NSOV 10

NSOV 10

ஸ்வேதா சொன்ன “சிங்கம் மாதிரி” என்ற வார்த்தையில் ஹரியின் மனம் நிறைந்திருக்க, அது கொடுத்த மகிழ்ச்சியில்… கிண்டல் குரலில்…

“முதலில் குரங்கு… இப்ப சிங்கம்… ம்ம்… எப்பதான் நீ என்னை மனிதனாக பாக்கப்போற?” என்று கேட்க…

விளையாட்டாகவே… சொல்வதுபோல் என்றாலும்… அவளுடைய மனதிற்லிருந்து…  “யூ ஆர் எ கம்ப்ளீட் மேன்… ஹரி!!! ரேமண்ட்ஸ் மாடல் மாதிரிதானே இருக்கீங்க… இதுல சந்தேகம் வேறா?” என்று ஸ்வேதாவும் அவனுக்குப் பதில் கொடுக்க…

“ஆஹா… இது வேறயா!!!’ என்று சிரித்தவன்… ஓகே… ஸ்வேதாம்மா நேரம் ஆகிவிட்டது… பை…” என்றுவிட்டு… கரைக் கிளப்பிச் சென்றான் ஹரி…

அவனது கார் கண்களை விட்டு மறையும் வரை அது சென்ற திசையையே… பார்த்திருந்தவள்… பின்பு அவளது வீட்டிற்குள் நுழைந்தாள்…

அவளது அப்பாவும்… அண்ணி தரணியும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு மடிக்கணினியில் தீவிரமாக எதோ பார்த்துக்கொண்டிருக்கவும்… அவர்கள் அருகில் வந்து, உட்கார்ந்த ஸ்வேதா…

“இவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கா… அப்படி என்னப்பா பார்த்துக்கொண்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என்று கேட்க…

அதற்குக் குதூகலக் குரலில்… “வேறு என்ன… உனக்கு மாப்பிள்ளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று வெங்கட் சொல்லவும்…

அதில் அதிர்ந்த ஸ்வேதா… “என்னப்பா சொல்றிங்க?” என்க…

அதற்குத் தரணி… “மேட்ரிமோனி சைட்ல… உன்னோட ப்ரொஃபைல் ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தோம்…. இங்கே பாரு, ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் வந்திருக்கு…” எனக் கணினியை ஸ்வேதாவின் புறமாகத் திருப்ப…

அதை அலட்சியம் செய்தவள்… “என் கல்யாணத்திற்கு இப்பொழுது என்ன அவசரம் அண்ணி? இன்னும் ஆறு மாதப் படிப்பு பாக்கி இருக்கிறதே…” என்று கேட்க…

அதற்குள் அங்கே வந்த லதா… “என்ன அவசரமா? இப்பவே உனக்கு இருபத்தி ஆறு வயது ஆகிவிட்டது… இதுவரை உன் போக்கில் விட்டதே தவறு…” என்று கடித்துக்கொண்டு…

“உன் படிப்பு பற்றிய எல்லாத் தகவலையும் சேர்த்துத்தான், தரணி… பதிவிட்டு இருக்கிறாள். அப்பாவும் அவளுமாகச் சேர்ந்து பொருத்தமாக சில வரன்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்…முதலில் நீ உனக்குப் பிடித்ததை… செலக்ட் செய்கிற வழியைப் பார்…” என்று கறார் குரலில் சொல்ல…

அதற்குள் தரணி… உனக்குப் பொருத்தமாக ஒரு… மூன்று, நான்கு பையன்களை நாங்கள் பார்த்து வைத்திருக்கிறோம்… உன் வாட்சாப்பிற்கு அவற்றை அனுப்புகிறேன்… நீ பார்த்து முடிவு சொல்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்…

வெங்கட்… “அதுல பெரிய கம்பெனி ஒன்றில்… டீம்லீட்… ஆக இருப்பவர்… வரன் ஒன்று வந்திருக்கு… நல்ல சம்பளம்… நல்ல குடும்பம் என… எனக்கு அது மிகவும் திருப்தியாக இருக்கு… நீ அதை முதலில் பார்” என்க… பதில் ஏதும் சொல்லாமல்… மனம் அலைப்புற… அங்கிருந்து சென்றாள் அவள்…

ஹரியின் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தாள் ஸ்வேதா…

அவள்… அன்றொருநாள்… அவன் வாழ்க்கை லட்சியம் என்று… சராசரியாக எல்லோரும் சொல்வதையே அவனும் சொல்லவும்… அதைக் கொஞ்சமும்… விரும்பவில்லை அவள்…

அவளுக்கு வரப்போகும் வாழ்கை துணை… எப்படி இருக்கவேண்டும் என… தன் மனதில் உள்ளதை ஹரியிடம் சொன்னபொழுது கூட… அதை அவன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்வான்… என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை…

அவனது பத்திரிகை பேட்டியில்…  அவன் மனைவி பற்றி அவன் சொல்லியிருந்ததை… கண்டு அவள் அடைந்த வேதனைக் கொஞ்சநஞ்சமல்ல…

அவள் அமெரிக்கா செல்வதற்கு முன் ஒரே ஒரு முறை அவனைச் சந்தித்தால் போதும்… என்ற எண்ணத்தில் மட்டுமே அவனைச் சென்று

சந்தித்து வந்தாள். மற்றபடி, அவனை மறந்து வேறு ஒருவரை மணக்க அவளால் நிச்சயமாக முடியாது.

கடைசிவரை இப்படியே இருந்துவிடலாம் என்பதுதான் அவளது தீர்மானமான முடிவு. ஆனாலும், இனி எக்காரணம் கொண்டும் ஹரியைச் சந்திக்கவே கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தாள் ஸ்வேதா…

அடுத்து வந்த… ஹரி சொன்னதை போலவே விவேக் அவளது பாஸ்போர்ட் சம்மந்தமான வேலையை முடித்திருந்தான்… பாஸ்போர்ட்டை கூரியரில் அனுப்பிவிடுவதாகவும் சொல்லி… அவளது வேலையை குறைத்திருந்தான்…

அதைத் தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும், அவள் அமெரிக்கா செல்வதற்குத் தேவையான பேக்கிங் வேலைகளில் தீவிரமாய் இருக்க… அதைக் கவனித்த வெங்கட்… தனது பொறுமையைக் கைவிட்டு… அவளைப்பிடி பிடியென பிடித்துக் கொண்டார்…

“நீ சீக்கிரம் மாப்பிள்ளையைத் தேர்வு செய்தால்… இப்பொழுதே பேசி வைத்து விடலாம்… படிப்பு முடிந்து நீ இங்கே வந்தவுடன் திருமணம் வைத்துக் கொள்ளலாம்…” என்று அவளை வற்புறுத்தவும்… இதற்கு மேல் தள்ளிப்போட இயலாது என, ஒரு முடிவுக்கு வந்தவள்…

“எனக்குத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை… இங்கே வந்து ஒரு வேலை தேடிக் கொள்ளலாம் என்ற முடிவில்தான் இருக்கிறேன்… நீங்கள் இப்படி என்னை நிர்ப்பந்தித்தால் நான் அங்கேயே வேலையில் சேர்ந்துவிடுவேன்… இன்னும் சில வருடங்களுக்கு இங்கே வரவே மாட்டேன்…” என்று தீர்மானமாக சொல்லிவிட்டு…

தனது கைப்பையை எடுத்துக்கொண்டு… வெளியில் வந்தவள், தனது ஸ்கூட்டியை கிளப்பிச் சென்றுவிட்டாள் ஸ்வேதா…

இதுவரை தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத தன் மகள் இப்படிப் பேசியதில் திகைத்துப் போனார் வெங்கட்… எப்படி அவளை அணுகுவது என்றும் குழம்பித்தான் போனார். லதாவும் பேச்சற்று நின்றிருந்தார்… பிறகு நந்தாவை அழைத்து அனைத்தையும் சொன்னார் அவர்…

 

“அவள் படிப்பு முடிந்து வரும் வரை காத்திருக்கலாம் பா… பிறகு முடிவு செய்வோம்… அவசரப் படவேண்டாம்” என்று சொன்ன நந்தாவின் வார்த்தை… அவருக்கும் சரியாகத் தோன்றவே… “சரிப்பா… வேறு வழி” என்று முடித்துக்கொண்டார் அவர். அவள் ஏன் இவ்வளவு தீவிரமாகத் திருமணத்தை மறுக்கிறாள்… என்ற கேள்வி மட்டும் நந்தாவைக் குடைந்துகொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை… புதுப்பக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனை வணங்கிவிட்டு… மலையிலிருந்து இறங்கி… நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்வேதா…

அவளை வழிமறிப்பதுபோல், அங்கே வந்து நின்றது அந்த BMW… காரின் கண்ணாடியை இறக்கிவிட்ட ஹரி … அவளை நோக்கி… உள்ளே உட்காருமாறு சைகை செய்யவும்…

“சரியாக… இந்த நேரத்தில் இவன் எப்படி இங்கே வந்தான்” என யோசித்தவள்… ஜன்னல் அருகில் குனிந்து… “என்னால் வர முடியாது… என்னோட ஸ்கூட்டியை அங்கே நிறுத்தி இருக்கிறேன்” என்று அதை சுட்டிக் காட்ட…

அங்கே நின்று கொண்டிருந்த தன்னுடைய கார் ஓட்டுநரை கை காட்டிய ஹரி “சாவியை அவரிடம் கொடு… வண்டியை உன் வீட்டில் பத்திரமாக சேர்த்துவிடுவார்…” என்று சொல்லவும்…

“வண்டியை அவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு… வீட்டில் எல்லோரும் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது… அதனால் தயவு செய்து என்னைப் போக விடுங்கள்…” என்று நிதானமாகவே சொன்னாள் ஸ்வேதா…

அவளிடம் இப்படிப் பேசி பயன் இல்லை என்று உணர்ந்தவன்… “உனக்கு உன் பாஸ்போர்ட் தேவை என்றால் பேசாமல் வந்து… உள்ளே உட்கார்” என்க… அவனது மிரட்டலில்… “என்ன” என்று ஸ்வேதா அதிரவும்…

ஹரி தன் காரின் கதவைத் திறந்து விட்டு… உள்ளே உட்காருமாறு சைகை செய்ய… அவள் அவனை முறைத்துக்கொண்டே… ஏறி… காரின் உள்ளே உட்கார்ந்தாள்…

பின்பு அவளது கையில் வைத்திருந்த சாவியைப் பிடுங்கி… அந்த டிரைவரிடம் கொடுத்து… அவனிடம் தகவல் சொல்லி அனுப்பி வைத்தான் ஹரி.

பின்பு ஹரி காரை கிளப்பிச்செல்ல…

அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல்… மௌனமாகவே உட்கார்ந்திருக்க… அந்த அமைதி நிலை பிடிக்காமல்… MP3  ப்ளேயரில் பாடலைப் போட… அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதுபோல் ஒலித்தது அந்தப் பாடல்…

மறு வார்த்தை பேசாதே!

மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க..

கனவாய் நீ மாறிடு !

மயில் தோகை போலே விரலுன்னை வருடும்!

மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..

விழிநீரும் வீணாக

இமைத்தாண்டக் கூடாதென..

துளியாக நான் சேர்த்தேன்..

கடலாகக் கண்ணானதே..!

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாளில்லையே ..!

பிரிந்தாலும் என் அன்பு..

ஒருபோதும் பொய்யில்லையே !

விடியாத காலைகள்..

முடியாத மாலைகளில்..

வடியாத வேர்வைத் துளிகள்..

பிரியாத போர்வை நொடிகள்!

மணிக்காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்..

உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்!

மறவாதே மனம்..

மடிந்தாலும் வரும்..!

முதல் நீ…! முடிவும் நீ…!

அலர் நீ…! அகிலம் நீ…!

தொலைதூரம் சென்றாலும்…

தொடுவானம் என்றாலும் நீ…

விழியோரம்தானே மறைந்தாய்..

உயிரோடு முன்பே கலந்தாய் …!

இதழ் என்னும் மலர்கொண்டு..

கடிதங்கள் வரைந்தாய்!

பதில் நானும் தருமுன்பே

கனவாகி கலைந்தாய் ..!

பிடிவாதம் பிடி !

சினம் தீரும் அடி!

இழந்தோம்.. எழில்கோலம் !

இனிமேல் மழை காலம்..!!

பாடல் வரிகளின் கணம் தாங்க முடியாமல்… கண்களில் கண்ணீர் திரையிட… வேடிக்கை பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஸ்வேதா…

அதன் பிறகு ஒலித்த பாடல்கள் எதுவும்… அவள் மனதைச் சென்றடையவில்லை…

“ப்சு… இவளுக்கு இதே வேலைதான்” என்று மனதில் எண்ணிச் சலித்துக்கொண்டான் ஹரி…

அவர்கள் இறங்க வேண்டிய இடம்… வந்து சேரும் வறையிலுமே ஸ்வேதா… அவனிடம் ஏதும் பேசவில்லை…

அவனும் அதைக் கண்டுகொண்டதாக அவளிடம் காண்பிக்கவில்லை…

படப்பை அருகில் உள்ள புஷ்பகிரி என்னும் இடத்தில்… அவன் புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும்… பண்ணை வீட்டிற்கு ஸ்வேதாவை அழைத்துவந்திருந்தான்  ஹரி…

மிகப்பெரிய கேட்டை தாண்டி… அவனது கார் உள்ளே நுழைய… இரு மருங்கிலும் வரிசையாக வளர்ந்து நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களைக் கடந்து சென்று வண்டியை நிறுத்தியவன்…

மிக அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டி முடிக்கப்பட்டு… குடிபுகத் தயாராக இருந்த அந்த வீட்டின் உள்ளே அவளை அழைத்துச் சென்றான்…

உள்ளே நுழைந்ததும், முதலில் அவளது கண்களில் அங்கே இருந்த ஹாலில், மாட்டப் பட்டிருந்த அந்த மிகப்பெரிய புகைப்படம். அதைக் கண்டு மூச்சுவிடவும் மறந்துபோய்… சிலையென நின்றுவிட்டாள் ஸ்வேதா…

ஏழு வருடங்களுக்கு முன், அவள் பிறந்தநாளன்று… நண்பர்கள் நால்வரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அது…

“ஸ்வேதா” என்ற ஹரியினுடைய கோவமான அழைப்பில் உணர்வுக்கு வந்தவள்… இங்கிருக்கும் எதுவும் தனது இல்லை என்ற எண்ணம் தோன்றவும்…

“ஏன் ஹரி இப்படியெல்லாம் செய்யறீங்க? இப்பொழுது என்னை ஏன் இங்கே அழைத்துவந்தீர்கள்… இன்னும் மூன்று நாட்களில் நான் யூ.எஸ்… போக வேண்டும்… எனக்கு நிறைய வேலை இருக்கு…” என்று சொல்லவும்…

கோவம் எல்லையைக் கடக்க… “என்னடி பெரிய யூ.எஸ்.? அன்றைக்கு என்னிடம் அப்படி பேசியவளாடி நீ? வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் என்றால் பிடிக்காது என்று சொன்னவள்தானே நீ… இன்றைக்கு எதற்காகடி அமெரிக்கா ஓடி ஒளியனும்?” என்று ஹரி பொரியவும்…

எப்பொழுதுமே புன்னகை முகமாக இருக்கும் அவனது இந்தக் கோபமும், ‘டி’ என்ற இந்த விளிப்பும் அவளுக்குப் புதிதாகத் தோன்றவே… நிலை தடுமாறித்தான் போனாள் ஸ்வேதா…

“என்ன இப்படி பேசறீங்க ஹரி?” என்று அழுகைக் குரலில் அவள் கேட்க…

துளியும் கோவம் தணியாமல்… “எதுக்குடி கல்யாணம் வேண்டாம்னு வீட்டில் சொல்லிட்டு வந்திருக்க?” என்ற அவனது கேள்வியில், என்ன சொல்வது என்று குழம்பியவள்…

“என் வீட்டில் நடந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்க…

“முதலில் நான் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்” என்று அவனும் அதிலேயே நிற்க…

“இப்படிக் கேள்வி கேட்பதோ…இல்லை மிரட்டுவதோ… உங்கள் மனைவியிடம் வைத்துக்கொள்ளுங்கள்… என்னிடம் வேண்டாம்” என்று தன்னையும் மறந்து சொன்னாள் ஸ்வேதா…

“கல்யாணம் என்று ஒன்று நடந்த பிறகு… மனைவியை மிரட்டுவதோ, கேள்வி கேட்பதோ … இல்லைக் கொஞ்சுவதோ… என்னுடைய விருப்பத்துக்குச் செய்துகொள்கிறேன்… இப்போதைக்கு நீ எனக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்…” என ஹரி சொல்லவும்…

அதில் விழி விரிய அவனைப் பார்த்தவள்… “உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே” என்று ஆச்சரியகுரலில் சொல்லவும்…

அதற்கு ஹரி… “எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு உன்னிடம் யார் சொன்னது?” என்று கேட்க…

“நீ…ங்…க… தானே… அந்தப் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில்… சொல்லியிருந்தீங்க?” என்று உள்ளே போன குரலில் கேட்டவளை … கேலிப் பார்வைப் பார்த்தவன்…

“நான் உன்னிடம் வந்து… அப்படிச் சொன்னேனா? உன்னிடம் சொன்னதைப் பற்றி மட்டும் என்னிடம் கேள்… நான் வேறு யாரிடமோ… எதற்காகவோ சொன்னதற்கெல்லாம்… என்னைக் கேள்வி கேட்காதே” என்று சொல்லவும்…

 

“அப்படி என்றால்… உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா?” மகிழ்ச்சியும்… வியப்புமாகக் கேட்டாள் ஸ்வேதா…

“இல்லை” என்ற ஹரி … “ஆமாம்… அதில் உனக்கு என்ன இவளவு சந்தோஷம்?” என்று கேட்டான் உதடுகளுக்குளேயே அடக்கப்பட்ட சிரிப்புடன்…

தன்னைக் கண்டுகொண்டானே என்ற வெட்கத்தில் பாவை அவள் முகம் சிவந்து போனாள்.

 

நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்றாய்…

என் உயிருக்குள் புகுந்த உன்னை… நீ அறிவாயா?

செவி வழி புகுந்து…

என் உயிர்வரை நுழைந்த உன் பாடலை… நீ அறிவாயா?

என் இதய அறையின் பெட்டகங்களை…

நிறைத்திருக்கும் உன் நினைவுகளை… நீ அறிவாயா?

எனை வரமாய் நீ நினைத்து… தவமிருக்க…

கலவரமாக மாறியிருந்த என் முகத்தால்…

நான் மறைத்த என் காதல்… அறிவாயா நீ?

என் வாழ்க்கை புத்தகத்தில்…

நீ அறியாப் பக்ககங்கள்…

பல கடந்து வந்துவிட்டேன்…

நீ அறியும்… நன்னாளில்….

உன் கை பிடிப்பேன் காதலுடன்…

நீ அறிவாய் மன்னவனே…

ஹரியாகிய என்னவனே…

ஸ்வேதா…

error: Content is protected !!