O Crazy Minnal(14)

OCM-e586df6b

14

 வண்டியை வெளியே இடம் பார்த்து நிறுத்தியவன் ரேவதியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழையும்பொழுதே அஷ்மியை பார்த்துவிட்டான்.

அவர்கள் இருவரையும் பார்த்த மகிழ்ச்சியில் “அஷ்மி!” என்று அழைத்துவிடப் பக்கத்திலிருந்த ரேவதியோ,

 

“யாரு இந்திரா?” என்று வினவ

 

“வேண்டியவங்க!” என்று திரும்பியவன் பொறி தட்டியவனாக அவளிடம் திரும்பி,

 

“என்ன இந்திரான்னு கூப்பிடாத!”

 

“ஏன்?”

 

“காரணமாத்தான்!” என்றவனின் முகத்தில் விளையாட்டுத்தனம் இல்லை. ஏன் என்று புரியாவிட்டாலும் அவனிடம் தலையாட்டி வைத்தாள் அவள்.

அவனது முகபாவத்தில் எதையோ தேடியவள் அதில் தோற்றவளாகத் திரும்ப அவர்களை  நெருங்கியிருந்தனர் இரு பெண்கள்.

 

ஒருத்தி, சற்று வளர்த்தியாக, எலுமிச்சை நிறத்தில், முதுகில் பிறழும் கூந்தலுடன், கண்களில் அன்பும் அமைதியும் ஒருசேர நிற்க, அவள் பக்கத்தில் நின்றவள், கழுத்தடி முடியுடன் கண்களில் குறும்பு மின்ன நிற்க,

நரேந்திரன் அவர்களிடம் இவளைக் காட்டி அறிமுகமாய்,

 

“என்னோட  சிஸ்டர்  ரேவதி!” என்றவன் அவளிடம் அவர்களை  அறிமுகப்படுத்த எண்ணித் திரும்ப அதற்குள் அவள் கையை பற்றியிருந்தாள் குறிஞ்சி.

“சொல்லவேயில்ல?” என்று அவனை நோக்கிக் கண்ணடித்தவள் ரேவதியின் கரத்தைப் பற்றிக் கொண்டு

 

“ஹாய் ரேவ்ஸ்! நான் குறிஞ்சி.. குறிஞ்சி யாழ்! Bcom ஸ்டூடன்ட்! இது என் அக்கா அஷ்மி.. அஷ்மிதா” 

 

“நான் ரேவதி! BCA ஃபைனல் இயர்!” என்றவள், “ஆமா.. அது என்ன சொல்லவேயில்ல?” என்றாள் சுவாரஸ்யம் வழியும் குரலில்.

 

“அதுவா..” என்று அவனை விஷமமாக பார்த்தவள் அவளிடம் “இல்ல, இந்த நரிக்கு இப்படியொரு க்யூட்டிபை சிஸ்டரான்னுதான்!” என்று கண்ணடிக்க.

 

அவளது  “க்யூட்டிபையில்” சிரித்தவள் , ”இது நல்லா இருக்கே.. க்யூட்டிபையா நானு உனக்கு?”  என்று அவளிடம் சுலபமாக நட்பாகிவிட அவளும்,

 

“ம்ம்ம்” என்று தாடையில் ஒற்றை விரலால் தட்டி யோசித்தவள் பின்

 

“க்யூட்டிபை தான்.. இப்படி வச்சுப்போம்!” என்க 

 

ரேவதியும் தீவிரமான முகபாவத்துடன் “எப்படி வச்சுக்கலாம்?” என்று கேட்டாள்.

 

“லட்டு! எப்பூடி?” என்று காலரைத் தூக்கிவிட அவளும்

 

“சூப்பரப்பூ!” என்றாள்.

அவர்களிருவரும் பக்கத்தில் நின்ற நரேனையும் அஷ்மியையும் கண்டு கொள்ளாமல் தீவிரமாக பேசிகொண்டிருக்க கொண்டிருக்க அஷ்மியோ நரேனை  ‘என்னடா நடக்குது இங்க?’ என்று பார்த்து வைத்தாள்.

 

அவனும் ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை’  டோனிலேயே “குட்டச்சியும் குரங்குக்கும் ஃப்ரெண்ட்ஷிப்பு! அத ஹோட்டலே வேடிக்கைப் பார்க்குது” என்க 

பேசிக் கொண்டிருந்த இருவரும் ஒரு நொடி இவன் புறம்  திரும்ப, இவன் அஷ்மியை பார்த்தால் அவளோ,

 

“நான் உங்களுக்கும் ஆர்டர் குடுத்துட்டு வரேன்!” என்று ஓடியிருந்தாள்.

 

அவன் “ஈஈஈ” என்று சிரித்து வைக்க ரேவதி, “அவன் கிடக்கான், நீ வா பேபிமா உட்கார்ந்து பேசுவோம்!” என்று நகர்ந்துவிட 

 

‘ஷப்ப்பாஹ்ஹ்டாஆ!’ என்றவன் ஆர்டர் கொடுக்கச் சென்றான்.

 

அந்த உணவகத்திலேயே சற்று ஓரமாகவும், காற்றோட்டமாகவும் இருந்த மேசையிலமர்நது கொள்ள, பக்கத்திலிருந்த பூங்காவும், அந்த இலைகளுக்கே உண்டான பச்சை வாசமும், குளிர் காற்றும் தீண்டிச் செல்ல, அதை ஒரு நொடி கண்மூடி ரசித்தவளையே சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த ரேவதியைப் பார்த்தவள் பார்வையாலேயே ‘என்ன?’ என்று வினவ அவளும்

 

“ப்ச்” என்று தலையாட்டியவள் பின் “நீ இதெல்லாம் ரசிப்பியா?” என்றாள்.

 

“வாழ்க்கையே ரசிக்கத்தானே ரேவ்ஸ்! இப்போ சீரியஸா இருந்து என்னத்த சாதிக்கப் போறேன்?” என்க 

 

“அதுசரி” என்றவளுக்கு சுவாரஸ்யம் கூடியது அவளிடம்.

 

“ஆமா அது என்ன நரி?” என்க அவளிடம்  ஆதியிலிருந்து அனைத்தையும் விளக்கியவள்,

 

“இப்போ சொல்லு அவன் நரிதானே?” என்று அவளிடமே கேள்வியைத் திருப்ப அவளும் சிரிப்பைக் கட்டு படுத்தி  தீவிரமான பாவத்துடன் “ஆமா ஆமா” என்று தலையாட்ட அதில் சிரித்து விட்டவள் அஷ்மி தட்டை பிடிக்க முடியாமல் பிடிப்பதை பார்த்துவிட்டு

 

“ஒரு நிமிஷம்!” என்று அவளுக்கு உதவ நரேனோ 

 

“அப்படியே எங்களுக்கும் ஹெல்ப் பண்ணலாம்..” என்றிழுக்க 

அவனிடமிருந்து ஒன்றை வாங்கி கொண்டவளைப் பார்த்து அவன் அதிசயிக்க, 

 

“இவ்ளோ க்யூட்டா ஒரு தங்கச்சி இருக்கறத சொல்லவேயில்ல பாத்தியா” என்று பொய்யான வருத்தம் காட்டிச் சென்றவளை பார்த்து பார்த்து சிரிப்பு வந்தாலும், சிரிப்பதும் தன் தலையில் தானே செதறு தேங்காய் போடுவதும் ஒன்றுதான் என்று தோன்ற அதை அடக்கியபடிச் சென்றான்.

 

“அப்புறம்.. இன்னும் எவ்வளவு நாள் பெங்களூர் ரேவ்ஸ்?”

 

“அடுத்த வாரம் கிளம்பறேன் பேபிமா!” என்றவளிடம்

 

“அப்போ இந்த வாரம் முழுக்க இங்கதானா!” என்று அதே விஷயத்தை வேறு விதமாக எடுத்துக் கொண்டவளைப் பார்த்து.

 

“ம்ம்ம்” என்று சிரிக்க

 

“செம ரேவ்ஸ்! என்னைக்கு கல்யாணம்?”

 

“வாரக் கடைசிதான்பா”

 

“அப்போ நாளைக்கு வெளிலப் போவோமா?” என்றவள் அடுத்தடுத்து திட்டமிட அங்கே சந்தோஷச் சாரல்.

***************

நீண்ட நேர அரட்டைக்குப் பின் ஒரு குட்டி காஃபியுடன், அந்த அரட்டையை முடித்துக் கொண்டு வீடு வந்திருந்தனர் நரேனும் ரேவதியும்.

 

அவனோ “நான்  ஃப்ரெஷாகிட்டு வரேன்” என்று பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்ள, அவனது லாப்டாப்பை   கைப்பற்றியவள்  சாய்ந்தமர்நதவாறு இங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

 

“இந்திரா! பாஸ்வர்ட்?” என்று கத்த அவனும் உள்ளிருந்தே

 

“அதேதான்!” என்றான்.

வாய்க்குள் தனக்குப் பிடித்த பாடல் ஒன்றை முணுமுணுத்தவாறு  அதை நோண்டிக் கொண்டிருந்தவள்,  வெளியில் வந்த அவனிடம் கேட்ட முதல் கேள்வி,

 

“ஏன் இந்திரான்னு கூப்பிடக் கூடாதுன்னு சொன்னே?”  இது அவன் எதிர் பார்த்த ஒன்றுதான்! அவள் அவ்வளவு சுலபமாக எதையும் மறக்கக் கூடியவள் அல்ல என்பதும் தெரிந்தவனே, பதில் கிடைக்கும் வரை விடமாட்டாள், ஆனால் எப்படி ஆரம்பிக்க என்று புரியாமல் நின்றவனிடம்

 

“குறிஞ்சியோட  FB ஐடி என்ன?”

 

“குறிஞ்சி யாழ்!” என்க அவளோ விடாமல் மறுபடியும்

 

“சொல்லு இந்திரா, ஏன்?” என்றாள் மறுபடியும்

 

முதலில் சொல்வதா, வேண்டாமா? என்று யோசித்தவன் அவளைப் பார்க்க அவளோ அவனது பதிலுக்காகக் காத்திருப்பவளைப் போல  டேபிளில் கை ஊன்றி தாடையைத் தாங்கி நிற்க  

‘வேற வழியில்ல நரேந்திரா!’ என்றெண்ணியவன் அவளிடம்  குறிஞ்சியை முதன்முதலில் சந்தித்ததிலிருந்து இன்று வரை எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்ல, அவளோ

“அதெல்லாம் ஓகே.. நீ இந்திரான்னு கூப்பிடக்கூடாதுன்னு சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்க

 

“சம்பந்தம் இருக்கு” என்றவன்  லாப்டாப்பிலிருந்த ஃபோட்டோவை  திறந்து  “இத பாரு” என்க

 

“என்னடா?” என்றவாறு திரும்பியவள் “ஃபோட்டோதானே” என்று அலட்சியமாக இவன் புறம் தலையைத் திருப்பியவள் ஒரு நொடி அதிர்ந்து விருட்டென திரும்பினாள்.

திரையிலேயே தன் கவனத்தை பதித்திருந்தவளின் கன்னங்களில் உருண்டோடியது இரு நீர்மணிகள்!

நாவெழவில்லை அவளுக்கு அவன் கையை பற்றியவள் அவன் புறம் திரும்பி

 

“அப்படியா?” என்ற வகையில் தலையசைக்க, அவனும் 

 

“ஆமாம்” என்று தலையாட்டியவன் அவளை அப்படியே அனைத்துக் கொள்ள,  சில நிமிடங்களுக்குப் பின்  அவள் கை ஃபோனை தேட அதைப் புரிந்தவனாக அதை நகர்த்தியவன் “வேண்டாம்!” என்றான் உறுதியாக.

 

“என்ன சொல்ற நீ? எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வேணாமா?”

 

“இப்போதைக்கு வேணாம்”

 

“ஏன்டா?” என்றவளிடம் தன் குழப்பத்தைப் பற்றி அவன் எடுத்துரைக்க அதிலிருக்கும் நியாயம் புரிய அவளும்

 

“அப்போ என்னதான் பண்றது?” என்றாள் பொறுமையிழந்தவளாக.

 

“கொஞ்சம் பொறு ரேவதி! அவசரப் பட்டா காரியம் கெட்றும், பொறுமையா யோசிப்போம்”

“ஆனா..” என்று.இழுத்தவளைப் பார்த்தவன்

 

“நாம அவசரத்துல எடுக்கற முடிவு சரியா இருக்கணும்ங்கற கட்டாயம் இல்லடா,  சரியா இருந்தா ப்ரச்சனையில்ல.. ஆனா  எதிர்மறையா முடிஞ்சா? அப்புறம் ஒன்னுமே பண்ண முடியாம போய்டும், புரிஞ்சிக்கோ நீ குழந்தை இல்ல!”.

 

“ம்ம்ம்” என்று தலையாட்டியவள் 

 

“சரியாகிடுமா இந்திரா?” என்ற அந்த கேள்வியில் அத்தனை எதிர்பார்ப்பு!

அவள் தலையை லேசாக கலைத்துவிட்டவன்  “நம்புவோம்டா” என்க 

சிறு கீற்றாய் ஒரு புன்னகை!

 

“அதுவரைக்கும், இத பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாது!” என்க 

 

அவளும் “சரி இத பத்தி யார்ட்டயும் வாய திறக்க மாட்டேன்.. மூச்!” 

 

“குட் கர்ள்!” என்க அவள் சிரித்துவிட்டாள்.

 

“எத பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாது நரேன்?” என்ற குரலில் இருவரும் திகைத்தனர்.