O Crazy Minnal(28)

thumbnail_large-910c45fe

28

பெரிய அளவிலான அறை அது.

அந்த அறையில், துளிகூட வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடந்தது.

இருளவன் தனது கைகளுக்குள் அடக்கியிருந்தான் அந்த அறையை.

இன்னும் சற்று நேரத்தில் விமலா வந்துவிடுவார்  கருக்கல்ல லைட்ட அமத்திட்டு என்னல பண்ணுதே?” என்ற அங்கலாய்ப்புடன்.

 

நல்ல வேளை கதவை அடைத்திருந்தான். உறங்கிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொள்வார் இப்போதைக்கு யார் முகத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாதே!

 

இறுக மூடியிருந்த கதவும், யன்னல்களுமே அந்த அறையின் இருளிற்குக் காரணம்! மூடப்பட்டிருந்தது கதவு மட்டுமல்ல அவனது மனமும் தான்.

மூடிக்கிடக்கும்  மனம்தான் பல இன்னல்களுக்கு விதையாகி

 வாழ்வை இருளாக்கிவிடும்.

உயிர்ப்பில்லாமல்  இருந்த இருள் சூழ்ந்த அந்த அறைதான் அவனுக்கு அப்பொழுது தேவையாய் இருந்தது.

அந்த இருளில் அவன் மனம் வடிக்கும் கண்ணீர் யார் பார்வையிலும் படாதல்லவா!

மனமெங்கிலும் குற்ற உணர்வே நிறைந்திருக்க அவனது மனசாட்சி அவனுக்கு எதிராய் நின்றது.

 

“ச்சே! நீயா இப்படி பண்ணது? நீ இப்படிப்பட்டவன் இல்லையே! எவ்வளோ ஆசையா கூப்பிட வந்தா, அந்த கண்ணுல இருந்த சந்தோஷத்த ஒரே நிமிஷத்துல அழிச்சிட்டியே! அவள்ட்ட போய் கத்திட்டியே! மனுஷனா நீ?” என்று முதலில் தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் மெது மெதுவாகத் தடம் மாறினான்.

 

“நான் இப்படி இல்லையே! எப்படி இருந்தேன்.. எவ்வளோ சந்தோஷமா, நிம்மதியா, எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம்?”  என்றவன் அவனுக்கேத் தெரியாமல் ஒரு மாய சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருந்தான்.

 

மீள்வானா?

 

நேரம் ஆக ஆக அவனுக்குள்  அழுத்தம் கூடிக்கொண்டே போனது.

“என்னதான் இருந்தாலும் நான் அவகிட்ட அப்படி நடந்துட்டிருக்க கூடாது, அவ வந்ததும் சாரி கேக்கனும்” என்று முடிவெடுத்தவனாக முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன்  எழுந்து சென்று  யன்னல் கதவுகளைத் திறந்தான்.

 

கொஞ்சம் கொஞ்சமாக, வானம் கருமையை பூசிக்கொண்டிருந்தது.

 

வானையே வெறித்தபடி நின்றிருந்தான் அவன், ராகவேந்திரன்.

சில பேச்சுக் குரல்களும், அதைத் தொடர்ந்த சிரிப்பொலியும் அவனது கவனத்தை வானிலிருந்து மண்ணிற்கு இழுத்து வந்தது.

அவன் அறையின் யன்னல் வழியாக பார்த்தால் வெளிவாசல் நன்றாகத் தெரியும், ஏன் அதைத் தாண்டியும்தான், பார்க்கத்தான் அவனுக்கு மனமிருப்பதில்லை.

 

 சிரித்த முகமாய் வந்து கொண்டிருந்தவர்களை கண்டவன் குறிஞ்சியின் முகம் காண அதிலோ மகிழ்ச்சியின் ஊற்று.  அவன் முகத்திலோ அனல் காற்று.

 

அவ்வளவு நேரம் இருந்த குற்ற உணர்வின் சாயல் துளியும் இல்லாமல் அவன் பார்வை வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து கொண்டிருந்தது.

 

பட்டென யன்னல் கதவை சாத்தி கொண்டான்.

 

அவள் வந்தவுடன் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணியதெல்லாம், எங்கோ பறந்து மறைந்தார்போல் அவன் முகம் கடுமையைப் பூசிக் கொண்டது.

**********************************************************************************************************

 உள்ளே நுழையும்பொழுதே அவர்களை எதிர்கொண்ட  மருது நரேந்திரனிடம் வந்து தேவேந்திரன் அவனை தேடியதாகச் சொல்லிவிட்டுச் செல்ல இவர்களிடம் திரும்பியவன்

 

“நீங்கல்லாம் போங்க நான் பாத்துட்டு  வரேன்” என்று சென்றுவிட்டான்.

ரேவதி படியேற அவள் பின்னாடி  கொஞ்சம் இடைவெளி விட்டு ஏறினர் கார்த்திகாவும் குறிஞ்சியும். 

 

திடீரென கார்த்திகாவின் கையை பற்றியவள் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

“எதையும் யார்கிட்டயும் சொல்லக்கூடாது! ஓகே?” என்று கேட்க

முதலில் அவள் எதைப் பற்றிப் பேசுகிறாள் என்று புரியாமல் விழித்தவள், புரிந்த பின்  அதை முழு மூச்சாக மறுத்தாள்.

“அவன் செஞ்சது தப்புக்கா! இத நான் அம்மாட்ட சொல்லாம விட்ட அதுவும் தப்புதானே?” என்றவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தவள் பின் நிதானமாக ஒரு குழந்தையிடம் விளக்குவதைப்போல விளக்கினாள்.

 

“லிஸன் கார்த்தி! இத இப்போ பெருசாக்க வேணாம், இப்படியே விட்ரலாம், நான் சொன்னா காரணம் இருக்கும்டா. நான் அதுல இருந்து வெளில வந்துட்டேன். நீ இப்போ மறுபடியும் பேசபேசதான் எனக்கு கஷ்டமா இருக்கு, ப்ளீஸ்! விட்ரலாமே..” என்றவளின் முகத்தைக் கண்ட கார்த்திகா ஏனென்று புரியாவிட்டாலும் தலையை ஆட்டி வைத்தாள்.

 

“ஹ்ம் குட்!” என்று அவள் தோளில் தட்டிய குறிஞ்சி  படியேறி விட்டாள்.

குறிஞ்சி அறையினுள் நுழையவும் கட்டிலில் அமர்ந்திருந்த ரேவதி இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் தலையை திருப்பிக் கொண்டாள்.

 

“ஓ.. அம்மணி இன்னும் கோவமா இருக்கீயலோ?”  என்று புலம்புவதைப்போல வாய்விட்டே கூறிக் கொண்டவள் 

 

“ஒத்தையடி!” என்று அந்த பாட்டிற்கு அவளால் முடிந்த நல்லதைச் செய்ய அதில் பதறிப் போனவளாக ரேவதி கட்டிலில் இருந்து துள்ளியெழுந்திருந்தாள்.

 

“அய்யயோ! போதும் சாமீ!” என்று அவள் பதற ‘அப்படி வா வழிக்கு!’ என்று நினைத்துக் கொண்ட குறிஞ்சி அவளிடம் “இல்ல நீ இன்னும் கோவமா இருக்க உன் கோவம் தணியற வரைக்கும் நான் பாடறேன்…” என்றவள் மறுபடியும் 

 

அந்த ஒத்தையடியை ஆரம்பிக்க ரேவதியோ வாய் முழுக்க பல்லாகக் குறிஞ்சியை நோக்கி ‘ஈஈஈஈ’ என்று சிரித்து “நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் யாழி!” என்று ஓடிவிட்டாள்.

 

ரேவதி பதறி ஓடிய விதத்தில் சிரிப்பு வந்தாலும் அவளுக்கே உள்ளுக்குள் வருத்தம் இருக்காமல் இல்லை.

அவள் எவ்வளவு யோசித்தும் அவளுக்கான பதில் அவளுக்குக் கிடைக்கவே இல்லை. அன்று இரவு அவள் தூக்கம் போனது தான் மிச்சம்! வெறும் ஒரு நாள் பழக்கம், அதுவும் அவன் பார்வையில் அவள் விருந்தாளி, அப்படியிருக்கையில் அவனது கோபம் அர்த்தமற்றது தானே?

 

சம்மந்தமே இல்லாமல் தன்னிடம் ஏன் இவ்வளவு கோபம்?  அவன் கத்தியதற்குப் பின் அவள் கண்களில் அவன் படவேயில்லை. இப்படி பார்க்கக்கூட விரும்பாத அளவுக்குத் தான் என்ன செய்து விட்டோம்? என்று அவள்  படுக்கையில் புரண்டு யோசித்ததில்  அந்த இரவு சத்தமே இல்லாமல் கடந்திருந்தது. விடிந்தே விட்டது! ஆனால் பதில் மட்டும் கிட்டவில்லை.

******************************************************************************************************** 

 

நான்காம் நாள்.

காலையில் கண்விழித்த ரேவதிக்கு  முன் எட்டாவது அதிசயமாகக் குளித்துக் கிளம்பி உட்கார்ந்திருந்தாள் குறிஞ்சி.

 

நம்பமாட்டாமல் கண்களைக் கசக்கியவள் அவள்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளக் குறிஞ்சியோ 

 

“அட நான்தான்பா நம்பனும்!” என்றாள் பவ்யமாக.

 

“இப்படியெல்லாம் திடீர்னு எந்த முடிவும் எடுக்காத பேபி!”

 

“ஏன்?”

 

“எனக்கு பக்கோனு ஆகிருச்சு!” 

 

“ஈஈஈ மொக்க! நான் கொல பசில இருக்கேன் சீக்கிரமா வா!” என்று பேசியவாறே அவளைக் குளியலறைக்குள் தள்ளினாள். 

 

காலைக் கடன்களை முடித்து அவள் வெளியே வர இருவரும் கீழே சென்றனர்.

“ஷ்ஷப்பாஹ்! நெய் வாசமே ஆள தூக்குதே!” என்று வாசம் பிடித்தவள் அங்கிருந்த இருக்கையொன்றை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் பள்ளி சீருடையில் கார்த்திகாவும், அவளுடன் நரேந்திரனும் வந்துவிட விமலாவும் வளர்மதியும் பரிமாறினர்.

 

 “ராகவன் எங்க மயினி?” என்ற வளர்மதியின் கேள்வியில் சற்று சலித்தவராக 

 

“விடியக்காலைலயே எங்கேயோ ஃப்ரெண்ட பாக்கனும்னு கிளம்பிட்டான். எங்க நம்ம பேச்செல்லாம் கேட்டாதானே!” என்றவரின் கடைசி வரி முணுமுணுப்பாக.

 

எல்லாம் காதில் விழுந்தும் எதுவும் விழாததுபோல் உட்கார்ந்திருந்தாள் குறிஞ்சி.

கார்த்திகாவை அப்பொழுதுதான் கவனித்தவள் அவளது பள்ளிச் சீருடையைக் கண்டு, ”இன்னைக்கு ஸ்கூல் இருக்கா கார்ஸ்?” என்று வினவ 

 

“ஆமாக்கா! அடுத்த வருஷம் பன்னென்டாவதுல அதான், நான் சீக்கிரம் வந்துருவேன், நாம விளையாடலாம்” என்றாள் சமாதானமாக. 

 

“அய்யோ! ராமா! என்ன ஏன் இந்த கொடுமையெல்லாம் பாக்க வைக்கற?” என்ற நரேந்திரனின் புலம்பலில் இருவரின் கவனமும் அவன் புறம் திரும்பியது.

 

“பாரு ரேவ்ஸ்!” என்றிவள் ரேவதியிடம் குறைகூற அவளோ  “அவனால சொல்ல முடியுது! ஹ்ம்ம்…” என்றவளின் குரலில் கேலி இழையோடியது.

 

“யூ டூ!” என்று அவளிடம் பாய்ந்தவள் வளர்மதியிடம் தஞ்சமடைந்தாள்.

 

“பாருங்கத்த! எப்படி கலாய்க்கறாங்கன்னு!” என்றிவள் முறையிட அவரோ நரேந்திரனின் காதை பிடித்துத் திருகாத குறையாக 

 

“ஏண்டா பிள்ளைய வம்பிழுக்க?” என்றார் அதட்டலாய். 

“ஆமா அவள அப்படியே நாங்க வம்பிழுத்திட்டாலும், போங்க சித்தி!” என்றான் கடுப்பாக.

 

“என்ன விமலாம்மா? அவன் என்ன கலாய்க்கறான் நீங்க இப்படி அமைதி காக்கலாமா? அத்தைக்குத் தோள் குடுக்க வேணாமா?” என்று விமலாவையும் இவள் கோர்த்துவிட  அவரோ அதை புரிந்து கொண்டவராக அவளிடம்.

 

“அதெல்லாம் சரி, அதென்ன மயினிய அத்தங்க, என்ன அம்மாங்க?” என்றவரின் கேள்வியில் நிமிர்ந்தவள் 

 

“அதொன்னுமில்ல விம்ஸ்ம்மா, நான் முதல் தடவ பார்க்கும்போதே ரேவ்ஸ் சொல்லிட்டா! ஆண்ட்டீலாம் வேணாம் அம்மாவ அத்தைனு கூப்பிடுனு! ஸோ, அவளோட அம்மா எனக்கு அத்தைன்னா, அவளோட அத்தை எனக்கு அம்மாதானே? அதான்!” என்றவள் எங்கு அவர் அடுத்த கேள்வி கேட்டுவிடுவாரோ என்று தட்டில் கவனம் பதித்தாள்.

 

என்னதான் எல்லாரிடமும் கலகலப்பாகப் பேசி சிரித்தபடி உண்டாலும் அவளுக்கு  வீட்டு ஞாபகம் வந்துவிட அத்தனை பசியிருந்தும் ஓரளவுக்கு மேல் உள்ளே இறங்கவில்லை.

 

இதற்குமேல் முடியாதென்று தோன்றிவிட அவள் எழப் பார்க்க அவள் தோள்களில் படிந்து சிறு அழுத்தத்துடன் அவளை அமர வைத்தது இருகரங்கள்!

 

“என்ன நீ?அதுக்குள்ள எழுந்துட்டே?” என்ற குரலுக்குச் சொந்தக்காரரைக் கண்டு அங்கு அனைவரின் விழிகளிலும்  அதிர்ச்சியும் ஆச்சரியமும் போட்டிப் போட்டது.

 

காரணம் அவ்வளவு உரிமையாய் அவள் தோளைப்பிடித்து அமர்த்திக் கண்டித்தது கோமதி.

 

மஹேந்திரன் வாய்க்காலுக்குச் சென்று வர அவருக்குக் காபி  தயாரிக்க வேண்டி அடுக்களை பக்கம் அவர் வந்திருந்தார், அப்பொழுதுதான் கவனித்தார்  குறிஞ்சியை.

அவளது  கவனம் பேச்சில் இருந்ததே தவிர சாப்பாட்டில் இல்லை.

 

முதலில் அவளுக்கு வைக்கப்பட்டிருந்த பொங்கலோட அவள் எழுந்து கொள்ள அவர் தடுத்திருந்தார்.

 

“அய்யோ! கோம்ஸ்! எனக்கு போதும் ஹெவி ஆகிருச்சு “ என்று சிணுங்கலாக இவள் குரல் வந்தது.

 

“என்ன சாப்பிடற நீ? அதான் இப்படி வத்தலும் தொத்தலுமா இருக்க!” என்று இவளிடம் கடிந்து கொண்டவர் வளர்மதியிடம் சூடாக இட்லி கொண்டுவரச் சொல்ல அவரையே கண்கள் விரியப் பார்த்து நின்ற வளர்மதி  “இதோ வரேம்மா!” என்று உற்சாகமாய் தலையாட்டிச் சென்றார்.

 

“இட்லியா? வேணாம் கோம்ஸ் ஆச்சி  என்னால முடியாது வீணாக்கிருவேன்!” என்று மறுக்க முயன்றாள்.

 

அவரோ விடாப்பிடியாக நின்றார்,” அதெல்லாம் வீணாவாது! கல்ல முழுங்குனாலும் செரிக்கற வயசு, வளர்ர பிள்ளை ஒழுங்க சாப்பிட வேணாமா!” என்றுவிட்டு விமலாவைக் கண்டவர் “விமலா, மாமா காபி கேட்டாக கொஞ்சம் குடுத்திர்றியா?” என்று வினவ விமலாவோ

 

“அய்யோ! ஏனத்த இப்படியெல்லாம் கேக்கறீங்க? குடுன்னு சொன்னா செய்யமாட்டேனா?” என்றவர் முதல் வேலையாகக் காபி கலக்கச் சென்றார். 

அதிகாரத் த்வனியைவிட பணிவான வார்த்தைகள்தான் மனிதனின் மனதைத் தொடுபவை! அவருக்கு இயல்பிலேயே  அதிகாரம் செய்து பழக்கம் இல்லை, என்றும் இல்லாத திருநாளை இன்று அவர் கேட்க மறுக்க மனம் எப்படி வரும்? 

 

நீ சாப்பிடற வரைக்கும் நான் நகருவதாக இல்லை என்பதுபோல அவள் தட்டு காலியாக காலியாக  “வெங்காய சட்னி நல்லா இருக்கும், நம்மூரு இட்லி சாம்பார்…” என்று அவள் தட்டை நிரப்பிக் கொண்டே இருந்தார்.

 

அவள் உண்டு முடிப்பதற்குள் கார்த்திகா பள்ளிக்குச் சென்றிருந்தாள், நரேந்திரன்.. அவனைக் காணவில்லை. ரேவதியோ ‘சின்ன வேலை யாழி!’  என்று அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.

 

‘துரோகீஸ்! இப்படியாடா விட்டுட்டு ஓடுவீங்க?’ என்று மனதுக்குள் தாளிக்க மட்டுமே முடிந்தது அவளால். உண்டு முடித்தவளின் நிலையோ இறை விழுங்கிய பாம்பைப் போல! 

 

‘பாசம் ரொம்ப ஓவர்ஃப்ளோ ஆகுதே! இது தாங்காதுப்பா!’ என்று மனதுக்குள் புலம்பியவாறு அவள் படியேறுவதற்கு முதல் படியில் காலை வைக்க அவள் கையை பிடித்து தன்பக்கம் இழுத்திருந்தான் அவன்!