O Crazy Minnal(1)

          ஓ க்ரேஸி மின்னல்…!

1

அந்தக்காலை நேரக்குளுமையை கொஞ்சம்கூட ரசிக்காமல் வேகநடைப்போட்டுக்கொண்டிருந்தாள் அவள். என்ன செய்வாள் பாவம் காலையில் எழும்போதே மணி 7:30 என்றுக்காட்டியதுமே புரிந்துவிட்டது அவளுக்கு 7:30 ஆரம்பமென்று, பின்னே 8:30 மணி கல்லூரிக்கு 7:30 மணிக்கு எழுந்தால்… அதான் ஆட்டோ பிடிக்க இப்படிக் கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தாள். 

ஆனால் என்னதான் அரக்கப் பரக்க  ஓடினாலும் அவள் முகத்தில் எந்தவிதமான படபடப்புமில்லை. 

அவள் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ ஒரு  ஆட்டோ வந்தது இவளும் கிடைத்தது ஆட்டோ என்று ஏறிவிட்டாள். ஆனால் ஏறிய பிறகே ஏன்டா இதில் ஏறினோம் என்றானது காரணம் அவர் ஓட்டிய வேகம் அப்படி. 

அவளிருந்த கடுப்பிற்கு அவளை விட்டால் அவளே போய் வண்டியை ஓட்டிவிடுவாள். ஆனால் கடவுள் அந்த கதவையும் இழுத்து மூடிவிட்டார். 

அவளுக்குத்தான் ஆட்டோ ஓட்டத்தெரியாதே. நல்ல வேளை கடவுள் அந்தக்கதவை மூடினார் இல்லையென்றால் எத்தனை உயிர்கள் பறிபோயிருக்குமோ…

போதாக்குறைக்கு சிக்னல் வேறு சிகப்பாகிவிட  அவளுக்கோ அய்யோ என்றானது.

போச்சு இன்னைக்கு என்ன வச்சு செய்யப்போறாங்க. டேய் முடிலடா தூங்குனது ஒரு குத்தமாயா? என்றவள் மானசீகமாகப் புலம்பிக்கொண்டிருக்க அவளது போன் ரிங்கிற்று. அதுவோ ரிஷி என்க ‘அய்யோ இவன் வேற கூப்பிடறானே’என்று வேறு வழியில்லாமல் அதை எடுக்க அந்தப் பக்கத்திலிருந்தவனோ 

“ஹே!!!ஏனாயித்து?(என்னாச்சு?)”என்றவன் கன்னடத்தில் கதற, அவளுக்கோ ஒரு கையோ ஆட்டோவிற்கான சில்லறையைத் தேட…மறு கையோ ஐடிக்காகத் துழாவியது அந்த பையினுள். காதிலிருந்த  ஃபோனும் ‘எப்ப வேணாலும் விழுவேன்’ என்றிருக்க அதில் பதறியவளோ,

“நான் வந்துட்டேன்” என்று ஆங்கிலத்தில் அலறிவிட்டு அந்த ஃபோனைத் தூக்கி பேகினுள் எறிந்தவள், நிமிர காலேஜ் வந்து விட்டிருந்தது.

அடக்கடவுளே என்று பதறித்துடித்து இறங்கி கையிலிருந்த சில்லறையை அவரிடம் கொடுத்துவிட்டு வேகமான எட்டுக்களை எடுத்து வைக்க

அந்தோ பரிதாபம் கேட்டிலேயே நிறுத்திவிட்டார் அந்த காவலாளி ‘அய்யோ!!! இவர் வேற இந்த நாய் செய்ன் இல்லன்னா உள்ள விடமாட்டாரே…’ என்று கையிலிருந்த ஐடியை கழுத்தில் போட்டுக்கொண்ட பின்னரே அவர் உள்ளே அனுமதிக்க அவளோ அடுத்த நொடியே படிக்கட்டை நோக்கி ஓடியிருந்தாள் அந்த நான்காவது மாடியிலிருந்த ஆடிட்டோரியத்திற்கு.

அரக்கப் பரக்க அந்த படிக்கட்டுகளில் ஓடிக்கொண்டிருந்தவளின் ஃபோன் சத்தமாகப்  பாட அதில் பதறியவளோ, ‘அடப்பாவி எவன்டா அவன்?’ என்றந்த பையை அலசி ஆராய அவளது ஃபோனோ 

Look what you made me do…என்று அலற…அவளோ அவள் வாழ்நாளில் முதல் முறையாக அந்த ரிங்டோன் வைத்ததற்காக வருந்தினாள்.

அவள் துழாவியதில் போன வாரத்து சாக்லேட் ராப்பர்கள் வந்ததே ஒழிய அவள் ஃபோன் வரவில்லை. கட்டக் கடைசியில் கடைசி ஜிப்பில் கைவிட…யுரேகா!!!

“கய்ஸ் நான் வந்துட்டேன் நீங்க எங்க இருக்கீங்க?”

“தர்ட் ஃப்ளோர் நம்ம க்ளாஸுக்கு வந்துடு” என்க அவளோ முதல் வேலையாக ஃபோனை சைலன்ட்டிலிட்டாள்.

அந்த கல்லூரி அந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பு. சாப்பாட்டு இடைவேளையில் உபயோகித்துக் கொள்ளலாம், ஆனால் மற்ற நேரம் இதைப் போல் எவரேனும் மாட்டிக்கொண்டாரெனில் அவர்களது ஃபோனை வாங்கி வைத்துக்கொண்டு ‘நாங்க கடைசி செம்  முடிந்தவுடன்தான் தருவோம்’ என்றவர்கள் இழுத்தடிப்பதில் ‘நமக்கெல்லாம் ஃபோன் ஒரு கேடா?’என்று நாமே நொந்துவிடுவோம்.

அவர்கள் பின் நாலாயிரம் முறை அலைந்து நமக்கு நாக்கு தள்ளிய பிறகே கிடைக்கும்.

அந்த வகுப்பறைக்குள் புயல் வேகத்தில்  நுழைந்தவள் அங்கிருந்த நாற்காலியில் அதே வேகத்தில் அமர்ந்துவிட,  அந்த வகுப்பறையில் அவளது கொரில்லா கேங்க் மட்டுமே! அவர்களைப் பார்த்து

“எங்க எல்லாரும்?” என்றாள் மூச்சு வாங்க

“எல்லாரும் செமினார் ஹாலுக்குப் போய்ட்டாங்க”என்றது ரிஷி

“ஏன்?”

“இந்த ஆராய்ச்சி இப்போ ரொம்ப முக்கியமாக்கும் லேட்டாச்சு வா” இது ஸ்வரா

“அது ஒன்னுமில்ல மேடி (Maddy) மேல MBA ப்ரோகிராம் ஏதோ நடக்குதாம் அதான் கீழ ஷிஃப்ட்…” என்று சாவதானமாக விளக்கியது வேறு யாருமல்ல நம் நாயகியின் பங்கு புவன் தான்.

“மேடி லேட்டாச்சு போலாம்” என்று எல்லோரும் பதற அவளோ “சரி பக்கீஸ்” என்றெழ அந்த நால்வர் கொண்ட குழு செமினார் ஹாலை நோக்கிப் படையெடுத்தது.

அவர்கள் பதற்றத்துக்குக் காரணம் அன்று நடக்கவிருந்த க்ரூப் ப்ரெஸன்ட்டேஷன்.அதுவும் க்ளாஸ் டீச்சர் வேறு! இன்டர்னல் மார்க்ஸாயிற்றே என்று அவர்கள் பதறிக்கொண்டிருக்க அவர்கள் குழுவின் தலைவியோ சாவகாசமாக வந்தால் பதறாத?

அவள் இதைச் சிறப்பாகச் செய்து முடிப்பாள் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. ஆனால் அவளது குரங்குச் சேட்டையை எண்ணித்தான் பதறினர். இப்படி அனைவரின் பீபியையும் தாறுமாறாக எகிறச்செய்தவளோ  அங்கிருந்த மைக்கின் முன் தன் உரையை ஆரம்பித்திருந்தாள். அவர்கள் தேர்ந்தெடுத்திருந்ததோ Marketing trends அதற்குத் தகுந்தாற்போல் எளிமையான உதாரணங்கள் கொடுப்பதில் அவளுக்கு நிகர் அவளே!

அவள் குறிஞ்சி… குறிஞ்சி யாழ்!

படிப்பில் எந்த அளவு கெட்டியோ அதேயளவு சுட்டியும்கூட.

பக்கத்து வீட்டுச்  சில்வண்டுடன் சேர்ந்து கார்ட்டூன் பார்ப்பதிலிருந்து, அர்த்த ராத்திரி அகோரமாகப் பாடி அவள் அக்காவின் தூக்கத்தைக் கெடுப்பது வரை எல்லாவிதமான சோஷியல் சர்வீசையும் சாதாரணமாகச் செய்பவள்.

அப்படிப்பட்டவள்தான் இப்பொழுது மிகவும் பொறுப்பாகப்  பொறுமையாக அவளது உரையை முடித்துவிட்டு 

“அடுத்து வருவது புவனஸ்ரீ” என்று மேடையிலிருந்து இறங்கியிருந்தாள்

ரிஷியோ, “கமான் புவன்”  என்க, 

புவன் ‘இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம கமான் டைகர் கமான் டைகர்னுட்டு’ என்று மனதிற்குள் புலம்பியவளோ அந்த முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த க்ளாஸ் டீச்சரைப் பார்த்துவிட்டு, ‘அய்யோ இவங்க வேற குறுகுறுன்னு பார்க்கறாங்களே’ என்று பதற ரிஷியோ கண்களாலேயே ‘கமான் டைகர் சொல்ல’ அவளுக்கோ ‘அடேய் உனக்குத் தமிழ் தெரியாது இல்ல அசிங்க அசிங்கமா திட்டிருவேண்டா’ என்று மனதிற்குள்ளேயே அர்ச்சித்துத் தள்ள ஸ்வராவோ இவளைப் பார்த்து ‘எல்லாம் நல்லா பண்ணுவ’  என்பதுபோல்  இமை மூடித்திறக்க அதில் கொஞ்சம் ஆசுவாசமானவள் அவளது ஸ்லைட் வந்துவிட முதலில் கொஞ்சம் தடுமாற்றமிருந்தாலும் பின் சரளமாகப் பேசி முடித்தாள்.

அவளுக்கடுத்து ஸ்வரா தன் பங்கை முடித்துக்கொள்ளக் கடைசியில் ரிஷி முடிவுரை என்று வெற்றிகரமாகவே முடிந்தது.

எல்லோரின் கைத்தட்டல்களையும் பெற்றுக் கொண்டு அவரவர் இருக்கையில் அமர்ந்து கொள்ள அடுத்தடுத்த டீம்களாக வந்து உரையாற்றினர்.

குறிஞ்சி நடுவிலிருக்க அவளைச் சுற்றி நின்று கொண்டு மூவரும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்க அவளோ மனதிற்குள் ‘பாட்ஷா…டின்டுக்கு டின்டுக்கு…பாட்ஷா…டின்டுக்கு…டின்டுக்கு…’ என்று இசையமைத்துக்கொண்டிருந்தாள்.

புவன், “ஓய் உண்மையச் சொல்லு நேத்து நைட் என்ன படம் பார்த்துட்டு லேட்டா தூங்கின?” என அதில் அதிர்ந்தவளோ,

“எரும என்ன பார்த்தா அர்த்த ராத்திரி உட்கார்ந்து படம் பாக்கறவ மாதிரியா இருக்கு?” 

“ஓ அப்போ ஃபோன்ல என்ன நோண்டிக்கிட்டிருந்த?” என்றது ஸ்வரா

ரிஷியோ ‘சொல்லு மகளே சொல்லு’ என்று பார்க்க 

அவளுக்கோ அஷ்மிதாவின் மேல் கன்னா பின்னாவென்று கோபம் வந்தது.

“யாரு அஷ்மி சொன்னாளா?” என்க அவர்களோ 

“ஓய் என்ன நீ படம் பார்த்துட்டு அக்காவ கொற சொல்ற”

“அடேய் மங்கூஸ்!!! படம் பார்க்கலடா யுடியூப்ல வீடியோ தாண்டா பார்த்துட்டிருந்தேன் ப்ரெஸென்டேஷனுக்காக…” என்று ஒருவாறு அவர்களைச் சமாதானம் செய்துவிட்டவள்.

சரியாக மதிய இடைவேளையில் அஷ்மிதாவிற்கு அழைக்க அவளோ “ரொம்ப பிஸி இஞ்சி லெக்சர்ஸ் இருக்கு” என்று வைத்து விட்டாள்.

‘வீட்டுக்கு வா உனக்கிருக்கு’ என்று வைத்தவள் அதன் பின் அன்றைய அரட்டையில் இறங்கியிருந்தாள்.

அவர்கள் நால்வரும் வெவ்வேறு தாய்மொழியைக் கொண்டவர்கள் ஆனால் இன்று ஒன்றாக. காரணம் அவர்களிடையே ஓடிய ஓர் அழகான உறவு. நட்பு.

இதில் புவனிற்கு மட்டும் தமிழ் பேச வருமே தவிர மற்ற இருவருக்கும்  தமிழ் என்று பேச மட்டுமேத் தெரியும். அதனால்தானோ என்னவோ குறிஞ்சிக்கு எருமையாகவும் அவளுக்கு குறிஞ்சி பங்காரமாகவும் பன்னி குட்டியாகவும் மாறியிருந்தாள். அவளொரு தெலுங்கும் தமிழும் கலந்த கலவை ஆதலால் இப்படி.

மற்ற மூவருமே கன்னடம் சரளமாகப் பேசக் குறிஞ்சி பேசுவது தான் பல நேரம் கன்னடமா, தமிழா, ஹிந்தியா என்ற சந்தேகம் எழும்.

ரம்பம் ரம்யா என்று பல மாணவச்செல்வங்களால் அன்பாக அழைக்கப்படும் ப்ரொஃபஸர் ரம்யா ஒரு வழியாக நாலு நாலாக நடத்திக்கொண்டிருந்த டாபிக்கை முடித்துவிட்டு வெளியேச் செல்ல, நேரமும் ஆகிவிட அந்த வகுப்பறை கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக்கொண்டிருந்தது.

அவ்வளவு நேரம் ஏதோ தீவிரமாக நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தவளோ அவர் வெளியேச் சென்ற மறு நொடி தன் மொபைலை கையிலெடுத்திருந்தாள்.

அவள் அதில் எதையோ தீவிரமாக நோண்டிக் கொண்டிருக்க 

“என்ன மேடி பண்ற?” என்று முதலில் ஆஜராகியது ரிஷி

“ரிங்க்டோன் மாத்தறேன்” என்க ஒரு நொடி மூவருக்குமே அதிர்ச்சி. பின்னே அவர்கள் எவ்வளவு கதறியிருப்பார்கள்? கேட்கவில்லையே!

இப்பொழுதும் அவளை நம்புவதற்கில்லை இன்னும் டெரர்ராகத்தான் வைக்கப் போகிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்கக் கடைசியில் அவள் ஹகூனா மடாட்டா(Hakuna Matata) என்ற கார்டூன் பாடலை வைக்க அதில் சற்று நிம்மதி பெற வந்தவர்கள் அவளது அடுத்தடுத்த திட்டங்களைக் கேட்ட பிறகு அந்த நிம்மதி காற்றில் ஜெட் வேகத்தில் பறந்திருந்தது.