் யாருக்கெல்லாம் இந்தத் தடவை அவார்ட் கொடுக்குறாங்க பாரு.”

“அதுக்கும் நாம் போகாம அவாய்ட் பண்றதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“இந்த இயர் பத்மஸ்ரீ அவார்ட் அந்த கிரிக்கெட் ப்ளேயர்… ஹ்ம்ம்… நான் எப்படிடா? அங்க வந்தா தேவையில்லாம பழசை எல்லாம்… ச்சே” என்றபடி தலையைக் கையால் தாங்கியவாறு அமர்ந்து விட்டான் ராகுல்ரவிவர்மன்.

“இப்ப எதுக்கு நீ ஓடி ஒளியப் பார்க்குற?”

“நான் ஏன்டா ஓடி ஒளியணும்? நான் என்ன தப்பு பண்ணினேன்?”

“தெரியுதில்ல நீ எந்தத் தப்பும் பண்ணலைன்னு தெரியுதில்ல. அப்பப் பேசாம இந்த மொமென்ட்டை என்ஜாய் பண்ணு. அதை விட்டுட்டு ஃபங்க்ஷனுக்குப் போக வேண்டாம் அது இதுன்னு உளறாத.”

“எனக்கு யார் முகத்தையும் பார்க்க இஷ்டமில்லடா கௌஷிக். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.”

“சரி இப்போ இந்த ஃபங்க்ஷனை அவாய்ட் பண்றோம்னே வைச்சுக்கலாம். நாளை பின்ன அவங்க சந்தோஷைப் பார்க்க வந்தா என்ன பண்ணுவ? அப்போ வீட்டை விட்டே போயிடுவியா? இல்ல சந்தோஷை அவங்ககிட்ட அனுப்பி வைச்சிடுவியா?”

இதைக் கேட்டதும் ஒரு அலட்சியப் புன்னகை ராகுலின் முகத்தில். “அஞ்சு வருஷமா பிள்ளையைப் பார்க்க வராதவங்க தான் இப்ப வரப் போறாங்களா? ஏன்டா?”

“சப்போஸ் வந்தா என்ன பண்ணுவ?”

“அவங்களைப் பார்க்கிறதும் பார்க்காததும் சந்தோஷ் விருப்பம். ஆனா பிள்ளையை அவங்க கூட அனுப்புறதெல்லாம் கனவிலும் நடக்காது. அவன் என் பையன். என் கூடத்தான் இருப்பான். இதை கோர்ட்ல அந்த அம்மையாரே ஒத்துக்கிட்டு இருக்காங்க.” இதைச் சொல்லும் போது இயல்பாக ஒரு கர்வம் வந்து குடி கொண்டது ராகுலின் முகத்தில்.

“கல்யாணம் பண்ணிப் புருஷன் குழந்தையோட வாழுறவளைக் கூப்பிட்டது அவன் தப்பு. அவன் அப்படிக் கேட்டதும் கைக் குழந்தையைக் கூட விட்டுட்டு அவங்கூடப் போனது அவ தப்பு.

தப்புப் பண்ணினவங்களே தைரியமா உலகத்தை ஃபேஸ் பண்ணும் போது நீ எதுக்கு ஓடி ஒளியப் பார்க்குற. நீ என்னை விட்டுட்டுப் போனதால நான் எந்த வகையிலும் குறைஞ்சு போகலைன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லிட்டு வருவானா அதை விட்டுட்டு ஃபங்க்ஷனுக்குப் போகாம இருக்க வழி கேட்கிறான்.”

“அப்படிங்குற?”

“வேற எப்படியாம்?”

“போகலாங்குறியா?”

“போயே ஆகணுங்கிறேன்.”

“வர வர ரொம்பத்தான் ஆர்டர் போடுறடா. இப்படியே பண்ணிக்கிட்டு இரு உன் சீட்டைக் கிழிக்கிறேன் பாரு.”

“தாராளமா கிழிச்சுக்கோ. நான் ஊருக்குப் போய் எங்க அம்மா கூட நிம்மதியா ரெண்டு நாள் இருப்பேன்.”

“ரெண்டு நாளைக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க சார்?”

“மூணாவது நாள் எப்படியும் நீ திரும்பக் கூப்பிட்ருவ. மறுபடி வந்து ட்யூட்டில ஜாயின் பண்ணிட வேண்டியதுதான்” ராகுலைப் பார்த்துக் கண்ணடித்துக் கூறினான் கௌஷிக். வெடித்துச் சிரித்தார்கள் நண்பர்கள் இருவரும்.

சோபாவிலிருந்து எழுந்த ராகுல், கௌஷிக்கின் முன் காலகளை அகட்டி கைகளைப் பின்னால் கோர்த்து தலையை நிமிர்த்தி நின்றான்.

“என்னடா போஸ் கொடுக்குற” புரியாமல் கேட்டான் கௌஷிக்.

“நீ தானே நெஞ்சை நிமிர்த்தி நிக்க சொன்னே. எப்படி? இது போதுமா? இல்ல இன்னும் நிமிரணுமா?” நக்கல் குரலில் ராகுல்.

“போதும் ராசா இது போதும். இதுக்கே பாவம் ப்ரெசிடென்ட் ஸ்டூல்ல ஏறி நின்னு தான் உன் கழுத்துல மெடலை மாட்ட முடியும். இதுக்கு மேல நிமிர்ந்தீன்னா அவர் பாவம் அப்புறம் ஏணி மேல தான் ஏறி நிக்கணும்.” கடுப்பான குரலில் கௌஷிக்.

சூழ்நிலையின் கனம் குறைந்து இருவர் மனதும் லேசாகி இருந்தது.

“நிமிர்ந்து நிக்கிறதெல்லாம் சரி முதல்ல அந்த தாடியை ஷேவ் பண்ணிட்டுப் போ.”

“நான் சோகத்துல தாடி வைச்சிருக்கேன்னு நினைச்சியா? இது ஸ்டைல் மச்சி. இதுக்காகவே எனக்கு எத்தனை பேஃன்ஸ் இருக்காங்க தெரியுமா?” சொல்லிவிட்டு ஒற்றைக் விரலால் மீசையை மேல் நோக்கி நிமிர்த்தி விட்டு, கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் மட்டும் இரு கன்னத்திலும் வைத்துக் கண்ணடித்தான் ராகுல்ரவிவர்மன்.

“அப்படியே இரு. நான் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்” என்று சொல்லி அந்த ஸ்டைல் ஐகானைத் தன் ஐபோனில் சுருட்டி வைத்துக் கொண்டான் கௌஷிக் மனதில் வேறு ஒரு கணக்கோடு.

error: Content is protected !!