NSOV 13
NSOV 13
ஹரியுடனான இனிமையான அந்தத் தருணம் தந்த இனிமையை அனுபவித்தவாறே… சொல்லத் தொடங்கினாள் ஸ்வேதா… வசுதாவுடனான அவளது பிணைப்பிற்கான காரணத்தை…
ஸ்வேதா…இரண்டாம் வகுப்பில் படிக்கும் சமயம்… அவர்களது பக்கத்து பிளாட்டை விலைக்கு வாங்கி… அங்கே குடி வந்தனர்… ராஜன்… சரஸ்வதி குடும்பம்…
அவர்களது மூத்த மகள்… ஜெயசுதா ஆறாம் வகுப்புப்பிலும்… இளையவள் வஸுதா முதல் வகுப்பிலும்… ஸ்வேதா படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்தனர்…
ஸ்வேதாவின் வயதை ஓத்திருந்த வஸுதா… அவளிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள்… ஆனால் ஜெயசுதாவிடம் எப்பொழுதும் ஒரு ஒதுக்கம் இருக்கும்…
இரண்டாவதும் பெண் குழந்தையாகப் போனதால்… மூத்தவளைப் பிடிக்கும் அளவிற்கு… வசுதாவை ராஜனுக்குப் பிடிப்பதில்லை. அவளிடம் எப்போதுமே ஒரு கோப முகத்துடனேயே இருப்பர் அவர்.
அவர் இருக்கும் சமயம்… வாய் திறந்து பேசவே பயப்படுவாள் வஸுதா… சரஸ்வதியும்… இளைய மகளுக்கு ஆதரவாகப் பரிந்து எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே இருந்தார்…
இயல்பிலேயே சுயநலவாதியான ஜெயசுதாவும்… அந்த நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு… தங்கையிடமிருந்து ஒதுங்கியே இருப்பாள்.
அந்தக் காரணத்தினாலோ என்னவோ… பள்ளி முடிந்து வந்ததும்… வீட்டுப்பாடம் செய்யவென வஸுதா… ஸ்வேதாவின் வீட்டிற்கு வந்துவிடுவாள்…
ஸ்வேதாவின் அன்பான நடவடிக்கை அவள் மனதிற்கு இதம் தர… அவள் ஸ்வேதாவுடனேயே அதிகமாக நேரம் செலவழிக்கத் தொடங்கினாள்… மற்றபடி வேறு யாருடனும் அவள் எளிதில் பேசுவதோ… பழகுவதோ இல்லை…
பயம்… தயக்கம் எனத் தாழ்வு மனப்பான்மையால் நத்தை போல் சுருட்டிக் கொள்வாள்… அது அவளுடைய குண இயல்பாகவே மாறிப்போனது…
சிறு வயதில் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்… நாட்கள் செல்லச் செல்ல ஸ்வேதாவிற்கு நன்றாகவே புரிந்தது… அதனால் வசுதாவிடம் மேலும் அக்கறை எடுத்துக் கொண்டாள் ஸ்வேதா… அதுபோல், எந்த நிலையிலும் அவளை விட்டுக் கொடுக்கவே மாட்டாள்…
வசுதாவை பொறுத்த மட்டில்… படிப்பில் ஸ்வேதா அவளுடைய, முன் மாதிரி…
அவள் செய்வதைப் பின் பற்றி தானும் அது போலவே செய்வாள். அப்படித்தான் அவள் ஸ்வேதா படித்த கல்லூரியிலேயே… அவள் படித்த அதே படிப்பை தேர்வு செய்ததும்.
மற்றபடி, ஸ்வேதா எவ்வளவு சொல்லியும், வஸுதா தன்னை மற்றிக் கொள்ள முயற்சி செய்யவே இல்லை. அவளது தயக்கமும்… பயமும்தான்… பின்னாளில் ஸ்வேதாவை ஆபத்தில் சிக்கவைத்தது…
ஸ்வேதா முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம்… ஜெயசுதா பொறியியல் முடித்து… மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில், அதிக சம்பளத்தில், வேலையிலும் சேர்ந்திருந்தாள்…
அப்பொழுதுதான்… உடன் வேலை செய்பவரை காதலிப்பதாகச் சொல்லி ஜெயசுதா… ராஜனிடம் பிடிவாதம் பிடிக்கவும்… அவர் கொஞ்சமும் வீட்டுக் கொடுக்காததுடன்… விரைவிலேயே அவர்கள் சொந்தத்திலேயே மாப்பிள்ளையும் பார்த்து… லட்சக் கணக்கில் செலவு செய்து… திருமணத்தையும் முடித்து விட்டார்.
தந்தையை மீறி ஏதும் செய்ய முடியாத நிலையில், திருமணம் செய்துகொண்ட ஜெயசுதா… தன் வன்மத்தையெல்லாம்… அவள் கணவனிடம் காண்பிக்கத் தொடங்கினாள்…
அது ஒரு கட்டத்தில், மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டு சாகும் நிலைக்கு அவனைக் கொண்டு சென்றது…
மகளின் உண்மை நிலை அறியாத… ராஜன் அவளை தன்னுடனேயே அழைத்துவந்துவிட்டார்… ஒரு சில மாதங்களிலேயே… வீட்டினருக்குத் தெரியாமல்… ஜெயசுதா… கணிசமான நகைகளைளுடன்… அவள் முன்பு காதலித்தவனையே பதிவுத் திருமணம் செய்துகொண்டு… சென்று விட… சொந்தக்காரர்கள் நடுவில் மிகவும் அவமானமாகிப் போனது ராஜனுக்கு…
அதில் சரஸ்வதி தற்கொலை முயற்சி வரை சென்று… உயிர் பிழைத்தார்…
அத்தனை பிரச்சினைகளுக்குப் பிறகு… ராஜனது… முழு கவனமும் வசுதாவின் மீது விழ… நின்றால்… குற்றம் உட்கார்ந்தால் குற்றம் என்ற அளவிற்கு… பாதிக்கப்பட்டாள் வஸுதா…
அடுத்த வீட்டில் இருக்கும் ஸ்வேதாவுடன் பேசக்கூட முடியாத நிலையில் தள்ளப் பட்டாள் அவள். கல்லூரியில் மட்டுமே ஸ்வேதாவை சந்தித்து பேசுவாள்… அதுவும்… பயந்து பயந்துதான்…
அந்தச் சமயம்தான்… கல்லூரி பேருந்தில் வீடு திரும்பும் நேரம்… வஸுதா… ஸ்வேதாவிடம், “அக்கா! எனக்குச் சொல்லவே பயமாக இறுக்குக்கா… ஒருத்தன் தினமும் ஏதாவது கிப்ட்… கார்டுன்னு கையில் வைத்துக் கொண்டு… என் பின்னாலேயே வந்து… தொந்தரவு கொடுத்துட்டு இருக்கான்..
அவன் யாருன்னே எனக்குத் தெரியாது… அதுவும் ஒரு வாரமாக நீங்க ஸ்பெஷல் கிளாஸ்னு உங்க பிரென்ட் கூட… பைக்கில் வீட்டுக்குப் போவதால்… உங்களுக்கு இது பற்றி தெரியாது… என்னால தனியா போக முடியல கா… வீட்டுல சொன்னா ஏதாவது பிரச்சனை ஆகிடுமோன்னு பயமா இருக்கு…” எனச் சொல்லி முடிக்க… மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வேதா…
“நீ இப்படிப் பேசாமலேயே வந்தால்… அவன் அதை தனக்கு சாதகமாகத்தான் எடுத்துக் கொள்வான்… உனக்கு பிடிக்கலை என்பதை வாய்திறந்து சொல்லணும் வசு…” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க…
அவர்கள் இறங்கும் நிறுத்தமும் வந்துவிட… பேருந்திலிருந்து இறங்கினர் இருவரும்…
பரபரப்பான மாலை நேரத்திலும்… கொஞ்சமும் பயமின்றி அங்கே வசுதாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தான் அவன்…
வஸுதா அவனை… ஸ்வேதாவிடம் சுட்டிக் காட்ட… அவனை நோக்கிப் போனாள் ஸ்வேதா… பயந்து தூரத்திலேயே நின்றுவிட்டாள் வஸுதா…
அவனை நெருங்கிய ஸ்வேதா… “உங்க பேர் என்ன?” எனக் கேட்கவும்… அதில் திகைத்தவன்… “யாருங்க நீங்க?” எனப் பதில் கேள்வி கேட்க…
“நான் யாருங்கிறது இருக்கட்டும்… முதல்ல நீ யாருன்னு சொல்லு” என்றவள் அவனைப் பார்க்க…
இருபது வயதுதான் இருக்கும் அவனுக்கு…
அங்கே இருந்த ஒரு கடையில் வேலை செய்பவன் என்பது… அவன் அணிந்திருந்த சீருடையில் தெரிந்தது…
அவன் பெயர்… “மனோஜ்” என்று அவன் அணிந்திருந்த அடையாள அட்டையைப் பார்த்து தெரிந்து கொண்டாள் ஸ்வேதா…
“இதோ பாரு… போகும் பொது வரும்போதெல்லாம்… இப்படி தொந்தரவு செய்தால்… உன்னைப் பற்றி போலீசில் கம்ப்ளைண்ட் கொடுத்து விடுவோம்… என்னோட அப்பா… அவளோட அப்பா எல்லாரும்… நல்ல பதவியில் இருப்பவர்கள்… அதனால இதுபோல வந்து தொந்தரவு செய்யாதே…” எனக் கொஞ்சம் அழுத்தமான குரலில்… அதே சமயம் அருகில் நின்றிருந்தவர்களின் கவனத்தைக் கவராத விதத்திலும்… சொல்லிவிட்டு… அதிர்ந்த அவனது முகத்தைப் பார்த்தவாறே அங்கிருந்து சென்றாள் ஸ்வேதா.
அதற்குப் பிறகு… அந்த மனோஜ் வசுதாவை தொடரவில்லை என்பதையும் தெரிந்து கொண்டாள் அவள்.
தொடர்ந்து வந்த நாட்கள் நீரோடை போல் தெளிவாகச் சென்றது.
**********************
டிசம்பர் மாதம் தொடங்கியிருந்தது… அந்த வாரத்தில் ஹரியின் பிறந்தநாள் வரவிருப்பதால்… அவனுக்குப் பரிசு வாங்குவது பற்றியும்… அந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்பது பற்றியும்… பாலு… வர்ஷினி… ஸ்வேதா என மூவரும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்…
பலத்த மழைப் பொழிந்து கொண்டிருந்ததால்… அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்திருந்தனர்.
ஒரு திருமணத்திற்காக… வெங்கட்டும் லதாவும்… திருச்சி சென்றிருக்க… நந்தாவும்… இரவு நேரப் பணி முடிந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்… அப்பொழுது அங்கே வந்த வஸுதா… “அக்கா கொஞ்சம் அவசரமாக… பண்டிபஜார் வரைக்கும் போகணும்… உங்களால்… என்னோட துணைக்கு வர முடியுமா?” என்று கேட்க…
மழையை நினைத்து கொஞ்சம் யோசித்தாள்தான் ஸ்வேதா…
ஆனால்… தனிப்பட்ட முறையில் ஹரிக்கென ஒரு பரிசு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவள்… வசுதாவுடன் சென்றால் அப்படியே வாங்கிவந்து விடலாம் என்ற எண்ணம் எழவும்…
“அண்ணா கிட்ட… கேட்டுப் பார்க்கிறேன் வசு… அவங்க பெர்மிஷன் கொடுத்தால் வரேன்…” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தவள்…
நந்தாவிடம் சென்று… “வசுதாவுடன் வெளியே போகணும்…” என்று மட்டும் சொல்லி… அனுமதி கேட்டாள்… ஸ்வேதா…
மணியைப் பார்க்க மாலை நான்குதான் ஆகியிருந்தது… தங்கையிடம் மறுப்பு சொல்ல முடியாமல்… “மழையா இருக்கே சுவேதாம்மா… பத்திரமாக போய்ட்டு வந்துடுவியா? எனக்கும் இன்று முக்கியமாக ஆஃபீஸ் போயே ஆகணும்… இல்லை…னா நானே உன்னை அழைத்துக் கொண்டு போவேன்…” என அவன் தயங்க…
“பரவாயில்லைணா… நாங்க ட்ரைன்லதான் போகப்போறோம்… உடனே திரும்ப வந்துடுவோம்…” என அவள் பதில் சொல்லவும்…
“சரி… ஏழு… ஏழரை… மணிக்குள்ளாக… வந்துடு… வந்ததும் எனக்கு மெசேஜ் மட்டும் பண்ணிடுமா…” என்றவாறு… அவன் மேலும் தடை ஏதும் சொல்லாமல்… அவளை அனுப்பி வைத்தான்…
கைகளில் பெரிய பையுடன் கிளம்பி வந்தாள் வசுதா…
ரயிலுக்காக பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு… வரவும் அங்கே அவர்கள் செல்ல வேண்டிய ரயில் வரவும் சரியாக இருக்கவே… ரயிலில் ஏறி உட்கார்ந்தனர் இருவரும்…
அதுவரை கொஞ்சம் ஓய்ந்திருந்த மழையும்… மறுபடியும் லேசாகத் தூர ஆரம்பித்திருந்தது…
“இவ்ளோ அவசரமா… அப்படி என்ன வாங்கப் போற வசுதா…” என ஸ்வேதா அவளைக் கேட்கவும்…
“இல்லக்கா… ஜெயா அக்கா போன் பண்ணியிருந்தாங்க… அவங்களோட செர்டிபிகேட்ஸ் எல்லாம் மறந்து இங்கேயே… வச்சிட்டு போயிட்டாங்கக்கா…”
“வெளிநாடு போகப் போறாங்களாம்… அவசரமா தேவைப்படுதுன்னு… அதைக் கேட்டு கெஞ்சினாங்க… அப்பா வரதுக்குள்ள கொண்டு போய் கொடுக்கணும்…” என்று… தான் தவறு செய்கிறோம் என்பதே புரியாமல் சொல்லிக்கொண்டே போனாள் வசுதா…
அதுவரை… கடை வீதியில் எதோ வாங்கப் போகிறாள் என நினைத்திருந்த ஸ்வேதா… இதைக் கேட்டதும்… கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள்…
“அறிவு இருக்கா… உனக்கு? அவ்வளவு அவசரமாக இருந்தால்… வீட்டு வாசலில் வந்து உங்கக்கா அதை வாங்கிட்டு போயிருக்கலாமே… இதெல்லாம்… கொஞ்சம் அதிகப்படியாக உனக்குத் தோனலியா?” என வெகுவாக அவள் வசுதாவைக் கடிந்து கொள்ளவும்…
அவள் முகம் இருண்டு போய்விட்டது… கண்களில் நீர் திரள… “நான் சொன்னேன்…கா… அவங்க கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அழத் தொடங்கிட்டாங்க… எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை…” என்க…
“என்னிடம் முன்பே சொல்லியிருக்கலாமே?” என ஸ்வேதா… கோவம் குறையாமல் கேட்கவும்…
“சாரிக்கா” என்று மட்டுமே சொல்ல முடிந்தது வசுதாவால்…
ஜெயசுதாவின்… சுயநலத்தையும், அதற்குப் பணிந்துபோகும் வசுதாவின் அறியாமையையும் நினைத்து… ஆயாசமாக இருந்தது ஸ்வேதாவிற்கு…
இது முன்னமே தெரிந்திருந்தால்… அவள் வசுதாவுடன் வந்திருக்கவே மாட்டாள்… தன் அவசர புத்தியை நினைத்து நொந்தவள் … மேற்கொண்டு எதுவும் பேசவில்லை…
மாமபலம் வந்து சேர்ந்த பிறகு… ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு பண்டிபஜாரில்… ஜெயா குறிப்பிட்டிருந்த ஒரு உணவகத்தின் முன்பாக இறங்கினர் இருவரும்.
வெளியிலேயே வசுதாவிற்காகக் காத்திருந்த ஜெயாவின் முகம்… தங்கையுடன் ஸ்வேதவைக் கண்டதும் இருண்டு போனது… உடனே… “துணை இல்லாமல் உன்னால் வர முடியாதா?” எனச் சூடாக தங்கையைப் பார்த்து கேட்டவள்…
ஸ்வேதாவை நோக்கி… “நான்… வசுவிடம் கொஞ்சம்… பெர்சனலா பேசணும்… நானே அவளை வீட்டில் விட்டுடுறேன்… உனக்கு வேறு எதாவது வாங்கவேண்டியது இருந்தால்… முடித்துவிட்டுக் கிளம்பு…” என இங்கிதமே இல்லாமல் சொல்லவும்…
ஸ்வேதா, வசுதாவை கோபத்துடன் ஒரு பார்வை பார்க்க… அர்த்தம் புரிந்தவளாக வசுதா… “அக்கா… இதோ நீங்க கேட்ட… உங்களோட செர்டிபிகேட்ஸ்!!! இதைக் கொடுக்க மட்டும்தான் வந்தேன்…” என்று அதை அவளிடம் கொடுத்துவிட்டு… “அப்பா வருவதற்குள் நான் வீட்டில் இருக்கனும்… பை! ” என்றவாறு, கிளம்ப எத்தனிக்க…
வசுதாவா… இப்படிப் பேசியது என அச்சரியமாக ஸ்வேதா அவளைப் பார்க்க…
அழத்தொடங்கிவிட்டாள் ஜெயா…
“நீயாவது என்னிடம் பேசுவன்னு நினைச்சேன்… நான் லண்டன் போன பிறகு… மறுபடியும் உன்னை எப்பொழுது பார்க்கமுடியுமோ?” என அவள் முதலைக் கண்ணீர் வடிக்க…
என்ன செய்வது? என்று புரியாமல்!!! ஸ்வேதாவை ஒரு பரிதாபப் பார்வை பார்த்துவைத்தாள், வசுதா…
அவள் நிலைமை புரியவும்… தனது கோபத்தை கை விட்டவளாக… “சரி… நான் கிளம்பறேன்…” என வசுதாவை நோக்கிச் சொன்னவள்…
“அக்கா… பத்திரமாக… அவளை வீட்டில் விட்டுடுங்க… ராஜன் மாமா வீட்டுக்கு வந்துட்டா பிரச்சினை ஆகிவிடும்” என்றுவிட்டு அவள் கிளம்ப…
“நீ பார்த்துப் போ… என் தங்கையை நான் பத்திரமாக அழைத்துவருகிறேன்…’ என வெட்டி விடுவது போல் பதில் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அந்த உணவகத்திற்குள் சென்றாள் ஜெயசுதா…
அந்த நேரம்… வசுதாவின் பாதுகாப்பைப் பற்றி யோசித்தவள் … தனது பாதுகாப்பைத்தான் மறந்து போனாள் ஸ்வேதா…
பிறகு… அவளுக்கு யோசனை வந்தவளாக… அங்கே இருந்த ஒரு பிரபல நகைக் கடைக்குச் சென்றவள்… ஹரியின் பிறந்தநாளுக்கு பரிசாகக் கொடுப்பதற்காக… அழகிய ஒரு மோதிரத்தை வாங்கி… தனது கைப்பையில் பத்திரப்படுத்தினாள்…
பிறகு… ரயில் நிலையம் வந்து… உடனே அங்கே வந்துசேர்ந்த ரயிலிலும் ஏறி உட்கார்ந்து கொண்டாள்… மழையும் பலமாகப் பொழியத் தொடங்கியது…
பத்திரமாக இருப்பதாக நந்தாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு… வெளியில் பொழிந்து கொண்டிருந்த மழையைப் பார்க்க… அவள் மனம் … ஹரியின் நினைவுகளால் நிரம்பிப் போனது…
முதலில் நட்புடன் மட்டுமே அவனுடன் பழகி வந்தவள்… தோழியர் மூலம் அவனுக்குத் திருமணம் என்று கேள்விப்படவும்… அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை… அதை அவனிடமே கேட்டுவிடும் நோக்கத்தில் அவனைத் தேடிச் சென்றாள் ஸ்வேதா.
அங்கே வேறு ஒரு பெண் அவனது அருகில் உட்கார்ந்திருப்பதைக் கண்டவுடன்… உரிமையுடன் அவன் அருகில் போய் உட்கார்ந்து… அவளை அங்கிருந்து ஓடவும் செய்தாள் ஒன்றுமே தெரியாததுபோல்…
அவனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்பதை அறிந்த பொழுது… அவளுக்கு ஏற்பட்ட நிம்மதி… அவளுக்கு சொல்லாமல் சொல்லியது… அவளது மனதையும்… ஹரியை எந்த நேரத்திலும் அவளால் விட்டுக் கொடுக்கவே முடியாது என்பதையும்.
****************
அவள் பிறந்தநாளன்று… அவனது ஒவ்வொரு செயலிலும்… அவனது மனதில் தான் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதை… முழுவதுமாக உணர்ந்து கொண்டாள் ஸ்வேதா.
அவனுக்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவளை… அன்று… புதிதாக அவன் பார்த்த பார்வை… அவள் உயிர் வரைச் சென்று அவளை தித்திக்கச் செய்தது.
அவனது காருக்குள் உட்கார்ந்தபிறகு கூட… அவனை நேருக்கு நேர் பார்க்கவும் முடியாமல்தான்… வெளியில் வேடிக்கை பார்ப்பது போல் அவள் தன்னை சமன் செய்துகொண்டாள்…
கோவிலுக்குச் சென்ற பிறகும் கூட அதுவேதான் தொடர்ந்தது.
அவளுக்காக அவன் பரிசளித்தப் புடவையை… அவன் அம்மாதான் தேர்ந்தெடுத்தது என்பது தெரிந்ததும்… அவருக்கு நன்றி சொல்ல அவள் அவருக்கு… கால் செய்ய…
அதை அவர்… கட் செய்து விட… மறுபடி சில முறை அவள் முயலவும்… மறுபடி.. மறுபடி அதுவே தொடர… அவர், தன்னைப்பற்றி எதோ தவறாக புரிந்துகொண்டாரோ என்று கொஞ்சம் கலங்கித்தான் போனாள் ஸ்வேதா…
அதைப் பற்றி ஹரியிடம் சொல்லவும், கொஞ்சம் தயக்கமாக இருக்கவே அப்படியே விட்டுவிட்டாள்.
ஆனால்… அன்று இரவு… அவராகவே அவளை அழைத்து… பிறந்தநாள் வாழ்த்து சொல்ல… பிறகுதான் அவளுக்குத் தெரிந்தது… ஹரி… அவருக்குப் புதிதாக வாங்கிக் கொடுத்த டச் போனில்… அழைப்பை ஏற்கத் தெரியாமல் அவர் கட் செய்துகொண்டிருந்தார் என்பது.
அப்பொழுதுதான் அவர்… ” எங்கே… மா இவன் வீட்டில் இருக்கான்… கல்லூரி லீவு நாட்களில் கூட… பாக்டரியே கதியாகக் கிடக்கிறான்…”
“படிப்பு முடிந்து வெளிநாடு போய் விடுவேன்… என்றவன் எப்படி… இந்த மாதிரி மாறிப்போனான் என்று தெரியவில்லை…”
“உங்களையெல்லாம் ஒருமுறை பார்க்கணும் கேட்டல்… கொஞ்சமும் கண்டுக்கவே மாட்டேங்கறான்…” என மகனைப் பற்றி குற்றப் பத்திரிக்கை வசித்தவர்…
“பாலுவுடன்… ஒரு நாள் வீட்டுக்கு வாம்மா…” என அவளை அன்புடன் அழைத்துவிட்டுத்தான் போனை வைத்தார்…
*********************
அவன்… தந்தையின் தொழிலில் முழுவதுமாக ஈடுபடுவதைப்பற்றி… அவனது தாயின் மூலமாகவே அறிந்த பிறகுதான்… ஹரியின் மனது முழுவதுமாகப் புரிந்தது ஸ்வேதாவிற்கு…
இதுவரை அவன் மனதை தன்னிடம் திறக்காமல் இருப்பதன் காரணம்தான் அவளுக்குப் புரியவில்லை…
இன்னும் சில நாட்களிலேயே அவன் கல்லூரி படிப்பு முடிந்து… தன்னைப் பிரிந்துச் சென்று விடுவான் என்பதை நினைக்கும் பொழுது அவளது மனம் கனத்துப் போனது…
அதனால் அவன் பிறந்தநாளன்று… தானே அவனிடம் பேசிவிட வேண்டும் என முடிவு செய்தாள் அவள் …
*********************
பழவந்தாங்கல் ரயில் நிலையம் வந்துவிட… ரயிலிலிருந்து இறங்கினாள் ஸ்வேதா…
அங்கே, மனோஜ் வடிவில் காத்திருந்தது விதி… அவளது வாழ்க்கைப் பாதையை மாற்றி எழுதவென…