O Crazy Minnal(13)

OCMN-3d3a8717

13

 சில சமயங்களில் நான்கு நாள் நட்பில் வரும் நெருக்கம், நான்கு வருட நட்பில்கூட வருவதில்லை! அப்படிதான் நரேனுக்கும். குறைந்த காலத்திலேயே அவன் அந்த குடும்பத்துடன் ஒன்றிவிட்டான், அவர்களும் அவனை தங்கள் வீட்டில் ஒருவனாய் ஏற்றுக் கொண்டது அதிசயமே.

நாட்கள்  ஐஸ்கட்டியாய் கரைய அவர்கள் உறவும் இன்னுமின்னும் மென்மையானதே தவிர விரிசல் விழவில்லை. விழாமல் பார்த்து கொண்டான்!

சொந்த ஊரில் அவ்வளவு பெரிய கூட்டு குடும்பத்தில் தன் பள்ளிப்  பருவத்தை கழித்தவன் அவன். ஏன் அவன் அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு நகர்ந்த போதுகூட ஓடி ஆடிய தென்னந்தோப்பையும், படுத்துறங்கிய திண்ணையையும், கதை சொல்லும் தாத்தாவையும், விட்டுப் பிரிய மனமின்றி ஊரிலேயே இருந்தவன், கல்லூரி காலத்தில்தான் அன்னையிடம் வந்தான். அப்படியிருந்தவன் இன்று எல்லோரையும் விட்டு விட்டு தன் கனவுகளை கைபற்றி விடும் முயற்சியில் பெங்களூரில்,  ஒரு தனி வீட்டில் தங்கியிருக்கிறான். 

 

‘தான் தனியாக இருக்கிறோம்’ என்று எண்ணத் தோன்றாதவாறு அஷ்மியின் குடும்பம். மின்மினி கூட்டுக்குள் இருப்பது போல் ஒரு உணர்வு! அவனுக்கு.

ஆனால் அவனுள் உறுத்தி கொண்டிருக்கும் அந்த கேள்வி..

அதற்கான விடை.. ஒன்று இல்லையென்று ஆனப் பிறகு அதைக் கிளறுவது   சரியா? இது அவன் அவனுள் கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி. நன்மை பயக்குமெனில் அது தவறில்லை என்று என்னதான் சமாதானப் படுத்தி கொண்டாலும், ’இல்லையென்றால்?’ என்ற மனசாட்சியின் குரல் அவனை அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் பாடாய்ப் படுத்தியது. 

யாருமில்லா அறையில் மெத்தையில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனுக்குள் போராட்டம்.

 

ஆமாம், அவன் அவனுடனே போராடி கொண்டிருந்தான்.

‘தான் செய்வது சரியா? தவறா? தெரியவில்லை. இப்பொழுதிருக்கும் உறவையும் கெடுத்துக் கொள்ளும் துணிவில்லை. இது இன்று நேற்றல்ல முதன் முதலில் அவர்கள் வீட்டிற்குச் சென்றானே அன்று ஆரம்பித்தது.

 

‘என்னைப் போல அவங்களுக்கும் தெரிஞ்சிருக்குமா…’ என்று ஓடிக் கொண்டிருந்த எண்ணவோட்டத்தை வெட்டியது அந்த மணியோசை.

 

முதலில் தன்னுள் மூழ்கிக் கிடந்தவன் கவனியாமல்போக அது தொடர்ந்து எழுப்பிய சத்தத்தில்தான் கலைந்தவனாக எழுந்து கொண்டான்.

 

‘யாராயிருக்கும்?’ என்ற சிந்தனையுடனே கதவைத் திறந்தவனோ அதிர்ச்சியில்! அது இன்பமா, இல்லை துன்பமா என்று அவனுக்கே வெளிச்சம்!

“இப்போ ஏன் ஏதோ பேய பார்த்தா மாதிரி நிக்கற?” என்று அவனை இடித்துத் தள்ளியவாறு உள்ளே நுழைந்தாள் அவள்.

 

அதிர்ச்சி கலைந்தவனாக முகம் மலர, “ஏ! குட்டச்சி! நீ எப்படி இங்க?” என்றவன்  வெளியில் எட்டிப் பார்க்க அவன் எண்ணம் புரிந்தவளாக.

 

“தனியாத்தான் வந்தேன்!”என்று தொடங்கியவள் பின் வீட்டைப் பார்வையாலே அளந்துவிட்டு  “அடப்பாவி பயலே! இப்படியாடா பண்ணுவ?” என்க 

 

‘எப்படி பண்ணேன்?’ என்று அவன் விழிக்க அவளே தொடர்ந்தாள்.

 

“ஏற்கனவே வளரு என்ன வெளாசுமே..  எடுத்தத எடுத்த எடத்துல வைக்கலன்னு,  இதுல நீ வேற இவ்ளோ சுத்தமே சுந்தரம்னு இருந்தா…” என்று போலியாக ஒரு பெரு மூச்சை வெளியிட்டவள் தலையிலேயே லேசாக குட்டியவன்,

 

“குட்டச்சி! வந்த ஒடனே ஆரம்பிச்சிட்டியா?” திடீரென,  “ஆமா நீ எப்படி இங்க?”

 

“ஹ்ம்ம்..  பெங்களூர் என்ன உனக்கு மட்டும்னா எழுதி வச்சிருக்கு? நான் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்தேன்”

 

“தனியாவா?” என்று அவளை நம்பாமல் பார்க்க

 

“ஆமா… மிஸ்டர்.சந்திரன்.அப்படியே என்ன தனியா விட்டுட்டுதான் மறுவேலை பாப்பாரு”

 

“அதானே சித்தப்பாவா.. கொக்கா..” என்றவனை முறைத்தவள்,

 

“போயும் போயும் உன்ன பார்க்க வந்தேன் பாத்தியா என்ன சொல்லனும்”

 

“என்ன சொல்லனும்?”

 

“கடுப்பேத்தாத இந்திரா!”

 

“சரி சரி.. சொல்லு”

 

“என்கூட படிக்கற பொண்ணுக்கு இந்த வாரக் கடைசில கல்யாணம். நல்ல ஃப்ரெண்ட்டா.. அதான் அப்பாவும் எதுவும் தடுக்கல, செல்வி அத்த வீடும் இங்கனத்தானே இருக்கு.. அதான் என் பாசமலரையும் பார்த்து ஒரு அட்டென்டன்ஸ போடலாம்னு வந்தேன்” என்றவளைப் பார்த்தவன் 

 

“ஏன் ரேவதி, உன் ஃப்ரெண்டுனா உன் வயசுதானே இருக்கும்.. இவ்வளவு சீக்கிரமாவா?” என்க

 

“அது பெண்களோட சாபக்கேடு இந்திரா! புடிச்சாலும் புடிக்காட்டியும் சிலத ஏத்துக்க வேண்டியதா தானிருக்கு..” என்றவளையே கூர்மையாகப் பார்த்தவன்

 

“நீ ஏத்துப்பியா?” என்று வினவ அவளோ

 

“கட்டாயம் மாட்டேன்! ஆனா அவளோட குடும்ப சூழ்நிலைக்கும் இதுல பெரிய பங்குண்டு,  இப்போ நம்ம ஆச்சியவே எடுத்துக் கோயேன், பத்தாங்களாஸோட நிப்பாட்டிட்டாங்க, கேட்டா குடும்ப சூழ்நிலை… நம்ம அம்மாக்கள், பரவால்ல அவங்க டிகிரி வரைக்கும் முடிச்சிட்டாங்க, அதுக்குமேல? அதே குடும்ப சூழ்நிலைதான். இப்போ நாம.. இல்ல நான்..  நிச்சயமா நான் எதோடையும் நிற்கப் போறதில்லை, அதே “குடும்ப சூழ்நிலை” எனக்கும் வரலாம்..  ஆனா நின்னுடக் கூடாதுங்கற வெறியும் இருக்கு…” என்று முடித்தவள்  பெரு மூச்சொன்றை வெளியிட்டவாறு 

“ஹ்ம்ம்.. அதெல்லாம் சரி எனகென்ன வச்சிருக்க? உன்கூடத்தான் சாப்பிடனும்னு வந்துருக்கேன்” என்று  அடுக்களைக்குள் நுழைந்தாள்.

அவனுக்கோ, ’என் குட்டி தங்கைக்குள் இவ்வளவு இருக்கிறதா?’ என்று வியந்தவாறு “ ஓய்! குட்டச்சி!  எதையும் கவுத்திராத நான் வரேன்!” என்று ஓடினான் அடுக்களையை நோக்கி.

 

“இப்ப என்ன சொல்ல வர?”

 

“ம்ம்ம் ப்ரயாரிட்டி மேட்டர்ஸ் ப்ரோ!” என்றவள் அடுத்த டப்பாவை உருட்ட அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கியவன்.

 

“இரு நானே எடுத்து தரேன்” என்றுவிட்டு  ஒரு சம்படத்திலிருந்த சீடையை எடுத்துக் கொடுக்க 

 

“ஏன்டா அண்ணா.. இந்த இத்துப் போன சீடையை முழுங்கவாடா நான் திருநெல்வேலில இருந்து வந்தேன்? உனக்கே இது நியாயமா படுதா?” என்று புலம்ப 

 

“கொஞ்சம் பொறு காஃபி  கலக்கறேன்” என்றவனைப் பார்த்து

 

“அந்த கழனி தண்ணி காஃபியையும், இந்த இத்துப் போன சீடையையும் குடுத்தே என்ன விரட்டப் பாக்கறியா ? ட்ரெஸ்ஸ மாத்து! எனக்கு பசிக்குது”

 

“ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு சமைச்சிரலாம்”

 

“பத்து நிமிஷமா? பத்து செகண்ட் கூட வெய்ட் பண்ண முடியாது” என்று நிற்க வேறு வழியின்றி உடை மாற்றி வந்தவன், வெளியே உணவருந்தி பழக்கமில்லாததால் அஷ்மியை அழைத்து விசாரிக்க அவளும்,

 

“லேக் வ்யூ ரெஸ்டாரண்ட் நல்லா இருக்கும் நரேன்” என்றிருந்தாள். அது ஒரு செல்ஃப் சர்வீஸ் ரெஸ்டாரண்ட் என்பதால் ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்த குறிஞ்சியின் காதிலும் இது விழ

“இப்ப எதுக்கு ஃப்ரீ மார்க்கெட்டிங் பண்ண?” என்றாள்.

 

“இல்ல இஞ்சி நரேன்தான் எந்த ஹோட்டல் நல்லாருக்கும்னு கேட்டான்”

 

“அடிப்பாவி அஷ்மி! ஒரு மசால் தோசைக்கு ஆசைப்பட்டு உன்கூட வந்தா இப்படி ஒரு மொக்க ஹோட்டல்ல என்ன மாட்டிவிட்டது மட்டுமில்லாம அவனையும் கோர்த்து விட்றியா? நரி பாவமில்லையா?” என்று கிண்டலாக முடிக்க

 

“ஓய்! என்ன இப்படி சொல்லிட்ட நீதானே போன வாரம் இங்க நல்லாருக்கு நல்லாருக்குன்னு நாலு ப்ளேட் தோசைய மொக்குன? இப்போ என்னவாம்?”

 

“என்னவாமா? கொஞ்சம் அங்கப் பாரு, எனக்கென்னவோ அவர் இப்போதான் தோசைக்கு உழுந்தே அரைக்கப் போராருன்னு தோணுது.. இவர் எப்போ தோசை சுட்டு நாம எப்போ சாப்பிட” என்று அலுத்துக் கொள்ள

 

‘ரொம்ப அலுத்துக்கறாளே என்ன பண்ணலாம்’ என்று பார்த்தவள் “சரி வா நாம வேற இடத்துக்கு போவோம், ஆர்டர் வேணா கேன்சல் பண்ணிக்கலாம்” என்க அந்த சமயம் பார்த்தா அவள் நாசியை அந்த மசாலா வாசம் தீண்ட வேண்டும்.

 

“என்ன அஷ்மி!? பொறுப்பேயில்லாம  ரீஃபண்ட்லாம் பண்ணமாட்டாங்க, சாப்பிட்டே போகலாம் அவசரமில்ல…” என்று சமாளிக்க முயல 

 

“மீசைல மண்ணு ஒட்டல?” என்ற அஷ்மியை பார்த்து

 

“எங்களுக்குத்தான் மீசையே இல்லையே!” என்று காலரைத் தூக்கிவிட்டாள் குறிஞ்சி.

அவள் பாவனையில் சிரிப்பு வர அதை இதட்கடையோரம் அடக்கியவளை யாரோ அழைப்பது போலிருக்கத் திரும்பினாள்.