O Crazy Minnal(29)

thumbnail_large-6c8af95c

29

ஏற்கனவே உண்ட மயக்கத்தில் இருந்தவள் மனதுக்குள் முடிந்த அளவு ரேவதியையும் நரேந்திரனையும் தாளித்துக் கொண்டிருந்தாள்.

 

எப்பொழுதும் அவள் உண்பதைவிடக் கொஞ்சம் அதிகமாகவே உண்டுவிட  நடக்க முடியாமல் அவள் நடந்து வந்து படியேறுவதற்காக முதல் படியில் காலை வைக்க அவள் கையை பிடித்து யாரோ  இழுத்திருந்தனர்.

 

அவள் சற்று தடுமாற அவளைப் பிடித்து நிறுத்தியவனைக் கண்டவள் ருத்ரதேவியாய் உருமாறி வாயைத் திறக்க அதற்குள் அவள் வாயை பொத்தினான் 

“கத்தாத நான்தான்!” என்று.

தன் உதட்டின் மீதிருந்த அவனது கையை பிடித்துத் தள்ளியவள்  “இப்போ எதுக்கு என்ன கொல்ல பாத்த?” என்றாள் கோபமாய்.

 

“என்ன?” என்றவன் விழிக்க அவளோ 

 

“பின்ன நீ இழுத்த இழுப்பில நான் கீழ விழுந்திருந்தா என்னவாகிருப்பேன்?”

 

“அப்படியெல்லாம் ஆக விட்ருவேனா?” என்றவன் வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

 

“யாரு.. நீ? நான்தான் பாத்தேனே!  மனுஷி அங்க சாப்பிட முடியாம திணறுரா, நீ என்னன்னா ஹாயா வெளில போய்ட்டு வர!” என்று அவள் நரேந்திரனிடம் காய அவனோ 

 

“நான் எப்போ வெளில போனேன்?” என்றான் கேள்வியாக.

 

“என்ன அப்போ நீ வெளில போலயா?”

 

“இல்ல, தாத்தாட்ட பேசிட்டு இருந்தேன். உன்ன கூப்பிடலாம்னு வந்தேன்! பாத்தீயா உன்கிட்ட பேசிட்டே நின்னுட்டேன்! வா” என்றவன் அவளை யதீந்திரனின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

 

முதல் முறையாக தொண்ணூற்றெட்டு வயதுடைய பெரியவரை நேரில் காண்கிறாள். அன்றும் வந்தாள்தான் ஆனால் அவர் உறங்கி கொண்டிருந்தாரே!

நரேந்திரன் இவளை  அறிமுகம் செய்து வைத்தான்.

 

 அந்த வயதின் தாக்கத்தால் கேட்கும் திறனும், பார்வையும் சற்று குறைந்திருந்ததாலும் அவன் மெதுவாக அதே சமயம் அழுத்தமான வார்த்தைகளாகப் பேச அவரும் விட்டு விட்டுப் பேசினாலும் அவ்வளவு அன்பாய் பேசினார்.

அவர் பேசிய விதத்திலேயே புரிந்தது அவருக்கு நரேந்திரனின் மேல் இருந்த தனி பிரியம்.

 

“உன் பேருக்கு அர்த்தமென்ன தெரியுமா?” என்றவரின் கேள்வியில் தெரியும் என்பதாக அவள் தலையசைக்க அவரே தொடர்ந்தார். “குறிஞ்சி யாழ்னா குறிஞ்சி நிலத்துல உபயோகிக்கற  யாழ்ங்கற இசைக் கருவினு அர்த்தம்”  அர்த்தம் தெரிந்திருந்தாலும் அவர் ஆர்வத்துடன் விளக்குவதால்  அமைதியாய் கேட்டுக் கொண்டாள் . 

 

அவளுக்கு ஜிதேந்திரன் இன்னொரு அர்த்தத்தையும் சொல்லியிருந்தார். குறிஞ்சி மலர்.. அதிசயமான ஒன்று! அதே போல் அவளும் அவருக்கு அதிசயமானவள் என்று.

 

ஆனால் அவளுக்குத் தெரியாத, அவர் தெரியக்கூடாதென்று நினைக்கும் இன்னொரு அர்த்தம் இருக்கிறதே, அது தெரிய வந்தால்,

இந்த யாழ் இசை மீட்டுமோ.

 

கொஞ்ச நேரம்  அவள் அவரிடம் சரளமாகப் பேசும்வரை அவர்களுடன் அமர்ந்திருந்தவன் அவள் அந்த சூழலுக்குப் பொருந்திப் போகவும் அவர்களுக்குச் சற்று தனிமை தந்தவனாக ஒதுங்கிக் கொண்டான்.

 

“அஞ்சு நிமிஷம் யாழி! சின்ன வேலை” என்றவன் பெரியவரிடம் குனிந்து 

சென்று வருவதாக உரைத்துவிட்டுச் சென்றான். “நீ என்ன படிக்கற?” என்றவரின் கேள்வியில் அவர் புறம் திரும்பியவள்

 

“Bcom படிக்கறேன் தாத்தா!” என்றாள்.

 

“ஃப்ர்தரா என்ன பண்ணலாம்னு.. இருக்க? பேங்க் எக்ஸாமா இல்ல…” என்றவருக்கு இருமல் வந்துவிட பின் சற்று நிதானித்துத் தொடர்ந்தார்.

 

அவளுக்கோ அவரது கேள்வியில் ஆச்சரியமாய், அவரிடம் பேசும் ஆர்வம் இன்னும் இன்னும் அதிகரித்தது.

 

‘நரி சொன்னா மாதிரி தாத்தா பெரிய ரிசோர்ஸ் பெர்ஸன்தான் போல’ என்றெண்ணியவள் அவரிடம் 

 

“இல்ல தாத்தா, எனக்கு பிஸ்னஸ்லதான் ஆர்வம்” என்க அவளிடம் அவளது திட்டங்களைப் பற்றிக் கேட்டறிந்தவர் அதில் சில திருத்தங்களைக் கூற அவளுக்கானால்உள்ளுக்குள் உற்சாக ஊற்று!

 

பின்னே சிறு பெண் என்று நினைக்காமல் அவளது திட்டங்களனைத்தும் கேட்டு அதில் திருத்தங்களையும் சொல்லி அவளுக்கு அறிவுரையாய் தொழிலுலகில் கால்பதிப்பதற்கு  சில  அறிவுரைகளை அவர் கஷ்டப்பட்டு கூறினால், கொண்டாட்டம்தான் அவளுக்கு!

 

அந்த காலத்து மனிதர்தான், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றி அதிகம் தெரிந்திராதவர்தான், ஆனால் அவரிடம் அனுபவமிருந்தது! வாழ்க்கை அவருக்குக் கற்பித்த பல பாடங்கள் இருந்தன.

 

அவருடன் பேசுவதில், இல்லை அவர் பேசுவதை கவனித்துக்  கேட்பதில் அவளுக்கு நேரம் போனதே தெரியாமல் அமர்ந்துவிட அவளைக் கலைத்தது அந்த அழைப்பு.

 

‘ஹகூனா மடாட்டா!!’ என்றவளின் கைப்பேசி பாட  அணிந்திருந்த குர்தாவின் பாக்கெடிற்குள் தேடியவள் எடுத்துப் பார்க்க அதுவோ  புதிய எண்ணிலிருந்து.

அதை அப்படியே சைலென்ட்டிலிட்டவள் அவரிடம் தன் கவனத்தைத் திருப்பினாள் அவரது கவனமோ வேறெதிலோ.

 

“இதுல பழைய பாட்டு கேக்க முடியுமா?” என்று வினவ அவளோ  

 

“ஓ! முடியுமே! தாத்தாக்கு எந்த பாட்டு வேணும்?” என்றாள் உற்சாகமாக

கொஞ்ச நேரம் அமைதியாய் யோசித்தவர் பின் “அந்த காலத்துல வசந்தகோகிலம்னு ஒரு பாடகி இருந்தாங்க.. அவ்வளவு தேனா இருக்கும் குரல்!” என்று அவர் ரசித்துச் சொல்லிக் கொண்டிருக்க அவளோ யூட்யூபில் அலசிக் கொண்டிருந்தாள்.

 

அவள் தேடிப் பிடிப்பதற்குள் அவர் அடுத்த பாடலுக்குச் சென்றிருந்தார்.

 

மோட்டார் சுந்தரம்பிள்ளை, என்னதான் ப்ரேமையோ, மனமே முருகனின் என்று நீண்டுகொண்டே போக அவளும் ஒவ்வொரு பாட்டாகத் தேடி வைத்தாள்.

 

“வெண்ணிலாவும் வானும் போலேன்னு…” என்று யோசித்தவர் பின் நினைவுகூர்ந்தவராக…”பாட்டு…” என்று அவர் முடிப்பதற்குள் அதை தேடிப் பிடித்திருந்தாள் அவள்.

 

முதலில் அதுதானா என்று உறுதி செய்து கொண்டவள் அதை ஒலிக்கவிட்டாள்.

 வெண்ணிலாவும் வானும் போலே

வீரனும்கூர் வாளும் போலே  வெண்ணிலாவும் வானும் போலே

வண்ணப் பூவும் மணமும் போலே

மகர யாழும் இசையும் போலே

கண்ணும் ஒளியும் போலே எனது

கன்னல் தமிழும் நானும்  அல்லவோ!?

என்ற பாடல் வரிகளிலும், அந்த இனிமையான குரலிலும்   லயித்திருந்தவள் பெரியவரைக் காண அவரோ பாடலை கேட்டவாறே கண்ணயர்ந்திருந்தார். 

பாடல் முடியவும் அதைச் சத்தமின்றி அனைத்தவள் அவரைக் காண அவரோ நிம்மதியான உறக்கத்தில்.

 

சாதாரண பழைய பாடல்கள், இதை யார் வேண்டுமென்றாலும் எடுத்துத் தரலாம், ஆனால் அவள் அதைச் செய்ததற்கா இவ்வளவு ஆனந்தம் அந்த பெரியவரிடம்?

என்றெண்ணியவளுக்குத் தான் புரியவில்லை, சந்தோஷம் அந்த பாடல்களில் அல்ல அவரது பழைய  நினைவுகளில்! அந்த பாடலுக்குத் தொடர்புடைய நிகழ்வுகள், அதை அவர்  முதல் முறை கேட்டது, அன்று நடந்தவை என்று அவர் மனக்கண்ணில் விரியும் அவரது கடந்த காலம்! 

 

தான் செய்தது எவ்வளவு பெரிய காரியம் என்று அவளுக்குத்தான் தெரியவில்லை. ஆனால் அவரோ அதற்குப் பிறகு அவரை பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் அதைச் சொல்லிச் சொல்லி  மகிழ்ந்ததெல்லாம் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!

 

அன்று அவர் உறங்கியபின் அரவமின்றி அறையை விட்டு வெளியேறியவள் அவர் மாலையில்   எழுந்துவிட்டார் என்று தெரிந்த மறுநொடி அங்கே ஆஜராகியிருந்தாள்.

 

அவளுக்குப் பிடித்திருந்தது! அவருடன் செலவிடும் மணித்துளிகள் ஒவ்வொன்றும் அவளுக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது.

 

அவருடன்  சேர்ந்து பழைய பாடல்களை ரசிப்பது, அந்த பாடலுக்குண்டான கதைகளை அவர் சொல்லச் சொல்ல சிறுபிள்ளைபோல் தலையாட்டிக் கொண்டே கேட்பது என அவளது அன்றைய தினம் யதீந்திரனுடன் திவ்யமாய் கழிந்தது.

 

அவளுக்குத் தெரியாத ஒன்று அடுத்த நாள் அவள் வெளியே சென்றிருக்க யதீந்திரனைச் சந்திக்க வந்த அனைவரிடமும் அவர் அவள் புகழை பாடியது.

 

அந்த வீட்டில் பொதுவாக யதீந்திரனுடன் அதிக நேரம் செலவழிப்பது மூன்றே நபர்கள்தான்!  ஒன்று தேவேந்திரன், தினமும் சற்று நேரம் தந்தையுடன் அமர்ந்து பேசிவிட்டு போவார். அடுத்தது வசுமதியும் நரேந்திரனும்.

 

அன்று அவளும் நரேந்திரனும் வெளியே சென்றிருக்க யதீந்திரனைக் காண வந்த தேவேந்திரனிடம், அவர்கள் உரையாடலில் தன்னையறியாமலே இடம் பெற்றிருந்தாள் குறிஞ்சி.

மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லிவிட்டார், ”அவ  புண்ணியத்தால பழைய பாட்டெல்லாம் கேக்க முடிஞ்சது!” என்று.

 

இங்கு அந்த பெரியவரின் முகத்தில் சிறு அளவிலானாலும் தன்னால் முடிந்த அந்த புன்சிரிப்பைக் கொண்டு வந்தவளோ அங்கு ஒருவனை  வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

 

ஐந்தாம் நாள்.

அந்த காலை வேளையிலேயே குளித்து கிளம்பி தயாராய் இருந்தவள் நரேந்திரனுக்காகக் காத்திருந்தாள்.

 

ஆனால் அவனோ என்றும்போல் பொறுமையாய் கீழே இறங்கிவர அவ்வளவு நேரம் தங்களது அறை வாசலில் நின்று எட்டி பார்த்து கொண்டிருந்தவளின் பொறுமை பறந்தது.

 

 அவனுக்கு நேரெதிரே இருந்த படிக்கட்டுகளில் அவனுக்கு முன் இறங்கி நின்றிருந்தாள்.

 

அவன் கடைசி படியில் காலை வைக்கவும் அவனைப் போலவே அவனின் வலது கையை பிடித்து இழுத்தவள் அவன் தடுமாற, அவனை நிறுத்த முடியாமல் அவள் திணறினாள். ஒரு கையால் சுவரைப் பிடித்தவன் மறு கை அவளிடம் இருக்க சமாளித்து நின்றுவிட்டான்.

 

“அறிவிருக்கா?” என்று கையை உதறிக் கொண்டே அவளிடம் கேட்க அவளோ தோள்களைக் குலுக்கியவாறு “ கர்மா பூமராங்க்ஸ்!” என்றாள் நேற்று அவன் அவளைப் பிடித்து இழுத்ததை வைத்து.

 

“அதுக்குனு, இப்படியா? ரெண்டு பேரும் சேர்ந்து விழுந்துருப்போம்!” 

 

“ப்ச்! நான் காலைல இருந்து உனக்குதான் வெய்ட்டிங்!” 

அப்பொழுதுதான் அவள் கிளம்பியிருப்பதை கண்டவன், ”ஏன் என்னாச்சு?” என்றான் கேள்வியாக.  “வெளிய போகனும்” என்றுவிட  எங்கே, எதற்கு என்றெல்லாம் கேளாமல்

 

“ரெண்டு நிமிஷம் யாழி துணி  மாத்திட்டு வரேன்” என்றவன் அவளைக் காக்க வைக்காமல் ஐந்து நிமிடத்தில் வந்துவிட்டான்.

அப்பொழுது ஆரம்பித்ததுதான்!

 

அவனை ஒரு கடைவிடாமல் அனைத்திலும் ஏறி இறங்கி என்று ஒருவழியாக்கிவிட்டாள்.

 

ஒருகட்டத்தில், “ப்ச்! என்ன தேடுறேன்னாவது சொல்லேன்!” என்றான் அவன் சலிப்பாக. பின்னே என்னவென்று சொன்னால்தானே அவனால் உதவ முடியும்! அதைவிட்டு இப்படி அலைந்தால்

 

“கார்வான்லாம் இருக்குல?” என்றவள் இழுக்க அவனோ சந்தேகமாய் பார்த்தவண்ணம்

 

“ஆமா..” என்றான்

 

“அது மாதிரி தேடிட்டு இருக்கேன்” 

 

“அடிப்பாவீ! இத முதல்லயே சொல்லியிருக்க கூடாதா?” என்றவனின் குரலில் ஆர்வமாய் அவனை பார்த்தவள்

 

“உனக்குத் தெரியுமா?” என்க அவனோ 

 

“சொல்லியிருந்தா அப்போவே சொல்லியிருப்பேனே அதெல்லாம் இங்க கிடைக்காதுனு!” என்றான்.

அவனது பதிலில் அவள் முகம் சுருங்கிவிட அதைக் கண்டவனோ  அந்த வாட்டத்தை   விரும்பாமல், ”சரி எதுக்குனு சொல்லு நாம ஆல்டர்னேட் தேடலாம்..” என்றான்.

 

முகம் பிரகாசமாகிவிட அவனிடம் திரும்பியவள், ”பாட்டு கேட்கதான் நரி! பழைய பாட்டெல்லாம் கேட்க.. ஆனா உபயோகபடுத்த ஈசியா இருக்கனும்” என்று மறுபடியும் சிந்தனையில் சிக்கிக் கொள்ள அவனோ

 

“நீ ஏன் இந்த MP3 ப்ளேயர்லாம் ட்ரை பண்ணக்கூடாது, கொஞ்சம் நல்ல ப்ராண்டா ரொம்ப நாள் வர்றமாதிரி”

 

 “செம்ம நரி! இப்போதைக்கு அத வாங்கலாம் அப்புறமா வேற யோசிப்போம்!” என்றுவிட அவனும் அவளை அதற்கான கடைக்கு அழைத்துச் சென்றான்.

 

இவன் பர்சை கையிலெடுக்க அதை அழுத்தமாக மறுத்தவள்,”இத நான்தான் வாங்கனும்” என்றுவிட அவனும் வேறு வழியின்றி அமைதியானான்.

******************************************************************************************************

 அவர்கள் வீடு திரும்புவதற்கே மதியமாகிவிட வண்டியில் இருந்து இறங்கியவள் அவசர அவசரமாக அவனிடம் “நான் தாத்தாவ பாக்க போறேன்!” என்று ஓடிவிட்டாள்.

 

அவள் ஓடிய விதத்தில் அவன் இதழ்கடையோரத்தில்  புன்னகை பூ ஒன்று மலர ‘சொர்ணாக்கா!’ என்று செல்லமாய் கடிந்துகொண்டவன் இறங்கினான்.

 

அவன் வீட்டினுள் நுழையவுமே அவனை எதிர்கொண்ட ரேவதி  

 “உன்னதான் கேட்டுட்டு இருந்தாங்க! யாழி எங்க? சாப்பிடலயா? மணியாச்சு” என்று கேள்விகளை அடுக்கினாள்.

 

“அது லேட்டாகிருச்சு ரேவதி, அவ தாத்தாவ பாக்க போயிருக்கா, நான் போய் கூட்டு வரேன், நீ போ” என்றவன் யதீந்திரனின் அறை நோக்கிச் சென்றான்.

எல்லாவற்றையும் சரியாக இனைத்தவளோ அதை உயிர்ப்பிக்க அழகாய் பாடியது அது.

 

பெரியவரிடம் வந்தவள் அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு “தாத்தா! இதுல இத அமுக்குனா பாட்டு வரும். உங்களுக்கு பிடிச்ச பழைய பாட்டு எல்லாமே இதுல இருக்கு தாத்தா, நான் நரேன்கிட்ட சொல்லிருக்கேன், பெருசா வாங்கச் சொல்லி. அது வரைக்கும் நாம ரெண்டுபேரும் இதுல கேக்கலாம்!” என்றவள் கூறிக் கொண்டே போக 

 

அவள் தலையை ஆதுரமாய் வருடியவர் “நீ நல்லா இருக்கனும்த்தா! உன்ன பெத்தவங்க உன்ன ரொம்ப நல்லா வளர்த்துருக்காங்க! நீ சந்தோஷமா இருக்கனும்த்தா!” என்றவரின் குரலில் இவள் கண்கள் கலங்கிவிட அதை மறைக்கும் பொருட்டு  அவரிடம் “நான் சாப்பிட்டு வரேன் தாத்தா” என்றுவிட்டு வெளியேறினாள்.

 

அறையிலிருந்து வெளியேறியவளின் காதில் அந்த 

“பிருந்தாவனமும் நந்தகுமாரனும்” இனிமையாய் தீண்டியதென்றால், கண்களோ குளமாகியிருந்தது.

 

நடையிலிருந்து இரண்டடி எடுத்து வைத்திருப்பாள் எதிரில் இவளை அழைத்துச் செல்லவென்று வந்த நரேந்திரன் இவளது கலங்கிய விழிகளைக் கண்டு பதறியவனாக

 

“ஏ..  என்னாச்சுடா?” என்று கேட்டுக் கொண்டே இவளை நெருங்கினான்.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தது அவன் திடீரென அழைக்கவும், முதலில் அதிர்ந்து பின்  கண்ணீர் கரைதாண்ட, அவனை அப்படியே அனைத்துக் கொண்டாள்.

 

என்னவென்று தெரியாவிட்டாலும் ஆதரவாய் அவள் தலையை வருடிக் கொடுக்க அவளது கண்ணீர்த் துளிகள் அவன் சட்டையில் மழையாய்.

 

“இங்க பாரு!” என்று அவன் அவளிடம் பேசிக் கொண்டிருக்க அவர்களிருவரையுமே அதிர்ச்சியும் ஆத்திரமுமாக வஞ்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது இருவிழிகள்.

 அன்பாய் இருவிழி

கலக்கமாய் இருவிழி

 காதலாய் இருவிழி

வஞ்சத்துடன் இருவிழி

இவ்விழிகளின் வாழ்க்கை எவ்வழிச் செல்ல காத்திருக்கிறதோ!