O Crazy Minnal(23)

thumbnail_large-f6e34977

23

வானில் தோன்றும் கோலம் 

அதை யார் போட்டதோ..

பனி வாடை வீசும் காற்றில் 

சுகம் யார் சேர்த்ததோ..

 

மையிருட்டு கரையும் வேளை.

அந்த காருக்குள் அமுதமாய் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

இனிமையான அதிகாலை வேளை அது! மென்மையான தென்றல்

காற்று மனம் தீண்டிச் செல்ல காரை சீரான வேகத்தில் இயக்கியவன் கண்ணாடி வழியாக பின் இருக்கையை நோட்டம் விட்டான்.

 

ரேவதி விழித்திருந்தாள். அவள் ஒரு ஓரமாய் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டுவர அவள்மேல் சாய்ந்த வாக்கில் ஒரு காலை மட்டும் சீட்டின் மேல் வைத்து கைகளிரண்டையும் குறுக்காகக் கட்டிக் கொண்டு உறங்கியவளைப் பார்த்தவனுக்குத் தாமாக இதழ் விரியச் சாலையில் கவனம் பதித்தவன் பாடலின் சத்தத்தைக் கூட்டினான்.

அவன் எதிர்ப் பார்த்ததுபோலயே அவளும் அதில் புரண்டு படுத்துக் கொள்ள ‘ம்ஹூம்! இது சரி பட்டு வராது’ என்றெண்ணியவன் ரேவதியிடம்

 

“ரேவதி! அவள எழுப்பு” என்றான்.

 

“இன்னும் நேரமிருக்கே இந்திரா?” என்று அவள் கேள்வியாக இழுக்க அவனோ

 

“அதுக்கில்ல குட்டச்சி! வெளிய பாரு! எப்படியிருக்குனு அவ இதையெல்லாம் ரசிப்பா” என்றவனின் குரலில் தான் எவ்வளவு ரசனை!

 

அவனிடம் “ம்ம்ம்” என்றவள் குறிஞ்சியை எழுப்பிவிட எழுந்தமர்ந்தவளின் முதல் கேள்வியே “வீடு வந்தாச்சா?”தான்.

 

ரேவதிக்கோ உள்ளுக்குள் அவளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது 

“எவ்வளவு ஆர்வமா இருக்கா இவ! எல்லாம் சீக்கிரம் சரியாகிடனும் கடவுளே!” என்று அவள் மனம் வேண்டிக் கொண்டது.

 

“ம்ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்!” என்றுவிட்டு வண்டி ஓட்டுவதில் தன் கவனத்தைச் செலுத்தியவனைப் பார்த்து ரேவதியினுள் குழப்ப அலைகள்.

 

அவன் யாழிக்காக என்று நிறைய யோசிக்கிறான். ஆனால் அதை அவளிடம் காட்டிக் கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் ஏன்? தன்னிடம் அவன் அவளை எழுப்பக் கூறியதற்கான காரணம் என்ன? இப்பொழுது அவளிடம் அவன் சொல்லும் காரணம் என்ன?

 

குழப்பத்திலிருந்தவளை மீட்டெடுத்தது குறிஞ்சியின் குரல்.

“ரேவ்ஸ்! ரேவ்ஸ்! இங்க பாரேன்!” என்று அவள் கத்திக் கொண்டிருந்தாள் உற்சாகத்தில்.

 

அவள் காட்டிய திசையில் தன் பார்வையை பதித்தவளோ பிரமித்துப் போனாள்.

ஆனந்தக் கண்ணீரில் கரையும் 

கண்ணின் மைபோல,

அந்த வானத்துக் கருமையும் கரைந்து கொண்டிருந்தது.

துளி.. துளியாய்..

மெது.. மெதுவாய்..

ஆங்காங்கே சிறகை விரிக்கும் பறவைகளின் சங்கீதச் சாரல் வேறு!

இதற்கிடையே காரினுள் ஒலித்த “புத்தம் புது காலை” வேறு அவர்களை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.

 

இவர்களை கவனித்தவன் காரின் வேகத்தை குறைத்தான். அவர்களின் ரசனையைக் கலைக்காத வண்ணம்.

 

அவளுக்கு எல்லாமே அதிசயமாக தெரிந்தது.

அந்த காலை நேரத்தில் வயல் வேலைகளுக்கென்று சேலையைத் தூக்கிச் செருகிக் கொண்டு நடக்கும் வயதான பாட்டிகளிலிருந்து பெரிய அளவிலான கேனில் பாலை நிரப்பிக் கொண்டு ஒவ்வொரு வீடாக பயணிக்கும் அந்த சாரம் கட்டிய நடுத்தர வயது மனிதர் வரை.

எல்லாமே!

 

ஆடு கொடுக்கும் சத்தம்கூட அவளை ஆழிக்குள் அமிழ்த்தியது.

அவள் நேசிப்பதற்காக மட்டுமே அந்த ஊரினுள் காலடி எடுத்து வைத்திருந்தாள். மனம் முழுக்க நேசமுடனும் தான் இதுவரை  பார்த்திராத அந்த குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசமுடனும்.

நன்றாக விடிய தொடங்கியிருந்தது.

 

“பூஞ்சோலை” என்று அந்த வாசல் சுவரின் கருங்கல்லில் பதிக்கப்பட்டிருந்த பெரிய வீட்டினுள் கார் நுழைந்தது.

வண்டியிலிருந்து கீழே இறங்கியவளின் நாசியை முதலில் தாக்கியது அந்த சாணத்தின் வாசம்தான்.  

காலைநேர பனிக்காற்றுடன் சேர்ந்து கலந்து வந்த சாணத்தின் வாசம்.

நாசி அதை ரசித்தது என்றால் மனமோ கேள்வியெழுப்பியது.

 

‘இன்னமும் சாணத்தில்  மொழுக ஆட்கள் இருக்கிறார்களா?’ என்று அதுவும் அவள் கவனித்த வரையில் நாலரை மணிக்கெல்லாம் எல்லோரின் வீட்டு வாசலும் பளிச்சென்று தெளித்துக் கோலமிடப் பட்டிருந்தது.  

 

அவளுடன் இறங்கிய ரேவதி அவளது வலது கையை பற்றிக் கொண்டவள் தன் பார்வையை நேரெதிரே பதித்தவாறு “நம்ம வீடு யாழி” என்றாள் பெருமிதமாக.

 

நிமிர்ந்து பார்த்தவளின் கண்முன் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது வெறும் கட்டிடம் அல்ல அவளுக்குப் பல உறவுகளையும், புதிய அனுபவங்களையும் பரிசளிக்கத் தயாராயிருக்கும் சொர்க்கம் என்றே எண்ணினாள்.

ரேவதியை நோக்கிப் புன்னகை சிந்தியவள் பின் ஞாபகம் வந்தவளாகக் கேட்டாள்

 

“ஏன் ரேவ்ஸ் இன்னும் சாணம் தெளிச்சு மொழுகல்லாம் ஆள் இருக்கா? நான் அதெல்லாம் பழைய படத்துலத்தான் பாத்துருக்கேன்” என்க 

 

“அதுவா.. எல்லார் வீட்லயுமெல்லாம்  பண்ணமாட்டாங்க யாழி சிலர்தான் இன்னும் இதெல்லாம் கடைபிடிக்கறாங்க..” என்றாள். அதைக் கேட்டவளோ ஒரு

 

“ஓ..”உடன் அமைதியாகிவிட அவள் தோளில் கை போட்டவள்

 

“சாணம் தெளிச்சு கோலமிடறதுல இருந்து, முற்றத்துத் துளசி, புறவாசல்ல மாட்டு தொழுவம், கொள்ளபுறத்துல இருந்து கொஞ்சதூரம் நடந்தா வர தோப்புனு படத்துல காட்டுற மண்மணம் மாறாத கிராமத்து காட்சிகள் அனைத்தையும் நீ நம்ம வீட்டுல பார்க்கலாம்!” என்று மூச்சுவிடாமல் அவள் சொல்லி முடிக்கவும் 

 

“வாங்க வாங்க! என்ன அங்கனயே நின்னுட்டீய?” என்றவாறு அந்த பெரிய வீட்டிலிருந்து வெளிப்பட்டவர் இவர்களை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தார்.

“இல்ல தாத்தா இவளுக்கு நம்ம வீட்ட பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன்” என்றவள் இவளிடம் திரும்பித் தாழ்ந்த குரலில்  “தேவேந்திரன் தாத்தா!” என்றாள்.

 

அவர் வருவதைக் கவனித்துவிட்டவன்போல் வேகநடையுடன் அவரை அடைந்தவன் “எப்படி இருக்கீங்க தாத்தா?” என்று விசாரித்தான். 

சிறியவனின் அன்பில் கரைந்தவர் அவனிடம் “நல்லா இருக்கேன்பா! உன்னத்தான் அய்யா கேட்டுக்கிட்டே இருந்தாக” என்றவரின் பார்வை புதியவளின் பக்கம் திரும்புவதற்கு முன் முந்திக் கொண்டவனாக 

 

“இவங்க பேரு குறிஞ்சி யாழ் தாத்தா” என்று அவன் அறிமுகமாய் ஆரம்பிக்கும் முன்னே  “என் பெஸ்ட் ஃப்ரெண்ட் தாத்தா!” என்று ரேவதி உரைக்க அதில் ஆச்சரியப்பட்டுப்போனவராக அவள் புறம் திரும்பினார் பின்னே ரேவதியைப்போல் ஒருத்தியிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை என்றால்?

 

அவர் அவள் புறம் திரும்ப தன் கைகள் இரண்டையும் கூப்பியவள் “வணக்கம் தாத்தா! என் பேரு குறிஞ்சி யாழ்! Bcom படிக்கறேன், பெங்களூர்ல” என்றாள் அறிமுகமாய்.

 

அவளது வணக்கத்திலேயே அவர் முகம் பிரகாசமாகிவிட்டதென்றால், பின் அவளின் தெளிவான தமிழ் உச்சரிப்பில் மனிதரின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்துவிட்டாள்.

பதிலுக்கு வணக்கம் சொல்லியவருக்கு முன்பேத் தெரியும் இவள் வரப் போவது. நரேந்திரன் முன்பே இவரை அழைத்து அனுமதி வேண்டியிருந்தான். 

 

“வணக்கம்மா! பிராயணமெல்லாம் சௌகரியமா இருந்துச்சா?” என்றவரின் கேள்விக்கு புன்சிரிப்புடன் ஒப்புதலாய் தலையாட்டினாள் அவள்.

 

“மருது! ஏலே மருது!” என்றவர் சற்று குரல் உசத்தி அழைக்க  வேகவேகமாக வந்த மருதுவிற்கு சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். வந்தவனிடம் பெட்டியை எடுத்து வைக்க உதவும்படி உரைத்தவர்  இவர்களிடம் புன்னகைத்து “எல்லாரும் உள்ள போங்க நான் இதோ வாரேன்” என்று சென்றுவிட்டார்.

இருவரும் முன்னே ஓரடி எடுத்து வைக்க குறிஞ்சி அங்கேயே நிற்பதைக் கண்டவர்கள் “ஏன் யாழி? என்னாச்சு?” என்று வினவ 

 

“அதில்ல.. இவ்ளோ லகேஜ் இருக்கு இவங்க எப்படி தனியா கொண்டு வருவாங்க?” என்று கேட்ட மறுகணம் நரேந்திரன் மருதுவைத்தான் பார்த்தான்.

 

மருதுவின் கண்களில் அவ்வளவு ஆச்சரியம்! எப்படியும் அதை அவன் தனியாகத் தூக்கப் போவதில்லை ஆட்களை அழைத்து கொள்வான் அதுதான் வழக்கம். ஆனால் இவளுக்கு அது தெரியா வாய்ப்பில்லையே, அவள் கண்முன் மருது ஒருவன்தான் நின்று கொண்டிருக்கிறான். 

 

“மருதண்ணே தனியாலாம் தூக்கி கீக்கி வச்சிராதீக அப்புறம் மேடம் எங்கள டின்னு கட்டிருவா!” என்று கேலியாக உரைத்தவன் அவளிடம்

 

“அப்படியெல்லாம் தனியா தூக்க மாட்டாங்க யாழி. ஆட்க்கள கூப்ட்டுப்பாங்க நீ வா” என்றவன் அழைக்க 

மருதுவிடம் புன்னகைத்தவள் நரேந்திரனிடம் புகைந்தாள்.

 

நரேந்திரனுக்கும் ரேவதிக்கும் நடுவில் வந்தவள் “அப்படி என்ன சொல்லிட்டேன்னு கிண்டலடிக்கற நீ!” என்று சீற அது அவன் காதில் விழுந்தது போல் அவன் காட்டிக் கொள்ளவே இல்லை.

 

அதில் இன்னும் இன்னும் ஆத்திரமடைந்தவளோ “நரிப்பயலே!” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுக்க ரேவதிக்கோ அது அட்சரம் பிசகாமல் கேட்டுத் தொலைத்தது.

 

அடக்கமாட்டாமல் அவள் சிரித்து வைக்க அவள் கையை பிடித்து அழுத்தியவள் அமைதியாய் இருக்கும்படி கண்ணசைக்க அவளோ நரேந்திரனை பார்த்துவிட்டு மறுபடியும் சிரித்தாள்.  “ரேவதி!” என்ற அழுத்தமான குரலில் அவளை அடக்கியவன் கண்களால் சுட்டிக் காட்ட அங்கே வசுமதி வந்து கொண்டிருந்தார்.

அந்த காலையிலேயே குளித்து நன்றாக உடுத்தி  நிமிர்வாய் நடந்து வந்தவரின் கம்பீரம் அவளை வசீகரிக்கத்தான் செய்தது.

 

மூக்கில் மின்னும்  கல் மூக்குத்தியும், ஈரமான தலைமுடியைக் கீழே சின்னதாக முடிச்சிட்டிருந்ததாகட்டும்  இல்லை எல்லாம் சரியாக நடக்கிறதா? என்ற பார்வையுடன் நடந்துவந்த விதமாகட்டும், குறிஞ்சி ஃப்ளாட்!

“வசுமதி ஆச்சி!” என்றான் நரேந்திரன்.

 

முதலில் வரவேற்றவர் இவளிடம் நலம் விசாரித்துவிட்டு “வளரு! வளரு யார் வந்துருக்காங்கன்னு பாரு” என்று மேல் நோக்கி குரல் கொடுத்துவிட்டு 

வாசல் பக்கம் எட்டிப் பார்த்தவர் மருது ஆட்களுடன்  சாமான்களைக் கொண்டுவருவதைக் கண்டு அவனிடம் 

 

“மருது! பேச்சி எங்க?” என்று வினவினார்.

 

“ பொற வாசல்ல  இருப்பாமா” 

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்க அதற்குள் அங்கு வந்திருந்தார் வளர்மதி.

அவர்களிடம் திரும்பியவர் “வளரு பிள்ளையல உள்ள கூட்டுபோ” என்றவர் இவர்களிடம் திரும்பி சின்ன சிரிப்பு ஒன்றை உதிர்த்தவர் பின் மருதுவை அழைத்துக் கொண்டு சென்றார்.

 

“உள்ளுக்குள்ள அவ்ளொ சோலி கிடக்க  இவ பொற வாசல்ல என்ன பண்றாளாம்?” என்றவரின் குரல் தேய்ந்தது.

 

“பேபி! வை வாய் பிளந்திங்க்ஸ்?” என்று ரேவதியின் வார்த்தைகள் அவள் காது மடல்களைத் தீண்டியது.

 

“சூப்பர்வுமன்!” என்றவள் அவள் புறம் திரும்பி “என்ன கம்பீரம்! என்ன கெத்து!” என்று அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பானுமதி ஆச்சிக்கு அடுத்து இவங்கதான்  வீட்டு நிர்வாகம் பேபி! இத்தனை வருஷமா இந்த குடும்பம் இப்படி சீரா ஓடுதுனா அதுக்கு இவங்க மெய்ன் ரீசன்” என்க குறிஞ்சியோ அவரில் இருந்து இன்னும் வெளி வர வில்லை.

 

லீலாமதிக்கு அடுத்ததாக அவள் சந்திக்கும் கம்பீரமான பெண்மணி இவராகத்தான் இருக்கும் என்று எண்ணினாள். லீலாமதி என்றவுடன் அவள் எண்ணமெல்லாம் பெங்களூரை நோக்கிப் பயணிக்க அதை இழுத்துப் பிடித்தவள் தன் மனதைத் திருநெல்வேலிக்கு கொண்டு வந்தாள்.

 

“அம்மா!” என்ற ரேவதியின் குரலில் அவள் கவனம் இப்பொழுது எதிரில் இருந்தவர் புறம்.

 

அவள் கட்டிக் கொள்ள அவரோ “போட்டீ! என்னைக்கு வரதா சொன்ன என்னைக்கு வந்துருக்க? இனி உன்ன எங்கயும் அனுப்புறதா இல்ல” என்று செல்லமாகக் கடிந்து கொள்ள 

 

ரேவதியோ அவரை இன்னும் இறுக்கி அனைத்துவள் “வளரு! நான்தா சொன்னேன்ல” என்றவள் பெங்களூரிலிருந்து இரண்டு நாள் முன்பே கிளம்பியிருக்க வேண்டியவள்.

 

எதிர்பாராத சந்திப்பு, குறிஞ்சியும் வருவதாகச் சொல்லவும் இரண்டு நாள் கழித்து  இன்று வந்திருக்கிறாள்.

“வளரு நான் சொன்னேன்ல, என் ஃப்ரெண்டுனு.. இவதான் யாழி!” என்றவள் இவளிடம் 

 

“பேபி! என்னை பெத்த மகராசி இவங்கதான்!” என்றாள் கிண்டலாக 

 

“உன்ன!” என்று காதை பிடித்து திருகியவர்  

 

குறிஞ்சியிடம் “வாம்மா! எப்படியிருக்க?” என்று விசாரிக்க 

 

“நான் நல்லா இருக்கேன்..” என்றவள் எந்த உறவு முறை சொல்வது என்று புரியாமல் தடுமாறினாள். 

 

அத்தை என்று தெரியும் ஆனால், திடீரென ஒருத்தி வந்து அத்தை என்று அழைத்தாள் அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்று அவள் யோசிக்க அதை உணர்ந்தவள் போல  ரேவதி

 

“இந்த ஆன்ட்டிலாம் வேணாம் யாழி. பேசாம அத்தைன்னு கூப்பிடு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அப்படிதான் கூப்பிடுவாங்க” என்க அவளை ‘தெய்வமே!’ என்று பார்த்தவள் 

 

“நான் நல்லா இருக்கேனத்த நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள்.

 

“நான் நல்லா இருக்கேன்மா, எப்படி இவள சமாளிச்சியோ நீ? எப்ப ஃபோன் பண்ணாலும் உன் பேச்சுதான்! யாழி இத சொன்ன யாழி அத சொன்னான்னு காது ஜவ்வு கிழியற அளவு என்ன பேசியே கொன்னுட்டா நல்லவேளை நீ வந்துட்ட நான் தப்பிச்சேன்” என்று பொய்யாய் சலித்துக் கொண்டார். 

 

“அம்மா!” என்று சிணுங்கியவள் “பாரு இந்திரா” என்று அவனிடம் வர அவள் தோள்களில் கை போட்டவன் வளர்மதியிடம் திரும்பி

 

“ஆனாலும் சித்தி நீங்க இப்படி உண்மைய உரக்கச் சொல்லலாமா?” என்று குறை போல் உரைத்தவனின் தோளில் பட்டென் விழுந்தது ஒரு அடி!