O Crazy Minnal(11)

OCM-e9d1e910

11

சூரிய கிரணங்கள் சுள்ளென்று என் முகத்தில் விழும்வரை நான் எழுவதாக இல்லை என்ற சபதத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.

 

இரவு முழுக்க பேசிப் பேசியே அஷ்மியை கொன்றவள் இப்பொழுதுதான்  களைத்துப் போய் உறங்குகின்றாள்.

ஆனால் அது அந்த ஆதவனுக்குத் தெரியாதில்லையா. அவளை தன் கைகளால் ஸ்பரிசிக்க அவளும் சுளீரென்று முகத்தில் படிந்த சூரிய ஒளியால் புருவத்தைச் சுளித்தவாறு, திரும்பிப் படுத்தாள். ஆனால் ‘நீ எழுந்தே ஆகவேண்டும் மகளே!’ என்பது போல் ஹகூனா மடாட்டா(ரிங்டோன்) ஒலிக்க “ப்ச்!” என்ற முனகலுடன் கையை மட்டும் நீட்டி ஃபோனை எடுத்து கண்ணை திறவாமலேயே அந்த தொடுதிரையைப் போட்டு தொல்லை பண்ணியவள், காதில் வைத்தாள்.

 

“அப்புறம் கூப்பிடறேன்!” என்றவள் வைக்கப் போக அந்தப் பக்கத்திலிருந்தவளோ.

 

“பேயே! இன்னுமா தூங்கற?” என்ற குரலில் கண்களைத் திறந்து அந்த திரையை வெறிக்க அதில் புவன் என்று காட்டிக் கொண்டிருந்தது.

 

“நீயா! என்ன வேணும் எரும?”

 

“ம்ம்ம் வெளக்குமாறு பின்னனும் வரீயா?” என்றவள் குரலே கடுப்படித்தது.

 

“நோ டா நான் தூங்கறேன். அப்பறமா வரேன்” என்று அணைத்தவளுக்கு அதற்குமேல் தூக்கம் பிடிக்கவில்லை.

 

கண்ணைக் கசக்கிக் கொண்டே ஹாலிற்கு வந்தவள் “அம்மூ! காஃபி” என்றவாறே கைகளைத் தலைக்குமேல் தூக்கினாள்.

 

சோம்பல்முறிப்பதற்காகத் தூக்கிய அவள் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றது அவள் அங்குக் கண்ட காட்சியில்.

 

கைகளில் ஆவி பறக்க காஃபி! அதை அந்த டபரா செட்டில் வைத்து ஆற்றியவன் ஒரு மிடறு குடித்துவிட்டு “செம்மமமம காஃபி! ஆன்ட்டீ” என்று இங்கிருந்தே குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவனை அங்கு எதிர் பார்த்திராத காரணத்தினால் அவள் ‘பே’ என்று விழித்துக் கொண்டிருந்தாள்.

முதலில் சிறிதாக அதிர்ந்து பின் கண்கள் இரண்டையும் கசக்கியவள் ‘இவன்.. அவன்ல.. அவனேதான்! அந்த நரி ச்சே நரேனேதான்’ என்பது உறுதியாய் தெரிந்துவிட ‘மொதல்ல இது நம்ம வீடுதானா’ என்ற மிக முக்கியமான கேள்வி எழ அதற்கு விடையாக அங்கு வந்தார் லீலாமதி.

 

வந்தவர் தட்டில் சில குக்கீஸ்களை வைத்து கொண்டுவந்திருந்தார்.

 

“ஐ குக்கீஸ்!” என்று இவள் மனம் குத்தாட்டம் போட அவரோ அதை நரேனிடம் கொடுத்துவிட்டு இவளிடம் திரும்பி “காஃபி கொண்டு வரேன்டா பல்லு தேய்ச்சிட்டு வா குக்கீஸ் சாப்பிடலாம்” என்று செல்ல இவளையே பார்த்துக் கொண்டிருந்த நரேன் அந்த ‘பல்லு தேச்சிட்டு வா’ வில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே “குட் மோர்னிங்!” என்க

 

அவளுக்கோ “இப்படி  அசிங்கபடுத்திட்டியே அம்மூ!’ என்றானது.

 

அடுக்களையிலிருந்து வந்த நெய் வாசமே சொல்லியது அவளது அப்பூ களத்தில் இறங்கிவிட்டதை.

 

‘இவனுக்கு இங்க என்ன வேலை?’ என்றவாறே அவனைப் பார்த்தவள் “மோர்னிங்!” என்றிருந்தாள்.

 

அவனுக்கு அங்கு மிக முக்கியமான ஒரு வேலை இருந்தது என்பதை அவளறியாள்.

 

முந்தைய நாள் இரவில் அங்கிருந்து கிளம்பியவனின் மனதில் பல கேள்விகள். அஷ்மிதாவிற்கு அழைத்தவன் அதில் ஒன்றைத்தான் கேட்டிருந்தான்.

 

இரவு உணவுண்ட பின் சற்று நேரம் அமர்ந்து பேசுவது அவர்களின் வழக்கம். ஆனால் அன்றோ பல களேபரங்களுக்குப் பின் எல்லோரும் களைத்துவிட முதலில் உறங்கச் சென்றது குறிஞ்சிதான், ஆனால் கடைசியாக உறங்கியதும் அவளே!

அவன் கிளம்பிய சில மணி நேரங்களிலேயே அழைத்திருந்தான் அஷ்மியை.

 

“ஹலோ அஷ்மி!”

 

“ஹான் சொல்லு நரேன், எனி ப்ராப்ளம்?”

 

“அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஒரு சந்தேகம்..”

 

“இதுல என்ன தயக்கம் கேளு” என்று அவள் ஊக்க அவனும்

 

“ஆரா யாரு?” என்று அவன் கேட்க அந்தப் பக்கமோ அப்படியொரு அமைதி!

 

“என்னாச்சு?” என்றதுதான் தாமதம் அந்த பக்கம்  விழுந்து விழுந்து சிரித்தவள் பின் “இதை கேட்கவா இவ்ளோ யோசனை?”

 

“இல்ல..”

 

“ஆரா இஞ்சியோட சைக்கிள்!”

 

“என்னது!”

 

“இதுக்கே ஷாக் ஆன எப்படி? ஆரா அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல்!” என்றவள் அந்த காவிய கதையை எடுத்துரைக்க  ஒரு “ஓ” உடன் கேட்டுக் கொண்டவன் பின் “அப்போ ஏன் அத சரி செய்யல?” என்று கேட்டான்.

 

“அதுவா.. அது அவதான் வேணாம்னு சொல்லிட்டா, வருத்தம் அவளுக்கு. எனக்கும் டைம் கிடைக்கல..”

 

“ஓ.. அப்போ சரி!” என்றவன் வைத்துவிட அஷ்மிக்குத்தான் ‘அப்போ சரியா? அப்போ என்ன சரி?’ என்று குழம்பினாள்.

 

ஆனால் அவளை அதிகம் குழப்பாமல் மறுநாள் காலையிலேயே ஆஜராகியிருந்தான் நரேன்.

வந்தவன் லீலாவிடம் என்ன சொன்னானோ, அவர் இவளை அழைத்து ஆராவின் சாவியைக் கேட்க இவளும் அவனிடம் அதை கொடுத்தனுப்பினாள்.

 

அரை மணி நேரத்தில் ஆராவுடன் அவன் வந்தான். நெளிந்திருந்த சக்கரம் இப்பொழுது பளபளவென்று!

 

அவன் கிளம்ப எத்தனிக்கத் தடுத்து நிறுத்தியது ஜிதேந்திரன்தான்.

அன்று அவர் சமையல் வேறு! “இருந்து லஞ்ச் முடிச்சிட்டு கிளம்பினா போதும்” என்றுவிட அவனால் அதை மறுக்க முடியவில்லை.

அதில் முதல் படியாக அவனுக்கு காஃபி வந்திருக்க அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து அதை ஆத்திக் கொண்டிருந்தான்.

 

அப்பொழுதுதான் “அம்மூ ஒரு காஃபி!” என்று சோம்பலாக ஒரு குரல் ஒலிக்கத் திரும்பினால், முட்டியைத் தொடலாமா? இல்லை வேணாமா? என்றிருந்த ஒரு தொளதொள ஷார்ட்ஸும், அதே போல் கொஞ்சம் தொளதொளவென்று காலர் வைத்த ஒரு பனியனுமாக நின்றிருந்தாள் அவள்.

 

அவள் தலையோ அதற்குமேல்! கழுத்தவரை இருந்த அவளது கூந்தல் இப்பொழுது பரட்டையாக நின்றது!

 

கண்களைக் கசக்கிக் கொண்டு அவனை அவள் பார்க்க அவனுக்குத்தான் சிரித்துவிடாமல் இருக்கப் படாத பாடுபட்டான்.

 

உள்ளே ஜிதேந்திரனுக்கு சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்த அஷ்மி இவள் எழுந்துவிட்டாள் என்றதும் காஃபியை அவளே கலந்து கொண்டு வந்தாள்.

 

வந்தவளுக்குக் குறிஞ்சி நின்றிருந்த கோலத்தைப் பார்த்துவிட்டுச் சிரித்துவிட்டாள்.

 

“எதுக்கு சிரிக்கற?”

 

“என்ன கோலம் இது?” என்று மறுபடியும் சிரிக்க

 

“ஏன்? என்னாச்சு?” என்றவள் தலையைக் கோதினாள். அதில் சற்று படிந்திருந்தாலும் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த முடியைப் பார்த்தவள்,

 

“இத பிடி!” என்று அவள் கையில் அந்த காஃபியை திணித்துவிட்டு அவள் தலையைச் சரி செய்தாள்.

 

“ம்ம்ம் சொல்லு”

 

“என்ன சொல்லனும்?”

 

“ஏதோ இருக்கப் போய் தானே நீயே காஃபி எடுத்துட்டு வந்த?” என்று அவள் கேட்க ஒரு முறை நரேனைப் பார்த்தவள் அவனிடம் கண்ணைக் காட்டிவிட்டு “நீ வா என்கூட!” என்று அழைத்துச் சென்றாள்.

 

குறிஞ்சி நம்ப மாட்டாமல் ஆராவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அதைவிட அதிர்ச்சி இதை நரேன்தான் செய்தான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை அதே சமயம் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

அவளுக்கு நன்றாகத் தெரியும் இதற்கு கட்டாயம் அதிகம் செலவாகியிருக்குமென்று.

 

அவளது முதல் சைக்கிள், அதுவும் அவள் சம்பாத்தியத்தில் என்றவுடன் அவள் சற்று விலை உயர்ந்ததாகத்தான் வாங்கியிருந்தாள். அப்படியிருக்கையில் ஆராவை சரி செய்ய வேண்டுமென்றால் எவ்வளவு ஆகுமென்றும் தெரியும்.

 

ஆராவையே பார்த்தவளுக்கோ உள்ளுக்குள்,

 

‘எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை

இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு

இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

 சின்ஜனின்ஜ சின்ஜனின்ஜ சின்ஜனி

மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி…’

 

என்ற பாடல் ஓடிக் கொண்டிருக்க,

‘அவ்வளவு நல்லவனாய்யா நீ?’ என்று பார்க்க அவனும் பார்வையாலே,

 

‘லைட்டா!’ என்றான்.