நேரமோ… இரவு பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது… அதற்குப் பிறகு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை ஹரி… வண்டியை ஓட்டும் நிலையில் கூட அவன் இல்லை என்பதால்… கால் டாக்ஸி புக் செய்து… அப்படியே மருத்துவமனை கிளம்பிவிட்டான்.
வழியிலேயே பாலுவை கைப்பேசியில் அழைத்தவன்… “பாலு! ஒரு மெடிக்கல் எமெர்ஜன்சி… ஜி. ஹெச்… போய்க் கொண்டிருக்கிறேன்… என்ன ஏதுன்னு கேட்காமல்…நீ கொஞ்சம் அங்கே வா…” என்று மட்டும் சொல்லிவிட்டு… அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல்… கட் செய்துவிட்டான்…
அவனது அப்பாவிடம் மட்டும் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை… உடனே போகவேண்டும்… என்று சொல்லிவிட்டு… மருத்துவமனைக்கு வந்திருந்தான்…
வெளியிலேயே அவனுக்காகக் காத்திருந்தான் பாலு… அவனது ஓய்ந்து போன தோற்றத்தைக் கண்டு பதறியவன்… “என்ன ஆச்சுடா?” என்று கேட்க…
அவனிடம், கொஞ்சம் இரு என கைகளால் ஜாடை காட்டியவன்… கைப்பேசியில் அவனது அக்காவை அழைத்து ஸ்வேதா அனுமதிக்கப் பட்டிருக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கான இடத்தை விசாரித்து அங்கே பறந்தடித்துச் சென்றான்…
*********************
அங்கே மயக்க நிலையில் இருந்தது… ஸ்வேதாவேதான்…
நெற்றியில் பலமாக அடிப் பட்டு… கட்டுப் போடப் பட்டிருந்தது, கைகளிலெல்லாம், சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது…
கபிலா அங்கேதான் இருந்தாள்…
ஹரிக்குத் தெரிந்திருந்த தகவல் கூட அறியாததால்… பாலுதான் பதறித் துடித்தான்…
கண்கள் கலங்கி… மூளை மறத்துப் போய்… அமைதியாக நின்றிருந்த ஹரியைப் பார்த்த கபிலா…
“ஹரி… இந்தப் பொண்ணு உன் பிரென்ட் தானா?” என்று கேட்க…
அவள் பேசியது அவனைச் சென்றடைந்ததாகவேத் தெரியவில்லை…
அவனை உலுக்கியபடி ஹரீ!! என்க “ஹான்… என்ன சொன்ன கா…” என்றவனிடம்…”இந்தப் பெண்ணை உனக்குத் தெரியுமா? ” என்று கேட்க…
“இவள் என் ஸ்வேதா” என்றவனை ஒரு புரியாப் பார்வை அவள் பார்க்க…
உணர்வுக்கு வந்தவன் “இவ என் பிரிண்ட் ஸ்வேதா…” என்றான்.
அதற்குள் பாலு நந்தாவை அழைத்து ஸ்வேதாவின் நிலையைச் சொல்லியிருந்தான்.
இருவரையும் அழைத்த கபிலா… “பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அடிபட்டுக் கிடந்த இவளை, 108இல் கொண்டுவந்து இங்கே சேர்த்திருக்கிறார்கள்… என்றுவிட்டு… எக்ஸ்ரே மட்டும் எடுத்திருக்கோம் ஹரி… வலது புருவத்துக்கு மேலே சின்னதாக எலும்பு உடைந்திருக்கு, உள்ளே குத்தி இருப்பது போல் தோன்றுகிறது… CT அல்லது MRI கூட தேவைப் படலாம்… சிறியதாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்… அவளோட குடும்பத்தினர் யாராவது வந்தால் அடுத்துச் செய்ய வேண்டியதைப் பற்றி முடிவு செய்யலாம்… என்க…
அதற்கு பாலு “அவளுடைய அம்மா, அப்பா இரண்டு பேரும் வெளியூர் சென்றிருக்கிறார்கள்… அண்ணனுக்குத் தகவல் கொடுத்துவிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான் என்றான்.
ஹரி, “அக்கா… மேற்கொண்டு டிரீட்மென்ட் இங்கேயே பார்ப்பது நல்லதா? இல்லை வேறு எங்கும் மாற்றலாமா?” என்று கேட்க…
“ஹரி… இங்கே நல்ல சர்ஜன்ஸ் எல்லாம் இருக்காங்கதான்… ஆனா நானே சொல்லக் கூடாது… இங்கே எல்லாமே கொஞ்சம் லேட் ஆகும்டா… வசதி வாய்ப்பிருந்தால் வேறு எங்காவது பார்ப்பது நல்லது…” என்று முடித்துக்கொண்டார் அவர்…
சிறிது நேரத்தில் அழுது, சோர்ந்து நந்தாவும் அங்கு வந்தான்…
அதற்கு முன்பாகவே ஹரி, அவனது அக்காவின் கணவர் சஞ்சய் மூலம், அவளை வேறு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்திருந்தான்…
அதன்பின் அவளைவிட்டு, எங்கேயும் நகரவில்லை அவன்… ஆம்புலன்ஸில் கூட அவளது அருகிலேயே அமர்ந்திருந்தான்… வலியில் அவள் முனகிக் கொண்டிருக்க, அதைக் கேட்டவனின் உயிர் கரைந்து கண்களில் வழிந்தது. அவனைக் கவனிக்கும் நிலையில் மற்ற இருவரும் இல்லை.
அதன்பின் துரிதமாக அந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவளுக்கு அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்தது… காலை ஏழு மணியளவில்… ICUவில் விடப்பட்டிருந்தாள்… அவளது பெற்றோருக்கும் தகவல் அறிந்து, கிளம்பி வந்துகொண்டிருந்தனர்.
பிறகு அங்கிருந்தாலும், உள்ளே சென்று அவளைப் பார்க்கும் வாய்ப்பு, நந்தாவைத் தவிர யாருக்கும் இல்லை என்பதினால், நந்தாவுடன், பாலுவும் அங்கே இருக்கவே, ஹரி கிளம்பி வீட்டிற்குச் சென்றான்.
******************
அதன் பிறகு அந்த மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும், மருந்துகளின் வீரியத்தில் ஸ்வேதா பெரும்பாலும் தூக்கத்திலேயே இருக்க… காலையில் தினமும் அவளுக்கு உணவு கொண்டுவர அவளது அம்மா, வீட்டிற்குச் சென்று வருவார். மாலை முழுவதும் அவளது அப்பாவும் நந்தாவும் அங்கே இருப்பார்கள்.
தினமும் காலையில், கல்லூரி செல்லும் முன்பு அவளை மருத்துவமனையில் சென்று பார்த்திவிட்டுப் போவான் ஹரி…
வர்ஷினி விடுப்பு எடுத்துக்கொண்டு அவளுடனேயே இருந்தாள்… பாலு கல்லூரி நேரம் தவிர, மருத்துவ மனையிலேயே இருந்தான் எனலாம்.
ஹரி அங்கே செல்லும்போது ஓரிரு முறை மட்டுமே அவளுடைய அன்னை அங்கே இருந்தார்… அப்படி அவனைச் சந்திக்கும்போதெல்லாம் அவர், நன்றி சொல்லாமல் அவனை விட்டதில்லை.
இத்தனை கலவரங்களுக்கும் நடுவில் அவனது பிறந்தநாளை அனைவரும் மறந்திருந்தனர்… அவனும் கூட… அதுபோல் அந்த விபத்துக்கான காரணத்தை, யாரும் அவளிடம் கேட்கவுமில்லை. அவளும் அதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.
***************
அதன் பிறகு… கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்துக் கல்லூரிக்கு வந்திருந்தாள் ஸ்வேதா… ஏனோ சிடுசிடுப்பு, கோவம், சிறு சிறு ஞாபக மறதி என அவள் போக்கே கொஞ்சம் மாறிப்போயிருந்தது.
அவள் கல்லூரி வரத்தொடங்கிய பிறகு, அவளைப் பார்ப்பதற்காகவே ஹரி தினமும், மதியம், அவர்களுடன் வந்து கலந்துகொள்வான்… முன்பு இருந்தது போலவே.
ஸ்வேதா ஏனோ அவனிடம் ஒரு ஒதுக்கம் காண்பிப்பதுபோல் தோன்றியது அவனுக்கு, ஆனால் அதற்கான காரணம்தான் புரியவில்லை…
ஒரு நாள் வர்ஷினி… அவள் முன்தினம் பார்த்த ஒரு காதல் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள்…
பிறகு அவர்களது பேச்சு… காதல், திருமணம்… எனத் திசை மாற… வர்ஷினி காதல் திருமணம் தானே பெஸ்ட்… ஸ்வேதா?” என்று அவளிடம் கேட்டாள்…
“காதலாவது… ஒண்ணாவது… அப்படியெல்லாம் எதுவுமில்லை… ப்ரென்ட்ணு சொல்லிப் பழகுவது… பிறகு திடீரென்று காதல்னு வந்து சொல்வது… ஒரு பெண்ணை கரெக்ட் பண்ண, கிபிட் வாங்கிக் கொடுத்தால் போதும் என்ற ஒரு சீப் மெண்டாலிட்டி இந்த பசங்களுக்கு இருக்கு… சில பொண்ணுங்களும் அப்படி நடந்து கொள்வதும் ஒரு காரணம்… ஆனால் எல்லாரையுமே… அதே போலவே நினைத்தால் கேவலமாக உள்ளது…
ஒரு வேளை பிடிக்கலைனு சொன்னால் ஆசிட் ஊற்றுவது இல்லை வேறு மாதிரி டார்ச்சர் செய்வதுனு இறங்கிடுறாங்க…” என்று சொல்லிக்கொண்டே போக அதைக் கேட்டவாறே அங்கே வந்தான் ஹரி…
அவன் வந்ததை ஸ்வேதாவைத் தவிர மற்ற இருவரும் கவனித்தனர்.
“ஸ்வேதா எல்லாரையும் பொதுவாகச் சொல்லாதே… உண்மையாகக் காதலிக்கும் பசங்களும் இருக்காங்க… பொண்ணுங்களும் இருக்காங்க… அப்படி ஒருவனை நீ சந்திக்கும்போது உனக்குப் புரியும்…” என்று ஹரியை மனதில் வைத்து பாலு சொல்ல…
“நெவெர்… பாலுண்ணா… நான் எப்பவும் அப்படி ஒரு தப்பை பண்ணவே மாட்டேன்…” என்று ஸ்வேதா தீவிரமாகச் சொல்ல…
அத்துடன் விட்டிருக்கலாம் பாலு… “ஒருவேளை அப்படி ஒருவன் உனக்கு ப்ரொபோஸ் செய்தால் என்ன செய்வ…” என்று கேட்க…
“ப்ரெண்ட்னு சொல்லி பழகிட்டு… பிறகு லவ் பண்றேன்னு சொன்னால்… என்னால் அதை ஏற்க முடியாது… பிறகு அவன் முகத்தில் கூட விழிக்க மாட்டேன்… மேலும் தொந்தரவு செய்தால்… போலீசில் கம்பளைண்ட் செய்து விடுவேன்…” என்று சொல்லி, விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டாள் ஸ்வேதா…
அதிர்ந்தனர்… மற்ற மூவரும்…
மறுபடி பாலு எதோ அவளிடம் சொல்வதற்கு முயல… பேசாதே!… என கைகளால் ஜாடைக் காட்டி தடுத்துவிட்டான் ஹரி…
பிறகு பாலு, ஹரியிடம்… “ஏண்டா அவ இப்படிலாம் நடந்துக்கறா… ஒன்றுமே புரியலையே…” என வருந்த…
வர்ஷினியோ என்ன சொல்வதென்று புரியாமல் நின்றிருந்தாள்.
இருவரையும் பார்த்து பொதுவாக… ” இத்துடன் இதை விட்டுவிடுங்கள்…இனிமேல் தயவு செய்து இதுபற்றி அவளிடம் எதுவும் நீங்கள் பேசக்கூடாது…” கட்டளையாகச் சொன்ன ஹரி, அங்கிருந்து சென்றான்.
******************************
சில தினங்கள் கடந்த நிலையில்…கல்லூரி பேருந்திலிருந்து இறங்கி வரும் பொழுது வஸுதா… ஸ்வேதாவை நோக்கி “என்னாலதானேக்கா உங்களுக்கு, இந்த மாதிரி ஆகிப்போச்சு….” என்று அவளது நெற்றியில் ஏற்பட்டிருந்த தழும்பைப் பார்த்து வருந்த…
“பரவாயில்லை வஸுதா! முகத்தில் அவ்வளவு ஒன்றும் பெரிதாக மாற்றம் தெரில… தேவையில்லாமல் நீ எதையும் பேசி வைக்காதே… பாலு அண்ணாவின் காதில் விழுந்தால், பிரச்சனை ஆகிவிடும்… ” என்று ஸ்வேதா சொல்லிக் கொண்டிருக்க,
பைக்கை நிறுத்திவிட்டு அங்கே வந்த ஹரியின் காதில் தப்பிதமில்லாமல் அதுநன்றாகவே விழுந்தது.
உடனே கோவமாக அவர்களை நோக்கி வந்த ஹரி… “என்ன ஸ்வேதா நடந்தது? இவளாலதான்னா… அது ஆக்சிடென்ட் இல்லையா… நீ இருந்த நிலைமையில் உன்னை ஒன்றும் கேட்கக் கூடாதுன்னு விட்டது தப்பா போச்சே… போலீஸ்ல கூட விபத்துன்னுதானே பைல் பண்ணி இருக்காங்க…” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க…
அதில் எரிச்சலுற்றவள்…”விடுங்க ஹரி… ஒரு பிரச்சினையும் இல்ல… அது தெரியாமல் நடந்த விபத்துதான்…” என்க…
“இல்ல… எதையோ மறைக்குற…” என்றவன் வசுதாவை நோக்கி… “ஏய் நீ சொல்லு… அன்றைக்கு என்ன நடந்தது?” என்று மிரட்டும் குரலில் கேட்க…
அங்கே இருந்த சாலை ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த இவர்களைப் பார்த்துக்கொண்டே மாணவர்கள் சிலர் கண்டத்து செல்லவும்… கொதிநிலைக்குச் சென்ற ஸ்வேதா…
“நீங்க யாரு இவளைக் கேள்வி கேட்க? உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்கள்… என்று வசுதாவை அருகில் வைத்துக்கொண்டே ஆத்திரத்துடன் சொல்லிவிட…
ஏற்கனவே அவளது நடவடிக்கைகளில்… மனம் வெறுத்துப் போய் இருந்தவன்… மேலும் அவள் பேசிய வார்த்தைகளில்… அவனது தன்மானம்… வெகுவாக சீண்டப் படவே…
“இனி… நீயே வந்து… என்னிடம்… என்ன நடந்தது என்பதைச் சொன்னால் மட்டுமே… நான் உன்னுடன் பேசுவேன்… இல்லையென்றால்… உன் விஷயத்தில் எக்காரணம் கொண்டும் நான் தலையிட மாட்டேன்…”
“உனக்கு நான்” என்றவன்… அதைத் திருத்தி… “என்னோட ஃப்ரண்ட்ஷிப்… வேண்டும் என்றால்… நீயேதான் என்னைத் தேடி வரணும்” என்றுவிட்டு… கோபத்துடன் அவளைக் கடந்து போனான் ஹரி…
*************************
ஆனால் ஸ்வேதா… ஒரு முறை கூட அவனைச் சந்தித்து… நடந்தவற்றைச் சொல்ல முற்படவில்லை… அவளுடைய அத்தகைய நடவடிக்கையை ஹரி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை…
அவள் தன்னை… காதலனாக என்நாவில்லை… ஆனால் நல்ல நண்பனாகவாது எண்ணி அவனை நாடி வந்திருக்கலாம்…
ஆனால் அவளோ ஒரு சக மனைதனைக்கூட தன்னை மதிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றவும்… மனதளவில் மிகவும் அடிவாங்கியவன்…
அதன்பின் அந்த வருடத்தின் படிப்பு முடிந்து கல்லூரியை விட்டுச் செல்லும் வரையிலும் கூட ஸ்வேதவைச் சந்திக்கத் துளியும் முயலவில்லை ஹரி…
வர்ஷினி மட்டும் அவனது வகுப்பிற்கே போய் அவனைச் சந்தித்துவிட்டு வருவாள். பாலுவுடன் எப்பொழுதும் போலவே நட்புடன் இருந்தான். ஆனால் ஸ்வேதவைப் பற்றி அவன் பேசினால் மட்டும் தவிர்த்துவிடுவான்…
*****************
சரியாகப் படிப்பு முடியவும்,அவனுக்குக் கால நேரம் பார்க்காமல் உழைக்கவேண்டிய சூழலும் உருவாகி இருக்கவே, முழுவதுமாகத் தன்னை தொழிலில் புதைத்துக்கொண்டான்…
அவளுக்காக ஏற்படுத்திக்கொண்ட நிலைதான்… எனினும் அவள் மீது அவன் கொண்ட காதலைப் போலவே… அந்தத் தொழிலையும் அவனால் விட இயலவில்லை…
இடைப்பட்ட காலத்தில்… பாலு, கோயம்பத்தூரிலேயே ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்திருந்தான்.
வர்ஷினியும் பாலுவும் மட்டும் தொடர்பில் இருந்தனர்… கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் வர்ஷினி, அவளது திருமண பத்திரிக்கையுடன், நேரிலேயே வந்து அழைத்துவிட்டுச் சென்றாள்.
புதிதாக விவசாயம் தொடர்பான இயந்திரங்களின் தயாரிப்பில் இறங்கியிருந்ததால்… ஹரியால் வர்ஷினியின் திருமண வரவேற்பிற்கு மட்டுமே போக முடிந்தது.
முதலில்,, திருமணத்திற்கு வராமல் விட்டதற்கு… அவனை நன்றாக வறுத்தெடுத்த பின்புதான்… அவளது கணவர் முகிலனை ஹரிக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவரும் மிகவும் பண்புடன், அவர்களது நட்பை மதிப்பவராகவே அமைந்திருந்தார்… அவர்களுக்குப் பரிசு கொடுத்துவிட்டு மேடையிலிருந்து இறங்கும்பொழுதுதான் அவன் ஸ்வேதாவைப் பார்த்தான்…
வர்ஷிக்காக, பழரசம் எடுத்து வந்தவள்… அவனை காத்திருக்கச் சொல்லி ஜாடை காட்டிவிட்டு மேடை மேலே ஏறிச்சென்றாள்…
அவள் ஸ்வேதாவே இல்லையோ என எண்ணும் அளவிற்கு… உடல் மிகவும் மெலிந்து, கொஞ்சம் கருத்து… கண்களில் கருவளையம் விழுந்து… எப்படியோ மாறிப் போயிருந்தாள்.
இப்படி அவளைக் கண்ட ஹாரியின் மனமோ, சொல்லொண்ணா துயர் கொண்டது… “ஏன் இப்படி இருக்கிறாள்?” என்ற கேள்வி எழுந்து அவனை இம்சித்தது.
சில நிமிடங்களில் அவனைத் தேடி வந்தாள்… “எப்படி இருக்கீங்க ஹரி…” என்று கேட்க… “நான் நன்றாக இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க ஸ்வேதா?” என்று அவன் கேட்கவும்… அவனை ஒரு விசித்திர பார்வை பார்த்தவள்… நான் நன்றாக இருக்கேன்… வர்ஷி அம்மா என்னைத் தேடுவாங்க… நான் வரேன் பை… என்று அங்கிருந்து சென்றாள் ஸ்வேதா…
***************************
அதன் பின் பாலுவின் திருமணம் வசுதாவுடன் நிச்சயிக்கப்பட்டதுகூட அவனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம்… பாலு எப்படி அவளை மணக்கச் சம்மதித்தான் என்று…
இடையில் ஹரி… அவனது தொழிலில் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கலை சரி செய்ய போராடிக்கொண்டிருந்த சமயம்தான் பாலுவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த நேரம் அவன் யாருடனும் அதிகத் தொடர்பில் இருக்கவில்லை.
வியாபார ஏற்றுமதித் தொடர்பாக அவன் வெளிநாடு சென்றிருந்ததால்… பாலுவின் திருமணத்தில் கூட அவன் கலந்துகொள்ள முடியவில்லை. நட்பின் நல்ல புரிதலால்… பாலுவும், அதற்காக அவனிடம் கோவம் கொள்ளவில்லை.
**************************
கடைசியாக வர்ஷினியின் திருமணத்தின் பொழுது ஸ்வேதாவைப் பார்த்தவன்தான்… அதன் பிறகு அவளை… அவன் சந்திக்கவே இல்லை…
அவனைப் பொறுத்தவரை காதலியாகத்தான் அவள் அவனுக்கு அறிமுகமானாள்…
அவளைப் பொறுத்தவரை அவன் அவளுக்கு நண்பனாக மட்டுமே அறிமுகமானவன்…
அன்றைய அவளது பேச்சில் காயமுற்றவன்… அவள் தானாக அவனைத் தேடி வந்து… மனதை திறந்தாலன்றி…
என்றைக்குமே தனது காதலை அவளிடம் சொல்லவே கூடாது என முடிவெடுத்திருந்தான்… ஹரி…
மனம் நிறைய காதலுடன்… நண்பனாகக்கூட… அவனால் தொடர இயலாதுதான்… விலகிப் போனான்…
பாலுவிடமும்… வர்ஷினியிடமும் அவனைப் பற்றிய எந்த விஷயத்தையும் அவளிடம் சொல்லவே கூடாது என உறுதியாகத் தெரிவித்திருந்தான்…
இதோ அவளாகவே அவனைச் சந்திக்க விரும்பிக் காத்திருக்கிறாள்…
அவளுக்காகவே பல மயில்கள் கடந்து வந்து இதோ காத்திருக்கிறான் அவன்…
இத்தனையும் எண்ணியவாறே ஹரி கடிகாரத்தைப் பார்க்க… காலை ஆறு மணி…
விடியும் அன்றைய பொழுது அவர்களுக்காக என்ன வைத்துக் காத்திருக்கிறதோ…