12
ஆராவையே பார்த்து கொண்டிருந்தவளின் மனம் உள்ளுக்குள் ஒரு குத்தாட்டம் போட்டாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தாள்.
‘நன்றி சொல்லனுமா? இல்ல நான் ஏன் நன்றி சொல்லனும்? அவன்தானே ஒடச்சான், அப்போ அவன் அத சரி செஞ்சதுக்கு நான் ஏன் தாங்க்ஸ் சொல்லனும்?’ என்று கோர்ட்டில் நீதிபதி முன் வழக்கறிஞர்கள் வாதாடுவதை போல தன் மனசாட்சியுடன் வாதாடிக் கொண்டிருந்தாள். பாழாய்ப் போன மனசாட்சியோ ‘அப்படி எல்லாரும்லாம் சரி செய்ய மாட்டாங்க..’ என்று அவனுக்கு வக்காலத்து வாங்க அதில் கடுப்பாகி போனவள், ‘லிஸன் மிஸ்.மனசாட்சி தாங்க்ஸ்லாம் சொல்ல முடியாது வேணும்னா குனிய சொல்லு நாலு கொட்டு கொட்டறேன்’ என்று அவளுள் நடந்த அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அவனை சீண்டிப் பார்ப்பதில் அப்படியொரு நிம்மதி அவளுக்கு. அவனையே ‘அவ்ளோ நல்லவனாய்யா நீ?’ என்று பார்த்தவள் அத்தோடு சரி அதன் பின் அவன் புறம் திரும்பக் கூட இல்லை. ஆராவையே வைத்த கண்வாங்காமல் பார்த்து கொண்டிருந்தவள் கைகளால் வருடினாள். பின் அவள் ஆராவை அப்படியே ஒரு நிமிடம் அணைத்துக் கொள்ள அஷ்மிதான் ” ஏ இஞ்சி என்ன பண்ணற? ரோட்டுல ஓட்டுன சைக்கிள், அதபோய் கட்டிப் பிடிக்கற?” என்றாள்.
“அதுக்காக ரோட்டுல ஓட்டாம வீட்டுக்குள்ளயா ஓட்டுவாங்க?” என்றவள் மீண்டும் ஆராவுடன் ஐக்கியமாக பின்னாலிருந்து யாரோ அவள் கண்கள் இரண்டையும் மூடினர்.
கையை தடவியவள் அந்த வாசமும், ஸ்பரிசமும் யாருடையது என்று தெரிந்துவிட மகிழ்ச்சியில் கத்தினாள்.
“ஓய்! புவன் நீ எப்படி இங்க?”
“ம்ம்ம் அங்கிள் புளி இல்லாம ரசம் வைக்கறது எப்படின்னு சொல்லித்தராங்களாம் அதான் வந்தேன்” என்றவள் நரேனை அப்பொழுதுதான் கவனித்திருந்தாள்.
‘யார்ரா இது? நம்ம வீட்ல புது டிக்கெட்டு?’ என்றெண்ணியவாறே அவனைப் பார்க்க அவனோ “ஹாய்! நான் நரேன்! அஷ்மியோட க்ளாஸ்மேட்” என்றான் அறிமுகமாய்.
“நான்” என்று புவனா ஆரம்பிக்க அதை, “தெரியுமே! புவன்.. புவன ஸ்ரீ!” என்று குறிஞ்சியைப் போலவே ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்து வைத்தவன் அந்த புவனிடமிருந்து குழப்பப் பார்வையும், குறிஞ்சியிடமிருந்து கோப பார்வையையும் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.
அவனின் இவ்வளவு நேரப் பேச்சிலேயே ஓரளவு அவன் யாராக இருக்கக்கூடும் என்று கணக்கிட்ட புவனா, குறிஞ்சியின் அனல் பார்வையில் அது உறுதியாகிவிட ஆச்சரியமாக அவனை நோக்கியவள்,
“ஹே! அந்த நரி.. நீங்கதானா?” என்று வினவ இப்பொழுது முறைப்பது அவனது முறையானது.
முகத்தில் டன் கணக்கில் அசடுவழிய அவன் பார்வையைத் தவிர்த்தவள் புவனாவின் தோள்மேல் கைபோட்டு அவளை இழுத்தவாறே,
“ஓய் புவன்! என்ன திடீர் விசிட்?” என்று திசை திருப்ப முயல அவளாவது மறப்பதாவது? குறிஞ்சியின் கையை எடுத்து விட்டவள் நரேனிடம் திரும்பினாள்.
“ஆமா.. என்ன எப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க?”
“என்ன புவி இப்படி கேட்டீங்க அன்னைக்கு, சரியான சமயத்துல கடவுள் மாதிரி வந்து என்னை காப்பாத்தினீங்களே, இந்த வாங்க போங்கலாம் வேணாம் புவி நரேன்னே கூப்பிடலாம்”
அவனது ‘கடவுளில்’ சிரித்து விட்டவள் அவனைப் பார்த்து,
“சரி நரேன்.. நீயும் வா போன்னே சொல்லு…” என்று இருவரும் நட்பு பயிரை வளர்த்துக் கொண்டிருக்க பார்த்து நின்ற குறிஞ்சியின் காதில் புகை வராத குறைதான்!
மனதிலோ ‘அட குரங்கே! நேத்துவரை நான்தான் உன் உயிர்ங்கற அளவுக்கு பேசிட்டு இங்க பயிரா வளர்க்கற.. உன்ன! இருடி மாப்பு மாட்டாமலயா போயிருவ..’ என்று தாளித்துக் கொண்டிருக்க அதிலிருந்து அவளைக் காக்க வந்தது ஜிதேந்திரனின் குரல்!
“பசங்களா! சாப்பாடு ரெடி! வாங்க வாங்க” என்றவர் அழைத்து விட்டுச் செல்ல எல்லோரும் வீட்டினுள் செல்ல, நரேனோ வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல்,
“மறக்காம பல் தேய்ச்சிட்டு வா!” என்றவன் அடுத்த நொடியே உள்ளே ஓடியிருந்தான்.
அவன் செயலில் சிரிப்பு வந்தாலும் அதை ஒதுக்கியவள் முகத்தில் முறைப்பைத் தவழ விட்டபடி உள்ளே நுழைந்தாள்.
“என்ன புவி திடீர் தரிசனம் இன்னைக்கு?” என்று உணவு பரிமாறியவாறு கேட்ட லீலாவிடம்,
“அம்மாக்கூட ஹாஸ்பிடல் வந்தேன் ஆன்ட்டீ, அதான் என்ன இங்க ட்ராப் பண்ணிட்டு அம்மா வீட்டுக்குப் போய்ட்டாங்க”
“ஹாஸ்பிடலா..” என்று இழுத்த நரேனிடம்,
“ரெகுலர் செக்கப்தான் நரேன்!”
என்று இவர்களது பேச்சு தொடர அங்கே ஆஜரானாள் இஞ்சி. பரட்டை தலை இப்பொழுது ஒழுங்காகச் சீவப்பட்டு உச்சந்தலையில் சிறிய கொண்டையாகி இருந்தது. வந்தவள் நேராகச் சென்று ஜிதேந்திரனையும், லீலாமதியையும் இடித்தவாறு நடுவில் அமர்ந்து கொண்டாள் அவள்.
அவன் அப்பொழுதுதான் கவனித்தான். என்னதான் இவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஜிதேந்திரன் இன்னும் சாப்பாட்டில் கை வைத்திருக்கவில்லை, அவளுக்காகக் காத்திருந்தார் போலும்.
ஆனால் அவனுக்கேனோ ஜிதேந்திரனை பார்க்க பார்க்க உள்ளுக்குள் ஏதோ ஒன்று நெருடியது. அது சரியா, இல்லை தவறா? அதற்குக் காலமே பதில்!
************
“என் சன்டே! என் உரிமை!” என்று ஒரு காலை சோஃபாவில் வைத்து ஒரு கையை உயர்த்தியவாறு கத்திக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.
“இத விட்டுட்டீயே யாழ்!”
“எத?”
“அதான், சோறு அதானே எல்லாம்?” என்று வம்பிழுத்தவனுக்கு பழிப்பு காட்டியவள் மறுபடியும் அதே வசனத்தை உரக்கச் சொல்லப் பொருத்து பொருத்துப் பார்த்த அஷ்மிதா அதுதான் கடைசி என்பதுபோல் பொங்கிவிட்டாள்.
“இப்ப என்னவாம்?”
“என்னவாமா? எவ்ளோ அசால்ட்டா சொல்லிட்ட.. அதெல்லாம் தெரியாது, வேணும்னா இந்த நரிய கூப்ட்டு போய்ட்டு வா, நான்லாம் ரொம்ப பிஸியாக்கும்” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
இத்தனை நாட்களில் நரேன் அவர்கள் வீட்டில் ஒரு ஆளாகவே மாறியிருந்தான். காலம் ஜிதேந்திரனையும் அவன் புறம் இழுத்திருந்தது, ஆனால் பாவம் குறிஞ்சிதான் இப்பொழுதும் அவனுக்கு எதிராய் நின்று கொண்டிருக்கிறாள்.
இன்றும் அதே தான், அஷ்மியின் நட்பு வட்டத்தில் ஒருவளுக்கு இன்னும் சில தினங்களில் கல்யாணம் இருப்பதால், பரிசு தெரிவிற்காகக் குறிஞ்சியை அழைத்து கொண்டிருந்தாள், அதை அவளே வந்து சொல்லியிருந்தால்கூட முதல் ஆளாகக் கிளம்பியிருக்கக்கூடும், ஆனால் நரேன் வந்து கேட்கவும் ‘நீ சொன்ன நாங்க கிளம்பிருவோமா?’ என்று நிற்க அவனும் விட்டு கொடுக்காமல்,
“சரி வா அஷ்மி, நாம கிளம்புவோம்” என்றவன் குறிஞ்சியைப் பார்த்தவாறே
“அப்படியே அன்னைக்கு சொன்னேன்ல அங்கயும் போய்ட்டு வந்துரலாம்..” என்க அஷ்மியோ
‘என்னைக்கு, எங்க சொன்னான்?’ என்ற யோசனையிலிருக்க அவளிடம் கண்ணைக் காட்டியவாறு அவன் சில எட்டுகள் எடுத்து வைத்தான். அவன் எதிர்பார்த்தது போலவே
“ஒரு நிமிஷம்!” என்றாள் குறிஞ்சி
“என்னவாம் இப்போ?” என்க அவளோ
“வரும்போது சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாங்க!” என்று அவன் எதிர் பார்ப்பில் லாரி லாரியாக மண்ணள்ளிப் போட்டவள் அவன் முகம் மாறிய மறுநொடி,
“இரு அஷ்மி நானே வரேன்!” என்று சிரித்துக் கொண்டு கிளம்பச் சென்றாள்.
‘சொர்ணாக்கா! சொர்ணாக்கா! பெர்ஃபாமன்ஸ் பண்ண விடறாளா என்னைய’ என்று புலம்பிக் கொண்டிருந்தான் நரேன்.