24
கரைந்த மை மறுபடியும் பூசிக் கொண்டது. கருமையைப் பூசிக் கொண்ட வானத்தில் வெண்பனியாய் நிலா. அந்த காலத்து வீடு கீழே தணிந்து நிற்கும் உத்தரம். அதைத் தாங்கி நிற்பதுபோல அகலமான தூண்கள் எனப் பழமையை போற்றினாலும் ஆங்காங்கே அவர்களது வசதிக்கேற்ப மாற்றியிருந்தனர்.
உத்தரத்தையே வெறித்துக் கொண்டு படுத்துக் கிடந்தவளுக்கு ஒரு துளி தூக்கம்கூட அவள் கண்ணோரம் கசியத் தயாராய் இல்லை.
வீட்டில் ஒரு தொள தொளா டீ சர்ட்டும், அரை ட்ரவுஸருமாக அலைந்தவள்தான். ஆனால் இது வெளியிடமாயிற்றே, அதான் அரைட்ரவுஸர் முழு பேண்ட்டாகி இருந்தது. அது பாதியே அவளுக்கு அசௌகரியமாக இருந்தது.
சற்று நேரம் உட்காரலாம் என்று எழ முயன்றவளின் டீ ஷர்ட் எதிலோ மாட்டியிருப்பதுபோல் இருக்க திரும்பி பார்த்தாள்.
ரேவதிதான்! பிள்ளை போல் அசந்து உறங்கும் அவளைக் கண்டவளுக்குள் ஆயிரம் எண்ணவலைகள்!
சட்டையைப் பார்த்தால் அவள்தான் அவள் டீ ஷர்ட்டின் நுணியைக் கையில் இறுக்கிக் கொண்டு உறங்கியிருந்தாள்.
அதைப் பார்த்தவளுக்கோ தானாய் இதழ் மலர்ந்தது.
அவளுக்கென்று முதலில் ஒரு தனி அறை ஒதுக்கினர் ஆனால் அதற்கும் ரேவதிதான் தன்னுடனே இவளைத் தங்க வைத்துக் கொள்வதாக கொடி பிடித்தாள்.
யார் இவள்? மிஞ்சிமிஞ்சிப் போனால் ஐந்து நாள், இல்லை ஒரு வாரப் பழக்கம் இருக்குமா? இவர்களிடையே? அந்த ஒரு வாரப் பழக்கத்தில் உருவான உறவா?
வெறும் ஒரு வாரத்தில் ஒருவரிடம் இவ்வளவு நெருங்கிவிட முடியுமா? மனதால்.
முடியும் என்பதை நொடிக்கொரு முறை காட்டிக் கொண்டிருந்தாள் ரேவதி.
அஷ்மி அவளைப் பார்த்துக் கொள்கிறாள் என்றால், அவள் அவளுடைய அக்கா ஆனால் இவள்? என்று தோன்றிய மறுகணம் அவள் மனம் சொன்ன செய்தி,
இவளும் உன் அக்காதானே? அப்போ நரேந்திரன்?
அதற்கு அவளிடம் பதிலில்லை!
இங்கு வந்த பின்புதான் தெரிந்தது தான் எடுத்தது எவ்வளவு பெரிய முடிவென்று.
வாழ்க்கையின் திசையை மாற்றியமைக்க இருக்கிறாள்!
ஆனால் யார் வாழ்க்கையின்?
முதல்முறை மனதுக்குள் உறவை வைத்து கொண்டு ஒரு வீட்டிற்கு வந்திருக்கிறாள், அதுவும் தங்குவதற்காக.
இத்தனை வருஷத்தில் சொந்தம் என்று அவளோ அஷ்மிதாவோ எங்கும் சென்றதில்லை. நட்பு வட்டம் பெரிது ஆனால் சொந்தம் என்றால், அவர்களுக்கு அவர்கள் நால்வர் மட்டுமே எல்லாமுமாக!
இங்குதான் எத்தனை எத்தனை உறவுகள்!
அவள் மனம் ஒவ்வொன்றாக அசைபோட ஆசைப்பட்டது.
அன்று காலையில் வந்திறங்கியதில் இருந்து ஒவ்வொன்றாக அசைபோட்டவளின் கண்முன் விரிந்தன.
வளர்மதியும் நரேந்திரனும் ஒன்று சேர்ந்து கொண்டு ரேவதியை ஓட்டிக் கொண்டிருந்தனர். இவள் சித்தியும் மகனும் சேர்ந்தடிக்கும் கூத்தை பார்வையாளராகப் பார்த்திருந்தாள்.
“ஆனாலும் சித்தி நீங்க இப்படி உண்மைய உரக்கச் சொல்லலாமா?” என்று குறை போல் உரைத்தவனின் தோளில் பட்டென் விழுந்தது ஒரு அடி!
“ஸ்ஆஆ!” என்ற சத்தத்துடன் நரேந்திரன் திரும்பினால்,
“என்னடே! அங்குட்டு கொஞ்சம் போய்ட்டு வரதுக்குள்ள எம்புள்ளய சித்தியும் மகனுமா சேந்து ஓட்றியளோ?” என்று உறுமுவது போல் பாவனை செய்தாலும் அது கேலி என்பது அவர் கண்களே கூறின.
முதுகைத் தேய்த்து விட்டவன் “அதுக்குனு இப்படியா அடிப்பீய? இருங்க நானும் ஆள கூட்டு வாரேன்!” என்றான் மிரட்டலாக
தந்தையின் பக்கத்தில் நின்று கொண்ட ரேவதியோ அவனைப் பார்த்துப் பழிப்பு காட்ட அவனோ
“பாருங்க சித்தி என்ன பாத்து வக்கனங்கழிக்கா!” என்றான் புகாராக.
‘அது என்னவா இருக்கும்?’ என்ற யோசனையில் குறிஞ்சி குதித்திருந்தாள்.
சந்திரன் திரும்பி மகளைப் பார்க்க அவளோ அப்பாவியாய் விழித்து வைத்தாள்.
“திருட்டு கழுத!”என்று அவள் காதை பிடித்து செல்லமாய் திருகியவர் குறிஞ்சியை பார்த்துவிட்டு
“இவங்க பண்ண கூத்துல உன்ன கவனிக்காம விட்டேன் பாத்தியா? வாம்மா அப்பா அம்மாலாம் சௌக்கியமா? நீ இன்னைக்கு தான் இங்க வந்திருக்க ஆனா உன் பேரு என்னமோ ஒருவாரமா இந்த வீட்லதான் சுத்திகிட்டு கிடக்கு! எப்ப கூப்பிட்டாலும் உன் பேச்சுதான், நான் ஒருத்தன்.. பயணக் களைப்பு இருக்கும், வளரு பிள்ளையல ரூமுக்கு கூப்ட்டுபோ நான் மாமாவ பாத்துட்டு வரேன்” என்றவர் நரேந்திரனிடம்
“ஏன்ல ட்ரைவர் வச்சுக்க கூடாதா? இம்புட்டு தூரம் தனியாவா ஓட்டிட்டு வருவ? மயினி வருத்தப்படுராக…”
“அதில்லப்பா..” ஏதோ அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்வதும் அதற்குச் சந்திரன்
“என்னலே நீ..” என்று அலுத்துக் கொள்வதும் படியேறிக் கொண்டிருந்தவளின் காதில் தெளிவாக வந்து விழுந்தன.
முதல் தளத்தில் ஓரத்திலிருந்த பெரிய அறை ஒன்றை இவளுக்காக வளர்மதி காட்ட ரேவதியோ அதை முழு மூச்சாக மறுத்தாள்.
“அவ என்கூடவே தங்கட்டும்!” என்று அவள் நிற்க அவரோ
“ஏ பிள்ள அவளுக்கும் ப்ரைவசி வேணாமா?” என்றார் தாழ்ந்த குரலில்.
அவருக்கே ஆச்சரியம்தான், எல்லோருடனும் நன்றாகப் பழகினாலும் எல்லோருக்கும் ஒரு எல்லைக் கோட்டை வரைந்திருப்பவள் அவள். அப்படிப்பட்ட ரேவதியா இன்று ஒருத்தியிடம் இப்படி ஒட்டிக் கொண்டு அலைகிறாள்?
அத்தையின் கலக்கமான பார்வையைக் கண்டவளோ “என்ன அத்த நீங்க?” என்றாள் குறையாக.
அவர் புரியாமல் விழிக்க அவளே தொடர்ந்தாள்.
“ரேவ்ஸோட அவ ரூம்லேயே நிம்மதியா தூங்க வேண்டியவள, இப்படி தனி ரூம்ல தள்ளி தவிக்கவிட பாத்தீயலே” என்றாள் மூக்கை உரிஞ்சியபடி.
“ஓய் என்ன நீயும் எங்கள மாதிரி பேசற?” என்ற ரேவதியைப் பார்த்துக் கண்ணடித்தவள்
“இனிமே இங்கத்தான” என்றாள் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“நல்ல பொண்ணுமா! உன்ன காப்பாத்தலாம்னு பாத்தேன், ஹ்ம்ம் உன் தலைல அப்படிதான் எழுதியிருக்குனா யாரால மாத்தமுடியும்!” என்று அவரும் சோகமாய் வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
“இது உலக மகா நடிப்புடா சாமீ!” என்று ரேவதி நெஞ்சில் கை வைத்துச் சொல்ல
அங்கு மெல்லிசையாய் ஒரு உறவின் தொடக்கம்!
அறையினுள் வந்தவளின் முதல் கேள்வியே “வக்கனங்கழிக்கறதுன்னா என்ன ரேவ்ஸ்?”
அவளது கேள்வியில் சிரித்துவிட்டவள் “இதையா இவ்வளவு நேரம் யோசிச்சிட்டு இருந்த?” என்று மறுபடியும் சிரிக்க
“சொல்லேன்!” என்றாள் அவள்.
“ம்ம்ம் வக்கனங்கழிக்கறதுன்னா.. எப்படி சொல்றது? ம்ம்.. ஆஹ்! பழிப்பு காட்றதுன்னு சொல்லுவாங்கள்ள அதுமாதிரிதான் “
“ஓ…”
“ம்ம் அது இருக்கட்டும் எப்படியிருக்கு நம்ம வீடு?”
“தேவா தாத்தாவோட சிரிப்பு, வசு ஆச்சியோட கம்பீரம், அத்தை மாமாலாம் இப்படி பேசுவாங்கன்னு நான் நினைச்சுக்கூட பாக்கல, இதான் ஃப்ர்ஸ்ட் டைம் ரேவ்ஸ்.. சொந்தம்னு ஒரு குடும்பத்துக்குள்ள வரது.. பேசறது..”
“பிடிச்சிருக்கா?” என்றவளின் குரலில் ஆர்வம் மேலிடக் கேட்டாள்.
“ம்ம்ம் ரேவதி புள்ளைய தவிர எல்லாத்தையும் பிடிச்சிருக்கு!” என்றாள் கிண்டலாக.
“உன்ன!” என்றவள் தலையணையைத் தூக்கி வீச இவள் தப்பிக்கவென்று விளையாடியவர்கள் ஒருகட்டத்தில் தங்களையும் அறியாமல் உறங்கியிருந்தனர்.
ஏதேதோ கனவுகள். கனவின் வீரியம் தாங்காமல் ஒருகட்டத்தில் எழுந்தமர்ந்துவிட்டாள் அவள்.
பக்கத்தில் ரேவதி இன்னும் உறங்கி கொண்டுதான் இருந்தாள். பயணக் களைப்பு!
என்ன கனவு அது? என்று யோசித்தவளுக்கு ஒன்றும் நினைவு வராமல் போக தலையை உலுக்கியவள் பின் மெதுவாகக் கட்டிலிலிருந்து இறங்கினாள்.
கண்ட கனவு இன்னதென்று தெரியாவிட்டாலும் ஏனோ உள்ளுக்குள் ஒருவித நடுக்கம் பரவியிருந்தது அவளுக்கு.
அந்த காலத்து அறையின் ஜன்னல் ரேழியின் வழியாகக் கதிரவன் அவளை பார்த்துச் சிரித்தான். கண்களைக் கசக்கிக் கொண்டவள் மணி பார்க்க அதுவோ பத்தரை என்றது. அந்த அறையிலிருந்த குளியலறைக்குள் புகுந்தவள் நன்றாகத் தண்ணீரை அடித்து முகம் கழுவினாள்.
ரேவதி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அதைக் கலைக்கும் மனமற்றவளாய் அறையை விட்டு வெளியேறினாள்.
அறையில் இருந்து வெளியே வந்து படியிறங்கும் வரை ஏதோ சிந்தனையில் இறங்கிவிட்டவள், பாதி படி இறங்கிய பின்னே தயக்கம் வந்து தானாக ஒட்டிக் கொண்டது.
ரேவதியும் இல்லை, நரேந்திரனும் கண்ணில் படவில்லை, நாம பாட்டுக்கு இறங்கிட்டோமே இப்போ என்ன பண்றது? என்றொரு தயக்கம் அவளிடம்.
புதிய இடம் என்பதால் அல்ல, புதிய மனிதர்கள் என்பதால்!
திரும்பிவிடலாமா? என்று கேட்ட மனதை மானசீகமாகக் குட்டியவள்
‘ஏற்கனவே ரெண்டு நாள் ஓடிருச்சு, இப்படியே போனா’ என்றெண்ணியவள் தலையைச் சிலுப்பினாள்.
மகளுடன் வந்து கொண்டிருந்த விமலா இவளைப் பார்த்துவிட்டார்போலும்
“ஏம்மா அங்கேயே நின்னுட்ட?” என்றவர் அவள் கீழே இறங்கி வரவும்
“நான் விமலா.. இவ என் பொண்ணு கார்த்திகா, பயணமெல்லாம் சவுகரியமா இருந்துதா? வீட்ல எல்லாரும் எப்படியிருக்காங்க?” என்று நலம் விசாரித்தார்.
“எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா, நீங்க எப்படி இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன்மா!” என்று புன்னகைத்தவர் “பேசிட்டு இருங்க நான் போய் குடிக்க கொண்டு வாரேன்!” என்று சென்றுவிட்டார்.
எப்படி ஆரம்பிப்பது, யார் ஆரம்பிப்பது? என்ற லேசான தயக்கம் இருக்க அதை உடைத்தது. வேறு யாருமல்ல வழக்கம்போல நம் குறிஞ்சிதான்.
“ஹாய்! நான் குறிஞ்சி.. குறிஞ்சி யாழ்! Bcom ஸ்டூடண்ட்! நீ?” என்று அறிமுகமாய் தொடங்கியவள் கேள்வியுடன் முடிக்கச் சிறியவளுக்குச் சிறு கீற்றாய் ஒரு புன்னகை.
“நான் கார்த்திகா! லெவந்த் படிக்கேன்”
“எந்த ஸ்ட்ரீம்?”
“சைன்ஸ் க்கா” என்றவளின் ‘அக்கா’ அவளுக்கு வித்தியாசமான உணர்வொன்றைக் கொடுத்தது.
“அடியாத்தீ!” என்றவள் அதிர்ச்சிபோல் காட்டிக் கொள்ளச் சிறியவளோ
“என்னக்கா?”என்றாள் ஆராய்ச்சியாக.
“சைன்ஸ்னா இந்த தவக்களைய தலைக்குப்பற போட்டு மர்டர் பண்ணுவாங்களே அதானே?” என்றாள் அப்பாவிபோல் முகத்தை வைத்துக் கொண்டு
அவளது பாவனையில் வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியவள்
“நீங்க எப்பவுமே இப்படிதானா?” என்க அவளோ
“ச்சே ச்சே ஒன்லி ஆன் ஸ்பெஷல் ஒக்கேஷன்ஸ்!” என்றாள் கண்ணடித்து.
இம்முறை வாய்விட்டே சிரித்தவள் “இருங்க பேக வச்சிட்டு வந்து உங்கள வச்சிக்கிடுதேன்!” என்று பொய்யாய் மிரட்டி செல்ல இவளோ
“அய்யோ நேக்கு பயமா இருக்கு!” என்று இவள் நடுங்குவதுபோல் நடிக்க
“நீங்க இருக்கீங்களே..” என்று சிரித்தவாறே படிகளில் தாவி ஓடிவிட்டாள் அவள்.
இளையவளின் நட்பான பேச்சில் இருந்த கலக்கம் கரைந்துவிட, நிமிர்ந்தவள் தன்னை கடந்து சென்ற பெண்மணியைப் பார்த்து வாய் நிறையப் புன்னகைத்தாள்.
ஆனால் அவரோ முகத்தில் எந்தவித பாவமும் காட்டாமல் உணர்ச்சிகளற்ற பார்வை ஒன்றைப் பார்த்துவிட்டுச் சென்றார்.
பட்டென அடிவாங்கிய உணர்வு!
ஏன் இவர் தன்னை இப்படி பார்த்துவிட்டுச் செல்கிறார்? என்று புரியவில்லை.
முதல்முறை பார்ப்பவளிடம் ஏன் இப்படி என்று தோன்ற அதை முயன்று ஒதுக்கியவள் தன்னை தானே சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயன்றாள்.
“நீ இங்க இருக்கியா? உன்னதான் தேடித்துட்டு இருந்தேன்!” என்ற குரலில் உரைந்துவிட்டாள்.
யாரிவன்?