O Crazy Minnal(27)

thumbnail_large-af69b2a1

27

அவனையும் எப்படியாவது அழைத்து செல்லலாம் என்று நினைத்து வந்தவள், அவனது அனல் பறக்கும் வார்த்தைகளில்  அசைவற்று நின்றுவிட்டாள்.

 

அவளுடன் வந்த கார்த்திகாவும்! தன் அண்ணனா இப்படிக் கத்தியது? என்று நம்ப முடியாமல் அவனை வெறித்துக் கொண்டிருக்க அவனோ எதுவுமே நடக்காததுபோல் அமர்ந்திருந்தான்.

 

குறிஞ்சிக்கோ உள்ளே கோப அலைகள் கரைத்தாண்ட தயாராய் இருக்க, எங்கே இன்னும் ஒரு நிமிடம் அங்கு நின்றாள்கூட தான் ஏதேனும் பேசிவிடுவோமோ என்றெண்ணியவளுக்குக் கோபத்தைக் காட்டிலும் அதிர்ச்சியே அதிகம்.

 

பார்வையை வேறெங்கோ பதித்தவள் “சாரி!” என்று முணுமுணுத்துவிட்டு அடுத்த நொடியே அங்கிருந்து அகன்றிருந்தாள். அண்ணனையே ‘நீயா பேசின?’ என்பதுபோல் பார்த்து நின்ற கார்த்திகா அவளின் சாரிக்கு அலட்சியமாய் தோளைக் குழுக்கிவிட்டு தன் வேலையை தொடர்ந்தவனைக் கண்டு  கோபம் தலைக்கேறியது!

 

ஆனால்  இப்பொழுது இவனிடம் சண்டைக்கு நிற்பதைவிட அவளை சமாதானப் படுத்துவதுதான் முக்கியம் என்று உணர்ந்து அவள் பின்னால் ஓடினாள்.

நேற்று நன்றாகப் பேசியவனுக்கு இன்று என்னவாயிற்று? அதுவும் அவனாக வந்து பேசினானே! ஏன் இப்படி தன்னிடம்  எரிந்து விழ வேண்டும்?

என்று பல கேள்விகள் குறிஞ்சியினுள்.

 

அவளிடம் இதுவரை யாரும் இப்படி கத்தியதில்லை, ஏன் ஜிதேந்திரனும் லீலாவும்கூட அவளிடம் குரலை உசத்தியதில்லை.

அப்படி உசத்திய மற்றவர்களிடம் அவள் மௌனமாய் திரும்பி வந்ததுமில்லை.

 

இது அவள் இயல்பல்ல! இருந்தும் மௌனமாய் நின்றாள். காரணம் தெரியவில்லை! ஒரு நாள், அதுவும் கொஞ்ச நேரம்தான் பேசியிருப்பார்கள், அன்று எவ்வளவு உரிமையாய் நட்பாய் பேசினான்! 

 

ஏனோ அவன் எல்லாவற்றிலிருந்தும் சற்று ஒதுங்கி நிற்பதுபோல் தோன்றவே அவள் அவனை அவ்வளவு கட்டாயப்படுத்தினாள்.

ஆனால் அதற்கு இப்படியா கத்த வேண்டும்? என்று அவள் எண்ணம் ஓடிக் கொண்டிருக்க அதைத் தடுப்பது போல் ஓடி வந்து அவள் கையை பற்றியிருந்தாள் கார்த்திகா.

 

மூச்சிரைக்க ஓடி வந்தவள் குறிஞ்சியின் கையை பிடித்து நிறுத்த அவளோ

 

“ஏன் இப்படி ஓடி வர?” என்றாள் சந்தேகமாய்.

 

“நான்.. கூப்பிட்டேன்.. நீங்க நிக்..நிக்கல” என்றவள் மூச்சு வாங்கியபடி பாதி பாதியாய் பேச அப்படியே படியில் அமர்ந்தவள் அவளது கைகளையும் பிடித்து இழுத்து அமர்த்தினாள் “உட்காரு மொதல்ல!” என்றவளாக.

 

அவள் இழுத்த இழுப்பில் அவள் பக்கத்தில் அமர்ந்தவள் குறிஞ்சியின்  கைகளை பற்றிக் கொண்டு “சாரி அக்கா! அவன் ஏன் அப்படி பேசினான்னு தெரியல, அவன் இப்படிலாம் பேசற ஆளில்ல தெரியுமா?  அவனுக்காக சாரிக்கா! ப்ளீஸ்!” 

 

‘அவன் செஞ்சதுக்கு இவ ஏன் சாரி கேட்கனும்?’ என்றெண்ணியவள்

 

கண்களைச் சுருக்கி “சரி போனா போகுது உன் அண்ணன்ங்கறதால மன்னிச்சு விடறேன்!” என்றாள் கேலியைப்போல்.

 

“அக்கா..” என்று சிறியவள் ஆரம்பிக்க  அதை கை காட்டி தடுத்தவள்.

 

“உனக்கு அண்ணன்னா எனக்கும் அப்படிதானே, நான் எதையும் மனசுக்கு  எடுத்துக்கல அவனுக்கு என்ன டென்ஷனோ…” என்று அவளைச் சமாதானம் செய்தவள்

 

“ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு! இதுக்கெல்லாம் அசருர ஆளா நாங்க” என்று எழுந்து கொண்டாள்.

“வா போலாம்.. ரேவ்ஸ்ட்ட இருந்து அந்த வளர்நதுகெட்டவன காப்பாத்த வேணாமா? என்ன இருந்தாலும் நம்ம பயலாச்சே!” என்று பேசியவாறு முன்னால் சென்றவளைப் பார்க்கப் பார்க்க கார்த்திகாவினுள் ஆச்சரியம்.

 

இவள் குறிஞ்சியின்  இடத்தில் இருந்திருந்தால் சத்தியமாக இதை இவ்வளவு எளிதாகக் கடந்திருக்கமாட்டாள்! இவளென்னவென்றால்  தன்னிடம் கத்தியவனுக்கு என்ன டென்ஷனோ என்கிறாளே! என்று தோன்ற மறுபக்கம் அவள் அண்ணனின் செயலில் மனம் உழன்றது.

 

என்னதான் இருந்தாலும் அவன் அப்படி நடந்து கொண்டது தவறு! என்று தோன்ற முதல் வேலையாக நடந்தவை அனைத்தையும் ரேவதியிடம் ஒப்பித்திருந்தாள்.

 

இவர்கள் இருவரும் வெளியே வர நரேந்திரனோ உள்ளே வந்து கொண்டிருந்தான்.

 

அவனைக் கண்டு கொண்டவளைப்போலச் சட்டென தன் முகபாவத்தை மாற்றியவள் குறும்பான சிரிப்புடன் 

 

“என்ன நரி? அடி பலமோ?” என்று அவனை வம்பிழுக்கத் தயாரானாள்.

அவனும் இவளைக் கண்டு நின்றுவிட்டான். 

 

“உன்ன!” என்றவன் மறுபடியும் கொட்ட வர விலகியவள் அவனைப் பார்த்து நாக்கை துருத்தினாள்.

 

இவர்களிருவரும் பேசிக் கொண்டிருக்க அங்கு ரேவதியிடம் சென்ற கார்த்திகாவோ ஒன்றுவிடாமல் அத்தனையையும் படமாய் ஓட்டியிருந்தாள்.

 

“அந்தக்கா முகமே வாடிபோச்சு ரேவதி.. இவன!” என்று  சிறியவள் ரேவதியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் என்றால், இங்கு நரேந்திரனோ இவளிடம் தன் விசாரணையைத் தொடங்கியிருந்தான்.

“என்னாச்சு?” என்றவனின் குரலில் திடுக்கிட்டவள் அதை மறைத்தவாறு 

 

“ஏன்? என்னாச்சு ?” என்று அவனது கேள்வியை அவனிடமே திருப்பினாள்.

 

அவளையே கூர்ந்து நோக்கியவன் “இல்ல.. உன் முகத்துல ஏதோ மிஸ்ஸாகுது! சொல்லு என்னாச்சு?” என்றான் விடாப்பிடியாக.

 

‘அய்யயோ! இவன் விடமாட்டான்போலேயே!’ என்று அவள் உள்ளம் பதறியது.

 

“அடேய்! சீரியஸா ஒன்னுமில்ல!” என்று அவள் சத்தியம் செய்யாத குறையாகச் சொல்ல அவன் நம்பவில்லை என்பதை அவனது விழிகளே அவளுக்குக் கூறின.

 

“ம்ம்ம்.. சரி! ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ இஞ்சி! எவ்வளோ பெரிய பிரச்சனையா இருந்தாலும், நான் உன்கூட இருப்பேன்!”  என்றவனின் குரலில் தீவிரத்தை உணர்ந்தவளுக்கு அவனது ‘இஞ்சி’ என்ற அழைப்பு கவனத்தில் பதியாமல் போனதேனோ!

 

“நான் தாத்தாட்ட சொல்லிட்டு வரேன் கூப்டாங்க…” என்றவன் அவளிடம் தலையசைத்துவிட்டு வீட்டினுள் விரைந்துவிட்டான்.

 

வெளியே வந்தவளை உஷ்ணப்பார்வையுடன் வரவேற்றாள் ரேவதி.

“நல்லா நாலு கேள்வி கேக்கறதுக்கு என்ன?” என்றவளின் குரலில் தான் எவ்வளவு கோபம்! ரேவதியின் கேள்வியில் இவளின் சந்தேகப் பார்வை கார்த்திகாவைத் தொட்டு மீள அவளோ தலையைக் குனிந்து கொண்டாள்.

 

‘இவ்வளவு நேரம் இந்த பக்கி என்கூடதானே இருந்துச்சு! அதுக்குள்ளயேவா?’ என்று அவளது எண்ணவோட்டம் இருக்க அவளோ கார்த்திகாவைப் பார்த்து

 

‘அடப்பாவி  புள்ள! எதெல்லாம் சொல்ல வேணாமோ அதெல்லாம் கரேக்டா சொல்லி வச்சிருக்கு! ஏன் டா?’ என்பதுபோல் பார்த்து வைத்தாள்.

 

ரேவதியின் கோபம் எந்தளவு என்பது அவள் குறிஞ்சியின் கையை பற்றி இழுத்தவாறு இரண்டடி எடுத்து வைத்ததிலேயே தெரிய அதில் பதறிப் போனவள் அடுத்து நடக்கவிருக்கும் விபரீதத்தைப் புரிந்து  தன் கையை உருவிக் கொண்டாள்.

 

ரேவதி அவளைக் கேள்வியாக நோக்க அவளோ,”அதெல்லாம் வேணாம் ரேவ்ஸ்! எதுக்கு இப்போ இத பெருசாக்கனும்? ஃப்ரியா விடு!” என்றாள்.

 

“என்னது ஃப்ரியா விடனுமா? அவன் உன்ட்ட காரணமேயில்லாம கத்துவான் நாங்க ஃப்ரியா விடனுமா?” என்றவளை கையை பிடித்து சற்று தூரம் அழைத்துச் சென்றவள்  ரகசியமாக.

 

“அவன் எனக்கும் அண்ணன்தானே?”என்க அவளை வினோதமாய் பார்த்தவளோ தன் வாயைத் திறக்கும் முன்னே இவள் பேசியிருந்தாள்.

 

“இத பெருசாக்காத ரேவ்ஸ்! குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை! நான் யார் கூடயும் சண்டை போட வரல..” என்று நகர்ந்தவள் ஒரு நொடி நின்று இவளிடம் திரும்பி

 

“இத நரிக்கிட்ட சொல்ல வேண்டாம்!” என்றுவிட்டுச் சென்றாள்.

 

அவள் அன்று அதைச் சொல்லியிருக்க வேண்டுமோ? அவள் அவனிடம் மறைத்தது பல பிரச்சனைகளை உருவாக்க போவதை அவளறியாள்!

 

மிகக் குறுகலான பாதை அது!

இருபுறமும் பச்சை பசேலென பச்சை நிற கம்பலம் ஒன்றை விரித்தார்போல் பசுமையாய்..!!

 அவர்கள் வீட்டிலிருந்து பத்து பதினைந்து நிமிட நடை என்பதால்  நால்வரும் நடந்து கொண்டிருந்தார்கள்.

“ஓத்தையடி பாதையிலே 

தாவி ஓடுறேன்

அத்தை பெத்த பூங்குயில

தேடி வாடுறேன்”  என்று பாடிக்கொண்டே ரேவதியின் பின்னால் வந்து கொண்டிருந்தாள் குறிஞ்சி.

 

இவள் பாடியதைவிட, கதாநாயகனைப்போல  ரேவதியின் பின்னால் பாடிக் கொண்டும் அதற்கேற்றபடி முகபாவத்தை மாற்றிக் கொண்டும் வர அதைக் கண்ட கார்த்திகாவுக்கோ அடக்கமாட்டாமல் சிரிப்பு வர அவளிடம் என்ன என்பது போல் கண்ணசைத்துக் கேட்டான்  நரேந்திரன்.

 

ஏனென்றால் அவனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான் இவள் பாடுவதும், ரேவதி முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக  இருப்பதை.

“நிழலாட்டம் பின்னால

நான் ஓடி வந்தேனே

ஒரு வாட்டி 

என்ன பாரேன்ம்மா!!!”

என்றவள் விடுவதாக இல்லை! 

‘நீ திரும்பும்வரை நான் பாடிக்கொண்டே இருப்பேன்!’ என்பதுபோல் விடாமல் தொடர்ந்தாள் தன் பெர்ஃபார்மென்ஸை.

 

‘இந்த கார்த்திகாட்ட கேட்டதுக்கு ஓரமா போற கட்டெறும்புட்ட கேட்றுக்கலாம், கடிச்சிட்டாவது போயிருக்கும்!’ என்று அவன் பொருமிக்கொண்டிருந்தான். பின்னே அவன் ஒன்று கேட்டால், தெரிந்தால் பதில் சொல்ல வேண்டும் இல்லையெனில் தெரியாது என்று சொல்ல வேண்டும்.

 

இரண்டுமில்லாமல் வாயை இறுக மூடியவள் வெடிக்கத் துடித்த சிரிப்பை அடக்கினாள். கடுப்பாகிப் போனவன் குறிஞ்சியிடமே கேட்டு விட்டான்.

 

“இப்போ ஏன் இந்த பெர்ஃபார்மென்ஸு?” என்று அவன் கேட்டதுதான் தாமதம் என்பதுபோல  வராத கண்ணீரைத் துடைத்தவள் 

 

“ என் அத்த பெத்த பூங்கியில் என்கிட்ட பேச மாட்டேங்குதுபா! அதான் பெர்ஃபார்மென்ஸ் பண்ணி இம்ப்ரெஸ் பண்ணிட்டு இருக்கேன்!” என்றவள் மறுபடியும் பாடத் துவங்க அவன்தான் ‘ஙே’ என்று விழித்து கொண்டிருந்தான்.

 

“மாப்ள!” என்ற குரலில் திரும்பிய நரேந்திரன் அடுத்த நொடி

 

 “ஏ மூக்காண்டி!” என்று ஆச்சரியமும் உற்சாகமும் போட்டிப்போட எதிரில் நின்றவனைக் கட்டிக் கொண்டான்.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பனை கண்ட சந்தோஷத்தில் நரேந்திரனைக் கட்டிக் கொண்டவனின் முகம் இவனது ‘மூக்காண்டியில்’ சுருங்க அவனைப் பார்த்தவன்

 

“முகேஷ்!” என்றான் அழுத்தமாக.

 

“நீ என்னைக்குமே எனக்கு மூக்காண்டிதான்ல!” என்று அவன் தோளில் தட்டியவனை அவன் கொலைவெறி பார்வை பார்க்க நரேந்திரனோ அறிமுக படலத்தில் இறங்கியிருந்தான்.

 

“யாழி இவன் என் ஃப்ரெண்ட் முகேஷ், நான் மூக்காண்டின்னுதான் கூப்பிடுவேன்” என்க முகேஷாகப்பட்டவனோ ‘இப்போ இத அவ கேட்டாளா?’ என்பதுபோல் பார்த்து வைத்தான்.

 

அதைக் கண்டு கொள்ளாதவனாக,

 

“நான் மொதல்ல இங்கதான் படிச்சேன், நாங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்!” என்றான் அவன் அறிமுகமாய்.

அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “ ஹாய்! நான் குறிஞ்சி.. குறிஞ்சி யாழ்!” என  அவன் அவளை வித்தியாசமாகப் பார்த்தானென்றால்  நரேந்திரனோ இடையில் புகுந்து

 

“அது மேடமோட ட்ரேட்மார்க்! எந்த பேர சொன்னாலும் இரண்டு வாட்டி சொல்லுவாங்க!” என்றான் கிண்டலாய்.

பார்வையாலே அவனைப் பல முறை குட்டியிருந்தாள் அவள்.

 

“எங்க இந்த பக்கம்?” என்ற முகேஷின் கேள்விக்கு

 

“சும்மாதான், தோப்ப சுத்தி பார்க்கலாம்னு…” என்று குறிஞ்சி பதிலளிக்க அதில் சிரித்துவிட்டவன் 

“இது என்ன தாஜ்மஹாலா? சுத்தி பார்க்க” என்றான் சிரிப்பினூடே  மற்ற மூவரும் அவனை ‘செத்தான்டா சேகரு!’ என்பதுபோல் பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தனர் அதில் நரேந்திரன் வேறு  “உன் கதை முடியும் நேரமிது..” என்று முணுமுணுத்துவிட்டு நகர அவனுக்கோ ஒன்றும் புரியாமல் போக விழித்தபடி நின்றான்.

 

“ஏன் பாஸ் நின்னுட்டீங்க? வாங்க போலாம்” என்ற குறிஞ்சியைப் பார்த்தவன்

 

“இல்ல இப்போ ஏன் அவங்கல்லாம் அப்படி பார்த்துட்டு போனாங்க?” என்றான் குழப்பமாக.

 

“அதுவா, நான் உங்கக்கூட ஆர்க்யூ பண்ணுவேன்னு நினைச்சாங்க”

 

“ஓ.. அப்போ நீ ஏன் பண்ணல?”

 

“ம்ம்ம்.. அவங்க நினைச்சாங்கல்ல அதான்!” என்றவள் நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

‘இப்போ இவ என்னதான் சொல்லவரா?’ என்று யோசித்தவனுக்கோ ஒன்றும் விளங்காமல் போக ’நமக்கெதுக்கு?’ என்ற பாவனையில் தலையை உலுக்கியவன் நடந்தான்.

 

நீண்ட நெடிய மரங்கள்.

அண்ணாந்து பார்த்தவளின் கண்களுக்கு தூரத்தில் சூரிய ஒளிபட்டு இளம் பச்சை வர்ணத்தில் தெரிந்த  தென்னை மரத்தின் ஓலைகளைப் பார்த்தவள் அப்படியே நின்றுவிட அவள் பக்கத்தில் வந்த நரேந்திரன்

 

“இளநீ குடிக்கறீயா? ஃப்ரெஷா நல்லா இருக்கும்” என்று கேட்டான் ஆர்வமாக.

பார்வையை அகற்றாது மேலேயே பார்த்து கொண்டிருந்தவள் தலையசைக்க “சரி அப்போ நான்போய் மணியண்ணன கூப்டு வரேன்!” என்று நகர்ந்தான்.

 

“இருல நானும் வரேன்!” என்று முகேஷ் கிளம்ப அவ்வளவு நேரமும் மேலே வானைப் பார்த்து நின்றவள் “நானும் வரேன்!” என்றாள்.

அவளைப் பின்பற்றியவளாக கார்த்திகாவும்.

 

பகிரங்கமாகவே தலையில் அடித்து கொண்டவன் ‘எப்படி சிக்கியிருக்கேன் பாத்தீயா?’ என்பதுபோல் முகேஷை  பார்த்துவிட்டு  குறிஞ்சியிடம்  திரும்பி

 

“நாம என்ன பிக்னிக்கா போறோம்? நானும் வரேன் நானும் வரேன்னு…” என்று கேட்க அவளோ “ நான் வரல!” என்றாள் கடுப்பாக.

 

“அப்போ நானும் வரல!” என்றபடி அவனும் அமர்ந்து கொள்ள முகேஷோ 

 

“எனக்கு இளநீ வருமா? வராதா?” என்றான் காட்டமாக. 

அவளையே பார்த்தவன் அவள் ஏதும் சொல்லாமல் அமைதி காக்க “சரிவா!” என்று முகேஷை அழைத்துச் சென்றான்

 

சீக்கிரமாகவே  திரும்பியவர்களுடன் இரண்டு ஆட்கள் வர அதில்  ஒன்றுதான் மணியண்ணன் போலும்/

அப்பொழுதே பறித்து, மணியண்ணன் சீவிக் கொடுக்க அவளது கவனம் முழுக்க அவர்  இளநீர் சீவுவதிலேயே இருந்தது.

 

“நீயேன் இப்போ அவரையே இப்படி வெறிச்சு பார்க்கற?” என்று இவள் காது பக்கத்தில் குனிந்தவன் இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

“எவ்வளோ அழகா சீவராரு பாரேன்! செமல? ரொம்ப எஃபர்ட்லெஸ்ஸா பண்றாரு!” என்று  ரசித்துச் சொல்பவளைப் பார்த்தவனுக்கா தெரியாது அவளது ரசனையைப் பற்றி? 

 

வெளியே”அடிப்பாவீ!” என்றவன் அவள் கேள்வியாக நோக்கவும்

 

“உனக்கு சைட் அடிக்க வேற ஆளே கிடைக்கலையா?” என்றுவிட்டு அவளிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டான்.

 

“உன்ன!” என்று அவள் துரத்த அவன் ஓட என்றிருக்க இதற்கிடையில் நடுவில் வந்த முகேஷை 

 

“நகருங்க மிஸ்டர்.மூக்காண்டி!” என்று கத்தியவாறு அவனை ஒரு கையால் நகர்த்திவிட்டு  நரேந்திரனைத் துரத்த அவளது மூக்காண்டியில் முகம் சுளித்தவன்

 

“நான் முகேஷ்!” என்றான்.

 

“ரெண்டும் ஒன்னுதானேல!” என்று ஓடிக் கொண்டிருந்த நரேந்திரன் தலையை மட்டும் திருப்பி இவனிடம் கத்திவிட்டு ஓட   

 

“ஏல! உன்னெல்லாம்!” என்றவனும் குறிஞ்சியுடன் இணைந்து அவனைத் துரத்தினானென்றால்  மற்ற இருவரும் ஏதோ டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதுபோல வசதியாய் அமர்ந்து கொண்டு  “பிடி! அப்படிதான்! விடாத!” என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.

 

இங்கு இவர்கள் கேலியும் கிண்டலுமாக  வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்க, அங்கு யாருமற்ற  அறையில், தனிமையில்..

நிம்மதியெனும் கண்ணாடி பாத்திரத்தை சுவரில் விட்டெறிந்தவனாக,

தன்னைத்தானே ஒருவன்  வருத்திக் கொண்டிருப்பதை யாரறிவர்?

இல்லை அதனால் விளையப் போகும் விபரீதங்களைத்தான்  யார் தடுப்பர்?