NPG-7

கீதாஞ்சலி – 7

மிகவும் தயக்கத்துடனேயே சத்யவதியின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி. இடுப்பில் குழந்தை நிரஞ்ஜலா. ஆகாய நீல வண்ணப் புடவை முழுவதும் அடர் நீல வண்ண வரிகள் ஓட இருபுறமும் மெல்லிய வெள்ளை நிற சரிகைப் போல பார்டர் இருந்த ஷிஃபான் சேலை இடையைத் தழுவியிருந்தது. அதற்கேற்றாற் போல் அடர் நீலத்தில் பிளவுஸ்.

நேற்று திடீரென ராகுல் பயங்காட்டியதில் கோபம் தலைக்கேற அவன் தலையில் கோல மாவைக் கொட்டிக் கவிழ்த்துவிட்டாள். இன்று அதை நினைக்கையில் ராகுலுக்கு சரிசமமாகத் தானும் சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொண்டிருந்ததுப் புரிந்தது. சத்யவதி என்ன சொல்வாரோ என்ற தயக்கம் இருந்தது அமிர்தாவிற்கு.

‘இங்க தான் இருப்பாங்களோ? எங்கேயாவது வெளியே போயிருந்தா நல்லா இருக்கும். இவ்வளவு காலங்கார்த்தால எங்கே போயிருக்கப் போறாங்க? வீட்ல தான் இருப்பாங்க. அப்படியே இருந்தாலும் அந்த நெட்டைக் கொக்கு கண்ல மாட்டாம சீக்கிரமா ஓடிப் போயிடணும்.’ மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டே கேட்டைத் திறந்து நடையை எட்டிப் போட்டாள்.

ராகுல் மற்றும் கௌஷிக்கின் இருப்பை உணர்த்துவதைப் போல் அவர்கள் வந்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் வாசலில் அவளை வரவேற்றது. வீட்டின் வாசல் வரை வந்து விட்டவளுக்கு அதற்கு மேல் செல்ல என்னவோ போலிருந்தது. பேசாமல் திரும்பி விடலாமா என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே,

“சத்யா பாத்தீ” என்று நிரஞ்ஜலா குரல் கொடுத்திருந்தாள். எந்தத் தயக்கமும் அவளுக்கு இல்லையே. இந்த ஊருக்கு வந்ததிலிருந்து குழந்தைக்குத் தெரிந்த இரண்டே இடம் சத்யவதியின் வீடும் க்ரச்சும் மட்டும் தானே.

குழந்தையின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து கையைத் துடைத்தவாறே சத்யவதி வந்தார். அவரை வால் பிடித்தவாறே அவருடன் வந்தான் சந்தோஷ்.

“அடடே நிலா பாப்பா… என்ன இன்னைக்கு அதிசயமா அம்மாவும் பொண்ணும் காலையிலேயே என்னைத் தேடி வந்திருக்கீங்க?” என்றபடியே வந்து கையை நீட்ட அவரிடம் தாவிக் கொண்டாள் நிரஞ்ஜலா.

“என் சமத்துக்குட்டி” என்று குழந்தையைக் கொஞ்சிவிட்டு, “என்ன அமிர்தா வேலைக்குக் கிளம்பிட்டியா?” என்று அமிர்தாவிடம் கேட்டார் சத்யவதி.

“கிளம்பிட்டேன் அத்தை. எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்”

“என்னது அமிர்தா?”

“இல்ல அத்தை. நைட் கரென்ட் கட் ஆச்சு. என்ன ப்ராப்ளம்னு தெரியலை, யூ.பி.எஸ் வொர்க் ஆகலை. நான் சர்வீஸ் சென்டருக்கு ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கேன். உங்க கிட்ட சாவி குடுத்துட்டுப் போறேன். வந்தா மட்டும் கொஞ்சம் பார்த்துக்குறீங்களா? என்னால இன்னைக்கு லீவ் போட முடியாது. ஃபேக்டரில முக்கியமான இன்ஸ்பெக்ஷன் இருக்கு. அதான்…”

“அவ்வளவு தானே. நீ சாவியை மட்டும் குடுத்துட்டுப் போ. நான் பார்த்துக்கிறேன். இல்ல கௌஷிக்கைக் கூட ஒரு தரம் என்ன ப்ராப்ளம்னு பார்க்கச் சொல்லுறேன்.”

“ஐயையோ அதெல்லாம் வேண்டாம் அத்தை. சர்வீஸ் சென்டர்ல இருந்து வந்திருவாங்க. அவங்களே பார்க்கட்டும்” பதறியவளாகச் சொன்னாள் அமிர்தா.

“மேடம் யாரு? அவங்க வீட்டுக்குள்ள எல்லாம் நம்மளை விடுவாங்களா? என்னம்மா பேசுறீங்க நீங்க” என்றபடித் தன் ரூமிலிருந்து வெளியே வந்தான் கௌஷிக்.

தலையைக் கவிழ்ந்து கொண்டாள் அமிர்தா. மறுத்துப் பேசும் எண்ணமிருந்தாலும் வாயைத் திறக்கவில்லை. இங்கு வந்ததிலிருந்தே யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் தனியாகவே எல்லாவற்றையும் சமாளித்திருந்தாள். இப்பொழுது வேறு வழியில்லாமல் தான் வந்தாள். இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குழந்தை இருட்டில் பயந்ததைப் போலவே அவளுக்கும் அந்த இருள் கொஞ்சம் அச்சத்தை விளைவித்திருந்தது.

இன்றும் அதே நிலை வந்துவிடக் கூடாதே. சர்வீஸ் சென்டருக்கு சொல்லியாகி விட்டது. ஆள் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள். வீட்டில் யாராவது இருந்தால் தானே சரி பார்க்க முடியும். இன்று அமிர்தா வேலை பார்க்கும் பிஸ்கட் ஃபேக்டரியில் முக்கியமான இன்ஸ்பெக்ஷன் நடைபெற இருப்பதால் லீவும் எடுக்க முடியாது. அதனால் தான் தயங்கித் தயங்கி சத்யதியிடம் உதவி கேட்டு வந்திருந்தாள்.

“வந்த பிள்ளை கிட்ட எதுக்கு வம்பிழுக்கிற கௌஷிக். போ அவளோட போய் என்ன ப்ராப்ளம்னு பார்த்துட்டு வாயேன் டா.”

“நீங்க தான்மா சொல்லிட்டு இருக்கீங்க. மேடம் வாயைத் திறந்தாங்களா பார்த்தீங்களா? கௌஷிக் அண்ணா கௌஷிக் அண்ணான்னு பின்னாடியே சுத்தினதெல்லாம் மறந்து போச்சு போல” நொடித்துக் கொண்டான் கௌஷிக்.

“நான் எதையும் மறக்கலை. நீங்க தான் மறந்துட்டீங்க. போன தடவை நீங்க வந்திருந்தப்ப எவ்வளவு ஆசையா உங்களைப் பார்த்து சிரிச்சேன். நீங்க தான் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போயிட்டீங்க” இது அமிர்தா.

“நீ எங்கம்மா கூட சண்டை போடுவ. நான் உன்ன பார்த்து ஈன்னு பல்லைக் காட்டணுமாக்கும்!”

“அடேய் இது எப்படா நடந்தது? எனக்குத் தெரியாம. அது சரி, அவ என் கூட சண்டை போட்டா உனக்கு என்ன வந்துச்சு. அது எங்களுக்குள்ள நாங்க பேசித் தீர்த்துக்குவோம். நீ எப்போதும் போல பேச வேண்டியது தானே. நீ எதுக்குத் திருப்பிக்கிட்டு வந்த?” நியாயமாகக் கேள்வி கேட்டார் சத்யவதி.

“நான் உங்களுக்காகப் பார்த்தா, நீங்க அவ கூட சேர்ந்துக்கிட்டு என்னையவே கேள்வி கேட்பீங்களாம்மா? இது கொஞ்சம் கூட நல்லா இல்ல சத்யவதி சொல்லிட்டேன் ஆமா.”

“அவ்வளவு நல்லவனாடா நீ!”

“நல்லவனை என்னைக்குத் தான் இந்த உலகம் நம்பியிருக்கு. அதுக்கு நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?”

அம்மாவும் மகனும் வாக்குவாதத்தில் இறங்க அமிர்தாவோ பதட்டத்தின் உச்சியில் இருந்தாள். ராகுல் வருவதற்குள் கிளம்பிவிடலாம் என்று நினைத்தால் இவர்கள் இருவரும் விடமாட்டார்கள் போலவே. அவன் வந்துவிட்டால் அவன் பங்கிற்கு அவன் வேறு வம்பிழுப்பானே.

பெரியவர்கள் மூவரும் பேச்சில் மும்முரமாய் இருக்க குழந்தைகள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். தன் சத்யா பாட்டியின் வீட்டில் புதிதாக வந்திருக்கும் அந்தச் சிறுவனை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் நிரஞ்ஜலா.

சற்று அதிகமான கலரோடு பளிச்சென்று இருக்கும் அந்தக் குட்டிப் பையனை இந்தக் குட்டிப் பெண்ணுக்கும் மிகவும் பிடித்திருந்தது. அதே நேரம் சந்தோஷும் இவளைத் தான் ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கொழு கொழு கன்னங்களும், பால் பற்கள் வெளியில் தெரிய வாய் கொள்ளா புன்னகையும், சுருட்டை முடியுமாக, மெல்லிய பிங்க நிற கவுன் அணிந்து, அந்தக் குட்டிக் கண்களை சிமிட்டாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தையை அவனும் அவ்வாறே பார்த்திருந்தான்.

முதலில் சந்தோஷை நோக்கி அடியெடுத்து வைத்தது நிரஞ்ஜலா தான். மெல்ல சத்யவதியிடமிருந்து இறங்கிக் கொண்டவள் சந்தோஷை நோக்கி மெல்ல அடியெடுத்து நடந்து வந்தாள். பாதங்களில் கொலுசுகள் ஒலி இசைக்கத் தத்தித் தள்ளாடி அன்ன நடையிட்டு வரும் குழந்தையை ஆசையாகப் பார்த்திருந்தான் சந்தோஷ்.

பிறந்ததிலிருந்து தனியாகவே வளர்ந்திருந்த  காரணத்தினால் தன்னைவிட சிறு குழந்தைகளைக் காணும் பொழுது மனதில் ஒரு வித குறுகுறுப்பும் ஆசையும் தோன்றுவது இயல்பு தானே.

சந்தோஷ் அருகில் வந்து அமர்ந்து கொண்டவள் அவனைத் தொட்டுப் பார்க்கலாமா வேண்டாமா என்று அடுத்த கட்ட யோசனையில் இருந்தாள் நிரஞ்ஜலா. அப்பொழுது தான் இவர்கள் இருவரையும் கவனித்த சத்யவதி அவரும் வந்து இவர்கள் அருகில் அமர்ந்து கொண்டு,

“சந்தோஷ் குட்டி, நான் சொன்னேனில்ல உன் கூட விளையாட நிலா பாப்பான்னு ஒரு குட்டிப் பொண்ணு இருக்காங்கன்னு அது இவங்க தான். நிலா குட்டிமா, இது தான்டா உன் அண்ணா, சந்தோஷ் அண்ணா” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

“தத்தோச்” என்று நிலா சொல்லிப் பார்க்க, “நிலாம்மா அண்ணா சொல்லுங்கடா” என்று அமிர்தா சொல்லிக் கொடுக்கக் குழந்தையும் அதைப் பிடித்துக் கொண்டாள்.

சந்தோஷ் அருகில் வந்தமர்ந்த அமிர்தா, “உங்க பேர் என்ன?” என்று கேட்க, “சந்தோஷ்ரவிவர்மன்” புது ஆட்களிடம் பேசும் போதுத் தோன்றும் வெட்கமும் தயக்கமும் போட்டி போட்டாலும் பெயரை ஒரு நிமிர்வுடனே கூறினான் சந்தோஷ்.

சந்தோஷ் கூறிய விதம் அமிர்தாவிற்கு சிரிப்பையும் வியப்பையும் தர, “உங்க பேரும் அழகா இருக்கு. நீங்களும் அழகா இருக்கீங்க செல்லம்” என்று சொல்லி அவன் கன்னம் பற்றி நெற்றியில் முத்தம் வைத்தாள். அமிர்தாவைப் பின்பற்றி நிரஞ்ஜலாவும் தான் அமர்ந்திருந்த சோபாவின் மேல் ஏறி நின்று சந்தோஷ் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

இச்செயல் அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க கௌஷிக்கும் வந்து இவர்களோடு இணைந்து கொண்டான்.

“நீங்க தான் நிலா பாப்பாவா? மாமா இப்போ தான் பார்க்கிறேன். மாமா கிட்ட வாங்க செல்லம்” என்று சொல்லிக் கையை நீட்ட குழந்தைத் தயக்கமாகத் தன் தாயைப் பார்த்தாள். அமிர்தா போகுமாறு தலையாட்டிச் சம்மதிக்கவும் அடுத்து சந்தோஷைப் பார்த்தாள்.

அந்தக் குறும்பனோ, “நம்ம கௌ அங்கிள் தான் பாப்பா” என்று கௌஷிக்கைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தபடியே கூறினான்.

“டேய் குட்டிப் பையா, நீ கௌ, கௌன்னு கூப்பிடறதும் இல்லாம அவளுக்கும் வேற கத்துக் குடுக்குறியா? உங்கப்பா மாதிரியே வந்திருக்கடா.”

“சந்தோஷ் குட்டி அதென்னப்பா டேட், அங்கிள் ன்னு கூப்பிடுறீங்க. இனிமே ராகுலை அப்பான்னு கூப்பிடணும். அதே மாதிரி கௌஷிக்கை மாமான்னு சொல்லணும். சரியா செல்லம்” என்று சத்யவதியும் அவர் பங்கிற்கு சந்தோஷிடம் கூறினார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே வெகு நாட்கள் கழித்து நன்றாக உறங்கி விழித்தத் திருப்தியோடுப் புன்னகை முகமாக வந்து சேர்ந்தான் ராகுல்ரவிவர்மன்.

ராகுலைப் பார்க்கவும் “குட்மார்னிங் டே” டேட் என்று ஆரம்பித்த சந்தோஷ் பின் சத்யவதியைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு, “குட்மார்னிங் அப்பா” என்று கூறினான்.

சந்தோஷின் அப்பா என்ற அழைப்பில் வியந்தவனாக, “குட்மார்னிங் சந்தோஷ்” என்றபடியே வந்த ராகுல் அப்பொழுது தான் அமிர்தவர்ஷினியைப் பார்த்தான்.

“ஓய் சோனி… இல்லல்ல இனி உன் பேரு சோனி இல்ல. கோலமாவை மேல கொட்டின இல்ல, அதால இனி உன் பேரு கோலமாவு தான். கோலமாவு கோகிலா. நல்லா இருக்கில்ல?” காலையில் கண் விழித்ததுமே இரவு உறக்கத்திற்குக் காரணமானவளை சீண்டத் துவங்கியிருந்தான் ராகுல்.

“சாரி… ஏதோ கோபத்துல அது மாதிரி பண்ணிட்டேன்” ராகுலைப் பார்த்ததும் எழுந்து நின்றவள் தயங்கித் தயங்கிப் பதில் கூறினாள். ஏதோ கோபத்தில் கோலமாவைக் கொட்டி விட்டாள். இப்பொழுதும் அதே கோபத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க அமிர்தா விரும்பவில்லை. ஆனாலும் அவளைக் கோவப்படுத்தாமல் ராகுல் விட வேண்டுமே!

“ஐயையே, டேய் கௌஷிக் இது நம்ம சோனி இல்லடா. வேற யாரோ ஒரு பொண்ணு. இந்நேரம் சோனியாயிருந்தா வரிஞ்சு கட்டிட்டு சண்டையில்ல போட்டிருப்பா. இந்தப் பொண்ணு சாரி எல்லாம் கேட்குதேடா” என்று சொல்லியபடியே அவள் எதிரில் சட்டமாய் வந்து நின்றான்.

கண்கள் ஆராய்ச்சியாக மேலிருந்து கீழ் வரை அவளை ஆராய இடது கையோ புருவத்தை நீவி விட்டுக் கொண்டது.

“ஹ்ம்ம்… என்னமோ சரியில்லையே” தன் பாட்டில் பேசியவன், “ஹான்… இதென்ன பொட்டு இப்படி கோணலா வைச்சிருக்க?” என்று சொல்லி அவளின் ஸ்டிக்கர் பொட்டை எடுத்து சரியாக வைத்துவிட்டான்.

பொட்டை வைத்தவன் அப்படியே அவள் கண்களில் அணிந்திருந்த கண்ணாடியையும் பிடுங்கிக் கொண்டான். ராகுலுக்குத் தான் ஒரு அந்நியப் பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொள்வது தவறு என்றெல்லாம் தோன்றவில்லை. அவன் அமிர்தாவை அந்நியப் பெண்ணாகப் பார்த்தால் தானே அவ்வாறு தோன்றுவதற்கு. இவன் செயல்களில் முறைத்துக் கொண்டு நின்றாள் அமிர்தா.

கண்ணாடியைத் தன் கண்களுக்கு நேராக மேலே தூக்கிப் பார்த்தவன், “ப்ளெயின் கிளாஸ், இதை எதுக்குப் போட்டுட்டு இருக்க? வெயிலுக்குப் போடுறேன்னா கூலிங் கிளாஸ் போடு. ஸ்டைலுக்குப் போடுறேன்னா சின்னதா வாங்கிப் போடு. இதென்ன முகத்தையே மறைக்கிற மாதிரி ஒரு கண்ணாடி. பாட்டி மாதிரி. கண்ணாடி இல்லாம நீ எவ்வளவு அழுக்கா (அழகா) இருக்க தெரியுமா?” என்று அழகிற்கு அழுத்தம் கொடுத்து வேறு ராகுல் சொல்ல,

கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள் அமிர்தவர்ஷினி. “என் நெத்தி என் பொட்டு, என் கண்ணு என் கண்ணாடி. நான் எப்படிப் போட்டா உங்களுக்கென்ன? அதைக் குடுங்க முதல்ல” என்று ராகுலிடமிருந்து கண்ணாடியைப் பிடுங்க முற்பட அவனோ தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று கண்ணாடியை வேறு உயர்த்திப் பிடித்துக் கொண்டான்.

என்ன முயன்றும் அமிர்தாவால் கண்ணாடியைப் பிடுங்க முடியவில்லை. குழந்தைகள் இருவரும் இவர்கள் விளையாட்டை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தார்கள். இருவருக்குமே அவரவருடைய தாய் தந்தையின் இந்தப் பரிணாமம் முற்றிலும் புதிது.

“அத்தை நான் கிளம்பறேன். எனக்கு லேட்டாயிடுச்சு” என்று கோபமாக சத்யவதியிடம் சொல்லி விட்டு விறுவிறுவென்று சென்று நிரஞ்ஜலாவைத் தூக்கிக் கொள்ள, அப்பொழுது தான் ராகுலின் கவனம் குழந்தையிடம் சென்றது.

“ஹாய் குட்டி பேபி” என்று குழந்தையை நோக்கிக் கை நீட்ட, அவளோ தாயின் கழுத்து வளைவிற்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.

“என்கிட்ட வர மாட்டீங்களா?” கைகளை நீட்டியபடியே கேட்க,

“அச்சோ நிலாக்குட்டி பயந்துட்டீங்களா. தாடியைப் பார்த்துப் பூச்சாண்டி வந்துட்டதா பயந்துட்டீங்களோ? பயப்படாதே செல்லம் அம்மா இருக்கேன்ல்ல” குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் ராகுலையும் சேர்த்து வாரியிருந்தாள் அமிர்தா.

“ஓய் யாரைப் பார்த்துப் பூச்சாண்டிங்குற. ஆர்.வீம்மா த கிரேட் ஆர்.வீ”

“குழந்தைக்குத் தெரியுமாக்கும் த கிரேட் ஆர்.வீ எல்லாம். பார்க்கத் தாடியெல்லாம் வைச்சு பயமுறுத்துற மாதிரி இருந்தா பயப்படத் தான்  செய்யும்” அமிர்தாவும் விடுவதாக இல்லை.

“அடடா ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா. இன்னமும் சின்னப் பிள்ளையில அடிச்சிக்கிட்ட மாதிரியே இருக்கீங்களே. நீங்க ரெண்டு பேரும் வளர்ந்து உங்களுக்கே குழந்தைங்க வந்தாச்சு. நிறுத்துங்கப்பா ரெண்டு பேரும்” சத்யவதிதான் சமாதானத்திற்கு வர வேண்டி இருந்தது.

“அம்மாடி அமிர்தா, இன்னைக்குக் குழந்தையை என்கிட்ட விட்டுட்டுப் போயேன். தினமும் அந்த க்ரெஷ்லதானே விடுற. ஒரு நாள் சந்தோஷும் நிலாவும் சேர்ந்து விளையாடிக்கிட்டு இருக்கட்டுமே” அமிர்தாவிடம் கேட்டார் சத்யவதி.

“எதுக்கு அத்தை, உங்களுக்கு வீண் சிரமம். அதுவுமில்லாம அங்க இருந்துப் பழகிட்டா. உங்க கிட்ட இருப்பாளோ என்னமொ? திடீர்னு அழ ஆரம்பிச்சுட்டா கஷ்டம் அத்தை”

முடிந்த மட்டிலும் மறுத்துப் பார்த்தாள் அமிர்தா. ஒரு கட்டத்தில் சந்தோஷே கெஞ்சுதலாக “ப்ளீஸ் ஆன்ட்டீ” என்று கேட்க, வேறு வழியில்லாமல் சந்தோஷுக்காகக் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுத் தன் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றாள் அமிர்தா.

அன்று சத்யவதியின் வீடு முழுவதும் நிலா ஒளி வீசியது.

குழந்தை நிரஞ்ஜலாவும் எல்லோரிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டாள். ராகுலிடமும் கௌஷிக்கிடமும் கூடத் தயக்கமின்றிப் பழகிக் கொண்டாள். அதிலும் ராகுல் சில பல லஞ்ச லாவண்யங்கள் கொடுத்துக் கூடுதலாகவே நெருக்கமாகிக் கொண்டான் குழந்தையோடு. மாலை அமிர்தா வருவதற்குள் பூச்சாண்டி இமேஜை உடைத்தாக வேண்டுமே.

நிரஞ்ஜலா அன்று முழுவதும் சந்தோஷையே சுற்றிச் சுற்றி வந்தாள். குழந்தைகளுக்கே உரித்தான இயல்பாக அப்படியே சந்தோஷைப் பார்த்துப் பார்த்து அனைத்து விடயங்களையும் செய்யத் துவங்கினாள். அவனைப் போலவே உட்கார, விளையாட, டிவி பார்க்க என்று எல்லாமே சந்தோஷ் செய்வதைப் போலவே செய்தாள்.

அவனைப் போலவே பேசவும் பிரியப்பட்டாள். சந்தோஷ் அப்பம்மா என்றழைப்பதால் ‘சத்யா பாட்டி’ அப்பம்மாவாகிப் போனார். கௌஷிக் மாமாவானான்.

சந்தோஷின் அப்பா???

␥␥␥␥␥␥␥␥␥␥␥␥␥␥␥

அன்று முழுவதும் அமிர்தா காதில் விழுந்தது எல்லாம் இரண்டே இரண்டு விஷயங்கள் தான். இரண்டுமே ராகுலின் மீது இனம் தெரியாத கோபத்தைக் கிளப்புவதாகவே இருந்தது.

முதலில் ஆரம்பித்து வைத்ததுக் குழந்தைகள் பராமரிப்புக் காப்பகத்தில் உள்ள ரம்யா. ஃபேக்டரி வளாகத்திற்குள்ளாகவே காப்பகமும் இருந்ததால் அமிர்தா அலைப்பேசியில் தெரிவிக்காமல் நேரிலேயே குழந்தை நிரஞ்ஜலா இன்று வீட்டிலிருக்கும் விஷயத்தைத் தெரிவிக்கச் சென்றாள்.

“குட்மார்னிங் ரம்யா. இன்னைக்கு பாப்பாவை இங்க விடலை. எங்க அத்தை பார்த்துக்கிறதா சொன்னாங்க. அதான், உன் கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“குட்மார்னிங் அமிர்தா மேம். ஓ… அப்படியா. இதுக்காகவா வந்தீங்க. போன்லயே சொல்லியிருக்கலாமில்ல. வாவ் கண்ணாடி இல்லாம நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேம்” வழக்கமான உற்சாகத்தோடு வரவேற்றது பெண்.

“நான் எப்படியும் இதைத் தாண்டி தானே ஆபீஸ் போகணும் ரம்யா.” அழகைப் பற்றிய பேச்சைத் தவிர்த்து கேள்விக்கு மட்டும் பதிலளித்தாள் அமிர்தா.

“மேம் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? மியூசிக் டைரக்டர் ஆர்.வீ நம்ம ஊருக்கு வந்திருக்கிறாராம். நேத்து அவர் படிச்ச ஸ்கூலுக்குக் கூட வந்திருந்தாராம். ச்சே தெரியாம போச்சு மேம். முன்னாடியே தெரிஞ்சிருந்தா போய் ஒரு ஆட்டோகிராஃப், முடிஞ்சா அவர் கூட சேர்ந்து ஒரு செல்ஃபீ எடுத்துட்டு வந்திருக்கலாம். ம்ப்ச்… மனுஷன் இன்னும் இங்க தான் இருக்காரா கிளம்பிட்டாரா, ஒன்னும் தெரிய மாட்டேங்குது” நிறுத்தாமல் தன் பாட்டிற்குப் புலம்பி அமிர்தாவின் ஒட்டு மொத்தக் கோபத்தையும் கிளப்பி விட்டிருந்தாள்.

ரம்யா மட்டுமல்லாமல் அன்று அலுவலகத்திலும் தெரிந்தவர் அனைவரும் இவ்விரண்டு விஷயங்களைப் பற்றியே பேச நொந்து போனாள் அமிர்தா. அதிலும் பெண்கள் ஆர்.வீக்காக உருகுவதைப் பார்க்கும் பொழுது பற்றிக் கொண்டு வந்தது. ஆனாலும் ஒன்றும் செய்யவும் முடியாது சொல்லவும் முடியாதே. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

அமிர்தாவின் நிலை இவ்வாறிருக்க அங்கு சத்யவதியின் வீட்டிலோ முழுக்க முழுக்க அன்று நிலாவின் ஆட்சிதான். நண்பர்கள் இருவரும் கூடவே சந்தோஷ் குட்டி மூவரும் நிலாவைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தகப்பன் பாசத்தை இழந்துவிட்டிருந்த குழந்தைக்கு இது மிகவும் படித்துப் போக அவளும் அவர்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள்.

அமிர்தா ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சத்யவதியிடம் போன் மூலம் விசாரித்தபடியே தான் இருந்தாள். அதிலும் சில முறைகளுக்குப் பிறகு ராகுலே பதிலளிக்கத் தொடங்க வெறுத்துப் போனாள் அமிர்தா. போதாததற்கு குழந்தை நிலாவுடன் சேர்ந்து ஏகப்பட்டப் புகைப்படங்கள் எடுத்து அவளது கைப்பேசிக்கு அனுப்பிய வண்ணம் இருந்தான் அந்த மெல்லிசைக்காரன்.

மாலை வீட்டிற்குத் திரும்பும் பொழுதும் மீண்டும் ராகுலைச் சந்திக்க வேண்டுமே என்பதே பெருங் கவலையாகிப் போனது அமிர்தாவிற்கு. நல்ல வேளையாக சரியாக அமிர்தா வீடு திரும்பும் வேளையில் தான் யூபிஎஸ் சர்வீஸ் சென்டரிலிருந்து மெக்கானிக்கும் வந்து சேர்ந்தார்.

இதையே சாக்காக வைத்து நிரஞ்ஜலாவைத் தூக்கிக் கொண்டு விரைவாக வீடு திரும்பி விட்டாள் அமிர்தா. கௌஷிக் மட்டும் அமிர்தாவோடே வந்திருந்து அவர் யூ.பி.எஸ் சரி செய்யும் வரை உடனிருந்தான்.

␥␥␥␥␥␥␥␥␥␥␥␥␥␥␥

இரவு நேரம் பதினொன்று. நேற்றைப் போலவே இன்றும் மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருந்தான் ராகுல். நேற்றைக்கு மனதை அழுத்திய பாரம் இன்று காணாமல் போனது போல் இருந்தது. என்ன காரணமாக இருக்க முடியும் என்று யோசித்த பொழுது பளிச்சென்று குழந்தை நிரஞ்ஜலாவின் முகம் மனதில் தோன்றியது.

குழந்தையைப் பற்றி சிந்தித்த உடனேயே முகத்தில் ஒரு கனிவானப் புன்னகை தோன்றியது. இன்று நாள் முழுவதும் அவளைச் சுற்றியே அல்லவா நகர்ந்தது. ராகுலுக்கும் அந்தப் பிஞ்சின் ஸ்பரிசம் மிகப் பிடித்திருந்தது. ஆசை ஆசையாகத் தூக்கி வைத்துக் கொண்டான்.

நிரஞ்ஜலாவின் ஒவ்வொரு செயலும் ராகுலைக் கவர்ந்தது. ஆடி வரும் பல்லாக்கு போல் கொலுசுகள் இசை படிக்க அசைந்தாடி வரும் அவள் நடையழகா, குறும்புத்தனமாக எதையாவது செய்துவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சிரிக்கும் சிரிப்பழகா, எதுவென்று பிரித்துரைக்க முடியாமல் மொத்தமாக அழகுப் பெட்டகமாகவே காட்சியளித்தாள் ராகுலின் கண்களுக்கு.

மாலை அமிர்தா வந்து குழந்தையைத் தூக்கிச் சென்ற பொழுது கைப்பொம்மையைக் களவு கொடுத்த சிறுவனின் மனநிலையில் தான் ராகுல் இருந்தான். சந்தோஷைப் பார்க்க அவன் முகமும் அத்தகைய பாவனையைத்தான் காட்டியது.

சந்தோஷ் இந்த வயதில் இருந்த பொழுது தான் இவ்வாறு ஏன் உணரவில்லை என்று முதல் முறையாக சிந்தித்துப் பார்த்தான் ராகுல். அப்பொழுதெல்லாம் எதையோ மறக்கவென்று வேலை வேலை என்று ஸ்டுடியோவே கதியென்று இருந்ததும், நிம்மதியைத் தேடி எங்கெங்கோ சுற்றித் திரிந்தது நினைவிற்கு வந்தது.

வீட்டிலேயே நிம்மதியையும் சந்தோஷத்தையும் வைத்துக் கொண்டு வெளியில் தேடி அலைந்தத் தன் மடத்தனம் புரிந்தது. சுவர்க்கமே கையில் கிட்டியிருக்கையில் தான் வெளியில் தேடி அலைந்த மற்ற சுகங்கள் எல்லாம் எவ்வளவு அற்பமானவை என்றும் புரிந்தது.

இனியாகிலும் சந்தோஷுடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். சந்தோஷின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். வருடம் ஒரு முறையாவது சந்தோஷை அழைத்துக் கொண்டு சுற்றுலா போல் செல்ல வேண்டும் என்றெல்லாம் மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டான் ராகுல்ரவிவர்மன்.

ராகுலின் எண்ணப் போக்கை தடை செய்வது போல் குழந்தை நிரஞ்ஜலா வீலென்று அலறும் சத்தமும் அதைத் தொடர்ந்து அமிர்தா அலறும் சத்தமும் கேட்டது. நடு நிசியில் அவர்களின் அலறல் சத்தம் தெளிவாகவே ராகுலின் காதில் கேட்டது.

நொடியும் தாமதிக்காமல் விறுவிறுவென்று ரூமிற்குள் சென்று ஒரு ஹூட் ஜாக்கெட்டை எடுத்து மாட்டிக் கொண்டவன் படியிறங்கி விட்டான். உறங்கிக் கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்ய மனமில்லாமல் சத்தம் செய்யாமல் வீட்டை விட்டுக் கிளம்பினான்.

அமிர்தா வீட்டின் வாயிலில் ஒரு நொடித் தயங்கியவன் சட்டென்று அந்தப் பெரிய மதில் சுவரைத் தாண்டிக் குதித்தான். வேகமாக உள்ளே சென்று மூடியிருந்த மரக்கதவைப் படபடவென்றுத் தட்ட உள்ளே அது வரையில் கேட்டுக் கொண்டிருந்த குழந்தையின் மெல்லிய அழுகை சத்தம் கூடப் பட்டென்று நின்று போனது.

“சோனி… ம்ப்ச்… அமிர்தா நான் தான். கதவைத் திற” சொல்லியபடியே விடாமல் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் ராகுல். மீண்டும் குழந்தை அழும் சத்தமும் அதைத் தொடர்ந்து எதோ கனமான பொருட்கள் இழுபடும் சத்தமும் கேட்டது.

“அமிர்தா என்ன பண்றே? கதவைத் திற” ராகுலின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக வற்றிக் கொண்டே போனது. அது முற்றிலும் கரைந்து போவதற்குள் அமிர்தா கதவைத் திறந்திருந்தாள்.

“என்ன ஆச்சு? ஏன் திடீர்னு பாப்பா அழுதா?” படபடவென்று ராகுல் கேள்விக் கணைகளைத் தொடுக்க அமிர்தாவோ பதில் சொல்லும் நிலையில் இல்லை. பயத்தில் உடலெல்லாம் படபடக்க வியர்த்துப் போய், வீறிட்டழும் குழந்தையைத் தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.

“அமிர்தா, இங்கப் பார். ரிலேக்ஸ்… ரிலேக்ஸ் ஓ.கே. என்ன ஆச்சுன்னு பதட்டப்படாம சொல்லு” ஆதரவாக அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

நடுக்கத்துடன் அவள் கைகள் தரையை சுட்டிக் காட்டியது. அவள் காட்டிய இடத்தில் சிறு தேள் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. அளவில் சிறியதானாலும் தேள் கொட்டினால் ஏற்படும் வலி ஒன்று தானே. பதறிப் போனான் ராகுல். கையில் அகப்பட்டதை எடுத்து அந்தத் தேளை அடித்து விட்டு,

“குழந்தையை கொட்டிடுச்சா?” கேட்டுக் கொண்டே வேகமாகக் குழந்தையை அவளிடமிருந்து வாங்கி ஆராய்ந்து பார்த்தான். அமிர்தாவே குழந்தையின் வலது காலை ராகுலிடம் காட்டினாள். தேள் கடித்த இடம் சிவந்து போய் வீங்கி இருந்தது.

“வா சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம்” அப்பொழுதும் அமிர்தா பிரமை பிடித்தாற் போல் நிற்க, அவள் தோளைப் பற்றி உலுக்கியவன், “அமிர்தா வா ஹாஸ்பிடல் போகலாம்” என்றான்.

அப்பொழுதுதான் அமிர்தாவிற்கு உயிர் வந்தது. “இல்ல நீங்க வேண்டாம். நானே போயிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று ஹேன்ட் பேகை எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டி விட்டு வெளியே கிளம்ப,

“இந்த நேரத்துல நீ எப்படித் தனியா போவ? இரு நான் போய் கார் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு ராகுல் சத்யவதியின் வீட்டுக்குள் செல்ல அமிர்தாவோ அவனுக்காகக் காத்திருக்காமல் அங்கிருக்கும் ஆட்டோ ஸ்டேண்டை நோக்கி நடக்கத் துவங்கிவிட்டாள். குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது.

“அண்ணா கொஞ்சம் சீக்கிரம் ஹாஸ்பிடல் போகணும்” இவள் அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் சொல்லிக் கொண்டிருக்க, அமிர்தா வேகமாக நடப்பதைப் பார்த்த ராகுல் காரெடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டு இவள் பின்னோடு ஓடி வந்தான்.

ஆட்டோவை டிரைவர் ஸ்டார்ட் செய்து நகர்த்தும் கடைசி நேரத்தில் ஓடி வந்து ஏறிக் கொண்டான் ராகுல்.