NSOV – 4

NSOV – 4

ஹரியை பொறுத்தவரை, அவன் ஒன்றை நினைத்துவிட்டால், அவனது சிந்தனை செயல் அனைத்தும் அதை நோக்கியே இருக்கும்!

அதுபோல் ஒரு செயலில் இறங்கிவிட்டான் என்றால் முழுமூச்சாக அதில் வெற்றிபெறும் வரை ஓயமாட்டான்… அவனுடைய அந்தக் குணமே… படிப்பிலாகட்டும், பங்குபெறும் போட்டிகளிலாகட்டும் அவனை முதல் இடத்தில் வெற்றிபெறச்செய்தது.

ஹரியின் அப்பா ராதாகிருஷ்ணன் தனது சொந்த முயற்சியால் ஆர்.கே. என்டர்ப்ரைசஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறார்…

அம்மா விஜயா… ஒரு பொறுப்புமிக்க, அன்பான குடும்பத்தலைவி… இனிமையாகப் பாடுவார்… கணவர் மாற்றும் குழந்தைகளே உலகம் என்று வாழுபவர்…

ஒரே ஒரு சகோதரி, மருத்துவர்… சமீபத்தில்தான் திருமணம் முடிந்து சென்னையில் இருக்கிறார்… அவருடைய கணவரும் மருத்துவர்…

ஹரி… அவ்வளவு செல்லம் அவன் அப்பாவிற்கு! அவர் அவனை ஒரு நண்பனைப்போல நடத்துவார்.

சமீபமாகவே தொழில் சார்ந்த கருத்துவேறுபாடுகளால்… பனிப்போர் மூண்டிருந்தது இருவருக்கும்.

இதுவரை மகன் ஒன்று  சொல்லி அவர் அதை மறுத்ததே இல்லை… அதுபோல்தான் அவனது அப்பா ஒன்றைச் சொல்லிவிட்டார் என்றால் ஹரியால் அதை மீறவே முடியாது…

அவரிடம் அவ்வளவு அன்பும் மரியாதையும் அவனுக்கு உண்டு…

பலசமயங்களில், முதல் வார்த்தை யாருடையது என்ற போட்டியே வந்துவிடும் இருவருக்கும்…

யார் கருத்து முதலில் சொல்லப்படுகிறதோ… அதுவே செயல்வடிவம் பெரும். அந்தக் கூற்றின்படி ராதாகிருஷ்ணன் முந்திக்கொண்டதால்தான் ஹரி மறுக்கமுடியாமல் எம்.ஈ.. சேர வேண்டியதாக ஆகிப்போனது.

ஆர்வமின்றி, தன் தந்தைக்காக கல்லூரி வரத்தொடங்கியவனை… முழு ஆர்வத்துடன் தனக்காக… கல்லூரிக்கு வரச்செய்திருந்தாள் ஸ்வேதா..

 

அவன் தந்தையின் தொழிலை… முயன்றுபார்க்கலாம் என்றுதான் நினைத்தானேத் தவிர… முழுமனதுடன் அவனால் அதில் ஈடுபடமுடியுமா என்று அவனுக்கேத் தெரியவில்லை…

தனது ‘வெளிநாடு வாழ்’ ஆசையைத் துறக்கவும் அவனுக்கு மனமில்லை… மேலும்… ஒன்றரை வருடப் படிப்பு மீதம் இருப்பதால்… பக்குவமாக ஸ்வேதாவிடம் தன் காதலை சொல்லி… அவள் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஓர் ஓரத்தில் இருந்துந்து…

அதற்கு முன் ஒரு முறை அவர்கள் தொழிற்சாலைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்… அவ்வளவே…

அவன் விடுதியில் தங்கி படிக்கத்தொடங்கிய பின், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை என்றால்… திருவள்ளூர் சென்றுவிடுவான் ஹரி…

பாக்டரிக்கு வரும்படி அவனைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அவன் அப்பாவிடம் முன்பே சொல்லியிருந்த காரணத்தினால்.. அவர் அவனை அங்கு அழைப்பதும் இல்லை… தொழில் பற்றி அவனிடம் எதுவும் பேசுவதும் இல்லை…

இந்தமுறை சனி, ஞாயிறு, திங்கள் என்று… தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

ஆனால் வெள்ளி மதியமே கிளம்பி… அவன் நேராகப் போய் நின்றது அவர்களுடைய தொழிற்சாலைக்குத்தான்…

வெறும் எழுபதுபேர் மட்டுமே வேலை செய்யும் தொழிற்சாலையும்… அதை ஒட்டிய சிறிய அலுவலகமும் அங்கே அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது…

உள்ளே நழைந்ததும் அவன் கண்ட காட்சி அவன் மனதை மிகவும் நெகிழ செய்தது…

அவனுடைய அப்பா… தான்தான் அங்கே முதராளி என்று இல்லாமல்… சில தொழிலாளர்களுடன் சேர்ந்து… பழுதுபட்டிருந்த ஒரு இயந்திரத்தைச் சரிசெய்ய போராடிக்கொண்டிருந்தார்…

“அப்பா” என்ற அவனது அழைப்பில் திடுக்கிட்டு திரும்பியவர். வியப்பு மேலிட “ஹரிப்பா!!! நீ என்ன இங்க வந்திருக்க?” என்று கேட்க…

 சத்தியமாக அவர் தன் அருமை மகனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவரது குரலிலேயே அவனுக்குப் புரிந்தது.

“ஏன்பா? நான் இங்கெல்லாம் வரக்கூடாதா?” என்று அவன் கிண்டலாக கேட்க…

அதற்கு அவரோ “நீ இங்க வரணும்னுதானேப்பா  நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன்  சொன்னார்…

உடனே பேச்சை மாற்றவேண்டி அவன் ” நீங்க ஏன்பா இந்தவேலையெல்லாம் செய்துகொண்டு இருக்கீங்க? ஒரு மெக்கானிக்கை அழைக்கலாம் இல்லையா? என்று கேட்க…

“இல்லப்பா.. சின்ன (fault) பால்டாகத்தான் இருக்கும்.. சரிசெய்ய முடியுமான்னு பார்த்தேன்.

இல்லனா வெளியிலிருந்துதான் ஆளை கூப்பிடனும். இன்றைக்கு ஒரு முக்கியமான ஆர்டரை வேறு முடிதாகவேண்டும்” என்று கவலையுடன் சொல்ல..

சரி நீங்க கொஞ்சம் நகருங்க நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்” என்றவனை அதிசயமான எதோ வேற்றுக் கிரக வாசியைப் பார்ப்பதுபோல் பார்த்தவாறே… அவர் நகர்ந்து அவனுக்கு வழிவிட.

அவன் சொன்னதுபோல் அடுத்த இருப்பது நிமிடத்தில் அதைச் சரிசெய்யவும் செய்தான் யூடியூப் உதவியுடன்…

பின்பு தாமதமின்றி தடைப்பட்ட வேலைகள் தொடர்ந்திட… காட்டன் வேஸ்டில் கைகளைத் துடைத்தவாறே வந்த மகனை கட்டி அணைத்துக்கொண்டார் அந்த பாசக்கார தந்தை…

பிறகு அலுவலக அரையில் அமர்ந்து தேநீர் வரவழைத்துப் பருகிக்கொண்டே ஹரி, ” இங்க இருக்கும் மெஷின்ஸ் எல்லாமே ரொம்ப ஓல்ட்தான் இல்லையப்பா?” என்று கேட்க…

“ஆமாம் ஹரிப்பா! இப்ப மிக அட்வான்ஸ் மெஷினேரிஸ்லாம் வந்துவிட்டது… ஆனா நிறைய இன்வெஸ்ட் செய்ய வேண்டியதாக இருக்கும்…”

“இருக்கிற காம்பெடிஷனில் என்னால பழைய இயந்திரங்களை வைத்துக்கொண்டு இந்த பிசினஸ்ஸை நல்லபடியாக நடத்த முடியவில்லை…”

“பழைய வாடிக்கையாளர் சிலபேரை மட்டுமே நம்பி ஓட்டிக்கொண்டிருக்கிறேன்…”

“கிளோஸ் செய்து விடலாமான்னு கூட யோசிச்சேன்… இங்க வேலை செய்யறவங்க பலபேர் ரொம்ப வருஷமா இருக்காங்க…”

“நாம அப்படி செஞ்சா… அவர்களெல்லாம் மிகவும் கஷ்டப்படுவார்கள்… அதனால்தான் ரன் பண்ண வேண்டியதாக இருக்கு…” என்க…

ஸ்வேதா சொன்ன “பத்து குடும்பத்தையாவது வாழவைக்கணும்” என்ற வார்த்தை நினைவில் வந்தது…

“மாமனாருக்கு ஏற்ற மருமகள்தான் அவள்” என்று எண்ணிக்கொண்டான். அங்கே வேலை செய்பவர்களுக்காக இரவு உணவு வரவழிக்கப்பட, அதையே தந்தையும் மகனும் உண்டனர்…

பிறகு அவர்கள் அந்த ஆர்டரை முடித்து டெலிவரி செய்து வீடுவந்து சேர இரவு பதினொன்று ஆனது.

காரில் தன் கணவருடன் வந்து இறங்கிய மகனைப் பார்த்த விஜயாவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை…

அவன் பேக்டரி சென்றதை அறிந்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்…

கணவர் உறங்க சென்றபின் மகனை சந்திக்க வந்தவர்… “ஹரி கண்ணா! என்னப்பா ஒரே அதிர்ச்சியா கொடுக்கிறாய்?” என்று கேட்க,

அவர் பேக்டரி சென்றதைத்தான் சொல்கிறார் என்பது புரியவே… “இதுல என்னமா அதிர்ச்சி இருக்கு… இன்றைக்கு எனக்கு அங்கே போகணும்னு தோன்றியது. போனேன் அவ்வளவுதான்” என்க…

அதற்கு அவர், “உனக்கு எப்படியோப்பா, ஆனால் எங்களுக்கு இது மிகவும் சந்தோஷமான விஷயம். இந்த பிசினஸ் அப்பா ஆர்வத்துடன், மிகவும் கஷ்டப்பட்டு தொடங்கியது…”

“கொஞ்ச நாளாகத் தொழிலை கவனிக்க மிகவும் சிரமப்படுகிறார்… அதனால்தான் உதவிக்கு நீ இருந்தால் நன்றாக இருக்கும்னு நினைத்தார்…”

“உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை என்றவுடன் உன்னை நிர்ப்பந்திக்க அவர் விரும்பவில்லை… என்னையும் உன்னிடம் எதுவும் சொல்லக்கூடாது என்றுவிட்டார்…”

“நீ இன்று அங்குப்போனது அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்று உனக்குத் தெரியாது…” என்று கண்களில் நீர் கோர்க்க சொல்லி முடித்தார் விஜயா…

இதுநாள் வரை அவன் பிடிவாதத்துடன்… கண்களை எவ்வளவு இறுக்கமாக மூடிக்கொண்டிருந்திருக்கிறான் என்பது அவனது மனதைச் சுட்டது…

கட்டாயம் எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தவாறே… “சரி மிகவும் நேரமாகிவிட்டது, போய் தூங்குங்கம்மா, காலையில் பார்க்கலாம்” என்று அவரை அனுப்பியவன்…

அடுத்துச் செய்ய வேண்டியதைத் திட்டமிடத்தொடங்கினான்.

தனது மகனின் குணம் தெரிந்த அவனது அன்னையோ அவனின் மாற்றத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினார்..

சனி, ஞாயிறு இரு தினங்களும் தன் மடிக்கணிணியே கதியென்று கிடந்தவனை பார்த்து..

“இவன் சொன்னது போல சும்மாதான் பாக்டரிக்கு போனானா? நாமதான் கொஞ்சம், எதிர்பார்த்து ஏமாந்துட்டோமா?” என்று… பெற்றோர் இருவரும் குழம்பி இருக்க…

திங்களன்று தந்தைக்கு முன்னதாகவே அலுவலகம் கிளம்பி தயாராக இருந்த ஹரி… தந்தையை எதிர்பார்த்து.. ஹால் சோபாவில் அமர்ந்துகொண்டு “உங்க வீட்டுக்காருக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லமா… இவளவு லேட்டாகவா பாக்டரிக்கு போவது…” என்று… நீட்டி முழக்கி “என்னத்த கண்ணய்யா” பாணியில் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டவாறே அங்கே வந்த ராதாகிருஷ்ணன், புன்னகைத்தவாறே “ம்ஹும்” என்று செரும..

“மீ எஸ்கேப்” என்று ஓடிப்போய் ஹரி காரை ஸ்டார்ட் செய்ய… அருகில் போய் அமர்ந்தார் அவனுடைய அப்பா…

பிறகு பாக்டரியை சென்றடைய… அன்றைய தினம் முழுதும்… அங்கே உள்ள நிலைமையை ஆராயவே சரியாக போனது ஹரிக்கு…

விடுமுறை முடிந்து அடுத்தநாள், விஜயாவின் ஸ்பெஷல் தயாரிப்பான காரகுழம்பும்… காரைக்குடி உருளைக்கிழங்கு ஃப்ரையும் பேக் (pack) செய்துகொண்டு கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான் ஹரி…

அன்று மதியம் நண்பர்களுடன் உற்சாகமாக அவன் கொண்டு சென்ற உணவை உண்ணத்தொடங்க…

வர்ஷினியோ… “கொஞ்சம் காரம்,” என்று நழுவ…

அதற்கு பாலுவோ “அவ பருப்பு சாதம் சாப்பிட்டாலே காரம்னு சொல்லுவாள்… இதில் காரக்குழம்பு எங்கேந்து சாப்பிடப்போறா… அவளோட பங்கையும் நானே எடுத்துக்கறேன்” என்று சொல்ல…

அதற்கு வர்ஷினி கையில் வைத்திருந்த புத்தகத்தாலேயே அவனை இரண்டு அடி கொடுக்க…

இது எதையும் கண்டுகொள்ளாமல் அந்த உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தாள் ஸ்வேதா…

அதை பார்த்த பாலு “அடி பாவி… இவளவு காரமான (food)  ஃபுட்டா உனக்குப் பிடிக்கும்?”என்று கேட்க…

“பாலுண்ணா… செமையா இருக்கு… இந்த பொடேடோ ஃப்ரை சான்ஸே இல்ல.. முன்பெல்லாம் எங்கம்மா இதுபோலத்தான் செய்வாங்க… அப்பாக்கு அசிடிட்டி இருப்பதால்  இப்ப காரமாகவே சமைப்பதேயில்லை என்று சொல்லிக்கொண்டே” அந்த உணவை ஒரு பிடி பிடித்தாள் ஸ்வேதா…

அவள் சப்புக்கொட்டி அந்த உணவை உண்ணும் அழகை தன் கண்களால் பருகியவாறு  “ஆஹா!! நம்ம வீட்டு சமையல் முறைக்கு  இவ நன்றாகவே செட் ஆகிவிடுவாள்  போலிருக்கே…  நம்ம டேஸ்ட் இவளுக்கும்   பிடிச்சிருக்கே…” என மனதில் ஆனந்தப்பட்டுக்கொண்டான் ஹரி…

 

 

அடுத்து வந்த நாட்களில் ஒருநாள் விடுமுறையென்றாலும்கூட தொழிற்சாலை செல்லத் தொடங்கினான் ஹரி…

திருப்ப வரும்பொழுது ஸ்வேதாவுக்கு பிடித்த உணவுவகைகள் அவனது அம்மாவின் கைமணத்தில், மற்றவர்களுடன் சேர்ந்து அவளுக்கு வந்துசேரும்…

அவளும், வர்ஷினியும் விஜயாவிற்கு அழைத்து நன்றி சொல்வதுடன் அவரது கைமணத்தை வெகுவாக புகழ்ந்து தள்ளுவார்கள். அவரும்  இரண்டு பெண்களும் அவனுடைய கல்லூரி தோழிகள் என்ற வகையில்  மகிழ்ச்சியாகவே அவர்களுடன் பழகலானார்.

சிறிது நாட்களில் அவர்களது தொழிலை விரிவு படுத்துவதற்கான சில திட்டங்களை தயார் செய்து அவற்றைச் செயல்படுத்தவும் தொடங்கினான் ஹரி…

அந்தச் சமயத்தில்தான் ஸ்வேதாவின் பிறந்தநாளும் வந்தது… அந்தநாள் அவர்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளாகவும் அமைந்தது…

error: Content is protected !!